Friday, September 11, 2009

இன்றைய உலகின் அசாதாரண நிலை!


அமெரிக்க வங்கியான லெமென் பிரதர்ஸ் வங்கி மூழ்கி ஒரு வருடம் முடிவடைந்த நிலையில், தற்போதும் உலகம் பொருளாதார ரீதியாக ஒரு அசாதாரண நிலையில்தான் உள்ளது. அதிகப் படியான பணபுழக்கம், கடனைத் திருப்பித் தரமுடியாதவர்களுக்கு ஏராளமான கடன் வழங்குதல், மீளாக் கடன்களை கொண்டு கட்டி வந்த ஒரு தலைகீழ் மணல் கோட்டை, ஊதி பெருத்து வந்த அமெரிக்காவிற்கு பலவகையிலும் சேவை செய்து பிழைத்து வந்த ஆசிய நாடுகள், இதனால் விளைந்த டாலர் சுழற்சி முறை என பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த தவறுகளின் அடிப்படையில், ஒரு பயங்கர பொருளாதார பூகம்பம் சென்ற ஆண்டு ஏற்பட்டது. அந்த பூகம்பத்தின் ஒரு முக்கிய மையமாக லெமென் பிரதர்ஸ் வங்கியின் வீழ்ச்சி இருந்தாலும் அதன் தாக்கம் பல ஆயிரம் கிலோ மீட்டர் வரை இருந்தது..

இந்த பொருளாதார பூகம்பத்தை சரிகட்டுவதற்காக, சரிந்த மணல் கோட்டையின் மீதே இன்னும் ஒரு பெரிய மணல் கோட்டை கட்டும் விதமாக, அமெரிக்கா மற்றும் இன்னும் பல நாடுகளின் அரசுகள், சந்தைக்குள் ஏராளமான பணத்தை இறக்கி விட்டன. (நோட்டு அச்சடிப்பதில் இந்தியாவும் விதி விலக்கல்ல. இருந்தாலும் அமெரிக்கா வெளியிடும் நோட்டுக்களை ஒப்பிடுகையில் நமது அளவு அவல் பொரி மட்டுமே) உலக நாடுகளின் மைய வங்கிகள் தம் பங்கிற்கு வட்டி வீதத்தை ஏராளமாக குறைத்தன. அமெரிக்க மத்திய வங்கியின் முக்கிய வட்டி வீதம் இப்போது ஜீரோ சதவீதத்திற்கு மிக அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்கும் இந்த முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெற்றது என்று இப்போதைக்கு சொல்வது கடினம். அதே சமயம், இவ்வாறு இறக்கி விடப் பட்ட பணம் பங்கு சந்தை, பொருட்கள் சந்தை, தங்க சந்தை, எண்ணெய் சந்தை என எல்லா சந்தைகளிலும் பரந்து பாவி சந்தைகளை மிக உயரத்தில் கொண்டு சென்று நிறுத்தி உள்ளது. இது மட்டுமல்லாமல், உணவு பொருட்கள் சந்தைகளிலும் பணம் நுழைந்து உணவு பொருட்களின் விலை விண்ணை முட்ட செய்துள்ளது.

இடையே, மதிப்பிழந்து வரும் டாலர் பணத்தை ஏராளமாக கைவசம் வைத்திருக்கும் சீனா தன்னிடம் உள்ள டாலர் பணத்தை கொண்டு, தங்கம், உலோகம், நிலம் மற்றும் கச்சா எண்ணெய் என்று வாங்கிக் குவித்ததும் பல்வேறு சந்தைகளில் ஏற்பட்ட விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம்.

அமெரிக்காவில் இன்னும் கூட பல சிறிய வங்கிகள் தொடர்ந்து மூடப் பட்டு வந்தாலும், பெரிய வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் மூடப் படுவது இப்போதைக்கு குறைந்திருக்கிறது. அதே சமயத்தில், எதிர்பார்த்தபடி, வேலை வாய்ப்புக்களோ அல்லது தொழிற் துறையோ வளர வில்லை. பொருளாதார மீட்சிக்கான பச்சை முளைகள் அங்கங்கே தெரிந்தாலும் அவை விளை பயிர்களின் முளைகளா (greenshoots) அல்லது பதுக்கல் களைகளா (weeds) என்று உறுதியாக தெரிய வில்லை.

தொழிற் உற்பத்தி பெருகாத நிலையில், பண இறக்கம் தொடர்ந்து இருந்தால், அது ஒரு பெரிய பணவீக்கத்தை உருவாக்கி விடக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் அரசுகள் இறக்கி விட்ட பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளா விட்டால் அமெரிக்காவில் பணவீக்கம் பத்து சதவீதத்திற்கு மேல் உயரும் என்று ஆலன் கிரீன்ஸ்பான் எச்சரித்துள்ளார். அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால், பணவீக்கம் ஏற்கனவே பத்து சதவீதத்திற்கு மேல் உள்ள இந்தியா போன்ற நாடுகளின் நிலை என்ன ஆவது என்பதே இப்போதைய கவலை.

எனவே, இப்போது உலக நாடுகளின் அரசாங்கங்கள் ஆழ்ந்த சிந்தனையில் உள்ளன . சந்தைக்குள் அதிகமாக இறக்கி விடப் பட்டுள்ள பணம் தன வேலையை காட்டும் முன்னரே அதை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதே சமயம், பொருளாதார மீட்சி ஏற்படுவதற்கு முன்னரே பணத்தை திரும்ப பெற்றால் பொருளாதாரங்களில் பெரியதொரு தளர்ச்சி ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதை அரசுகள் உணர்ந்துள்ளன.

பொதுவாக இந்தியா, அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளில், பணத்தை அதிக அளவு இறக்கி விடுவது, மக்களிடம் அதிக வரவேற்பு பெறும் செயலாகும் . அரசியல்வாதிகளுக்கு அதிக செல்வாக்கு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. அதே சமயம், திரும்பப் பெறும் முடிவு சற்று கசப்பானதாக இருக்கும். மக்களிடம் ஆதரவு கிடைக்காது.

அரசு பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகள், தமது அரசியல் வாழ்வை அபாயத்திற்கு உள்ளாக்க விரும்பாத காரணத்தால், தற்போதைக்கு தம்முடைய "பணத்தை வெளிவிடும் கொள்கையை"யே தொடர்வது என்ற முடிவை இந்தியா, அமெரிக்கா போன்ற பல நாடுகள் எடுத்துள்ளன.

நோய்க்கு மருந்து அவசியம் என்றாலும், அதிகப் படியான மருந்து உடலுக்கு எமனாகும் முன்னரே, மருந்தை நிறுத்த மருத்துவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு உலக பொருளாதாரம் இன்னமும் சிக்கலான ஒரு சூழலில்தான் உள்ளது. இது வரை நடந்தது வான வேடிக்கை மட்டுமே. இனிமேல்தான் அணுகுண்டுகளை பார்க்கப் போகிறோம் என்று ஒரு சில பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். விலைவாசிகள் கண்டபடிக்கு உயர்ந்து இது வரை சரித்திரம் காணா பணவீக்கம் உருவாக வாய்ப்புள்ளது என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் சந்தைகளின் போக்கும் அசாதாரணமாகவே உள்ளன. பங்கு சந்தைகள் பெருமளவுக்கு உயர்ந்துள்ளன. பங்கு சந்தைக்குள்ளேயே, ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்து பல பங்குகள் தொடர்ந்து வீழ்ந்து வந்தாலும், ஒட்டுமொத்த சந்தையே மேலே செல்வது போன்ற மாயத் தோற்றம் உருவாகி உள்ளது. தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் மிகவும் உயர்ந்துள்ளன. ஏற்கனவே சொன்ன படி உணவுப் பொருட்களின் விலைகளும் கண்டபடிக்கு உயர்ந்துள்ளன. ரியல் எஸ்டேட் விலைகளும் இன்னும் சில நாட்களில் உயரத் தொடங்கும் என்றும் கருதப் படுகிறது.

உடனடியாக தொழிற்துறை வளர்ச்சி பெற்று அதன் மூலம் வேலைவாய்ப்பு எண்ணிக்கை உயரா விட்டால் உருவாக கூடிய இந்த சூப்பர் பணவீக்க நிலையை (Hyperinflation) தடுக்க அரசாங்கங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆக மொத்தத்தில் நம் கையில் உள்ள பணத்திற்கு மதிப்பில்லாத நிலையே உள்ளது. வருடம் முழுக்க உழைத்து நாம் சம்பாதிக்கும் பணத்தை, ஒரு நொடியில் அமெரிக்க அச்சகத்தில் டாலர்களாக அச்சடித்து, நம் கையில் உள்ள நோட்டுக்களுக்கும் மதிப்பில்லாமல் போகச் செய்யும் இந்த பகல் கொள்ளையை எப்படி தடுப்பது?

நன்றி.

பின்குறிப்பு: அருமை நண்பர் தாமஸ் ரூபன் சென்ற பதிவில் கேட்ட ஒரு கேள்விக்கு விடையாகவே இந்த பதிவு வரையப் பட்டது. அவரது சந்தேகங்கள் ஓரளவுக்கு தீரும் என்று நம்புகிறேன்.

12 comments:

Thomas Ruban said...

நன்றி சார்-எளிமையான,விரிவான, விளக்கமான பதிலுக்கு (பதிவுக்கு) நன்றி சார்.

சந்தேகங்கள் ஓரளவுக்கு தீர்ந்தது. இன்னும் பல சந்தேகங்கள் உள்ளது. அதை அவ்வபோழுது கேட்டு உங்களை தொல்லைப்படுத்துவேன் சார்.

உலக நாடுகளின் அரசாங்கங்கள் தொலைநோக்கு பார்வை இல்லாமல் செயல்படுவதே இத்தனைக்கும் காரணம்.

பதிவுக்கு நன்றி...நன்றி.. நன்றி.

வால்பையன் said...

//சீனா தன்னிடம் உள்ள டாலர் பணத்தை கொண்டு, தங்கம், உலோகம், நிலம் மற்றும் கச்சா எண்ணெய் என்று வாங்கிக் குவித்ததும் பல்வேறு சந்தைகளில் ஏற்பட்ட விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம்.//


உலோகங்கள் மட்டும் விலையேறி கொண்டிருக்கிறது!
கச்சா எண்ணை உயரவில்லை!?

தங்கம், வெள்வி எதாவது விலை இறங்க வாய்புண்டா!?

Btc Guider said...

சில விசயங்களில் அமெரிக்க என்ற நாடே இல்லாமலிருந்தால் உலகம் எவ்வளவு சுபிட்சமாக இருக்கும் என்று தோன்றுகிறது. பொருளாதார சீரழிவுக்கு முக்கிய காரணம் அமெரிக்காதான்.இது பரவாயில்லை சமாளித்துவிடக்கூடிய ஒன்றுதான் இன்று இல்லையேல் நாளை சரிசெய்து விடலாம். ஆனால் மிக பயங்கரமான ஒன்றான கலாசார சீரழிவை உலகத்துக்கு அறிமுகப் படுத்திய இந்த நாட்டை யாரும் மண்ணிக்கமாட்டார்கள். நம் இந்தியா போன்ற நாடுகளின் தலைமையில் உலகத்தை வழிநடத்தக்கூடிய நாட்கள் வெகு தூரத்தில் இல்லை.அதற்காக நாம் பிரார்த்திப்போம்.
பதிவுக்கு நன்றி சார்.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//உலக நாடுகளின் அரசாங்கங்கள் தொலைநோக்கு பார்வை இல்லாமல் செயல்படுவதே இத்தனைக்கும் காரணம்//

உண்மைதான்.

நன்றி.

Maximum India said...

நன்றி வால்பையன்!

//உலோகங்கள் மட்டும் விலையேறி கொண்டிருக்கிறது!
கச்சா எண்ணை உயரவில்லை!?

தங்கம், வெள்வி எதாவது விலை இறங்க வாய்புண்டா!?//

கச்சா எண்ணெய் கூட விலை ஏறி உள்ளது. ஆனால், நூற்றி ஐம்பது டாலர் வரை சென்றது நம் நினைவில் இன்னமும் பசுமையாக இருப்பதால், தற்போதைய விலை ஏற்றம் (முப்பது முதல் எழுபது வரை) பெரிதாக தெரிய வில்லை.

நிதிக் கொள்கை, பண வெளியீட்டிற்கு சாதகமாக இருக்கும் வரை தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய வாய்ப்பு குறைவு. அதே சமயம், கைவசம் உள்ள தங்கத்தை விற்க பன்னாட்டு நிதி மையம் மற்றும் உலக மத்திய வங்கிகள் முடிவு செய்தால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.

நன்றி.

Maximum India said...

நன்றி ரஹ்மான்!

//சில விசயங்களில் அமெரிக்க என்ற நாடே இல்லாமலிருந்தால் உலகம் எவ்வளவு சுபிட்சமாக இருக்கும் என்று தோன்றுகிறது. பொருளாதார சீரழிவுக்கு முக்கிய காரணம் அமெரிக்காதான்.இது பரவாயில்லை சமாளித்துவிடக்கூடிய ஒன்றுதான் இன்று இல்லையேல் நாளை சரிசெய்து விடலாம். ஆனால் மிக பயங்கரமான ஒன்றான கலாசார சீரழிவை உலகத்துக்கு அறிமுகப் படுத்திய இந்த நாட்டை யாரும் மண்ணிக்கமாட்டார்கள். நம் இந்தியா போன்ற நாடுகளின் தலைமையில் உலகத்தை வழிநடத்தக்கூடிய நாட்கள் வெகு தூரத்தில் இல்லை.அதற்காக நாம் பிரார்த்திப்போம். //

சரித்திரத்தை திரும்பிப் பார்த்தால், ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஏதாவது ஒரு வல்லரசு மற்ற நாடுகளை கொள்ளை அடித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறது. கொள்ளையடிக்கும் வழிமுறை மட்டுமே வித்தியாசப் படுகிறது.

வல்லரசு ஆக ஆசைப் படும் சீனாவையும் சாதாரணமாக எடைபோட முடியாது. வாய்ப்பு கிடைத்தால் அது அமெரிக்காவை விட மோசமான மேலாதிக்கமாக உருபெற்று விடும்.

அமெரிக்கா இல்லாவிடில் இந்நேரம் இன்னொரு நாட்டாண்மை உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பார். அடிமையாக வாழ நாம் தயாராக இருக்கும் வரை ஆண்டு அனுபவிக்க விரும்பும் ஆட்களுக்கு (நாடுகளுக்கு) பஞ்சமிருக்காது.

நன்றி.

manjoorraja said...

அன்பு நண்பரே அருமையான பதிவு. மிகவும் நன்றி.


இப்போதிருக்கும் சூழ்நிலையில் பாதுகாப்பாக எதில் முதலீடு செய்யலாம்?

பொதுஜனம் said...

பொருளாதார விஷயங்களை மீண்டும் ஒரு முறை தெளிவாக விளக்க முயற்சித்த முயற்சிக்கு பர்ரட்டுக்கள்.அனால் பழனி மலை டாலரை மட்டுமே பார்த்து பழகிய நம்ம ஆட்களுக்கு இது புரிய கொஞ்சம் காலம் வேண்டும்.டாலரின் டாம்பீகத்தை குறைக்க யூரோ முயற்சித்தாலும் ஓரளவிற்கே அது வெற்றி பெற முடிந்துள்ளது. காரணம் பெரும்பான்மையான நாடுகளின் பொருளாதாரம் டாலரை சார்ந்து இருப்பதால்தான். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கட்டமைப்பு தளர்ந்ததால் முதல் இடத்தை தற்காலிகமாக இழந்தது போல் அமெரிக்காவில் தீர்கக் முடியாத சிக்கல் உருவானால் பிரிக் (bric ) நாடுகள் கொஞ்சம் தலையை தூக்க முடியும்.. ஆனால் எதையும் விழுங்கும் வல்லமை படைத்த நாட்டாமை தன இடத்தை இன்னொருவருக்கு விட்டு கொடுக்குமா என்பது சந்தேகமே.

Maximum India said...

நன்றி மஞ்சூர் ராஜா!

//இப்போதிருக்கும் சூழ்நிலையில் பாதுகாப்பாக எதில் முதலீடு செய்யலாம்?//

பங்கு என்பது எப்போதுமே பாதுகாப்பான முதலீடு கிடையாது. போட்ட பணம் கிட்டத்தட்ட முழுமையாக கூட இழக்க வாய்ப்புக்கள் உள்ளன. அதே சமயம் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புக்கள் கொண்ட ஒரு முதலீடு பங்கு முதலீடு ஆகும்.

எனவே ஒரு முதலீடுகளை வெவ்வேறாக பிரித்துக் கொள்ளுங்கள். பெரும்பகுதியை (60-70%) வங்கி டெபாசிட், அரசு பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள். ஒரு சிறு பகுதியை (5-10%) தங்கத்திலும் மீதமுள்ளவற்றை (20-30%) உங்கள் லாபம் தாங்கு சக்திக்கு தக்கவாறு பங்குகளில் முதலீடு செய்யுங்கள். பங்கு முதலீட்டை ஒரே சமயத்தில் செய்யக் கூடாது. வெவ்வேறு காலகட்டத்தில், சிறுக சிறுக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நேரடியாக கொஞ்சம், பரஸ்பர நிதிகள் வாயிலாக கொஞ்சம் என முதலீடு செய்யலாம்.

பங்குசந்தை வெற்றிப் பயணம் என்ற தொடர்பதிவை கவனித்து வாருங்கள். தொடர்பதிவின் இறுதிக் கட்டத்தில் பங்கு முதலீடுகள் பற்றி உங்களுக்கே ஒரு ஐடியா கிடைக்கும்.

நன்றி.

Maximum India said...

//டாலரின் டாம்பீகத்தை குறைக்க யூரோ முயற்சித்தாலும் ஓரளவிற்கே அது வெற்றி பெற முடிந்துள்ளது. காரணம் பெரும்பான்மையான நாடுகளின் பொருளாதாரம் டாலரை சார்ந்து இருப்பதால்தான். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கட்டமைப்பு தளர்ந்ததால் முதல் இடத்தை தற்காலிகமாக இழந்தது போல் அமெரிக்காவில் தீர்கக் முடியாத சிக்கல் உருவானால் பிரிக் (bric ) நாடுகள் கொஞ்சம் தலையை தூக்க முடியும்.. ஆனால் எதையும் விழுங்கும் வல்லமை படைத்த நாட்டாமை தன இடத்தை இன்னொருவருக்கு விட்டு கொடுக்குமா என்பது சந்தேகமே.//

சரியாக சொன்னீர்கள். சர்வதேச வர்த்தகத்திற்காக அனைவரும் ஒப்புக் கொள்ளும் வகையில் இன்னொரு போட்டி நாணயம் உருவாகுவதற்கு உடனடியாக வாய்ப்புக்கள் குறைவு. அதே சமயம், டாலர் ஆதிக்கம் குறையவும், பல நாணயங்கள் வெவ்வேறு விகிதத்தில் செல்வாக்கு பெறவும் வாய்ப்புக்கள் உண்டு.

நன்றி பொதுஜனம்!

manjoorraja said...

அன்பு நண்பரே மிகவும் நன்றி.

தற்போது வங்கிகளில் வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில் முதலீடுகளுக்கு ஓரளவு நல்ல வருமானம் வர வேறு உறுதியான முதலீட்டுக்கான வழிகள் ஏதேனும் இருக்கிறதா?

Naresh Kumar said...

நல்லதொரு பதிவு!!!!அரசியல்வாதிகள் எப்பொழுதும் ஜன மயக்கு திட்டங்களை நம்பியிருப்பதும், பொருளாதார காரணங்களுக்காக, அதை திரும்பப் பெறுபவர்களை துரோகிகள் என்று குற்றம் சாட்டுவதும் என்று கேவலங்களைச் செய்ய தயங்குவதேயில்லை....

//அடிமையாக வாழ நாம் தயாராக இருக்கும் வரை ஆண்டு அனுபவிக்க விரும்பும் ஆட்களுக்கு (நாடுகளுக்கு) பஞ்சமிருக்காது.//

சரியாகச் சொன்னீர்கள்....யாருக்காவது அடிமையாய் இர்ப்பதென்றால் நமக்குதான் எவ்வளவு பிரியங்கள்...

Blog Widget by LinkWithin