Sunday, April 5, 2009

தேவை ஒரு வேகத் தடை ?


நெருப்பை பெட்ரோல் ஊற்றி அணைப்பது மற்றும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பது போன்ற உலகின் பல அரசாங்கங்கள் தொடர்ந்து எடுத்த எடுத்த முயற்சிகள், செய்திகளுக்காக, பல மாதங்களாக தவம் கிடந்த சந்தைகளுக்கு வரமாக கிடைத்தன. பலன், சந்தைகளின் வெற்றி நடை நான்காவது வாரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வெற்றி நடைக்கு தேவை இப்போதைக்கு ஒரு வேகத் தடை. இல்லையென்றால், மற்றுமொரு மிகப் பெரிய வீழ்ச்சிக்கு நம்மை நாமே தயார் படுத்தி கொள்ள வேண்டியிருக்கும்.

சென்ற வார துவக்கம் பங்கு சந்தைகளுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. அமெரிக்க வாகனத் துறைக்கு அந்த நாட்டு அரசு உடனடியாக மீட்டெடுப்பு உதவி எதுவும் உடனடியாக வழங்காது என்ற செய்தி சந்தைகளுக்கு இடியென வந்தது. நம் சந்தைகளின் முக்கிய குறியீடுகள் பெரிய அளவில் வீழ்ந்தன. அதே சமயத்தில், உள்ளூர் வர்த்தகர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள சிறிய மற்றும் மத்திய ரக பங்குகள் அதிகம் வீழாதது குறிப்பிடத் தக்கது. வருட இறுதி மதிப்பிட்டுக்காக உள்ளூர் பரஸ்பர நிதிகள் பெருமளவில் பங்குகளை வாங்கியதும் சந்தை பெரிய அளவில் விழாமல் காப்பாற்றியது.

அமெரிக்க வங்கிகள் தமது மதிப்பிழந்த சொத்துக்களை தமது விருப்பத்திற்கேற்ற படி மதிப்பீடு செய்து கொள்ளலாம் என்ற அமெரிக்க கணக்கியல் அமைப்பின் அறிவிப்பு அங்கு மட்டுமல்லாமல் இங்குள்ள சந்தைகளுக்கும் ஒரு பெரிய சந்தோசத்தை அளித்தது. அதே போல இந்திய வணிக நிறுவனங்கள் அந்நிய செலவாணி வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்புகளை தமது நிதி அறிக்கையில் நஷ்டமாக காட்ட வேண்டியதில்லை என்ற உள்ளூர் அறிவிப்பும் நமது சந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் நஷ்டங்களை (தற்காலிகமாக) மறைக்க உதவும் இது போன்ற நடவடிக்கைகளினால் வணிக நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் உண்மையான பயன் வந்து விடப் போவதில்லை. மேலும் இந்த இழப்புக்களை சரிகட்டாமல் அல்லது தடுக்காமல் குறைந்த பட்சம் வெளிப்படுத்தாமல் அப்படியே தொடர்ந்து மறைத்து வரும் போது, ஒரு காலகட்டத்தில் நஷ்டங்கள் பெருகி வங்கி/வணிக நிறுவனமே மூடப் படும் அபாயமும் கூட உண்டு.

இது கசப்பான உண்மையாக இருந்தாலும் கூட, வியாதியஸ்தர்களுக்கு வலி மறப்பு மருந்து கொடுத்து கொஞ்சம் நேரம் வலியை மறக்கச் செய்வது போன்ற இத்தகைய முயற்சிகள் சந்தைகளை உற்சாகப் படுத்தி கொண்டேதான் இருக்கின்றன. சந்தைகளை குறை கூறி பயனில்லை. எத்தனை நாளைக்குத்தான் தொடர்ந்து வீழ்ந்து கொண்டே வருவது? நாங்களும் (தற்காலிகமாவது) லாபம் பார்க்க வேண்டாமா?

தவறான வணிக முறைகளினால் பெருமளவு நஷ்டத்தை சந்தித்து வரும் அமெரிக்க வணிக நிறுவனங்களுக்காக அந்த அரசு இது வரை சுமார் $2.6 டிரில்லியன் டாலர் அளவு பணத்தை வாரி இறைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சொல்லுங்கள் பார்ப்போம்.

உண்மையில் இது யாருடைய பணம்?

அமெரிக்க மக்களின் வரிப் பணம் மற்றும் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் ஏற்றுமதி செய்து சம்பாதித்த டாலர் பணம்தான், இப்படி வாரி இறைக்கப் படுகிறது. எல்லாவற்றுக்கு சிகரமாக, G-20 மாநாடு, இன்னுமொரு $1.1 டிரில்லியன் பணத்தை வளர்ந்த நாடுகளின் ஆதிக்கத்தில் உள்ள சர்வதேச நிதி அமைப்பிடம் (IMF) வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இந்தப் பணம், கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து வரும் இங்கிலாந்து நாட்டை காப்பாற்ற உபயோகப் படுத்தப் படும் என நிதி வட்டாரங்கள் கருதுகின்றன.

ஆக மொத்தத்தில், சில தனியார் நிறுவனங்களை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றுவதற்காக இன்று உலக அரசாங்கங்கள் பொது மக்களின் பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த உதவிகள் சரியாக பயன்படுத்தப் படாமல், பன்னாட்டு தனியார் நிறுவன அதிகாரிகள் (மீண்டும் மீண்டும்) அதிக போனஸ் பெறுவதற்கும் தனியார் ஜெட்டில் பயணம் செய்வதற்கும் உபயோகப் படுத்தப் பட்டால் உலகம் கூடிய சீக்கிரம் ஒரு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும்.

இப்போது நம்மூர் சந்தைகளுக்கு வருவோம். மேற்சொன்ன செய்திகளின் அடிப்படையில் நம் சந்தைகள் சென்ற வாரம் தனது வெற்றி நடையை தொடர்ந்தது. உலக பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்றால் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் அந்தத் துறை பங்குகள் பெருமளவு உயர்ந்தன. நஷ்டங்களை தற்போதைக்கு தவிர்க்க உதவும் AS-11 திருத்தம், ரிலையன்ஸ் போன்று அந்நிய செலவாணி இழப்பு சிக்கலில் மாட்டிக் கொண்ட இந்திய நிறுவனங்களின் பங்குகள் பெருமளவு உயர உதவின, வாகன விற்பனை முன்னேற்றம் கண்டிருப்பதை தொடர்ந்து அந்தத் துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. அமெரிக்காவில் பொருளாதார பின்னடைவு தவிர்க்கப் படும் என்ற நம்பிக்கையில் மென்பொருள் நிறுவனப் பங்குகள் உயர்ந்தன. நானோ தந்த உற்சாகத்தில் டாடா குழும பங்குகளும் உயர்ந்தன.

நாம் ஏற்கனவே பல முறை குறிப்பிட்டிருந்தபடி, நிபிட்டி குறியீடு தனது முக்கிய இலக்கான 3200 புள்ளிகளை இந்த வாரம் வெற்றிகரமாக அடைந்தது.

இனிமேல் நாம் என்ன செய்வது என்பது ஆழ்ந்து யோசிக்க வேண்டிய ஒரு விஷயம்.

ஏற்கனவே சொன்னபடி, சந்தைகளில் புதிய உற்சாகம் வந்திருப்பதும், சிறிய மத்திய ரக பங்குகள் தொடர்ந்து உயர்வதும், தினசரி வர்த்தக அளவு அதிகரித்திருப்பதும் நல்ல விஷயங்கள்தான். அதே சமயம், இது வரை குறைந்த விலையில் வாங்கி உள்ளவர்கள், இப்போது லாப விற்பனை செய்யும் பட்சத்தில் சந்தைகள் சரிவை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.

தொழிற்நுட்ப ரீதியாக நிபிட்டி குறியீட்டின் அடுத்த இலக்கு 3800 புள்ளிகள். 3300௦௦ அளவிலும் நல்ல எதிர்ப்பு இருக்கும். அதே சமயம் 3100 புள்ளிகளுக்கு கீழே நிபிட்டி சென்றால் சந்தை பெரிய வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும். வர்த்தகர்கள் 3100 அளவை மனதில் வைத்துக் கொண்டு குறுகிய கால வர்த்தகம் செய்யலாம். கீழே 2970௦ அளவில் நல்ல அரண் இருக்கும்.

முதலீட்டாளர்கள் தொடர்ந்து நல்ல டிவிடென்ட் தரும் நிறுவனங்களில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம்.

நாம் ஏற்கனவே குறிப்பிட்ட படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 க்கு கீழ் இறங்காமல் இருந்தது குறிப்பிடத் தக்கது. சந்தைகள் எதிர்பார்த்த படி பெருமளவு அந்நிய முதலீடு இந்தியாவிற்குள் வராமல் போனதும் கவனிக்கத் தக்கது. பங்கு வர்த்தகர்கள் ரூபாய் மற்றும் அந்நிய வரவுகளில் ஒரு கண் வைத்தபடி வர்த்தகம் செய்வது நல்லது.

ஆக மொத்தத்தில், சந்தைகள் இன்னும் மேலே செல்ல வாய்ப்பு இருந்தாலும், சற்று எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

4 comments:

ஆ.ஞானசேகரன் said...

//ஆக மொத்தத்தில், சந்தைகள் இன்னும் மேலே செல்ல வாய்ப்பு இருந்தாலும், சற்று எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.//

சிறப்பாக இருக்க வேண்டும் என்பதும் விருப்பம்....

Maximum India said...

நன்றி ஞானசேகரன்!

வால்பையன் said...

35 டாலர் வரை சென்ற கச்சா எண்ணை மீண்டும் 55 டாலருக்கு வந்து விட்டது!
தங்கத்தின் விலை சில நாட்களாகவே இறங்குமுகமாக இருக்கிறது!

தங்கத்தின் வாங்கும் நிலை எதாவது இருக்கிறதா?

குறைந்த பட்ச டார்கெட்டாவது!

ஏன்னா தாவூ தீருது அதான்!

Maximum India said...

நன்றி வால்பையன்

//தங்கத்தின் விலை சில நாட்களாகவே இறங்குமுகமாக இருக்கிறது!

தங்கத்தின் வாங்கும் நிலை எதாவது இருக்கிறதா?

குறைந்த பட்ச டார்கெட்டாவது!

ஏன்னா தாவூ தீருது அதான்!//

உலக பங்கு சந்தைகள் தொடர்ந்து மேலே சென்று கொண்டிருக்கும் வரை தங்கத்திற்கு இறங்கு முகம்தான்.

நன்றி.

Blog Widget by LinkWithin