Saturday, August 29, 2009

பங்கு சந்தை - இப்போது ஒரு சுவாரஸ்யமான கட்டத்தில்!


தவறிய பருவமழை, உயரும் வட்டி வீதங்கள், மிக அதிக அளவிலான விலைவாசி உயர்வு, குறைந்து போன ஏற்றுமதி, முடங்கிப் போன தொழிற்துறை இப்படி பல பாதக அம்சங்கள் ஒரு பக்கம்.

பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வரும் மேற்கத்திய நாடுகள், டாலர் தொடர்ந்து சந்தைக்குள் இறக்கப் படும் என்ற அமெரிக்காவின் உறுதி, உயர்ந்து வரும் பொருட்விலைகள் (Commodity Prices) என சந்தைக்கு சாதகமான அம்சங்கள் இன்னொரு பக்கம்.

இடையே சீனா ஏதேனும் பொருளாதார வெடிகுண்டை போடுமா என்ற பயம் ஒரு பக்கம். இருந்தாலும், ஏதேனும் நடந்து சந்தைகள் 2008 ஆண்டு உயரத்திற்கு போய் விடுமா என்ற ஆசையும் இன்னொரு பக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பல பெரிய பங்குகள், பழைய உயர்ந்த நிலைக்கு மிக அருகில் வந்து விட்டாலும், பல சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஆவலை தூண்டும் விலை அளவிலேயே இருக்கின்றன.

வெளிநாட்டு டாலர் வரத்து முன்போல இல்லையென்றாலும், உள்ளூர் நிறுவனங்களும் சிறிய முதலீட்டாளர்களும் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இவ்வாறு வெளியூர் பணவரத்து குறைந்து உள்ளூர் பணவரத்து அதிகம் ஆவது சந்தைகளின் வெற்றிப்பயணம் கடைசி கட்டத்திற்கு வந்து விட்டதை சுட்டிக்காட்டினாலும், இந்த கடைசி கட்டத்தின் கால அளவை அறுதியிட்டு சொல்வது கடினம்.

பெரிய வீழ்ச்சி உறுதி என்றாலும், அது உடனடியாக நிகழுமா அல்லது இன்னும் பல ஆயிரம் புள்ளிகள் உயர்ந்த பின்னர் நிகழுமா என்பதை கணிப்பது சிரமம்.

மேற்சொன்ன விஷயங்களின் அடிப்படையில், சந்தைகள் இப்போது ஒரு சுவாரஸ்யமான நிலைக்கு வந்துள்ளன.

நிபிட்டி அளவு 4730 அளவுக்கு அருகே இருக்கின்றது. 4750-4800 அளவுகளில் மிகப் பெரிய எதிர்ப்பு அலை இருக்கும். 4780 என்பது பிபனாக்கி முறையில் (Fibonacci Series) ஒரு பெரிய எதிர்ப்பு நிலையாகும்.

இனிமேலான சந்தையின் வெற்றிப்பயணம் போக்கு மேற்சொன்ன நிலைகளை முறியடிப்பதை பொறுத்தே இருக்கும்.

திங்கட்கிழமை வெளிவரும் இந்திய பொருளாதார உற்பத்தி வளர்ச்சியை வர்த்தகர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். ஒருவேளை இந்த தகவலில் சந்தோச ஆச்சரியங்கள் (positive surprises) இருந்தால், சந்தையின் வெற்றி இன்னும் பல ஆயிரம் புள்ளிகளுக்கு தொடர வாய்ப்புண்டு. ஏதேனும் சங்கடங்கள் இருந்தால் சந்தை அடுத்த நல்ல தகவலுக்காக காத்திருக்கும். வெளிநாட்டு தகவல்களையும் குறிப்பாக இந்தியாவிற்கு வரும் டாலர் அளவில் ஏற்படுத்த வல்ல நிகழ்வுகளையும் நமது சந்தை வர்த்தகர்கள் தொடர்ந்து வருவார்கள்.

மேலை உலகத்தில் இருந்து வரும் நல்ல செய்திகளின் அடிப்படையில் உயருகின்ற கச்சா எண்ணெய் விலை உயர்வு ஒருவேளை தொடர்ந்தால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பு என்றாலும், ரிலையன்ஸ் போன்ற பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் மேலே செல்ல வாய்ப்புக்கள் உண்டு.

சந்தையின் பெரிய (கரும்) புள்ளிகள் பெருமளவு சந்தைக்குள் இருப்பது பல பங்குகளில் ஏற்படும் சுனாமி மாற்றங்களின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

நிபிட்டி 4800 புள்ளிகளுக்கு மேலே சென்றால், வர்த்தகர்கள் வாங்கும் நிலையை எடுக்கலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

17 comments:

Unknown said...

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.

பொதுஜனம் said...

மதில் மேல் பூனைகள் தடுமாறி விழுந்தாலும் பிழைத்து கொள்வார்கள்.மதில் மேல் யானைகள் அடுத்தவர் மேல் விழுந்து மற்றவர் பிழைப்பை கெடுப்பார்கள்.அதிகம் ஆசைப்படாமல் நாம் புத்திசாலி பூனையாக இருப்போம். (பொருளாதார வெடிகுண்டு ! சூப்பரப்பு .)

அகில் பூங்குன்றன் said...

சந்தை பல புள்ளிகள் உயரம் பெற்று வருகின்ற்து. ஆனால் இந்த சமயம் முதலீடு செய்வது சரியா இல்லையான்னும் தெரியல. நான் கனினி துறையில் இருக்கின்றேன். இங்கு அமெரிக்காவில் இந்த துறையில் வேலைவாய்ப்பு இழக்கபெற்ற பல நண்பர்கள் இன்னும் பெஞ்சில் தான் .. வேலை வாய்ப்பு களும் குறைவாகவே உள்ளன. அப்படி இருக்க.. கனினி துறை பங்குகள் எப்படி இந்த உய்ரம் பெறுகின்றன...hp, ibm, csc...ஆகியவற்றின் இந்த காலண்டு அறிக்கைகள் கூட சுமார் தான்...இந்தியாவில் TCS, WIPRO, TANALA, MPHASIS,TULIP..போன்ற நிறுவன பங்குகள் பலமடைந்து கொண்டு வருவது எவ்வாறு.

OIL IPO பற்றி விரிவாக எழுத முடியு மா.

நன்றிகள்

Thomas Ruban said...

//நிபிட்டி 4800 புள்ளிகளுக்கு மேலே சென்றால், வர்த்தகர்கள் வாங்கும் நிலையை எடுக்கலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.//

உங்களுடைய எச்சரிக்கைக்கு நன்றி சார்.

//திங்கட்கிழமை வெளிவரும் இந்திய பொருளாதார உற்பத்தி வளர்ச்சியை வர்த்தகர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். ஒருவேளை இந்த தகவலில் சந்தோச ஆச்சரியங்கள் (positive surprises) இருந்தால், சந்தையின் வெற்றி இன்னும் பல ஆயிரம் புள்ளிகளுக்கு தொடர வாய்ப்புண்டு.//

அடுத்து நம் சந்தையில் அரசாகத்தின் பல IPO வரப்போவதால் பாதகமான விவரங்களை தராது என நினைக்கிறேன்.

நமது இந்தியபுள்ளியல் துறையும் பல புள்ளி விவரங்களை சரியாக தருவதுயில்லை வெறும் டேபுள் ஒர்க்காக செய்துதருகிறது.

//சந்தையின் பெரிய (கரும்) புள்ளிகள் பெருமளவு சந்தைக்குள் இருப்பது பல பங்குகளில் ஏற்படும் சுனாமி மாற்றங்களின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.//

உண்மை தான் சார்.பயிர்கள் மத்தியில் களைகள் இருப்பது சகஜம் தான் என்றாலும், இப்போது களைகள் அதிகமாக காணப்படுவது, கவலை படும் விசியம்தான்.

உதாரணம்,EDUCOMP(4210)நிறுவனத்தில்மும்பையை சேர்ந்த எதோ,ஒருபங்குதரகு நிறுவனம், விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

ABON(1570) நிறுவனத்துக்கு பெரிய ஆர்டர் கிடைத்தனால் ஒரே நாளில்27%(300Rs) அதிகரித்துய்ள்ளது.

இதேப்போல பல நிறுவனங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.அரசாங்கமும் இதை கண்டுகொள்ளாமல்,காற்றுயுல்லபொதெதூற்றிக்கொள்ள,நினைக்கிறார்கள்.

//பெரிய வீழ்ச்சி உறுதி என்றாலும், அது உடனடியாக நிகழுமா அல்லது இன்னும் பல ஆயிரம் புள்ளிகள் உயர்ந்த பின்னர் நிகழுமா என்பதை கணிப்பது சிரமம்.//

பெரிய வீழ்ச்சி உடனடியாக இப்போதைக்கு நிகழாது எனநினைக்கிறேன். சந்தையும் இப்போதைக்கு பெரிய அளவுக்கு உயர வாய்ப்பு இல்லை.ஏன் என்றால் அடுத்து, அடுத்து பல பெரிய IPO 30,000கோடிக்கு வருவதால் யுக்குவிடி மார்கட்டுக்கு பணவரத்து குறையும்.பண்டிகை காலம் வேறு தொடங்கியுள்ளது.

நம்மவர்களுக்கு சென்டிமெண்டில் அதிக நம்பிக்கை ,தீபாவளி முகூர்த்த வர்த்தக தினத்தில் அதிகமாக முதிலீடு செய்வார்கள்.அப்போது, FIIக்கள் விளையடுவார்கள் என நினைக்கிறேன்.அவர்களுக்கு அனுபவம் அதிகம் (உதாரணம் தேர்தல் கணிப்பு) FIIக்கள் புத்திசாலிகள்.

பங்குசந்தையை கணிப்பது கடினம். எது வேண்டுமானாலும் நடக்கலாம். காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

பதிவுக்கு நன்றி சார்.

Maximum India said...

நன்றி சுந்தர்!

Maximum India said...

நன்றி பொதுஜனம்!

//மதில் மேல் பூனைகள் தடுமாறி விழுந்தாலும் பிழைத்து கொள்வார்கள்.மதில் மேல் யானைகள் அடுத்தவர் மேல் விழுந்து மற்றவர் பிழைப்பை கெடுப்பார்கள்//

நல்ல உதாரணம்!

நன்றி.

Maximum India said...

நன்றி அகில்!

//சந்தை பல புள்ளிகள் உயரம் பெற்று வருகின்ற்து. ஆனால் இந்த சமயம் முதலீடு செய்வது சரியா இல்லையான்னும் தெரியல. நான் கனினி துறையில் இருக்கின்றேன். இங்கு அமெரிக்காவில் இந்த துறையில் வேலைவாய்ப்பு இழக்கபெற்ற பல நண்பர்கள் இன்னும் பெஞ்சில் தான் .. வேலை வாய்ப்பு களும் குறைவாகவே உள்ளன. அப்படி இருக்க.. கனினி துறை பங்குகள் எப்படி இந்த உய்ரம் பெறுகின்றன...hp, ibm, csc...ஆகியவற்றின் இந்த காலண்டு அறிக்கைகள் கூட சுமார் தான்...இந்தியாவில் TCS, WIPRO, TANALA, MPHASIS,TULIP..போன்ற நிறுவன பங்குகள் பலமடைந்து கொண்டு வருவது எவ்வாறு. //

அருமையான கேள்வி உங்களுடையது.

சந்தைகள் எப்போதுமே வருங்காலத்தை குறி வைத்துத்தான் இயங்குகின்றன. முடிந்து விட்ட அல்லது அறிந்து விட்ட நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

அடுத்த சில ஆண்டுகளில் மென்பொருட் நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதிக்கும் என்ற சந்தையின் நம்பிக்கை காரணமாக அந்த பங்குகளின் விலை வேகமாக உயருகின்றது.

பங்கு முதலீடுகள் பொதுவாக நீண்ட கால அடிப்படையில் இருக்க வேண்டும் என்றாலும், சந்தையின் போக்கு பெரும்பாலும் குறுகிய கண்ணோட்டத்திலேயே இருக்கிறது. குறுகிய கால பயங்கள் அல்லது பேராசைகளே சந்தையை பெரும்பாலும் நகர்த்துகின்றன.

எனவே சந்தைகளின் நம்பிக்கை எந்த அளவுக்கு சரியானது என்று சொல்வது கடினம்.

அதே சமயம் நீங்கள் கணினித் துறையிலேயே பணி புரிவதால், உங்களால் ஓரளவுக்கு சரியாக கணினித் துறையின் வருங்காலம் பற்றி கணிக்க முடியும். இதற்காக உங்கள் அலுவலகத்தில் உள்ள அனுபவம் மிக்க அதிகாரிகளுடன் துறையின் எதிர்காலம் பற்றி விவாதியுங்கள். புதிய ஆர்டர்கள் எவ்வளவு, விரிவாக்கம் ஏதாவது உண்டா, அடுத்த சில ஆண்டுகளில் லாபம் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்றெல்லாம் தெரிந்து கொள்ள முயலுங்கள்.

உங்களுக்கு கிடைத்த அசலான நேரடி தகவல்களின் அடிப்படையில் இந்த துறையில் உள்ள நிறுவனங்களின் வருங்காலம் பற்றி கணியுங்கள். பின்னர் முதலீட்டு முடிவை எடுங்கள். நிறுவனம் பற்றிய உங்கள் கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் பங்கின் வெற்றி உறுதியானது.

உங்களுடைய கணிப்பை இங்கு பகிர்ந்து கொண்டால் என்னைப் போன்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

//OIL IPO பற்றி விரிவாக எழுத முடியு மா.//

கண்டிப்பாக முயற்சிக்கிறேன்!

நன்றி.

Maximum India said...

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

//அடுத்து நம் சந்தையில் அரசாகத்தின் பல IPO வரப்போவதால் பாதகமான விவரங்களை தராது என நினைக்கிறேன்.

நமது இந்தியபுள்ளியல் துறையும் பல புள்ளி விவரங்களை சரியாக தருவதுயில்லை வெறும் டேபுள் ஒர்க்காக செய்துதருகிறது. //

இந்திய அரசைப் பற்றி நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

//பெரிய வீழ்ச்சி உடனடியாக இப்போதைக்கு நிகழாது எனநினைக்கிறேன். சந்தையும் இப்போதைக்கு பெரிய அளவுக்கு உயர வாய்ப்பு இல்லை.ஏன் என்றால் அடுத்து, அடுத்து பல பெரிய IPO 30,000கோடிக்கு வருவதால் யுக்குவிடி மார்கட்டுக்கு பணவரத்து குறையும்.பண்டிகை காலம் வேறு தொடங்கியுள்ளது.

நம்மவர்களுக்கு சென்டிமெண்டில் அதிக நம்பிக்கை ,தீபாவளி முகூர்த்த வர்த்தக தினத்தில் அதிகமாக முதிலீடு செய்வார்கள்.அப்போது, FIIக்கள் விளையடுவார்கள் என நினைக்கிறேன்.அவர்களுக்கு அனுபவம் அதிகம் (உதாரணம் தேர்தல் கணிப்பு) FIIக்கள் புத்திசாலிகள். //

பெரிய பங்குகளில் அதிக முன்னேற்றம் ஏற்படுவது சந்தேகம்தான் என்றாலும் ரிலையன்ஸ் மற்றும் லார்சன் முன்னேற வாய்ப்புககள் உண்டு என்று நினைக்கிறேன். மற்றபடிக்கு பல சிறிய பங்குகள் நல்ல முன்னேற்றம் காணும் என்றும் எதிர்பார்க்கிறேன்.

//பங்குசந்தையை கணிப்பது கடினம். எது வேண்டுமானாலும் நடக்கலாம். காலம்தான் பதில் சொல்ல வேண்டும். //

உண்மைதான் தாமஸ். சந்தைதான் எப்போதுமே கரெக்ட். இல்லை என்று நினைத்தால் மார்க்கெட் நம்மை 'கரெக்ட்' செய்து விடும்.

நன்றி.

Btc Guider said...

சந்தை தற்சமயம் மது அருந்திய குதிரை போல் இருக்கிறது.அதை சமாளிக்க நாம் பெரும் பிரயாத்னம் எடுக்கவேண்டும்.
//சந்தையின் பெரிய (கரும்) புள்ளிகள் பெருமளவு சந்தைக்குள் இருப்பது பல பங்குகளில் ஏற்படும் சுனாமி மாற்றங்களின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. //
சந்தையின் முடிவு பெரிய (கரும்) புள்ளிகள் கையில் தான் இருக்கிறது.அவர்கள் ஆடிய ஆட்டத்திற்கு தானே சந்தை ஆடிக்கொண்டிருக்கிறது சுனாமியை உருவாக்குவதே இவர்களின் பிழைப்பு இதில் நாம் கரை ஒதுங்குவது கஷ்டமான விஷயந்தான்.

தங்களின் தொடர் பதிவுகளுக்கு நன்றி சார்.

Maximum India said...

நன்றி ரஹ்மான்!

//சந்தை தற்சமயம் மது அருந்திய குதிரை போல் இருக்கிறது.அதை சமாளிக்க நாம் பெரும் பிரயாத்னம் எடுக்கவேண்டும்.//

உண்மைதான். வெற்றிக்கு தொடர்ந்து போராடுவோம்!

நன்றி.

Maximum India said...

அன்புள்ள அகில்!

//அப்படி இருக்க.. கனினி துறை பங்குகள் எப்படி இந்த உய்ரம் பெறுகின்றன...hp, ibm, csc...ஆகியவற்றின் இந்த காலண்டு அறிக்கைகள் கூட சுமார் தான்...இந்தியாவில் TCS, WIPRO, TANALA, MPHASIS,TULIP..போன்ற நிறுவன பங்குகள் பலமடைந்து கொண்டு வருவது எவ்வாறு. //

உங்களுடைய கேள்விக்கான விடை இங்குள்ளது.

http://www.moneycontrol.com/india/news/business/brokerages-being-irrationally-exuberantit-infosys/412961

கணினி துறையில் இன்னும் கூட ஏராளமான பிரச்சினைகள் உள்ளன என்றும் பங்குச்சந்தையில் அவை சரியாக பிரதிபலிக்க வில்லை என்றும் இன்போசிஸ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பாலகிருஷ்ணன் பேட்டி அளித்து இருக்கிறார்.

என்னைப் பொருத்த வரை, பங்குதரகர்களின் அறிக்கைகளை நம்புவதை விட, ஒரிஜினல் தகவல்கள் அதாவது RBI போன்ற அதிகார பூர்வமான நிறுவனங்கள் அல்லது பங்கை வெளியிட்ட வணிக நிறுவனங்கள் தரும் அறிக்கைகளை அதிகம் நம்பலாம்.

'ஈறை எறும்பாக்கி பேனை பெருமாளாக்கும்' திறமை படைத்த பங்கு தரகர்களும் சந்தையில் உண்டு என்றாலும் நம்மைப் பொருத்த வரை நமக்கு எது சரியாக படுகிறதோ அந்த முதலீட்டு முடிவுகளை எடுப்பதே நல்லது. குறுகிய காலத்தில் இது போன்ற பாணி அதிக பலன் அளிக்கா விட்டாலும், நீண்ட கால நோக்கில் நிச்சயம் பலன் தரும்.

நன்றி.

MCX Gold Silver said...

தகவல்களுக்கு நன்றி

அகில் பூங்குன்றன் said...

விரிவான விளக்கங்களுக்கு நன்றிகள் தோழரே..

திருவள்ளுவர் said...

thank you sir,

வால்பையன் said...

//மேலை உலகத்தில் இருந்து வரும் நல்ல செய்திகளின் அடிப்படையில் உயருகின்ற கச்சா எண்ணெய் விலை உயர்வு ஒருவேளை தொடர்ந்தால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பு என்றாலும், ரிலையன்ஸ் போன்ற பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் மேலே செல்ல வாய்ப்புக்கள் உண்டு.//


crude oil if break & close above 72.90$(now 71.25$) chance to rise upto 75$ and 78$, and more positive above 80$
but if close below 71$ again once 68$ will come, 65$ is very good support!

Maximum India said...

தகவலுக்கு நன்றி வால்பையன்!

Maximum India said...

நன்றி அகில்!

நன்றி ஒபுளி!

நன்றி DG!

Blog Widget by LinkWithin