Friday, April 3, 2009

புத்தாண்டு தினத்தின் பலன்கள்


பொதுவாக புத்தாண்டு பலன்கள் என்று சொல்லும் போது, அடுத்து வருகின்ற புதிய ஆண்டு மொத்தத்திற்கான பலன்கள் என்பதையே குறிப்பது வழக்கம். ஆனால் புத்தாண்டு தினத்திற்கென்றே சில பலன்கள் அதாவது சில நன்மைகள் உண்டு தெரியுமா?

இந்தியா போன்ற பல்வேறு மதம், மொழி, இனத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் ஒரு பெரிய நாட்டில் பல புத்தாண்டு தினங்கள் வருவதுண்டு. தமிழ் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, விஷூ (மலையாளம்), யுகாதி (கன்னட மற்றும் தெலுங்கு), குடி படவா (மராத்தி), பார்சி புத்தாண்டு, கிருஷ்ணா பக்ஷா (ராஜஸ்தான்), முகரம் (இஸ்லாமியர்) என்று பல புத்தாண்டுகள் இங்குண்டு. அதே போல சில பண்டிகைகள் கூட புத்தாண்டு நாட்களாக கருதப் படுவதுண்டு. உதாரணம் பொங்கல் மற்றும் தீபாவளி (மறுநாள்) போன்றவை. அரசு தரப்பிலும் சில வருட முறைகள் பின்பற்றப் படுகின்றன. உதாரணம் சக ஆண்டு, திருவள்ளுவர் ஆண்டு போன்றவை.

எங்களைப் போன்ற நிதித் துறைகளில் உள்ளவர்களுக்கும் வேறு வேறு நாட்களில் புதிய ஆண்டுகள் பிறப்பதுண்டு. இந்தியாவில், ஏப்ரல் ஒன்று. ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் ஜூலை ஒன்று. அமெரிக்க போன்ற சில நாடுகளில் அக்டோபர் ஒன்று. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அறிவியல்ரீதியாக புத்தாண்டு நாட்களில் பூமியிலும், விண்வெளியிலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. பூமி எப்போதும் போல தன்னைத் தானே சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. சூரியனும் எல்லா நாட்களைப் போலவே கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது. பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்ட பாதையில் எது ஆரம்பம் எது முடிவு என்று யாராலும் சொல்ல முடியாது. இந்த நாளில்தான் உலகம் தோன்றியது என்றோ இந்த நாளில் தான் இயக்கம் துவங்கியது என்றோ அறிவியல் ரீதியாக அறுதியிட்டு எந்த நாளையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.

பின் எதற்கு இத்தனை புத்தாண்டு தினங்கள்?

இந்தியாவில் வருடம் முழுதுமே புத்தாண்டுகள்தான் என்று வேடிக்கையாக சொல்லும் ஒரு குஜராத் நண்பியுடன் இது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது அவர் கூறிய ஒரு கருத்து.

"பொதுவான புத்தாண்டு தினங்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு நல்வாய்ப்பினை அளிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மதம்/இனம்/ மொழியினரின் புத்தாண்டுகள் மேலும் ஒரு கூடுதல் வாய்ப்பினை அளிக்கின்றன. அன்றைய தினம் நாம் அவருக்கு வாழ்த்து சொல்லும் போது அவருக்கு தனி சந்தோஷம் உருவாகிறது. அந்த வாழ்த்தில் அவருக்கும் அவர் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் நாம் வழங்கும் தனித்துவ மரியாதையும் வெளிப்படுகிறது. "

இது புத்தாண்டு தினத்தின் முதல் பலன்.

நம் நாட்டில் பல புத்தாண்டு தினங்கள் பெரிய அளவில் பண்டிகைகளாகவே கொண்டாடப் படுகின்றன. இந்த கொண்டாட்டங்கள் நமக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தருகின்றன.

இது இரண்டாவது பலன்.

இன்னொரு முக்கிய பலன் என்னவென்பதை இந்த நிதி புத்தாண்டில் நான் எனது சொந்த அனுபவத்தில் கற்றுக் கொண்டேன்.

நம் அனைவருக்கும் தெரியும். சென்ற நிதி ஆண்டில் சந்தைகளின் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தது என்று. ஒரே பாதை அதுவும் சரிவுப் பாதையிலேயே சந்தைகள் சென்ற வருடம் முழுதும் பயணித்து வந்தன. நஷ்டங்கள், இழப்புக்கள், முதலீடுகளின் சந்தை மதிப்பு விழுதல், ஏன் முதலீடு செய்தோம் அல்லது ஏன் முதலிலேயே விற்க வில்லை என்பது போன்ற தன்னிலை விளக்கங்கள் என்று ஒவ்வொரு நாளும் பல்வேறு சோதனைகளை தந்த சென்ற நிதி ஆண்டு பலரும் மறக்க விரும்புகின்ற ஒரு கறுப்பு வருடமாகவே இருந்தது. தொடர்ந்து பல வருடங்கள் லாபங்களை மட்டுமே பார்த்து வந்த நிதித் துறை இந்த நிதி ஆண்டு ஒரு தலைகீழ் மாற்றத்தைக் கண்டது என்றால் மிகையாகாது. இந்த நிலை வேறு பல தொழிற் துறைகளிலும், வியாபாரங்களிலும் கூட இருந்து வந்தது. ஒரு வழியாக சென்ற நிதி ஆண்டு முடிந்தது ஒருவித நிம்மதி பெருமூச்சையே வரவழைத்தது.

புதிய நிதி ஆண்டிற்கான லாப இலக்குகள் நிர்ணயிப்பதற்காக நிதி புத்தாண்டு தினத்தன்று எங்கள் மேலதிகாரியுடன் ஒரு விவாதம் நடந்த போது நான் சொன்னது.

"ஐயா! சென்ற நிதி ஆண்டு முடிவடைந்து விட்டது என்பதே ஒரு பெரிய மன நிம்மதியைத் தருகிறது. சுமப்பதற்கு பழைய பாரங்கள் ஒன்றுமில்லை என்ற விடுதலை உணர்வு ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது. இந்த வருடத்தை புதிதாக சிறப்பாக ஆரம்பிப்போம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை"

புத்தாண்டின் பலன்களிலேயே, மிக முக்கியமாக நான் இதைத்தான் கருதுகிறேன். நம்முடைய பழைய தவறுகளை திருத்திக் கொள்ளவும், மன பாரங்களை கழற்றி விடவும், குறிப்பாக நம்மை நாமே மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளவும் புத்தாண்டு தினம் நமக்கு ஒரு பெரிய வாய்ப்பைக் கொடுக்கிறது.

எனவே ஒவ்வொரு புத்தாண்டையும் ஒரு புதிய வாய்ப்பாக கருதி புத்துணர்ச்சி கொள்வோம்.

இந்த நிதியாண்டு (2009-10) எல்லா தொழிற் துறை மற்றும் வணிகத் துறைகளுக்கும் ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்திற்கும் சிறந்த ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம்.

அனைவருக்கும் நிதி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றி.

6 comments:

வால்பையன் said...

பழயன கழித்து
புதியதை மகிழ்வுடன் ஏற்போம்!

Maximum India said...

நன்றி வால்பையன்

KARTHIK said...

// நம்முடைய பழைய தவறுகளை திருத்திக் கொள்ளவும், மன பாரங்களை கழற்றி விடவும், குறிப்பாக நம்மை நாமே மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளவும் புத்தாண்டு தினம் நமக்கு ஒரு பெரிய வாய்ப்பைக் கொடுக்கிறது.//

சரிதான் நல்லது நடந்தால் சரிதான்.

Maximum India said...

நன்றி கார்த்திக்.

இந்த வருடம் நல்லதாக இருக்கட்டும்.

MCX Gold Silver said...

சார் ஒரு சின்ன வேண்டுகோள்.பங்குசந்தையைப் பற்றி எழுதும்பொழுது டெக்னிக்கல் வரைபடத்துடன் எழுதுங்களேன்.


நன்றி

Maximum India said...

//சார் ஒரு சின்ன வேண்டுகோள்.பங்குசந்தையைப் பற்றி எழுதும்பொழுது டெக்னிக்கல் வரைபடத்துடன் எழுதுங்களேன்.//

அடுத்த முறை முயற்சிக்கிறேன் dg

நன்றி.

Blog Widget by LinkWithin