Monday, August 10, 2009

NHPC நிறுவன பங்கு வெளியீடு (IPO) - முதலீடு செய்யலாமா?


வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அரசு நிறுவனத்தின் அதுவும் ஒரு மினி-ரத்னா தகுதி கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் புதிதாக வெளியிடப் பட உள்ளன. இந்த நிறுவனத்தைப் பற்றியும் ]பங்கின் விலை நிர்ணயம் பற்றியும் சில தகவல்கள் பகிர்தலுக்காக இங்கே.

NHPC அதாவது தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு நாட்டின் நீர்சக்தியை திறம்பட உபயோகிப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது. இந்த நிறுவனம் இது வரை 13 மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து சுமார் 5100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் பெற்றுள்ளது.

தற்போது 11 மின் உற்பத்தி நிலையங்களை புதிதாக அமைத்து வருவதன் மூலம் இந்த நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 4600 மெகாவாட் அளவுக்கு கூடுதலாக மின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது.

இந்த பதினொரு மின் நிலையங்களில் ஏழு நிலையங்களின் மூலம் மட்டும் சுமார் 3240 மெகாவாட் அளவுக்கான மின்சாரம் பெப்ரவரி 2011 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் இப்போது சுமார் 168 கோடி பங்குகளை ஏலக்கணக்கில் (BOOK BUILDING) சந்தையில் வெளியிடுகிறது. இவற்றில் சுமார் 112 கோடி பங்குகள் மேற்சொன்ன ஏழு மின் நிலையங்களை அமைத்ததற்காக திரட்டப் படும் புதிய பங்குகள் (FRESH ISSUE) ஆகும். மீதமுள்ள பங்குகள் மத்திய அரசு தன் சொந்த கணக்கில் இருந்து விற்பனை (OFFER FOR SALE) செய்வதாகும்.

பங்குகளின் விலை அளவு ரூ.30-36 என்ற தொடர் கணக்கில் (BOOK BUILDING PRICE BAND) கூறப் பட்டுள்ளது. (இந்த வெளியீடு ஏற்கனவே பல மடங்கு அளவில் இதன் அதிக பட்ச விலையான 36 இல ஏலம் (BID) கோரப் பட்டிருப்பதால், இந்த பங்கிற்கான விலை நிர்ணயம் 36 இல் அமையவே அதிக வாய்ப்புள்ளது. )

இந்த பங்கிற்கான தர நிர்ணயம் மூன்றின் கீழ் ஐந்து அதாவது சராசரி அடிப்படை அம்சங்கள் என இக்ரா (ICRA) தர நிர்ணய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்போது இந்த நிறுவனத்தின் சாதக பாதக அம்சங்களை பற்றி விவாதிப்போம்.

இந்த நிறுவனமானது, தான் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் பெரும்பகுதியை மாநில மின்வாரியங்களுக்கே (POWER PURCHASE AGREEMENT) அளித்து வருகிறது. அதிக விலை கிடைக்கக் கூடிய வெளி சந்தையில் பெரும்பகுதியை விற்பனை செய்யாதது ஒரு பாதக அம்சம்தான் என்றாலும், வெகுகாலத்திற்கு நிர்ணயம் செய்யப் பட்ட விலையிலேயே விற்பனை செய்வது நிறுவனத்திற்கு ஒரு 'ஏற்ற-இறக்கமில்லாத' வருவாய் பெற உதவியாக உள்ளது.

இந்த நிறுவனம் நீரையே முக்கிய மூலாதார பொருளாக கொண்டுள்ளது. மற்ற எரிபோருட்களுடன் ஒப்பிடும் போது, நீருக்கான செலவு மிகவும் குறைவுதான் என்றாலும் மழையற்ற காலங்களில் உற்பத்தி பாதிக்கப் படும் வாய்ப்புள்ளது. அதே சமயம், இந்த நிறுவனம் அதிக அளவில் வடநாட்டில் உள்ள பல்வேறு ஜீவ நதிகளில் அணை அமைத்து மின் உற்பத்தியில் ஈடுபடுவதால், பருவநிலை மாற்றங்கள் இந்த நிறுவனத்தின் வருவாயை அதிகம் பாதிக்காது என்று சொல்லப் படுகிறது.

இந்த நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக அமைந்திருந்ததால் இந்த நிறுவனத்திற்கு 'மினி ரத்னா' தரம் (MINI-RATNA STATUS) மத்திய அரசால் வழங்கப் பட்டிருக்கிறது. 'மினி ரத்னா' நிலையை பெற்றதன் மூலம், இந்த நிறுவனத்தால் அதிக சுதந்திரத்துடன் இயங்க முடியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த நிறுவனம் கடுமையான் புவியியல் மற்றும் பருவ சூழல்களிலும் கூட திறம் பட செயல் பட்டு பல்வேறு புதிய நிலையங்களை அமைத்து துறைரீதியான சிறப்பு மற்றும் தனிப்பட்ட திறன்களை பெற்று இருககிறது. இந்த சிறப்பு திறன்கள் வருங்காலத்தில் புதிய ஒப்பந்தங்களை அதிக அளவில் பெற உதவும் என்று நம்பலாம்.

இப்போது பங்கின் விலை பற்றி விவாதிப்போம்.

இதற்கு முன் வெளியிடப் பட்ட பெரும்பாலான அரசு நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு பெருத்த லாபத்தை சம்பாதித்து கொடுத்திருப்பதாலும் (ஏற்கனவே சொன்னபடி) வெகு நாட்களுக்கு பின்னர் வெளியிடப் படும் அரசு நிறுவனத்தின் பங்குகள் இவை என்பதாலும் சந்தையில் ஏகப் பட்ட கிராக்கி இருக்க வாய்ப்புக்கள் அதிகம். அதிக கிராக்கி என்றால் பங்கு சந்தையில் முதல் நாள் லிஸ்ட் ஆகும் போது நல்ல விலை போக வாய்ப்புண்டு.

அதே சமயம், இந்த பங்கு வெளியீட்டின் அளவு மிகப் பெரியது என்பதால் (கிட்டத்தட்ட ஆறாயிரம் கோடி ரூபாய்) இந்த பங்கிற்கான முதல் நாள் பிரிமியம் குறைந்து காணப் படவும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்கின் விலை சில மாதங்களுக்கு முன்னர் முப்பது ரூபாய்க்கும் கீழேயே நிர்ணயிக்கப் பட்டது என்றும் கிடுகிடுவென்று உயர்ந்த பங்கு சந்தையில், "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்" என்ற சந்தர்ப்ப வாத கொள்கையின் அடிப்படையிலேயே மத்திய அரசு அதிக விலை நிர்ணயித்துள்ளது என்றும் சந்தையில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

NTPC, ஜெபி ஹைட்ரோ போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, இந்த பங்கிற்கான விலை அளவு சற்று உயர்வாகவே அறியப் படுகிறது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் NTPC நிறுவனத்தின் விலை-வருவாய் விகிதம் (PRICE/EARNING RATIO) கிட்டத்தட்ட 20 மட்டுமே. இந்த நிறுவனத்தின் பங்கு வருவாய் (RETURN ON EQUITY) கிடடத்தட்ட 14 சதவீதம். அதே சமயம் NHPC நிறுவனத்தின் விலை-வருவாய் விகிதம் (மேல் விலையில்-UPPER BAND PRICE) முப்பதிற்கும் மேலே. பங்கு-வருவாய் கிட்டத்தட்ட ஆறரை சதவீதம் மட்டுமே. இது போலவே, ஜெபி ஹைட்ரோ நிறுவனத்துடன் ஒப்பிடுகையிலும் NHPC நிறுவன பங்கின் பெறும் மதிப்பெண் அளவு குறைவாகவே உள்ளது.

அதே சமயம், விலை-பங்கின் புத்தக மதிப்பு (PRICE/BOOK VALUE RATIO) என்ற வகையில் NHPC பங்கு மற்ற இரு நிறுவனங்களை விட அதிக மதிப்பெண் பெறுகிறது.

மொத்தத்தில் லிஸ்டிங் தேதி அன்று பெறக் கூடிய லாப அளவு அதிகமாக இருக்க வாய்ப்பு குறைவு என்றாலும் ஒரு பெரிய 'மினி ரத்னா' தரம் பெற்ற ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் முதலீடு செய்வது நீண்ட கால நோக்கில் ஓரளவுக்கு நல்ல வருவாயை பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்.

இந்த நிறுவனம் உபயோகிக்கும் மூலப் பொருள் நீர் மட்டுமே என்ற வகையில், உற்பத்தி செலவு மிகவும் குறைந்து காணப் பட வாய்ப்புள்ளது. மேலும், வருங்காலத்தில் அரசு முதலீடுகள் குறைந்து கடன் விகிதம் (DEBT EQUITY RATIO) அதிகரித்தால் பங்கு-வருவாய் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும் இந்தியாவைப் பொறுத்த வரை இன்னும் பல ஆண்டுகளுக்கு மின் தேவை குறையாமல் இருக்க வாய்ப்புக்கள் அதிகம். அதே போல மின் நிலையங்களை அதுவும் நீர்மின் நிலையங்களை உருவாக்குவதில் உள்ள காலத தேவை (GESTATION PERIOD) மற்றும் சிரமங்கள் (ENTRY BARRIERS), ஏற்கனவே இந்த திறன்களையும் அனுபவத்தையும் அதிக அளவில் பெற்றுள்ள NHPC நிறுவனத்திற்கு அதிக மதிப்பு சேர்க்க வாய்ப்புக்கள் உண்டு.

எனவே, நீண்ட கால நோக்கில் ஒரு குறைந்த பட்ச அதே சமயத்தில் அதிக ஏற்ற-இறக்கமில்லாத வருவாய் பெற விரும்புவோர் இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பது எனது தனிப் பட்ட கருத்து.

நன்றி.

டிஸ்கி:

இங்கு வெளியிடப் படும், பங்குகள், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.

பின் குறிப்பு

ஒரு நிறுவனத்தின் பங்கினை பற்றி தமிழில் ஆய்வு கட்டுரை எழுதுவது இதுவே முதன் முறையாகும். உங்களுடைய வரவேற்பை பொறுத்து மேலும் சில நிறுவனங்களைப் பற்றியும் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இந்த பதிவில் சரியாக விளக்கப் படாத பாகங்கள் ஏதேனும் இருந்தாலும் தயக்கமின்றி தெரிவிக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

29 comments:

அகில் பூங்குன்றன் said...

Super. I was looking some good technical article like this in tamil....

I am a regular reader of your blog.
your technical writings are very good and useful for people like me.

Please write more....

Can you please write about futures, options and fututes plus..

Thiyagarajan said...

Thanks for sharing the information. I read in newspapers that this IPO is already three times over subscribed. can you pls explain me On what basis the shares are allotted to the users.
Thanks.
Thiagarajan

Maximum India said...

நன்றி அகில் பூங்குன்றன்!

உங்களைப் போன்றோரின் வரவேற்பும் ஊக்குவிப்பும்தான் இது போன்ற பதிவுகளை உருவாக்கும் உற்சாகத்தை கொடுக்கிறது.

//Can you please write about futures, options and fututes plus..//

எனக்கும் கூட ஆவலாகத்தான் உள்ளது. தமிழில் சில வார்த்தைகளை தேடி வருகிறேன். ஒருவேளை சரியாக அமைந்தால் ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு உலகை அழிக்க வந்த பேரழிவு ஆயுதங்கள் என வர்ணிக்கப் படுகின்ற "Derivatives" பற்றி விளக்கமாக எழுதுவேன்.

நன்றி!

Maximum India said...

//Thanks for sharing the information. I read in newspapers that this IPO is already three times over subscribed. can you pls explain me On what basis the shares are allotted to the users.
Thanks. //

மன்னிக்கவும். பதிவிலேயே இதைப் பற்றி விளக்கி இருக்க வேண்டும்.

இங்கு விளக்க முனைகிறேன்!

மொத்த பங்கு வெளியீட்டில் சுமார் அறுபது சதவீதம் நிறுவனங்களுக்கும், சுமார் பத்து சதவீதம் நிறுவனமில்லாத விண்ணப்பங்களுக்கும் மீதம் உள்ள சுமார் நாற்பது சதவீதம் நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்களுக்கும் வழங்கப் படும்.

இதில் பெரும்பாலான பங்கிற்கான விண்ணப்பங்கள் முதல் இரண்டு வகையிலேயே பெறப் படும்.

சிறு முதலீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் இது போன்ற ஒரு பெரிய வெளியீட்டில், (வெளியீட்டின் மொத்த அளவோடு ஒப்பிடும் போது) சற்று குறைவாகவே காணப் படும். இந்த வெளியீட்டில் இதுவரை ஐம்பது சதவீதத்திற்கும் குறைவான அளவே சிறு முதலீட்டாளர் கணக்கில் விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன.

அதே சமயம் பெரும்பாலான விண்ணப்பங்கள் கடைசி நாளன்றுதான் பெறப் படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி தியாகராஜன்!

MCX Gold Silver said...

தொடர்ந்து இதே போல்
கட்டுரையை எதிர்பர்கிறேன்.தகவலுக்கு நன்றி சார்

Maximum India said...

நன்றி DG!

வால்பையன் said...

எனக்கு ஒரு சந்தேகம்!

அமெரிக்காவில் போக்குவரத்துதுறை தனியார்மயம் ஆனப்பிறகு ரயில்களும்,பேருந்துகளும் குறைந்(த்)து நான்கு சக்கர வாகனங்கள் விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது!

நடுத்தரவர்கத்தினரும் வேறு வழியில்லாமல் கார் வாங்கி ஐம்பது வருடத்தில் குடும்பமே நடுரோட்டுக்கு வரும் நிலைக்கு வந்தனர்!

அதே அமெரிக்கா தற்ச்சயமம் அணுமின்சார துறையில் இந்தியாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறது! அது மற்ற மின் வளங்களை தன் வசப்படுத்தி அதை அழித்து முழுக்க முழுக்க நாம் அவர்களையே நம்பி இருப்பது போல் செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்!

Thomas Ruban said...

//ஒரு நிறுவனத்தின் பங்கினை பற்றி தமிழில் ஆய்வு கட்டுரை எழுதுவது இதுவே முதன் முறையாகும். உங்களுடைய வரவேற்பை பொறுத்து மேலும் சில நிறுவனங்களைப் பற்றியும் எழுதலாம் என்று நினைக்கிறேன்.//

உங்கள் முதல் முயற்ச்சிக்கு பாரட்டுகள் மற்றும் வாழ்த்துகள். தொடருங்கள்.

//இந்த பதிவில் சரியாக விளக்கப் படாத பாகங்கள் ஏதேனும் இருந்தாலும் தயக்கமின்றி தெரிவிக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன். //

லிஸ்டிங் தேதி 7-8-09 ல் தொடங்கி 12-8-09ல் முடிவடைகிறது
இந்த IPO ல் விண்ணிப்பிக்க நாளையே கடைசி நாள்.

நாற்பதுசதவீதம்வழங்கப்படும்.நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை முதிலிடு செய்யலாம்.இதன் ஒரு லாட் எண்ணிக்கை 175*36=6300
15*6300=94500

ஒருவர் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணிப்பிக்க வேண்டும்.பல விண்ணப்பத்தில்
விண்ணிப்பித்தால் கூடது . பான்கார்டு அவசியம்.

//எனவே, நீண்ட கால நோக்கில் ஒரு குறைந்த பட்ச அதே சமயத்தில் அதிக ஏற்ற-இறக்கமில்லாத வருவாய் பெற விரும்புவோர் இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பது எனது தனிப் பட்ட கருத்து.//

தெரியாத பல விவரங்களை தெரிந்து கொண்டேன்.

நன்றி சார்..

சதுக்க பூதம் said...

Good Initiative.Please continue

Btc Guider said...

ஆன்லைனில் விண்ணப்பம் செய்பவர்கள் நாளை (12-08-2009) வரை விண்ணப்பிக்கலாம்.offline ல் விண்ணப்பிப்பவர்களுக்கு இன்றே கடைசி நாளாகும்.

மேலும் பல தகவல் விலாவாரியாக கொடுத்தமைக்கு நன்றி.

KRISHNAMOORTHY S.R, Erode, Tamilnadu. said...

தொடர்ந்து இதே போல்

கட்டுரையை எதிர்பர்கிறேன்

V Good.

Maximum India said...

நன்றி வால்பையன்!

//அமெரிக்காவில் போக்குவரத்துதுறை தனியார்மயம் ஆனப்பிறகு ரயில்களும்,பேருந்துகளும் குறைந்(த்)து நான்கு சக்கர வாகனங்கள் விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது!

நடுத்தரவர்கத்தினரும் வேறு வழியில்லாமல் கார் வாங்கி ஐம்பது வருடத்தில் குடும்பமே நடுரோட்டுக்கு வரும் நிலைக்கு வந்தனர்!//

முழுக்க முழுக்க அப்படி சொல்ல முடியாது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பொது போக்குவரத்து அமைப்புக்கள் சிறப்பாகவே உள்ளன.

//அதே அமெரிக்கா தற்ச்சயமம் அணுமின்சார துறையில் இந்தியாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறது! அது மற்ற மின் வளங்களை தன் வசப்படுத்தி அதை அழித்து முழுக்க முழுக்க நாம் அவர்களையே நம்பி இருப்பது போல் செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்//

பொதுவாகவே அணு மின் நிலையங்களின் அமைப்புச் செலவு மற்றும் அமைப்பதற்கான காலத் தேவை மற்ற வகை மின் நிலையங்களை விட மிகவும் அதிகம். எனவே, இந்தியா போன்ற ஒரு நாட்டில் முழுக்க முழுக்க அணு மின் நிலையங்களை நம்பி இருக்கும் சூழல் வருவது கடினம்.

நன்றி.

Maximum India said...

//லிஸ்டிங் தேதி 7-8-09 ல் தொடங்கி 12-8-09ல் முடிவடைகிறது
இந்த IPO ல் விண்ணிப்பிக்க நாளையே கடைசி நாள்.

நாற்பதுசதவீதம்வழங்கப்படும்.நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை முதிலிடு செய்யலாம்.இதன் ஒரு லாட் எண்ணிக்கை 175*36=6300
15*6300=94500//

தகவலுக்கும் தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி தாமஸ் ரூபன்!

Maximum India said...

நன்றி சதுக்க பூதம்!

Maximum India said...

//ஆன்லைனில் விண்ணப்பம் செய்பவர்கள் நாளை (12-08-2009) வரை விண்ணப்பிக்கலாம்.offline ல் விண்ணப்பிப்பவர்களுக்கு இன்றே கடைசி நாளாகும்.//

தகவலுக்கு நன்றி ரஹ்மான்!

Maximum India said...

நன்றி கிருஷ்ணமூர்த்தி!

KARTHIK said...

முதல்ல உங்கள இந்த பதிவு எழுத தூண்டிய நண்பர் தாமஸ் அவர்களுக்கு நன்றி :-))

// உங்களுடைய வரவேற்பை பொறுத்து மேலும் சில நிறுவனங்களைப் பற்றியும் எழுதலாம் என்று நினைக்கிறேன்.//

ஆஹா இந்தமாதிரி சொல்லத்தான் ஆள் இல்லை.அதனால தாராளமா எழுதுங்க.

ஆனா இந்த தடவ நான் ரேஸ்ல கலந்துக்கலை.
அடுத்த IPOல பாப்போம்.

விரிவான தகவலுக்கு நன்றிங்க.

Maximum India said...

ஆஹா இந்தமாதிரி சொல்லத்தான் ஆள் இல்லை.அதனால தாராளமா எழுதுங்க.

கௌதமன் said...

மிகவும் பயனுள்ள, ஆய்வுக் கட்டுரை.
மென்மேலும் இந்த வகையில் தொடருங்கள்.
வாழ்த்துக்கள்

Thomas Ruban said...

//முதல்ல உங்கள இந்த பதிவு எழுத தூண்டிய நண்பர் தாமஸ் அவர்களுக்கு நன்றி :-))//

ஆதறுவு அளித்த நண்பர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி..
கார்த்திக் said...
//ஆனா இந்த தடவ நான் ரேஸ்ல கலந்துக்கலை.
அடுத்த IPOல பாப்போம்.//
Maximum India said...
//ஆஹா இந்தமாதிரி சொல்லத்தான் ஆள் இல்லை.அதனால தாராளமா எழுதுங்க.//

தப்பாக புரிந்து கொண்டுள்ளிர்கள் என நினைக்கிறேன்.அவர் கூறியது இந்தNHPC-IPO ல விண்ணிப்பிக்கவில்லை.அடுத்த நல்ல IPO ல் விண்ணிப்பேன் என்று (நான் கூறியது சரியா கார்த்திக்?).

நன்றி அய்யா

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//தப்பாக புரிந்து கொண்டுள்ளிர்கள் என நினைக்கிறேன்.அவர் கூறியது இந்தNHPC-IPO ல விண்ணிப்பிக்கவில்லை.அடுத்த நல்ல IPO ல் விண்ணிப்பேன் என்று (நான் கூறியது சரியா கார்த்திக்?).//

மன்னிக்கவும். கார்த்திக்கு ஒரு விரிவான பதிலை தயார் செய்த நான் copy & paste செய்கையில் சொதப்பி விட்டேன். சுட்டி காட்டியமைக்கு நன்றி.

Maximum India said...

நன்றி கார்த்திக்!

//முதல்ல உங்கள இந்த பதிவு எழுத தூண்டிய நண்பர் தாமஸ் அவர்களுக்கு நன்றி :-))//

உங்களோடு சேர்ந்து தாமஸ்க்கு நானும் ஒரு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சுடர் விடும் விளக்கை விட தூண்டி விட்ட கைகளுக்குத்தான் அதிகம் நன்றி சொல்ல வேண்டும்.

//ஆனா இந்த தடவ நான் ரேஸ்ல கலந்துக்கலை.
அடுத்த IPOல பாப்போம்.///

நான் ஏற்கனவே சொன்னபடி எக்கச்சக்கமாக உயர்ந்து விட்ட பங்கு சந்தையில் இது போன்ற நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு. ஆனால் அரசாங்கமும் தனியார் நிறுவனம் போல கொஞ்சம் அதிகப் படியாகவே ஆசைப் பட்டுக் கொண்டு தன பங்கு வெளியீடுகளுக்கு அதிக விலை வைப்பது கொஞ்சம் வருத்தமாக உள்ளது.

நன்றி கார்த்திக் !

Maximum India said...

நன்றி கௌதமன்!

உங்களைப் போன்றோரின் ஊக்கம் மேலும் எழுத உற்சாகத்தை கொடுக்கிறது.

நன்றி!

குறும்பன் said...

இது போன்ற அலசல்கள் தமிழில் இல்லை என்ற குறையை போக்கியுள்ளிர்கள்.

Maximum India said...

நன்றி குறும்பன்!

//இது போன்ற அலசல்கள் தமிழில் இல்லை என்ற குறையை போக்கியுள்ளிர்கள்.//

அறிவியல், பொருளாதாரம், பொறியியல் மற்றும் சட்டம் போன்ற சிறப்பு துறைகளில் தமிழில் ஏராளமான பதிவுகள் வர வேண்டும். அப்படி வருவது தமிழை வளப் படுத்தும் என்பது என்னுடைய நம்பிக்கை மற்றும் ஆவல்.

நன்றி.

பொதுஜனம் said...

பொருளாதார பத்திரிக்கைகளில் வெளியிட தகுதி உள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

Maximum India said...

//பொருளாதார பத்திரிக்கைகளில் வெளியிட தகுதி உள்ள பதிவு. வாழ்த்துக்கள்.//

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி பொதுஜனம்!

muhiakil said...

மிகவும் நன்றாக எல்லா விஷயங்களையும் அலசி ஊளீர்கள். மிக்க நன்றி.

muhiakil said...

மிகவும் நன்றாக எல்லா விஷயங்களையும் அலசி ஊளீர்கள். மிக்க நன்றி.

Blog Widget by LinkWithin