Monday, August 24, 2009

பங்குச்சந்தை வெற்றிப் பயணம்! முகமறியாதவர்களின் மூன்றாவது பாதை!


பங்குசந்தையில் வெற்றி பெற்றவர்கள் என்றால் பலருக்கும் வாரன் பபெட் போன்றவர்களும் மும்பை பங்கு தரகர்களும் மட்டும்தான் மனக் கண் முன்னே வருவார்கள்.

அதிமேதாவித்தனம் அல்லது செய்திகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சாமர்த்தியம் இருந்தால் மட்டுமே பங்குசந்தையில் வெற்றி பெற முடியும் என்ற எண்ணமும் பலருக்கும் உண்டு.

காதை சுற்றி மூக்கை தொடுவதை தவிர்த்து, மிக மிக எளிமையான பாதை ஒன்றில் பயணித்து பங்கு சந்தையில் வெற்றி பெற்ற மனிதர்கள் நம்மிடையே ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள் என்ற செய்தி உங்களுக்கு சற்று ஆச்சரியமாகக் கூட இருக்கலாம்.

இது மட்டுமல்ல, பங்குசந்தையில் பெரிய வெற்றிகள் குவித்த, "பங்குச்சந்தை விற்பன்னர்கள்" என்று அழைக்கப் படும் பல பெரியவர்கள் கூட இந்த பாதையைத்தான் தனது பங்கு சந்தை பயணத்தின் துவக்கத்தில் மட்டுமல்ல வளர்ந்த பிறகும் பெரும்பாலான தருணங்களில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது இன்னும் கூட ஆச்சர்யமாக இருக்கலாம்.

வெற்றி சதவீதம் மிக மிக அதிகமான இந்த பாதையை பற்றிய சில விவரங்களை இங்கு பார்க்கலாம்.

இந்த பயணிகள் தனித்தே பயணம் செய்கிறார்கள். இவர்கள் திட்டம் மிக எளிமையானது, தன்னை சுற்றியே அமைந்தது மற்றும் தனக்கு ஏற்றபடியே அமைக்கப் பட்டது.

நண்பர்கள் அல்லது தரகர்கள் தரும் பரிந்துரைகளை இவர்கள் காது கொடுத்து கேட்பதில்லை. ஊடகங்கள் "இந்தியா ஒளிர்கிறது. இந்திய நிறுவனங்கள் உலகை ஆளப் போகின்றன" என்றெல்லாம் தம்பட்டம் அடித்தாலும் இவர்கள் அமைதி காக்கிறார்கள். சக ஊழியர்கள், பங்கு சந்தையில் தான் ஏராளமான பணத்தை சம்பாதித்திருப்பதாக பந்தா காட்டினாலும் இவர்கள் பாந்தமாகவே இருக்கிறார்கள். வங்கிகளும் பங்கு தரகர்களும், பங்குகளை வாங்க கடன் வசதி செய்து தருவதாக ஆசை காட்டினாலும் இவர்கள் மசிவதில்லை.

இவர்களுடைய முதலீடு இவர்கள் சொந்த பணத்தின் உதவியுடனேயே அமைகிறது. அதுவும் தனது சொந்த பணத்தின் ஒரு பகுதி, அதாவது முழுதும் இழந்தாலும் தனது சாதாரண வாழ்க்கையை பெருமளவுக்கு பாதிக்காது என்ற அளவில் மட்டுமே இவர்கள் சந்தையில் முதலீடு செய்கிறார்கள்.

முதலீடுகளை ஒரே நாளில் செய்யாமல், தன்னிடம் காசு சேரும் போதெல்லாம் அதில் ஒரு பகுதியை மட்டுமே சந்தையில் முதலீடு செய்கிறார்கள்.

இவர்கள் தனது முதலீடுகளுக்காக கடினமான கணக்குகளை நம்புவதில்லை. தனக்கு பிடித்தமான அல்லது நம்பகமான துறை/நிறுவனங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஒருவித முதலீட்டுக் கொள்கையை ஆரம்பத்திலேயே தேர்ந்தெடுத்து அதில் உறுதியாக இருக்கிறார்கள்.

வீடு, மனை, தங்க வெள்ளி நகைகள் போல சந்தை முதலீடுகளையும் தனது சொத்தின் ஒரு பகுதியாகவே நினைக்கிறார்கள். வீடு தங்க நகை போன்ற இதர சொத்துவகைகளைப் போலவே இங்கேயும், இன்றைய மதிப்பு எவ்வளவென்று ஒவ்வொருநாளும் கவலைப் படுவதில்லை.

இதனாலேயே, சந்தைகள் நொறுங்கப் போகின்றன என்று ஊடகங்கள் கதறினாலும் இவர்கள் கவலைப் படுவதில்லை. இவர்கள் முதலீடு செய்த பங்கின் விலைகள் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தாலும் இவர்களின் ரத்த அழுத்தம் அதிகம் ஆவதில்லை. பங்கு விற்பன்னர்கள், "உங்கள் பங்குகளை உடனடியாக விற்பனை செய்து விடுங்கள், இன்னும் பல வருடங்கள் சந்தை பாதாளத்திலேயே இருக்கும்" என்று பயமுறுத்தினாலும் இவர்கள் அமைதி காக்கிறார்கள்.

யென் மாற்று வணிகம், அமெரிக்க நிதி நெருக்கடி, தற்போதைய சீனா பப்புள் போன்ற பங்குசந்தை விற்பன்னர்களின் வார்த்தை ஜாலங்கள் இவர்களை பாதிப்பதில்லை. இவற்றைப் பற்றியெல்லாம் ஊடகங்கள் மாங்கு மாங்கென்று விவாதித்துக் கொண்டிருக்க இவர்கள் கண்டு கொள்ளாமல் டிவி சீரியல் அல்லது ரியாலிட்டி ஷோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் பொறுமை அலாதியானது. வாரன் பபெட் போன்றவர்களின் பொறுமை அவர்களது மேதாவிதனத்தின் மீதான நம்பிக்கை என்றால், இவர்களுடைய பொறுமை பங்குகளை நீண்ட கால முதலீடுகளாக மட்டுமே பார்க்கும் இயல்பிலானது.

வாரன் பபெட் அவர்களே ஒரு முறை கூறியிருக்கிறார். பங்கு சந்தையில் வெற்றி பெற 25 சதவீதம் புத்திசாலித்தனம் மட்டுமே போதுமானது. பொறுமையும் அமைதியும் மட்டுமே முடிவான வெற்றிக்கு வழி வகுக்கும்.

இவர்களை நீங்கள் சாதாரண வாழ்க்கையில் எளிதாக சந்திக்கலாம்.

என்னுடைய மூத்த நண்பர் ஒருவர் சந்தையில் வர்த்தக கணக்கு (Trading Account with Broker) ஒன்று ஆரம்பிக்க ஆலோசனை கேட்டார். வர்த்தக கணக்கு ஆரம்பிக்கும் முன்னர் பங்கு கணக்கு (Demat Account)ஆரம்பிக்க வேண்டுமென்று நான் கூறினேன். தன்னிடம் ஏற்கனவே பங்கு கணக்கு இருப்பதாகவும், அதில் ஒரே ஒரு பங்கை மட்டும் விற்க விரும்புவதால் தனக்கு வர்த்தக கணக்கின் அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். சரி உங்கள் பங்குகளை காட்டுங்கள் என்று நான் சற்று அலட்சியமாக கூறி பின்னர் அவரது பங்குகளை மற்றும் அவற்றின் விலைகளை பார்த்த போது அசந்து போய் விட்டேன்.

இருக்காதா பின்னே?

மாருதி, ஒ.என்.ஜி.சி போன்ற பல பங்குகளை அவற்றின் ஆரம்ப கால வெளியீட்டு விலைக்கே வாங்கி வைத்திருக்கிறார் அவர். அவற்றின் தற்போதைய மதிப்பை கணக்கிட்டால் பல லட்சங்கள் லாபம் வரும். இத்தனைக்கும் அவர் முதலீடு மிக மிக சிறியது.

"எப்புடி....?"ன்னு நான் கேட்க, தான் "நல்ல" நிறுவனங்களின் பங்குகளை மட்டும் அவற்றின் பங்கு வெளியீடுகளில் (IPO) மட்டும் முதலீடு செய்து வந்ததாக கூறினார். தான் எப்போதுமே பங்குகளை விற்றதில்லை என்றும் இப்போது கூட தனது தாயார் பெயரில் ஜாயின்ட் அக்கௌண்டில் உள்ள பங்கை மட்டுமே விற்க விரும்புவதாக கூறினார்.

இவர் யாரோ ஒரு உதாரணம் மட்டுமல்ல. பங்குகளை விற்று வீடுகளை கட்டியவர்கள், பிள்ளைகளுக்கு திருமணம் செய்தவர்கள் என்று ஏராளமானவர்கள் நம்மிடையே இருக்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர், பங்கு சந்தையில் நுழைய விரும்பியவர்கள் என்னிடம் ஆலோசனை கேட்டதுண்டு. ரிலையன்ஸ், லார்சென், பெல் போன்ற பங்குகளை நான் பரிந்துரைத்ததுண்டு. அவர்களில் பலரும் இந்த பங்குகளை வாங்கி ஏராளமான லாபம் சம்பாத்தித்தார்கள். ஆனால், ஒரு வேடிக்கையான உண்மை என்னவெனில், ஆலோசனை சொன்ன நானே அந்த பங்குகளை வாங்கியதில்லை.

காரணம், இவையெல்லாம் பங்குச்சந்தையில் ஆரம்ப நிலையில் உள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமே என்று நம்பினேன். என்னைப் போன்றவர்களெல்லாம், வாரன் பபெட் போல ஒரு யாருக்கும் தெரியாத (?) புதிய வளரும் நிறுவனத்தை கண்டறிந்து முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.

உண்மையில், கண் முன்னே தெரியும் இது போன்ற வெற்றிகதைகளில் முதலீடு செய்வதுதான் வாரன் பபெட்டின் பாணி என்று பின்னர்தான் புரிந்து கொண்டேன்.

வேடிக்கையான ஆனால் விஷயமுள்ள கதை ஒன்று உண்டு. கடவுளை தேடி கண்டபடி அலைந்த ஒரு பெரிய அறிவாளி கடவுளே தன கண் முன்னே வந்து நின்ற போது கடவுளை அடையாளம் கண்டு பிடிக்க முடிய வில்லையாம். கடவுளென்றால் அப்படி இருப்பார் இப்படி இருப்பார் என்றெல்லாம் எண்ணி இருந்த அவர், கடவுள் ஒரு எளிமையான உருவத்தில் வருவார் என்று எதிர்பார்க்க வில்லையாம். "இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே" என்ற ஆன்மீக தத்துவம் பங்குசந்தைக்கும் பொருந்தும்.

இந்த பாதை ஏதோ நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மட்டும்தான், இந்த பாதையில் சென்றால் குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதிக்க முடியாது என்று தயவு செய்து எண்ண வேண்டாம்.

மாபெரும் பங்கு சந்தை (குறுகியகால) வர்த்தகர்களாக அறியப் படுகிற ஜேம்ஸ் ரோஜர்ஸ் போன்றவர்கள் கூட இந்த பாதையைதான் தமக்கேற்றபடி வடிவமைத்துக் கொண்டு பயன்படுத்துகிறார்கள்.

என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் கூட மற்ற முறைகளை விட இந்த முறைதான் அதிக வெற்றிகளை தேடி தந்திருக்கிறது.

இது எளிமையான பாதை என்றாலும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை.

சாதாரணமானவர்களையும் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் வெற்றி காண வைத்த இந்த அசாதாரண பாதையை பற்றி பின்வரும் பதிவுகளில் விரிவாக பார்ப்போம்.

தனக்கென ஒரு முதலீட்டு கொள்கையை உருவாக்குவது என்றும் கண் முன்னே உள்ள நல்ல வாய்ப்புக்களை எப்படி தவற விடாமல் இருப்பது என்பது பற்றியும் விரிவாக பின் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

பயணம் தொடரும்.

பின் குறிப்பு: இந்த மூன்று பாதைகளில் எந்த பாதை உங்களுக்கு உகந்ததாக தோன்றுகிறது என்றும் எந்த பாதையை பற்றி நீங்கள் அதிகமாக தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பது பற்றியும் தயவு செய்து தெரிவிக்கவும். அது இந்த பயணத்தின் அடுத்த பகுதியின் வெற்றிக்கு பேருதவியாக இருக்கும்.

நன்றி!

16 comments:

Btc Guider said...

//இவர்களுடைய முதலீடு இவர்கள் சொந்த பணத்தின் உதவியுடனேயே அமைகிறது. அதுவும் தனது சொந்த பணத்தின் ஒரு பகுதி, அதாவது முழுதும் இழந்தாலும் தனது சாதாரண வாழ்க்கையை பெருமளவுக்கு பாதிக்காது//
பங்கு சந்தையில் வர்த்தகம் செய்பவர்கள் இந்த பாயின்டை பின்பற்றுவதே இல்லை.கடன் வாங்கியாவது விட்டதை பிடிக்கிறேன் பார் என்று மேலும் மேலும் கடனாளி ஆகிறார்கள்.
//வாரன் பபெட் அவர்களே ஒரு முறை கூறியிருக்கிறார். பங்கு சந்தையில் வெற்றி பெற 25 சதவீதம் புத்திசாலித்தனம் மட்டுமே போதுமானது. பொறுமையும் அமைதியும் மட்டுமே முடிவான வெற்றிக்கு வழி வகுக்கும்.//
பொறுமை மிக மிக அவசியமான ஒன்று.
//பின் குறிப்பு: இந்த மூன்று பாதைகளில் எந்த பாதை உங்களுக்கு உகந்ததாக தோன்றுகிறது என்றும் எந்த பாதையை பற்றி நீங்கள் அதிகமாக தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பது பற்றியும் தயவு செய்து தெரிவிக்கவும். அது இந்த பயணத்தின் அடுத்த பகுதியின் வெற்றிக்கு பேருதவியாக இருக்கும்.//
மூன்று பாதைகளும் முத்தான பாதைகள்தான்.மேலும் பதிவுகள் பல எழுத வேண்டுகிறேன்.
நன்றி சார்.

வால்பையன் said...

நன்றி தல!

Maximum India said...

நன்றி ரஹ்மான்!

//மூன்று பாதைகளும் முத்தான பாதைகள்தான்.மேலும் பதிவுகள் பல எழுத வேண்டுகிறேன்.//

மூன்று பாதைகளைப் பற்றியுமே விளக்கமாக எழுதவே நான் விரும்பினாலும், இந்த தொடர் பதிவின் வாசகர்களின் எண்ண ஓட்டத்தையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

நன்றி.

Maximum India said...

நன்றி வால் சாரி நன்றி தலையின் தல!

:)

Naresh Kumar said...

மிக அருமையான உபயோகமான பதிவு....

முதலீட்டாளர்கள் ஏறக்குறைய சூதட்டம் போன்று ஈடுபடுவதும், மிதமிஞ்சிய ஆசைகளும் ஒருவிதத்தில் இந்தத் தோல்விகளுக்கு காரணம்

ஓட்டு போட்டாச்சு!!!

Thomas Ruban said...

//இந்த மூன்று பாதைகளில் எந்த பாதை உங்களுக்கு உகந்ததாக தோன்றுகிறது என்றும் எந்த பாதையை பற்றி நீங்கள் அதிகமாக தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பது பற்றியும் தயவு செய்து தெரிவிக்கவும். அது இந்த பயணத்தின் அடுத்த பகுதியின் வெற்றிக்கு பேருதவியாக இருக்கும்.//

மூன்று பாதைகளும் நன்றாக உள்ளது. அதில் எனக்குப்பிடித்த சில அறிவுரைகள் (கருத்துகள்) பயனுள்ளதாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்.

பங்குசந்தைகள் பற்றி மட்டுமல்ல பங்கினை சார்ந்த நிறுவனத்தைப் பற்றியும் அதன் துறையைப் பற்றியும் ஓரளவுக்கு நல்ல ஞானம் இருக்க வேண்டும்.

நிறுவனத்தின் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை ஓரளவுக்கு துல்லியமாக கணிக்கும் திறமும் தேவைப் படும்.

அதிகாரபூர்வமான அல்லது ஒரிஜினல் தகவல்களை மட்டுமே அதிகம் உபயோகிக்கிறார்கள். நிறுவனத்தின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெற்றி, கடும் உழைப்பின் விளைவு. பொறுமை எனும் தவத்திற்கு கிடைத்த வரம்.

சந்தையில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைப்பவர்கள். செய்திகளை சந்தைக்கு முந்தியே அறிந்து கொள்வதில் அல்லது புரிந்து கொள்வதில்தான் இவர்களின் பலம் அடங்கி இருக்கிறது.

இவர்களுடைய முதலீடு இவர்கள் சொந்த பணத்தின் உதவியுடனேயே அமைகிறது. அதுவும் தனது சொந்த பணத்தின் ஒரு பகுதி, அதாவது முழுதும் இழந்தாலும் தனது சாதாரண வாழ்க்கையை பெருமளவுக்கு பாதிக்காது என்ற அளவில் மட்டுமே இவர்கள் சந்தையில் முதலீடு செய்கிறார்கள்.

முதலீடுகளை ஒரே நாளில் செய்யாமல், தன்னிடம் காசு சேரும் போதெல்லாம் அதில் ஒரு பகுதியை மட்டுமே சந்தையில் முதலீடு செய்கிறார்கள்நம்பகமான துறை/நிறுவனங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஒருவித முதலீட்டுக் கொள்கையை ஆரம்பத்திலேயே தேர்ந்தெடுத்து அதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இவர்களின் பொறுமை அலாதியானது.இவர்களுடைய பொறுமை பங்குகளை நீண்ட கால முதலீடுகளாக மட்டுமே பார்க்கும் இயல்பிலானது.

இவர்களின் பொறுமை அலாதியானது.இவர்களுடைய பொறுமை பங்குகளை நீண்ட கால முதலீடுகளாக மட்டுமே பார்க்கும் இயல்பிலானது.

"நல்ல" நிறுவனங்களின் பங்குகளை மட்டும் அவற்றின் பங்கு வெளியீடுகளில் (IPO) மட்டும் முதலீடு செய்ய வேண்டும்.

ரிலையன்ஸ், லார்சென், பெல் போன்ற லாஜ்கேப் பங்குகளில் முதிலீடு செய்ய வேண்டும்.

நீங்கள் கூறிய இவற்றை கடைப்பிடித்தால் வெற்றிகரமான முதிலீயீட்டார் ஆகலாம்.(முதல் மற்றும் மூன்றாவது பாதையில்)

பதிவுக்கு நன்றி தொடருங்கள்.

Maximum India said...

முதலீட்டாளர்கள் ஏறக்குறைய சூதட்டம் போன்று ஈடுபடுவதும், மிதமிஞ்சிய ஆசைகளும் ஒருவிதத்தில் இந்தத் தோல்விகளுக்கு காரணம்

Maximum India said...

உங்கள் எடிட்டிங் நன்றாகவே இருக்கிறது தாமஸ் ரூபன்! உண்மையில், நான் மூன்று பாதைகளின் தொகுப்பாக ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன். எனது பணியில் பெரும்பகுதியை நீங்களே செய்து விட்டீர்கள்.

நன்றி.

Thomas Ruban said...

//உங்கள் எடிட்டிங் நன்றாகவே இருக்கிறது தாமஸ் ரூபன்! உண்மையில், நான் மூன்று பாதைகளின் தொகுப்பாக ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன். எனது பணியில் பெரும்பகுதியை நீங்களே செய்து விட்டீர்கள்.//

நன்றி சார்.( நேற்றே இதைவிட சிறப்பாக எடிட்டிங் செய்து பின்னுட்டம் போஸ்ட் செய்யும் பொது BSNLன் தரம்மிக்க சேவையினால் முடியவில்லை ).

அவசரப்பட்டதுக்கு மன்னிக்கவும்.

இந்த பின்னுட்டம் பலரை சென்று அடையாது. எனெவே நீங்கள் சிறப்பாக எடிட்டிங் செய்து ஒரு பதிவுயாக போட்டால் பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.

நன்றி சார்..

Maximum India said...

//அவசரப்பட்டதுக்கு மன்னிக்கவும். //

மன்னிக்கவென்று ஒன்றுமில்லை.

வெறுமனே நன்றாக இருக்கிறது. அருமையான பதிவு என்றெல்லாம் ஒரு வரியில் பின்னூட்டம் இடாமல், பதிவை நன்கு உள்வாங்கியதோடு மட்டுமல்லாமல், அழகாக தொகுத்ததற்கு பாராட்டத்தான் வேண்டும்.

//இந்த பின்னுட்டம் பலரை சென்று அடையாது. எனெவே நீங்கள் சிறப்பாக எடிட்டிங் செய்து ஒரு பதிவுயாக போட்டால் பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.//

உண்மையாக சொல்ல வேண்டுமென்றால், உங்கள் பின்னூட்டத்தையே ஒரு பதிவாக போடலாமா என்று கூட எண்ணினேன்.

நானும் ஒரு தொகுப்பை விரைவில் வெளியிடுகிறேன்.

நன்றி.

குறும்பன் said...

மூன்று பாதைகளும் பிடித்திருந்தாலும் வாரன் பபெட்டின் முதல் பாதையை கடைபிடிக்க முடியாது. 2வது மற்றும் 3வது பாதை உகந்ததாக தோன்றுகிறது. இப்படி கொஞ்சம் அப்படி கொஞ்சம் இஃகிஃகி.
2 & 3 வது பாதையை அதிகம் விளக்கலாம்.

1. எவ்வாறு நல்ல நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது?
2. நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் நாம் கவனிக்க வேண்டியது என்ன? 3. நிறுவன்த்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எப்படி அனுமானிப்பது?
4. நிறுவனத்தின் பங்கு சரியான விலையில் உள்ளது என்பதை எப்படி கண்டுகொள்வது?
5. நிறுவனத்தின் பங்கு அதிகளவில் உள்ளது என்பதை எப்படி கண்டுகொள்வது?
6. P/E, EPS என்பதை வைத்து ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கலாமா கூடாதா என்பதை எப்படி கணிப்பது?
7. உங்களுக்கு தெரிந்த பல பல நுணுக்கங்கள். :-)))

Maximum India said...

மிக்க நன்றி குறும்பன்!

//மூன்று பாதைகளும் பிடித்திருந்தாலும் வாரன் பபெட்டின் முதல் பாதையை கடைபிடிக்க முடியாது. 2வது மற்றும் 3வது பாதை உகந்ததாக தோன்றுகிறது. //

முதல் பாதை மேதாவிகளின் பாதை போல தோன்றினாலும், உண்மையில் அதுவும் நம்மைப் போன்றவர்களும் பயணிக்கக் கூடியதே. அந்த பாதையில் பயணம் செய்ய கடின உழைப்பு தேவை என்றாலும் இரண்டாவது பாதையை விட குறைவாக உழைத்தால் போதுமானது. அதே சமயம் இரண்டாவது பாதையில் ஏராளமான கவனச் சிதறல்கள் இருக்கையில் முதல் பாதையில் முழுகவனத்தையும் தன நிலைப்பாட்டில் கொண்டு வர வேண்டியிருக்கும்..

வாரன் பபெட் போல பல ஆயிரம் கோடிகள் சம்பாதிக்க முடியாவிட்டாலும் சில கோடிகள் சம்பாதித்தால் கூட நம் போன்றவர்க்கு வெற்றிதானே?

//1. எவ்வாறு நல்ல நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது?
2. நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் நாம் கவனிக்க வேண்டியது என்ன? 3. நிறுவன்த்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எப்படி அனுமானிப்பது?
4. நிறுவனத்தின் பங்கு சரியான விலையில் உள்ளது என்பதை எப்படி கண்டுகொள்வது?
5. நிறுவனத்தின் பங்கு அதிகளவில் உள்ளது என்பதை எப்படி கண்டுகொள்வது?
6. P/E, EPS என்பதை வைத்து ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கலாமா கூடாதா என்பதை எப்படி கணிப்பது?
7. உங்களுக்கு தெரிந்த பல பல நுணுக்கங்கள். :-)))//

நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் பொருள் பொதிந்தவை. விளக்கமாக பதில் அளிக்க வேண்டியவை . அவற்றுக்கு ஒரு கூடிய சீக்கிரமே ஒரு தனி பதிவின் மூலம் பதில் சொல்கிறேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.

நன்றி.

muhiakil said...

நன்றாக விளக்கி ஊளீர்கள். எனக்கு இந்த முன்றாம் பாதையே நல்ல பலன்களை தரும் என்று நம்புகிறேன். மிக நன்றி

Maximum India said...

நன்றி முகில்!

//நன்றாக விளக்கி ஊளீர்கள். எனக்கு இந்த முன்றாம் பாதையே நல்ல பலன்களை தரும் என்று நம்புகிறேன். மிக நன்றி//

எந்த பாதை சிறந்த பாதை என்பதை அவரவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் என்றாலும் இந்த பாதைகளை சமய சந்தர்ப்பத்திற்கேற்றவாறு எப்படி உபயோகித்துக் கொள்வது என்பதை விளக்கமாக பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம். தயவு செய்து பதிவுகளை தொடர்ந்து கவனித்து வாருங்கள்

நன்றி.

manjoorraja said...

மூன்று பாதைகளை பற்றியும் மிகவும் தெளிவாக எழுதியுள்ளீர்கள். இருமுறை படித்து புரிந்துக்கொண்டேன்.

மேலும் பின்னூட்டமிடும் நண்பர்களின் கருத்தும் மிகவும் பயந்தரக்கூடியனவாக இருந்தன.

தொடர்ந்து படித்து வருகிறேன். மிகவும் நன்றி.

Maximum India said...

நன்றி நரேஷ் குமார்!

நன்றி மஞ்சூர் ராசா!

தயவு செய்து பதிவுகளை தொடர்ந்து கவனித்து வாருங்கள்

நன்றி.

Blog Widget by LinkWithin