Monday, August 17, 2009

வெற்றி பெறும் பங்குகளை தேர்வு செய்வது எப்படி?


இன்றைக்கு பலருக்கும் பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் பங்கு சந்தை பலருக்கும் என்றைக்கும் புதிரான புதிராகவே இருக்கிறது. அது எப்படி, ஒரு பங்கு சரியாக கீழே வருவதற்கு சில நாட்கள் முன்னர் மட்டுமே நாம் முதலீடு செய்கிறோம் என்ற கேள்வி கூட பலருக்கு எழும்புகிறது. எனக்கும் கூட அது போன்ற கேள்விகள் பல எழும்பியதுண்டு.

ஊடகங்களும் அதில் தோன்றும் நிபுணர்கள் என்று அழைக்கப் படுபவர்களும் தினந்தோறும் ஏதாவது ஒரு பங்கினை ஏதாவது ஒரு விலையில் வாங்க சொல்கிறார்கள். அவர்கள் பரிந்துரை செய்த பங்குகளின் வெற்றி சதவீதம் மிகக் குறைவாகவே உள்ளது. குறிப்பாக பங்கு வணிகத்தின் நம்பர் ஒன தொலைகாட்சியானது பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் இருபத்து ஒன்றாயிரம் இருக்கும் போது பல பங்குகளை பரிந்துரைத்ததையும் அதே சென்செக்ஸ் எட்டாயிரம் புள்ளிகள் இருக்கும் போது ஆறாயிரம் புள்ளிகள் வரை சரிய வாய்ப்புள்ளதாக பல முறை சொன்னதையும் யாரும் மறக்க முடியாது.

இந்தியாவின் வெற்றிகரமான முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அவர்களை ஒரு முறை நேரில் சந்தித்த போது, சில 'நல்ல' பங்குகளை பரிந்துரைக்கும் படி கேட்டுக் கொண்டேன். அப்போது அவர் தெரிவித்த கருத்து இது.

"எந்த ஒரு பங்கையும் என்னால் பரிந்துரைக்க முடியாது. காரணம் இன்று நான் பரிந்துரைக்கும் பங்கு நாளையே எனக்கு மோசமானதாக தோன்றலாம். அப்போது உங்களை நான் தேடிக் கண்டுபிடித்து இந்த பங்கை வாங்காதீர்கள் அல்லது வாங்கியிருந்தால் விற்று விடுங்கள் என்று சொல்ல முடியாது. எனவே ஒரு பங்கை வாங்குவது அவரவர் சொந்த பொறுப்பில்தான் இருக்க வேண்டும்"

அவர் கருத்து சிந்திக்கப் பட வேண்டியது.

ஒரு பங்கின் போக்கு ஒரு நாளில் மட்டுமே நிர்ணயிக்கப் படுவதில்லை.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் அந்த பங்கினை, பங்கு வர்த்தகமாகும் சந்தையினை, பங்கின் நிறுவனத்தை அல்லது பங்கு நிறுவனத்தின் துறையை பாதிக்கும் எவ்வளவோ விஷயங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இன்றைய வெற்றியாளர் நாளைய தோல்வியாளர் ஆகி விடுகிறார். இன்றைய தோல்வியாளர் நாளைய வெற்றியாளர் ஆகி விடுகிறார். இது பங்கு நிறுவனம் மற்றும் அது சார்ந்துள்ள துறைகளுக்கும் கூட பொருந்தும்.

எனவே ஒரு பங்கினை பரிந்துரைப்பவர் அந்த தருணத்தில் உள்ள நிகழ்வுகளின் அடிப்படையில் மட்டுமே பரிந்துரைக்கிறார் என்பதையும் ஒவ்வொரு நிமிடமும் மாறக் கூடிய சந்தை நிகழ்வுகள் அவருடைய பரிந்துரையை அடுத்த நிமிடமே கூட தவறாக்கி விடலாம் என்பதையும் நினைவு கூறுதல் அவசியம்

எனவே, ஒருவரது பரிந்துரையை, அவர் எப்படிப் பட்ட சந்தை நிபுணராக இருந்தாலும் கூட கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வது தவறு என்பது என் கருத்து. அப்படி ஏற்றுக் கொண்டாலும் அந்த பங்கின் போக்கை தொடர்ந்து கவனித்துக் கொண்டு வருவது உங்கள் பொறுப்பு மட்டுமே.

எங்களுக்குத்தான் பங்கு சந்தை அனுபவம் இல்லையே? எங்களால் எப்படி பங்குகளை
தேர்வு செய்ய முடியும்? அல்லது பங்குகளை எப்படி தொடர முடியும் என்ற கேள்வி உங்களுக்குள் வரலாம்.

பங்கு சந்தைக்கென்று தனிப் படிப்போ அல்லது ஏராளமான அனுபவங்களோ தேவையில்லை. உண்மையில், நிறைய படித்தவர்களும், நிபுணர்கள் என்று அழைத்துக் கொள்பவர்களும்தான் திரும்ப திரும்ப பெரிய தவறுகளை செய்கிறார்கள்.
பள்ளிப் படிப்பு மட்டுமே பயின்றுள்ள பலர் இன்று வெற்றிகரமான முதலீட்டாளர்களாக உள்ளனர்.

பங்கு சந்தை முதலீடுகள் செய்வதற்கு ஒரு சராசரி அறிவுக் கூர்மை மட்டும் இருந்தால் போதுமானது. அதே சமயம் அதிக உணர்ச்சி வசப் படாதவராக இருப்பது மட்டும் அவசியம்.

உங்களுக்கு வெற்றிகரமான பங்கினை தேர்வு செய்யும் ஆர்வம் இருக்கின்றதா?

எனக்கு நிறையவே இருக்கிறது.

வெற்றிகரமான பங்கினை தேர்வு செய்வது வெறுமனே பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே அல்ல.

அது ஒருவரது புத்திகூர்மையின் வெளிப்பாடு. தாக்குப் பிடிக்கும் தன்மையின் வெளிப்பாடு. உணர்ச்சிகளை கட்டுப் படுத்தும் ஒரு யோகியின் விளையாட்டு. ஒரு விளையாட்டு வீரரை போலவும் போர்களத்தில் உள்ளவர் போலவும் துரித கதியில் திரும்பி தாக்குபவரின் வேகம் உள்ள விளையாட்டு.

இன்று பலருக்கு சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் சரிவர வாய்ப்புக்கள் இல்லாமல் போனதனால், பிறருக்கு ஊழியம் பார்த்துக் கொண்டிருக்கும் கட்டாயம் ஏற்படுகிறது.

இங்கேயோ, உங்கள் திறமை உங்கள் வெற்றி. உங்கள் வெற்றி உங்கள் லாபம். உங்கள் சந்தோஷம்.

அதே சமயம் உங்களுடைய அன்றாட (இதர) அலுவல்கள் எதுவும் பாதிக்கமாலும் பார்த்துக் கொள்ள முடியும்.

பங்கு சந்தை ஒவ்வொரு நாளும் மாறுகிறதே? நிலையாக இல்லையே? எப்படி முதலீடு செய்வது என்கிறீர்களா?

நிலையான எந்த விஷயத்திலும் ஈடுபாடு கொள்ள முடியாது. நிமிடத்திற்கு நிமிடம் மாறுவதுதான் வாழ்க்கை. அதுதான் ஒருவித எதிர்பார்ப்புக்களை உருவாக்கி வாழ்வின் ருசியை அதிகப் படுத்தும்.

பங்கு சந்தை முதலீடுகள் ஆபத்தானவை. சொத்தையே காலி செய்து விடும் என்பார்கள் சிலர். எதில்தான் ஆபத்தில்லை? நஷ்டமில்லாத தொழில் எது? அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி பங்கு சந்தைக்கு அதிகமாகவே பொருந்தும்.

பங்கை பரிந்துரைப்பதை விட பங்குகளை தேர்வு செய்யும் முறையை அறிமுகப் படுத்துவது சிறந்த சேவையாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

இந்த தேடல் சற்று நீளமானது. எனவே சில தொடர் பதிவுகள் உண்டு. பொறுத்துக் கொள்ளுங்கள்.

இந்த அறிவுத் தேடலில் உங்களுடனான பயணம் எனக்கும் பேருதவியாக இருக்கும் என்றும் நம்புகின்றேன்.

இந்த பயணத்தில் என்னுடன் வழிநடக்க உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.

பயணம் தொடரும்!

31 comments:

வால்பையன் said...

நல்ல கட்டுரை!
நிச்சயமாக பலருக்கு பயனளிக்கும்!

குறும்பன் said...

//இந்த தேடல் சற்று நீளமானது. எனவே சில தொடர் பதிவுகள் உண்டு. பொறுத்துக் கொள்ளுங்கள்.

இந்த அறிவுத் தேடலில் உங்களுடனான பயணம் எனக்கும் பேருதவியாக இருக்கும் என்றும் நம்புகின்றேன்.

இந்த பயணத்தில் என்னுடன் வழிநடக்க உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.

பயணம் தொடரும்!//

உங்களுடன் பயணப்பட ஆயத்தமாக உள்ளோம்.

அகில் பூங்குன்றன் said...

நாங்க ரெடி .......

கௌதமன் said...

ஆஹா - இது போன்ற கட்டுரைகளுக்குத் தான் நான் காத்திருக்கிறேன்.
வாழ்த்தி வரவேற்கிறேன்.
kggouthaman

Unknown said...

good post.. keep it up..

Btc Guider said...

/எனவே ஒரு பங்கினை பரிந்துரைப்பவர் அந்த தருணத்தில் உள்ள நிகழ்வுகளின் அடிப்படையில் மட்டுமே பரிந்துரைக்கிறார் என்பதையும் ஒவ்வொரு நிமிடமும் மாறக் கூடிய சந்தை நிகழ்வுகள் அவருடைய பரிந்துரையை அடுத்த நிமிடமே கூட தவறாக்கி விடலாம் என்பதையும் நினைவு கூறுதல் அவசியம்//
//எனவே, ஒருவரது பரிந்துரையை, அவர் எப்படிப் பட்ட சந்தை நிபுணராக இருந்தாலும் கூட கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வது தவறு என்பது என் கருத்து. அப்படி ஏற்றுக் கொண்டாலும் அந்த பங்கின் போக்கை தொடர்ந்து கவனித்துக் கொண்டு வருவது உங்கள் பொறுப்பு மட்டுமே.//
மிகச் சிறந்த கருத்துக்கள்.
//பங்கை பரிந்துரைப்பதை விட பங்குகளை தேர்வு செய்யும் முறையை அறிமுகப் படுத்துவது சிறந்த சேவையாக இருக்கும் என்று நம்புகின்றேன். //
பங்குகளை தேர்வு செய்யும் முறையை அறிமுகப் படுத்துவது என்பது மிகக் கடினமான ஓன்று என்பது என் கருத்தது.இந்த சேவையை செய்ய தங்களால் முடியும்.(மேலும் உங்களின் ஒவ்வொரு பதிவும் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே இருக்கிறது.மேலும் மேலும் இந்த பணியை தொடர வேண்டுகிறேன்.)

யூர்கன் க்ருகியர் said...

அருமையான கட்டுரை. நன்றி

Mouthayen Mathivoli said...

"இன்றைக்கு பலருக்கும் பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் பங்கு சந்தை பலருக்கும் என்றைக்கும் புதிரான புதிராகவே இருக்கிறது".
-நானும் இதே ரகம்தான். உங்களுடன் பயணம் செய்ய ஆவலாய் உள்ளேன். முத்தையன் மதிவொளி, சிங்கப்பூர்

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும்
வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்

Soma said...

Your articles are simple and easy to understand... looking forward to learn from you on picking stocks.

Thanks for sharing your knowledge.

Thomas Ruban said...

//இந்த தேடல் சற்று நீளமானது. எனவே சில தொடர் பதிவுகள் உண்டு. பொறுத்துக் கொள்ளுங்கள்.//

நல்லது நடக்கும் என்றால் காத்து கொண்டுடிருப்பதில் தவ்று எதுவும் இல்லை. தொடர் பதிவுகளுக்கு காத்துக்கொண்டிருக்கிறோம்.

//பங்கு சந்தை முதலீடுகள் ஆபத்தானவை. சொத்தையே காலி செய்து விடும் என்பார்கள் சிலர். எதில்தான் ஆபத்தில்லை? நஷ்டமில்லாத தொழில் எது? அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி பங்கு சந்தைக்கு அதிகமாகவே பொருந்தும்.//

உண்மைத்தான் சார்(பேரசைக்கூடது)

//பங்கை பரிந்துரைப்பதை விட பங்குகளை தேர்வு செய்யும் முறையை அறிமுகப் படுத்துவது சிறந்த சேவையாக இருக்கும் என்று நம்புகின்றேன்.//

இது சூப்பர்.....(கிரேட் எஸ்கேப்!)

//பங்கு சந்தை முதலீடுகள் செய்வதற்கு ஒரு சராசரி அறிவுக் கூர்மை மட்டும் இருந்தால் போதுமானது. அதே சமயம் அதிக உணர்ச்சி வசப் படாதவராக இருப்பது மட்டும் அவசியம்.//

பங்கு சந்தை முதலீடுகள் செய்வதற்கு 99%அதிர்ஷ்டமும் 1% திறமையும் இருந்தால்(லாபம் பார்க்க) போதும்.

99%திறமை இருந்தும் 1% அதிர்ஷ்டம்
இல்லாவிட்டால் லாபம் சம்பாதிக்க முடியாது.

பொறுமை மிகமிக அவசியம்.

பதிவை நீங்கள் நன்றாக அனுபவித்து எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்.

இதில் உங்கள் மனம் புண்படும்படி(அதிகபிரசங்கித்தனமாக) இருந்தால் மன்னிக்கவும்.

பதிவுக்கு நன்றி.

Maximum India said...

நன்றி வால்பையன்!

நன்றி குறும்பன்!

Maximum India said...

நன்றி அகில் பூங்குன்றன்!

நன்றி கௌதமன்!

Maximum India said...

நன்றி அருள்!

Maximum India said...

நன்றி ரஹ்மான்!

//பங்குகளை தேர்வு செய்யும் முறையை அறிமுகப் படுத்துவது என்பது மிகக் கடினமான ஓன்று என்பது என் கருத்தது.//

உண்மைதான் ரஹ்மான்! நானும் ஒப்புக் கொள்கிறேன்.

அதே சமயம் என்னால் ஆனதை முயற்சிக்கிறேன். எனக்கும் கூட இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

Maximum India said...

நன்றி யூர்கன் க்ருகியர்!

Maximum India said...

நன்றி முத்தையன்!

//நானும் இதே ரகம்தான். உங்களுடன் பயணம் செய்ய ஆவலாய் உள்ளேன். //

உங்கள் வரவு நல்வரவாகுக!

நன்றி!

Maximum India said...

தகவலுக்கு நன்றி ராம்!

Maximum India said...

நன்றி சோமா!

MCX Gold Silver said...

//வெற்றிகரமான பங்கினை தேர்வு செய்வது வெறுமனே பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே அல்ல.

அது ஒருவரது புத்திகூர்மையின் வெளிப்பாடு. தாக்குப் பிடிக்கும் தன்மையின் வெளிப்பாடு. உணர்ச்சிகளை கட்டுப் படுத்தும் ஒரு யோகியின் விளையாட்டு. ஒரு விளையாட்டு வீரரை போலவும் போர்களத்தில் உள்ளவர் போலவும் துரித கதியில் திரும்பி தாக்குபவரின் வேகம் உள்ள விளையாட்டு.//
மேற்கூறிய நான்கு விஷயங்களிலும் ஒருவர் தேற்சிபெறும் பொழுது அவர் சந்தையின் வெற்றிகரமான முதலீட்டாலராகவோ,வணிகராகவோ இருக்கலாம்.

உங்களுடன் பயணப்பட ஆயத்தமாக உள்ளோம்.


நன்றி

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//இது சூப்பர்.....(கிரேட் எஸ்கேப்!)//

நிச்சயமாக இல்லை. ஏதோ சில அல்லது பல பங்குகளை ஒரு இழப்பு நிறுத்தத்துடன் பரிந்துரைக்க என்னால் முடியும். (இதைத்தானே இன்றைக்கு பலரும் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் தினந்தோறும் செய்து வருகிறார்கள்) பங்கு சந்தையில் ஓரளவுக்கு அனுபவம் உள்ள எனக்கு இது எளிதான காரியமே!

ஒரு காலத்தில் என் நண்பர்களுக்கு நான் பரிந்துரைத்த பங்குகள் ஏராளம். ஆனால் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அவர்களின் கருத்தும் சென்ற ஆண்டு கண்ட மேனிக்கு சந்தைகள் வீழ்ச்சி அடைந்ததும் எனது சொந்த கருத்தை மாற்றி விட்டன.

நான் பரிந்துரைத்த பல பங்குகளில் என்னுடைய சொந்த முதலீடு குறைவாகவே இருக்க அல்லது விழும் முன்னர் விற்று விட, எனது நண்பர்கள் பெரிய அளவில் முதலீடு செய்து விற்காமலும் விட்டு விட்டனர். ஒரு சிலருக்கு நான் எச்சரிக்கை விடுத்தும் கூட உபயோகம் இல்லாமல் போய் விட்டது.

//பங்கு சந்தை முதலீடுகள் செய்வதற்கு 99%அதிர்ஷ்டமும் 1% திறமையும் இருந்தால்(லாபம் பார்க்க) போதும்.

99%திறமை இருந்தும் 1% அதிர்ஷ்டம்
இல்லாவிட்டால் லாபம் சம்பாதிக்க முடியாது.//

இது கூட மேலோட்டமான ஒரு கருத்துத்தான்.

அதிர்ஷ்டம் என்பது என்ன? வாய்ப்பு வரும் போது அதை சரியாக பயன் படுத்திக் கொள்ளக் கூடிய அளவுக்கு திறமைகளை வளர்த்துக் கொள்வதுதான்.

சந்தை நாள் தோறும் ஏராளமான வாய்ப்புக்களை அள்ளி வழங்குகிறது. சரியாக உபயோகிக்க வேண்டியது நம் பொறுப்புத்தான்.

சில நேரங்களில் நாம் எதிர்பாரா நிகழ்வுகள் நடந்து விடலாம். ஆனால் எந்த நிகழ்வுக்கும் தயாராக இருப்பதும் நம் பொறுப்புத்தான்.

//பதிவை நீங்கள் நன்றாக அனுபவித்து எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்.//

சரியாக யூகித்துள்ளீர்கள். அதிகம் யோசிக்காமல் மனதில் தோன்றியபடி எழுதிய பதிவு இது. எழுத்துப் பிழை திருத்தங்கள் கூட அதிகம் செய்ய வில்லை.

//இதில் உங்கள் மனம் புண்படும்படி(அதிகபிரசங்கித்தனமாக) இருந்தால் மன்னிக்கவும். //

கண்டிப்பாக இல்லை. நீங்கள் ஒரு அருமையான தோழர் என்பதை நான் நன்கறிவேன்.

இந்த தொடர் பதிவு ஒரு முயற்சி மட்டுமே.

முயற்சிக்காமல் வெற்றி காண்பதை விட முயற்சித்து தோல்வி பெறுவதை பெருமையாக நினைப்பவன் நான்.

நன்றி.

Maximum India said...

நன்றி ட்!

//மேற்கூறிய நான்கு விஷயங்களிலும் ஒருவர் தேற்சிபெறும் பொழுது அவர் சந்தையின் வெற்றிகரமான முதலீட்டாலராகவோ,வணிகராகவோ இருக்கலாம்.//

உண்மைதான் DG

//உங்களுடன் பயணப்பட ஆயத்தமாக உள்ளோம்.//

நன்றி DG!

MCX Gold Silver said...

பங்குசந்தைக்கு அதிஷ்டம் தேவையில்லை என்பது
என் தாழ்மையான கருத்து


பங்குசந்தைகு=99%maths


நன்றி

Thomas Ruban said...

//நீங்கள் ஒரு அருமையான தோழர் என்பதை நான் நன்கறிவேன்.//

நன்றிகள் பலபல......

//முயற்சிக்காமல் வெற்றி காண்பதை விட முயற்சித்து தோல்வி பெறுவதை பெருமையாக நினைப்பவன் நான்.//

உங்கள் கருத்துக்கு தலைவணங்கிறேன்.

மீண்டும் ஒருமுறை நன்றி..நன்றி.

Maximum India said...

//பங்குசந்தைக்கு அதிஷ்டம் தேவையில்லை என்பது
என் தாழ்மையான கருத்து

பங்குசந்தைகு=99%maths//

நன்றி DG!

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

buruhani said...

நல்ல பதிவு எந்த பங்கை வாங்கலாம் என்று சொன்னால் நல்லா இருக்கும்

Maximum India said...

//நல்ல பதிவு எந்த பங்கை வாங்கலாம் என்று சொன்னால் நல்லா இருக்கும்//

நிச்சயமாக.

இந்த தொடர் பதிவு பங்குகள் வாங்குவதற்கான சில குறிப்புகளையும் கொண்டிருக்கும்.

நன்றி buruhani!

Naresh Kumar said...

அருமையான கட்டுரை...

தமிழில் கதை கவிதை என்று பல விஷயங்களில் நாம் எல்லைகளைத் தொட்டாலும், நிர்வாகம், பொருளாதாரம், தொழில் நுட்பம் என்று பல விஷயங்களில் பதிவுகளும் கண்டெட்டும் அதிகமாவது அவசியமாகிறது...

உங்களது பல பதிவுகள் பொருளாதாரம் சம்பந்தப்பட்டதில் அந்தக் குறையைத் தீர்த்து வைக்கின்றன...

பயணத்திற்கு நாங்க ரெடி!!!

நரேஷ்
www.nareshin.wordpress.com

Maximum India said...

நன்றி நரேஷ்!

//தமிழில் கதை கவிதை என்று பல விஷயங்களில் நாம் எல்லைகளைத் தொட்டாலும், நிர்வாகம், பொருளாதாரம், தொழில் நுட்பம் என்று பல விஷயங்களில் பதிவுகளும் கண்டெட்டும் அதிகமாவது அவசியமாகிறது...//

நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டபடி தமிழை ஒரு இலக்கிய மொழியாக மற்றும் வைத்துக் கொண்டிருக்காமல் வணிக மொழியாகவும், சட்ட மொழியாகவும், தொழிற்நுட்ப மொழியாகவும், அறிவியல் மொழியாகவும் அடுத்த பரிமாணத்திற்கு எடுத்து செல்வது நம் போன்றவர்களின் கடமையாகும்.

இந்த கடமையை செவ்வனே நிறைவேற்றுவதுதான் தமிழுக்கும் தமிழருக்குமான நமது மிகப் பெரிய சேவையாக இருக்க முடியும்.

//உங்களது பல பதிவுகள் பொருளாதாரம் சம்பந்தப்பட்டதில் அந்தக் குறையைத் தீர்த்து வைக்கின்றன...//

ஏதோ ஒரு அணிலின் சேவை இது.

//பயணத்திற்கு நாங்க ரெடி!!!//

உங்கள் பின்னூட்டம் பெரிய அளவில் உற்சாகத்தைக் கொடுக்கின்றது. இந்த பயணத்தின் வெற்றி உங்களைப் போன்ற வழித்துணைவர்களின் கையில்தான் உள்ளது.

நன்றி

Unknown said...

tank u

Blog Widget by LinkWithin