உலக அதிசயங்களில் ஒன்றாக கருத வல்ல செரேங்கிட்டி நிலப்பகுதியின் (கிழக்கு ஆப்ரிக்கா) வன விலங்குகள் ஆண்டுதோறும் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டத்தை துல்லியமாக விளக்கும் ஒரு ஆவணப் படத்தை (மிகப் பிரமாண்டமாக) ஒரு விண் திரையில் பார்த்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த படத்தின் பெயர் "Africa – The Serengeti”. இந்த படத்தை திரையிட்டு வரும் அரங்கு, (சமீபத்தில்) மும்பை அறிவியல் வளாகத்தில் துவங்கப் பட்டுள்ள "அரை உருண்டை வடிவ விண் திரை" அரங்கான ‘Science Odyssey’
உலகின் அரிய நிகழ்வுகளை அருகில் இருந்து பார்ப்பதைப் போன்ற ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தர வேண்டுமென்பதற்காக "பிரத்யேகமாக" இந்த திரை அரங்கு உருவாக்கப் பட்டுள்ளது. இதில் உள்ள திரையானது அரங்கின் கூரையில் அமைக்கப் பட்டுள்ளது. இந்த திரையை பார்வையாளர்கள் அண்ணாந்துதான் பார்க்க வேண்டும். இந்தியாவிலேயே ஐந்தாவதாக உருவாக்கப் பட்டுள்ள இந்த அரங்கில், பார்வையாளர்கள் அண்ணாந்து பார்ப்பதற்கென பிரத்யேக இருக்கைகளும் வடிவமைக்கப் பட்டுள்ளன.
சரி இப்போது கதைக்கு வருவோம்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள செரேங்கேடி பகுதி ஒரு மிகப் பெரிய தேசியப் பூங்கா ஆகும். இந்த வனப் பகுதி பல நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு காட்டெருதுகள், வரிக் குதிரைகள், கழுதை புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், நீர் யானைகள், ஆப்ரிக்க வகை யானைகள், காண்டாமிருங்கங்கள், இன்னும் பல பறவைகள் என பல கோடி எண்ணிக்கையிலான வன விலங்குகள் வசிக்கின்றன.
இந்த விலங்குகள் அனைத்தும் வருடத்துக்கொருமுறை (வறட்சியின் போது), தேசிய பூங்காவின் வடக்குப் பகுதியை நோக்கி செல்கின்றன. பல நூறு கிலோமீட்டர் தூரம் அனைத்து விலங்குகளும் கூட்டாக இடம் பெயரும் இந்த நிகழ்வு "great migration" என்று அழைக்கப் படுகிறது. அதே போல மழைக்காலத்தில் இந்த விலங்குகள் தெற்கு நோக்கி மீண்டும் இடம் பெயருகின்றன. இந்த நிகழ்வு உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப் படுகின்றது.
இவ்வாறு இடம் பெயரும் போது இந்த விலங்குகள் சந்திக்கின்ற இயற்கையான மற்றும் மாமிசபட்சினிகளின் வாயிலாக ஏற்படுகின்ற இடையூறுகளை எப்படி சமாளிக்கின்றன என்பதையும் ஒவ்வொரு இனத்தின் முக்கிய கடமையான "பிழைத்திருப்பது" மற்றும் "புதிய சந்ததிகளை" உருவாக்குவது போன்ற கடமைகளை எப்படி நிறைவேற்றுகின்றன என்பதையும் விவரிப்பதே இந்த படத்தின் அடிப்படை நோக்கமாகும்.
படத்தின் துவக்கத்தில் அனல் வீசும் கோடையில் ஒரு குறிப்பிட்ட வனப் பகுதியில் வாழும் விலங்குகளுக்கு இடம் பெயர வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது.
வாழும் இடம் தேடி மந்தைகளாக பயணிக்கும் காட்டெருதுகள், அவற்றுடன் செல்லும் வரிக் குதிரை போன்ற தாவர உண்ணிகள், இடையில் இந்த விலங்குகளை வேட்டையாடும் பெண் சிங்கங்கள். பெண் சிங்கங்கள் வேட்டையாடியதை அவர்களுக்கோ அல்லது குட்டிகளுக்கோ கொடுக்காமல் "பந்திக்கு முந்தி " உண்ணும் "சோம்பேறி ஆம்பள சிங்கங்கள்", எஞ்சியதற்காக ஏங்கி காத்திருக்கும் கழுதைப் புலிகள், அங்கும் அவர்களுடன் போட்டி போடும் வல்லூறுகள், இவற்றுக்கிடையே எந்த ஒரு அச்சமுமின்றி தனக்கென ஒரு ராஜ பாட்டையில் கம்பீர நடை போடும் யானைகள், காண்டாமிருகங்கள், நீர்யானைகள் போன்ற பெரிய விலங்கினங்கள் இவை அனைத்தையும் நம்மால் ரசிக்க முடிகிறது.
யாருமில்லாத காட்டில் தனியாக ஒரு சிறுத்தைத் தாய். ஆண் வர்க்கம், பெண்ணுக்கு குழந்தை கொடுத்து விட்டு காணாமல் போவது காட்டிலும் வழக்கம் போல இருக்கிறது. இறுதியில் தான் உயிர் பிழைத்திருப்பதற்காக தனது குட்டியையே தாய் சிறுத்தை சாப்பிட வேண்டிய கட்டாயம். நம்பிக்கையை தளரவிடாமல் கடைசி வரை காத்திருக்கையில் நம்பிக்கை ஒளியாய் ஒரு மான் கூட்டம். உலகின் அதி வேகமான நில உயிரினமான அந்த சிறுத்தை தான் வாழ வேண்டி மற்றொரு வாழ்க்கையை பறிக்கும் இயற்கையின் அந்த விநோதம். கிடைத்ததையும் தனது குட்டிக்கு கொடுத்த பின்னரே தான் உண்ணும் அந்த கொடுரமான தாயின் பிள்ளைப் பாசம். இந்த நிகழ்வுகள் அனைத்தும் மிகத் துல்லியமாக உணர்வு பூர்வமாக படமாக்கப் பட்டுள்ளன.
அரை உருண்டை வடிவான பிரமாண்டமான விண் திரையில் இவற்றை நாம் பார்க்கும் போது, ஏதோ நாம் மிக அருகில் இருந்து பார்ப்பது போன்ற ஒரு உணர்வு தோன்றுகிறது. மேலும், விண்ணூர்தியின் துணை கொண்டு கேமரா வேகமாக நகரும் போது நாமும் கூடேயே செல்வது போன்ற ஒரு உணர்வும் (virtual experience) தோன்றுகிறது.
இப்போது மீண்டும் முன்னேறும் காட்டு எருதுகளிடம் செல்வோம். வாழ வழி தேடி செல்லும் பாதையில் ஒரு கட்டத்தில் தமது வில்லன்களான சிங்கங்களை நேருக்கு நேராக சந்திக்கின்றன. வாழ வேண்டுமானால் முன்னே செல்ல வேண்டும். ஆனால் எதிரிலேயே எமன்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் துணிச்சலை வரவழைத்துக் கொள்ளும் இந்த விலங்குக் கூட்டம், சிங்கங்களைப் பொருட்படுத்தாமல் முன்னேறத் துவங்குகின்றன.
வலிய வந்து தானாக கையில் விழும் விருந்தை வேண்டாமென்றா சொல்லுவார்கள் இந்த எமன்கள்? அங்கே பலியாவது ஏராளமான உயிர்கள். அவர்கள் வயிறு நிறைய உண்ட பிறகு மிஞ்சியவையும் எஞ்சியவையும் அதி வேகத்தில் வாழுமிடம் தேடி தொடர்ந்து பயணிக்கின்றன.
கடைசியில் ஓடும் தண்ணீரையும் பசுமை நிறைந்த காடுகளையும் கண்டு மகிழும் இந்த மிருகங்கள் அங்கு தமது வாழ்வை மகிழ்ச்சியாக களிக்கின்றன. ஆனால் இது கிளைமாக்ஸ் இல்லை. அங்கு ஒரு டுவிஸ்ட் இவர்களுக்கு காத்திருக்கிறது.
அந்த பகுதி மிக அதிக அளவில் மழை பெய்யக் கூடிய பூமத்திய ரேகை மழைப் பிரதேசம். பருவம் மாறியவுடன் அங்கு அடை மழை பெய்கிறது. இந்த மழையில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இந்த வனவிலங்குகள் மீண்டும் தெற்குப் பகுதியை நோக்கி நகரத் தொடங்குகின்றன.
இப்போது இவர்களுக்கு புதிதாக முளைத்திருக்கும் எதிரிகள். மழை வெள்ளம் சீறிப் பாயும் பெரிய ஆறுகள் மற்றும் அங்கு கொலை வெறியுடன் காத்திருக்கும் பெரிய முதலைகள்.
ஆபத்தைக் கண்டவுடன் அச்சத்தில் உறைந்து நிற்கும் இந்த மிருகங்கள் ஒரு கட்டத்தில் ஆற்றை கடந்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் துணிச்சலுடன் ஆற்றில் இறங்குகின்றன. விடுமா முதலைகள்? ஜிலேபியை கடித்து சாப்பிடுவது போல ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு சிறு விலங்கு. இவற்றில் இருந்து தப்பினாலும், சறுக்கும் ஆற்றுப் படுகைகள் பல விலங்குகளை அசைய முடியாதவை ஆக்கி விடுகின்றன. எஞ்சிப் பிழைப்பவை மட்டும் தெற்கு நோக்கிய தமது பயணத்தை வெற்றி கரமாக தொடருகின்றன.
இப்படி வருவோர் போவோரிடம் எல்லாம் விருந்தாகும் இந்த விலங்குகள் எப்படி தமது எண்ணிக்கையை குறையாமல் வைத்திருக்கின்றன? போகும் வழியிலும் வரும் வழியிலும் நேரத்தை வீணாக்காமல் இந்த விலங்குகள் பெத்துப் போட்டுக் கொண்டே இருக்கின்றன. கடைசியில் ஒருவழியாக பயணத்தை தொடங்கிய புல்வெளிப் பகுதிக்கே இந்த மிருகங்கள் வந்து சேர்கின்றன.
கடைசியாக ஒரு பதற வைக்கும் கிளைமாக்ஸ்.
ஒரு காட்டுப் பசு குட்டிப் போடுகிறது. அந்த குட்டி சில நிமிடங்களுக்குள் எழுந்து நிற்க வேண்டும் நிற்கத் தவறினால், அந்த மந்தைக் கூட்டம் அந்த குட்டியை அங்கேயே விட்டு விட்டு தன் பாட்டுக்கு சென்று விடும். அங்கேயே காத்திருக்கும் நரி மற்றும் வல்லூறுகளுக்கு அந்த குட்டி இரையாக வேண்டியதுதான்.
குட்டி எழுந்திருக்கிறது, தவறி விழுகிறது. மீண்டும் எழுந்திருக்கிறது, மீண்டும் தவறி விழுகிறது. குட்டியை எப்படியாவது எழுப்பி விட தாய்ப் பசு முயற்சிக்கிறது. முடிய வில்லை. தந்தை மாடும் முயற்சிக்கிறது, அப்போதும் முடிய வில்லை.
ஒரு கட்டத்தில் குட்டியை விட்டு விட்டு செல்ல இரண்டு மாடுகளும் முடிவு செய்து நகர ஆரம்பிக்கின்றன. தாய்ப் பசு மீண்டுமொருமுறை ஏக்கத்துடன் திரும்பிப் பார்த்து விட்டு முன்னே செல்கிறது. காட்டு நரிகளும், வல்லூறுகளும் குட்டியை நோக்கி முன்னேறுகின்றன. நமக்கோ பதட்டம் பிறக்கிறது.
ஒரு கணத்தில் துள்ளி எழும் அந்த குட்டி தனது கூட்டத்தோடு சென்று கலந்து விடுகிறது. நாமும் பிரமிப்பு கலந்த ஒருவித திருப்தியுடன் எழுந்து திரையரங்கை விட்டு வெளியே வருகிறோம்.
காட்டு வாழ்க்கை என்று சொல்லப் பட்டாலும் அங்கு கூட 'எங்கும் எதிலும்' ஒருவித ஒழுங்கு தென்படுவதை உணர முடிகிறது.
அங்கிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம்.
இயற்கையை தன் விருப்பப்படி வளைககாமலும் பேராசை கொண்டு அழிக்காமலும் வனவிலங்குகள் இயற்கையோடு இயைந்து வாழ்கின்றன. தாமும் வாழ்ந்து தமது சந்ததிகளும் வாழ இயற்கையை மிச்சம் வைக்கின்றன.
வலுத்தவன் பிழைப்பான் என்ற இயற்கை நியதி உள்ள காட்டுப் பகுதியில் வாழும் மாமிச பட்சினிகள் கூட தமது பசிக்காகத் தவிர மற்ற மிருகங்களை மற்ற சமயங்களில் துன்புறுத்துவதில்லை. எந்த ஒரு சுரண்டல் வேளையிலும் ஈடுபடுவதில்லை. நம்மூர் அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் போல பல தலைமுறைகளுக்கும் எதையும் சேமித்து வைப்பதில்லை.
எப்பாடு பட்டேனும் வாழ வேண்டும், தனது தலைமுறையைத் தொடர வேண்டும் என்று பல வகையிலும் விடா முயற்சியுடன் போராடும் மிருகங்கள் சில பாடங்களை சொல்கின்றன. சில தற்காலிகமான பொருளாதார மாற்றங்களுக்கெல்லாம் பயந்து கொண்டு (சோர்ந்து போகும்) சில சமயங்களில் தற்கொலைக்கு முனையும் மனிதர்களுக்கு "வாழ மட்டும்தான் ஒரு உயிருக்கு உரிமை உள்ளது, மாய்த்துக் கொள்ள அல்ல" என்று சொல்லாமல் சொல்கின்றன.
உண்மையில் ஒரு உயர்ந்த வாழ்க்கையை வாழ்வது மிருகங்களா அல்லது மனிதர்களா என்ற வலுவான சந்தேகத்தை கிளப்புகின்றது இந்த ஆவணப் படம்.
1994 இல் வெளி வந்திருக்கும் இந்த ஆவணப் படம் பல விருதுகளை வென்றுள்ளது. இந்த கதையை விளக்கும் குரலில் உள்ள கம்பீரம் நம்மைக் கட்டிப் போடுகிறது. உயிரோட்டமான இசையும் காட்சி தொகுப்பும் இதை ஒரு சிறந்த திரைப் படத்திற்கு நிகராக சொல்ல வைக்கிறது. பறந்து பறந்து ஒளிப்பதிவு செய்யப் பட்டிருக்கும் காட்சிகள் படம் முடிந்த பின்னரும் நம் கண் முன்னேயே நிற்கின்றன.
குழந்தைகளுடன் பெரியவர்களும் பார்க்க வேண்டிய படம் இது.
நன்றி.