The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Wednesday, September 30, 2009
பங்குச்சந்தை வெற்றிப்பயணம் - காளை-கரடி மனநிலைகள்
ஒரு பங்கினை ஒருவர் வாங்க அல்லது விற்க விரும்புவதற்கான காரணங்களின் அடிப்படையிலேயே சந்தையின் போக்கினை அறிந்து கொள்ள முடியும். காளை ஓட்டத்திற்கு (Bull Run) ஐந்து நிலைகளும், கரடி ஓட்டத்திற்கு (Bear Run) மூன்று நிலைகளும் (Phases) உண்டு. இந்த ஓட்டங்களை துவக்கத்திலேயே சரியாக புரிந்து கொண்டால் சந்தையில் பெரிய அளவில் வெற்றி பெற முடியும். இந்த வெற்றி ரகசியத்தை பற்றி இங்கு விவாதிப்போம்.
முதல் மனநிலை
நிறுவனம் சிறந்த அடிப்படைகளை கொண்டுள்ளது. பங்கின் விலை அதன் உள்மதிப்பை விட மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் பங்கோ தொடர்ந்து வீழ்ந்து கொண்டே இருக்கிறது அல்லது உயராமலேயே உள்ளது. இந்த பங்கினை நாம் வாங்கின பின்னரும் கூட தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்படலாம். இருந்தாலும் பரவாயில்லை, இது போன்ற ஒரு பங்கு நம்மிடம் இருக்க வேண்டும், என்றாவது ஒருநாள் இந்த பங்கு விலையேறும் என்று ஒருவர் பங்கினை வாங்க ஆசைப்பட்டால், அந்த பங்கின் அல்லது பங்கு சந்தையின் காளை ஓட்ட ஆரம்பத்திற்கு அதிக காலம் பிடிக்காது என்று அர்த்தம்.
இரண்டாவது மனநிலை
நிறுவனம் சிறந்த அடிப்படைகளை கொண்டுள்ளது. விலையும் உயர ஆரம்பித்து விட்டது. உள்மதிப்புக்கும் விலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இருந்தாலும் பரவாயில்லை. ஒரு நல்ல நிறுவனத்தின் பங்கு நம்மிடத்தில் இருக்க வேண்டும், விலை முன்னேற்றம் காலப் போக்கில் இன்னும் கூட அதிகமாகும் என்று விலை உயர்வின் ஊடே ஒருவர் வாங்க ஆசைப்பட்டால் காளை ஓட்டம் துவங்கி விட்டது என்று அர்த்தம்.
மூன்றாவது மனநிலை
நிறுவனம் சிறந்த அடிப்படைகளை கொண்டுள்ளது. விலையோ எக்கச்சக்கமாக ஏற்கனவே உயர்ந்து விட்டது. உள்மதிப்பை விட விலை இப்போது மிகவும் அதிகம். துவக்கத்திலேயே வாங்க விரும்பினோம். ஆனால் நடப்பு காளை ஓட்டத்தின் வேகத்திற்கு நம்மால் ஈடு கட்ட முடியவில்லை. ஆனால் இப்போதும் விட்டு விட்டால் விலை இன்னும் கூடமேலே போய் விடும் என்று குற்றமனப்பான்மையுடன் அல்லது பங்கினை வாங்கி உடனடியாக அதிக விலையில் விற்று விடலாம் என்ற பேராசையுடன் ஒருவர் பங்கினை வாங்கினால் காளை ஓட்டம் முழுவேகத்தில் இருக்கிறது, ஆனால் எச்சரிக்கை அவசியம் என்று அர்த்தம்.
நான்காவது மனநிலை
அடிப்படை சிறப்பாக உள்ள பங்குகள் எல்லாம் மேலேறி விட்டன. அதே சமயம் அடிப்படை சரியில்லாத, அதே சமயம் விலை குறைந்த பங்குகளின் மீது கவனம் திரும்பும் போது காளை ஓட்டம் உச்சகட்டத்தில் இருக்கிறது. ஆனால் முடிவு விரைவில் வரப் போகிறது என்று அர்த்தம்.
ஐந்தாவது மனநிலை
நிறுவனத்தின் அடிப்படைகளைப் பற்றி கவலையில்லை. உள்மதிப்பு பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால், விலை இன்னும் அதிகமாகி விடும். நிறுவனம் எப்படி பட்டதாக இருந்தாலும் உடனடியாக மேலே செல்லும் பங்கை வாங்க வேண்டும் என்று ஒருவர் ஆசைப் பட்டால் அல்லது நம்மை விட ஒரு பெரிய இளிச்சவாயனிடம் இந்த பங்கினை அதிக விலைக்கு தள்ளி விடலாம் ஒருவர் நம்பினால் காளை ஓட்டத்தின் இறுதி கட்டம் வெகு அருகே வந்து விட்டது என்று அர்த்தம்.
இது காளை ஓட்டத்தின் போக்கு என்றால், கரடி ஓட்டத்தின் போக்கு எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
முதல் மனநிலை
அடிப்படை சரியில்லாத நிறுவனங்கள் உள்மதிப்பு மிக குறைவாக இருந்த போதும் கூட மிக அதிக விலையில் விற்பனையாகின்றன என்று எண்ணம் தோன்றும் போது, கரடி ஓட்டத்தின் வித்து ஊன்றப் படுகின்றது. இந்த நிலையில் அடிப்படை சரியில்லாத நிறுவனங்கள் அதிக வீழ்ச்சி அடைகின்றன.
இரண்டாம் மனநிலை
அடிப்படை சரியாக இருந்தாலும், விலை அளவு உள்மதிப்பை விட அதிகமாக இருக்கிறது. எனவே பங்கினை விற்க வேண்டும் என்று விருப்பம் வந்தால் கரடி ஓட்டம் துவங்கி விட்டது என்று அர்த்தம். இந்த நிலையில் அடிப்படை சிறப்பாக உள்ள நிறுவனங்களும் கூட விலை வீழ்ச்சி அடைகின்றன.
மூன்றாம் மனநிலை
அடிப்படைகளைப் பற்றியெல்லாம் யாருக்கு தெரியும்? எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ தெரியாது, விட்டால் போட்ட காசு எல்லாம் போய் விடும், வந்த வரை லாபம் என்று ஒருவர் விலை வீழ்ச்சியைப் பற்றி மட்டுமே கவலைப் பட்டுக் கொண்டு விற்க முடிவு செய்தால் கரடி ஓட்டம் முடியப் போகிறது என்று அர்த்தம். இந்த நிலையில் எல்லா பங்குகளும் எல்லா விலையிலும் விற்பனை ஆகின்றன.
சந்தையில் வெற்றி பெற்ற ஜாம்பவான்கள் இந்த நிலைகளை ஓரளவுக்கு சரியாக புரிந்து வைத்துக் கொள்கிறார்கள். விலை மாற்றத்தைப் பற்றி அவ்வளவு கவலைப் படாமல், சந்தையின் மனநிலை மாற்றத்தின் அடிப்படையில் தமது திட்டங்களை மாற்றி கொள்கிறார்கள்.
தனது தாயார் ஒரு நாள் தொலைபேசியில் அழைத்து ஒரு குறிப்பிட்ட பங்கினை வாங்க சொன்னதாகவும், காரணத்தை கேட்ட போது அந்த பங்கு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்று மட்டுமே சொல்ல தெரிந்திருந்தாகவும், அந்த கணத்திலேயே சந்தை விரைவில் வீழப் போகிறது என்று தான் புரிந்து கொண்டதாகவும் ஜிம் ரோஜர்ஸ் அவரது சொந்த அனுபவத்தை விளக்கும் போது கூறுகிறார்.
வெற்றிகரமான பரஸ்பர நிதி மேலாளரான பீட்டர் லின்ச் தனது சொந்த அனுபவத்தை விளக்கும் போது, விருந்துகளில் தான் கலந்து கொண்ட போது யாரும் தன்னிடம் வந்து பங்குசந்தையைப் பற்றி பேச ஆர்வம் காட்ட வில்லை என்பது முதல் நிலை என்கிறார். எந்த பங்கு மேலே போகும், எதை வாங்கலாம் என்று மற்றவர்கள் விசாரிக்க ஆரம்பித்தால் காளை ஓட்டம் ஜோராக உள்ளது என்று அர்த்தம். அதே சமயம், அவரிடத்தில் வந்து தான் இந்த பங்கை வாங்கி இவ்வளவு சம்பாதித்தோம், நீங்களும் கூட இந்த பங்கினை வாங்கலாம் என்று (பங்கு சந்தையில் முன் அனுபவம் அதிகம் இல்லாதவர்கள்) மற்றவர்கள் ஆலோசனை சொன்னால் காளை ஓட்டம் முடிவாக போகிறது என்று அர்த்தம் என்று கூறுகிறார்.
இந்திய பாணியில் ஒரு விளக்கம்.
உலக சந்தைகள் முன்னேறுகின்றன. இந்திய பங்கு சந்தைகள் தடுமாறுகின்றன. வணிக தொலைக்காட்சிகளில், இந்தியாவின் பொருளாதாரம் எவ்வளவு தடுமாறிக் கொண்டிருக்கிறது, நிறுவனங்கள் எத்தனை பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன, சென்செக்ஸ் இன்னும் எவ்வளவு விழப் போகிறது என்பதை பற்றி எல்லாம் அதிக விவாதம் நடந்தால் காளை ஓட்டம் துவங்கப் போகின்றது என்று அர்த்தம்.
உலக சந்தைகள் முன்னேறுகின்றன. இந்திய பங்கு சந்தை வேகமாக முன்னேறுகின்றது. இந்த ஓட்டம் ஆபத்தானது, ஏன் இவ்வளவு வேகம் என்று புரியவில்லை, இங்கெல்லாம் ஏராளமான எதிர்ப்பு நிலைகள் உள்ளன, அடிப்படைகள் அவ்வளவு சரியாக இல்லை, அமெரிக்காவில் பிரச்சினை வரப் போகிறது என்றெல்லாம் அதிக விவாதம் நடந்தால் காளை ஓட்டம் ஜோராக உள்ளது என்று அர்த்தம்.
உலக சந்தைகள் தடுமாறுகின்றன. பொருளாதார விபரங்கள் நன்றாக இல்லை. அதே சமயம், உலக சந்தைகளுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை, இந்தியா வலுவானது, தனித்துவமானது, சந்தை இப்போதைக்கு சரிந்தாலும் நீண்ட கால நோக்கில் வலுவாகவே இருக்கும் என்றெல்லாம் கோஷங்கள் வர ஆரம்பித்தால் காளை ஓட்டம் நிறைவு பெறப் போகிறது என்று அர்த்தம்.
"பயத்தின் உச்சியில்தான் காளை ஓட்டம் துவங்குகிறது. நம்பிக்கையின் உச்சக் கட்டத்தில்தான் கரடி ஓட்டம் ஆரம்பமாகுகிறது என்பது பங்குசந்தையின் முக்கிய தங்க விதிகளில் ஒன்று."
மொத்தத்தில் பங்கினையும் நிறுவனத்தின் போக்கினையும் கவனிப்பதோடு உங்களை சுற்றி இருப்பவர்களையும் கவனித்து வாருங்கள். எந்த பங்கினை எந்த விலையில் வாங்கினாலும் லாபம் சம்பாதிக்க முடியும் என்ற மாயை உருவானாலோ, பொதுமக்களிடம் பங்கு சந்தையை பற்றிய ஆர்வம் மிக அதிகமானாலோ, போகிறவர் வருபவர் எல்லாரும் பங்கு சந்தை வெற்றிக் கதைகளை பற்றி பேச ஆரம்பித்து விட்டாலோ, நாம் சற்று பதுங்க வேண்டிய காலம் வந்து விட்டது என்று அர்த்தம்.
நன்றி!
பின்குறிப்பு
இதெல்லாம் சரி. பங்குசந்தையின் இப்போதைய நிலை என்ன என்று கேட்க ஆசைப் படுகிறீர்கள் என்று நினைக்கிறேன். எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் சந்தை தனது முதலாவது மற்றும் இரண்டாவது (காளை ஓட்ட) நிலைகளை தாண்டி விட்டது என்று நினைக்கிறேன். முடிவு எவ்வளவு சீக்கிரம் என்று சொல்ல முடியா விட்டாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டம் வந்து விட்டது என்றும் நினைக்கிறேன்.
பயணம் தொடரும்.
Wednesday, September 23, 2009
தலைவர்கள் ஜாக்கிரதை!
இன்போசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் நிலகேனி அவர்கள் எழுதிய இமேஜினிங் இந்தியா என்ற புத்தகத்தில் விவரிக்கப் பட்டிருந்த ஒரு உண்மை சம்பவம், தலைவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.
அந்த சம்பவம் இங்கே.
சென்ற நூற்றாண்டின் தொண்ணுறுகளில் பொதுத் துறை வங்கி ஊழியர்கள், கணினி மயமாக்குதலை கடுமையாக எதிர்த்து வந்தது அனைவரும் அறிந்ததே. அந்த காலகட்டத்தில், கணினி மயமாக்குதல் வங்கித் துறைக்கு எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதை விளக்கும் பணி நந்தன் அவர்களிடம் ஒருமுறை கொடுக்கப் பட்டிருந்தது.
ஏ.டி.எம் சேவை, இணைய தள சேவை மற்றும் கிரெடிட் கார்டு சேவை போன்றவை வங்கித் துறையை இன்னும் மேலே எடுத்துச் செல்லும் என்று விளக்குவதற்காக, தன்னுடைய திறமை அனைத்தையும் செலவழித்து முன்கூட்டியே தயார் படுத்திக் கொண்ட நந்தன் அவர்களுக்கு ஆச்சரியமே காத்திருந்தது.
வங்கி ஊழியர்கள் முன்னே அவரளித்த விளக்க உரைக்கு, ஊழியர்களின் தலைவர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது. கணினிமயமாக்கம், வங்கித் துறைக்கு எவ்வளவு அவசியம் அல்லது லாபகரமானது என்பதை வலியுறுத்த முயன்ற அவரது ஒவ்வொரு கருத்துக்கும், வலுவான மாற்றுக் கருத்துக்களை ஊழியர் தலைவர்கள் முன்வைத்தனர். சொல்லப் போனால், நந்தனின் கருத்துக்கள் தவறு என்று பலரையும் நம்ப வைக்கும் அளவுக்கு தலைவர்களின் வாதங்கள் மிக வலுவாகவே இருந்தன. எத்தனையோ நாடுகளுக்கு சென்று எவ்வளவோ நிறுவனங்களை கணினிமயமாக்க ஒப்புக் கொள்ள செய்த, நந்தனின் தொழிற் திறமை இங்கு பலிக்க வில்லை.
முற்றுப் பெறாமலேயே முடிவடைந்த அந்த விவாதங்களுக்குப் பிறகு அனைவரும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது நந்தன் அருகே வந்த ஒரு யூனியன் தலைவர் கூறினாராம். "எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.ஒரு பிள்ளை பாஸ்டனிலும் இன்னொரு பிள்ளை சியாட்டிலிலும் மென்பொருட் துறையில் பணி புரிகின்றனர். (கணினிமயமாக்கம் பற்றி) நீங்கள் சொல்லும் அனைத்துக் கருத்துக்களையும் நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அவற்றை நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. காரணம் நான் ஒரு தலைவன் என்ற முறையில் என்னுடைய தொகுதியை (ஊழியர் சங்கம்) காப்பாற்றிக் கொள்ள வேண்டும்."
இந்த சம்பவம் நடந்த பல வருடங்களுக்குப் பின்னரே பொதுத் துறை வங்கிகளில் கணினிமயமாக்கம் நடைபெற்றது. இடையில் நுழைந்த தனியார் வங்கிகள் எவ்வளவோ முன்னேறி விட, பொது துறை வங்கிகள் (தொழிற் நுட்பத் துறையில்) வெகுகாலம் வரை பின் தங்கியே காணப் பட்டன. இது மட்டுமல்ல. ஒரு காலத்தில் அரசு சார்பு நிறுவனங்களில் மிக அதிக ஊதியம் பெற்று வந்தவர்களான அரசு வங்கி ஊழியர்கள், (தங்களது தலைவர்களை கண்மூடித் தனமாக பின்பற்றியதால்) இன்றைக்கு பொதுத் துறை நிறுவனங்களிலேயே மிகக் குறைந்த சம்பளம் வாங்குபவர்களாக இருக்கின்றனர்.
தன பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களை கணினிப் படிப்பு படிக்க வைத்த அந்த வங்கி ஊழியர் சங்கத் தலைவர், தன்னையே நம்பி இருந்த லட்சக்கணக்கான ஊழியர்களின் நலன் பற்றி அக்கறை கொள்ள வில்லை. ஒருவேளை அப்படி அக்கறை இருந்திருந்தாலும், தன்னுடைய பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் அறிவை வளர்ப்பதை விட உணர்வுகளை கொழுந்து விட்டெரிய செய்யவே விரும்பியிருக்கிறார்.
இது போன்ற நிகழ்வு வங்கித் துறையில் மட்டுமல்ல. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், துறையிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இது போன்று மோசடி செய்பவர்கள், பெரிய அரசியல் தலைவர்களாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் அன்றாடம் பழகும், மூத்தவர்கள் என்று நம்பும் பல குட்டித் தலைவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். எனக்கும் கூட தனிப்பட்ட முறையில் இது போன்ற பல தலைவர்களிடமிருந்து ஏராளமான அனுபவ பாடங்கள் கிடைத்துள்ளன.
இதற்கு என்னதான் முடிவு?
ரொம்ப சிம்பிள்.
வாய் சவடால்களை நம்புவதை விட முகமூடியற்ற முகங்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம். ஊருக்கு மட்டுமென வரும் உபதேசங்களை ஒதுக்கித் தள்ளுவோம். தலைவர்களை நம்புவதை விட தன்னையே அதிகம் நம்புவோம்.
நன்றி!
Thursday, September 17, 2009
பங்குச்சந்தை வெற்றிப்பயணம் - என்னுடைய வழி எளிய வழி
இப்போது உச்ச வேகத்தில் பயணம் செய்யும் பங்குச்சந்தையில் எப்படி முதலீடு செய்வது, முதலீடு செய்த பிறகு, முன்போல அதல பாதாளத்தில் விழுந்து விட்டால் என்ன செய்வது, அதே சமயம் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் சந்தை புதிய உயரத்திற்கு சென்று விடுகிறதே என்றெல்லாம் பலருக்கும் குழப்பங்கள் இருக்கும். இது போன்ற ஒரு சிக்கலான நிலையில் என்னுடய பாணி என்னவென்று இங்கு உரைப்பது சிலருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சென்ற பதிவில் அருமை நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதிலையே இந்த பதிவாக வழங்குகிறேன். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.
நன்றி.
//எனவே பங்குகள் வாங்குபவர்கள் இன்னும் சிறிது காலம் தாழ்த்தலாம் என் நினைக்கின்றேன்,
தங்கள் பதில் என்ன குரு?// ( கேட்டவர் திரு.ரஹ்மான்)
இது போன்று, தவறினால் பறந்து விடும். ஆனால் மாட்டிக் கொண்டால் அதல பாதாளத்திற்கு வீழ்ந்து விடும் என்ற நிலையில் வர்த்தகம் செய்வது மிகவும் கடினமான காரியமே.
எனக்கு தெரிந்த வரை இப்போதைய காளை ஓட்டம் நிற்க வேண்டுமென்றால் ஒரு மிகப் பெரிய கெட்ட செய்தி வர வேண்டும். ஒருவேளை அப்படி ஒரு செய்தி வந்து விட்டால் எந்த ஒரு ஸ்டாப் லாஸும் நம்மைக் காப்பாற்றாது.
என்னுடய பாணியையும் இங்கே சொல்லி விடுகிறேன்.
ஒவ்வொரு நாளும் என்னிடம் உள்ள சிறப்பாக செயல் படும் பங்குகளை (மிக) கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக் கொண்டே போகிறேன். செயல்படாத பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே போகிறேன். பங்குகள் விற்ற லாபத்தில் அவ்வப்போது தங்க நிதிகளையும் வாங்குகிறேன். மொத்த முதலீட்டு அளவு அதிகம் மாறாமல் பார்த்துக் கொள்கிறேன்.
சந்தையில் தொடர்ந்து மேலேறும், அடிப்படையில் சிறந்த பங்குகளை மட்டுமே கைவசம் வைத்திருக்க வேண்டும். அதாவது, எவ்வளவு வீழ்ந்தாலும், இன்னும் வாங்கவே விரும்புகிற பங்குகளை அடிப்படையில் சிறந்த பங்குகளை மட்டுமே கைவசம் வைத்திருக்க வேண்டும்.
காற்றில் கிடைக்கும் செய்திகளை நம்பி வாங்குவதை தவிர்க்கவும். சொந்த ஆராய்ச்சியை அதிகம் நம்பவும்.
தோல்வி பற்றிய பயமில்லாமல், அதே சமயம் தோல்வியை பற்றிய விழிப்புணர்வுடன் வர்த்தகம் செய்யவும்.
Be aware of the maximum possible losses. Trade within maximum risk limits. But trade without any fear.
//இது (Yes Bank Ltd) நல்ல சிறந்த நிறுவனம் தான் சார்.உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி சார் இதில் எந்த விலையில் உள்ளே போகலாம்.ஏன் என்றால்,
52 week low=41/-(9-3-09)
52 week high=202/-(17-9-09)
All time high=277/-(10-1-09)
இப்போது விலையில் 192/-உள்ளதே. // (கேட்டவர் திரு.தாமஸ் ரூபன்)
இங்கேயும் என்னுடைய பாணியை சொல்லி விடுகிறேன்.
ஒரு நிறுவனம் எனக்குப் பிடித்திருந்தால், நான் விலைகளை பற்றி அதிகம் கவலைப் படுவதில்லை. கவனம். எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே பங்குகளை வாங்குவேன். மற்றவர்களின் பரிந்துரையால் அல்ல.
சிறப்பாக செயல்படும் சில நிறுவனங்களை own செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவேன். அது போன்ற ஒரு நிறுவனம் இது (யெஸ் பேங்க்.
அதே சமயம், மிக அதிக விலையில் ஒரு நிறுவனத்தை வாங்கி விட்டு பின்னர் விலை வீழ்ச்சி ஏற்பட்டால், அது எவ்வளவு நல்ல நிறுவனமாக இருந்தாலும் சரி, மனதில் சில சஞ்சலங்கள் ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக நான் துவக்கத்தில் மிக குறைந்த அளவு பங்குகளை மட்டுமே வாங்குவேன். சில சமயங்களில் அது ஒன்றிரண்டாக கூட இருக்கும்.
ஒரு பங்கை நாம் வாங்கிய பிறகு அந்த நிறுவனத்தை மனதளவில் தொடர ஆரம்பிக்கிறோம். அதற்கு பின்னர் வரும் செய்திகள், சந்தையின் ஓட்டம் ஆகியவை சாதகமாக இருந்தால் பத்து பத்து சதவீதமாக வாங்குவேன். சந்தையின் மேலோட்டம் வேகமாக இருக்கும் போது, இந்த முறை குறைந்த லாபத்தையே கொடுக்கும் என்றாலும், சிக்கி கொள்வதில் இருந்து தப்பிக்க முடியும்.
ஒரு பெரிய பங்குச்சந்தை வித்தகர் கூறி இருக்கிறார்.
"It is very important to remain solvent in a market"
அதாவது, பங்குச்சந்தையில் லாபம் சம்பாதிக்கலாம் அல்லது நஷ்டமாகலாம். ஆனால் ஒருபோதும் ஓட்டாண்டியாகக் கூடாது. ஏனென்றால், அப்புறம் திரும்பி வர முடியாது.
//அரசாங்கம் வங்கியில் உள்ள விவசாயிகளின் கடனை சுமார் 65,oooகோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்தார்களே அதை அரசாங்கம் வங்கிகளுக்கு திரும்ப கொடுத்தா?
வங்கிகள் கூறும் வாராக்கடன்களின் புள்ளிவிவரங்கள் சரியானதா?
வங்கி பங்குகள் எல்லாம் அதிகம் உயர்ந்து உள்ளதால், அதிகம் உயராத,ஹோட்டல்(HOTELLEELA,INDHOTEL), டெக்ஸ்டைல்ஸ்(BOMDYEING,SKUMARSYNF), ஏர்வேஸ்(KFA ,JETAIRWAYS ) பங்குகள் வாங்கலாமா?(2010 ல் காமன்வெல்த் போட்டிகள் நடப்பதால் உயருமா?)//
இந்திய வங்கிகளின் அடிப்படை அம்சங்கள் ஓரளவுக்கு சிறப்பாகவே உள்ளன. அதே சமயம், பொருளாதாரம் வேகமான வளர்ச்சி காணாவிடில் பெரிய அளவு எதிர்பார்க்க முடியாது.
சந்தைகள் இப்போது ஒரு சுழற்சி முறையில் செல்வதைப் போல தோன்றினாலும், அடிப்படை சரியில்லாத நிறுவனங்களை அல்லது துறைகளை முதலீட்டாளர்கள் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. அதாவது பில்டிங் ஸ்ட்ரோங் பேஸ்மென்ட் வீக் போன்ற நிறுவனங்கள் வேண்டவே வேண்டாம்.
அதே சமயத்தில் குறுகிய கால வர்த்தகம் செய்பவர்கள், சந்தையின் மனநிலையை சரியாக கணிக்க முடிந்தால் மட்டுமே இது போன்ற அடிப்படை வலுவில்லாத நிறுவனங்களை தொட விரும்பலாம் .
பங்குச்சந்தையில் வெற்றி பெற்றவர்களில் பலர் உயரும் பங்குகளையே வாங்குகிறார்கள். கீழே வரும் பங்குகளை வாங்குவது, விழுகின்ற கத்தியை கரம் நீட்டி வெறுங்கையில் பிடிப்பது போல என்று கூட சொல்லலாம்.
பங்குச்சந்தையில் வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி.
Wednesday, September 16, 2009
பங்குச்சந்தை வெற்றிபயணம் - ஒரு விளையும் பயிர்!
சென்ற வருடம் வங்கிகளுக்கெல்லாம் குறிப்பாக தனியார் வங்கிகளுக்கெல்லாம் போதாத காலமாக இருந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும். கடினமான சூழ்நிலையிலும் தனது சிறப்பான செயல்பாட்டை தக்க வைத்துக் கொண்ட ஒரு வங்கியைப் பற்றி இங்கு பார்ப்போம்.
ஏற்கனவே சொன்னபடி ஒரு பங்கினை ஆராய்வது எப்படி என்பதை ஒரு நடைமுறை பயிற்சி மூலம் நேரடியாக புரிந்து கொள்வது, எளிமையாகவும் அதே சமயத்தில் மனதில் ஆழமாக பதியும் படி இருக்கவும் வாய்ப்புண்டு. அந்த வகையில் இந்த தொடர்பதிவில் இரண்டாவது முறையாக (முதல் பதிவு இங்கே) ஒரு நிறுவனத்தைப் பற்றி இங்கு ஆராய்வோம். நாம் பயிற்சிக்கு எடுத்துக் கொள்ளவிருக்கும் இந்த நிறுவனம் ஒரு வங்கி. பெயர் யெஸ் பேங்க் (Yes Bank Ltd)
ஒரு நிறுவனத்தைப் பற்றி ஆராய்வதற்கு முன்னர், அந்த நிறுவனம் புவியியல் ரீதியாக அமைந்துள்ள நாட்டை (இங்கே இந்தியா) பற்றியும், சார்ந்துள்ள துறையைப் (இங்கே வங்கித்துறை) பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். வாய்ப்புக்களையும் அபாயங்களையும் (opportunities and threats), ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றாலும் நேரமின்மை காரணமாக இங்கு சில மேலோட்டமான தகவல்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
இந்தியா ஒரு வளரும் நாடு. இன்னமும் கூட பல ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை காண முடியும். அதே சமயம், உயரும் பணவீக்கம், குறையான கட்டுமான வளர்ச்சி போன்றவை பலவீனங்கள் ஆகும்.
இந்தியாவில் பல வங்கிகள் இருந்தாலும், இந்திய வங்கித்துறை இன்னமும் அடைய வேண்டிய தூரம் ஏராளமாக உள்ளது. வேகமாக வளரும் தொழிற்துறை மற்றும் மாறி வரும் மக்களின் மனப்பாங்கு (Demographic Change), உயரும் பொருளாதார நிலை ஆகியவை வங்கித் துறைக்கு சாதக அம்சங்கள். அதே சமயம், வாராக் கடன், வலுவற்ற, நிலையற்ற அரசுக் கொள்கைகள் பாதக அம்சங்கள் ஆகும்.
இப்போது யெஸ் பேங்க் பற்றி பார்ப்போம்.
அறிவை நம்பிய (Knowledge Banking) ஒரு தனியார் வங்கியாக வங்கித்துறையில் சிறந்த அனுபவம் கொண்ட ரானா கபூர் அவர்களால் துவங்கப் பட்டது இந்த வங்கி.
இந்த வங்கியில் என்னை கவர்ந்த சில அம்சங்கள் கீழே.
அனுபவம் வாய்ந்த அதே சமயம் குறிப்பிடத்தக்க அளவு துடிப்பாக உள்ள நிர்வாகத் தலைமை.
தொழிற் நுட்பத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் வங்கி இது.
ஆரம்பித்த சில ஆண்டுகளுக்குள்ளேயே, லாப அளவு பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்ற தனியார் துறை வங்கிகளுக்கெல்லாம் மிகச் சிரமமான வருடமாக இருந்தாலும் கூட, சென்ற வருடமும் கூட இந்த வங்கி சிறப்பான முறையில் லாபம் ஈட்டியது கவனிக்கத் தக்கது.
உயரிய அளவில் உள்ளவர்களுக்காக மட்டுமே (Wholesale Banking) அதிகமாக வங்கி சேவையை வழங்கி வந்த இந்த வங்கி இப்போது சிறு நுகர்வோர்களுக்காகவும் (Retail Banking) அதிக அளவில் வங்கி சேவையை வழங்க முன்வந்துள்ளது குறிப்பிடத் தக்க அம்சம். இதற்காக இந்தியாவின் பல இடங்களிலும் புதிய கிளைகளை துவக்கவுள்ளது.
(மேலும் விபரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும்)
இது போல இளமையான, துடிப்பான, பெரிய அளவில் வளரும் ஆர்வமுள்ள, தொழிற் நுட்பத்தை அதிகம் நம்பும் ஒரு நிறுவனம் பங்கு முதலீட்டுக்கு மிகவும் ஏற்றது என்று நம்புகிறேன்.
அதே சமயத்தில் எவ்வளவுதான் நல்ல நிறுவனம் என்றாலும், அந்த நிறுவனத்தின் பங்குகளை எந்த விலை கொடுத்து வாங்குகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது வெற்றி அமையும்.
இந்த வங்கியைப் பொறுத்த வரை ஒரு பங்கு ருபாய் நூற்று தொண்ணூறு அளவில் விற்பனையாகிறது. இதன் மொத்த சந்தை மதிப்பு (Total Market Capitalization) சுமார் 5700 கோடி ரூபாய் ஆகும். அதாவது 5700 கோடி ருபாய் முதலீடு கடந்த வருடம் சுமார் முன்னூறு கோடி சம்பாதித்துள்ளது. விலை - வருமான விகிதம் (P/E Ratio) பதினேழாக உள்ளது.
ஒரு நிறுவனம் தனது வாழ்க்கை சுழற்சியில் (life cycle), வயது அதிகமாக அதிகமாக இந்த விலை-வருமான விகிதம் குறைவாகிக் கொண்டே போகும். (ஒரு மனிதனின் உயர வளர்ச்சி (Growth rate) விகிதத்தைப் போல)
அந்த வகையில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இந்த விகிதம் பதினைந்தாக இருக்கும் என்று அனுமானித்துக் கொள்வோம். (இந்த விகிதம் சந்தையின் அப்போதைய மனப்போக்கிற்கு தகுந்தாற் போல மாறக் கூடியது) மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 9000 கோடி ரூபாயாக இருக்க வேண்டுமென்றால், இந்த நிறுவனம் அந்த ஆண்டு குறைந்த பட்சம் அறுநூறு கோடி ருபாய் லாபம் ஈட்ட வேண்டும். சந்தை மதிப்பு உயரும் போது, நமது பங்கின் மதிப்பு கூடவே உயரும். புதிதாக பங்குகள் ஏதும் வெளியிடப் படவில்லையென்றால், ஒரு பங்கின் விலை அப்போது சுமார் 300 ரூபாயாக இருக்க வாய்ப்புண்டு.
மேலே சொன்னவையெல்லாம் ஒரு கணிப்பு மட்டுமே. எல்லாமே தலைகீழாக போகவும் வாய்ப்புக்கள் உண்டு. உதாரணமாக நாட்டின் வளர்ச்சி அல்லது வங்கித் துறையின் வளர்ச்சி தடைபடலாம். நிறுவனத்தின் தலைமையில் மாற்றம் அல்லது நிறுவன செயல்பாடுகளில் குறைபாடு, எதிர்பார்த்த அளவு லாபம் ஈட்ட முடியாமல் போதல் போன்ற அபாயங்களும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக பங்குசந்தையில் ஒரு பெரிய வீழ்ச்சி கூட ஏற்படலாம்.அதனால்தான் பங்கு சந்தை முதலீடுகள் அபாயம் மிக்கவை என்று சொல்கிறார்கள்.
எல்லாமே நல்ல படியாக நடந்தால் மட்டுமே பங்குகள் மேலே செல்ல வாய்ப்புக்களுண்டு.
கடந்த சில நாட்களில் இந்த பங்கு ஏராளமாக உயர்ந்தது இந்த பங்கினை பற்றி எழுத ஒரு தயக்கத்தை கொடுத்தது. இருந்தாலும், பங்கு முதலீட்டுக்கு ஏற்ற ஒரு வளரும் நிறுவனத்தைப் பற்றி எழுதுவது இந்த தொடர்பதிவுக்கு உதவும் என்பதால் இங்கு பதிந்துள்ளேன்.
இந்த பங்கினை வாங்க விரும்புபவர்கள், இந்த நிறுவனத்தின் இணையதளத்தை பார்த்து அதிகப் படியான விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த வங்கியின் கிளைகளுக்கு நேரில் சென்று கூட (வாடிக்கையாளர்களிடம் விசாரித்தும் கூட), வங்கியின் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
சந்தையின் வேகம் (பங்கின் வேகமும் கூட) இப்போது அதிகமாக இருப்பதால், நீண்ட கால முதலீடு செய்ய விரும்புவர்கள், ஒரே சமயத்தில் வாங்காமல் இடைவெளி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வேறு வேறு விலைகளில் (Accumulation at periodic intervals at various levels) வாங்கலாம்.
ஒரு முதலீடு என்பது நீண்ட கால தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது ஆகும். எனவே, முதலீட்டுக்கு பிறகு நிறுவனம், துறை மற்றும் நாட்டின் பொருளாதாரம் (உலகமயமாக்கலுக்கு பின்னர் மற்ற நாடுகளைப் பற்றியும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியிருக்கிறது) ஆகியவற்றை பற்றிய செய்திகளை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நமது கணிப்புக்கள் தவறானவை அல்லது தவறுகின்றன என்று தெரிய வந்தால், இந்த நிறுவனத்தை பற்றி மீண்டும் ஒரு முறை (உடனடியாக, காலந்தாழ்த்தாமல்) பரிசீலித்து (Review the performance and the environment) தகுந்தாற்போல முடிவெடுக்கலாம்.
ஒரு பங்கினை எப்படி ஆராய வேண்டும், அதன் விலை எவ்வளவு உயரும் என்பதை எப்படி கணிக்க வேண்டும், கணிப்புகள் தலைகீழாக போக வாய்ப்புக்கள் யாவை, அப்படியானால் என்ன செய்வது என்றெல்லாம் மேலோட்டமாக இங்கே பார்த்தோம். இன்னும் கூட விரிவாக பின்வரும் பதிவுகளில் விவாதிப்போம்.
பயணம் தொடரும்.
டிஸ்கி: இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.
Tuesday, September 15, 2009
கொலம்பஸ்! கொலம்பஸ்!
கொலம்பஸ் ஒருவேளை நம்மூர் பெண்ணை திருமணம் செய்த பின்னர், அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருந்தால் அமெரிக்காவை கண்டுபிடித்திருக்கவே முடியாது. ஏனென்று கேட்கிறீர்களா?
கிளம்புவதற்கு முன்னர் அவர் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் அளித்திருக்க வேண்டும்.
எங்கே போகிறீர்கள்?
எதற்காக போகிறீர்கள்?
போய்த்தான் ஆக வேண்டுமா?
அப்படி என்ன அவசியம்?
இரவு சாப்பிட வருவீர்களா?
போய் வர எத்தனை நாளாகும்?
யாருடன் போகிறீர்கள்?
எதற்காக அவர்களுடன் போகிறீர்கள்?
இவற்றுக்கெல்லாம் கூட பதில் அளித்து விடலாம். ஆனால் கடைசி இரண்டு கேள்விகள்;
என்னையும் கூட்டிச் செல்வீர்களா?
ஏன் முடியாது?
இதற்கு பதில் அளித்து விட்டு செல்வதற்கு பதிலாக வீட்டிலேயே இருந்து விடலாம் என்று யோசித்திருப்பார் என்று மின்னஞ்சலில் வந்த ஒரு நகைச்சுவையை என் நண்பருடன் பகிர்ந்து கொண்டேன்.
அதற்கு கூறினார்.
"கொலம்பஸ் ஒருவேளை நம்மூராக இருந்திருந்தால் அமெரிக்காவை கண்டுபிடித்ததை யாரிடமும் சொல்லியிருக்க மாட்டார்"
ஏன் என்று கேட்டேன்.
"யாரிடமும் சொல்லாமல் மனைவியை அமெரிக்காவிற்கு கொண்டு சென்று விட்டு விட்டு வந்திருப்பார்.அமெரிக்காவின் கண்டுபிடிப்பு சாதனையை விட இது பெரிய சாதனையாக இருந்திருக்கும்." என்றார்.
என்ன பண்ண?
அவரவர் கஷ்டம் அவரவருக்குத்தான் தெரியும்.
நன்றி!
Labels:
நகைச்சுவை
Monday, September 14, 2009
Sunday, September 13, 2009
யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே!
வெளிப்பார்வைக்கு சாதாரணமாக தெரியக் கூடிய, நாம் அனைவரும் அறிந்த இந்த சொல்வழக்கில் ஒரு முக்கிய பொருளாதார தத்துவம் அடங்கியிருக்கிறது. பொதுவாக, பொருளாதாரத்தில் நடைபெறவுள்ள மாறுதல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் கருவியாகவே பங்குசந்தை இருந்து வருகிறது. உதாரணமாக, பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தை பொதுமக்கள் புரிந்து கொண்டது கடந்த செப்டம்பர் மாதம்தான். ஆனால் பங்கு சந்தைகள், சென்ற ஜனவரி மாதத்தில் இருந்தே தமது வீழ்ச்சியை ஆரம்பித்து விட்டன. பொருளாதார வீழ்ச்சியின் முழு வீச்சும் உணரப் பட்ட (நடப்பு ஆண்டு) மார்ச் மாதத்திலோ பங்கு சந்தைகள் மெல்ல மெல்ல மீண்டு எழ ஆரம்பித்து விட்டன.
பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் இப்போதுதான் அங்கங்கே தெரிய ஆரம்பித்துள்ளன என்றாலும், பங்கு சந்தைகளின் பொற்காலமான 2007 அளவுகளுக்கு அருகேயே பங்குசந்தைகள் இப்போது சென்று விட்டன. பல பங்குகள் தமது பழைய உயர்வு நிலையை எட்டிவிட, சில பங்குகளோ பழைய நிலைக்கும் மேலேயே சென்று விட்டன.
இப்போதைய பங்குசந்தையின் கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில், உலகின் பொருளாதார நிலையும் கிட்டத்தட்ட பொருளாதார உச்ச காலமான 2007 நிலைக்கு வெகு சீக்கிரமே வந்து விட வேண்டும்.
அதாவது மணி ஓசை கேட்ட பின்னர் வர வேண்டியது யானையாகத்தான் இருக்க வேண்டும் என்பது பங்குசந்தையின் கணிப்பு. சில சமயங்களில் வருவது குச்சி ஐஸ் வண்டியாகவோ அல்லது மணி கட்டிய பூனையாக கூட இருக்கலாம் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. சந்தையின் கணிப்புக்கள் எப்போதுமே சரியாக இருந்தது கிடையாது என்பதை சரித்திரம் சொல்கிறது.
மேற்சொன்னதை மனதில் வைத்துக் கொண்டுதான் நாம் இனிமேல் பங்குசந்தையை அணுக வேண்டும். ஒவ்வொருடைய முதலீடும், முழுமையான பொருளாதார மீட்சிக்கான வாய்ப்பு, நிறுவனத்தின் (அதுவரைக்கும்) தாக்குபிடிக்கும் தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு பின்னர் ஒரு நிறுவனம் சம்பாதிக்க கூடிய லாப அளவு ஆகியவற்றின் மீதான சொந்த கணிப்பின் பேரிலேயே அமைய வேண்டும்.
சென்ற வாரத்தில், பங்கு சந்தைகளில் ஒரு அசாதாரண நிலை நிலவியதை பலரும் கவனித்திருப்பீர்கள். நிபிட்டி பல மாதங்களாக சந்தித்து வந்த 4730 எதிர்ப்பு நிலையை சென்ற வாரத்தில் எளிதாக முறியடித்தது. ஏற்கனவே சொன்னபடி ரிலையன்ஸ் போன்ற பெரிய பங்குகளின் முன்னேற்றம் இந்த வெற்றிக்கு சாதகமாக இருந்தது. தொடர்ந்து வரும் வெளிநாட்டு முதலீடுகள், உலக சந்தைகளில் நிலவிய சாதகமான போக்கு, உலோகப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவையும் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களாக விளங்கின.
அதே சமயம், 4730 என்ற நிலை முறியடிக்கப் பட்டதற்கு பின்னர் பலரும் எதிர்பார்த்தபடி பெரிய அளவு முன்னேற்றங்கள் சந்தையில் தென்பட வில்லை. குறிப்பாக சிறிய மற்றும் இடைநிலை பங்குகளில் பெரியதொரு வீழ்ச்சி காணப் பட்டது. ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஐஸிஐஸிஐ வங்கி போன்ற பெரிய பங்குகள் மட்டுமே மேலேற, வெளியிலோ ஏதோ ஒட்டு மொத்த சந்தையே முன்னேறுவது போன்ற ஒரு மாயத்தோற்றம் காணப் பட்டது.
இந்த நிலை வரும் வாரமும் தொடர வாய்ப்புள்ளதால், ஏற்கனவே அதிக அளவு முன்னேறி விட்ட சிறிய மற்றும் இடைநிலை பங்குகளில் வர்த்தகம் செய்யும் நண்பர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். 4700 என்ற நிலையை மையப் புள்ளியாக வைத்துக் கொண்டு பெரிய பங்குகளில் வர்த்தகம் செய்யலாம்.
வரும் வாரம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.
நன்றி.
Labels:
பங்கு சந்தை
Friday, September 11, 2009
இன்றைய உலகின் அசாதாரண நிலை!
அமெரிக்க வங்கியான லெமென் பிரதர்ஸ் வங்கி மூழ்கி ஒரு வருடம் முடிவடைந்த நிலையில், தற்போதும் உலகம் பொருளாதார ரீதியாக ஒரு அசாதாரண நிலையில்தான் உள்ளது. அதிகப் படியான பணபுழக்கம், கடனைத் திருப்பித் தரமுடியாதவர்களுக்கு ஏராளமான கடன் வழங்குதல், மீளாக் கடன்களை கொண்டு கட்டி வந்த ஒரு தலைகீழ் மணல் கோட்டை, ஊதி பெருத்து வந்த அமெரிக்காவிற்கு பலவகையிலும் சேவை செய்து பிழைத்து வந்த ஆசிய நாடுகள், இதனால் விளைந்த டாலர் சுழற்சி முறை என பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த தவறுகளின் அடிப்படையில், ஒரு பயங்கர பொருளாதார பூகம்பம் சென்ற ஆண்டு ஏற்பட்டது. அந்த பூகம்பத்தின் ஒரு முக்கிய மையமாக லெமென் பிரதர்ஸ் வங்கியின் வீழ்ச்சி இருந்தாலும் அதன் தாக்கம் பல ஆயிரம் கிலோ மீட்டர் வரை இருந்தது..
இந்த பொருளாதார பூகம்பத்தை சரிகட்டுவதற்காக, சரிந்த மணல் கோட்டையின் மீதே இன்னும் ஒரு பெரிய மணல் கோட்டை கட்டும் விதமாக, அமெரிக்கா மற்றும் இன்னும் பல நாடுகளின் அரசுகள், சந்தைக்குள் ஏராளமான பணத்தை இறக்கி விட்டன. (நோட்டு அச்சடிப்பதில் இந்தியாவும் விதி விலக்கல்ல. இருந்தாலும் அமெரிக்கா வெளியிடும் நோட்டுக்களை ஒப்பிடுகையில் நமது அளவு அவல் பொரி மட்டுமே) உலக நாடுகளின் மைய வங்கிகள் தம் பங்கிற்கு வட்டி வீதத்தை ஏராளமாக குறைத்தன. அமெரிக்க மத்திய வங்கியின் முக்கிய வட்டி வீதம் இப்போது ஜீரோ சதவீதத்திற்கு மிக அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்கும் இந்த முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெற்றது என்று இப்போதைக்கு சொல்வது கடினம். அதே சமயம், இவ்வாறு இறக்கி விடப் பட்ட பணம் பங்கு சந்தை, பொருட்கள் சந்தை, தங்க சந்தை, எண்ணெய் சந்தை என எல்லா சந்தைகளிலும் பரந்து பாவி சந்தைகளை மிக உயரத்தில் கொண்டு சென்று நிறுத்தி உள்ளது. இது மட்டுமல்லாமல், உணவு பொருட்கள் சந்தைகளிலும் பணம் நுழைந்து உணவு பொருட்களின் விலை விண்ணை முட்ட செய்துள்ளது.
இடையே, மதிப்பிழந்து வரும் டாலர் பணத்தை ஏராளமாக கைவசம் வைத்திருக்கும் சீனா தன்னிடம் உள்ள டாலர் பணத்தை கொண்டு, தங்கம், உலோகம், நிலம் மற்றும் கச்சா எண்ணெய் என்று வாங்கிக் குவித்ததும் பல்வேறு சந்தைகளில் ஏற்பட்ட விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம்.
அமெரிக்காவில் இன்னும் கூட பல சிறிய வங்கிகள் தொடர்ந்து மூடப் பட்டு வந்தாலும், பெரிய வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் மூடப் படுவது இப்போதைக்கு குறைந்திருக்கிறது. அதே சமயத்தில், எதிர்பார்த்தபடி, வேலை வாய்ப்புக்களோ அல்லது தொழிற் துறையோ வளர வில்லை. பொருளாதார மீட்சிக்கான பச்சை முளைகள் அங்கங்கே தெரிந்தாலும் அவை விளை பயிர்களின் முளைகளா (greenshoots) அல்லது பதுக்கல் களைகளா (weeds) என்று உறுதியாக தெரிய வில்லை.
தொழிற் உற்பத்தி பெருகாத நிலையில், பண இறக்கம் தொடர்ந்து இருந்தால், அது ஒரு பெரிய பணவீக்கத்தை உருவாக்கி விடக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் அரசுகள் இறக்கி விட்ட பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளா விட்டால் அமெரிக்காவில் பணவீக்கம் பத்து சதவீதத்திற்கு மேல் உயரும் என்று ஆலன் கிரீன்ஸ்பான் எச்சரித்துள்ளார். அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால், பணவீக்கம் ஏற்கனவே பத்து சதவீதத்திற்கு மேல் உள்ள இந்தியா போன்ற நாடுகளின் நிலை என்ன ஆவது என்பதே இப்போதைய கவலை.
எனவே, இப்போது உலக நாடுகளின் அரசாங்கங்கள் ஆழ்ந்த சிந்தனையில் உள்ளன . சந்தைக்குள் அதிகமாக இறக்கி விடப் பட்டுள்ள பணம் தன வேலையை காட்டும் முன்னரே அதை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதே சமயம், பொருளாதார மீட்சி ஏற்படுவதற்கு முன்னரே பணத்தை திரும்ப பெற்றால் பொருளாதாரங்களில் பெரியதொரு தளர்ச்சி ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதை அரசுகள் உணர்ந்துள்ளன.
பொதுவாக இந்தியா, அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளில், பணத்தை அதிக அளவு இறக்கி விடுவது, மக்களிடம் அதிக வரவேற்பு பெறும் செயலாகும் . அரசியல்வாதிகளுக்கு அதிக செல்வாக்கு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. அதே சமயம், திரும்பப் பெறும் முடிவு சற்று கசப்பானதாக இருக்கும். மக்களிடம் ஆதரவு கிடைக்காது.
அரசு பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகள், தமது அரசியல் வாழ்வை அபாயத்திற்கு உள்ளாக்க விரும்பாத காரணத்தால், தற்போதைக்கு தம்முடைய "பணத்தை வெளிவிடும் கொள்கையை"யே தொடர்வது என்ற முடிவை இந்தியா, அமெரிக்கா போன்ற பல நாடுகள் எடுத்துள்ளன.
நோய்க்கு மருந்து அவசியம் என்றாலும், அதிகப் படியான மருந்து உடலுக்கு எமனாகும் முன்னரே, மருந்தை நிறுத்த மருத்துவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.
இவ்வாறு உலக பொருளாதாரம் இன்னமும் சிக்கலான ஒரு சூழலில்தான் உள்ளது. இது வரை நடந்தது வான வேடிக்கை மட்டுமே. இனிமேல்தான் அணுகுண்டுகளை பார்க்கப் போகிறோம் என்று ஒரு சில பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். விலைவாசிகள் கண்டபடிக்கு உயர்ந்து இது வரை சரித்திரம் காணா பணவீக்கம் உருவாக வாய்ப்புள்ளது என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் சந்தைகளின் போக்கும் அசாதாரணமாகவே உள்ளன. பங்கு சந்தைகள் பெருமளவுக்கு உயர்ந்துள்ளன. பங்கு சந்தைக்குள்ளேயே, ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்து பல பங்குகள் தொடர்ந்து வீழ்ந்து வந்தாலும், ஒட்டுமொத்த சந்தையே மேலே செல்வது போன்ற மாயத் தோற்றம் உருவாகி உள்ளது. தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் மிகவும் உயர்ந்துள்ளன. ஏற்கனவே சொன்ன படி உணவுப் பொருட்களின் விலைகளும் கண்டபடிக்கு உயர்ந்துள்ளன. ரியல் எஸ்டேட் விலைகளும் இன்னும் சில நாட்களில் உயரத் தொடங்கும் என்றும் கருதப் படுகிறது.
உடனடியாக தொழிற்துறை வளர்ச்சி பெற்று அதன் மூலம் வேலைவாய்ப்பு எண்ணிக்கை உயரா விட்டால் உருவாக கூடிய இந்த சூப்பர் பணவீக்க நிலையை (Hyperinflation) தடுக்க அரசாங்கங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆக மொத்தத்தில் நம் கையில் உள்ள பணத்திற்கு மதிப்பில்லாத நிலையே உள்ளது. வருடம் முழுக்க உழைத்து நாம் சம்பாதிக்கும் பணத்தை, ஒரு நொடியில் அமெரிக்க அச்சகத்தில் டாலர்களாக அச்சடித்து, நம் கையில் உள்ள நோட்டுக்களுக்கும் மதிப்பில்லாமல் போகச் செய்யும் இந்த பகல் கொள்ளையை எப்படி தடுப்பது?
நன்றி.
பின்குறிப்பு: அருமை நண்பர் தாமஸ் ரூபன் சென்ற பதிவில் கேட்ட ஒரு கேள்விக்கு விடையாகவே இந்த பதிவு வரையப் பட்டது. அவரது சந்தேகங்கள் ஓரளவுக்கு தீரும் என்று நம்புகிறேன்.
Labels:
பொருளாதாரம்
Wednesday, September 9, 2009
பங்குச்சந்தை வெற்றிப்பயணம் - முடிவெடுக்க உதவும் மூன்று வழிமுறைகள்
ஒரு பங்கினை வாங்கவும் விற்கவும், பொதுவாக மூன்று விதமான வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. அந்த அணுகுமுறைகளைப் பற்றிய சுருக்கமான விபரங்களை இங்கு பார்ப்போம்.
ஒரு பங்கின் ஏற்றத்தாழ்வுகள் அதை வெளியிட்டுள்ள நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமைகின்றது என்ற கண்ணோட்டத்துடன் முடிவுகளை மேற்கொள்வது முதல் அணுகுமுறையாகும்.
ஒரு பங்கில் நாம் முதலீடு செய்யும் போதே அந்த நிறுவனத்தின் சுக துக்கங்களில் பங்கெடுக்கும் ஒரு பங்குதாரர் நாம் ஆகி விடுகிறோம். எனவே, ஒரு பங்கில் முதலீடு செய்வதற்கு முன்னரே, அந்த நிறுவனத்தின் தற்போதைய நிலை மற்றும் வருங்கால செயல்பாடுகள் பற்றிய நமக்கு ஒரு தெளிவான கண்ணோட்டம் அவசியமாகிறது என்பது இந்த அணுகுமுறை.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், குடியிருப்பதற்காக ஒரு வீட்டை வாங்கச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, அந்த வீட்டின் விலையை தெரிந்து கொள்வதற்கு முன்னரே, அந்த வீடு நாம் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளதா, அந்த பகுதியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவு உள்ளதா என்பதையே முதலில் நாம் பார்க்கிறோம். அதற்கு பின்னரே விலை பற்றி யோசிக்கிறோம். எல்லா வசதிகளும் இருக்கும் ஒரு வீட்டின் விலை சற்று முன்பின் இருந்தாலும், விலையை பற்றி அதிகம் கவலைப் படாமல் (நமக்கு கட்டுபடியாகும் பட்சத்தில்) வீட்டை வாங்க வேண்டும் என்று முயற்சிப்போம்.
ஒருவேளை, அந்த வீடு, குறைந்த கால நோக்கில் வாங்கி (பிற்காலத்தில் அதிக விலையில்) விற்பதற்காக இருந்தாலும், நம்மிடம் வாங்க வருபவரும் இது போலவே வீட்டின் தகுதிகளை ஆராய்வார் என்பதை மறக்கக் கூடாது. தரமில்லாத பொருளை லாபத்துடன் விற்பது மிகக் கடினம்.
ஒரு நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடு நன்றாக இருக்கும் பட்சத்தில், அதன் எதிர்காலம் பளிச்சென்று இருக்கும் என்று நம்பும் பட்சத்தில், விலை பற்றி அதிகம் கவலைப் படாமல், நிறுவனத்தை பற்றி அதிகமாக யோசிக்கும் முறைதான் முதல் முறை. அதற்காக விலை அனாவசியம் என்று அர்த்தம் அல்ல. விலையை விட பொருள்தான் முக்கியம், மதிப்பற்ற பொருட்கள் எவ்வளவு விலை குறைவாக இருந்தாலும் ஏறெடுத்தும் பார்க்கப் படாது என்பதுதான் முக்கியப் பொருள்.
அதே சமயம், எவ்வளவுதான் சிறந்த பொருளாக இருந்தாலும், அதன் உண்மையான மதிப்பிற்கும், சொல்லப்படும் விலைக்கும் உள்ள வித்தியாசம் இந்த அணுகுமுறையில் சில கணித முறைகளின் அடிப்படையில் அலசப் படும். ஒருவேளை மதிப்பை விட விலை அதிகமாக இருந்தால், மதிப்பை விட விலை கீழே வரும் வரை முதலீட்டாளர்கள் பொறுமை காக்க வேண்டும்.
இந்த முறை "அடிப்படை அம்சங்கள் ஆராய்ச்சி (Fundamental Analysis)" என்று அழைக்கப் படுகிறது.
அடிப்படை அம்சங்கள் அனாவசியம். சந்தைக்கு வந்த பின்னர், ஒரு பொருளின் விலையை வர்த்தகர்களே முடிவு செய்கிறார்கள். ஒரு பங்கின் அத்தனை அம்சங்களும், அந்த பங்கு சம்பந்தமாக ஏற்கனவே வந்த அல்லது வருங்காலத்தில் வரப் போகிற அத்தனை செய்திகளும் அதன் விலைக்குள்ளேயே அடங்கி உள்ளன. எனவே ஒரு பங்கின் ஏற்றத்தாழ்வுகளை கூர்மையாக கவனித்து, பங்குகளின் போக்கில் ஏற்படும் திடீர் மாற்றங்களின் அடிப்படையில் பங்கு வர்த்தகம் செய்யலாம் என்பது இரண்டாவது அணுகுமுறை.
உதாரணமாக எல்லா நாட்களும் சிடுமூஞ்சியாக இருக்கும் மேலதிகாரி ஒருநாள் மட்டும் அன்புடன் நடந்து கொள்கிறார் என்றால் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண் டுமல்லவா?
அதே போல, எப்போதுமே தொகுதி பக்கம் திரும்பி பார்க்காத ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் திடீரென வீட்டு வாசல் முன்வந்து நின்றால், தேர்தல் வரப் போகிறது என்று பத்திரிக்கை பார்க்காமலேயே சொல்லி விடலாம் அல்லவா?
மேற்சொன்னவை போல, ஒரு பங்கின் போக்கில் ஏற்படும் மாற்றங்களின் உள்ளர்த்தங்களை, புரிந்து கொள்ள முயற்சிப்பதே இந்த அணுகுமுறை.
உதாரணத்திற்கு, ஒரு நிறுவனம் எதிர்பார்ப்புக்கும் மேலாக மிக அதிக லாபம் சம்பாதித்துள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஊடகங்களில் அதிகாரபூர்வமாக வெளிவருவதற்கு முன்னரே, இந்த செய்தி அந்த நிறுவனத்தில் முக்கிய பொறுப்புக்களில் பணியாற்றும் பலருக்கும் தெரிந்திருக்கும். இவர்கள் மூலம் முக்கிய வெளியாட்கள் சிலருக்கும் இந்த செய்தி கிடைத்திருக்கும். இவர்கள் அந்த நிறுவனத்தின் பங்கினை சந்தையில் மெல்ல மெல்ல சேகரிப்பார்கள். (அதே போல அரசு தரப்பில் இருந்து வெளி வர வேண்டிய முக்கிய தகவல்களும் கசிய வாய்ப்புண்டு). உள்ளாட்களின் நடவடிக்கைகள் பங்குகளின் போக்கின் மூலமே அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறது இந்த வழிமுறை.
மேலும், ஒரு பங்கு மேலே அல்லது கீழே வரும் போது, ஏற்கனவே வாங்கியவர்கள் இந்த விலையில் விற்க முயற்சிப்பார்கள் அல்லது கீழே வரும் போது இந்த விலையில் வாங்க முயற்சிப்பார்கள் என்றெல்லாம் கணிக்க முயலுவதும் இந்த அணுகுமுறை.
இந்த வழிமுறையின் பெயர் "தொழிற்நுட்ப (வரைபட) ஆராய்ச்சி (Technical Analysis)" எனப் படும்.
ஒரு பங்கின் அடிப்படை அம்சங்கள் எல்லாம் ஒருவித மாயைதான். பச்சைக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்த்தால் எல்லாமே பச்சையாக தெரியும். சிவப்புக் கண்ணாடி போட்டால் சிவப்பாக தெரியும். எல்லாமே மனதில்தான் இருக்கிறது என்கிறது மூன்றாவது அணுகுமுறை.
உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், இரண்டு வருடங்களுக்கு முன்னர், இந்தியாவின் எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கிறது என்றார்கள் வல்லுனர்கள். ஒரு வருடத்திற்கு முன்னர் எல்லாமே இருண்டு போய் விட்டது என்றார்கள் நிபுணர்கள். இப்போதோ பச்சை முளைகள் அங்கங்கே தென்படுகின்றது என்கிறார்கள் இவர்கள். ஒரு காலத்தில் இந்திய பங்குகளின் விலைகளை விட மதிப்பு குறைவு என்றார்கள். பின்னர் அதிகம் என்றார்கள். இப்படி ஏதேதோ சொல்லி கொண்டு இவர்கள் பங்குகளை வாங்கி விற்றாலும், இந்தியாவின் நிலைமையோ அல்லது நிறுவனங்களின் நிலைமையோ தன்பாட்டில்தான் சென்று கொண்டிருக்கின்றன.
சந்தை பொருளாதாரத்தின் தாயாக கருதப் படும் அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவில் ஏராளமானவர்கள் வேலை இழந்தார்கள் என்ற செய்தி வந்தாலும் வேலை இழக்கும் விகிதம் குறைந்து விட்டது என்று சந்தைகள் சந்தோசப் பட்டுக் கொண்டு பெருமளவுக்கு உயர்கின்றன. நேற்று வரை நூற்றி நான்கு டிகிரி காய்ச்சலில் இருந்தவருக்கு இன்று இன்னுமொரு அரை டிகிரி அதிகமானால் சந்தோசப் படுவார்கள் போல.
அதே போல, ஏதேதோ பெயர் வைத்துக் கொண்டாலும் தொழிற்நுட்ப வரைபடங்கள் மேகங்கள் போலத்தான். "Bull Markets have no resistance. Bear Markets have no support" என்றும் சொல்லப் படுகிறது.. ஒரு பெண்ணின் அழகு அவளை பார்ப்பவர் கோணத்தில்தான் (Beauty lies in the eyes of the beholder) என்று மூன்றாவது அணுகுமுறை சொல்கிறது.
பங்குசந்தை என்பது பல கோடி வர்த்தகர்களின் மனநிலையை பொறுத்துத்தான் அமைகிறது. இன்றைக்கு பலருக்கும் ரிலையன்ஸ் பிடித்திருந்தால் அதன் பங்கு மேலேறுகிறது. நாளை பிடிக்க வில்லையென்றால் கீழிறங்குகிறது. வர்த்தகர்களின் மனநிலை எப்படி மாறுகிறது என்பதை கணிக்க உதவுவதே மூன்றாவது அணுகுமுறை (Behavioural Science).
பல வெற்றியாளர்கள், இந்த மூன்று அணுகுமுறைகளையும் வெவ்வேறு விகிதங்களில் ஒருங்கிணைத்து பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் இந்த அணுகுமுறைகளின் அடிப்படைகளை முறைப்படி கற்றறியாத போதும் கூட, இந்த முறைகளை சார்ந்தே காய்களை நகர்த்துகிறார்கள்.
எனவே, ஒருவர் பங்குசந்தையில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டுமானால் இந்த மூன்று அணுகுமுறைகள் பற்றியும் ஓரளவுக்கேனும் அறிந்திருக்க வேண்டும். இந்த அணுகுமுறைகளைப் பற்றிய விளக்கங்களை பின்வரும் பதிவுகளில் பார்ப்போம்.
பயணம் தொடரும்.
Monday, September 7, 2009
ஆயில் இந்தியா பங்கு வெளியீடு - முதலீடு செய்யலாமா?
மிகவும் எதிர்பார்க்கப் பட்ட அடானி பவர் மற்றும் என்.எச்.பி.சி நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் ஒரு சிறப்பான துவக்கம் (Listing) பெறாத நிலையில், இந்த வருடத்தின் மூன்றாவது பெரிய பங்கு வெளியீடாக (Initial Public Offer) ஆயில் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் வரும் வாரத்தில் வெளியிடப் படவுள்ளன. இந்த வெளியீட்டின் சிறப்பியல்புகள் பற்றியும் இந்த பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யலாமா என்பது பற்றியும் இங்கு விவாதிப்போம்.
முதலில் பங்கு வெளியீட்டைப் பற்றிய சில தகவல்கள்.
பங்கு வெளியீட்டு தேதி - செப்டம்பர் 7 முதல் 10 வரை
பங்கு வெளியீட்டு விலை - Rs.950 முதல் Rs.1050 வரை
குறைந்த பட்ச முதலீடு - 6 பங்குகள்
வெளியிடப் படும் பங்குகளின் எண்ணிக்கை - சுமார் 264 லட்சம்.
ஆயில் இந்தியா நிறுவனம் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடிப்பு, உற்பத்தி, எரிவாயுவை சுத்திகரிப்பு செய்து எல்பிஜி வாயுவாக மாற்றுவது, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து சேவை போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு அடுத்தபடியான பெரிய இந்திய தேசிய எண்ணெய் & எரிவாயு நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆயில் இந்தியா ஒரு அரசு நிறுவனம். இந்தியா மற்றும் பல வெளிநாடுகளிலும் இதனுடைய ஆய்வு பணிகள் நடைபெறுகின்றன. இதனுடைய பெரும்பாலான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு படுகைகள் வடகிழக்கு இந்தியப் பகுதியில் அமைந்துள்ளன.
இந்த பங்கு வெளியீட்டின் சாதகங்கள்
முந்தைய பங்கு வெளியீடுகள் போல அல்லாமல், இந்த பங்கு வெளியீட்டின் விலை நிர்ணயம், முதலீட்டாளர்களுக்கு சற்று சாதகமாக அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இதனுடைய விலை/பங்கு வருவாய் (Price/EPS) மற்றும் விலை/பங்கு மதிப்பு (Price/Book Value) ஆகிய விகிதங்கள், போட்டி நிறுவனமான ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தை விட குறைவாகவே நிர்ணயிக்கப் பட்டுள்ளன.
இந்த நிறுவனத்தின் கைவசம் ஏராளமான எரி படுகைகள் இருப்பதும் இந்த நிறுவனத்தின் கண்டுபிடிப்பு விகிதம் (Success Ratio) அதிகமாக இருப்பதும் கூட சாதக அம்சங்கள்.
எண்ணெய் மற்றும் எரிவாயுவை தேவை உலகளவில் குறிப்பாக இந்தியாவில் அதிகரித்து கொண்டே போவது ஒரு நல்ல விஷயம்.
இந்த துறையின் மீதான அரசின் விலை நிர்ணய கட்டுப்பாடுகளும் மான்யங்களும் ஒருவேளை குறைக்கப் பட்டால், இந்த நிறுவனத்திற்கு பெரிய சாதகமாக இருக்கும்.
இப்போது பாதக அம்சங்கள்.
இந்த நிறுவனம் ஒரு அரசு நிறுவனமாக இருப்பதால், அரசின் பிடி எப்போதுமே பலமாக இருக்கும். அரசியல் தேவைகளுக்காக இது போன்ற நிறுவனங்களின் லாபநோக்கம் விட்டுக் கொடுக்கப் படுவதும் ஒரு பாதக அம்சம்.
இதனுடைய முக்கிய உற்பத்திப் பொருட்களான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிக ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாகி வருவதால், இந்த நிறுவனத்தின் லாப போக்கிலும் ஏற்றத்தாழ்வு உருவாகலாம்.
ஏற்கனவே சொன்னபடி முந்தைய இரண்டு பெரிய பங்கு வெளியீடுகளும் வெற்றிபெறாத நிலையில், இந்த பங்கு வெளியீட்டிற்கான தேவை (Demand for IPO) சற்று குறைவாக இருக்கவும் வாய்ப்புண்டு.
மொத்தத்தில், லிஸ்டிங் லாபத்திற்காக அல்லாமல், நீண்ட கால நோக்கில் ஒரு வலுவான, நிதானமான முன்னேற்றம் அடையக் கூடிய வாய்ப்புள்ள ஒரு நிறுவனத்தின் பங்கிற்கு சொந்தக்காரர்களாக விரும்புவர்கள் இந்த பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யலாம்.
நன்றி!
டிஸ்கி: பங்கு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இங்கு வெளியிடப் படும், பங்குகள், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.
Labels:
பங்கு சந்தை
Saturday, September 5, 2009
பூனைக்கு யார் மணி கட்டுவது?
சென்ற வாரத்தில் வெளியிடப் பட்ட இந்திய பொருளாதார வளர்ச்சி அளவு கிட்டத்தட்ட எதிர்பார்த்த அளவிலேயே அமைந்து விட சந்தைக்கு பெரிய அளவில் சந்தோஷ ஆச்சரியங்கள் கிடைக்காமல் போனது. உலக சந்தைகளும் குறிப்பாக அமெரிக்க சந்தைகள் அதிக அளவில் முன்னேறாமல் போகவே , 4750 என்ற நிபிட்டி நிலையை முறியடிக்க நமது சந்தைக்கு வலுவில்லாமல் போய் விட்டது.
நிபிட்டி 4750 என்ற நிலையை முழுமையாக முறியடிக்க வேண்டுமென்றால், சந்தையின் முக்கிய பங்கான ரிலையன்ஸ் பெருமளவு முன்னேற வேண்டியிருக்கும் . ஆனால் கிருஷ்ணா-கோதாவரி எரிவாயு பங்கீட்டு விஷயத்தில் முன்னுக்குப்பின் முரணான மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி ஆகியவை ரிலையன்ஸ் பங்கினை அதிகம் முன்னேற விடாமல் செய்து விட்டன. எனவே நிபிட்டி சென்ற வாரத்தின் பெரும்பாலான நாட்களில் வலுவிழந்தே காணப் பட்டது.
வாரத்தின் கடைசி நாளன்று வெளியாகவிருந்த அமெரிக்க வேலை இழப்பு விகிதம் எதிர்பார்ப்பை விட குறைவாக இருக்கும் என்ற யூகம் சந்தையை வீறு கொண்டு எழ உதவியது. இருந்தாலும் கூட, சந்தையால் சென்ற வாரத்தின் முழு இழப்பையும் ஈடு கட்ட முடியாமல் போனது.
நமது சந்தை முடிவடைந்த பின்னர் வெளியிடப் பட்ட அமெரிக்க வேலை இழப்பு விகிதம் எதிர்பார்ப்புக்கு மாறாக மிக அதிகமாகவே இருந்தது. வேடிக்கை என்னவெனில், மிகவும் எதிர்பார்க்கப் பட்ட இந்த தகவல், எதிர்ப்பார்ப்புக்கு மாறாகவே இருந்தாலும் ஏதோ ஒரு சப்பைக் கட்டு கட்டி விட்டு அமெரிக்க சந்தைகள் பெருமளவு முன்னேறி விட்டன.
அதே சமயம், சென்ற வாரம் உலக சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததும், தங்க விலை கிடுகிடுவென்று உயர்ந்து ஆயிரம் டாலருக்கு அருகில் முடிந்ததும், பாதுகாப்பான நாணயமாக கருதப் படும் ஜப்பானிய யென் தொடர்ந்து நான்காவது வாரமாக உயர்ந்ததும் கவனிக்கப்பட வேண்டியவை. பொதுவாக இது போன்ற நிகழ்வுகள், பங்கு சந்தையின் உயர்வு கிட்டத்தட்ட முடிவை நெருங்கி விட்டன என்பதை குறிப்பனவாகும்.
பொருளாதார மீட்சி ஓரளவுக்கு உறுதியாகி விட்டாலும், முழுமையான மீட்சிக்கு அதிக காலம் பிடிக்கும் என்று கருதப் படுகிறது. அமெரிக்கா உலக சந்தைகளில் டாலர் பணத்தை இறக்கி விடுவது இப்போதைக்கு நிற்காது என்றும் யூகிக்கப் படுகிறது. எனவே டாலர் பணத்திற்கு அதிக மதிப்பில்லாமல் போகும் என்ற பயத்தினாலும், பங்கு சந்தைகளும் அதிக அளவில் ஏற்கனவே உயர்ந்து விட்டதனாலும், உலகின் நிரந்தர கரன்சியாக கருதப் படும் தங்கத்தில் சர்வதேச நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன என்று நினைக்கிறேன்.
இருந்தாலும் சந்தைகளில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதையும் நாம் மறக்கக் கூடாது. நமது பங்கு சந்தையின் வேகமான உயர்வு கிட்டத்தட்ட இறுதிகட்டத்திற்கு வந்து விட்டாலும், இந்த இறுதிகட்டத்தின் நீளம் எவ்வளவு என்று அறுதியிட்டு சொல்ல முடியாது.
ஒருவேளை, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் சம்பந்தமாக ஏதேனும் பெரிய நல்ல செய்தி வந்து விட்டாலோ அல்லது ஊடகங்களால் புதிதாக உருவாக்கப் பட்டுவிட்டாலோ, நிபிட்டி 4750 நிலையை முழுமையாக முறியடித்து விட்டு அடுத்த இலக்கான 4900-5000 நோக்கி முன்னேறலாம்.
ஆனால் அவ்வாறான முன்னேற்றத்தில், வர்த்தகர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ஆக மொத்தத்தில், தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றம், டாலர் நிலை, சீனா சந்தைகளின் போக்கு ஆகியவற்றை பொறுத்தே நமது சந்தைகளின் முன்னேற்றம் அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
நன்றி!
Labels:
பங்கு சந்தை,
பொருளாதாரம்
Thursday, September 3, 2009
கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!
மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன.
ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன்.
இப்போது புனைவு !
ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு மத்திய பஞ்சாயத்திடம் ஒப்படைத்து விட்டு விலகி விட்டாராம்.
முதல் பஞ்சாயத்து தலைவர் பெயர் "பேரு" வாம். அவருக்கு பக்கத்து ஊர்களான ருஷ்யப்பட்டி, சீனாப்பேட்டை ஆகியவற்றின் மீது தனி ஈடுபாடாம். அந்த ஊர்கள் போல நம்மூரும் முன்னேற வேண்டும். அதற்கு அந்த ஊர்கள் பின்பற்றிய வளர்ச்சிப் பாதையையே நாமும் பின்பற்ற வேண்டும் என்று விரும்பினாராம். அந்த ஊர்களில் அவர் கண்டது, ஒரு "வலிமையான மத்திய பஞ்சாயத்து" முறையாம். அது மட்டுமல்லாமல், உள்ளூர் கணக்கு வழக்குகளை கவனித்துக் கொள்ள அவர்கள் சொந்த கால்குலேடர்களையே பயன்படுத்தி வந்ததையும் கவனித்தாராம். அதே போல நம்மூரிலும் அனைவரும் சொந்த கால்குலேட்டர் அதுவும் அதிகம் பேர் பயன்படுத்துகிற கால்குலேட்டர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பஞ்சாயத்து கட்டளை போட்டாராம்.
அந்த ஊரில் மொத்தம் நான்கு தெருக்கள் இருந்தனவாம். வடமாசி வீதி, தென்மாட வீதி, மேல் வீதி மற்றும் கீழ் வீதி. இவற்றில் தென்மாட வீதியில் ஒரு பெரிய அறிவாளி இருந்தாராம். அவர் பெயர் ஜாஜாஜியாம். அவரும் கூட முதலில் அனைவரும் கால்குலேட்டர்தான் உபயோகிக்க வேண்டும் என்று சொன்னாராம். அதே சமயம், அவருக்கு ருஷ்யப்பட்டி, சீனாப்பேட்டை ஊர்கள் அவ்வளவாக பிடிக்காதாம். குமேரிக்காபாளையம் போன்ற ஊர்கள் அதிக வளர்ச்சி பெற்றவை மற்றும் பெறப் போகிறவை. எனவே அவற்றை நாம் முன்மாதிரியாக வைத்துக் கொள்வோம் என்றாராம். ஆனால் வலிமையான மத்திய் பஞ்சாயத்து கனவில் இருந்த பேருவுக்கு இதெல்லாம் காதில் விழ வில்லையாம்.
அந்த ஊரில் முன்பு ஆட்சி செய்த துரை ராஜா கம்ப்யூட்டர் பயன்படுத்தி வந்தாராம். . அவர் காலத்திலேயே தென்மாட வீதிக்காரர்கள் நன்கு கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டார்களாம். கம்ப்யுட்டரின் வேகம் கால்குலேடருக்கு இல்லை. மேலும் கம்ப்யுட்டரில் கணக்கு வழக்குகளை எளிதாக பார்த்துக் கொள்ளலாம். உலகின் வாசலான கம்ப்யுட்டர் இருக்கும் போது, லோக்கல் கால்குலேட்டர் எதற்கு என்று தென்மாட வீதியின் வளரும் தலைவரான "சின்னா" கேட்டாராம். அது மட்டுமல்லாமல், கம்ப்யூட்டரில் இன்டர்நெட் வாயிலாக உலக நடப்பையும் நன்கு புரிந்து கொள்ளலாம் என்றும் சொன்னாராம். (உலக நடப்பை அனைவரும் புரிந்து கொண்டால், நம் பருப்பு வேகாது என்று அப்போதைய மத்திய பஞ்சாயத்து தலைவர்கள் நினைத்தார்களோ என்னவோ?)
தென்மாட வீதியின் கடும் எதிர்ப்பின் காரணமாக பேருவின் கனவு முழுமையாக நிறைவேறாமல் போனது என்றாலும், மற்ற மூன்று வீதிகளிலும் கால்குலேடர் உபயோகம் மிக அதிகமாகவே இருந்ததாம்.
மத்திய பஞ்சாயத்து அலுவலக வேலை வாய்ப்புக்களில் கால்குலேட்டர் பயிற்சி பெற்றவர்களுக்கே முன்னுரிமை வழங்கப் பட்டதாம். பஞ்சாயத்து அலுவலகத்திலும் அதிகமாக கால்குலேட்டர் மட்டுமே உபயோகப் படுத்தப் பட்டதாம்.
தென்மாட வீதிக்காரர்கள் மற்ற வீதிகளுக்கு சென்றாலோ, மத்திய பஞ்சாயத்தில் வேலைவாய்ப்பு பெற்றாலோ மிகவும் சிரமப் பட்டார்களாம். கம்ப்யூட்டரை விட கால்குலேடர்தான் உசத்தியோ என்ற மயக்கங்கள் கூட அவர்களுக்கு ஏற்பட்டனவாம்.
ஊருக்கு சுதந்திரம் வந்த புதிதில், ஊர் மக்களுக்கான முக்கியமான வேலைவாய்ப்பு மத்திய பஞ்சாயத்து அலுவலகமாகவே இருந்ததாம். எனவே, வேலை வாய்ப்பு குறைந்தற்கு கால்குலேட்டர் அறிவு இல்லாததே காரணம் என்று தென்மாட வீதிக்காரர்களில் சிலர் புலம்பினார்களாம். தென்மாட வீதிக்காரர்களில் ஒரு சில வீட்டுகாரர்கள் கால்குலேடரும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்களாம்.
பொருளாதாரத்திற்கு மத்திய பஞ்சாயத்தையே நம்பி இருந்த காலம் மெல்லமெல்ல மாறியதாம், முதல் தலைவர் பெருவின் கனவு ஊர்களாக இருந்த ருஷ்யப்பட்டி சிதைந்து போனதாம். சீனாப்பேட்டையோ குமேரிக்காபாளையத்திற்கு சேவை செய்துதான் காலத்தை தள்ள வேண்டியிருந்ததாம். அங்கே கம்ப்யூட்டர் படிப்புக்கு சிறப்பு மானியங்கள் கூட கொடுத்தார்களாம்.
இங்கே துரை ராஜாவின் உறவினர்கள், நகரத்தில் இருந்து வந்து பரதம் பட்டியில் தொழில் துவங்கினார்களாம். கம்ப்யூட்டர் அறிவு அதிகம் இருந்த தென்மாட வீதி அவர்களுக்கு ரொம்ப சௌகரியமாக இருந்ததாம்.
வடக்கு வாழ்ந்த கதை போய் தெற்கு வளர ஆரம்பித்ததாம். அது மட்டுமல்லாமல், குமேரிக்காபாளையத்தின் மீது பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டதாம்.
வதவதவென்று கூட்டம் அதிகமாகப் போன வடமாசி வீதியில் கால்குலேட்டர் படிப்பு பயன்பட வில்லையாம். எத்தனைப் பேருக்குத்தான் பஞ்சாயத்தே வேலை கொடுக்க முடியும்?
அங்கேயும் கம்ப்யூட்டர் பள்ளிகள் உருவாக்கப் பட்டனவாம். கம்ப்யூட்டர் படித்தவர்கள் தென்மாட வீதிக்கும் மேல்வீதிக்கும் வந்து நல்ல உத்தியோகம் தேடிக் கொண்டனராம். கால்குலேட்டர் படித்தவர்கள் இந்த இரண்டு வீதியிலும் வீட்டு வேலை செய்தார்களாம். அதிலேயும் ஒரு வேடிக்கை என்னவென்றால், பிழைப்புக்காக வந்த இவர்களில் ஒரு சிலர், வந்த இடத்தில் அனைவரும் கால்குலேடர்தான் பயன்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்களாம்.
இன்னொரு வேடிக்கை என்னவென்றால், கால்குலேட்டர் படித்தால் அதிக வேலைகள் கிடைக்கும் என்று எந்த வீட்டுக்காரர்கள் நினைத்தார்களோ அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சின்ன வேலையை கூட வடமாசி வீதிக் காரர்கள் பிடுங்கிக் கொண்டார்களாம்.
எதிர்த்துக் கேட்டால், ஊர் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கிறார்கள், "வீதி அரசியல்" செய்கிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டினார்களாம்.
இப்படி எல்லாம் ஒருவழியாக போய்க் கொண்டிருக்கும் போது, பபில் கிபில் என்ற ஒரு பஞ்சாயத்து சீனியர் கிளார்க் சொன்னாராம். "ஊரு ஒத்துமையா இருக்கணும்னா எல்லாரும் கால்குலேட்டர் படிக்கணும். இன்றைய தேதியில் கால்குலேட்டர் கம்ப்யூட்டரை விட வேகம், உபயோகம் எல்லாமே கம்மியா இருக்கலாம். ஆனா, கால்குலேடரை கம்ப்யூட்டர் போல மாத்த வேண்டியது நம் எல்லோரின் கடமை"
கால்குலேட்டர் என்னைக்காவது கம்ப்யூட்டர் ஆகுமான்னு கேட்டாக்க ஆகும்னு நம்பணும்னு சொன்னாராம். நம்பறதுதான் ஊர்ப்பற்றுன்னும் சொன்னாராம்.
கம்ப்யூட்டர் படிச்சா நம்ம பொழப்பு நல்லதா மாறும்னு நினைச்ச வடமாசி வீதிகாரங்களுக்கே இது கொஞ்சம் திகைப்பா இருந்துச்சாம்.
இதுல கம்ப்யூட்டர் படிச்சதனாலேயே நல்ல வேலை தேடிக் கொண்ட தென்மாட வீதி கனவான்களும் கம்ப்யூட்டர்ல "எல்லாரும் கம்ப்யூட்டர் படிப்பு கூட கால்குலேட்டர் படிப்பும் படிக்கணும்"னு "பதிவு" போட்டாங்களாம்.
அதுல, மத்த வீதிக்கு போகும் போதெல்லாம், கால்குலேட்டர் தெரியலன்னு எவ்வளவு அவமானப் பட்டோம்னும் விவரிச்சாங்களாம்.
தென்மாட வீதி பெரிசுங்க நம்மள கம்ப்யூட்டர் மட்டும் படிக்க வச்சு வாழ்க்கையையே கெடுத்துட்டாங்கன்னு புலம்புனாங்களாம்.
கால்குலேட்டர் கூட தெரியாம நீங்க ஏன் பரதம் பட்டியில இருக்கீங்கன்னு வடமாசி வீதிகாரங்க கிண்டல் செஞ்சதையும் சொன்னாங்களாம்.
தென்மாட வீதியில் பிறந்து வளர்ந்தவன், பரதம்பட்டியை ஓரளவுக்கு சுற்றிப்பார்த்தவன், இப்போதைக்கு மேலவீதியில் வாழ்ந்து வருபவன் , கம்ப்யூட்டர் படிப்பு அதுவும் இளவயதிலேயே கிடைக்கும் முழுமையான கம்ப்யூட்டர் படிப்பு ஒருவரை வாழ்வில் எவ்வளவு தூரம் முன்னேற்றும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன், கம்ப்யூட்டரில் கற்றுக் கொள்ளும் துறை நுணுக்கங்கள்தான் வாழ்வாதாரம், கால்குலேட்டர் படிப்பெல்லாம் யாரோ சிலரின் ஈகோவை காப்பாற்றவும், எளியவர்களின் "வாழ்வியல் முன்னேற்றத்தை (Class Mobility) தடுக்கவும் உதவும் ஏமாற்று வேலை என்பதையும் புரிந்தவன் ஒருவன் இருந்தானாம். அவன் மனதில் சில கேள்விகள் எழுந்தனவாம்.
"கம்ப்யூட்டர் காலத்துல கால்குலேட்டர் என்ன அவ்வளவு முக்கியமா? அல்லது தெரிஞ்சுக்க முடியாத அளவு கம்ப சூத்திரமா?
கால்குலேட்டர் பத்தி தெரிஞ்சுக்க எதுக்கு தனி படிப்பு?
ஒரு முப்பது ரூபா இருந்தா ஒரு சீனா கால்குலேட்டர் வாங்கி வீட்டுல இருந்தே அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு மேஞ்சுடலாமே?
அந்த நேரத்துல கம்ப்யூட்டர் பத்தியே இன்னும் நாலு விஷயம் தெரிஞ்சுக்கலாமே? ஓரக்கிள், ஜாவான்னு ஏதாவது படிச்சுக்கிட்டாக் கூட இன்னும் கொஞ்சம் முன்னேறலாமே?
கால்குலேட்டர் படிச்சவனோட நிலம இன்னைக்கு என்ன? சபைக்கு மத்தியில கால்குலேட்டர் படிப்புத்தான் முக்கியம்னு நெஞ்ச நிமித்தினாலும், தனியா வந்து "உங்களைப் போல கம்ப்யூட்டர் படிச்சிருந்தா நாங்களும் இன்னைக்கு நல்லா இருந்திருப்போம்னு" வடமாசி வீதிக்காரங்களே எத்தனைப் பேரு சொல்றாங்க தெரியுமா?
பரதம்பட்டிக்காரங்க எல்லாருமே முன்னுக்கு வரணும்.
அதுக்கு நவீன படிப்புத்தான்யா முக்கியம். நான்தான் உசத்தி. என் பாஷயதான் நிறைய பேரு பேசறாங்கன்னு பின்னாடி போகாதீங்கய்யா!
கீழே விழுந்து கிடக்கரவங்கள எழுப்பி விட வேண்டும். அவர்களும் வாழ்வில் உயர வழி காட்ட வேண்டும். அவங்களுக்கு நவீன படிப்பு வழங்க வேண்டும். கம்ப்யூட்டர்க்குள்ளேயே கால்குலேடரும் உண்டு என்ற உண்மையை உணர்த்த வேண்டும். அதை விடுத்து இருபதாம் நூற்றாண்டுக்கு கூட அல்ல பத்தொம்பதாம் நூற்றாண்டுக்கு போக யாரும் ஆசைப் பட வேண்டாம்.
கம்ப்யூட்டரா இருந்தா என்ன கால்குலேடரா இருந்தா என்ன? கணக்கு சீக்கிரமாக போட முடிந்தால் போதும்.
குண்டு சட்டியில், அடுத்தவனை ஆட்டி படைக்கும் ஆசையை விட அனைவருக்குமான அடுத்த வேளை சோறுதான் முக்கியம் என்று பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த டிங்கப்பூர், குமேரிக்காபாளையம் போன்ற ஊர்களின் சரித்திரத்தையும், பெரும்பான்மையினருக்கு தெரிந்த கால்குலேட்டர் படிப்பைத்தான் அனைவருமே படிக்க வேண்டும் என்று ஆசைப் பட்ட கிலங்காபுரி போன்ற ஊர்களின் சரித்திரத்தையும் ஒருமுறை திரும்பிப் பாருங்கள்
அப்புறம் சொல்லுங்கள். கம்ப்யூட்டர் தேவையா கால்குலேட்டர் தேவையா?
ஐயா! ப்பில் கிபில் அவர்களே! தாய்மொழி உயர வேண்டும் என்ற உங்கள் ஆசை தப்பில்லை. முதலில் கம்ப்யுட்டரில் உள்ள எல்லா விஷயங்களையும் கால்குலேடருக்குள் கொண்டு வாருங்க. அப்புறம் பரதம் பட்டி மட்டுமல்ல. உலகமே கால்குலேட்டர் படிப்பு படிக்கும்.
ஒண்ணாங்கிளாஸ் தாண்டறதுக்கு முன்னரே டாக்டர் ஆகி வைத்தியம் செய்ய ஆசைப்படாதீர்கள்.
நன்றி.
Labels:
அரசியல்,
கதை,
சமூகம்,
செய்தியும் கோணமும்
Tuesday, September 1, 2009
பங்குச்சந்தை வெற்றிப்பயணம் - எந்த பாதை உங்கள் பாதை?
பங்குசந்தை வெற்றிப் பயணத்திற்கு உதவக் கூடிய மூன்று பாதைகளை இது வரை பார்த்தோம்.
வாரன் பபெட் போல தொலை நோக்குடன் வருங்காலத்தை கணித்து பங்குகளை தேர்வு செய்யும் அறிவுபூர்வமான வழி, அதிரடியாக சந்தையின் அன்றாட நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு அல்லது அதற்கேற்றார் போல வேகமாக காய்களை நகர்த்தும் சாமர்த்திய வழி, பங்குகளை சேமிப்பின் ஒரு பகுதியாக, நீண்டகால முதலீட்டாக மட்டுமே பார்க்கும் பொறுமை வழி என்று மூன்று வழிகளை பற்றிய மேலோட்டமான விளக்கங்களைப் பார்த்தோம். இவை மட்டுமல்லாமல் பங்கு சந்தை ஜாம்பவான்கள் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் அதிபுத்திசாலி (துணை) பாதை ஒன்றையும் பார்த்தோம்.
இந்த மூன்று பாதைகளில் ஒன்றை மட்டுமே விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு அதிலேயே பயணம் செய்ய வேண்டியதில்லை. ஒருவரால் மூன்று பாதைகளிலும் கூட மாறி மாறி பயணிக்க முடியும்.
இந்த பாதைகள் பங்குசந்தைக்கான மூன்று வித அணுகுமுறைகளை பிரித்துக் காட்டவே தவிர ஒன்றுடன் ஒன்று முற்றிலும் வேறுபட்டவை அல்ல.
பல ஜாம்பவான்கள் துவக்கத்தில் எந்த வழியில் பயணித்தாலும் காலம் செல்ல செல்ல முதலாவது பாதைக்கும் அதிபுத்திசாலி துணைப் பாதைக்கும் மாறி விடுகிறார்கள்.
உங்களுக்கான பாதையை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஏன், ஒரு தனிப் பாதையை கூட உருவாக்கலாம்.
போகும் பாதையை விட பயணத்தில் ஒருவர் காட்டும் உறுதியே அவரை வெற்றிக்கு இட்டு செல்கிறது.
பொதுவாகவே முதல் பாதையில் வாரன் பபெட் போன்ற பெரிய முதலீட்டாளர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்ற மாயை உண்டு. உண்மை என்னவென்றால் அவர்களும் கூட சிறிய முதலீட்டாளர்களாகவோ குறுகிய கால வர்த்தகர்களாகவோ தமது பங்கு சந்தை பயணத்தை தொடங்கினாலும் காலபோக்கில் முதல் பாதைக்கு மாறி விட்டனர்.
ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னபடி, நாமெல்லோரும் அவர்கள் ஒரு கடினமான கணித முறையை பயன்படுத்தி பங்குகளை தேர்வு செய்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்க அவர்களோ எளிமையான முறையிலேயே முதலீடுகளை செய்கிறார்கள்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், சென்ற வருடம் நிதி நெருக்கடியில் இருந்து அமெரிக்காவை மீட்க அந்த நாட்டு அரசு புதிய (சிறிய) கார்களை வாங்குவதற்காக பொதுமக்களுக்கு மானியம் வழங்கியது. ஊடகங்கள் அரசு இவ்வாறு செய்வது அரசின் நிதி நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்று விவாதித்துக் கொண்டிருக்க, பங்கு நிபுணர்கள் பலரும் நிதி சிக்கலை விளக்கும் கலைச் சொற்களை தேடிக் கொண்டிருக்க, வாரன் பபெட்டோ, சீனாவில் உள்ள சிறிய கார் தயாரிக்கும் வாகன நிறுவனம் ஒன்றை விலைக்கு வாங்கி விட்டார். இன்றைய தேதியில் அவருக்கு பல பில்லியன் டாலர் லாபம் என்று தகவல்கள் சொல்கின்றன.
இப்படி ஒரு தகவலை எப்படி, எந்த கோணத்தில், அதிகம் சிரமப் படுத்திக் கொள்ளாமல், நேரடியாக, எளிமையாக பார்க்கிறோம் என்பதில்தான் புத்திசாலிதனத்தின் ரகசியம் அடங்கியிருக்கிறது.
ஆங்கிலத்தில் சொல்வார்கள் "Common sense is not that common"
இன்று இரண்டாவது பாதையில் அதிகம் பயணிக்கும் இந்திய பங்கு வர்த்தகர்களும் சாமான்யப் பட்டவர்கள் அல்ல. நடப்பு காளை ஓட்டத்தின் முதல் பாதியில் சற்று தடுமாறினாலும், இரண்டாவது கட்டத்தில் வெளுத்து வாங்கி விட்டார்கள். குறைந்த முதலீட்டில் அதிக வர்த்தகம் செய்ய உதவும் எதிர்கால நிலைகளை பொறுத்தவரை இந்திய பங்கு சந்தைகள் மேற்குலக பங்குசந்தைகளையும் (எண்ணிக்கை சதவீதத்தில்) விஞ்சியவை.
பங்கு சந்தையில் ஒரு சொல்வழக்கு உண்டு. காளைகள் வெற்றி பெறுகிறார்கள் தோல்வி பெறுகிறார்கள். அதேபோல கரடிகள் வெற்றி பெறுகிறார்கள் தோல்வி பெறுகிறார்கள். இடையில் மாட்டிக் கொள்ளும் பன்றிகளோ உருத்தெரியாமல் நசுக்கப் படுகிறார்கள். எனவே பங்கு சந்தைக்கு வருபவர்கள் காளையாகவோ கரடியாகவோ இருக்கலாம். கண்டிப்பாக பன்றியாக மட்டும் இருக்கக் கூடாது.
மூன்றாவது பாதையும் சிறந்த பாதையே! அதிகம் அலட்டிக் கொள்ளாமல், பங்குகளை நீண்ட கால முதலீடுகளாக மட்டுமே பார்த்தவர்கள் மிகப் பெரிய வெற்றிகளை பெற்றிருக்கிறார்கள். பல தலைமுறைகளாக, சொத்தின் ஒரு பகுதியாக பங்குகள் கைமாறிய கதைகள் கூட உண்டு. அதே சமயம், சந்தையில் பெரிய சாதனைகள் செய்ய வேண்டும், பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்க்கு இந்த பாதை உகந்தது இல்லை என்பது போல தோன்றினாலும், இந்த பாதையில் பயணிப்பவரின் பொறுமையும் அதிகம் அலட்டிக் கொள்ளாத தன்மையும் வெற்றியின் அடிப்படை அவசியம் ஆகும் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.
பங்குசந்தையை பொறுத்தவரை இங்கு சொன்ன மூன்று பாதைகளில் எந்த பாதையில் பயணித்தாலும் வெற்றி நிச்சயம். ஆழம் தெரியாமல் காலை விடுபவர்கள் மட்டுமே மூழ்கி போய் விடுகிறார்கள். பங்குசந்தையின் ஆழத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று பின் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
இந்த பதிவை முடிப்பதற்கு முன்னர் ஒருவிஷயம்.
அருமை நண்பர் தாமஸ் ரூபன் அவர்கள் முந்தைய பதிவுகளின் முக்கிய கருத்துக்களை தொகுத்து கொடுத்துள்ளார். அவருக்கு நன்றிகள் பல தெரிவிப்பதுடன் அந்த கருத்துக்களை உங்கள் பார்வைக்காக இங்கு சமர்ப்பிக்கிறேன்.
"மூன்று பாதைகளும் நன்றாக உள்ளது. அதில் எனக்குப்பிடித்த சில அறிவுரைகள் (கருத்துகள்) பயனுள்ளதாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்.
பங்குசந்தைகள் பற்றி மட்டுமல்ல பங்கினை சார்ந்த நிறுவனத்தைப் பற்றியும் அதன் துறையைப் பற்றியும் ஓரளவுக்கு நல்ல ஞானம் இருக்க வேண்டும்.
நிறுவனத்தின் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை ஓரளவுக்கு துல்லியமாக கணிக்கும் திறமும் தேவைப் படும்.
அதிகாரபூர்வமான அல்லது ஒரிஜினல் தகவல்களை மட்டுமே அதிகம் உபயோகிக்கிறார்கள். நிறுவனத்தின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெற்றி, கடும் உழைப்பின் விளைவு. பொறுமை எனும் தவத்திற்கு கிடைத்த வரம்.
சந்தையில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைப்பவர்கள். செய்திகளை சந்தைக்கு முந்தியே அறிந்து கொள்வதில் அல்லது புரிந்து கொள்வதில்தான் இவர்களின் பலம் அடங்கி இருக்கிறது.
இவர்களுடைய முதலீடு இவர்கள் சொந்த பணத்தின் உதவியுடனேயே அமைகிறது. அதுவும் தனது சொந்த பணத்தின் ஒரு பகுதி, அதாவது முழுதும் இழந்தாலும் தனது சாதாரண வாழ்க்கையை பெருமளவுக்கு பாதிக்காது என்ற அளவில் மட்டுமே இவர்கள் சந்தையில் முதலீடு செய்கிறார்கள்.
முதலீடுகளை ஒரே நாளில் செய்யாமல், தன்னிடம் காசு சேரும் போதெல்லாம் அதில் ஒரு பகுதியை மட்டுமே சந்தையில் முதலீடு செய்கிறார்கள். நம்பகமான துறை/நிறுவனங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஒருவித முதலீட்டுக் கொள்கையை ஆரம்பத்திலேயே தேர்ந்தெடுத்து அதில் உறுதியாக இருக்கிறார்கள்.
இவர்களின் பொறுமை அலாதியானது.இவர்களுடைய பொறுமை பங்குகளை நீண்ட கால முதலீடுகளாக மட்டுமே பார்க்கும் இயல்பிலானது.
இவர்களின் பொறுமை அலாதியானது.இவர்களுடைய பொறுமை பங்குகளை நீண்ட கால முதலீடுகளாக மட்டுமே பார்க்கும் இயல்பிலானது.
"நல்ல" நிறுவனங்களின் பங்குகளை மட்டும் அவற்றின் பங்கு வெளியீடுகளில் (IPO) மட்டும் முதலீடு செய்ய வேண்டும்.
ரிலையன்ஸ், லார்சென், பெல் போன்ற லாஜ்கேப் பங்குகளில் முதிலீடு செய்ய வேண்டும்.
நீங்கள் கூறிய இவற்றை கடைப்பிடித்தால் வெற்றிகரமான முதிலீட்டாளர் ஆகலாம்.(முதல் மற்றும் மூன்றாவது பாதையில்)
பதிவுக்கு நன்றி தொடருங்கள்.""
பயணம் தொடரும்.
பின்குறிப்பு: பலநாட்கள் கவனிப்பாரின்றி கிடந்த மைத்தாஸ் பங்கு, இன்று பல ஊடகங்களிலும் காட்சியளித்ததை கவனித்திருப்பீர்கள். இது போன்ற பங்குகளை எப்படி முன்கூட்டியே கண்டுபிடிப்பது என்பது பற்றிய தொழில் ரகசியம் விரைவில் இந்த பதிவில் வெளிவரும்.
நன்றி.
Subscribe to:
Posts (Atom)