Thursday, August 27, 2009

பங்குசந்தை வெற்றிப்பயணம் - ஒரு நடைமுறை பயிற்சி!


பங்குசந்தை நுணுக்கங்களை ஆரம்ப அடிப்படையில் இருந்து அறிந்து கொள்வதை விட சில நேரடி பங்கு சந்தை அனுபவங்கள் மூலம் புரிந்து கொள்வது மனதில் இன்னும் ஆழமாக பதியும் என்று நம்புகிறேன். நேரடி சந்தை அனுபவங்களின் வழியாக அவ்வப்போது எழும் ஏராளமான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள பாட நூல் கல்வி மற்றும் விவரமறிந்தவர்களின் வழிகாட்டல் (Guidance) உதவி செய்யும் என்றும் நினைக்கிறேன்.

என்னுடைய தனிப் பட்ட அனுபவத்தில் கூட ஒரு வித ஜிக் ஜாக் (Zig Zag) கல்வி முறையே அதிக உதவியாக இருந்திருக்கிறது.

இந்த பதிவை தொடர்பவர்களில் பலர் பங்குச்சந்தை சாதனையாளர்களாக விரும்புவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கான ஒரு பயிற்சிக் களமாக இந்த பதிவை அர்ப்பணிக்கிறேன்

பங்குசந்தை வெற்றிப் பயணத்திற்கான மூன்று விதமான பாதைகளை நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். (பார்க்காதவர்கள் இங்கு சுட்டவும்) இப்போது பார்க்கும் பாதை ஒரு உப பாதை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

காரணம், இந்த பாதையை மற்ற பாதைகளுக்கு மாற்று என்றோ எப்போதுமே இந்த பாதை திறந்திருக்கும் என்றோ சொல்ல முடியாது. சரியாக முயற்சித்தால் வெற்றி சதவீதம் அதிகமாக இருக்கும் என்றாலும், சில சமயங்களில் முழு தோல்வியை கூட சந்திக்க நேரிடலாம். மேலும் இந்த பாதையில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் மற்ற பாதையில் கை தேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

இந்த பாதையில் ரிஸ்க் ரொம்ப அதிகம். "ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல" என்று சொல்லுபவர்கள் வேண்டுமானால் இந்த பாதையில் அவ்வப்போது பயணிக்கலாம். இதே போன்ற வார்த்தைகளை இதற்கு முன்னர் இந்த பதிவு வலையில் எங்கோ பார்த்திருக்கிறோம் என்று நீங்கள் யோசிக்கலாம். சரியாக யூகித்தால் நீங்கள் திறமை சாலி.

பொதுவாக எந்த பங்கையும் பரிந்துரைக்காத இந்த பதிவர் தனது இந்த பதிவில் ஒரு பங்கினை அதுதான் சத்யம் நிறுவனத்தை (சில நிபந்தனைகளுடன்) வாங்கலாம் என்று கோடிட்டு காட்டியிருந்தார். மேற்சொன்ன பதிவு வெளிவந்த போது, நாற்பது ரூபாய்க்கும் கீழே இருந்த இந்த பங்கு இப்போது நூறு ரூபாய்க்கும் மேலே உயர்ந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

இது போன்ற அத்திபூத்தார் போன்ற வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக் கொள்வதுதான் இந்த உப பாதை.

இந்த பாதையில் வெற்றி பெற்றோர் பெரிய பங்கு சந்தை ஜாம்பவான்களாக மாறி இருக்கின்றனர். அதே சமயத்தில் இந்த பாதையில் செல்வோர் தன்னுடைய முழுபணத்தையும் கூட இழந்து விட வாய்ப்புள்ளது என்பதனால் மிக மிக எச்சரிக்கையாக காய்களை நகர்த்தினால் மட்டுமே இந்த பாதையில் வெற்றி பெற முடியும். மேலும் இந்த முறையில் ஒருவர் வெற்றி பெற வேண்டுமென்றால் அவருக்கு சந்தையில் ஏராளமான முன் அனுபவம் வேண்டியிருக்கும்.

அதே சமயத்தில், பங்கு வர்த்தகத்தில் அதிக முன் அனுபவம் இல்லாத என்னைப் போன்றோர், இது போன்ற பங்குகளில் மிகக் குறைந்த அளவு, அதாவது முழுமையாக இழந்தாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு மட்டுமே முதலீடு செய்து வருகின்றனர். இந்த முறையில் 'வந்தால் மலை, போனால் ஒன்றுமில்லை' என்ற பாணியும் உண்டு. அதே போல, இந்த பாதையில், குறைந்த முதலுடன் பயணிக்கும் போது, சந்தையைப் பற்றி ஏராளமான அரிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் முடியும் என்பது ஒரு நல்ல விஷயம்.

கீழே வரும் எதுவும் மீண்டும் மேலே போகும் என்ற தத்துவத்தை ("Mean Reversion is one of the great truism of capitalism" ~ Anthony Bolton) சார்ந்தது இந்த முறை. அதே சமயத்தில், கீழே விழுந்த பங்கு மீண்டும் மேலே போக வேண்டுமானால் சில நிகழ்வுகள் கட்டாயமாக ஏற்பட வேண்டும் (அதாவது நிறுவனம் தனது மோசமான நிலையில் இருந்து மெல்ல மெல்ல மீள்வது). அந்த நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து அதற்கேற்றார்போல காய்களை மெல்ல மெல்ல நகர்த்துவதுதான் இந்த முறை.

சத்யம் நிறுவனத்திற்கு வருவோம். அந்த நிறுவனத்தின் தலைவர் ராஜு சத்யம் நிறுவனத்தின் பணத்தை மோசடி செய்ததால், நிறுவனத்தின் எதிர்காலம் பற்றிய அச்சம் சந்தைக்கு வந்தது. எனவே அனைவரும் பங்குகளை விற்று தீர்த்தனர். பங்கின் மதிப்பு தொண்ணூறு சதவீதத்திற்கும் கீழே குறைந்தது.

பங்கு முதலீடுகள் பொதுவாக நீண்ட கால அடிப்படையில் இருக்க வேண்டும் என்றாலும், சந்தையின் போக்கு பெரும்பாலும் குறுகிய கண்ணோட்டத்திலேயே இருக்கிறது. குறுகிய கால பயங்கள் அல்லது பேராசைகளே சந்தையை பெரும்பாலும் நகர்த்துகின்றன. பயங்கள் அல்லது பேராசையின் உச்ச கட்டத்தில் சந்தை இருக்கும் போது, சந்தையின் உணர்வுகளை சரியாக புரிந்து கொள்ளும் பங்கு சந்தை ஜாம்பவான்கள் களம் இறங்குகின்றனர்.

நீண்ட கால நோக்கில், ஒரு விசாலமான பார்வையுடன் சந்தையின் போக்கிற்கு எதிராக போகலாமா என்று முடிவு எடுக்கின்றனர். அவர்களின் முடிவு வெற்றிகரமாக இருக்கும் பட்சத்தில் ஏராளமாக பணம் சம்பாதிக்கின்றனர். (இது சம்பந்தமாக ஆர்வம் உள்ளவர்கள் உலகின் மிகப் பெரிய பங்கு பரஸ்பர நிதிகளில் ஒன்றான பிடிலிட்டி நிதியில் முக்கிய பணியாற்றிய அந்தோணி போல்டன் எழுதிய Investing Against the Tide புத்தகத்தை படிக்கலாம். இந்த புத்தகம் பங்கு சந்தையில் ஓரளவுக்கு முன் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே அதிக உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. )

ஒரு முக்கிய விஷயம், வருவது ஒரு சாதாரண அலை என்றால் எதிர்த்து நிற்க முடியும். ஆனால் அதுவே சுனாமி என்றால்? எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள் என்பதையும் நினைவில் கொள்வோம்.

அவர்களைப் பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம். இப்போது சத்யம் விவகாரத்திற்கு வருவோம்.

சத்யம் விவகாரத்தில் அரசு அதிரடியாக களம் இறங்கியதும், நம்பகத்தன்மை மிகுந்த தீபக் பரேக் அவர்கள் இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப் பட்டதும் கவனித்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.

லார்சன் டூப்ரோ போன்ற நிறுவனங்கள் சத்யம் நிறுவனத்தை கைப்பற்ற முயற்சித்ததும் சாதகமான விஷயங்கள். அதே சமயத்தில் அந்த தருணத்தில் நிலைமை அவ்வளவு தெளிவாக இல்லையென்றாலும், பின்னர் சத்யம் நிறுவனத்தை கைப்பற்ற மகிந்திரா நிறுவனம் முயற்சி செய்த போது, ஒரு நல்வாய்ப்பு கிடைத்தது. பின்னர் நடந்தது எல்லாம் சரித்திரம்.

பழைய கதையை விடுவோம். தற்போதைய நிலையில் சந்தை மீண்டும் எக்கச்சக்க உயரத்திற்கு சென்றிருந்தாலும், சந்தையில் ஏராளமான வாய்ப்புக்கள் அங்கங்கே இருந்த வண்ணம்தான் உள்ளன. அவற்றில் இந்த பதிவர் கவனித்த ஒரு பங்கு இது.

சத்யம் நிறுவனத்தைப் போலவே பெரிய சிக்கலில் மாட்டி தற்போது மீள முயற்சித்து வரும் மைத்தாஸ் நிறுவனம்தான் அது.

கிட்டத்தட்ட ஆயிரம் ருபாய் வரை ஒருகாலத்தில் உயர்ந்த இந்த பங்கு இப்போது நூறு ருபாய்க்கு அருகிலேயே உள்ளது.

இந்த பங்கில் கவனிக்கப் பட வேண்டிய சில விஷயங்கள்.

இந்த நிறுவனத்திலும் அரசு தரப்பிலான சில இயக்குனர்கள் நியமிக்கப் பட்டிருக்கின்றனர். இவ்வாறான பணி நியமனம் நிறுவனத்தின் நம்பகத் தன்மை அதிகரிக்க உதவுகிறது. கடன் சீரமைப்பு (CDR) நிறைவேற்றப் பட்டதன் மூலம் இந்த நிறுவனத்தின் கடன் பளு நிர்ப்பந்தங்கள் சற்று குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த நிறுவனத்தின் கையில் இன்னமும் ஏராளமான ஆர்டர்கள் உள்ளன என்பதும் மைத்தாஸ் நிறுவனத்திற்கு ஆசைப்பட்டதால்தான் லார்சன் நிறுவனம் சத்யம் நிறுவனத்தின் பின்வாசல் வழியாக நுழைந்தது என்று சொல்லப் படுவதும் குறிப்பிடத் தக்கது.

அரசியல் சார்புடையதாக கருதப்படும் இந்த நிறுவனத்தை பாதிக்கும் வகையில் (கடந்த தேர்தலில்), ஆந்திர மற்றும் மைய அரசியலில் அதிகார மாற்றம் ஏதும் நிகழாமல் போனதும் குறிப்பிடத் தக்கது.

இந்த நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களை அறிய விரும்புவோர் இங்கு கிளிக்கலாம்.

ஒருவேளை, இந்த மாற்றங்கள் இந்த நிறுவனத்திற்கு சாதகமாக அமையுமானால் பங்கு நன்கு வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.

அதே சமயம், அரசோ அல்லது நீதிமன்றமோ இந்த நிறுவனத்தின் மீதோ அல்லது தலைமையின் மீதோ ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் இந்த பங்கு பாதிக்கப் படும்.
ராஜு குடும்பத்தினர் இந்த நிறுவனத்தை ஓட்டாண்டி ஆக்கி மீள முடியாத நிலைக்கு கொண்டு சென்றிருந்தாலும் ஆபத்துத்தான்.

மற்றபடிக்கு, இந்த பங்கும் மற்ற பங்குகளை போலவே சந்தை மற்றும் இதர அபாயங்களுக்கு உட்பட்டது என்று சொல்லலாம்.

கண்டிப்பாக, மைத்தாஸ் நிறுவன பங்கை வாங்குவதற்கான பரிந்துரை அல்ல இந்த பதிவு. அதே சமயத்தில் பெருமளவு பாதிக்கப் பட்ட ஒரு நிறுவனத்தின் பங்கின் ஏற்றத் தாழ்வுகள் எப்படி நிகழ்கின்றன என்பதை கவனிக்க ஒரு வாய்ப்பை கோடிட்டு காட்டும் பதிவு மட்டுமே இது.

இது போன்ற பங்குகளில் உடனடியாக முதலீடு செய்யக் கூடாது. நிறுவன சம்பந்தமான நிகழ்வுகளை கவனமாக பின்தொடர்ந்து நிறுவனத்தைப் பற்றிய கணிப்பு மற்றும் நிலைப்பாடு ஓரளவுக்கு உறுதியானதும் பங்கு முதலீட்டை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம். கவனம் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். முதலீட்டு முடிவு எப்போதுமே சொந்த முடிவாக இருக்க வேண்டும்.

முதலீடு செய்த பின்னரும் கூட மிகவும் கவனமாக பின்தொடர வேண்டிய பங்கு இது, காரணம் போட்ட பணம் முழுமையாகவே முழுகிப் போய் விடும் அபாயம் இங்கு உண்டு.

எடுத்த எடுப்பிலேயே அதிக அனுபவம் உள்ளவருக்கான ஒரு கடினமான பயிற்சியா என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். ஆரம்பத்திலேயே கடுமையாக பயிற்சி எடுத்துக் கொள்வது பின் வரும் காலங்களில் பயணத்தை எளிமையாக்கும்.

பங்கினை வாங்காமலேயே கூட, ஒரு பயிற்சியாக, சந்தையில் பெரிய அளவில் சாதிக்க ஆசைப் படுபவர்கள், இந்த நிறுவனத்தைப் பற்றிய செய்திகளையும் பங்கின் ஏற்றத்தாழ்வுகளையும் தொடரலாம். (அதிகம் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கான வேறு சில முதலீட்டு வாய்ப்புக்கள் பற்றி பின் வரும் பதிவுகளில் பார்ப்போம்.)

பொதுவாக பங்கு சந்தை பற்றிய பாடங்களில் பழைய கதைகள் மட்டுமே இருக்கும். கொஞ்சம் வித்தியாசமாக நடப்பு கதையையே ஒரு பயிற்சி களமாக்கும் இந்த முயற்சியைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தயங்காமல் வெளிப்படுத்துங்கள்.

இந்த முயற்சியில் நான் "சொல்லி அடிக்கலாம்". அல்லது "சொல்லி அடியும் வாங்கலாம்".

முடிவை காலம்தான் சொல்ல வேண்டும்.

பயணம் தொடரும்.

நன்றி.

பின்குறிப்பு: இன்னொரு துணை பாதை கூட உண்டு. அதாவது, சந்தையின் போக்கு சரிவர புரியாத போது மேற்கொள்ள வேண்டிய பைபாஸ் பாதை (அதாவது ஒன்றுமே செய்யாமல் அமைதி காப்பது). இதில் எந்த ஒரு கௌரவக் குறைவும் இல்லை. பெரிய ஜாம்பவான்கள் கூட இந்த பாதையில் அவ்வப்போது பயணித்து தங்களது இழப்பை குறைத்துக் கொண்டிருக்கின்றனர்.

11 comments:

muhiakil said...

I am a new visitor to this site.
Nice Article, interesting to read.
Keep it up. I am in rush, next time i will write comment in tamil

thanks
Mathi

குறும்பன் said...

நல்லா சொன்னிங்க. பழைய கதைகள் யாருக்கு வேணும்? எங்களுக்கு நடப்பு கதைகள் தான் வேணும். அப்பதான் தொடர்புபடுத்தி புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

வால்பையன் said...

உங்க ஓட்ட நீங்களே போடமாடிங்களா?

பங்குசந்தை ஒரு சூதாட்டமல்ல என்று மக்களுக்கு புரிய வைக்கும் வைக்கும் முயற்சிக்கு நன்றி!

ஒரே ஒரு முறை மட்டும் பங்கை பரிந்துரைத்த ”அந்த பதிவர்” அவ்வபோது எனக்கும் கமாடிடி பற்றி ஆலோசனை வழங்கலாமே!

Btc Guider said...

மைத்தாசில் நானும் அடிவாங்கியவந்தான் தங்கள் பரிந்துரை சரியாகவே இருக்கும்.நன்றி சார்.

Thomas Ruban said...

//அவ்வப்போது எழும் ஏராளமான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள பாட நூல் கல்வி மற்றும் விவரமறிந்தவர்களின் வழிகாட்டல் (Guidance) உதவி செய்யும் என்றும் நினைக்கிறேன்.//

உங்களை போன்ற விவரமறிந்தவர்களின் வழிகாட்டல் (Guidance)கண்டிப்பாக எங்களுக்கு உதவி செய்யும்(செய்கிறது).

//பொதுவாக எந்த பங்கையும் பரிந்துரைக்காத இந்த பதிவர் தனது இந்த பதிவில் ஒரு பங்கினை அதுதான் சத்யம் நிறுவனத்தை (சில நிபந்தனைகளுடன்) வாங்கலாம் என்று கோடிட்டு காட்டியிருந்தார்.//

நான் அப்பொழுது பதிவுலகத்துக்கு வரவில்லை.(இழப்புதான்,போனது போகட்டும்).

//சந்தையில் ஏராளமான வாய்ப்புக்கள் அங்கங்கே இருந்த வண்ணம்தான் உள்ளன. அவற்றில் இந்த பதிவர் கவனித்த ஒரு பங்கு இது.சத்யம் நிறுவனத்தைப் போலவே பெரிய சிக்கலில் மாட்டி தற்போது மீள முயற்சித்து வரும் மைத்தாஸ் நிறுவனம்தான் அது.//

உங்களை போன்ற விவரமறிந்தவர்கள் கூறியப்பிறகே பார்த்தேன். நீங்கள் சொன்ன அணைத்து விவரங்களும் உண்மையே.

//இந்த மாற்றங்கள் இந்த நிறுவனத்திற்கு சாதகமாக அமையுமானால் பங்கு நன்கு வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.//

கண்டிப்பாக வாய்ப்பு உள்ளது.

//இது போன்ற பங்குகளில் உடனடியாக முதலீடு செய்யக் கூடாது. நிறுவன சம்பந்தமான நிகழ்வுகளை கவனமாக பின்தொடர்ந்து நிறுவனத்தைப் பற்றிய கணிப்பு மற்றும் நிலைப்பாடு ஓரளவுக்கு உறுதியானதும் பங்கு முதலீட்டை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம். கவனம் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். முதலீட்டு முடிவு எப்போதுமே சொந்த முடிவாக இருக்க வேண்டும்.//

கடந்த இரண்டு, மூன்றுதினகளாக
5% ஏறி விட்டு ப்பிரிஸ்யாகி நின்றுவிடுகிறது. சந்தர்ப்பம் கிடைக்குமா என்று போறுந்திருந்து தான் பார்க்க வேண்டும்.

//முதலீடு செய்த பின்னரும் கூட மிகவும் கவனமாக பின்தொடர வேண்டிய பங்கு இது, காரணம் போட்ட பணம் முழுமையாகவே முழுகிப் போய் விடும் அபாயம் இங்கு உண்டு.//

அரசாங்கமும் இதில் இன்வால்வ் ஆகி உள்ளதால் அபயசதவிதம் குறைவுதான்.

//இந்த முயற்சியில் நான் "சொல்லி அடிக்கலாம்". அல்லது "சொல்லி அடியும் வாங்கலாம்".//

அடிக்கிற கைகளே அணைக்கும்.(அப்படியெல்லாம் நடக்காது,//முதலீட்டு முடிவு எப்போதுமே சொந்த முடிவாக இருக்க வேண்டும்.//)

//முடிவை காலம்தான் சொல்ல வேண்டும்.//

"தன்னம்பிக்கைதான் சந்தை வெற்றியின் முதல் ஆதாரம்."
""அதாவது பொறுத்தார் பூமி ஆழ்வார்"


"இந்த பதிவர்" இதேப்போல நல்லபங்குகளை கவனித்து பரிந்துறைக்க வேண்டும்.

"இந்த பதிவர்"க்கும் நன்றி.. நன்றி.

Maximum India said...

நன்றி மதி!

Maximum India said...

நன்றி குறும்பன்!

//நல்லா சொன்னிங்க. பழைய கதைகள் யாருக்கு வேணும்? எங்களுக்கு நடப்பு கதைகள் தான் வேணும். அப்பதான் தொடர்புபடுத்தி புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.//

பழைய உதாரண கதைகள் நடைபெற்ற காலகட்டத்தில் இருந்த சந்தைகளின் பின்புலத்தை இப்போது புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம். அதனால் இன்றைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் ஒரு உதாரணத்தை கொடுத்தேன்.

நன்றி.

Maximum India said...

நன்றி வால்!

//உங்க ஓட்ட நீங்களே போடமாடிங்களா?//

சீனியர் பதிவரின் அறிவுரை ஏற்றுக்கொள்ளப் பட்டு விட்டது.

//ஒரே ஒரு முறை மட்டும் பங்கை பரிந்துரைத்த ”அந்த பதிவர்” அவ்வபோது எனக்கும் கமாடிடி பற்றி ஆலோசனை வழங்கலாமே!//

வால் இருக்கும் போது தல ஆடக் கூடாது. கமாடிடில நமக்கு அனுபவம் கம்மி. சில பொருளாதார தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்ள முடியும்.

நன்றி.

Maximum India said...

நன்றி ரஹ்மான்!

//மைத்தாசில் நானும் அடிவாங்கியவந்தான் தங்கள் பரிந்துரை சரியாகவே இருக்கும்.//

ஒருவர் பரிந்துரையை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்கான ஒரு பதிவு பின்னர் வரும்.

நன்றி.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்

//நான் அப்பொழுது பதிவுலகத்துக்கு வரவில்லை.(இழப்புதான்,போனது போகட்டும்).//

ஏராளமான வாய்ப்புக்கள் இன்னும் இருக்கின்றன.

//கடந்த இரண்டு, மூன்றுதினகளாக
5% ஏறி விட்டு ப்பிரிஸ்யாகி நின்றுவிடுகிறது. சந்தர்ப்பம் கிடைக்குமா என்று போறுந்திருந்து தான் பார்க்க வேண்டும். //

மூன்று நாட்களும் கூட சில வாய்ப்புக்கள் கிடைத்தன. இருந்தாலும், உங்களுக்கு திருப்தியாகும் வரை தொடர்ந்து கவனியுங்கள். முதலீடு செய்ய வில்லையென்றாலும், இந்த பங்கைப் பற்றி வருகின்ற தகவல்களை தொடருங்கள். ஒரு அனுபவமாக இருக்கும்.

//"தன்னம்பிக்கைதான் சந்தை வெற்றியின் முதல் ஆதாரம்."
""அதாவது பொறுத்தார் பூமி ஆழ்வார்"//

ஆங்கிலத்தில் ஒரு சொல்வழக்கு உண்டு. அதாவது. "Hope for the best but prepare for the worst"

எனவே பங்கு சந்தையில் எவ்வளவு தன்னம்பிக்கை இருந்தாலும், எதற்கும் தயாராகவும் இருக்க வேண்டும்.

//"இந்த பதிவர்" இதேப்போல நல்லபங்குகளை கவனித்து பரிந்துறைக்க வேண்டும். //

முயற்சி செய்கிறேன். உங்களின் தொடர்ந்த ஆதரவு எனக்கு உற்சாக டானிக் .

நன்றி.

Maximum India said...

நன்றி அகில்!

//சந்தை பல புள்ளிகள் உயரம் பெற்று வருகின்ற்து. ஆனால் இந்த சமயம் முதலீடு செய்வது சரியா இல்லையான்னும் தெரியல. நான் கனினி துறையில் இருக்கின்றேன். இங்கு அமெரிக்காவில் இந்த துறையில் வேலைவாய்ப்பு இழக்கபெற்ற பல நண்பர்கள் இன்னும் பெஞ்சில் தான் .. வேலை வாய்ப்பு களும் குறைவாகவே உள்ளன. அப்படி இருக்க.. கனினி துறை பங்குகள் எப்படி இந்த உய்ரம் பெறுகின்றன...hp, ibm, csc...ஆகியவற்றின் இந்த காலண்டு அறிக்கைகள் கூட சுமார் தான்...இந்தியாவில் TCS, WIPRO, TANALA, MPHASIS,TULIP..போன்ற நிறுவன பங்குகள் பலமடைந்து கொண்டு வருவது எவ்வாறு. //

அருமையான கேள்வி உங்களுடையது.

சந்தைகள் எப்போதுமே வருங்காலத்தை குறி வைத்துத்தான் இயங்குகின்றன. முடிந்து விட்ட அல்லது அறிந்து விட்ட நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

அடுத்த சில ஆண்டுகளில் மென்பொருட் நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதிக்கும் என்ற சந்தையின் நம்பிக்கை காரணமாக அந்த பங்குகளின் விலை வேகமாக உயருகின்றது.

பங்கு முதலீடுகள் பொதுவாக நீண்ட கால அடிப்படையில் இருக்க வேண்டும் என்றாலும், சந்தையின் போக்கு பெரும்பாலும் குறுகிய கண்ணோட்டத்திலேயே இருக்கிறது. குறுகிய கால பயங்கள் அல்லது பேராசைகளே சந்தையை பெரும்பாலும் நகர்த்துகின்றன.

எனவே சந்தைகளின் நம்பிக்கை எந்த அளவுக்கு சரியானது என்று சொல்வது கடினம்.

அதே சமயம் நீங்கள் கணினித் துறையிலேயே பணி புரிவதால், உங்களால் ஓரளவுக்கு சரியாக கணினித் துறையின் வருங்காலம் பற்றி கணிக்க முடியும். இதற்காக உங்கள் அலுவலகத்தில் உள்ள அனுபவம் மிக்க அதிகாரிகளுடன் துறையின் எதிர்காலம் பற்றி விவாதியுங்கள். புதிய ஆர்டர்கள் எவ்வளவு, விரிவாக்கம் ஏதாவது உண்டா, அடுத்த சில ஆண்டுகளில் லாபம் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்றெல்லாம் தெரிந்து கொள்ள முயலுங்கள்.

உங்களுக்கு கிடைத்த அசலான நேரடி தகவல்களின் அடிப்படையில் இந்த துறையில் உள்ள நிறுவனங்களின் வருங்காலம் பற்றி கணியுங்கள். பின்னர் முதலீட்டு முடிவை எடுங்கள். நிறுவனம் பற்றிய உங்கள் கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் பங்கின் வெற்றி உறுதியானது.

உங்களுடைய கணிப்பை இங்கு பகிர்ந்து கொண்டால் என்னைப் போன்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

//OIL IPO பற்றி விரிவாக எழுத முடியு மா.//

கண்டிப்பாக முயற்சிக்கிறேன்!

நன்றி.

Blog Widget by LinkWithin