Saturday, April 25, 2009

பதிய விரும்பியதும் தவறிப் போனதும்


கிட்டத்தட்ட ஓரிரு நாட்களுக்கு ஒருமுறையேனும் புதிய பதிவுகளை பார்க்க முடியும் இந்த வலைப் பூவில் சென்ற வாரம் முழுக்க எந்த ஒரு புதிய பதிவினையும் இட சந்தர்ப்பம் வாய்க்க வில்லை. சில நண்பர்கள் தொலைபேசி வாயிலாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் என்னை தொடர்பு கொண்டு நலம் கூட விசாரித்தனர். அவர்களுக்கு என் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது கணினியில் ஏற்பட்ட சிறிய தொழிற்நுட்ப கோளாறு, அதிகப் படியான பணி நிர்பந்தங்கள், சில சொந்த வேலைகள், சில மன மாற்றங்கள் ஆகியவையே மேற்சொன்னவாறு பதிவுகள் இட முடியாமைக்கு முக்கிய காரணங்கள். இருந்த போதும், பதிவுக்கான சில "பொருள்கள்" எனது மனதில் ஊஞ்சலாடிக் கொண்டே இருந்தன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த வார துவக்கத்தில், இரண்டு நாட்கள் கிட்டத்தட்ட முழுமையாக பணி நிமித்தமாக தாஜ் மகால் பேலஸ் ஹோட்டலில் (சமீபத்திய மும்பை தாக்குதலில் பாதிக்கப் பட்டது) நான் இருக்க நேரிட்டது. 'அரண்மனை' என்ற பெயருக்கு ஏற்றபடி நாம் ஏதோ "அரண்மனையில்தான்" தங்கி இருக்கிறோமோ என்ற பிரமிப்பை உருவாக்கும் வகையில் பாரம்பரியமும் கலை நேர்த்தியும் ஒருங்கே கொண்ட இந்த 'ஹோட்டல் தாஜ்' தீவிரவாதிகளால் தாக்கப் பட்ட இடம் என்ற அடையாளம் துளியும் இல்லாதவாறு பிரமாதமாக புனரமைக்கப் பட்டிருந்ததும் முன்னைப் போலவே வெளிநாட்டு பயணிகளை பெருமளவு அங்கே பார்க்க முடிந்ததும் மிகுந்த மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கூட இருந்த ஒரு நண்பர் கூறினார். "தாஜ் ஹோட்டல் என்றால் சும்மா இல்லை. இந்தியாவின் பெருமை. யாரோ சில வன்னெஞ்ச மூடர்கள் தாக்கினார்கள் என்பதற்காக நாம் அப்படியே விட்டு விட முடியாது. இந்தியர்களின் தாங்கும் திறனையும் மீண்டெழும் தன்மையும் உலகிற்கு பறை சாற்றுவதே முன்னெப்போதும் போல ஜொலிக்கும் இந்த தாஜ் ஹோட்டல்"

இரண்டாவதாக மனதைப் பாதித்த ஒரு பெரிய விஷயம். ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் அவர்களால் ஈழத்தமிழர் படும் பாடும் பற்றி வெளியிடப் பட்ட தகவல்கள். உலகில் இது எங்கு நடந்திருந்தாலும் எந்த இனத்தவர் மீதும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப் பட்டிருந்தாலும் மனம் பதறும் குணமுடைய நமது தேசம், தனது காலருகே இத்தகைய கொடுமைகள் நடந்து கொண்டிருந்தும் கண்டும் காணாமல் போல இருப்பது மனதிற்கு பெரிய அளவில் வேதனையை ஏற்படுத்தியது. தூர தேசங்களாக இருந்தாலும் பாலஸ்தீனிய போராட்டத்திற்கும் தென் ஆப்பிரிக்க நிறவெறி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெரும் இயக்கங்களை நடத்திய நாடு இந்தியா என்பதை மறக்க முடியாது.

காட்டாட்சி நடக்குமொரு நாட்டை இன்னொரு நாடு, இறையாண்மை உள்ள நாடு என்று சொல்வதெல்லாம் விதண்டாவாதங்கள். அமெரிக்காவால் இஸ்ரேலியர்களுக்கு ஒரு புதிய நாடு உருவாக்கித் தர முடிந்தது. ஜெர்மனி உடைக்கப் பட்டு மீண்டும் ஓட்ட வைக்கப் பட்டது. கொரியா பிரிக்கப் பட்டது. தானே ஒரு ஏழை நாடாக இருந்த போதும் கூட இந்தியாவால் ஒரு பங்களாதேசத்தை உருவாக்க முடிந்தது. சீனா ஒரு பலமான நாடாக இருந்தாலும் இன்னும் கூட தைவான் சுதந்திரமாகவே சுற்றித் திரிகிறது. ஹாங்காங் நேற்று வரை தனி ஆட்சி பகுதியாகவே இருந்தது. இன்றும் கூட திபெத்திற்கு ஆதரவு தரும் இந்தியர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். மேற்சொன்ன சரித்திரத்தை எழுதிய மை இன்னும் காய்ந்து கூட போய் இருக்காது.

ஒவ்வொரு நாளும் பத்திரிக்கையைப் பிரித்தால் இன்று இத்தனை பேர் இறந்தார்கள் என்று பார்க்கும் போதெல்லாம் மனம் துடி துடிக்கும். காலையிலேயே மனம் துவண்டு போய் விடும். சரித்திரத்தின் கொடுங்கோலனாக கருதப் படும் ஹிட்லர் கூட இத்தனை பேரை கொன்று குவித்திருக்க மாட்டார். இவ்வளவு கொடுமைகள் செய்திருக்க மாட்டார். சரித்திரத்தில் மட்டுமே படித்துள்ள இது போன்ற இனப் படுகொலைக்கு இன்று நாமே ஒரு சாட்சியாக உள்ளோமே என்பது ஒருவித குற்ற உணர்வை ஏற்படுத்தியது. தமிழன் என்பதனால் மட்டுமல்ல. எந்த ஒரு இனம் இப்படி அழிக்கப் பட்டாலும் மனசாட்சி உள்ள ஒரு மனிதனால் பொறுத்துக் கொள்ள முடியாது.

இன்றோ நாளையோ, ஒரு வேளை, விடுதலை புலிகள் முற்றிலும் அழிக்கப் பட்டாலும், பிரபாகரனே ஒரு வேளை கொல்லப்பட்டாலும், ஈழத்தில் சிங்களர்களால் உருவாக்கப் பட்டுள்ள ரணங்கள் ஆறாது. போரினால் சமாதானம் உருவாகியதாக சரித்திரங்கள் சொல்வதில்லை. மீண்டும் மீண்டும் புதிய விதைகள் முளைக்கும். இன்று ஈழத்தில் சிங்களர்கள் பற்ற வைத்துள்ள தீ ஒரு நாள் அவர்களையும் சுட்டெரிக்கும்.

மூன்றாவதாக நாம் வாழுமிடத்திற்கு மிக அருகே இவ்வாறு பூண்டோடு அழிக்கப் படும் தம் தொப்புள் கொடி உறவுகளை காப்பாற்ற முனையாமல் ஏதேனும் சாக்குப் போக்கு சொல்லித் திரியும் தமிழக அரசியல்வாதிகள். தமிழரை விட பதவியே பெரிது, தமிழரை விட ஒரு குடும்பத்தின் கண்ணசைவே பெரியது என்றெல்லாம் ஒற்றுமையில்லாமல் தம் இனத்தையே காட்டிக் கொடுக்கும் ----கள். (நீங்களே எப்படி வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளுங்கள்). பெயருக்கு கடையடைப்பு போராட்டங்களை நடத்தி வீட்டு தமது சொந்த தொலைக்காட்சிகளில் சிறப்பு திரைப் படங்களை நிரப்பும் ----கள். இது பற்றி நமது வால்பையன் கூட ஒரு பதிவினை இட்டிருந்தார்.

நான்காவதாக பிரியங்கா செய்த ஒரு காமெடி. அமேதி தொகுதியில் பெருவாரியாக வந்து வாக்களிக்க வேண்டுமென்று மக்களை தான் கோரியிருந்த போதிலும் குறைவான அளவே மக்கள் வாக்களித்தது தன்னை இரண்டு நாட்கள் தூங்க விடாமல் செய்தது என்று பேட்டியளித்திருந்தார். பதவி கிடைத்தவுடன் தங்கள் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடும் அரசியல்வாதிகள் மக்கள் மட்டும் மாறாமல் தமக்கே வாக்களிக்க வேண்டுமென்று அதுவும் அலை அலையாக வந்து வாக்களிக்க வேண்டுமென்று விரும்புவது வேடிக்கையாக இருக்கிறது அல்லவா?

இந்தியா சுதந்திரம் அடைந்தற்கு எத்தனையோ மகா புருஷர்கள் காரணம் என்றாலும் சுதந்திரத்திற்காக எத்தனையோ தியாகிகள் தங்கள் உயிர் உடமை அனைத்தையும் இழந்தனர் என்றாலும் அத்தனைப் பெருமையும் சுமக்க முடியாமல் தனியாக சுமந்து கொண்டு கஷ்டப் படும் இந்த நேரு-காந்தி குடும்பம்தான் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து மிகப் பெரும்பாலான காலம் ஆட்சியில் (முன்னாலிருந்தோ அல்லது பின்னாலிருந்தோ) இருந்திருக்கிறது. அப்படி இருக்கும் போது, இந்தியாவின் அறுபது ஆண்டு கால அவல நிலைக்கு யார் காரணம்? யார் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்? நிலைமை இப்படி இருக்க இந்திய மக்கள் என்றென்றும் தங்களுக்கு கடமைப் பட்டிருக்க வேண்டும் என்று நினைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

ஐந்தாவதாக தனிப்பட்ட முறையிலான மிகவும் வேடிக்கையான ஒரு அனுபவம். என்னை ஏமாற்ற முயன்று இறுதியில் தானே ஏமாந்து போனவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஒரு வாழ்க்கைப் பாடம். பகிர்ந்து கொள்ள விரும்பும் சில கருத்துக்கள்.

" சிலரை சில நாட்கள் ஏமாற்றலாம் பலரை பலநாட்கள் ஏமாற்றலாம். ஆனால் எல்லாரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.

பொய் சில தற்காலிக வெற்றிகளை கொடுக்கும். ஆனால் முடிவில் பெரும் தோல்வியை கொடுக்கும்.

உண்மையில் உண்மையாக இருப்பதே எளிதான ஒன்று. பொய்யாக வாழ்வது மிகவும் கடிமான ஒன்று.

பொய் முகம் நிறைய முகமூடிகளை அணிய வேண்டியிருக்கும். உண்மைக்கு ஒரிஜினல் முகமே போதுமானது.

எனவே எளிதான நிறைவான வாழ்விற்கு தேர்ந்தெடுப்போம் உண்மையை"

நன்றி.

8 comments:

பொதுஜனம் said...

பிரியங்காவின் கவலை ராகுலுக்கு நிறைய ஒட்டு விழ வில்லையோ என்பது பற்றித்தான்.ராகுல் "இப்போதைக்கு எனக்கு பிரதமர் பதவி வேண்டம் " என்கிறார். ஏதோ அது அவர் குடும்பத்திற்கு தாரை வார்த்து கொடுத்தது போல. என்ன ஜன நாயகமோ ?. யோசித்து பார்த்தால் அமரிக்க ஜன நாயக முறை தான் சரி என தோன்றுகிறது.உண்மையில் ராஜீவ் மரணம் தான் அனுதாப அலையை உருவாக்கி மீண்டும் இவர்கள் குடும்பத்திற்கு நாடாளும் வாய்பை பெற்று தந்தது.மக்கள் தொடர்ந்து ஏமாறு கிறார்களோ என என்ன தோன்றுகிறது.

Maximum India said...

நன்றி பொதுஜனம்!

//பிரியங்காவின் கவலை ராகுலுக்கு நிறைய ஒட்டு விழ வில்லையோ என்பது பற்றித்தான்.//

உண்மைதான் பொதுஜனம். இத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கிறேன் என்று இவர் ராகுலிடம் வாக்கு கொடுத்திருக்கிறாராம். அதே போல இந்தியாவில் இருந்து ஏழ்மையை அகற்றி காட்டுகிறேன் என்று இவரது மூதாதையர் மக்களிடம் வாக்கு கொடுத்ததெல்லாம் என்ன ஆயிற்று? அதற்காகவெல்லாம் இவர் தூக்கம் பறி போகாதா?

//ராகுல் "இப்போதைக்கு எனக்கு பிரதமர் பதவி வேண்டம் " என்கிறார். ஏதோ அது அவர் குடும்பத்திற்கு தாரை வார்த்து கொடுத்தது போல. //

பிரதமர் பதவிக்கு அதிகம் பொருத்தமானவர் ராகுலா அல்லது பிரியங்காவா என்று ஆங்கில செய்தி தொ(ல்) லைக்காட்சிகளில் விவாதங்கள் நடத்தப் படுவது வெறுப்பையே வரவழைக்கிறது. யார் கொடுத்தது இந்த அதிகாரம்?

//என்ன ஜன நாயகமோ ?. யோசித்து பார்த்தால் அமரிக்க ஜன நாயக முறை தான் சரி என தோன்றுகிறது.//

அங்கும் கூட ஓரளவுக்கு குடும்ப செல்வாக்கு பதவிக்கு வர உதவுகிறது என்றாலும் இந்தியா போல கிடையாது. ஜார்ஜ் வாஷிங்டன் குடும்பத்தினர் யாரும் அரசியலில் இருப்பது போல தெரிய வில்லை. இந்தியாவில் கூட காந்தியின் உண்மையான வாரிசுகள் அரசியலில் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை. ஒருவேளை இந்தியாவிலும் குடும்ப அரசியல் இல்லாமல் இருந்திருந்தால் அமெரிக்கா போல இந்திய ஜனநாயகமும் முதிர்ச்சி பெற்றிருக்குமோ என்னவோ?

//உண்மையில் ராஜீவ் மரணம் தான் அனுதாப அலையை உருவாக்கி மீண்டும் இவர்கள் குடும்பத்திற்கு நாடாளும் வாய்பை பெற்று தந்தது.//

ராஜீவ் மரணம் சரித்திரத் தவறு. அவர் மரணமடைவதற்கு முன்னர் வாக்கு பதிவு நடைபெற்ற தொகுதிகளில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத் தக்கது. ஒருவேளை அந்த தேர்தல் முடியும் வரை அவர் உயிரோடு இருந்திருந்தால் மீண்டுமொருமுறை படுதோல்வி அடைந்து அரசியலை விட்டே இந்த குடும்பம் விலக ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

//மக்கள் தொடர்ந்து ஏமாறுகிறார்களோ என என்ன தோன்றுகிறது.//

இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். "ஹீரோ வழிபாடு" இந்தியாவில் மிகவும் அதிகம். அரசியல்வாதிகளுக்காகவும், நடிகர்களுக்காகவும், கிரிக்கெட் வீரர்களுக்காகவும் கவலைப் படுவதில் கொஞ்சம் கவலையை தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் பட்டால் போதுமானது. இந்தியா எவ்வளவோ முன்னேறி இருக்கும்.

வால்பையன் said...

சோகமான விடயம் தான்!
கூண்டில் அடைபட்டிருக்கும் விலங்குகளுக்கு எலும்பு துண்டைபோல் வீசியெறிகிறார்கள்!

நம் மக்கள் கூண்டில் அடைபட்டுள்ளோம் என தெரியாமல் அதை பொறுக்குவது மேலும் சோகம்!

KARTHIK said...

பாக்ல இருந்து பங்களாதேஷ் எப்படி ஒரு தனிநாடா பிரிச்சுக்குடுத்தாங்க இந்தரா.அன்னைக்கு அப்படி நடக்கலைனா இன்னைக்கு என்னாகுரது.அப்படி ஒரு அரசியல் அறிவு இன்னைக்கு அந்தக்குடும்பத்துல யாருக்கும் இருக்கமாதிரி தெரியல.

மீண்டும் நம்ம பொதுஜனம் பின்னூட்டம்.சந்தோசம்.

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

கருத்துரைக்கு நன்றி

//சோகமான விடயம் தான்!
கூண்டில் அடைபட்டிருக்கும் விலங்குகளுக்கு எலும்பு துண்டைபோல் வீசியெறிகிறார்கள்!

நம் மக்கள் கூண்டில் அடைபட்டுள்ளோம் என தெரியாமல் அதை பொறுக்குவது மேலும் சோகம்!//

ஒரு காலத்தில் பார் ஆண்ட இனம் இது. அன்று இமய மலை முதல் கடல் தாண்டி கடாரம் வரை வீர நடை போட்ட பரம்பரை இது. மானம் போயின் உயிர் வாழா கவரி மான் கூட்டம் இது. இன்று கையேந்தி மாற்றான் முன் நிற்கையில் உள்ளே உயிர் உருகிப் போகிறது.

ஒரு காலத்தில் வீழ்ந்தாலும் இன்று பார் போற்ற வாழும் ஜெர்மனியர் போல, ஜப்பானியர் போல நம் மக்களும் மீண்டு வருவார்கள். மீண்டும் வெற்றி நடை போடுவார்கள் என்று நம்புவோம்.

நாளை நமதாக இருக்கட்டும்.

நன்றி.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//பாக்ல இருந்து பங்களாதேஷ் எப்படி ஒரு தனிநாடா பிரிச்சுக்குடுத்தாங்க இந்தரா.அன்னைக்கு அப்படி நடக்கலைனா இன்னைக்கு என்னாகுரது.அப்படி ஒரு அரசியல் அறிவு இன்னைக்கு அந்தக்குடும்பத்துல யாருக்கும் இருக்கமாதிரி தெரியல.//

இலங்கை போல உலகில் எந்த ஒரு நாடும் தன நாட்டு மக்களின் மீதே குண்டு வீச்சு நடத்தியதில்லை. அப்படி நடத்துவதில் இருந்தே இலங்கை என்பது ஒரு நாடு அல்ல இரண்டு நாடுகள்தான் என்பது நிரூபணம் ஆகிறது அல்லவா?

எங்கேயோ இருக்கும் பாலஸ்தீனியத்திற்கு குரல் கொடுக்கும் நம்மூர் அரசியல்வாதிகள் நம் காலடியில் கிடக்கும் இலங்கைப் பிரச்சினையில் ஏன் தலையிட மறுக்கிறார்கள்.

//மீண்டும் நம்ம பொதுஜனம் பின்னூட்டம்.சந்தோசம்.//

எனக்கும் கூட.

நன்றி.

Naresh Kumar said...

ராகுல், பதவிக்கு தகுதியானவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவர் நேரு குடும்பத்தில் பிறந்தார் என்பதை விட என்ன பெரிய தகுதியை வேண்டும். இந்தியாவுல பிரதமராவுனும்னா, நேரு குடும்பத்துல பொறந்திருந்தாவோ இல்லை பாபர் மசூதியை இடிக்கிறவங்களாவோ இருந்தா போதும்....

5 வருஷமா எங்க இருந்தாங்கன்னு தெரியாத பிரியங்கா திடீர்னு வந்து ராகுலுக்கு ஓட்டு போடுங்கோன்னு கூவுனா எல்லாரும் அவருக்கு ஓட்டு போடனுமாம்? அட போங்கப்பா!!!

இதுல இந்த பத்திரிக்கைகாரனுங்க தொந்தரவு தாங்க முடியலை!!! ஒரு நாளூ பிரியங்கா இந்திரா காந்தியோட புடவையை கட்டிட்டு வந்துட்டாங்களாம், உடனே கட்டம் கட்டிட்டானுங்க!!! அங்க அவனவன் செத்துட்டிருக்கான், அதைப் பத்தி ஒரு பேச்சையும் காணம்,இங்க புடவையைப் பத்தி கவர் ஸ்டோரி காமிக்குறானுங்க.

தாஜ் ஹோட்டல் தீவிரத் தாக்குதல் முடிந்து மீண்டும் திறக்கப்பட்டபோது, அதற்கு எல்ல பத்திரிக்கைகளீலும் விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. தவிர நீங்கள் சொன்னது போல் சில வரிகள் அந்த ஹோட்டலிலேயே வைக்கப்பட்டிருந்ததாக இந்தியா டுடெயில் போட்டிருந்தார்கள்!!! முன்பைப் போலவே வெளிநாட்டு பயணிகள் வருவது மகிழ்ச்சியே!!

நரேஷ்
www.nareshin.wordpress.com

Maximum India said...

கருத்துரைக்கு நன்றி நரேஷ்!

விரிவான பதில் விரைவில்.

நன்றி !

Blog Widget by LinkWithin