எனது முந்தைய பதிவின் அடிப்படையில் ஒரு நண்பர் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கு விளக்கமாக பதில் சொல்ல வேண்டியிருந்தாலும், அந்த கேள்வி பதில் பலரையும் சென்றடைய வேண்டும் என்று எண்ணியதாலும் இதை ஒரு பதிவாகவே உருவாக்கி விட்டேன்.
கேள்விகள்
"1.அமெரிக்க அரசு இப்படி டாலர் அளவக்கு அதிகமாக அடித்து வெளிவிடுகிறதே,இதற்கு எதுவும் வரைமுறை (அ)கட்டுப்பாடு இல்லையா?
2.இப்படி டாலர் அளவக்கு அதிகமாக அடித்து புழக்கத்தில் விட்டும் டாலர் மதிப்பு 48.25 யாக இருப்பது எப்படி? 2007ல் இதன் மதிப்பு 38 ரூபாய் தானே இருந்தது.
3.இப்படி டாலர் அளவக்கு அதிகமாக அடித்து புழக்கத்தில் விடுவதால் டாலர் மதிப்பு குறையும் என்று கூறிகிறார்கள் ஆனால் அவ்ர்கள் டாலரை மற்ற நாட்டு பங்குசந்தைலும், மற்ற நாட்டு பொருட்களை வாங்கி குவித்தால் டாலர் மதிப்பு எப்படி குறையும்? இது மற்ற நாட்டு பொருளாதாரத்தை பாதிக்காதா ? "
இந்த கேள்விகளுக்கு சற்று விளக்கமாக பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
உதாரணத்திற்கு சீனாவை எடுத்துக் கொள்வோம். சீனா ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்கிறது. அந்த பொருட்களில், உள்ளூர் உபயோகம் போக மீதியை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. அந்த பொருட்களுக்கு ஈடாக அமெரிக்கா ஏராளமான டாலர் பணத்தை தருகிறது.
இங்கு ஒரு விஷயத்தை கருத்தில் கொள்ளவும். ஒரு நாட்டின் கரன்சி வேறு ஒரு நாட்டில் ஒருபோதும் செல்லுபடி ஆகாது. (கரன்சி மாற்றுபவர்களும் இறுதியாக அந்த கரன்சியை அச்சடித்த நாட்டுக்குத்தான் அனுப்பி வைப்பார்கள்) எனவே அமெரிக்காவிடம் இருந்து பெற்ற கரன்சியினால் சீனாவிற்கு உள்நாட்டில் உபயோகம் ஏதும் இல்லை.
எனவே ஏற்றுமதி மூலம் தான் பெற்ற டாலர் பணத்தை சீனா மீண்டும் அமெரிக்க நாட்டிலேயே முதலீடு செய்கிறது. (வேறென்ன செய்ய முடியும்?) சீனா முதலீடு செய்ய ஏதுவாக அமெரிக்கா பல கடன் பத்திரங்களை அச்சடிக்கிறது. (அவ்வாறு கடன் மூலம் பெற்ற பணத்தைத்தான் அமெரிக்கா தன் இறக்குமதிக்கு ஈடாக கொடுக்கிறது) தான் பெற்ற கடனுக்கு வட்டியாகவும் (மிகவும் குறைவு) டாலர் பணத்தை சீனாவிற்கு அமெரிக்கா அளிக்கிறது. அந்த பணத்தையும் சீனா அமெரிக்காவிலேயே மீண்டும் முதலீடு செய்கிறது. இப்படி அமெரிக்காவில் இருந்து உருவாக்கப் படும் டாலர் பணம் அமெரிக்காவில்தான் இறுதியில் தஞ்சமடைகிறது.
ஒருவேளை, சீனா தான் பெற்ற டாலர் பணத்தை, தனது சொந்த இறக்குமதி தேவைக்காக இந்தியா போன்ற இன்னொரு நாட்டிடம் வழங்கலாம். ஆனால் அந்த பணமும் அங்கு சுற்றி இங்கு சுற்றி இறுதியில் சென்றடைவது அமெரிக்காவில்தான்.
இந்த டாலர் சுழற்சி முறையில், சில சமயங்களில் அமெரிக்க அரசாங்கம் ஏராளமான கடனை வாங்கி வட்டி கட்ட முடியாமல் நிதிப் பற்றாக்குறையில் தடுமாறும் போது, அந்நாட்டின் மத்திய வங்கி புதிய நோட்டுக்களை உருவாக்குகிறது. அந்த பணம் மீண்டும் உலகம் சுற்ற ஆரம்பிக்கிறது.
இப்படி ஏராளமான டாலர் பணம் புழக்கத்தில் வரும் போது டாலர் மதிப்பு சர்வதேச சந்தையில் குறைந்து விடுகிறது. மற்ற நாணயங்களின் மதிப்பு உயர்கிறது.
அதே சமயத்தில், மற்ற நாடுகளும் இதே போன்ற ஒரு பாணியை (Monetization of Fiscal Deficit), சிறிய அளவில், பின் பற்றுவதால், டாலர் மதிப்பு மிகவும் பெரிய அளவில் குறைந்து போவதில்லை. குறிப்பாக இந்தியாவில் கூட (அரசு கடனை சந்தையில் இருந்து வாங்குவதன் மூலம்)ஏராளமான புதிய பணம் மத்திய வங்கியினால் உருவாக்கப் படுகிறது.
இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் அந்நிய செலவாணி (குறிப்பாக டாலர்) கையிருப்பு பெரிய அளவில் உள்ளன. இந்த பணம் பெரும்பாலும் மிகக் குறைந்த வட்டிக்கு அமெரிக்காவிலேயே முதலீடு செய்யப் படுகின்றன. இந்த முதலீட்டினால் ஏராளமான நஷ்டத்தையும் (வட்டி குறைவு மற்றும் நாளுக்கு நாள் டாலர் மதிப்பு குறையும் அபாயம்) சந்திக்கின்றன.
தனது அந்நிய செலவாணி கையிருப்பை டாலரிலிருந்து யூரோ நாணயத்திற்கு மாற்றியதாலேயே சதாம் ஹுசைன் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளானார் என்று சொல்லப் படுகிறது. இப்போது சீனா தனது கையிருப்பை யூரோ நாணயத்திற்கு மாற்றி வருகிறது. டாலருக்கு மாற்றாக ஒரு புதிய உலக கரன்சியை உருவாக்க வேண்டும் என்றும் கூட சீனா சொல்லி வருகிறது. சீனாவும் ஒரு வல்லரசு என்பதால் அமெரிக்கா ராஜரீக நிர்பந்தங்களை மட்டும் ஏற்படுத்தி வருகிறது.
இந்தியா போன்ற நாடுகளின் கரன்சிகள், பொதுவாக, மற்ற நாடுகளால் அங்கீகரிக்கப் படுவதில்லை. எனவே தமது இறக்குமதி தேவைக்கும் வெளிநாட்டுக் கடன்/வட்டி திருப்பி செல்வதற்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு டாலர் உதவி தேவைப் படுகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை டாலர் என்பது வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு உதவும் ஒரு முக்கிய சாதனம் (vehicle) ஆகும். இந்த சாதனத்தின் சந்தை விலை, தேவை மற்றும் வழங்குதல் (Demand and Supply) ஆகிய சந்தை விதிகளின் அடிப்படையில் மாறுபடுகிறது. (ஆனால் முழுக்க முழுக்க என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ரூபாய் நாணய மாற்று வீதம் (Capital Account Convertiblity) முழுமையானதல்ல) கடந்த இரண்டு வருடங்களில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் (FIIs) தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற்றதாலேயும், இந்தியாவின் ஏற்றுமதியை விட இறக்குமதி மிகவும் அதிகமாக இருப்பதாலேயும் சந்தையில் டாலர் தேவை அதிகமாக ரூபாய் மதிப்பு குறைந்து போனது.
என்னுடைய கற்பனையில் மேற்சொன்ன டாலர் சுழற்சி முறை எப்படி இருக்கிறது தெரியுமா?
ஒரு நாட்டில் ஒரு "கொழுத்த" பணக்காரன் இருந்தான். அவனுக்கு சாப்பிடுவதை தவிர வேறு வேலையில்லை. அவனிடம் இருந்த காகிதத்தில் இவ்வளவு காசு என்று எழுதி அவனுக்கு சேவை செய்தவர்களுக்கெல்லாம் கொடுத்து வந்தான். அந்த காசு ஊர் முழுக்க செல்லுபடியானது.
அந்த ஊரின் பொருளாதாரமே அவனை நம்பித்தான் இருந்தது.
உழவன் அவனுக்கு சாப்பிட உணவளித்தான். நெசவாளி உடையளித்தான். ஒருவன் அவன் வீட்டில் வேலை செய்தான். ஒருவன் அவனுக்கு வைத்தியம் பார்த்தான். ஒருவன் அவனிடம் கடன் வாங்கினான். இன்னுமொருவன் அவனுக்கு கடன் கொடுத்தான்.
மேற்சொன்ன கணக்கு வழக்குகளை இன்னுமொருவன் சரி பார்த்தான்.
இன்னுமொருவன் அந்த காகிதத்தை (காசு என்று எழுதப் பட்ட அந்த காகிதத்தை சம்பளமாக வாங்கிக் கொண்டு) தயாரித்துக் கொடுத்தான்.
மேற்சொன்ன அனைவருமே தமது எதிர்காலம் அந்த "கொழுத்தவனை" நம்பித்தான் இருக்கிறது என்று நம்பியிருந்தனர். அவனுக்கு மட்டும்தான் தெரியும் அவனுடைய எதிர்காலம் மற்றவர்களின் ஒற்றுமையின்மையிலும் முட்டாள்தனத்திலும்தான் உள்ளது என்று.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பேராதிக்கம் உலக நாடுகளை ஒவ்வொரு வகையில் சுரண்டித்தான் வந்திருக்கிறது. தற்போதைய காலகட்டம் அமெரிக்காவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் பேராதிக்கத்திற்கு டாலர் ஒரு மிகப் பெரிய ஆயுதமாகவே அமைந்திருக்கிறது.
நன்றி.
33 comments:
பகிர்வுக்கு நன்றி ..
அருமையான பதிவு... நன்றி.
எளிமையான அருமையான விளக்கம். நன்றி!
நல்ல விளக்கம், எளிமையாகவும் அருமையாகவும் இருந்தது....
//அந்த கேள்வி பதில் பலரையும் சென்றடைய வேண்டும் என்று எண்ணியதாலும் இதை ஒரு பதிவாகவே உருவாக்கி விட்டேன்.//
பலரையும் சென்றடைய வேண்டும் என்று உயர் நோக்கத்தில் எழிய நடையில் சிறப்பாக
புரியும்படி இந்த பதிவை தந்ததுக்கு நன்றி..நன்றி.
//இப்போது சீனா தனது கையிருப்பை யூரோ நாணயத்திற்கு மாற்றி வருகிறது. டாலருக்கு மாற்றாக ஒரு புதிய உலக கரன்சியை உருவாக்க வேண்டும் என்றும் கூட சீனா சொல்லி வருகிறது.//
யூரோ நாணயமும் இதே போல் அளவக்கு அதிகமாக அச்சடித்து வெளியிட மாட்டார்கள்
என்று என்ன உத்ரவாதம்?
ஒரு புதிய உலக கரன்சியை உருவாக்கினாலும் அதிலும் இப்போதய நாட்டாமை அமெரிக்காவின் தலையீடு இருக்காத?
//அவனுக்கு மட்டும்தான் தெரியும் அவனுடைய எதிர்காலம் மற்றவர்களின் ஒற்றுமையின்மையிலும் முட்டாள்தனத்திலும்தான் உள்ளது என்று.//
ஏமாறுவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
நன்றி சார்
//இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் அந்நிய செலவாணி (குறிப்பாக டாலர்) கையிருப்பு பெரிய அளவில் உள்ளன. இந்த பணம் பெரும்பாலும் மிகக் குறைந்த வட்டிக்கு அமெரிக்காவிலேயே முதலீடு செய்யப் படுகின்றன.//
அமெரிக்காவிலேயே முதலீடு செய்யப்பட்டலவது பரவால்லை.ஆனால் ஆயுதமாக வாங்கி குவிக்கின்றன இதனால் அமெரிக்காக்கு நல்ல ஆதாயம்.
நன்றி.
நன்றி சூரியன்!
நன்றி சுந்தர்!
ராஜா பாராட்டுகிறாரா? மிகவும் ஆச்சரியமாக உள்ளது. மிக்க நன்றி.
நன்றி நரேஷ்!
நன்றி தாமஸ் ரூபன்!
//யூரோ நாணயமும் இதே போல் அளவக்கு அதிகமாக அச்சடித்து வெளியிட மாட்டார்கள் என்று என்ன உத்ரவாதம்?
ஒரு புதிய உலக கரன்சியை உருவாக்கினாலும் அதிலும் இப்போதய நாட்டாமை அமெரிக்காவின் தலையீடு இருக்காத?//
பெரிய கேள்விகளாக கேட்கிறீர்கள். முடிந்த வரை பதில் சொல்கிறேன்.
யூரோ நாணயத்தை அச்சிடுவது ஐரோப்பிய மத்திய வங்கி. அது எந்த ஒரு தனிநாட்டின் கட்டுப்பாட்டிலும் வராத காரணத்தால், இது போன்ற பிரச்சினை வராது என்று நம்பலாம்.
இப்போது கூட பன்னாட்டு நிதி மையத்தின் வெளியீடுகள் உலக பொது நாணயங்களாக கருதப் படுகின்றன. ஆனால் அவை டாலர் அளவுக்கு அதிக பிரபலம் ஆகவில்லை. இந்த நாணயத்தை அதிகம் உபயோகப் படுத்த வேண்டும் என்று இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் முயல்கின்றன. ஆனால் அந்த முயற்சிக்கு அமெரிக்கா பெரிய முட்டுக் கட்டையாக உள்ளது. ஆசிய பிராந்தியத்திற்கென தனி கரன்சியை உருவாக்க வேண்டும் என்றும் கூட முயற்சிகளின் நடக்கின்றன.
பதிவிலேயே கூறியபடி, மற்ற நாடுகளின் ஒற்றுமையின்மையே டாலரின் வெற்றி நடைக்கு முக்கிய காரணம்.
உங்கள் கேள்விகள் என்னுடைய அறிவை தூர் வார மிகவும் உதவியாக உள்ளன,
நன்றி.
தமிழில் இவ்வளவு எளிய நடையில், இந்த பொருளாதார விஷயத்தை எழுதுவது மிகவும் கடினமான செயல்.
நீங்கள் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள்;
வாழ்த்துக்கள்!
நன்றி கௌதமன்!
//தமிழில் இவ்வளவு எளிய நடையில், இந்த பொருளாதார விஷயத்தை எழுதுவது மிகவும் கடினமான செயல்.//
உண்மைதான். சொல்லப் போனால் நான் எழுத விரும்பும் எவ்வளவோ விஷயங்கள் சரிவர தமிழ் படுத்த முடியாததாலேயே விடுபட்டுப் போனது.
நன்றி.
// அவனுக்கு மட்டும்தான் தெரியும் அவனுடைய எதிர்காலம் மற்றவர்களின் ஒற்றுமையின்மையிலும் முட்டாள்தனத்திலும்தான் உள்ளது என்று.//
சரியாச்சொனீங்க
// ஆசிய பிராந்தியத்திற்கென தனி கரன்சியை உருவாக்க வேண்டும் என்றும் கூட முயற்சிகளின் நடக்கின்றன.//
அதான் ஆசியான் வருதுன்னு சொன்னாங்க ஆனா இந்த ஜென்மத்துல வர்ரமாதிரி தெரியல
அருமையான பதிவுங்க.
தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?..
உங்கள் கருத்துக்களுக்கு இங்கே http://shanthru.blogspot.com/2009/07/blog-post_29.html அழைக்கப்படுகிறீர்கள்
நன்றி கார்த்திக்!
ஆசிய நாடுகள் அமெரிக்காவின் மீதான தமது கவனத்தை சற்றுக் குறைத்து கொண்டு தமக்கிடையேயான வணிகத்தை சற்று அதிகமாக்கினால் ஆசிய பிராந்தியத்திற்கு மிகவும் நல்லது.
நன்றி.
நன்றி சந்ரு!
உங்கள் தமிழ் ஆர்வத்தை பாராட்டுகின்றேன்! அதே சமயம், தமிழ் மீது உள்ள ஆர்வத்தைப் போலவே தமிழர் நல்வாழ்விலும் ஆர்வம் கொண்ட என் போன்றவரின் கருத்துக்களுக்கும் சற்று செவி கொடுங்கள்!
நன்றி.
தெளிவாகவும் எளிமையாகவும் எழுதியிருக்கீங்க.
வாழ்த்துக்கள்!
நன்றி நம்பி!
மிகவும் எளிமையான விளக்கம்.
இடை பற்றி மேலும் படிக்க எதாவது புத்தகம் இருகிறதா?
நன்றி ரவிகாந்த்!
டாலர் சுழற்சி பற்றி நிறைய புத்தகங்கள் உள்ளன. ஆனால் நான் அறிந்து கொண்டது பத்திரிக்கைகள் மற்றும் கருத்தரங்குகள் வாயிலாகத்தான்.
நன்றி.
//பெரிய கேள்விகளாக கேட்கிறீர்கள். முடிந்த வரை பதில் சொல்கிறேன். //
தமிழில் நீங்கள் மட்டும் தான் இந்த பொருளாதார விஷயத்தை இவ்வளவு எளிய நடையில்
எளிமையாகவும் அருமையாகவும் நல்ல விளக்கம் தருகிர்கள்.எனவே நீங்கள் திட்டினாலும் பரவாயில்லை உங்களுக்கு அடிக்கடி கேள்வி கேட்டு தொந்தரவு கொடுப்பேன்.
//உங்கள் கேள்விகள் என்னுடைய அறிவை தூர் வார மிகவும் உதவியாக உள்ளன//
உங்கள் பதில்கள் எங்கள் அறிவை விருத்தி செய்ய பேருதவி செய்கிறது.நன்றி அய்யா.
நீங்கள் கூரியதுப்பொல இப்போதய பங்கு சந்தை உயர்வு சூப்பர் பப்ல்ஸ் என்று சீனாஅரசாங்கமும் (29-07-09) கூரி உள்ளது. அதனால் ஆசியா பங்குசந்தைகள் வீழ்ச்சி அடைந்தன.
நன்றி அய்யா.
ஐரோப்பிய நாடுகள் ஒன்றினைந்து யூரோவை உருவாக்கியது போல் ஆசியா கண்டம் ”ஏசியன்” என்ற கரன்சியை உருவாக்கப்போவதாக சொன்னார்களே!
உதாரண கதை சூப்பர்!
//எனவே நீங்கள் திட்டினாலும் பரவாயில்லை உங்களுக்கு அடிக்கடி கேள்வி கேட்டு தொந்தரவு கொடுப்பேன்.//
திட்டவில்லை. வேடிக்கைக்காகவே சொல்லியிருந்தேன்! இன்னும் நிறைய கேள்விகளை கேளுங்கள். உங்கள் கேள்விகள் என்னுடைய சிந்தனையையும் தூண்டி விடுகின்றன.
//நீங்கள் கூரியதுப்பொல இப்போதய பங்கு சந்தை உயர்வு சூப்பர் பப்ல்ஸ் என்று சீனாஅரசாங்கமும் (29-07-09) கூரி உள்ளது. அதனால் ஆசியா பங்குசந்தைகள் வீழ்ச்சி அடைந்தன.//
அதே சமயம் இப்போதைக்கு பப்புள் வலுவாகவே உள்ளது. ஆனால் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். ஏற்கனவே நான் சொன்ன படி வர்த்தகர்களுக்கு இது பொற்காலம். தகுந்த இழப்பு நிறுத்தத்தை மட்டும் மறக்காமல் இருந்தால் சரி.
நன்றி
//ஐரோப்பிய நாடுகள் ஒன்றினைந்து யூரோவை உருவாக்கியது போல் ஆசியா கண்டம் ”ஏசியன்” என்ற கரன்சியை உருவாக்கப்போவதாக சொன்னார்களே!//
ஒற்றுமையின்மை இவ்வாறான பொது கரன்சியை உருவாக்க விடாமல் தடுக்கிறது.
நன்றி.
அருமையான பதிவு. நான் இதுவரை இவ்வளவு எளிய முறையில் டாலர் விலை நிர்ணயத்தை பற்றிய விளக்கம் கண்டது இல்லை. நன்றி.
//அருமையான பதிவு. நான் இதுவரை இவ்வளவு எளிய முறையில் டாலர் விலை நிர்ணயத்தை பற்றிய விளக்கம் கண்டது இல்லை. நன்றி//
நன்றி ஜெயகாந்த்!
அருமையான பதிவு
நன்றி சதுக்க பூதம்!
நீங்களே ஒரு சிறந்த பொருளாதார பதிவர். உங்களிடமிருந்து வாழ்த்து பெறுவது சந்தோசமான விஷயம். அப்புறம், ஆனந்த விகடம் வரவேற்பறையில் இடம் பெற்றதற்காக உங்களுக்கும் ஒரு வாழ்த்துக்கள். (ஏற்கனவே சொல்லி இருந்தால் இரண்டாவதாக ஏற்றுக் கொள்ளுங்கள், சொல்ல மறந்திருந்தால் பொறுத்தருளுங்கள்)
நன்றி.
வாழ்த்துக்கு நன்றி Maximum India.தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் படி இப்படி எழுதி இருப்பது மிகவும் கடினமான காரியும். இந்த பதிவின் சுட்டியை உங்கள் பதிவின் இடது புறம் எல்லோரும் எப்போதும் பார்க்கும் படி போட்டு வைத்தால் கூட நன்றாக இருக்கும்.
நல்ல பகிர்வு. மிக்க நன்றி.
அறிவுரைக்கு நன்றி சதுக்கபூதம் . இந்த பதிவு மட்டுமல்லாமல் பொருளாதார சிக்கல்கள் பற்றி எளிய விளக்கங்கள் அளிக்க முனைந்த எனது வேறு சில பதிவுகளையும் தனி சுட்டியாக இணைக்க முனைகிறேன்.
நன்றி.
நன்றி அக்பர்!
Post a Comment