Sunday, March 21, 2010

பணவீக்கம் - ஆதாயம் யாருக்கு?


இன்றைய மொத்த விலை பணவீக்கம் (Wholesale Price Index Inflation) பத்து சதவீதத்திற்கு அருகாமையிலும் நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Index Inflation) பதினாறு சதவீதத்திற்கு மேலேயும் உள்ளன. இவை அரசின் கணிப்புக்கள் மட்டுமே. உண்மையான பணவீக்கம் இருபது சதவீதத்திற்கும் மேல் இருக்கும் என்பது பர்ஸ் எவ்வளவு வேகமாக காலியாகிறது என்று அனுபவப் பட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இருந்தாலும் பணவீக்கத்தை கட்டுபடுத்துவதில் அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்க வில்லை. எடுக்கப் பட்ட சிற்சில நடவடிக்கைகள் கூட மிகுந்த கால தாமதத்துடனேயே எடுக்கப் பட்டிருக்கின்றன. உண்மையில் பணவீக்கத்தினால் ஆதாயங்கள் உள்ளனவா அப்படியென்றால் யாருக்கு ஆதாயம் என்பதை இங்கே பார்ப்போம்.

பொதுவாகவே பொருளாதாரத்தில் அளவான பணவீக்கம் என்பது வரவேற்கப் படும் ஒன்று. பணவீக்கம் இருந்தால்தான் தொழில் மற்றும் வணிகத்தில் முதலீடு செய்ய பலரும் முன்வருவார்கள். அவ்வாறு முதலீடு செய்கையில் வேலைவாய்ப்புக்கள் பெருகும். சமூகத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். வளர்ந்த நாடுகள் பணவீக்கத்தை பொருளாதார வளர்ச்சியின் ஆரம்ப அறிகுறியாக கருதுகின்றன. பணவீக்கம் பூஜ்யத்திற்கு அருகாமையில் உள்ள ஜப்பான் போன்ற நாடுகளின் வளர்ச்சி பலவருடங்களாக நின்று போயிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பணவீக்கம் வளர்ந்த நாடுகளின் பணவீக்கத்தினை விட சற்று அதிகமாகவே இருக்கும். இதன் காரணம் இங்கு வளர்ச்சி அதிகம் என்பது மட்டுமல்ல, கட்டுமான வளர்ச்சி குறைவு (Infrastructure Bottlenecks lead to supply based inflation) என்பதும் எளிய மக்களின் தேவைகள் குறித்து அரசாங்கங்கள் கவலைப் படாமல் இருப்பதும் பணக்காரர்களின் சொல்லிற்கு அதிக மரியாதை இருப்பதுமே ஆகும்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணவீக்கம் வளர்வதை அரசு கண்டுகொள்ளாமல் போனால், வளர்ச்சி நின்று போய் பொருளாதாரம் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும். இதற்கு உதாரணமாக ஜிம்பாப்வே, பழைய சீனா மற்றும் பழைய ஜெர்மனி போன்றவற்றை கூறலாம்.

இந்தியாவைப் பொறுத்த வரை பணவீக்கம் தற்போதைக்கு அபாய அளவினை தொட வில்லை என்றாலும், அதிகப் படியான பணவீக்கம் நமது வளர்ச்சியை மட்டுபடுத்தக் கூடியது என்பதில் சந்தேகமில்லை.

பணவீக்கத்தினால் லாபம் யாருக்கு என்று பார்ப்போம்.

பணவீக்கத்தினால் மிக அதிக அளவு ஆதாயம் கிடைப்பது அரசாங்கத்திற்குத்தான். ஏனென்றால், பணவீக்கம் ஒரு மறைமுக வரிவிதிப்பு ஆகும். மேலும் அரசு ஏராளமாக வாங்கிக் குவித்திருக்கும் கடன்களின் பணமதிப்பு நாள்தோறும் குறைந்து கொண்டே போவதால், அரசு திரும்ப தர வேண்டிய கடன் பாக்கியின் உண்மையான அளவும் குறைந்து கொண்டே போகிறது. எனவேதான் அரசாங்கங்கள் பணவீக்கத்தை மறைமுகமாக ஊக்குவிக்கின்றன. பணவீக்கத்தின் காரணமாக பட்ஜெட்டின் அளவு வருடாவருடம் அதிகரிக்கும் போது, அரசியல்வாதிகளின் கையில் அதிக பணம் புழங்குவதும் குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தைப் போலவே நிறைய கடன் வாங்கி இருக்கும் கடனாளிகளுக்கும், திருப்பி தர வேண்டிய பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவது லாபகரமான ஒன்றுதான்.

இரண்டாவதாக அதிக ஆதாயம் அடைபவர்கள், பணவீக்கத்தினால் ஏற்படும் விலை உயர்வை (சற்று கூடுதலாகவே) நுகர்வோர் தலையில் கட்டுமளவுக்கு பலம் படைத்த வர்த்தகர்கள் (Pricing Power). போட்டி குறைந்த (Monopoly) அல்லது கூட்டாக செயல்படும் (Oligopoly) மற்றும் விலைநிர்ணய பலம் படைத்த தொழிற் துறையினர் பெருமளவுக்கு லாபம் சம்பாதிக்கின்றனர். இந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும் பணவீக்கத்தினால் ஆதாயமடைகின்றனர்.

மூன்றாவதாக விலைவாசி உயர்வுக்கேற்ப "பஞ்சப் படி" பெறக் கூடிய நிலையில் அரசு ஊழியர்களும் பணவீக்கத்தினால் பலனடைகின்றனர். அதுவும் செலவின அதிகரிப்பை விட பஞ்சப் படி அதிகரிப்பு அதிகம் இருக்கும் உயர்மட்ட அரசு அதிகாரிகள் பணவீக்கத்தினால் அதிக பலன் பெறுகின்றனர். அரசு ஊழியர் மட்டுமல்லாமல், பணவீக்கத்தை காரணமாக காட்டி சம்பள உயர்வு அல்லது விலை உயர்வு செய்யக் கூடிய செல்வாக்கு படைத்த தனி ஊழியர்கள் மற்றும் சிறு வியாபாரிகளும் பணவீக்கத்தினால் ஆதாயம் பெறுகின்றனர். உணவுப் பொருட்கள் விலை உயர்வினால் விவசாயிகளுக்கும் குறைந்த ஆதாயமும் இடைத்தரர்களுக்கு பெரிய ஆதாயமும் கிடைக்கின்றது.

பலவான் வாழ்வான் (Survival of the fittest) என்ற இயற்கையின் நிதிப் படி செல்வாக்கு படைத்த பலருக்கும் பணவீக்கம் என்பது ஆதாயமான ஒன்றாகவே இருக்கின்றது. இருந்தாலும் சமூகத்தில் பலம் குறைந்த பலருக்கு பணவீக்கம் கடுமையான சவாலாகவே இருக்கின்றது.

உதாரணத்திற்கு, கடும் போட்டியின் காரணமாக பணவீக்கத்தை காரணமாக வைத்து விலையை உயர்த்த முடியாதவர்கள் பணவீக்கத்தினால் பாதிக்கப் படுகின்றனர். ஓய்வூதிய பணத்தை வங்கியில் இட்டு வட்டியில் வாழும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர். வருவாயின் பெரும்பகுதியை உணவுக்கே செலவிட வேண்டிய நிலையில் உள்ள குறைந்த வருவாய் பிரிவினரின் நிலைமையைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

பணவீக்கம் ஆரம்பத்தில் பலருக்கும் பலனளிப்பதாக இருந்தாலும் பொருளாதார சுழற்சியின் (Economic Cycle) பின்பகுதியில் அனைவருக்குமே வில்லனாக அமைகிறது. பணவீக்கத்தை கட்டுபடுத்த மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் போது தொழிற் துறைகள் பாதிக்கப் படுகின்றன. பணவீக்கம் பொதுமக்களின் வாங்கும் சக்தியை (Purchasing Power) குறைக்கும் போது வணிகர்களும் இதர உற்பத்தியாளர்களும் பாதிக்கப் படுகின்றனர். பாதிக்கப் பட்ட தொழிற் நிறுவனங்கள் தமது செலவினத்தை கட்டுபடுத்த முனையும் போது வேலைவாய்ப்புக்கள் அல்லது அதிக சம்பளங்கள் பாதிக்கப் படுகின்றன. அரசாங்கத்திற்கான வரி வருமானம் குறைவதனால் அரசும் தனது செலவினத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

இப்படி ஆரம்பத்தில் இனிப்பாக இருக்கும் பணவீக்கம் அளவிற்கு அதிகமாக உயரும் போது கசப்பாக முடிகிறது.

இப்போது நமது பங்கு சந்தைக்கு வருவோம்.

பணவீக்கத்தை கட்டுபடுத்துவதற்காக, இந்திய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது, பங்கு சந்தைக்கு ஒரு கசப்பான செய்தியாகும். எனவே நாளை (22.03.2010) பங்கு சந்தை இழப்புடன் வாரக்கணக்கை துவங்கும் என்று எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில், வட்டி வீதங்கள் உயர்த்தப் படுவது இந்திய பொருளாதாரம் இப்போது வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு முக்கிய ஆதாரமாகும். எனவே துவக்கத்தில் சரிவு ஏற்பட்டாலும், பணவீக்கம் கட்டுக்கடங்காமல் உயரா விட்டால் சந்தை மீண்டும் நல்ல வளர்ச்சியை பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

உலக நிலவரத்தைப் பொறுத்த வரை, கிரீஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கிடையே நிலவி வரும் அரசியல் மோதல்கள் யூரோ நாணயத்தை பாதிப்பதுடன் இந்திய சந்தைகளிலும் ஒருவித மனநிலை தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

இந்த வாரத்தில் நிகழ உள்ள மாதாந்திர எதிர்கால நிலைகளின் முடிவு (F&O Expiry) சந்தையில் அதிக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். நிபிட்டியின் அடுத்த எதிர்ப்பு நிலை 5280-5320 ஆகிய புள்ளிகளுக்கு அருகில் இருக்கும்.

உலக சந்தையில் எண்ணெய் விலை மேலும் உயருவதைப் பொருத்து ரிலையன்ஸ் பங்குகள் குறுகிய கால முன்னேற்றம் அடையும். 3-G ஏலம் மற்றும் பாரதியின் ஆப்ரிக்க முதலீடுகள் தொலை தொடர்பு நிறுவனங்களின் பங்குகளின் மீது அதிக ஆர்வத்தினை உருவாக்கும்.

வட்டி வீத உயர்வினால் வாகனம், வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் ஓரளவுக்கு சரிவை சந்திக்கலாம்.

மொத்தத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாரமாகவே வரும் வாரம் இருக்கும் என்று நம்புகிறேன். நிபிட்டி 5320 அளவுகளை உறுதியாக முறியடித்த பின்னர் பங்குகளை வாங்கும் நிலை எடுக்கலாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி!

6 comments:

govindasamy said...

நல்ல செய்தி ! வாழ்த்துக்கள்

உண்மைவிரும்பி,
மும்பை.

Thomas Ruban said...

நல்ல அருமையான ஆழமான பதிவு நல்ல அலசல் நன்றி சார்.

பதிவுக்கு நன்றி சார்.

Maximum India said...

நன்றி உண்மை விரும்பி!

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

vasu said...

"மேலும் அரசு ஏராளமாக வாங்கிக் குவித்திருக்கும் கடன்களின் பணமதிப்பு நாள்தோறும் குறைந்து கொண்டே போவதால், அரசு திரும்ப தர வேண்டிய கடன் பாக்கியின் உண்மையான அளவும் குறைந்து கொண்டே போகிறது."
பணவீக்கத்தினால் கடன்களின் பணமதிப்பு எப்படி குறைகின்றது என விளக்குங்களேன்?? please

Maximum India said...

//"மேலும் அரசு ஏராளமாக வாங்கிக் குவித்திருக்கும் கடன்களின் பணமதிப்பு நாள்தோறும் குறைந்து கொண்டே போவதால், அரசு திரும்ப தர வேண்டிய கடன் பாக்கியின் உண்மையான அளவும் குறைந்து கொண்டே போகிறது."
பணவீக்கத்தினால் கடன்களின் பணமதிப்பு எப்படி குறைகின்றது என விளக்குங்களேன்?? please //

பணவீக்கத்தின் பொருளானது "சென்ற ஆண்டில் இருந்த ரொக்கப் பணத்தின் மதிப்பை விட இந்த ஆண்டு இவ்வளவு சதவீதம் மதிப்பு குறைந்து விட்டது" என்பது ஆகும்.

ஒரு பேச்சுக்கு சென்ற ஆண்டு ஒரு லட்சம் கோடி ருபாய் மத்திய அரசு கடன் வாங்கி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஆண்டு மத்திய அரசு அதே ஒரு லட்சம் கோடியை திருப்பித் தந்தாலும், (பத்து சதவீதம் பணவீக்கம் இருக்கும் பட்சத்தில்) அந்த பணத்தின் மதிப்பு சுமார் தொண்ணூறு ஆயிரம் கோடி மட்டும்தான். பணவீக்கம் பணத்தின் மதிப்பை அரிக்கும் கரையான். பணவீக்கத்தின் அளவை விட வட்டி வீதம் குறைவாக இருக்கும் பட்சத்தில், கடனாளிகள்தான் அதிகம் பலன் பெறுகிறார்கள். கடன் கொடுத்தவர்களுக்கு நஷ்டம்தான்.

நன்றி வாசு!

Blog Widget by LinkWithin