
பங்கு சந்தை தனது ஆரவாரமான வெற்றிநடையை சென்ற வாரமும் தொடர்ந்துள்ளது. சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் மீண்டுமொருமுறை முக்கிய நிலையான 15000 புள்ளிகளுக்கு மேலே முடிவடைந்துள்ளது. உலகின் மற்ற பங்கு சந்தைகளும் கூட வெகுவாக உயர்ந்துள்ளன. சீனாவின் ஹாங்செங் குறியீடு 20000 புள்ளிகளுக்கு மிக அருகே உள்ளது. அமெரிக்காவின் டௌ ஜோன்ஸ் குறியீடு 9000 புள்ளிகளுக்கும் மேலே முடிவடைந்துள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் சற்று தெளிவான நிலையை அடைந்து விட்டாலும் கூட தனது "குறைந்த வட்டி கொள்கையை" தொடரப் போவதாக அந்நாட்டு மத்திய வங்கித் தலைவர் கூறியதும் பன்னாட்டு நிறுவனங்களின் காலாண்டு நிதியறிக்கைகள் சென்ற ஆண்டை விட மிகச் சிறப்பாக இருந்ததும் சென்ற வாரத்தில் உலகின் முக்கிய பங்கு சந்தைகள் மிகப் பெரிய அளவில் முன்னேற்றமடைய உதவியாக இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவின் வீட்டு விற்பனை அதிகமானதும் நம் நாட்டின் முக்கிய நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் சிறப்பாக இருந்ததும் கூட உள்ளூர் சந்தை உயர உதவியாக இருந்தன.
நேற்று ஒரு பன்னாட்டு பரஸ்பரநிதியின் நிதி மேலாளர் கூறினார், " அமெரிக்க அரசாங்கம் கிட்டத்தட்ட ஒன்றரை டிரில்லியன் டாலர் அளவுக்கு (கிட்டத்தட்ட எழுபது லட்சம் கோடி ரூபாய்) ஒரு நிரப்பப் படாத காசோலையை சந்தைகளிடம் (மறைமுகமாக) கொடுத்துள்ளது, இந்தப் பணம் உலகின் அனைத்து சந்தைகளிலும் பாயந்தோடுவதே உலக சந்தைகளின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம்"
அவர் சொன்னதில் உண்மையில்லாமல் இல்லை. அமெரிக்காவின் வீழ்ச்சியை தவிர்ப்பதற்காக எதையும் செய்ய அந்நாட்டு அரசாங்கம் தயாராக உள்ளது. அந்நாட்டின் நாணயம் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப் படுவது, புதிய கரன்சி நோட்டுக்களை தாராளமாக அச்சடிக்க மிகவும் சவுகரியமாக உள்ளது.
சந்தை இப்போது ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது. வெகு வேகமாக நிகழ்ந்து விட்ட சந்தை வளர்ச்சியில் பலர் (பரஸ்பர நிதிகள் உட்பட) பங்கு பெற வாய்ப்பில்லாமல் போய் விட்டது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பிறகு அவர்களில் பலர் "பொறுத்தது போதும்" என்று பொங்கி எழ வாய்ப்புக்கள் உள்ளது. அப்புறம் என்ன, சந்தையின் அடிப்படை விஷயங்களைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் கண்மூடித் தனமாக பலரும் உள்ளே நுழைய, சரித்திரம் மீண்டும் திரும்பக் கூடும்.
பல முக்கிய பொருளாதார காரணிகள் (பொருளாதார வளர்ச்சி, பண வீக்கம், வட்டிவீதங்கள், கடன் வளர்ச்சி, ஏற்றுமதி வளர்ச்சி போன்றவை) இன்னும் சிறப்பான நிலையை அடையாத போதும் கூட அல்லது அடையுமா என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கும் நிலையிலும் கூட இந்தளவுக்கு பங்கு சந்தை உயர்ந்திருப்பது சற்று ஓவர்தான்.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகளின் வருமான வளர்ச்சி குறைவாகவே இருக்கும் போது, குறியீட்டின் விலை-வருமான விகிதம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்ந்திருப்பதும் அடிப்படைகளுக்கு எதிரானது.
முக்கிய நிறுவனங்களின் லாப விகிதம் உயர்ந்தாலும் அவற்றின் விற்பனை விகிதம் அதிகம் உயர வில்லை என்பதும், செலவினக் குறைப்பு மற்றும் இதர வருமான உயர்வு ஆகியவையே அதிக லாபத்திற்கு முக்கிய காரணம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் மன பாய்ச்சலின் மற்றும் பணப் பாய்ச்சலின் அடிப்படையிலேயே நிகழக் கூடிய இந்த 'சூப்பர் பப்புள்' காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய விரும்புவர் சற்று நிதானித்து செயல்படுவது நல்லது. வதந்திகளின் அடிப்படையில் நீண்ட கால முதலீடு செய்ய வேண்டாம். ஊடகங்களின் பரிந்துரைகளை எச்சரிக்கையாக ஆய்வது நல்லது. சொல்லப் போனால், நல்ல விலை வந்தால், குறைந்த விலையில் வாங்கிய பங்குகளை விற்றும் கூட விடலாம்.
மேற்சொன்ன பரிந்துரைகள் முதலீட்டாளர்களுக்கு மட்டும்தான்.
பங்கு வர்த்தகம் செய்பவர்களுக்கு இது பொற்காலம். அதே சமயம் உரிய நகரும் இழப்பு நிறுத்தத்துடன் (Strict Dynamic Stop Loss Limit) மட்டும் வர்த்தகம் செய்யவும்.
இனி வரும் வார சந்தை கணிப்புக்கள்.
இந்தியாவின் அதிக சந்தை மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் நிறுவன காலாண்டு நிதி அறிக்கை சாதகமாக இல்லாதது சந்தைக்கு ஒரு கெட்ட செய்திதான். இந்திய மத்திய வங்கியின் காலாண்டு கொள்கை அறிவிப்பும் சந்தையில் ஒரு தாக்கத்தை உருவாக்கும். வரும் வாரத்தில் நிகழ உள்ள எதிர்கால நிலைகளின் முடிவும் சந்தையில் அதிக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும்
சென்செக்ஸ் 15600 (நிபிட்டி 4600) அருகில் ஒரு பெரிய எதிர்ப்பை சந்திக்கக் கூடும். இந்த நிலைகள் முழுமையாக முறியடிக்கப் பட்டால் மேலே சொன்னது போல ஒரு வெடிப்பு நிலை உருவாக வாய்ப்புள்ளது.
Intra Week (Nifty)
Spot 4568.55
Support1 4367
Support2 4314
Resistance1 4619
Resistance2 4675
Intra Week (Sensex)
Spot 15378.96
Support1 14721
Support2 14616
Resistance1 15531
Resistance2 15699
வரும் வாரம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.
நாணயம் (ரூபாய்), தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் சந்தைகளை பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக்கவும்.
http://dailyrupee.blogspot.com/2009/07/dollars-flooding-markets.html
நன்றி.
13 comments:
பிசினஸ் சேனல்களில் புரியாத பாஷையில் குழப்பும் பங்கு வர்த்தக விவரங்களை தெளிவாக சொன்ன பதிவருக்கு நன்றி. பங்கு மார்க்கெட் தினமும் தொடங்கும் போதும் முடியும் போதும் மணி அடிக்கபடுகிறது. எதற்கு என்று நான் சொல்கிறேன். காலையில் அடிக்கும் மணி முதலீடு செய்பவர்கள் உஷாராக இருக்க...எல்லோரும் அவரவர்கள் பணத்தை பார்த்து புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள் ..என சொல்லாமல் சொல்கிறது. மாலையில் அடிக்கும் மணி.. எவ்ளோ சொல்லியும் கேக்காத கேனபயல்களுக்கு இதோடு தப்பிச்சிக்கோ என்று அடிக்கப்படும் கடைசி மணி. நமது பதிவர் வாரா வாரம் அடிப்பது அக்கறை மணி. . படிச்சி புரிஞ்சு பொழைச்சிகங்க.
//மணி அடிக்கபடுகிறது. எதற்கு என்று நான் சொல்கிறேன். காலையில் அடிக்கும் மணி முதலீடு செய்பவர்கள் உஷாராக இருக்க...எல்லோரும் அவரவர்கள் பணத்தை பார்த்து புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள் ..என சொல்லாமல் சொல்கிறது. மாலையில் அடிக்கும் மணி.. எவ்ளோ சொல்லியும் கேக்காத கேனபயல்களுக்கு இதோடு தப்பிச்சிக்கோ என்று அடிக்கப்படும் கடைசி மணி//
நீங்கள் அடித்தது அருமையான உதாரண மணி!
மிக்க நன்றி பொதுஜனம்!
//மொத்தத்தில் மன பாய்ச்சலின் மற்றும் பணப் பாய்ச்சலின் அடிப்படையிலேயே நிகழக் கூடிய இந்த 'சூப்பர் பப்புள்' காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.//
இப்போழ்து இருக்கும் பங்கு சந்தை உயர்வு காணல்நீர் போன்ற மாயை என்று தெளிவாக
கூறியத்ர்க்கு நன்றி.
மிக நல்ல பதிவு.
பங்குச் சந்தையின் தற்போதைய மட்டம் அடிப்படை நிலைக்கு மாறுபட்டது என நெத்தி அடியாக சொல்லியுள்ளீர்கள்
//அமெரிக்க பொருளாதாரம் சற்று தெளிவான நிலையை அடைந்து விட்டாலும் கூட தனது "குறைந்த வட்டி கொள்கையை" தொடரப் போவதாக அந்நாட்டு மத்திய வங்கித் தலைவர் கூறியதும்//
தங்கம் விலை இறங்காமல் இருக்க இதுவும் ஒரு காரணம்னு சொல்றாங்களே உண்மையா?
நன்றி தாமஸ் ரூபன்!
//இப்போழ்து இருக்கும் பங்கு சந்தை உயர்வு காணல்நீர் போன்ற மாயை என்று தெளிவாக கூறியத்ர்க்கு நன்றி.//
இந்த அறிவுரை நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மட்டுமே. நீங்கள் ஒரு பங்கு வர்த்தகராக இருந்தால், இப்போது நடைபெறும் ஏற்றத்தாழ்வுகளை நன்கு பயன் படுத்திக் கொள்ளலாம். அதே சமயம், தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Dynamic Stop Loss Limit) மட்டுமே வர்த்தகம் செய்யவும்.
நன்றி.
நன்றி நெற்குப்பை தும்பி ஐயா!
//மிக நல்ல பதிவு.
பங்குச் சந்தையின் தற்போதைய மட்டம் அடிப்படை நிலைக்கு மாறுபட்டது என நெத்தி அடியாக சொல்லியுள்ளீர்கள்//
உண்மைதான் ஐயா. அதே சமயம் டாலர் பணம் பாதாளத்தையும் தாண்டி பாயும் போது, எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது என்ற ஒரு வித மாயையை உருவாக்கி பலரையும் மீண்டும் பங்கு சந்தைக்குள் உறிஞ்சி விடும் அபாயமும் இருக்கிறது.
நன்றி!
நன்றி வால்பையன்!
//தங்கம் விலை இறங்காமல் இருக்க இதுவும் ஒரு காரணம்னு சொல்றாங்களே உண்மையா?//
உண்மைதான்.
http://dailyrupee.blogspot.com/2009/07/dollars-flooding-markets.html
இந்த பதிவில் நான் கூறியுள்ளபடி, பங்கு சந்தைகளில் (குறுகியகால நோக்கில்) வீழ்ச்சி ஏற்பட்டால் டாலர் பணம் தங்க சந்தைக்குள் பெருமளவு நுழைந்து தங்க விலை கடுமையாக உயரும் வாய்ப்பு உள்ளது.
நன்றி
//இந்த அறிவுரை நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மட்டுமே. நீங்கள் ஒரு பங்கு வர்த்தகராக இருந்தால், இப்போது நடைபெறும் ஏற்றத்தாழ்வுகளை நன்கு பயன் படுத்திக் கொள்ளலாம். அதே சமயம், தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Dynamic Stop Loss Limit) மட்டுமே வர்த்தகம் செய்யவும்.//
உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி சார்.
//அமெரிக்காவின் வீழ்ச்சியை தவிர்ப்பதற்காக எதையும் செய்ய அந்நாட்டு அரசாங்கம் தயாராக உள்ளது. அந்நாட்டின் நாணயம் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப் படுவது, புதிய கரன்சி நோட்டுக்களை தாராளமாக அச்சடிக்க மிகவும் சவுகரியமாக உள்ளது.//
1.அமெரிக்க அரசு இப்படி டாலர் அளவக்கு அதிகமாக அடித்து வெளிவிடுகிறதே,இதற்கு
எதுவும் வரைமுறை (அ)கட்டுப்பட்டு இல்லையா?
2.இப்படி டாலர் அளவக்கு அதிகமாக அடித்து புழக்கத்தில் விட்டும் டாலர் மதிப்பு 48.25 யாக இருப்பது எப்படி?
2007ல் இதன் மதிப்பு 38 ரூபாய் தானே இருந்தது.
3.இப்படி டாலர் அளவக்கு அதிகமாக அடித்து புழக்கத்தில் விடுவதால் டாலர் மதிப்பு குறையும் என்று கூறிகிறார்கள் ஆனால் அவ்ர்கள் டாலரை மற்ற நாட்டு பங்குசந்தைலும்,
மற்ற நாட்டு பொற்ட்களை வாங்கி குவித்தால் டாலர் மதிப்பு எப்படி குறையும்? இது மற்ற நாட்டு பொருளாதாரத்தை பதிக்காத?
அன்புள்ள தாமஸ் ரூபன்!
உங்கள் கேள்விக்கான பதிலாக புதிய பதிவு. மறக்காமல் பாருங்கள்!
நன்றி.
//உங்கள் கேள்விக்கான பதிலாக புதிய பதிவு. மறக்காமல் பாருங்கள்!//
படித்து பார்த்து பதிலும் எழுதிவிட்டேன்.
நன்றி சார்.
//அமெரிக்காவின் வீழ்ச்சியை தவிர்ப்பதற்காக எதையும் செய்ய அந்நாட்டு அரசாங்கம் தயாராக உள்ளது.//
அமெரிக்காவின் போக்கு மற்ற நாடுகளை தின்று ஒழித்துவிட்டுத்தான் மற்ற வேலையை கவனிக்கும்,அமெரிக்காவின் போக்கை கண்டிக்க இந்திய,சீனா போன்ற நாடுகள்தான் சரியானவையாக இருக்கும்.வரும் காலத்தில் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்துதன் பார்க்கவேண்டும்.
மாற்றங்கள் ஒன்றுதான் மாறாதது.
நடப்பவை நல்லதாகவே நடக்கட்டும்.
நன்றி ரஹ்மான்!
Post a Comment