Sunday, April 26, 2009

ஆடு புலி ஆட்டம்!


சென்ற வாரம், உலக சந்தைகள் ஓரளவுக்கு நிதானித்த போதிலும், நமது சந்தைகள் தமது வெற்றி நடையை ஏழாவது வாரமாக தொடர்ந்தன. இறக்கம் வரும் என்று காத்திருந்தவர்கள் ஏமாந்து போனதுதான் மிச்சம். முதல் மூன்று நாட்கள் சற்று தடுமாறினாலும், கடைசி இரண்டு நாட்களில் சந்தையின் முக்கிய குறியீடுகள் வலுவான எதிர்ப்பு அரண்களை முறியடித்து பெருமளவு முன்னேறி உள்ளன. அதே சமயம் முதல் மூன்று நாட்களில் இதுகாறும் பெருமளவு முன்னேறிய சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் லாப விற்பனை காரணமாக வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத் தக்கது.

ஏற்கனவே சொன்ன படி, உலக சந்தைகள் சென்ற வாரம் பெரும்பாலும் வீழ்ச்சியையே சந்தித்தன. ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் சீனா குறியீடுகள் இரண்டு சதவீதத்திற்கும் மேல் வீழ்ந்தன. பொதுவாகவே இந்த சந்தைகளுடன் ஒன்றாகவே இதுகாறும் பயணித்து வந்த நமது சந்தை இந்த வாரம் ஒரு மாறுதலாக தனித்து முன்னேற்றத்தைக் கண்டது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும்.

சென்ற வாரம் இந்திய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி வீதங்களை (Repo and Reverse Repo Rates) 0௦.25% குறைத்தது. மேலும் வரும் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் (GDP Growth) ஆறு சதவீதமாக இருக்கும் என்ற மத்திய வங்கியின் கணிப்பும் நிதி சந்தையில் பணத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளப் படும் என்ற உறுதிமொழியும் சந்தைகளை மகிழ்ச்சி கொள்ள செய்தன.

சென்ற வாரம் வெளியிடப் பட்ட ரிலையன்ஸ் நிதி அறிக்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. லாப விகிதம் குறைந்து காணப் பட்டது. இருந்தாலும் கிருஷ்ணா-கோதாவரி படுகை எரிவாயு உற்பத்தி வருங்காலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பெருத்த வருவாயை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் சந்தை ஏற்றத்தையே கண்டது.

இறக்குமதியாகும் உருக்குக்கு மத்திய அரசு வரி விதித்ததை தொடர்ந்து உலோகத்துறை குறிப்பாக உருக்குத் துறை பங்குகள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டன. மென்பொருட் துறை பங்குகளும் கூட சென்ற வாரம் நல்ல வளர்ச்சியைக் கண்டன. டிஎல்எப் நிறுவனம் டெல்லி புகுதியில் தனது அடுக்குமாடி குடியிருப்பை முழுமையாக விற்றது என்ற செய்தி கண்டு ரியல் எஸ்டேட் பங்குகள் நன்கு வளர்ச்சியைக் கண்டன.

பணவீக்க விகிதம் (WPI Inflation Rate) சற்று உயர்ந்து ௦0.26% அளவை எட்டியது.

வரும் வாரத்தில் ஒரு சுவாரஸ்யமான காளை - கரடி மோதல் காத்திருக்கிறது என்று நினைக்கிறேன். வாக்குப் பதிவு மற்றும் மகாராஷ்ட்ரா தினம் ஆகியவற்றை முன்னிட்டு இரண்டு நாட்கள் விடுப்பு வருவதால், மூன்று நாட்கள் மட்டுமே சந்தை வர்த்தக நாட்கள். இதில் கடைசி நாள் "எதிர்கால வர்த்தக" நிறைவு நாள் (F&O Settlement Day) வேறு. எனவே வரும் வாரம் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்று நினைக்கிறேன். "எதிர்கால வர்த்தக சமன் செய்யும்" (Squaring of F&O Open Positions) போக்கினால் சந்தையில் ஏற்றத்தாழ்வு (Volatality) அதிகம் காணப் படும். வர்த்தகர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

கீழே உள்ள படத்தில் உள்ளபடி சந்தையின் முக்கிய குறியீடுகள் தமது எதிர்ப்பு நிலைகளான 200-நாட்கள் நகரும் சராசரி அளவை (200-Day Moving Average) வெற்றிகரமாக முழுமையாக முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி சந்தையின் தன்னம்பிக்கையை பெருமளவு உயர்த்தி உள்ளது. வரும் வார துவக்கம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் சென்செக்ஸ் குறியீட்டின் அடுத்த இலக்கு 11800 மற்றும் 12500 அளவுகளாக இருக்கும். அரண் 10900 மற்றும் 10700 அளவுகளுக்கு அருகாமையில் இருக்கும். வர்த்தகர்கள் இந்த அளவுகளில் தகுந்த இழப்பு நிறுத்தத்தை (Strict Stop Loss Limits) அமைத்துக் கொள்ளலாம். மேலும் அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகளின் போக்கை தொடர்வதும் நல்லது.




அதே போல நிபிட்டி குறியீட்டின் அடுத்த இலக்குகள் 3600 மற்றும் 3800 புள்ளிகள் ஆக இருக்கும். அதே போல வலுவான அரண் 3350 மற்றும் 3140 புள்ளிகள் அளவில் இருக்கும்.

வர்த்தகம் செய்ய வீடியோகான் பங்கு ஏற்றது என்று நினைக்கிறேன். இப்போது 122 அளவில் உள்ள இந்த பங்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 850 அளவையும் தாண்டியது. கீழே 82 அளவில் விழுந்தும் உள்ளது. இப்போது முக்கிய எதிர்ப்பு நிலைகளை முறியடித்துள்ள இந்த பங்கு 143 வரை உயர வாய்ப்பு உள்ளது. கீழே 110 அளவில் இழப்பு நிறுத்தத்தை (Strict Stop Loss Limit) அமைத்துக் கொள்ளலாம்.

ரூபாய் வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஐம்பதிற்கு கீழேயே இருக்கும் பட்சத்தில் நமது சந்தைகளின் போக்கு வலுவாக இருக்கும். ஐம்பதிற்கு மேல் உயர்ந்தால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

பின்குறிப்பு: இந்த பதிவு தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. சந்தை முதலீடுகள் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டவை. முதலீடுகள் தனது சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.

6 comments:

MCX Gold Silver said...

தங்களின் இந்த கட்டுரை மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.நன்றி

Maximum India said...

நன்றி DG

வால்பையன் said...

நாளை அமெரிக்க சந்தையில் வட்டிவிகித மாற்றம் இருக்கிறது.

கமாடிடி சந்தையில் எதாவது மாற்றம் வர வாய்ப்புண்டா?

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

அமெரிக்காவில் ஏற்கனவே ஏகப் பட்ட அளவு வட்டி வீதங்கள் குறைக்கப் பட்டு விட்டன. எனவே மேலும் குறைப்பார்களா என்று தெரிய வில்லை. குறைத்தாலும் அது எந்த சந்தையிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றே நினைக்கிறேன்.

இப்போதைக்கு ஸ்வைன் ப்ளூ என்ற புதிய பயம் காட்டுகிறார்கள். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி.

Anonymous said...

என்ன சார் ஆச்சு? வாரத்திற்கு குறைந்தது 3 பதிவுகளாவது வரும் இந்த தளத்தில் இப்போது பதிவுகளே இல்லாதது என்னவோபோல இருக்கிறது. நலம்தானே? கணிப்பொறியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டதா? மீண்டும் வழக்கம்போல் தொடரட்டும் உங்கள் சேவை.

என்றும் அன்புடன்,
ஜாஃபர்

Maximum India said...

அக்கறையான விசாரிப்புக்கு மிக்க நன்றி ஜாபர்!

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

எனது சொந்த ஊருக்கு சென்ற போது வேறு உலகத்தில் இருந்த பிரமை இருந்ததால் பதிவுலகம் பக்கம் வர முடியவில்லை.

இப்போது மீண்டும் மும்பையில்.

வரும் காலங்களில் நிறைய பதிவுகளுடன் சந்திக்க முயற்சி செய்வேன்.

நன்றி!

Blog Widget by LinkWithin