Tuesday, March 9, 2010

"முதல் உறுதி" நிதிகளில் முதலீடு செய்யலாமா?


பொதுவாக பங்குசந்தையில் முதலீடு செய்வதென்றால் பலருக்கும் வரும் முதல் பயம் "போட்ட முதல் முழுமையாக திரும்பி வருமா?" என்பதுதான். இது நியாயமான பயம்தான் என்பதில் சந்தேகில்லை. அதே சமயம், இந்த பயத்தினை தமக்கு சாதகமாக பயன்படுத்த விரும்பும் சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் (சில காப்பீட்டு நிறுவனங்கள் கூட) புதிய பங்கு திட்டங்களை (Capital Protection Schemes) அறிமுகப் படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட பங்கு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் போட்ட பணம் போகாது (நுண்ணிய எழுத்துக்களில் "போட்ட பணம் போகாமலிருக்க முயற்சி செய்வோம்" என்ற டிஸ்கியுடன்) என்றும் விளம்பரம் செய்கின்றனர். இந்த திட்டங்களில் முதலீடு செய்வதினால் என்ன லாபம் அல்லது என்ன நஷ்டம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏற்கனவே சொன்னபடி "பங்கு சந்தையில் பங்கெடுக்க வேண்டும்", அதே சமயம் "முதலுக்கு மோசமாக கூடாது", "கொஞ்சம் குறைவான வருமானம் பங்குசந்தையில் இருந்து வந்தாலும் போதும்" என்றெல்லாம் விரும்புபவர்கள் ஏற்கும் வண்ணம் இந்த பங்கு நிதி திட்டங்கள் வடிவமைக்கப் படுகின்றன. முதலீட்டாளர்களின் பணத்தில் ஒரு குறிப்பிட்ட பெரிய பகுதி "கடன் சொத்துக்களிலும் (Debt Instruments)" மீதமுள்ள சிறிய பகுதி பங்குகளிலும் முதலீடு செய்யப் படுகின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், ஐந்து வருட முதல் உறுதி திட்டத்தில் சுமார் எழுபது சதவீத பணம் சுமார் ஏழு சதவீத வட்டி பெறுமளவுக்கு முதலீடு செய்யப் படும். ஐந்து வருடங்கள் கழித்த பின்னர் இந்த நிதி முதலீட்டு அளவை எட்ட வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும். ஒருவேளை பங்குகளில் முதலீடு செய்த பணம் முழுமையாக இழக்கப் பட்டாலும், முதலீட்டாளர்களின் பணம் (கடன் முதலீட்டின் வாயிலாக) முழுமையாக திரும்ப வாய்ப்புக்கள் உண்டு. அதே சமயம் ஐந்து ஆண்டுக்கு பணத்தை முடக்கி வைத்ததற்கு எந்த ஒரு பெரிய பலனும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்காது. ஒருவேளை பங்குகள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே முதலீட்டாளருக்கு ஓரளவுக்கு "ரிடர்ன்" இருக்கும். நீங்கள் செய்யும் முதலீட்டின் ஒருபகுதி எஜெண்டுக்கான கமிஷனாகவும் இன்னொரு பகுதி பரஸ்பர நிதி அமைப்பு செலவினங்களுக்காகவும் செலவழிக்கப் படும்.

எனவே முதலுக்கு மோசமில்லாமல் அதே சமயம் பங்குசந்தை முன்னேற்றத்திலும் பங்கெடுக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட திட்டத்தை பரிசீலிக்கலாம்.

நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையை முடிவு செய்து கொள்ளுங்கள். முதலீடு எத்தனை வருடங்களுக்கு என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு மொத்தப் பணம் ஒரு லட்சம் என்று வைத்துக் கொள்வோம். மொத்த முதலீட்டுக் காலம் ஆறு வருடங்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

மொத்தப் பணத்தில் எழுபத்தைந்தாயிரம் ரூபாயினை அஞ்சலக சேமிப்புத் திட்டத்தில் (NSC) இடலாம். ஆறு வருடங்களில் திரும்பக் கிடைக்கும் பணம் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து இருபதாயிரமாக இருக்கும்.

மீதமுள்ள இருபத்தைந்தாயிரத்தை அனுபவம் வாய்ந்த ஒரு பங்கு பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாம். பங்கு பரஸ்பர நிதியில் போட்ட பணம் முழுமையாக போனாலும் கூட, அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் மூலமாக நமக்கு முதலீட்டை விட அதிகமாக இருபதனாயிரம் கிடைக்க வாய்ப்புக்கள் இங்கே உள்ளது.

ஒருவேளை பங்கு சந்தைகள் சிறப்பாக அமையும் பட்சத்தில், பரஸ்பர நிதியில் இருந்து திரும்பக் கிடைக்கும் பணம் கிட்டத்தட்ட அறுபதினாயிரம் வரை கூட இருக்கலாம். அப்படி பட்ட நிலையில், நமக்கு மொத்தமாக திரும்பக் கிடைக்கக் கூடிய பணம் ஒரு லட்சத்து எண்பதினாயிரம் வரை இருக்க வாய்ப்புக்கள் உண்டு.

இங்கே பரஸ்பர நிதியின் விண்ணப்பத்தில் இருப்பது போல நுண்ணிய எழுத்துக்களிலான டிஸ்கிகள் கிடையாது. கமிஷன், நிதி செலவுகள் (இருபத்தைந்தாயிரம் ருபாய் பரஸ்பர நிதி முதலீட்டிற்கானது தவிர) கிடையாது. சொல்லப் போனால் சில அஞ்சலக முகவர்கள் அவர்களுக்கான கமிஷனில் ஒரு பகுதியை முதலீட்டாளர்களுக்கு திருப்பி தருகின்ற சம்பவங்கள் கூட நடைபெறுவதாக கேள்வி பட்டதுண்டு.

இன்றைய பங்குசந்தை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கிறதே? எப்படி எல்லா பணத்தையும் ஒரே நாளில் முதலீடு செய்ய முடியும் என்று கவலைப் படுபவர்களுக்கு இன்னொரு வழியும் இருக்கின்றது. முதலீட்டு பணமான ஒரு லட்சம் ரூபாயை அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மாதாமாதம் வருகின்ற வட்டித் தொகையினைக் கொண்டு பரஸ்பர நிதிகளின் மாதாந்திர வருவாய் திட்டங்களில் (SIP) முதலீடு செய்யலாம். தொடர்ந்து பங்கு சந்தையில் பல மாதங்கள் முதலீடு செய்யும் போது பங்குசந்தையின் ஏற்றாத்தாழ்வுகள் நம்மை அதிகம் பாதிக்காது. ஆறு வருடங்கள் முடிவடைந்தவுடன் நம்முடைய அசல் (குட்டி போனசும் உண்டு) முழுமையாக திரும்புவதோடு பங்கு சந்தையிலும் நமது முதலீடு (இங்கே கிட்டத்தட்ட நாற்பத்தெட்டாயிரம் ருபாய்) குறிப்பிட்ட அளவுடையதாக இருக்கும்.

இங்கும் கூட "போட்ட முதல்" உறுதியாக திரும்புமா இல்லையா என்பதற்கு நுண்ணிய டிஸ்கிகளை தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

காப்பீட்டு திட்டங்களுக்கும் இதே போன்ற ஒரு பாணியை பின்பற்றலாம். மாதா மாதம் ஒரு சிறுதொகையை கால காப்பீட்டு திட்டத்தில் (Term Insurance) இட்டு விட்டு மீத பணத்தை பங்கு அல்லது அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

முதலுக்கு மோசமில்லாமல் அதே சமயத்தில் பங்குசந்தையிலும் பங்கு பெற உதவுகின்ற இந்த திட்டங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நன்றி!

4 comments:

பொதுஜனம் said...

எளிமையாக சொன்னீர்கள். மீண்டும் ஒரு முறை கேட்கிறேன். என் போன்ற கொஞ்சூண்டு தெரிந்தவர்களுக்கு வார வாரம் முதலீடு விஷயங்களை பற்றி கொஞ்சம் விளக்கலாமே?. என்ன செய்வது ? குருவி போல் சேர்க்கும் பணத்தை பண வீக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமே? எனக்கு தியானம் எல்லாம் செய்து பிரசங்கம் செய்து அமெரிக்காவில் பிரான்ச் ஓபன் பண்ணி சம்பாதிக்க தெரியாதுங்க.

Maximum India said...

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பொதுஜனம்!

நித்த்யானந்தா, ரஞ்சிதா, ஹுசைன் மற்றும் சினிமா விமர்சன சுனாமிகளுக்கிடையே நடுத்தர வர்கத்திலுள்ள நண்பர்களின் முக்கிய சேமிப்பு தேவையை கருதி எழுதிய, அதுவும் என்னுடைய பதிவுகளிலேயே மிக முக்கியமான பதிவாக நான் கருதும் இந்த பதிவுக்கு எங்கே பின்னூட்டமே வராமல் போய்விடுமோ என்ற ஒரு அச்சம் இருந்தது. எப்போதுமே கை கொடுப்பது இந்திய பொதுஜனம்தான் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து விட்டீர்கள்.

மீண்டுமொருமுறை நன்றி!

Thomas Ruban said...

முகவர்கள்(ஏஜெண்டுக்கள்) எந்த திட்டத்தில் அவர்களுக்கு கமிஷன் அதிகமோ அதில் சேர சொல்கிறர்கல்.
என்னைபொறுத்தவரை நேரமும், பங்கு வணிகமும் தெரியாதவர்கள் மட்டும் இந்த பங்கு நிதி திட்டங்களில் முதலீடு செய்தால் போதும். பங்குசந்தைப் பற்றி தேறிந்தவர்கள் பங்குசந்தையில் நேரடியாக முதலீடு செய்து பொறுமையை கடைபிடித்தால் அதை விட அதிகமாக லாபம் சம்பாதிக்கலாம்.

பகிர்வுக்கு நன்றி சார்.

Maximum India said...

அன்புள்ள தாமஸ் ரூபன்!

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

//முகவர்கள்(ஏஜெண்டுக்கள்) எந்த திட்டத்தில் அவர்களுக்கு கமிஷன் அதிகமோ அதில் சேர சொல்கிறர்கல்.
என்னைபொறுத்தவரை நேரமும், பங்கு வணிகமும் தெரியாதவர்கள் மட்டும் இந்த பங்கு நிதி திட்டங்களில் முதலீடு செய்தால் போதும். பங்குசந்தைப் பற்றி தேறிந்தவர்கள் பங்குசந்தையில் நேரடியாக முதலீடு செய்து பொறுமையை கடைபிடித்தால் அதை விட அதிகமாக லாபம் சம்பாதிக்கலாம். //

உங்களது கருத்து மிகவும் சரியானதே. எனக்கும் கூட இந்த விஷயத்தில் நேரடி அனுபவம் உண்டு. பல பரஸ்பர நிதி திட்டங்கள் ஒட்டுமொத்த சந்தையின் சராசரி வருவாயை விட குறைவாகவே செயலாற்றுகின்றன. நேரடி முதலீடு செய்வதற்கு தனி தகுதிகள் தேவையில்லை. கொஞ்சம் கவனம் மட்டும் இருந்தாலே போதுமானது.

நன்றி!

Blog Widget by LinkWithin