Thursday, July 30, 2009

பாரெல்லாம் பைந்தமிழ்!


பாரெல்லாம் பரவி இருந்த என் பைந்தமிழ் இன்று பள்ளிக் கூடங்களில் மறுக்கப் படுகின்றதே? தரணி எல்லாம் தவழ்ந்து வந்த என் தீந்தமிழை இன்றைய மழலையர் கற்க முடியாதபடி தனியார் பள்ளிகள் ஆங்கில கல்வி புகட்டுகின்றனவே? உலகெல்லாம் ஓங்கி ஒலித்த என் தமிழை ஒழித்துக் கட்ட தமிழின துரோகிகள் முனைந்து விட்டனரே? இதை தடுப்பவர் யார்?

திரண்டு வாருங்கள் தமிழர்களே! அழிகின்ற தமிழை காக்கும் பொறுப்பு உங்களிடம்தான் இருக்கிறது! பல்லாயிரம் ஆண்டு காலம் வாழ்ந்த நம் தமிழ் நாம் வாழ்ந்த காலத்தில் அழிந்தது என்று சரித்திரம் சொல்லக் கூடாது. தாய்மொழியை உதறுபவன் தன தாயை இகழ்ந்ததற்கு சமம். தமிழ் வழிக் கல்வியை தடுப்பவனை தாய் தடுத்தாலும் விடேன்.

இப்படியெல்லாம் சரளமாக எழுதிக் கொண்டிருந்த கவிக் கோவின் கண் முன்னே ஏராளமான கைத்தட்டுக்களும் பாராட்டுக்களும் விரிந்தன. தமிழ் குடிதாங்கி, தமிழின காவலர், தமிழ் செம்மல் என்றெல்லாம் ஏராளமான பட்டங்களை ஏற்கனவே சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும் தான் வருங்காலத்தில் இன்னும் என்னவெல்லாம் பட்டங்கள் சுமக்க வேண்டுமோ என்ற ஒருவித சந்தோச பயம் கூட அவருக்கு வந்தது.

இந்த போராட்டத்தை எதிர்த்து சில தமிழின துரோகிகளும், மாற்று மொழி தாசர்களும் நீதிமன்றத்திற்கு போகலாம். அந்நிய மொழியை குழந்தைகளுக்கு புகட்டுவதை அடிப்படை உரிமை என்றும் கூட கூறலாம். தடைகளை முறியடித்து தமிழ் கல்வி பற்றிய விழிப்புணர்வை எப்படி மக்களிடம் பரப்பலாம் என்று ஆழமான சிந்தனையில் மூழ்கி இருந்தவரை ஒரு குரல் தட்டி எழுப்பியது.

"ஹை டாடி! ஐ யாம் லீவிங் பார் அமேரிக்கா! சீ யு சூன்! "

சொன்னது வெறும் யாருமல்ல அமெரிக்காவில் ஐ.டி பிசினெஸ் பண்ணும் அவர் ஆசை மகன்தான்!

"ஓகே மை டியர் சன்! டேக் கேர்! கால் மீ லேட்டர்! "

பதில் அளித்த அவர் மீண்டும் எப்படி தமிழ் வழிக் கல்வி பற்றிய பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் பரப்புவது என்ற சிந்தனையில் மூழ்கி விட்டார்.

வாழ்க தமிழ்! வெல்க தமிழர்!

நன்றி.

10 comments:

வால்பையன் said...

கும்பானி பிரதர்ஸ் கதை மாதிரி இதுவும் ஒரு பிரபல புள்ளியோட கதையா!?

Maximum India said...

ஒரு புள்ளியோட கதை மட்டுமல்ல! இன்றைய பல புள்ளிகளோட கதை இது.

nerkuppai thumbi said...

மிக பயனுள்ள விஷயத்தை எடுத்துக் கொண்டு பின்னூட்டம் போட வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.

நாங்கள் படித்தபோது, (நானும் அறுபதை எட்டிக்கொண்டு இருப்பதால் " அந்தக் காலத்தில்..." என்று பேசத் துவங்கி விட்டேனோ தெரியவில்லை.)

95% ( இன்னும் அதிக மாக இருக்கலாம்) ஆரம்பக் கல்விக் கூடங்களில் தமிழே பயிற்று மொழியாக இருந்தது. 90-95% உயர் நிலைப் பள்ளிகளிலே தமிழே பயிற்று மொழி.
Pre-University இல தான் 90% ஆங்கிலம் பயிற்று மொழி..

என் சொந்த அனுபவத்தில் , சமூக இயல், சரித்திரம், தோட்ட வேலை, முதலியவை தாய் மொழியில் தான் இருக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் தன வீடு, சுற்றார், தெரு, ஊர், மாவட்டம், மாநிலம் பற்றிய அறிவும் எண்ணங்களும் வளரும். பிற காலத்தில் பல சூழ் நிலைகளில் இந்த அறிவும் அனுபவமும் மிக அவசியம்.

இதைப் பற்றி நிறைய எழுதலாம். தனியே பதிவு போட வேண்டும்; (யாரும் படிக்க மாட்டார்கள். என்பது வேறு)

ஆனால் ஒன்று::: இந்த விவாதங்கள் தாய் மொழி பயிற்றுவிக்கும் இடத்தில் வாழ கொடுத்து வைத்தவர்கள் மட்டுமே பயன் பெறுபவை. உங்களுக்கும் (மும்பையில் மகளை ஆரம்பக் கல்வி படிக்க வைக்க வேண்டிய நிலை) எனக்கும் ( அப்போது டில்லியில்) விவாதங்களுக்கான விஷயங்கள் மட்டுமே

Anonymous said...

என் கதை.

Thomas Ruban said...

//"ஓகே மை டியர் சன்! டேக் கேர்! கால் மீ லேட்டர்! "

பதில் அளித்த அவர் மீண்டும் எப்படி தமிழ் வழிக் கல்வி பற்றிய பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் பரப்புவது என்ற சிந்தனையில் மூழ்கி விட்டார்.//

உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் பல தமிழக அரசியல் தலைவர்களுக்கு இது ஒரு "நச்"
பதிவு.

நன்றி அய்யா.

கார்த்திக் said...

நாம எதுவும் செயமுடியாதுங்க
காலம் தான் பதில் சொல்லனும்

Maximum India said...

//மிக பயனுள்ள விஷயத்தை எடுத்துக் கொண்டு பின்னூட்டம் போட வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.//

உங்கள் பின்னூட்டத்திற்கு நான்தான் நன்றி சொல்லவேண்டும் நெற்குப்பை தும்பி ஐயா!

//95% ( இன்னும் அதிக மாக இருக்கலாம்) ஆரம்பக் கல்விக் கூடங்களில் தமிழே பயிற்று மொழியாக இருந்தது. 90-95% உயர் நிலைப் பள்ளிகளிலே தமிழே பயிற்று மொழி.
Pre-University இல தான் 90% ஆங்கிலம் பயிற்று மொழி.. //

உங்கள் காலகட்டத்தில் ஆங்கிலம் தாமதமாக அறிமுகப் படுத்தப் பட்டிருந்தாலும், ஆங்கில பயிற்சியின் தரம் மிகவும் அதிகமாக இருந்தது. ஆங்கிலேயரிடம் படித்தவர்களிடம் நீங்கள் படித்தீர்கள். இப்போது, மழலையர் பள்ளியிலேயே ஆங்கிலப் பாடம் அறிமுகப் படுத்தப் பட்டாலும் அதன் தரம் குறைவாகவே உள்ளது.

//என் சொந்த அனுபவத்தில் , சமூக இயல், சரித்திரம், தோட்ட வேலை, முதலியவை தாய் மொழியில் தான் இருக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் தன வீடு, சுற்றார், தெரு, ஊர், மாவட்டம், மாநிலம் பற்றிய அறிவும் எண்ணங்களும் வளரும். பிற காலத்தில் பல சூழ் நிலைகளில் இந்த அறிவும் அனுபவமும் மிக அவசியம். //

நிச்சயமாக. தாய்மொழி வழி கல்வி என்பது ஒருவரது சிந்தனைகளை தெளிவாக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், மென்பொருட் துறை மற்றும் தகவல் தொழிற்நுட்ப பன்னாட்டு சேவைத் துறை இந்தியாவில் பன்மடங்கு வளர்ச்சி அடைந்த நிலையில் விருப்பம் உள்ளவர்கள் , உலக மொழியான ஆங்கிலத்தை படிக்க தடை ஏற்படுத்தக் கூடாது. மாறாக கிராம மற்றும் சிறு நகரப் பகுதிகளிலும் தரமான ஆங்கிலம் கற்க வாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என்பது என் கருத்து.

தன் சொந்த மக்களை கான்வென்ட் பள்ளிக்கு அனுப்பி விட்டு குப்பன் சுப்பன் பிள்ளைகள் தமிழ் மட்டும்தான் படிக்க வேண்டும் என்று இன்றைய தமிழ் "பிரியர்கள்" நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?

//இதைப் பற்றி நிறைய எழுதலாம். தனியே பதிவு போட வேண்டும்; (யாரும் படிக்க மாட்டார்கள். என்பது வேறு) ஆனால் ஒன்று::: இந்த விவாதங்கள் தாய் மொழி பயிற்றுவிக்கும் இடத்தில் வாழ கொடுத்து வைத்தவர்கள் மட்டுமே பயன் பெறுபவை. உங்களுக்கும் (மும்பையில் மகளை ஆரம்பக் கல்வி படிக்க வைக்க வேண்டிய நிலை) எனக்கும் ( அப்போது டில்லியில்) விவாதங்களுக்கான விஷயங்கள் மட்டுமே//

காலம் காலமாக, தமிழை உணர்வு பூர்வமான மொழியாக மட்டுமே தமிழர்கள் அணுகுவது தமிழின் துரதிர்ஷ்டம். அறிவில் சிறந்த தமிழர்கள் கூட, துறை சார்ந்த, தொழில் சார்ந்த, அறிவியல் சார்ந்த விஷயங்களை சமஸ்க்ரிதம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் உருவாக்கி விட்டு கதை, வீரம் காதல் மற்றும் பக்தி போன்ற உணர்வு பூர்வமான பொருட்களுக்கு மட்டுமே தமிழை நாடி வந்துள்ளனர். திருக்குறள் போன்ற வெகுசில இலக்கியங்கள் மட்டுமே விதி விலக்கு.

இப்போதும் கூட பல்துறையிலும் வெற்றி பெற்ற தமிழர்களில் பலர் பொழுது போக்கு அல்லது உணர்வு பூர்வமான விஷயங்களை மட்டுமே பதிந்து வருகின்றனர்.

இந்நிலை மாறி ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன் போன்று, வணிக மொழியாகவோ, தொழிற் நுட்ப மொழியாகவோ, கல்வி மொழியாகவோ, சட்ட மொழியாகவோ தமிழ் அறியப் படுமேயானால் நம்மை விட சந்தோசப் படுபவர் யார் இருக்க முடியும்?

இதற்காக பாடுபட கல்வியிலும் தொழில் அறிவிலும் சிறந்து விளங்கும் பதிவுலக நண்பர்கள் முன்வர வேண்டும் என்பதே எனது ஆசையாகும்.

நன்றி.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

Maximum India said...

அன்புள்ள புகழினி!

//என் கதை.//

எந்த விதத்தில் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. நீங்கள் இது போன்ற ஒரு பதிவை ஏற்கனவே உருவாக்கி இருக்கலாம். ஏன், இன்னும் பலருக்கும் இது போன்ற சிந்தனைகள் உருவாகி இருக்கலாம். ஆனால், எனக்கு நேற்றுத்தான் தோன்றியது. எனவே இந்த பதிவை பதிந்தேன்.

நன்றி

Maximum India said...

நன்றி கார்த்திக்!

//நாம எதுவும் செயமுடியாதுங்க
காலம் தான் பதில் சொல்லனும் //

ஏன் முடியாது? நிறைய செய்ய முடியும்? மேலே ஒரு பதிலில் சொன்னபடி தமிழை உணர்வு பூர்வமான மொழி என்ற நிலையிலிருந்து மாற்றுங்கள். தமிழன் அறிவு பூர்வமானவனாக மாறுவான்.

நன்றி.

Blog Widget by LinkWithin