Saturday, June 13, 2009

குதிரையும் பறக்கும்!


நம்மில் பலருக்கு, வாழ்வின் பல தருணங்களில் ஒரு வித அவநம்பிக்கை தோன்றுகிறது. அதுவும் முக்கியமாக, சற்று கடினமான இலக்குகளுடன் வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு, தம்மால் அந்த லட்சியத்தை வெற்றிகரமாக அடைய முடியுமா என்ற சந்தேகங்கள் அடிக்கடி உருவாகுகின்றன. இலக்கை அடைய செல்ல வேண்டிய தூரம், வழியிலுள்ள இடைஞ்சல்கள், அவற்றோடு போராடி நம்மால் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விகள் போன்றவை நம்முள் பல்வேறு மன சஞ்சலங்களை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில் இருந்து விடுபட ஒரு தன்னம்பிக்கைக் கதை இங்கே!

ஒரு நாட்டில் ஒரு அரசன் இருக்கின்றான். ஒரு நாள், அவன் முன்னே ஒரு அண்டை நாட்டவன் கொண்டு வந்து நிறுத்தப் படுகின்றான். அவன் மீது உளவுக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் படுகின்றான். விசாரணை முடிந்த பின்னர் மரண தண்டனை விதிக்கின்றான் அரசன்.

மரண தண்டனை விதிக்கப் பட்ட பின்னரும், அந்த அண்டை நாட்டான் துளியும் கவலைப் பட வில்லை. தண்டனை கொடுத்தப் பின்னர் திரும்பி செல்லும் அரசனைப் பார்த்து, "அரசே! குதிரையை பறக்க வைக்கும் மந்திரம் எனக்கு தெரியும். ஒரு வருடம் அவகாசம் எனக்கு கொடுத்தால் உங்கள் பட்டத்துக் குதிரையை பறக்க வைத்துக் காட்டுகின்றேன்" என்று சவால் விடுகின்றான்.

ஒரு நிமிடம் யோசித்த மன்னன், அவனது தண்டனையை ஒரு வருடம் தள்ளிப் போடச் சொல்லி ஆணையிட்டு, கூறுகின்றான்.

"ஒரு வருடம் இவனுக்கு அவகாசம். ஒரு வருடம் கழித்து இவன் கூறியபடி குதிரை பறக்க வில்லையென்றால், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் இவன் தலையை துண்டித்து விடுங்கள்"

அன்றைய மட்டில், தலை தப்பித்த அந்த கைதியிடம் சக கைதி கேட்கின்றான், "எப்படி அவ்வளவு நம்பிக்கையாக கூறினாய்? உன்னால் நிஜமாலுமே ஒரு குதிரையை பறக்க வைக்க முடியுமா?"

அதற்கு இவன் அளித்த பதில், " எல்லாம் ஒரு நம்பிக்கைதான். ஒருவேளை, இந்த ஒரு வருடத்தில், எனது அரசன் இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்து என்னை மீட்கலாம், அல்லது இந்த ஒரு வருடத்தில் இந்த அரசன் நோய் வாய்ப் பட்டு தானாகவே இறந்து போகலாம், அல்லது இந்த குதிரையே கூட தன்னால் இறந்து போகலாம், அப்படி எதுவும் நடக்க வில்லையென்றாலும், ஒருவேளை எனது மந்திரத்தைக் கேட்டு கேட்டு இந்த குதிரை பறந்தாலும் பறக்கலாம். யாருக்குத் தெரியும்?"

எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்ற இந்த நம்பிக்கையை நாமும் கொஞ்சம் எடுத்துக் கொள்வோம். நமது இலக்கை நோக்கிய பயணத்திற்கான இன்றைய தூரத்தை ஒழுங்காக கடப்பதில் மட்டும் கவனத்தை வைப்போம். வருங்காலத்தைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருந்தால் இன்றைய கடமையை கூட சரியாக செய்ய முடியாமல், நமது இலக்கு இன்னும் தள்ளிப் போய் விடலாம். மனச் சஞ்சலங்களால் வேறெந்த பயனும் இல்லை.

எனவே தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கூண்டுக்குள் அடைப் பட்டிருக்கும் நமது மனச் சிறகுகளை விடுவித்து வானில் பறக்க விடுங்கள்!

இன்றைக்கு மனச் சிறகுகள் உற்சாகமாக பறக்கட்டும்.

யாருக்குத் தெரியும்?

ஒருவேளை, நாளை குதிரை உண்மையாலுமே பறந்தாலும் பறக்கலாம்!

நன்றி.

18 comments:

ravikanth k said...

I have been following your blog for quite sometime. Your posts are really impressive. This post is a great example. Reading it made me want to write in tamil again. Thankyou.

Maximum India said...

நன்றி ரவிகாந்த்!

உங்கள் எழுத்துக்களை பார்க்க நான் ஆவலாக உள்ளேன். வெகு சீக்கிரம் எழுத ஆரம்பித்திட வாழ்த்துக்கள்.

நன்றி.

Thomas Ruban said...

அய்யா நான் உங்ககளின் தொடர் வாசகன் பங்கு சந்தை பற்றி வாரம் வாரம் எழுதி கொண்டு இருத்திர்கள் இப்பொழுது ஏன்? எழுதுவது இல்லை.
வாரம் வாரம் உங்கள் எழுத்துக்களை பார்க்க நான் ஆவலாக உள்ளேன்.
நன்றி...நன்றி...

Maximum India said...

அன்புள்ள தாமஸ் ரூபன்!

//அய்யா நான் உங்ககளின் தொடர் வாசகன் பங்கு சந்தை பற்றி வாரம் வாரம் எழுதி கொண்டு இருத்திர்கள் இப்பொழுது ஏன்? எழுதுவது இல்லை.
வாரம் வாரம் உங்கள் எழுத்துக்களை பார்க்க நான் ஆவலாக உள்ளேன்.
நன்றி...நன்றி...//

உங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி.

இடையில் ஏற்பட்ட பணி மாறுதல் மற்றும் அதானால் நேரிட்ட அதிக வேலைப் பளு ஒரு முக்கிய காரணம்.

இருந்தாலும், உங்களைப் போன்றவர்கள் விருப்பத்திற்காக பங்கு சந்தைகள் பற்றி தொடர்ந்து வாரா வாரம் எழுத முயற்சிப்பேன்.

நன்றி.

malar said...

///எனவே தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கூண்டுக்குள் அடைப் பட்டிருக்கும் நமது மனச் சிறகுகளை விடுவித்து வானில் பறக்க விடுங்கள்!///

சொல்வது எளிது பிறர் செய்யும் துரோகங்கள் அவமானங்கள் போன்றவைகளை எவ்வளவு முயற்சி செய்யதாலும் மனதில் இருந்து எடுத்து வெளியில் எறிய முடியவில்லை இது நிறைய பெண்களுக்கு உள்ள பிரச்சனை .

Maximum India said...

அன்புள்ள மலர்!

//சொல்வது எளிது பிறர் செய்யும் துரோகங்கள் அவமானங்கள் போன்றவைகளை எவ்வளவு முயற்சி செய்யதாலும் மனதில் இருந்து எடுத்து வெளியில் எறிய முடியவில்லை இது நிறைய பெண்களுக்கு உள்ள பிரச்சனை //

இது பெண்களுக்கு மட்டுமான பிரச்சினை அல்ல. ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான ஒன்றே.

துரோகங்கள், அவமானங்கள் போன்றவற்றை பெண்கள் (பெரும்பாலும்) உறவுகளிடம் இருந்து சந்திக்க, ஆண்கள் அவற்றை அதிகமாக அலுவலங்களிலும் நட்புகளிலும் எதிர்கொள்கின்றனர்.

மேலும், ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருந்த படி, இது போன்ற பதிவுகள், ஏதோ ஒரு "கருத்து கந்தசாமியின்" மேலோட்டமான கருத்துக்கள் அல்ல. பெரும்பாலும், உணர்வு பூர்வமானவையாகவே எழுதப் பட்டவை.

சென்ற ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை கடுமையான பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொண்டு அவற்றிலிருந்து வெளியே வர முடியுமா என்ற ஒரு சூழலில், ஒரு கூண்டுச் சிறைக்குள் அடிபட்டு கொண்ட எனது மனச் சிறகுகளை வெளியே எடுத்து விட மேற்கொண்ட பல முயற்சிகளில் ஒரு முயற்சியே இந்த பதிவு.

பொதுவாகவே, நம்மை தாக்கும் துரோகங்கள் மற்றும் அவமானங்களின் அடிப்படை நோக்கம் நம்மைக் காயப் படுத்துவதாகவே இருக்க முடியும். அவற்றால் நாம் காயப் பட்டால், அந்த அடிப்படை நோக்கம் வென்று விடும் அல்லவா? அந்த வெற்றியை நாம் அவற்றுக்கு தரவே கூடாது.

அவற்றை நம் மனதிற்குள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதுதான் நமக்கு முதல் வெற்றியாகவே இருக்கும். அப்படி உள்ளே நுழைந்து விட்டாலும், நமக்கு சொந்தமில்லாததை, சுமக்க விரும்பாததை நாம் ஏன் நம் மனதில் வைத்து பூட்டி பாதுகாக்க வேண்டும்? தூக்கி எறியுங்கள் அவற்றை உங்கள் மனதிலிருந்து. அப்புறம் மனது லேசாகி விடும். அடுத்த முறை, உங்களுக்கு துரோகம் இழைத்தவரை நேரில் சந்திக்க நேரிட்டால் மனதார புன்சிரியுங்கள். அது உங்கள் வெற்றியாக இருக்கும்.

இது மேலோட்டமாக பார்க்கும் போது, ஒரு கடினமான காரியமாக தோன்றலாம். ஆனால் நிச்சயம் முடியும். உங்கள் மனப் புண்ணுக்கு மருந்து உங்களிடம் மட்டும், ஆம், உங்களிடம் மட்டும்தான் உள்ளது. சில சமயங்களில் காயம் ஆற சற்று நேரம் பிடிக்கலாம். ஆனால் காயம் நிச்சயம் ஆறும்.

வாழ்த்துக்கள்!

malar said...

உங்கள் பதிலுக்கு நன்றி ......

நீங்கள் பதில் தந்ததால் இதை உங்களிடமே கேட்கிறேன் ....

நாங்கள் இருக்கும் இடத்தில நிறைய பெண்கள் அடிகடி கூடுவதுண்டு அதில் கலந்து பேசும் போது ஒரு பெண் சொன்னது ....

அவள் கணவர் அவளிடம் எந்த ஒரு விஷயத்தையும் கேட்பதோ கலபதோ இல்லை

தனது வீட்டு விசயமே மூன்றாவது ஒரு ஆள் சொலித்தான் அவளுக்கே தெரிவதாகவும்

இதனால் அவளுக்கு மிகுந்த மன சுமையும் கணவரை பார்க்கும் போது ஒருவித கூச்சமும் அவருடன் பேச ஒரு சகஜ நிலை வருவது இல்லை .என்றும் சொன்னார் .

இது அவருக்கு மட்டும் நடப்பதில்லை பெரும்பாலான குடும்பங்களில் நடக்கிறது .

கணவர் அவர் சொந்த பந்தங்களுக்கு (அம்மா ,தங்கை போன்ற ) கொடுக்கல் போர்வைகளை மனைவீடம் பகர்ந்தால் என்ன ?

நீங்கள் சொன்ன மாதிரி மூன்றவது நபராக இருந்தால் சிரிக்கலாம் கணவரிடமே எப்படி சிரிக்க முடயும் .?

Vishnu - விஷ்ணு said...

//எனவே தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கூண்டுக்குள் அடைப் பட்டிருக்கும் நமது மனச் சிறகுகளை விடுவித்து வானில் பறக்க விடுங்கள்//

ஆனால் அடி மனதில் ஏற்பட்ட அவ நம்பிக்கையை அழிக்க கொஞ்சம் கஷ்டம் தானே.

Maximum India said...

அன்புள்ள மலர்!

கணவன்-மனைவி உறவுகள் மிகவும் நுண்ணியவை. அவற்றில் விரிசல் ஏற்பட்டாலும் அந்த விரிசல் சரிசெய்யப் படுவது அவர்கள் இருவரது பொறுப்பு மட்டுமே. இருந்தாலும் எனக்கு தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பொதுவாகவே மற்றவர் தவறை மட்டுமே கண்டுபிடிக்கும் நம்மால் நமது சொந்த தவறுகளை கண்டுபிடிக்க முடிவதில்லை. ஒருவேளை, கண்டுபிடித்தாலும் அவற்றை பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

எந்த ஒரு உறவிலும் விரிசல் விழுந்தால், முதலில் நமது தவறு ஏதேனும் இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். இருந்தால் திருத்திக் கொள்ள வேண்டும். அப்படி கண்டிப்பாக இல்லையென்றால், மற்றவருடன் மனம் விட்டு பேச வேண்டும். சில விஷயங்களை விட்டுக் கொடுக்க நேரிட்டாலும் தவறில்லை. முக்கியமாக, கணவன் மனைவி உறவில் பெரிதாக ஈகோ பார்க்க தேவையில்லை.

சில விஷயங்களை மாற்ற முடியாது. அப்படி பட்ட நிலையில் நமது கடமையை சரியாக செய்து விட்டு போய் கொண்டே இருக்க வேண்டும். நமது மனதை குற்றமற்றதாக வைத்துக் கொண்டால் போதுமானது.

ஒரு குற்றமற்ற மனது சந்தோசமாகவே இருக்க வேண்டும். மற்றவர்கள் தவறுக்காக நம் மனதை காயப் படுத்திக் கொள்ளக் கூடாது. இதுதான் எனது கொள்கை.

//நீங்கள் சொன்ன மாதிரி மூன்றவது நபராக இருந்தால் சிரிக்கலாம் கணவரிடமே எப்படி சிரிக்க முடயும் .?//

முக்கியமாக, கணவரிடம்தான் அதிகம் புன்சிரிக்க வேண்டும். ஒரு உடல் ஊனமுற்றவரை உறவாக மனதார ஏற்றுக் கொள்வது போல மனம் ஊனமுற்றவரையும் ஏற்றுக் கொண்டு, அவரை முழு மனதோடு நேசிக்கச் சொல்லுங்கள். யாருக்குத் தெரியும்? அவரே ஒரு நாள் மனம் மாறலாம். நம்பிக்கையோடு காத்திருக்கச் சொல்லுங்கள்.

நன்றி.

Maximum India said...

அன்புள்ள விஷ்ணு!

//ஆனால் அடி மனதில் ஏற்பட்ட அவ நம்பிக்கையை அழிக்க கொஞ்சம் கஷ்டம் தானே.//

கஷ்டம்தான். மறுக்க வில்லை. (இது போன்ற பதிவுகளை இடும் எனக்கே எனது அவநம்பிக்கையை மாற்ற முழுதாக மூன்று நாள் பிடித்தது.) ஆனால் முடியாது என்று சொல்ல முடியாது அல்லவா? நம்முடைய அவநம்பிக்கையை நாம்தான் போராடி மாற்ற வேண்டும். வேறு யார் வருவார் இதற்காக?

அவநம்பிக்கையோடு முயற்சி செய்யாமல் இருப்பதை விட, நம்பிக்கையோடு போராடித் தோற்பது மேல் அல்லவா?

தோல்வி பெறாமலேயே வாழ வேண்டும் என்றால் ஜடமாகத்தான் இருக்க வேண்டும், நமது பிறப்பே ஒரு போராட்டத்தின் வெற்றிதான் இல்லையா?

மேலும் வாழ்க்கையின் சாரம் முயற்சி செய்வதில்தான் இருக்கிறதே தவிர முடிவில் அல்ல.

எனவே எதை இழந்தாலும், நம்பிக்கையை மட்டும் இழக்க வேண்டாம்.

நன்றி.

குப்பன்.யாஹூ said...

good useful post

Maximum India said...

நன்றி குப்பன்_யாஹூ!

Thomas Ruban said...

உங்களைப் போன்றவர்கள் விருப்பத்திற்காக பங்கு சந்தைகள் பற்றி தொடர்ந்து வாரா வாரம் எழுத முயற்சிப்பேன்.

உங்களது பதிலுக்கு நன்றி...

எனக்கு பிடித்த வரிகள்

எதை இழந்தாலும், நம்பிக்கையை மட்டும் இழக்க வேண்டாம். யானைக்கு தும்பிக்கை மனிதனுக்கு நம்பிக்கை.

வால்பையன் said...

குதிரை பறந்ததை விடுங்கள்!
நம்பிக்கை மட்டும் இல்லையென்றால் இன்று மனிதனே பறக்க முடியாதே!

Maximum India said...

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி தாமஸ் ரூபன்!

உங்கள் விருப்பத்திற்காக நேற்றே ஒரு பதிவை இட்டு விட்டேன்.

// யானைக்கு தும்பிக்கை மனிதனுக்கு நம்பிக்கை.//

உண்மைதான் தாமஸ் ரூபன்.

நன்றி.

Maximum India said...

//நம்பிக்கை மட்டும் இல்லையென்றால் இன்று மனிதனே பறக்க முடியாதே!//

அருமையான உதாரணம். நன்றி வால்பையன்!

பொதுஜனம் said...

பூமி உருண்டை. மனித மனமும் உருண்டை. போன இடத்துக்கே வந்து சேரும். இரவும் பகலும் மாறி வருவது போல் நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும் வந்து போகின்றன. ஆனால் சல்லடை போட்டு எதை தக்க வைக்கிறோம் என்பதே முக்கியம். இயற்கையால் உருவாக்கப்படும் பிரச்னைகள் இயற்கையிலேயே தீர்க்க படுகின்றன. ஆனால் அரை கிலோ மூளையை வைத்து கொண்டு நாம் உருவாக்கும் பிரச்னைகள் தான் நிம்மதியை கெடுக்கின்றன. பிரச்சனைகள் உருவாக்குபவர்களுக்கு தான் அதன் இறுதி பலன் வந்து சேரும் என்பதே இயற்கை நியதி. தனியாக காட்டில் அலையும் மனிதனுக்கு எந்த பிரச்னையும் இல்லை. கூட்டம் கூட்டமாக வாழும் போது பல மூளைகள் ஒரு சேர்ந்து ஒரே மாதிரி யோசிக்கும் என எதிர்பார்ப்பது தவறு. ஒரு விஷயத்தை பல கோணங்களில் யோசித்து பார்த்து நமக்கு சரியானதை தேர்ந்து எடுத்து கொள்ளும் அறிவு தான் பகுத்தறிவு. அது எல்லோரிடமும் உள்ளது. உபயோகிக்கும் சதவீதம் தான் மாறுகிறது. அந்த மாதிரி நெகடிவ் எண்ணங்கள் மனதை அரிக்கும் போது விலங்கு போல் வாழுங்கள். நன்கு சாப்பிடவும். தூங்கவும். ரோட்டில் நடந்து பராக்கு பார்க்கவும். மற்றவர்களை பார்த்து சிரிக்கவும். வேகமாக நடக்கவும். முடிந்தால் பயணம் செய்யவும். புதிய இடம், புதிய மனிதர்கள், குழைந்தைகள் போன்றவை பிரச்னைகளை மறக்க செய்யும் மருந்துகள். ஆனால் ஒன்று நிச்சயம் . இந்த பதிவை படைத்த மனிதரும் , படித்த புனிதரும், மெனெக்கெட்டு டைப் செய்யும் நானும் மறுபடியும் மனம் குழம்புவோம்..தீர்வு கிடைக்காதோ என்று அலைவோம். திரும்பவும் தெளிவோம். (உருண்டை) வாழ்க்கை வெங்காயம் போல. உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது. ஆனால் நிறைய பேருக்கு தெரியாது உரிப்பது தான் சுகமே என்று.. அப்பாடா . படிச்சு முடிச்சாச்சா. நிறைய தண்ணீர் குடித்து விட்டு படுக்கவும். (ஜக்கி வாசுதேவ் அட்ரஸ் இருக்கா ? )

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்!

அருமையான கருத்துக்கள். ஒரு தனிப் பதிவாகவே போடலாம்.

//பூமி உருண்டை. மனித மனமும் உருண்டை. போன இடத்துக்கே வந்து சேரும். இரவும் பகலும் மாறி வருவது போல் நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும் வந்து போகின்றன. //

சூப்பர்! எப்படிங்க இதெல்லாம்?

//நெகடிவ் எண்ணங்கள் மனதை அரிக்கும் போது விலங்கு போல் வாழுங்கள். நன்கு சாப்பிடவும். தூங்கவும். ரோட்டில் நடந்து பராக்கு பார்க்கவும். மற்றவர்களை பார்த்து சிரிக்கவும். வேகமாக நடக்கவும். முடிந்தால் பயணம் செய்யவும். புதிய இடம், புதிய மனிதர்கள், குழைந்தைகள் போன்றவை பிரச்னைகளை மறக்க செய்யும் மருந்துகள். //

இது கூட நல்லாத்தான் இருக்கு!

//ஆனால் ஒன்று நிச்சயம் . இந்த பதிவை படைத்த மனிதரும் , படித்த புனிதரும், மெனெக்கெட்டு டைப் செய்யும் நானும் மறுபடியும் மனம் குழம்புவோம்..தீர்வு கிடைக்காதோ என்று அலைவோம். திரும்பவும் தெளிவோம். //

உண்மைதான். அதே சமயம், தெளிவடைய எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான் ரொம்ப முக்கியம். அந்த நேரத்தை கூடுமான வரை குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

//(உருண்டை) வாழ்க்கை வெங்காயம் போல. உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது. ஆனால் நிறைய பேருக்கு தெரியாது உரிப்பது தான் சுகமே என்று.. //

இதிலிருந்து ஒண்ணு நிச்சயமா புரியுது. நீங்க வீட்டில நிறைய வெங்காயம் உரிக்கிறிங்கன்னு! உரிச்சிக்கிட்டே யோசிப்பீங்களோ? :-)

//அப்பாடா . படிச்சு முடிச்சாச்சா. நிறைய தண்ணீர் குடித்து விட்டு படுக்கவும். //

எந்த தண்ணிய சொல்றீங்க? புரியலையே? :-)

நன்றி.

Blog Widget by LinkWithin