The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Saturday, July 18, 2009
மிதி எனும் நதியின் கதை
ஜூலை 2005, மும்பையில் ஒரே நாளில் 95 செ.மீ மழை. மும்பை வெள்ளக்காடானது. போக்குவரத்து மற்றும் தொழில் ஸ்தம்பித்தது. நூற்றுக் கணக்கானவர்கள் பலியானார்கள் மழை நாள் அன்று நான் பெங்களூரில் இருந்தாலும், மழை நாளுக்கு இரண்டு நாள் கழித்து மும்பைக்கு பணிமாறுதலை முன்னிட்டு விமானத்தில் குடும்பத்துடன் பயணம் செய்கிறேன்.
மும்பைக்கு மதியம் வந்து சேர வேண்டிய விமானம் நடு இரவில் வந்து சேருகிறது. அதுவும் மும்பைக்கு மேலே நடு வானில் பலமுறை வட்டமடித்த பிறகு. விமான ஓடுதளம் பாதிக்கப் பட்டதனால், ஒரே ஒரு ஓடுதளத்தில் அனைத்து விமானங்களும் இயக்கப் படுகின்றன. மூன்று முறை கீழே இறக்க முயற்சி செய்து பின்னர் ஒவ்வொரு முறையும் நேர்குத்தாக விமானத்தை மேல் எழுப்பிய விமானி, "அதிர்ஷ்டவசமாக எதிரே வந்த விமானத்துடன் மோதாமல் தப்பியதாக" அறிவிக்கிறார். அம்மா கந்தசஷ்டி கவசம் சொல்லிக் கொண்டே வருகிறார்.
விமானதளத்துக்கு வெளியே மும்பை, இது வரை பார்த்திராத வண்ணம் வெறிச்சோடிக் கிடக்கிறது. வீட்டுக்கு செல்ல டாக்ஸி கிடைப்பது கடினமாக இருக்கிறது. சாலையின் ஓரத்தில் வாகனங்கள் அநாதாரவாக விடப் பட்டுள்ளன.
அடுத்த நாள், மளிகை சாமானம் வாங்க கலா நகருக்கு சென்றால், அந்த பகுதியினரின் வீட்டு சாமானங்கள் எல்லாம் சாலையில் கிடக்கின்றன. முதல் மாடி உயரம் வரை வெள்ளம் சென்றதாக மக்கள் கூறுகின்றனர் . மளிகை பொருட்கள் முழுதும் முழுகி விட்டதால் ஒரு வித துர்நாற்றம் வீசுகின்றது.
இந்த பேரழிவுக்கு காரணமான மிதி நதியின் கரையோரத்தில்தான் எனது வீடு அமைந்திருக்கிறது. அந்த நதியின் ஊடாக சுனாமி வரப் போகிறது என்ற வதந்தி வேறு. நாங்கள் சில நாட்கள் தொடர்ந்து அந்த நதியையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
தொடர்ந்து சில நாட்கள் மழை விட்டபாடில்லை. தனது வாழ்நாளில் இது போன்ற ஒரு மழையை பார்த்ததில்லை என்று என் தந்தை கூறுகிறார். திரும்பி ஊருக்கு ஒழுங்காக போவோமோ என்று கூட ஒரு சந்தேகம் அவர்களுக்கு.
பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஏகப்பட்ட விமர்சனம். மிதி எனும் ஒரு அற்புதமான நதியின் போக்கை மாற்றி அதை நகரத்தின் வடிகாலாக (நம்மூர் கூவம் மாதிரி) மாற்றியதுதான் இந்த பேரழிவுக்கு காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் அள்ளி வீசப் படுகின்றன. இன்றளவும் இந்த நதி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து சில கி,மீ. நீளத்திற்கு தூய்மையான நதியாக பாய்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
"மிதியை காப்பாற்றுவோம்" என்ற கோஷங்களுடன் மும்பைக்கர்கள் அந்த நதியின் கரையோரமாக ஊர்வலம் போகின்றனர். "மிதியை காப்பாற்றுவோம்" என்ற கோஷங்கள் இட்ட பனியன்கள் பரபரப்பாக விற்பனையாகின்றன. மும்பைக்கர்களின் ஒற்றுமை மற்றும் மீண்டு எழும் திறம் குறித்து அனைத்திந்திய தலைவர்கள் புகழ்கின்றனர். மிதியை சீர்படுத்த மத்திய அரசின் நிதி உதவி கோரப் படுகின்றது. இது உடனடிக் கடமை என்று மத்திய அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.
சில நாட்கள் கழித்து, என் வீட்டின் அருகே அனைத்து செய்தி தொலைகாட்சி நிறுவனங்களின் வாகனங்களும் நின்றுள்ளன. ஏகப்பட்ட போலீஸ் பாதுகாப்பு. என்னவென்று விசாரித்த போது, மிதியை சீர்படுத்தும் திட்டம், முதல் அமைச்சரால் துவக்கப் படுவதாக தெரிய வருகிறது.
அடுத்த நாள் பத்திரிக்கைகள் முழுக்க இந்த செய்திதான். பல நூறு கோடி முதலீட்டில் உருவான திட்டத்தின் உதவியால் மும்பையின் தேம்ஸ் நதியாக மிதி மாறப் போகிறது என்ற வகையிலான அறிவிப்புக்கள். படகு சவாரி, குழந்தைகளுக்கான பூங்கா மற்றும் தீம் பூங்காக்கள் இன்னும் பலப் பல விஷயங்கள் மிதி நதிக்கு கிடைக்கப் போகிறது என்றெல்லாம் அறிவிப்புக்கள்.
எல்லா அப்பாவி இந்தியர்களைப் போலவே நானும் கனவில் மிதந்தேன். வீட்டுக்கு அருகே இவ்வளவு அருமையான விஷயங்கள் கிடைக்கப் போகிறதே என்றெல்லாம் நினைத்திருந்தேன்.
மிதி தூய்மை அமைப்பு என்ற ஒரு அரசு அமைப்பு உருவாக்கப் படுகிறது. பல தனியார் தொண்டு அமைப்புக்களும் உருவாக்கப் படுகின்றன.
அடுத்த மழை காலத்திற்குள், சொன்னதில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றுவோம் என்றார் முதல் அமைச்சர். சொன்ன படியே, பல பொக்லைன் வண்டிகள் பணியில் அமர்த்தப் பட்டன. பொக்லைன் வண்டிகளின் போக்குவரத்தால், மும்பையில் ஓரளவுக்கு தூய்மையான எங்கள் பகுதி சேறும் சகதியுமாக காணப் படுகிறது. பல இடைஞ்சல்களையும் நாங்கள் பொறுத்துக் கொண்டோம். நாட்டு நலந்தானே முக்கியம்?
மிதியின் ஓரத்தில் அமைந்திருக்கும் எளிய மக்களின் குடியிருப்புக்களை அகற்ற வேண்டும் என்று உச்சநீதி மன்றம் ஆணை பிறப்பிக்கின்றது. பல நூறு குடும்பங்கள் வீடு இழக்கின்றனர்.
அதே சமயம், இந்த சேறும் சகதியும் கொட்டப் படும் இடம் குறித்து பல சச்சரவுகள் எழுகின்றன. மீண்டும் மிதி பத்திரிக்கைகளின் கவனத்திற்கு வருகிறது. அதன் பிறகு சில நாட்கள் பொக்லைன் வண்டிகள் தென்படவில்லை.
அதன் பிறகு பொக்லைன் வண்டிகள் வேலை செய்தாலும் சகதி இறைந்து காணப் படுவதும் குறைந்து விடுகின்றது.
சில மாதங்கள் கழித்து பார்த்தால், மிதியின் அகலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை உணர முடிகிறது. என்னவென்று பார்த்தால், மிதி நதியின் மீது ஒரு சமாதி எழுப்பி அதனை பிளாட்டுக்களாக மாற்றி வருவதை கண்கூடாக காண முடிகிறது. படகு போக்குவரத்து, குழந்தைகள் பூங்கா எல்லாம், எப்போதும் போல கனவாக முடிந்து விடுகிறது.
யாரிடம் கேள்வி கேட்க முடியும்?
வாக்களித்த மக்களிடம் வாக்குறுதி அளித்த முதல் அமைச்சர், மும்பை தீவிரவாதி தாக்குதலுக்கு பின்னர், முதல்வர் பதவியில் இருந்து சில காலம் ஓய்வு பெற்று பின்னர் மத்திய அமைச்சராகி விட்டாரே?
கடந்த அக்டோபர் மாதம், மிதி தூய்மை திட்டம் கிட்டத்தட்ட நிறைவு பெற்றதாக மாநகராட்சி ஆணையர் அறிவிக்கின்றார். மும்பைக்கர்களுக்கு மிதியால் இனிமேல் பிரச்சினை வராது என்றும் உறுதி அளிக்கின்றார்.
அடுத்த மழைக்காலமும் வருகின்றது.
சென்ற வாரம் மும்பையில் வெறும் பதினைந்து செ,மீ மழை. ஊர் மீண்டும் வெள்ளக்காடாகிறது. மிதியின் அளவு அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாகவும் பல குடும்பங்கள் வீடுகளை இழந்து விட்டதாகவும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்திகள். முன்னாள் முதல்வரின் கனவின் படி பலர் மீண்டுமொருமுறை படகு சவாரி செய்தனர். பல வாகனங்கள் கைவிடப் பட்டன.
இவ்வளவு குறைந்த மழை அளவுக்கெல்லாம் மும்பையில் வெள்ளம் வருகின்றதே என்ற சில முனகல்கள் இங்கும் அங்கும். மும்பையில் கட்டுமானப் பணிகள் அதிகமாகி விட்டதால்தான் இப்படி அடிக்கடி வெள்ளம் வருகின்றது என்று மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.
எந்த கட்டுமானப் பணிகள் என்று சொல்லவே இல்லையே சார் என்று மனம் கேட்கின்றது.
நன்றி.
Labels:
செய்தியும் கோணமும்,
பயணங்கள்/அனுபவங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//சில மாதங்கள் கழித்து பார்த்தால், மிதியின் அகலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை உணர முடிகிறது. என்னவென்று பார்த்தால், மிதி நதியின் மீது ஒரு சமாதி எழுப்பி அதனை பிளாட்டுக்களாக மாற்றி வருவதை கண்கூடாக காண முடிகிறது. சென்ற வாரம் மும்பையில் வெறும் பதினைந்து செ,மீ மழை. ஊர் மீண்டும் வெள்ளக்காடாகிறது.//
மிதி என்ற ஒரு நதி இருந்த அடையளைதியே காங்கிரட் சமாதி எழுப்பி மறைத்து விடுவார்கள் இதற்க்கு மும்பை மிதிநதி மட்டுமில்லை,நம் தேசத்தில் உள்ள அணைத்து
நகரங்களில் உள்ள நதிகளும் பலிகடாக்கள் தான்.
மழைக்கு மும்பை நகரம் மிதந்தது என்று பேப்பர் செய்தியை உண்மையாக்கி விடுவார்கள் (நதி இருந்தால் தான் அதில் வெள்ளம் போகுமே).
நன்றி.
நன்றி தாமஸ் ரூபன்!
நீங்கள் சொல்வது சரிதான்.
நதியின் பாதையில் குடியிருப்புக்களை உருவாக்கி விட்டு மழைக் காலத்தில் ஊருக்குள் நதி நுழைந்து விட்டது என்று நதியின் மீது குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் நியாயமானது?
நன்றி.
விமான அனுபவம் பயங்கர திரில் போல!
அரசியல், புதிதாக சொல்ல என்ன இருக்கிறது!
நன்றி வால்பையன்!
//விமான அனுபவம் பயங்கர திரில் போல!//
குடும்பத்தோடு கும்பலாக வந்த அந்த விமான பயணம் மட்டுமல்ல, அதன் பிறகு சில நாட்கள் வெள்ளத்தால் பாதிக்க பட்ட மும்பை வாசமும் திரில்லாகவே இருந்தது. இதற்கிடையே பெங்களூரில் இருந்த அனுப்பப்பட்ட வீட்டு சாமானங்கள் மழையால் வழியிலேயே மாட்டிக் கொள்ள சில நாட்கள் கடினமாகவே கழிந்தன.
நன்றி.
சமயங்களில் கோபம் விண்ணை முட்டுகிறது... இது போன்ற மாக்களைக் கண்டு!!!
பேசாமல் ஆட்டு மந்தையாகவே இருந்து விடத் தோன்றுகிறது. கோபப்பட்டே உடம்பை கெடுத்துக் கொள்வதற்கு பதில்....
Post a Comment