Thursday, July 2, 2009

அப்பா எங்கே?


அப்பா! என்று அழைத்தேன். ஆனால், உதடுகள் பிரிந்தாலும் வார்த்தைகள் வெளியேற வில்லை. அப்பா இப்படி இருந்து இத்தனை வருடங்களாக ஒரு போதும் பார்த்ததில்லை. உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் அப்பா எப்படி இருக்கிறார் என்று பல வருடங்கள் வரை கண்டு கொண்டதே இல்லை.

பெருசு, கிணற்றுத் தவளை என்றெல்லாம் கேலி பேசிய காலங்கள் கூட உண்டு. அப்போதெல்லாம், அப்பா கூறுவார், "உனக்கு நாற்பது வயதாகும் போதுதான் ஒரு தந்தையின் மனநிலை புரிய வரும்", என்று. ஆனால் கால ஓட்டத்தின் வேகம் ஒரு தந்தையின் மனநிலையை முப்பது வயதிலேயே ஓரளவுக்காவது உணர்த்தி விட்டது.

"என்ன அப்பா! வேலைக்கு போகலையா?" என்று கேட்டேன்.

"நான் எப்பவுமே பிசி" என்ற விளம்பர வாசகங்கள் அப்பாவிற்கு நிறையவே பொருந்தும். மிகச் சிறிய வயதிலேயே வேலைக்கு செல்ல ஆரம்பித்த அவர், அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட தனியார் வேலைக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார். பொருளாதார நிர்பந்தங்கள் எதுவும் இல்லையென்றாலும், தொழில் மீது இருக்கும் ஆர்வம் மற்றும் சோம்பி இருக்கக் கூடாது என்ற மனப் பாங்கு அவரை ஓய்வுக்குப் பின்னரும் வேலைக்கு செல்ல உந்தி வந்திருக்கிறது.

வீட்டில் நடந்த முக்கிய விசேஷங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் கூட அவர் வீடு தங்கியதில்லை. வீட்டில் இருந்தாலும் எப்போதும் எங்களை விரட்டிக் கொண்டேதான் இருப்பார். காலையில் தாமதமாக எழுந்தால் அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. விடுமுறை என்றாலே நிறைய தூங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட எங்களுக்கு அவர் விடுப்பு நாட்களில் வேலைக்கு சென்றால் சந்தோசமாகவே இருக்கும். அவரது விடுமுறை நாட்களில் கூட ஏதாவது ஊர் வேலையாக சுற்றிக் கொண்டே இருப்பார்.

"இல்லப்பா! ரொம்ப டயர்டாக இருக்கிறது. ஒரு வாரம் லீவு போட்டு விட்டேன்" என்று பதில் வந்தது அப்பாவிடமிருந்து.

இது கூட கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது எனக்கு. சில மணி நேரம் பயணம் செய்தாலே "இவ்வளவு நேரம் ரெஸ்ட் எடுக்க வேண்டும்" என்று கணக்கு போட்டு ரெஸ்ட் எடுக்கும் மகன் இருக்க, இந்த வயதிலும் காசி முதல் ராமேஸ்வரம் வரை தொடர்ந்து ரயில் பயணம் செய்த பிறகும் அடுத்த நாளே வேலைக்குப் போனவர் எனது தந்தை. இப்படி அடுத்த நாளே வேலைக்குப் போனார் என்று கேள்விப் பட்டவுடன் நான் டயர்டாகி ரெஸ்ட் எடுத்துக் கொண்டது தனிக் கதை.

"நன்றாகத்தான் இருந்தார். திடிரென்று இப்படி ஆகி விட்டது" என்றார் எனது அப்பா.

அவர் என்னிடம் பேசுகிறாரா இல்லை தனக்குத்தானே பேசிக் கொள்கிறாரா என்று எனக்கு புரியாததால் பதில் எதுவும் நான் சொல்ல வில்லை.

அப்பாவின் நெருங்கிய நண்பர் வேலாயுதம், அப்பாவை விட பல வருடங்கள் வயதில் மூத்தவர் என்றாலும் வயது வித்தியாசம் பார்க்காமல் நல்ல நண்பர்களாக இருவரும் பழகி வந்தனர். அவரும் கூட அப்பாவைப் போலவே கடுமையான உழைப்பாளி. நேற்று அதிகாலையில் திடீரென்று காலமாகி விட்டார்.

எவ்வளவோ வாழ்வியல் தத்துவங்களை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த எனது தந்தையை நான் என்ன சொல்லி தேற்றுவது என்று எனக்கு புரிய வில்லை.

செத்த பிணத்தைப் பார்த்து வாழும் பிணங்கள் அழுகின்றன என்று சித்தர்கள் எளிதில் சொல்லி விட்டு போய் விட்டாலும் நடைமுறையில் மனிதர்களுக்கு இழப்பு என்பது ஒரு மிகப் பெரிய துன்பமாகவே இருக்கிறது. துன்பம் என்பது செத்த பிணத்திற்க்காக வருவதா இல்லை தானும் ஒரு வாழும் பிணம்தான் என்ற உணர்வு வருவதாலா என்று புரியவில்லை.

எதுவும் சொல்லத் தெரியாமல், "சரி! கிளம்புகிறேன்!' என்று இரண்டு வார்த்தை மட்டும் பேசி விட்டு சொந்த ஊரை விட்டு வந்த ஊருக்கு திரும்பி விட்டேன். வழி முழுக்க ஒரே சிந்தனை, அப்பாவை என்ன சொல்லி தேற்றுவது என்று.

நான் படித்த மேலாண்மை மற்றும் உளவியல் தத்துவங்களை எல்லாம் மீண்டும் ஒருமுறை மனக்கண் கொண்டு வர முயற்சி செய்தேன். ஆனால், அப்பாவை இப்படி பார்த்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் சிந்தனைகள் மேலெழ அனுமதிக்க வில்லை

மறுநாள் காலை எழுந்தவுடன், வீட்டுக்கு போன் செய்தேன். அம்மாதான் போனை எடுத்தார். "அப்பா எங்கே?" என்று கேட்டேன். "அவரா? காலையிலேயே எழுந்து வேலைக்குப் போய் விட்டாரே? " என்று கூறினார்.

மனது கொஞ்சம் லேசானது போல இருந்தது.

நன்றி.

6 comments:

வால்பையன் said...

அப்பாவிற்கு தேவைப்பட்டது அந்த ஒருநாள் தான் போல!
அவருக்கு தெரியாததா நமக்கு தெரிந்துவிடப்போகிறது!

Maximum India said...

//அவருக்கு தெரியாததா நமக்கு தெரிந்துவிடப்போகிறது!//

உண்மைதான் தல. எத்தனை வயதானாலும் அப்பா அப்பாதான். பிள்ளை பிள்ளைதான்.

நன்றி.

பொதுஜனம் said...

அப்பாக்கள் நமது முன் பிரதிகள்.நம் பின் வாழ்கையின் பின் பிரதிபலிப்புகள். லேட்டஸ்ட் மொபைல் போன் போல் மெருகேற்றிய விஷயங்கள் நம்மில் இருந்தாலும் நம் மூலத்தின் விதை அப்பா மூலமே நம் கண்டு கொள்ளலாம். நம் தின செயல்பாடுகளை நிர்ணயிப்பதில் அப்பாக்களின் பங்கு அதிகம். எதை விதைத்தால் எது கிடைக்கும் என்பதை நம் அப்பாவின் வாழ்க்கையில் தெரிந்து கொள்ளலாம்.நம்மை செதுக்கிட செப்பனிட அவரது வாழ்க்கையில் உதாரணங்கள், ரணங்கள் அதிகம். நல்ல அப்பாவாய் நாம் இருந்திட அப்பாக்கள் முன்மாதிரிகள். நல்ல அப்பா, திருட்டு அப்பா, அரசியல் அப்பா, டாஸ்மாக் அப்பா, பிசினஸ் அப்பா, கவர்மென்ட் அப்பா, கூலி அப்பா, என்று அப்பாக்கள் பலவிதம். ஆனால் நம் பிள்ளை ஒழுங்காக உருப்பட வேண்டும் என்பதே எல்லா அப்பாக்களின் முதல் நோக்கம். எல்லா அப்பாக்களும் நிஜமான (சில நேரம் பொய்யான ) தயாரிப்பாளர்கள் . ஆனால் அதில் சில பேரே நல்ல இயக்குனர்கள். அவர்கள் கண்டிப்பான வாத்தியார்கள். சில நேரம் கம்பை உபயோகபடுத்துகிறார்கள். சில நேரம் உண்மையிலேயே நம்மை படுத்துகிறார்கள். அவர்கள் கரண்ட் போல. இல்லாத போதுதான் அவர்களின் அருமை தெரியும்.. ஆக .. அப்பாக்களை மதிப்போம்.. வயதான காலத்தில் உறு துணையாய் இருப்போம். குறைந்த பட்சம் உறுத்தாமல் இருப்போம். நல்ல அப்பாவாய் நாமும் இருப்போம்.

Maximum India said...

நன்றி பொதுஜனம்!

//அப்பாக்கள் நமது முன் பிரதிகள்.நம் பின் வாழ்கையின் பின் பிரதிபலிப்புகள். லேட்டஸ்ட் மொபைல் போன் போல் மெருகேற்றிய விஷயங்கள் நம்மில் இருந்தாலும் நம் மூலத்தின் விதை அப்பா மூலமே நம் கண்டு கொள்ளலாம். //

நம் மூலத்தின் பிரதிபலிப்பை நமது பிள்ளைகளிடமிருந்து கூட கண்டு கொள்ளலாம்.

//நம் தின செயல்பாடுகளை நிர்ணயிப்பதில் அப்பாக்களின் பங்கு அதிகம். எதை விதைத்தால் எது கிடைக்கும் என்பதை நம் அப்பாவின் வாழ்க்கையில் தெரிந்து கொள்ளலாம்.நம்மை செதுக்கிட செப்பனிட அவரது வாழ்க்கையில் உதாரணங்கள், ரணங்கள் அதிகம். //

பொதுவாக அனைவருமே தாயின் தியாகத்தைத் தான் பாராட்டுவார்கள். ஆனால் தந்தையின் பங்கும் எந்த விதத்திலும் குறைந்ததில்லை.

//நல்ல அப்பாவாய் நாம் இருந்திட அப்பாக்கள் முன்மாதிரிகள். நல்ல அப்பா, திருட்டு அப்பா, அரசியல் அப்பா, டாஸ்மாக் அப்பா, பிசினஸ் அப்பா, கவர்மென்ட் அப்பா, கூலி அப்பா, என்று அப்பாக்கள் பலவிதம். ஆனால் நம் பிள்ளை ஒழுங்காக உருப்பட வேண்டும் என்பதே எல்லா அப்பாக்களின் முதல் நோக்கம். எல்லா அப்பாக்களும் நிஜமான (சில நேரம் பொய்யான ) தயாரிப்பாளர்கள் . ஆனால் அதில் சில பேரே நல்ல இயக்குனர்கள். அவர்கள் கண்டிப்பான வாத்தியார்கள். சில நேரம் கம்பை உபயோகபடுத்துகிறார்கள். சில நேரம் உண்மையிலேயே நம்மை படுத்துகிறார்கள். //

உண்மையான வார்த்தைகள்.

//அவர்கள் கரண்ட் போல. இல்லாத போதுதான் அவர்களின் அருமை தெரியும்.. //

சத்தியமான வார்த்தைகள்

//ஆக .. அப்பாக்களை மதிப்போம்.. வயதான காலத்தில் உறு துணையாய் இருப்போம். குறைந்த பட்சம் உறுத்தாமல் இருப்போம். நல்ல அப்பாவாய் நாமும் இருப்போம்.//

நிச்சயமாக.

நன்றி.

Naresh Kumar said...

நல்ல கதை!!!

கிராமங்களில் நான் அறிந்த பல அப்பாக்கள் இது மாதிரிதான் இருந்திருக்கின்றனர்...

இதே போன்றதொரு சம்பவம் என் அப்பாவிற்கும் நடந்திருக்கிறது, அதிலும் ஒரே வருடத்தில் அவரது மிக நெருங்கிய நண்பர்கள் மூவர் இறந்து போனர்...

எப்போதும் மற்றவர்களைத் தேற்றும், தன் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாத, தன் குழந்தைகளுக்கு மட்டுமே தான் ஆறுதல், எக்காரணத்தைக் கொண்டும் தன் குழந்தைகள் தனக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய கஷ்டத்தைக் கூட தரக்கூடாது என்று நினைக்கிற தந்தை அந்த நண்பர்களின் மறைவின் போது ரொம்பவே வருத்தப்பாட்டார்.....

எங்கள் தாத்தாவின் மறைவிற்குப் பின், எங்கள் கையைப் பிடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தது அப்போதுதான்....

உங்கள் கதை இவற்றை நினைவுக்கு கொண்டு வந்தது.....மிக நன்று!!!

Maximum India said...

//எப்போதும் மற்றவர்களைத் தேற்றும், தன் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாத, தன் குழந்தைகளுக்கு மட்டுமே தான் ஆறுதல், எக்காரணத்தைக் கொண்டும் தன் குழந்தைகள் தனக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய கஷ்டத்தைக் கூட தரக்கூடாது என்று நினைக்கிற தந்தை அந்த நண்பர்களின் மறைவின் போது ரொம்பவே வருத்தப்பாட்டார்.....//

உண்மைதான் நரேஷ்! பல வருடங்கள் ஒன்றாக பழகிய நண்பர்களின் மறைவு எப்படிப் பட்ட தைரியசாலியையும் கலங்கடித்து விடும்.

இது போன்ற தருணங்களில் பெரியவர்களுக்கு ஆதரவாக ஆறுதலாக இருக்க வேண்டியது நமது கடமை.

நன்றி.

Blog Widget by LinkWithin