Skip to main content

தொடரும் கிரிக்கெட் வெற்றிகள் - இந்திய அணியின் மாற்றத்திற்கு காரணம் என்ன?

உலகின் கடைசி அரணாக கருதப் பட்ட நியூசிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி இப்போது வெற்றிக் கொடி நாட்டி உள்ளது. 'உள்ளூரில் புலி வெளியூரில் எலி' என்றே ஒரு காலத்தில் கருதப் பட்டு வந்த இந்திய அணி , இந்த வெற்றியுடன் சேர்த்து, கடந்த எட்டு ஆண்டுகளில், கிரிக்கெட் விளையாடும் அனைத்து அந்நிய நாடுகளிலும் இந்திய அணி வெற்றிக் கனியை ருசித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. முன்பெல்லாம் வெற்றிகளை விட தோல்விகளையே அதிகம் சந்தித்து வந்த இந்திய அணி, இப்போது உலகின் தலை சிறந்த மூன்று அணிகளில் ஒன்றாக கருதப் படுகிறது.

எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது? காரணங்கள் என்ன? ஒரு சிறிய அலசல் இங்கே.

1990 களில் இந்திய அணியின் கேப்டன் ஆக இருந்த அசாருதின் சூதாட்ட புகார்களில் சிக்கி அணியை விட்டு விலக்கப் பட்ட நேரம் அது. கிரிக்கெட் ஜீனியஸ் ஆக கருதப் பட்ட டெண்டுல்கர் கேப்டன் பதவியில் சாதிப்பார் என்ற கணிப்பு விரைவிலேயே பொய்யாகி, இந்திய அணி தனது சொந்த மண்ணிலேயே தென் ஆப்ரிக்க அணியிடம் மண்ணை கவ்வி மக்கள் மதிப்பை கிட்டத் தட்ட முழுமையாக இழந்திருந்த நேரம் அது.

அதன் பின்னர் இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணியிடம் முதல் டெஸ்டை மூன்று நாட்களில் தோற்றுப் போன சோகம் தீருவதற்குள், இரண்டாவது டெஸ்டில் பாலோ ஆன் வேறு இந்தியாவை வாட்டி எடுத்தது. ஒரு இந்திய வீரரால் தோல்வியில் இருந்து அணியை மீட்டெடுப்பதுடன், வெற்றிப் பாதைக்கும் அழைத்துச் செல்ல முடியும் என்று அன்று நிரூபித்தவர் விவிஎஸ் லக்ஷ்மன். அந்த மாட்சில், அவரடித்த 281 ரன்கள் இந்திய அணி வீரர்களுக்கு ஒரு புதிய மனத் தெம்பைக் கொடுத்தது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், 1990 களின் கதாநாயகனாக டெண்டுல்கர் இருந்தாலும், இந்திய அணியின் வெற்றிப் பாதைக்கு முதன் முதலில் வித்திட்டவர் விவிஎஸ் லக்ஷ்மன் என்றால் மிகையாகாது.

இரண்டாவது முக்கிய காரணம் கேப்டன் சவுரவ் கங்குலி. பொதுவாகவே (முக்கியமாக வெளிநாடுகளில்) தடுப்பு ஆட்டத்திற்கே பெயர் பெற்ற இந்திய அணியின் முதல் ஆக்ரோஷமான கேப்டன் ஆக கருதப் பட்டவர் கங்குலி. அன்றைய காலகட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை வெல்வதே கடினம் என்று பலரும் எண்ணியிருக்க அவர்களது சொந்த மண்ணிலேயே அவர்கள் பாணியிலேயே ஆக்ரோஷமாக விளையாடி அவர்களை மண்ணைக் கவ்வ வைத்தவர் அவர். கடைசி போட்டியில் ஸ்டீவ் வாவ் ஆட்டம் மற்றும் அம்பயர்களின் சில தவறான முடிவுகள், இந்தியாவின் மிகப் பெரிய கனவான "ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றி"யை தட்டிப் பறித்தாலும், அந்த தொடர் இந்தியர்களுக்கு ஒரு மிகப் பெரிய தன்னம்பிக்கையை அளித்தது.

கங்குலியின் மற்றுமொரு முக்கிய சாதனை, 'தனியாக உலகின் சிறந்த வீரர்கள் ஆனால் குழுவாக மிக மோசமான அணி' என கருதப் பட்ட, "சிறு அணிக்குள் பற்பல கோஷ்டிகளாக" சிதறிக் கிடந்த இந்திய அணியில் ஒரு குழு மனப்பான்மையை கொண்டு வந்தது. (இந்த குழு மனபான்மையை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ள டோனியும் பாராட்டுக்குரியவரே). மேலும் கங்குலி, இளைய தலைமுறையினரை பெரிதும் ஊக்குவித்து பல இளம் வீரர்கள் ஜொலிக்கவும் முக்கிய காரணமாகவும் இருந்தார். தேர்வுக் குழுவின் ஆதிக்கத்தை சற்று குறைத்து கேப்டன் சொல்லுக்கு தனி மரியாதை தேடியும் தந்தார். இந்திய கேப்டன் என்றால் சவுரவ் என்றே ஞாபகம் வருமளவுக்கான அவருடைய இந்த சாதனைகளே இன்றைய இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளன என்றால் மிகையாகாது.

அடுத்த காரணமாக, உலக அளவில் ஏற்பட்ட சில மாற்றங்களை சொல்லலாம். முந்தைய தலைமுறையைப் போல நடுநடுங்க வைக்கும் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்கள் இப்போதெல்லாம் உருவாவதில்லை. இந்த தலைமுறையில் கூட, சிறந்த வேகப் பந்து வீச்சாளர்களான மக் கிராத் போன்றவர்கள் ஓய்வு பெற்று விட்டனர்.

மேலும், இப்போதெல்லாம் உலக அளவில் மட்டையாளர்களே அதிகப் புகழ் பெற்று வருகின்றனர். இதனால், உலக நாடுகளில் இப்போதெல்லாம் மட்டையாளர்களுக்கு சாதகமான ஆடு தளங்களே பெரும்பாலும் உருவாக்கப் படுகின்றன. இது இந்திய மட்டையாளர்களுக்கு சாதகமான ஒன்றாக அமைந்து விட்டதுடன் வெளிநாடுகளிலும் இந்திய அணி சம வலிமையுடன் திகழ உதவுகிறது. இந்த நியூசீலாந்து தொடர் போல, எப்போதுமே மட்டையாளர்களுக்கு சாதகமான ஆடுதளங்கள் தயாரிக்கப் பட்டதில்லை என்று கூறப்படுவது குறிப்பிடத் தக்கது.

இந்தியா கூட முன்பு போல சுழற் பந்து வீச்சாளர்களின் அணியாக மட்டுமே அறியப் படுவதில்லை. இந்தியாவாலும் இப்போதெல்லாம் மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்கள் உருவாகி வருகின்றனர். ஒரு மாட்சை டிரா செய்ய மட்டையாளர்கள் முக்கியம். ஆனால் வெற்றி பெற பந்து வீச்சாளர்களே முக்கியம் என்பது குறிப்பிடத் தக்கது. முன்னர் இருந்த ஸ்ரீநாத், பிரசாத் போன்றவர்கள் அதிக பட்சம் எதிர் அணியினரை சற்று பயமுறுத்தவே செய்திருக்க ஜாகிர் கான், இஷாந்த் ஷர்மா, பாலாஜி, இர்பான் பதான் போன்ற புதிய பந்து வீச்சாளர்கள் பெருமளவில் விக்கெட்டுகளை சாய்த்து இந்தியாவுக்கு வெளிநாடுகளில் வெற்றியை தேடித் தந்துள்ளனர். வெளிநாடுகளில் கூட இந்தியா முழுக்க முழுக்க சுழற் பந்து வீச்சாளர்களையே நம்பியிருந்த காலம் மலையேறிப் போய், இப்போதெல்லாம் வெளிநாட்டு அணிகளே, நமக்கெதிராக அதிக சுழற் பந்து வீச்சாளர்களை களம் இறக்குவதை பார்க்க முடிகிறது.

அடுத்த முக்கிய காரணம், உலக அளவில் மிகச் சிறந்த மட்டையாளர்கள் இந்திய அணியில் இருப்பது. முன்னொரு காலத்தில் கடைசி அரை நாள் மட்டும் மட்டை பிடித்தால் போதும், தோல்வியைத் தவிர்க்கலாம் என்ற நிலை இருந்தாலும், அடம் பிடித்து விடாமல் தோற்ற காலம் போய், அந்நிய மண்ணில் இரண்டரை நாட்கள் தொடர்ந்து மட்டை பிடித்து தோல்வியை தவிர்க்கும் அளவுக்கு நம்பிக்கை இப்போதைய அணியில் உருவாகி உள்ளது.

நம் வீரர்களில், சேவாக் சில மணி நேரம் ஆடுகளத்தில் இருந்தாலே மாற்று அணியினரின் வயிற்றில் புளியை கரைத்து விடுவார். காம்பிர் இந்தியாவிற்கு கிடைத்த ஒரு புதிய நட்சத்திரம். நிலைமைக்கு தகுந்தாற் போல இவர் விளையாடுவது பாராட்டத் தக்கது. டெண்டுல்கர் வயது ஏறினாலும் காரம் குறைய வில்லை. திராவிட் வெளிநாடுகளில் இந்திய அணிக்கு தொடர்ந்து ஒரு பெரிய பலமாக இருப்பவர். விவிஎஸ் லக்ஷ்மன் பற்றி சொல்லவே வேண்டாம். இந்திய பேட்டிங் வரிசையில் ஒரு ஆச்சரிய வரவு டோனி. அவர் பேட்டிங் ஸ்டைல் வித்தியாசமாக இருந்தாலும் ஆட்டத்திற்கு ஆட்டம் சோடை போகாமல் ரன்களை குவிப்பது பாராட்டத் தக்கது.

தற்போதைய இந்திய அணியை எந்த அளவிலும் குறைத்து மதிப்பிட முடியாது என்றாலும், நாற்பத்து ஒரு ஆண்டுகளாக நியூசீலாந்து மண்ணில் தொடர்ந்து தோற்றுக் கொண்டே வந்ததாலேயே இப்போதைய வெற்றி நமக்கு பெரிதாக தெரிகிறது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. இது போன்ற வெற்றி நாற்பத்து ஒரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் என்றால் இந்த வெற்றியில் பெருமைப் பட ஒன்றுமே இல்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். எனவே, இந்திய அணி தொடர்ந்து பல வெற்றிகள் பெற்றாலேதான் அவர்களை உலகத்தின் சிறந்த அணிகளுள் ஒன்றாக கருதவும் இந்த அணியைப் பற்றி பெருமை கொள்ளவும் முடியும்.

இப்போதைய இந்திய அணியில் பாராட்டத் தக்க விஷயங்கள் பல இருந்தாலும், உலக தர வரிசையில் தொடர்ந்து சிறந்த இடம் வகிக்க இந்திய அணி கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. டெண்டுல்கர், டிராவிட் போன்றவர்கள் இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெற்று விடுவார்கள். அவர்களுக்கு பின்னர் நல்ல மட்டையாளர்களை இப்போதே உருவாக்க வேண்டும். யுவராஜ் போன்றவர்கள் சமயத்தில் சிறப்பாக விளையாடினாலும் காம்பிர் போன்று தொடர்ந்து சிறப்பாக விளையாடுபவர்களே அணியின் அவசிய மற்றும் உடனடித் தேவை. அடுத்த படியாக, அணியின் பீல்டிங் மற்றும் உடல் தகுதி சற்று தரம் தாழ்ந்ததாகவே உள்ளது. இதையும் சரி செய்ய வேண்டியது அவசியம்.

விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்காமல், விளையாட்டு வீரர்களை தனிப் பட்ட முறையில் ஹீரோக்களாக ஆக்கி, அவர்களுக்கு ஒருவித நிர்பந்தத்தை அல்லது மயக்கத்தை ஏற்படுத்தாமல் அவர்களை தொடர்ந்து விளையாட்டிலேயே கவனம் செலுத்த அனுமதிப்பது நம் போன்றவர்களின் கடமையாகும்.

தனித் தனியாக சாதிப்பதை விட ஒரு குழுவாக சாதிப்பதிலேயே மேன்மையும் பெருமையும் அடங்கியிருக்கிறது என்பதை அனைத்து இந்தியரும் புரிந்து கொண்டு, இன்று இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வெற்றியை ஒரு நாடாகவும் ஒற்றுமையாக நின்று அடைய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

நன்றி.

Comments

இந்திய அணி முழுவாக விளையாடியதற்கு கங்கூலியின் சர்வாதிகாரமும் ஒரு காரணம்


நடந்து முடிந்த ஆட்டத்தில்கூட டோனி டிக்ளேர் செய்ய ஏன் அவ்வலவு நேரம் எடுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.
Maximum India said…
நன்றி சுரேஷ்

//நடந்து முடிந்த ஆட்டத்தில்கூட டோனி டிக்ளேர் செய்ய ஏன் அவ்வலவு நேரம் எடுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.//

41 ஆண்டுகளாக கிடைக்காத "தொடர் வெற்றி" என்ற வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று நினைத்திருக்கலாம். ஆனால் நீங்கள் சொன்னது போல இன்னும் கொஞ்சம் துணிச்சலோடு முன்கூட்டியே டிக்ளேர் செய்திருக்கலாம். அணியின் தொடர் வெற்றிக்கு தன்னம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன்.

நன்றி.
இரண்டாம் இன்னிங்ஸில் 400தாண்டுவதே( 320) ஒரு சாதனையாக இருக்கும் கால கட்டத்தில் 500ஐ தாண்டியபின்னும் துணிச்சல் வரவில்லை என்றால்...

ஏற்றுக் கொள்ளமுடியவில்லை
Maximum India said…
நன்றி சுரேஷ்

//இரண்டாம் இன்னிங்ஸில் 400தாண்டுவதே( 320) ஒரு சாதனையாக இருக்கும் கால கட்டத்தில் 500ஐ தாண்டியபின்னும் துணிச்சல் வரவில்லை என்றால்...

ஏற்றுக் கொள்ளமுடியவில்லை//

இந்த குறிப்பிட்ட மாட்சில் நிறைய ஓவர் பாக்கி இருந்தது என்பது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஒரு வேளை மழை பெய்தாலும் ஆடுதளம் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்திருக்கலாம்.

மொத்தத்தில், கேப்டன் எடுக்கும் ஒரு முடிவு அந்த டெஸ்டில் அடையும் வெற்றி தோல்வி என்ற முடிவை பொறுத்தே சரியென்றோ தவறென்றோ அமைகிறது.

இருந்தாலும், தொடரை வென்ற அணி என்பதால் இதை பொருட்படுத்தாமல் பாராட்டலாம். இந்த குறிப்பிட்ட மாட்சில் இருந்து டோனி ஒரு நல்ல அனுபவம் பெற்றிருப்பார் என்று நம்பலாம்.

நன்றி.
//இந்த குறிப்பிட்ட மாட்சில் இருந்து டோனி ஒரு நல்ல அனுபவம் பெற்றிருப்பார் என்று நம்பலாம்.

நன்றி.//


நம்பித்தான் ஆக வேண்டும். அணி எதிர்காலத்திற்கு இது போன்ற நம்பிக்கைக்கள் அவசியமாய் இருக்கின்றன.

டோனி கற்றுக் கொள்ளக் கூடியவர்தான்
KARTHIK said…
// இது போன்ற வெற்றி நாற்பத்து ஒரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் என்றால் இந்த வெற்றியில் பெருமைப் பட ஒன்றுமே இல்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.//

நம்ம டீம பத்தி ஒன்னுமே புரிஞ்சிக்கமுடியரது இல்லை.
ஒரு மேட்ச் ஆடுனா இனொரு மேட்ச் ஆடுரதில்லை.இப்பல்லாம் நான் முன்ன மாதிரி மேட்ச் பாக்ரதில்லை அதனால் ஒன்னும் தெரியரதில்லை.

நல்ல அலசல்.
Maximum India said…
நன்றி கார்த்திக்

//நம்ம டீம பத்தி ஒன்னுமே புரிஞ்சிக்கமுடியரது இல்லை.
ஒரு மேட்ச் ஆடுனா இனொரு மேட்ச் ஆடுரதில்லை.//

இப்போது கொஞ்சம் தரம் மேம்பட்டிருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

//இப்பல்லாம் நான் முன்ன மாதிரி மேட்ச் பாக்ரதில்லை அதனால் ஒன்னும் தெரியரதில்லை.//

நீங்கள் மட்டுமல்ல, நம்மில் பலரும் முன்போல ஆர்வமாக கிரிக்கெட் மாட்சுகளை பார்ப்பதில்லை. இந்த அவசர யுகத்தில், டெஸ்ட் போட்டிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு நாள் போட்டிகளும் கூட களையிழந்து விட்டன. மீடியாக்கள் ஏற்படுத்திய பெரிய அளவு ஹைப்பின் காரணமாக உந்தப் பட்டு நான் ஒரு இந்தியா - ஆஸ்திரேலியா 20-20 போட்டிக்கு நேரில் சென்ற போதும் கூட சிறிது நேரத்திலேயே மேட்ச் போரடிப்பதாகவே தோன்றியது. இப்போதெல்லாம் வெறுமனே பேப்பர் நியுஸ் படிப்பது மற்றும் அவ்வப்போது ஸ்கோர் தெரிந்து கொள்வதோடு சரி. அலுவலகங்களில் / பொது இடங்களில் கூட முன் போல கிரிக்கெட் விவாதங்கள் அதிகம் நடை பெறுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கக் கூடும். 1990 களில் இருந்த ஒரு வித வெறித்தனமான பற்று இப்போது பெரிய அளவில் இல்லை என்றே நினைக்கிறேன். முன்பு டெண்டுல்கருக்கு இருந்தது போல இப்போதுள்ள இந்திய அணியில் எந்த ஒரு தனி நபருக்கும் பெரிய அளவு முக்கியத்துவம் அல்லது ஹீரோ அந்தஸ்து இல்லாமல் போனதும் வணிகமயமாகி விட்ட உலகில் மக்கள் ஒரு வித அவசர கதியில் வாழ்வதும் இந்த நிலைக்கு முக்கிய காரணங்கள் என்று கருதுகிறேன்.

இது கூட ஒரு வகையில் நல்லதே என்றும் நினைக்கிறேன்.

நன்றி
Maximum India said…
//டோனி கற்றுக் கொள்ளக் கூடியவர்தான்//

உண்மைதான் சுரேஷ்.

நன்றி.
MCX Gold Silver said…
//இன்று இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வெற்றியை ஒரு நாடாகவும் ஒற்றுமையாக நின்று அடைய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?//
தல பின்றீங்க போங்க
Maximum India said…
தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி dg
ஒரு சீரியஷ தொடர்ந்து பார்த்தா இவர் தான் சிறந்த வீரர்னு சொல்லமுடியாத அளவுக்கு அனைவரும் சிறப்பாக பங்களித்துள்ளார்கள்!

வரும் உலககோப்பையில் கண்டிப்பாக நமக்கு வாய்ப்பு உண்டு என்று நம்புகிறேன்!
Maximum India said…
நன்றி வால்பையன்

நிறைய லீவு எடுத்துட்டீங்க போலிருக்கு.

//ஒரு சீரியஷ தொடர்ந்து பார்த்தா இவர் தான் சிறந்த வீரர்னு சொல்லமுடியாத அளவுக்கு அனைவரும் சிறப்பாக பங்களித்துள்ளார்கள்!//

உண்மைதான். ஒரு குழுவாக இந்த அணி சிறப்புடன் செயலாற்றுவதே இதன் தொடர்ந்த வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.

நன்றி.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...