Wednesday, September 30, 2009

பங்குச்சந்தை வெற்றிப்பயணம் - காளை-கரடி மனநிலைகள்


ஒரு பங்கினை ஒருவர் வாங்க அல்லது விற்க விரும்புவதற்கான காரணங்களின் அடிப்படையிலேயே சந்தையின் போக்கினை அறிந்து கொள்ள முடியும். காளை ஓட்டத்திற்கு (Bull Run) ஐந்து நிலைகளும், கரடி ஓட்டத்திற்கு (Bear Run) மூன்று நிலைகளும் (Phases) உண்டு. இந்த ஓட்டங்களை துவக்கத்திலேயே சரியாக புரிந்து கொண்டால் சந்தையில் பெரிய அளவில் வெற்றி பெற முடியும். இந்த வெற்றி ரகசியத்தை பற்றி இங்கு விவாதிப்போம்.

முதல் மனநிலை

நிறுவனம் சிறந்த அடிப்படைகளை கொண்டுள்ளது. பங்கின் விலை அதன் உள்மதிப்பை விட மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் பங்கோ தொடர்ந்து வீழ்ந்து கொண்டே இருக்கிறது அல்லது உயராமலேயே உள்ளது. இந்த பங்கினை நாம் வாங்கின பின்னரும் கூட தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்படலாம். இருந்தாலும் பரவாயில்லை, இது போன்ற ஒரு பங்கு நம்மிடம் இருக்க வேண்டும், என்றாவது ஒருநாள் இந்த பங்கு விலையேறும் என்று ஒருவர் பங்கினை வாங்க ஆசைப்பட்டால், அந்த பங்கின் அல்லது பங்கு சந்தையின் காளை ஓட்ட ஆரம்பத்திற்கு அதிக காலம் பிடிக்காது என்று அர்த்தம்.

இரண்டாவது மனநிலை

நிறுவனம் சிறந்த அடிப்படைகளை கொண்டுள்ளது. விலையும் உயர ஆரம்பித்து விட்டது. உள்மதிப்புக்கும் விலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இருந்தாலும் பரவாயில்லை. ஒரு நல்ல நிறுவனத்தின் பங்கு நம்மிடத்தில் இருக்க வேண்டும், விலை முன்னேற்றம் காலப் போக்கில் இன்னும் கூட அதிகமாகும் என்று விலை உயர்வின் ஊடே ஒருவர் வாங்க ஆசைப்பட்டால் காளை ஓட்டம் துவங்கி விட்டது என்று அர்த்தம்.

மூன்றாவது மனநிலை

நிறுவனம் சிறந்த அடிப்படைகளை கொண்டுள்ளது. விலையோ எக்கச்சக்கமாக ஏற்கனவே உயர்ந்து விட்டது. உள்மதிப்பை விட விலை இப்போது மிகவும் அதிகம். துவக்கத்திலேயே வாங்க விரும்பினோம். ஆனால் நடப்பு காளை ஓட்டத்தின் வேகத்திற்கு நம்மால் ஈடு கட்ட முடியவில்லை. ஆனால் இப்போதும் விட்டு விட்டால் விலை இன்னும் கூடமேலே போய் விடும் என்று குற்றமனப்பான்மையுடன் அல்லது பங்கினை வாங்கி உடனடியாக அதிக விலையில் விற்று விடலாம் என்ற பேராசையுடன் ஒருவர் பங்கினை வாங்கினால் காளை ஓட்டம் முழுவேகத்தில் இருக்கிறது, ஆனால் எச்சரிக்கை அவசியம் என்று அர்த்தம்.

நான்காவது மனநிலை

அடிப்படை சிறப்பாக உள்ள பங்குகள் எல்லாம் மேலேறி விட்டன. அதே சமயம் அடிப்படை சரியில்லாத, அதே சமயம் விலை குறைந்த பங்குகளின் மீது கவனம் திரும்பும் போது காளை ஓட்டம் உச்சகட்டத்தில் இருக்கிறது. ஆனால் முடிவு விரைவில் வரப் போகிறது என்று அர்த்தம்.

ஐந்தாவது மனநிலை

நிறுவனத்தின் அடிப்படைகளைப் பற்றி கவலையில்லை. உள்மதிப்பு பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால், விலை இன்னும் அதிகமாகி விடும். நிறுவனம் எப்படி பட்டதாக இருந்தாலும் உடனடியாக மேலே செல்லும் பங்கை வாங்க வேண்டும் என்று ஒருவர் ஆசைப் பட்டால் அல்லது நம்மை விட ஒரு பெரிய இளிச்சவாயனிடம் இந்த பங்கினை அதிக விலைக்கு தள்ளி விடலாம் ஒருவர் நம்பினால் காளை ஓட்டத்தின் இறுதி கட்டம் வெகு அருகே வந்து விட்டது என்று அர்த்தம்.

இது காளை ஓட்டத்தின் போக்கு என்றால், கரடி ஓட்டத்தின் போக்கு எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

முதல் மனநிலை

அடிப்படை சரியில்லாத நிறுவனங்கள் உள்மதிப்பு மிக குறைவாக இருந்த போதும் கூட மிக அதிக விலையில் விற்பனையாகின்றன என்று எண்ணம் தோன்றும் போது, கரடி ஓட்டத்தின் வித்து ஊன்றப் படுகின்றது. இந்த நிலையில் அடிப்படை சரியில்லாத நிறுவனங்கள் அதிக வீழ்ச்சி அடைகின்றன.

இரண்டாம் மனநிலை

அடிப்படை சரியாக இருந்தாலும், விலை அளவு உள்மதிப்பை விட அதிகமாக இருக்கிறது. எனவே பங்கினை விற்க வேண்டும் என்று விருப்பம் வந்தால் கரடி ஓட்டம் துவங்கி விட்டது என்று அர்த்தம். இந்த நிலையில் அடிப்படை சிறப்பாக உள்ள நிறுவனங்களும் கூட விலை வீழ்ச்சி அடைகின்றன.

மூன்றாம் மனநிலை

அடிப்படைகளைப் பற்றியெல்லாம் யாருக்கு தெரியும்? எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ தெரியாது, விட்டால் போட்ட காசு எல்லாம் போய் விடும், வந்த வரை லாபம் என்று ஒருவர் விலை வீழ்ச்சியைப் பற்றி மட்டுமே கவலைப் பட்டுக் கொண்டு விற்க முடிவு செய்தால் கரடி ஓட்டம் முடியப் போகிறது என்று அர்த்தம். இந்த நிலையில் எல்லா பங்குகளும் எல்லா விலையிலும் விற்பனை ஆகின்றன.

சந்தையில் வெற்றி பெற்ற ஜாம்பவான்கள் இந்த நிலைகளை ஓரளவுக்கு சரியாக புரிந்து வைத்துக் கொள்கிறார்கள். விலை மாற்றத்தைப் பற்றி அவ்வளவு கவலைப் படாமல், சந்தையின் மனநிலை மாற்றத்தின் அடிப்படையில் தமது திட்டங்களை மாற்றி கொள்கிறார்கள்.

தனது தாயார் ஒரு நாள் தொலைபேசியில் அழைத்து ஒரு குறிப்பிட்ட பங்கினை வாங்க சொன்னதாகவும், காரணத்தை கேட்ட போது அந்த பங்கு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்று மட்டுமே சொல்ல தெரிந்திருந்தாகவும், அந்த கணத்திலேயே சந்தை விரைவில் வீழப் போகிறது என்று தான் புரிந்து கொண்டதாகவும் ஜிம் ரோஜர்ஸ் அவரது சொந்த அனுபவத்தை விளக்கும் போது கூறுகிறார்.

வெற்றிகரமான பரஸ்பர நிதி மேலாளரான பீட்டர் லின்ச் தனது சொந்த அனுபவத்தை விளக்கும் போது, விருந்துகளில் தான் கலந்து கொண்ட போது யாரும் தன்னிடம் வந்து பங்குசந்தையைப் பற்றி பேச ஆர்வம் காட்ட வில்லை என்பது முதல் நிலை என்கிறார். எந்த பங்கு மேலே போகும், எதை வாங்கலாம் என்று மற்றவர்கள் விசாரிக்க ஆரம்பித்தால் காளை ஓட்டம் ஜோராக உள்ளது என்று அர்த்தம். அதே சமயம், அவரிடத்தில் வந்து தான் இந்த பங்கை வாங்கி இவ்வளவு சம்பாதித்தோம், நீங்களும் கூட இந்த பங்கினை வாங்கலாம் என்று (பங்கு சந்தையில் முன் அனுபவம் அதிகம் இல்லாதவர்கள்) மற்றவர்கள் ஆலோசனை சொன்னால் காளை ஓட்டம் முடிவாக போகிறது என்று அர்த்தம் என்று கூறுகிறார்.

இந்திய பாணியில் ஒரு விளக்கம்.

உலக சந்தைகள் முன்னேறுகின்றன. இந்திய பங்கு சந்தைகள் தடுமாறுகின்றன. வணிக தொலைக்காட்சிகளில், இந்தியாவின் பொருளாதாரம் எவ்வளவு தடுமாறிக் கொண்டிருக்கிறது, நிறுவனங்கள் எத்தனை பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன, சென்செக்ஸ் இன்னும் எவ்வளவு விழப் போகிறது என்பதை பற்றி எல்லாம் அதிக விவாதம் நடந்தால் காளை ஓட்டம் துவங்கப் போகின்றது என்று அர்த்தம்.

உலக சந்தைகள் முன்னேறுகின்றன. இந்திய பங்கு சந்தை வேகமாக முன்னேறுகின்றது. இந்த ஓட்டம் ஆபத்தானது, ஏன் இவ்வளவு வேகம் என்று புரியவில்லை, இங்கெல்லாம் ஏராளமான எதிர்ப்பு நிலைகள் உள்ளன, அடிப்படைகள் அவ்வளவு சரியாக இல்லை, அமெரிக்காவில் பிரச்சினை வரப் போகிறது என்றெல்லாம் அதிக விவாதம் நடந்தால் காளை ஓட்டம் ஜோராக உள்ளது என்று அர்த்தம்.

உலக சந்தைகள் தடுமாறுகின்றன. பொருளாதார விபரங்கள் நன்றாக இல்லை. அதே சமயம், உலக சந்தைகளுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை, இந்தியா வலுவானது, தனித்துவமானது, சந்தை இப்போதைக்கு சரிந்தாலும் நீண்ட கால நோக்கில் வலுவாகவே இருக்கும் என்றெல்லாம் கோஷங்கள் வர ஆரம்பித்தால் காளை ஓட்டம் நிறைவு பெறப் போகிறது என்று அர்த்தம்.

"பயத்தின் உச்சியில்தான் காளை ஓட்டம் துவங்குகிறது. நம்பிக்கையின் உச்சக் கட்டத்தில்தான் கரடி ஓட்டம் ஆரம்பமாகுகிறது என்பது பங்குசந்தையின் முக்கிய தங்க விதிகளில் ஒன்று."

மொத்தத்தில் பங்கினையும் நிறுவனத்தின் போக்கினையும் கவனிப்பதோடு உங்களை சுற்றி இருப்பவர்களையும் கவனித்து வாருங்கள். எந்த பங்கினை எந்த விலையில் வாங்கினாலும் லாபம் சம்பாதிக்க முடியும் என்ற மாயை உருவானாலோ, பொதுமக்களிடம் பங்கு சந்தையை பற்றிய ஆர்வம் மிக அதிகமானாலோ, போகிறவர் வருபவர் எல்லாரும் பங்கு சந்தை வெற்றிக் கதைகளை பற்றி பேச ஆரம்பித்து விட்டாலோ, நாம் சற்று பதுங்க வேண்டிய காலம் வந்து விட்டது என்று அர்த்தம்.

நன்றி!

பின்குறிப்பு

இதெல்லாம் சரி. பங்குசந்தையின் இப்போதைய நிலை என்ன என்று கேட்க ஆசைப் படுகிறீர்கள் என்று நினைக்கிறேன். எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் சந்தை தனது முதலாவது மற்றும் இரண்டாவது (காளை ஓட்ட) நிலைகளை தாண்டி விட்டது என்று நினைக்கிறேன். முடிவு எவ்வளவு சீக்கிரம் என்று சொல்ல முடியா விட்டாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டம் வந்து விட்டது என்றும் நினைக்கிறேன்.

பயணம் தொடரும்.

15 comments:

Jalal said...

எப்பொழுது வலைப்ப்திவ்ட்டாலும் மிகவும் நல்ல கருத்டோடு எழுதுகிறீர்கள்.

நன்றி

Maximum India said...

நன்றி ஜலால்!

Btc Guider said...

அருமையான பதிவு!!! வேறென்ன சொல்ல அவ்வளவு விஷயங்கள் இந்த பதிவில் இருக்கிறது.
பின்னூட்டம் எழுத குறிப்பு எடுத்தால் அது நீங்கள் எழுதிய பதிவை விட அதிகமாக இருக்கிறது.
அதனால்தான் பின்னூட்டத்தை விளக்கமாக எழுதவில்லை சுருக்கமாக சொன்னால் நீங்கள் பதிவிட்டதிலேயே இந்த பதிவு பங்கு வணிகத்தில் வணிகம் செய்பவர்களுக்கு மிக பயனுள்ள கையேடு போல் இருக்கும் என்று நம்புகின்றேன்.
பதிவிட்டதிர்க்கு நன்றி சார்.

Btc Guider said...

ஒரு வார காலமாக எதுவும் எழுதவில்லையே சார் என்னாயிற்று?

மேலும் உங்கள் பதிவில் பின்னூட்ட புலிகளுக்கு விடுமுறை கொடுத்துவிட்டீர்களா?சில வாரங்களாக அவர்களையும் காணவில்லையே!

வால்பையன் said...

கமாடிடி பற்றி எதாவது தகவல் உண்டா தல!

Maximum India said...

நன்றி ரஹ்மான்!

//சுருக்கமாக சொன்னால் நீங்கள் பதிவிட்டதிலேயே இந்த பதிவு பங்கு வணிகத்தில் வணிகம் செய்பவர்களுக்கு மிக பயனுள்ள கையேடு போல் இருக்கும் என்று நம்புகின்றேன்.//

ஹி ஹி! என்ன வச்சு ஏதும் காமெடி கீமடி பண்ணலையே? ஒரு வேளை, உண்மையாகவே சொல்கிறீர்கள் என்றால் உங்களுக்கு என் மீது அநியாயத்திற்கு பிரியம் என்று அர்த்தம்.

கொஞ்ச நாளாக பதிவுலகுக்கு விடுமுறை அளித்து விட்ட என்னிடம் நீங்கள் கேட்ட இதே கேள்வியை //ஒரு வார காலமாக எதுவும் எழுதவில்லையே சார் என்னாயிற்று?// எனது மனைவியும் கேட்டார்.

சரி ஏதோ எழுதுவோமே என்று உட்காந்து பதிந்ததுதான் சென்ற பதிவு.

உண்மையில் அடுத்த பதிவாக வரவேண்டியிருந்தது வேறு ஒரு தலைப்பு. அதாவது "பங்கு சந்தை வெற்றி பயணத்திற்கு நீங்கள் தயாரா?" இதற்காக சில குறிப்புகள் எடுக்க வேண்டியிருந்ததால், இந்த பதிவு முந்திக் கொண்டது.

மேலும், தனிப்பட்ட முறையில் எனது பொறுப்புக்கள் சற்று கூடி இருப்பதால், இன்னும் கொஞ்ச நாளைக்கு முன் போல நிறைய பதிவுகள் இட முடியுமா என்று தெரிய வில்லை. இருந்தாலும் அவ்வப்போது பதிவுகளை வெளியிட முயற்சிப்பேன்.

//மேலும் உங்கள் பதிவில் பின்னூட்ட புலிகளுக்கு விடுமுறை கொடுத்துவிட்டீர்களா?சில வாரங்களாக அவர்களையும் காணவில்லையே!//

தெரிய வில்லை. இது பண்டிகை சீசன் அல்லவா? மக்கள் கொஞ்சம் சந்தோசமாக பொழுதை கழிக்கட்டுமே?

:)

நன்றி.

Maximum India said...

//கமாடிடி பற்றி எதாவது தகவல் உண்டா தல!//

சாரி தல! கொஞ்ச நாளா சந்தை உலகத்திற்கு லீவு விட்டுட்டேன். நமக்கு இன்னமும் கூட பள்ளிக்கூட லீவுல படிப்பெல்லாம் மறந்து போற குழந்தை மனசு இருக்கு. மறுபடியும் சந்தைகளை தொடர ஆரம்பிச்சாத்தான் ஏதேனும் ஐடியா வரும். வந்தால் உங்களிடம் கண்டிப்பாக சொல்கிறேன்.

நன்றி.

Thomas Ruban said...

//"பயத்தின் உச்சியில்தான் காளை ஓட்டம் துவங்குகிறது. நம்பிக்கையின் உச்சக் கட்டத்தில்தான் கரடி ஓட்டம் ஆரம்பமாகுகிறது என்பது பங்குசந்தையின் முக்கிய தங்க விதிகளில் ஒன்று."//

சூப்பர் சார்.மிக சரியாக சொன்னீர்கள்.

நன்றாக அனுபவித்து எழுதியுள்ளிர்கள் அருமையான பதிவு.புலி(கரடி)வருது, புலி வருது கதைப்போல் உள்ளது. கண்டிப்பாக புலி(கரடி) கூடிய சீக்கிரத்தில் வருவது உறுதி என சந்தையின் போக்கின் மனநிலையை தெளிவாக கூறியதர்க்கு நன்றி சார்.

ஒரு வார காலமாக எதுவும் எழுதவில்லையே உடல் நலம் சரியில்லையோ என பயந்தேன்.

OILஎதுவும் கிடைத்தா சார்? எனக்கு19.

பதிவுக்கு நன்றி சார். தொடரட்டும் உங்களுடைய சேவை.

நன்றி ..நன்றி..

Thomas Ruban said...

Fibonacci Calculator இது பங்கு சந்தையில் எப்படி உபோயோக்ப்படுகிறது.தின வர்தகத்திற்கு எப்படி உதவுகிறது.

நன்றி ..நன்றி.. .

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//நன்றாக அனுபவித்து எழுதியுள்ளிர்கள். அருமையான பதிவு.//

ஏற்கனவே சொன்னபடி அதிகம் யோசிக்காமல் எழுதிய பதிவு இது. பூப்பந்து விளையாடும் போது, ஒரு நல்ல ஷாட் அடித்தால், நண்பர் "ஏதோ தெரியாமல் அடித்து விட்டார். மன்னித்து விடுவோம்" என்று கூறுவார். அது போலத்தான் இந்த பதிவும் ஏதோ தெரியாமல் வந்து விட்டது.

//புலி(கரடி)வருது, புலி வருது கதைப்போல் உள்ளது. கண்டிப்பாக புலி(கரடி) கூடிய சீக்கிரத்தில் வருவது உறுதி என சந்தையின் போக்கின் மனநிலையை தெளிவாக கூறியதர்க்கு //

புலி கரடி எது வந்தாலும், கொஞ்சம் முன் எச்சரிக்கையுடனும், உரிய தற்காப்பு ஆயுதங்களுடனும் இருந்தால் தப்பித்து விடலாம். எனவே புலி கரடி பற்றியெல்லாம் கவலைப் படாமல், நமது தயார் நிலையை சிறப்பாக அமைத்துக் கொள்வதில் மட்டும் அதிக கவனம் செலுத்துவோம்.

//ஒரு வார காலமாக எதுவும் எழுதவில்லையே உடல் நலம் சரியில்லையோ என பயந்தேன். //

அக்கறைக்கு நன்றி தாமஸ் ரூபன். பெரிய காரணங்கள் எதுவும் இல்லையென்றாலும், தொடர்ந்து வரும் பண்டிகை விடுப்புகள் ஊர் சுற்றும் ஆர்வத்தை (இதர பொழுது போக்கு அம்சங்கள் கூட) அதிகப் படுத்தியதால் கம்ப்யூட்டர் முன்னே செலவிடும் நேரம் வெகுவாக குறைந்து விட்டது.

//OILஎதுவும் கிடைத்தா சார்? எனக்கு19.//

எட்டு பங்குகள் கிடைத்தன. இப்போதைக்கு என்னுடைய டார்கெட் 1200 முதல் 1250 வரை.

//பதிவுக்கு நன்றி சார். தொடரட்டும் உங்களுடைய சேவை.//

தொடர்ந்து தொடருகின்ற உங்களுக்கு கூட எனது நன்றிகள் சமர்ப்பணம்.

Maximum India said...

//Fibonacci Calculator இது பங்கு சந்தையில் எப்படி உபோயோக்ப்படுகிறது.தின வர்தகத்திற்கு எப்படி உதவுகிறது. //

பிபோனச்சி பற்றி சொல்ல வேண்டுமென்றால், தனிப் பதிவாக போட வேண்டிய அளவுக்கு பெரிதாக இருக்கும். இந்த தொடர்பதிவின் ஒரு பதிவாக கண்டிப்பாக பிபோனச்சியும் இருக்கும்.

மற்றபடிக்கு, பிபோனச்சி உட்பட எந்த ஒரு தொழிற்நுட்ப வரைபட கருவியும் நூறு சதவீத வெற்றிக்கு உறுதியில்லை. அப்படி இருந்தால், வர்த்தகம் செய்ய கம்ப்யூட்டர் போதுமே! மனிதர்கள் எதற்கு? (பிபோனச்சி உபயோகப் படுத்தி நானே பலமுறை தோற்றிருக்கிறேன்.) மனிதர்களின் முடிவெடுக்கும் தனித்திறமையை மிஞ்சிய தொழிற்நுட்ப சாதனங்கள் இதுவரை உருவாகவில்லை.

மேலும் சந்தையின் முக்கிய சந்தை விதி என்னவென்றால், காளை ஓட்டத்திற்கு எதிர்ப்புக்கள் இல்லை. கரடி ஓட்டத்தின் முன் அரண்களும் இல்லை (Bulls have no resistance. Bears have no support)

நன்றி.

Naresh Kumar said...

மிகப் பயனுள்ள பதிவு!!!

வழக்கமாக இந்த விஷயத்தைச் சொல்லித்தான் கன்சல்டண்ட் என்ற பெயரில் அல்லது அட்வைசர்ஸ் என்ற பெயரில் தொழிலையே நடத்துகிறார்கள்...

நீங்கள் சர்வசாதாரணமாக பதிவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் சொல்லிச் செல்கிறீர்கள்...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!

Maximum India said...

நன்றி நரேஷ் குமார்!

//வழக்கமாக இந்த விஷயத்தைச் சொல்லித்தான் கன்சல்டண்ட் என்ற பெயரில் அல்லது அட்வைசர்ஸ் என்ற பெயரில் தொழிலையே நடத்துகிறார்கள்...

நீங்கள் சர்வசாதாரணமாக பதிவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் சொல்லிச் செல்கிறீர்கள்...//

இந்த பதிவு வலையே தமிழ் கூறும் நல்லுலகுக்கான ஒரு சேவைதான்.

நீங்கள் மட்டும் என்ன? மிக அற்புதமான மேலாண்மை கருத்துக்களை அருமையான தமிழில் வெளியிடுகிறீர்கள்.

அங்கீகாரமோ, வருவாயோ எதிர்பாராத சேவைதான் மனதிற்கு அதிக திருப்தி தருகிறது என்பதை நீங்களும் உணர்ந்துதான் நல்ல பதிவுகளை தொடர்ந்து தருகிறீர்கள் அல்லவா?

நன்றி.

Unknown said...

சூப்பர் சிம்பிள் பதிவில் அனாயசமாக பங்கு சந்தையை பிழிந்து சாறு வடித்துக் கொடுத்து விட்டீர்கள்.

ஹர்ஷத் மேத்தா தயவில் பங்குகள் ஓடி, சரிந்தபின் அவரை ஜெயிலுக்கும், பங்கு வணிகர்களை நிர்வாணத்துக்கும் அனுப்பியானபின் நான் கேட்ட பொன்மொழி “தெருமூலை வெற்றிலைப்பாக்கு கடைக்காரர் பங்குகள் பற்றி பேசினால் கரடி வரும் நேரம் ஆகிவிட்டது என்று அர்த்தம்”. :)

http://www.sathyamurthy.com/finance
(கொஞ்சம் நேம், யூஆரெல்லையும் திறந்து விடுங்கள்)

Maximum India said...

நன்றி சாம!

நீங்கள் சொல்வதும் உண்மைதான்!

நன்றி!

Blog Widget by LinkWithin