Thursday, January 22, 2009

நரேந்திர மோடி நாடாளலாமா?


சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது.

தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம்.

இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜராத் திகழ்கிறது. கனிமத் துறை, ஜவுளித் துறை, மருந்துத் துறை, பெட்ரோலியத் துறை, வேதிப் பொருட்கள் துறை, பால்வளத் துறை இன்னும் பல துறைகளில் குஜராத் இந்தியாவிற்கே ஒரு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. இந்தியாவின் ஏற்றுமதி- இறக்குமதி வணிகத்தில் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குஜராத் ஒரு பெரிய பங்கை வகிக்கிறது. மேலும், இந்தியாவிலேயே மிக அதிக அளவில் புதிய தொழில் முதலீடுகள் இங்கேதான் செய்யப் பட்டுள்ளன என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் பன்னிரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் பட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. இது ஒரு சாதனை அளவாகும்.

இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பொறாமைப் படத் தக்க குஜராத் மாநிலத்தின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.

குஜராத் மக்களின் வணிக மற்றும் தொழில் திறன்:

குஜராத் மக்கள் இயல்பிலேயே சிறந்த வியாபாரத் திறமை கொண்டவர்கள். குஜராத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் இதுவே என கருதப் படுகிறது. மேலும் மாநிலத்தின் நலன் கருதி அரசு எடுக்கும் முடிவுகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் குணம் குஜராத் மக்களுக்கு உண்டு.

சிறந்த கட்டமைப்பு வசதி

குஜராத்தில் மின்சாரத் தட்டுப் பாடு பிற மாநிலங்களின் விட மிகக் குறைவு. மிகச் சிறந்த சாலை வசதிகள், துறைமுக வசதிகள் உண்டு. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், கிழக்கில் இருக்கும் சீனாவில் இருந்து பொருட்கள் மேற்கு கரையிலிருக்கும் குஜராத் வழியாகவே இந்தியாவிற்கு அதிக அளவில் இறக்குமதியாகின்றன. சிறந்த முறையில் செயல் படும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இங்கு உண்டு. நந்திக்ராம் பிரச்சினைகள் உருவாக முக்கிய காரணமான "தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலம்" பற்றிய கவலைகள் இங்கு கிடையாது.

வேகமாக முடிவெடுக்கும் அரசின் திறன்:

மேற்கு வங்காளத்தில் வாகன தொழிற்சாலை அமைக்க முயன்ற டாட்டா அங்கு நடைபெற்ற அரசியல் சச்சரவு காரணமாக தொழிற்சாலை இருப்பிடத்தை மாற்றி அமைக்க முயன்ற போது, குஜராத் முதலமைச்சர் அது பற்றி முடிவு செய்ய சில வினாடிகளே எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. புதிய தொழில்கள் பலவும் குஜராத் நோக்கி பயணிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக உணரப் படுகிறது.

பொதுவாக ஊழலற்ற நிர்வாகம்:

இந்தியா என்றாலே ஊழல் என்ற நிலையில் கூட குஜராத் அரசில் ஊழல் குறைவாக உள்ளதாக கூறப் படுகிறது. எனவே இந்தியாவில் புதிய தொழில் தொடங்கும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தையே அதிகம் விரும்புவதாக கருதப் படுகிறது.

தொழிற்துறை வளர்ச்சி மட்டுமல்ல, பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரும் விஷயத்தில் கூட குஜராத் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. சிறந்த ஆரம்ப பள்ளிகள், குறைந்த மின் தட்டுப் பாடு (மின் வெட்டு குறைவு), சிறந்த போக்குவரத்து வசதி, மிக முக்கியமாக கிராமங்களில் கூட குடிநீர் வசதி (உபயம் சர்தார் சரோவர் திட்டம்) மற்றும் பாசன நீர் வசதி என அடிப்படை வசதிகள் அங்கு சிறந்து விளங்குவதாக எனது குஜராத் நண்பர்கள் தெரிவிக்கின்றனர். இலவச மின்சாரமா அல்லது தங்கு தடையற்ற மின்சாரமா என்ற கேள்வியை நரேந்திர மோடி ஒரு முறை விவசாயிகளிடம் கேட்டதாகவும் இரண்டாவதையே விவசாயிகள் விரும்பியதாகவும் கூட ஒரு குஜராத் நண்பர் தெரிவித்தார்.

மொத்தத்தில் குஜராத் ஒரு வளமான மாநிலமே என்று உறுதியாக நம்மால் இப்போது சொல்ல முடிகிற நிலையில் நமது அடிப்படையான கேள்விக்கு வருவோம். இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் நரேந்திர மோடிதான் முக்கிய காரணமா?

ஆமாம் என்று சொல்வோருக்கு அடுத்த கேள்வி. குஜராத் தனது பல ஆயிரம் ஆண்டு கால சரித்திரத்தில் எப்போது பின் தங்கிய மாநிலமாக இருந்தது? குஜராத்தின் கொழிக்கும் செல்வத்திற்கு ஆசைப் பட்டுதானே, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கஜினி முஹம்மது பதினேழு முறை இந்தியாவின் மீது படையெடுத்தான். சுதந்திர இந்தியாவில் கூட, நரேந்திர மோடி ஆட்சிக்கு வரும் முன்னரே கூட, பெரும் தொழில்களின் இருப்பிடமாக குஜராத் மாநிலம்தானே திகழ்ந்தது? நரேந்திர மோடியின் மிகப் பெரிய சாதனையாக பலரால் கருதப் படுகிற சர்தார் சார்வோர் திட்டம் கூட இவர் ஆட்சிக்கு வரும் முன்னரே உருவாக்கப் பட்டு ஆரம்ப பணிகளும் முடிந்திருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.(1940 களில் தீட்டப் பட்ட இந்த திட்டம் 1979 இல் ஆரம்பித்தது. 1999 இல் உச்ச நீதி மன்றம் அணையின் உயரத்தை அதிகப் படுத்த அனுமதி அளித்தது. குஜராத் மாநிலத்தின் இன்றைய நீர் வளத்திற்கு முக்கிய காரணம் இந்த திட்டம்தான். ஆனால் இதன் வெற்றிக்கான புகழ், இந்த நிகழ்வுகளுக்கு பின் அதாவது 2001 இல் பதவிக்கு வந்த நரேந்திர மோடியை சென்றடைந்தது மக்களின் ஞாபக மறதிக்கு ஒரு எடுத்துக் காட்டு)

மேலும் இந்தியாவின் சில பகுதிகள் (தமிழ் நாடு, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா) எப்போதுமே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறியவையாகத்தானே இருந்திருக்கின்றன. பூகோள ரீதியாகவும் (கர்நாடகா - மிதமான வெட்ப நிலை, பஞ்சாப் - மண் வளம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ் நாடு - சிறந்த துறைமுகங்கள்), மனித வள ரீதியாகவும் (குஜராத், மகாராஷ்டிரா - வணிகத் திறன், பஞ்சாப் - உழைப்பு, தமிழ்நாடு - உழைப்புடன் தொழிற் திறமை) சில சிறந்த அம்சங்கள் இந்த பகுதிகளுக்கு காலம் காலமாக இருந்திருக்கின்ற காரணமாகவே இவை முன்னேறிய மாநிலங்களாக இருந்து வருகின்றன. இவற்றுக்கு எப்படி ஒருவரால் அல்லது ஒரு ஆட்சியால் உரிமை கொண்டாட முடியும்? மேலும் பீகார் மாநிலம் போன்ற பின்தங்கிய மாநிலத்தை மாற்றி அமைப்பது ஒரு பெரிய சாதனையாக கொள்ள முடியும். ஆனால், ஏற்கனவே நன்கு வளர்ந்த ஒரு மாநிலத்தின் வளர்ச்சி வேகத்தை சற்று அதிகப் படுத்துவது ஒரு பெரிய சாதனையா என்பது கேள்விக் குறியே.

எனவே, இயல்பிலேயே பெரும் வணிகத் திறனும் அரசுக்கு வளர்ச்சித் திட்டங்களில் ஒத்துழைக்கின்ற மனப் பாங்கும் கொண்ட (கிட்டத்தட்ட) ஒரே கலாச்சாரம் கொண்ட மக்களை உள்ளடக்கிய, காலம் காலமாய் வளமான மாநிலமாக திகழும் குஜராத் மாநிலத்தில் பெற்ற வெற்றியின் அடிப்படையில் மட்டுமே நரேந்திர மோடி, பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய பெரும்பாலும் வளர்ச்சியற்ற பகுதிகளையே கொண்டுள்ள ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் என்று கூறுவது பொருத்தமாக இருக்காது.

மேலும், பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்களை அரசே துன்புறுத்துவது அல்லது அவர்கள் மீது நடைபெறும் வன்முறை தாக்குதல்களை கண்டு கொள்ளாமல் இருப்பது பாதிக்கப் பட்ட மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை போய் அதிக தீவிரவாதத்தையே உருவாக்கும் என்பது சரித்திரம் நமக்குத் தரும் பாடம். பாதுகாப்பற்ற உணர்வில் சிறுபான்மை மக்களை வாழச் செய்வது நீண்ட கால நோக்கில் எதிர்வினைகளையே உருவாக்கும். அக்சர்தாம் தாக்குதல், அஹ்மேடபாத் குண்டு வெடிப்பு, சூரத் நகரில் கண்டெடுக்கப் பட்ட வெடிகுண்டுகள் போன்ற நிகழ்வுகள் குஜராத்தை ஒரு பாதுகாப்பான மாநிலமாக மோடி மாற்றினார் என்ற வாதத்தை பிசுபிசுக்க செய்கிறது.

இப்போது தனிப் பட்ட முறையில் நரேந்திர மோடியின் சாதக பாதக அம்சங்கள் பற்றி கொஞ்சம் அலசுவோம்.

செயல் படும் முதல்வர் : இன்றைய தேதியில் இந்தியாவிலேயே வெகு சிறப்பாக செயல் படும் அரசு குஜராத் அரசு என்று கருதப் படுகிறது.

விரைந்து முடிவெடுக்கும் திறன்: நானோ தொழிற்சாலை ஒரு சிறந்த உதாரணம்.

தொழில் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் காட்டும் ஆர்வம். - இது வெளிப் படையான உண்மை.

ஊழல் குற்றச்சாட்டுகள் குறைந்து காணப் படுதல் - எதிர் கட்சியினரால் கூட பெரிய குற்றச்சாட்டுகளை இவர் மீது சாட்ட முடியவில்லை. இதன் காரணமாகவே மத கலவரத்தை அடிப்படையாக கொண்டே சென்ற மாநில தேர்தல் பிரச்சாரங்கள் அமைந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

இப்போது பாதக அம்சங்கள் பற்றி பார்ப்போம்.

மதச் சாயம் பூசப் பட்ட முதல்வர் - குஜராத் கலவரத்தின் முதல் மூன்று நாட்கள் கலவரத்தை கண்டு கொள்ளாமல் விட்டது இவர் மீது சுமத்தப் படும் மிகப் பெரிய மற்றும் வலுவான ஒரு குற்றச் சாட்டு. ஹிட்லர் போலவே தனது பாசிச கொள்கைகளை மக்கள் மறக்கச் செய்யவே "முன்னேற்றம்" என்ற முகமூடியை நரேந்திர மோடி அணிந்து கொண்டதாகவும் எதிரணியினரின் குற்றச் சாட்டுகள் உண்டு.

தன்னிச்சையான போக்கு- இது குறித்து பா.ஜ.க. கட்சியினரே வெளிப் படையாக குற்றம் சாட்டுவது உண்டு. மேலும் பா.ஜ.க. மத்திய தலைமைக்கும் இவருக்கும் இடையே ஒரு பனிப் போர் நிலவுவதற்கு இவரது தன்னிச்சையான போக்கே காரணம் என்று சொல்லப் படுகிறது.

இப்போது, நரேந்திர மோடி நாடாளலாமா என்ற கேள்விக்கு வரலாம். இந்தியாவின் தலைமைப் பொறுப்பிற்கு வர பெரும்பான்மையினரின் ஆதரவு பெற்ற, தேர்தலில் நிற்க தகுதியுள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உண்டு. அதற்கு அவர் வாய்ப்புகள் உண்டா என்பதே பெரிய கேள்வி.

பா.ஜ.க.கட்சியே தனது மதச் சாயலை தவிர்க்க பல முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் குஜராத் வன்முறையில் பலமான குற்றச்சாட்டுகள் சாட்டப் பட்டுள்ள இவர் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப் படுவாரா என்பதே ஒரு மிகப் பெரிய கேள்வியாகும்.

குஜராத் மாநிலத்தில் இவர் செய்து காட்டிய சாதனைகளின் அடிப்படையிலும் இவரை முன்னிறுத்துவது பா.ஜ.க.வுக்கு கடினமான ஒரு விஷயம். "முன்னேற்றம்" என்ற கோஷத்தை வைத்து நடைபெற்ற முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், செயல்படும் தலைவர்களாக கருதப் பட்ட சந்திர பாபு நாயுடு, எஸ்.எம்.கிருஷ்ணா, திக்விஜய் சிங் ஆகியோர் அடுத்த தேர்தலில் பதவியை இழந்ததும் கவனிக்க வேண்டிய விஷயம். இதிலிருந்து சாதாரண இந்திய மக்கள் "முன்னேற்றம்" என்பது சில புள்ளிவிவரங்களிலும் சில பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதிலும் இல்லாமல் தமது சொந்த வாழ்வில் நேரடியாக பிரதிபலிக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது.

ஆக மொத்தத்தில் நரேந்திர மோடி இப்போதைக்கு பிரதமர் வேட்பாளராக நிறுத்தப் பட மாட்டார் என்றும் நிறுத்தப் பட்டாலும் வெற்றி வாய்ப்புகள் மிகக் குறைவு என்றும் கருதுகிறேன். எனவேதான், பிரதமர் பதவிக்கு இப்போதைக்கு போட்டியிட அவரே விரும்ப வில்லை என்றும் கூறப் படுகிறது. மேலும் பெரும்பான்மையான இந்தியரால் ஏற்றுக் கொள்ள படுகிற வகையில் தான் 'வளர்ந்த' பின்னரே பிரதமர் பதவிக்கு அவர் போட்டியிட விரும்புவதாகவும் சில பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. இந்தியாவிற்கு வளர்ச்சியைத் தர சிறப்பாக செயல் படும் ஒரு பிரதமர் தேவையென்றாலும், பலதரப் பட்ட கலாச்சாரங்களையும் சமூக பொருளாதார வேறுபாடுகளை கொண்ட பகுதிகளையும் உள்ளடக்கிய இந்த மிகப் பெரிய நாட்டிற்கு பிரதமர் பதவிக்கு வர ஒருவருக்கு (எனது பார்வையில்) மேலும் சில முக்கியமான தகுதிகள் வேண்டும்.

உயரிய சிந்தனைகள்
சாதாரண மக்களை வாழ்வில் உயர்த்த விருப்பம்
அதற்கான நீண்ட கால நோக்குடன் கூடிய திட்டங்கள் தீட்டும் திறன்.
செயல் படும் தலைமை
பலதரப் பட்ட மக்களை புரிந்து கொள்ளும் திறமை
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை.
பாரபட்சமற்ற பார்வை.
பொதுவாழ்வில் தூய்மை.
தேசத்தின் பாதுகாப்பில் உறுதி.

இது ஒரு சிறிய லிஸ்ட்தான். பிரதமர் பதவிக்கு இன்னும் பல தலைமை பண்புகள் தேவை. இத்தகைய தகுதிகளை நரேந்திர மோடி வளர்த்துக் கொள்வாரேயானால், அவர் இந்தியாவின் பிரதமராக என்னைப் போன்ற சாதாரண இந்திய மக்களால் தயக்கமின்றி வரவேற்கப் படுவார்.

நன்றி.

49 comments:

SRIKKANTH said...

இந்த கட்டுரை படித்தேன். எது மத சாயல்? வோட்டுக்காக மக்களை பிரிப்பதே, மீண்டும் பிரிப்பது, கடவுள் இல்லை என்பது, இதற்க்கு அப்பால் சென்று பகுத்தறிவு பேசுவது. ஹிந்துக்களை இழிவு பண்ணுவது, அதே சமயம் முஸ்லீம் நோன்புக்கு சென்று கன்ஜி குடிப்பது, கிறிஸ்டியன் விழாக்களில் பங்கு கொள்வது ஆனால் இந்து என்றால் பகுத்தறிவு பேசுவது, இது தான் மத சாயலா?

அமெரிக்காவில் ப்ரெசிடென்ட் மற்றும் மக்கள் கடவுள் முன் சத்தியம் செய்கிறார்கள், அனால் இங்கு கடவுள் இல்லை என்கிறார்கள். இந்தியா பாரம்பரியம் மிக்க கடவுள் பக்தி உள்ள நாடு, அது எந்த மதமாக இருந்தாலும் சரி. அப்படி இருக்க பா.ஜ.க மற்றும் சில கட்சிகள் தவிர வேறு எந்த கட்சி இதை ஒப்புக்கொள்கிறது. மிக பெரிய கட்சியான காங்கிரஸ் இதில் ஓர வஞ்சம் காட்டுகிறது. நீங்களும், மக்களும் இதை புரிந்து கொண்டு பா.ஜ.க வை ஆதரித்து நம் இந்திய (பாரதிய) கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டுகிறேன்.

பணிவுடன் நன்றி
நரசிம்ஹன், திருவல்லிக்கேணி

SRIKKANTH said...

இந்த கட்டுரை படித்தேன். எது மத சாயல்? வோட்டுக்காக மக்களை பிரிப்பதே, மீண்டும் பிரிப்பது, கடவுள் இல்லை என்பது, இதற்க்கு அப்பால் சென்று பகுத்தறிவு பேசுவது. ஹிந்துக்களை இழிவு பண்ணுவது, அதே சமயம் முஸ்லீம் நோன்புக்கு சென்று கன்ஜி குடிப்பது, கிறிஸ்டியன் விழாக்களில் பங்கு கொள்வது ஆனால் இந்து என்றால் பகுத்தறிவு பேசுவது, இது தான் மத சாயலா?

அமெரிக்காவில் ப்ரெசிடென்ட் மற்றும் மக்கள் கடவுள் முன் சத்தியம் செய்கிறார்கள், அனால் இங்கு கடவுள் இல்லை என்கிறார்கள். இந்தியா பாரம்பரியம் மிக்க கடவுள் பக்தி உள்ள நாடு, அது எந்த மதமாக இருந்தாலும் சரி. அப்படி இருக்க பா.ஜ.க மற்றும் சில கட்சிகள் தவிர வேறு எந்த கட்சி இதை ஒப்புக்கொள்கிறது. மிக பெரிய கட்சியான காங்கிரஸ் இதில் ஓர வஞ்சம் காட்டுகிறது. நீங்களும், மக்களும் இதை புரிந்து கொண்டு பா.ஜ.க வை ஆதரித்து நம் இந்திய (பாரதிய) கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டுகிறேன்.

பணிவுடன் நன்றி
நரசிம்ஹன், திருவல்லிக்கேணி

Anand said...

Modi is a great leader. I wish him to be live for longer years as Gujarat CM only since atleast we can have one state with less corruptions

வினோத் கெளதம் said...

நல்ல அலசல்..

raje said...

நல்ல பின்னூட்டம்

KARTHIK said...

அருமையான அலசல்
அவரைவிட சீனியர்கள் கட்சியில் நிறைய இருக்காங்க.
அதனால அவருக்கெல்லாம் கொடுக்க மாட்டாங்க.

Maximum India said...

அன்புள்ள நரசிம்ஹன்

உங்கள் முதல் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி.

நீங்கள் சொல்வது போலவே மதசாயலுக்கும் மத சார்பின்மைக்கும் தவறான அர்த்தங்கள் இந்தியாவில் வழங்கப் படுகின்றன என்பது எனது கருத்தும் கூட. இது பற்றி ஒரு பதிவே கூட போட்டிருக்கிறேன்.

http://sandhainilavaram.blogspot.com/2008/10/blog-post_21.ஹ்த்ம்ல்

கடவுள் வழிபாடு (எந்த கடவுளாக இருந்தாலும்) மற்றும் சமய வழிமுறைகள் (எந்த மதமாக இருந்தாலும் சரி) தனிப் பட்ட விஷயங்கள் என்பதும் இதில் அரசோ அரசியல்வாதிகளோ தலையிடக் கூடாது என்பதே என் கருத்து. மதத்தின் (எந்த மதமாக இருந்தாலும் சரி) பாதுகாவலர் போல காட்டி கொள்ளும் தனிப் பட்ட யாரையும் அல்லது கட்சியையும் ஏற்றுக் கொள்ள என் மனம் இடம் தராது.

கடவுள் ஒருவர் இருக்கிறார், இந்த உலகை படைத்தவரும் காப்பாற்றுபவரும் அவர்தான் என்ற உண்மையான நம்பிக்கை ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில் எந்த மதத்தினரையும் அவரால் எதிரிகளாக பார்க்க முடியாது. மேலும் என்னைப் பொருத்த வரையில் கடவுள்தான் நம்மைக் காக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டவர். அவரிடம் கோரிக்கைகள் வைப்பது மட்டுமே நம் பணி. இதை விடுத்து எல்லாம் வல்ல கடவுளைக் காக்கிறோம் என்று கிளம்பும் ஆசாமிகள் மீது நான் எப்போதுமே நம்பிக்கை வைப்பதில்லை.

காங்கிரஸ், பி.ஜே.பி மற்ற சிறிய கட்சிகளும் வாக்குக் கணக்கை அடிப்படையாக கொண்டே மத அல்லது மத சார்பற்ற அரசியல் நடத்துகின்றன. எனவே நாம் இவர்களால் போலியாக காட்டப் படும் மத சாயல் (அல்லது மதசார்பின்மையின்) அடிப்படையில் மட்டுமே யாருக்கும் ஆதரவு அளிக்க முடியாது.

Maximum India said...

Dear Anandakumar

Thank you for the first visit and comments. I too wish Modi a long life serving well for the country.

Maximum India said...

அன்புள்ள வினோத் கெளதம்

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

Maximum India said...

அன்புள்ள ராஜே

பின்னூட்டத்திற்கு (எந்த பின்னூட்டம் என்று தெரிய வில்லை) பின்னூட்டம் இட்ட உங்களுக்கு நன்றி. :)

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//அவரைவிட சீனியர்கள் கட்சியில் நிறைய இருக்காங்க.
அதனால அவருக்கெல்லாம் கொடுக்க மாட்டாங்க.//

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் அவருக்கு பிரதமர் பதவிக்கு 2014 இல் போட்டியிடும் விருப்பம் உள்ளதாக ஒரு பத்திரிக்கை செய்தியில் பார்த்தேன்.

Musthafa said...

I MAY A MUSLIM. BUT I SUPPORT MODI

I like Sir.Modi
I love Shreeman.Modi

He is the visionary
He will erdaicate poverty

He came to rescue Gujarat
His political adventure is unforgettable in front of Taj

Modi saab ek badiya pandit hai
Gujarat is corruption free
Masters like Ambanis think he is praiseworthy
Ambani himself is a noble man converting phone calls to make money

Modi did only as per his Karma
Indeed vajbhai regretted ridiculing Modi malik for violating Raj Dharma

Modi's honesty is unparraled in hostory
His running-away from Karan Thappar's questions exemplifies his mastery

Somebody thinks he is a bad boy
that he 'officially' killed 'some' guys and unborn babies
and that he supported siva sena's pro-marati ways
and that he was in favor of burning missionaries
For all such non-sense, was the model country America itself not like this?
If we can forgive America, why can't we love Modi yaar?

By the way
Terrorist America may deny
the entry into that country for our bhai
for it says Shreeman is a terrorist guy
Now tell me why
America is not a bigger terrorist in disguise
than our chacha who just wanted to tell our foriegn funders a bye

Intellectuals support him for his planning
for they understand that he is a good man now shining
Indeed a good brave man who will never apologize for any killing
and he will always be proud because he did the 'right' thing

I belong to his target called minority
But I need to support as he builds my country
Otherwise I will be called a spy
That is why I like Sir.Modi
That is why I love Shreeman.Modi
I will relish in Modi's memory
I will cherish his rhetory
I will hail him till my death tasting the blood from my head broken by his army

வாக்காளன் said...

நர்சிம் சார், அமெரிக்காவில் ப்ரெசிடன்ட் , மக்கள் எல்லோரும் கடவுள் முன் சத்தியம் செய்தால்?? உடனே உலகத்தினர் அனைவரும் செய்திடவேண்டுமா? ஏன் இந்த மனப்பான்மை.. அமெரிக்கன் செய்தால் உசத்தி, உண்மை என்ற மனபான்மை?

Maximum India said...

அன்புள்ள முஸ்தபா

பின்னூட்டத்திற்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி.

உங்கள் கவிதை வரிகள் நெஞ்சை சுட்டன. கடைசி வரியோ கண்கள் கசியச் செய்தது.

யார் முதல் தீயை எடுத்து வைத்திருந்தாலும் அதற்கு எந்த காரணங்கள் இருந்தாலும் , குஜராத் வன்முறைகள் ஒவ்வொரு இந்தியனும் வெட்கப் பட வேண்டிய ஒன்று. இந்த ரணத்தை எந்த மருந்து கொண்டு ஆற்ற போகிறோம் என்று தெரிய வில்லை.

தமிழகத்தில் ஒரு தமிழனாக இருந்த வரை சரிவர புரியாத எனக்கு, கன்னடர் சிலரின் வன்முறைகளை கர்நாடகத்தில் நேரில் பார்த்த போதுதான் அங்கே ஒரு தமிழன் என்ற முறையில் சிறுபான்மையினராக இருந்த எனக்கு "சிறுபான்மையினரின் பாதுகாப்பற்ற உணர்வு" பற்றி ஓரளவுக்கு புரிந்தது. மேலும், வன்முறையாளர்களின் வெறிச் செயல்களை கண்டிக்காமல் படித்த நல்ல பதவியில் உள்ள எனது சில கன்னட நண்பர்களே அவற்றுக்கு நியாயம் கற்பிக்க முனைந்த போது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

சிறுபான்மையினருக்கு தக்க பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான உணர்வு வழங்க வேண்டியது பெரும்பான்மையினரின் மிக முக்கிய கடமை என்பதே என் கருத்து.

Maximum India said...

அன்புள்ள வாக்காளன்

பின்னூட்டத்திற்கும் முதல் வருகைக்கும் நன்றி

//நர்சிம் சார், அமெரிக்காவில் ப்ரெசிடன்ட் , மக்கள் எல்லோரும் கடவுள் முன் சத்தியம் செய்தால்?? உடனே உலகத்தினர் அனைவரும் செய்திடவேண்டுமா?//

இந்த விஷயத்தில் இந்தியா எவ்வளவோ மேல். இறை நம்பிக்கை மற்றும் இறை மறுப்பு இரண்டுமே தனி மனித உரிமைகள் என்று நன்றாக புரிந்து கொண்டிருந்த நம் தலைவர்கள், அரசியல் சட்டத்தில் இரண்டுவிதமான உறுதி மொழிக்கு வகை செய்தனர்.

//ஏன் இந்த மனப்பான்மை.. அமெரிக்கன் செய்தால் உசத்தி, உண்மை என்ற மனபான்மை?//

நீங்கள் சொல்வது சரிதான். அமெரிக்காவில் சில நல்ல விஷயங்கள் உள்ளன ஆனால் பல தீய விஷயங்களும் உள்ளன. உதாரணமாக, நல்ல விஷயம் தனது குடிமக்களுக்கு அளிக்கப் படும் உரிமைகள். கெட்ட விஷயம் மற்ற நாட்டு மக்களுக்கு இழைக்கப் படும் அநீதிகள்.

RAMASUBRAMANIA SHARMA said...

நல்ல பதிவு ....நல்ல அலசல் ....மிகப்பெரிய சென்சிடிவ் விஷயங்களை அருமையாக வரிசைபடித்தி இருக்கிறீர்...உங்கள் பதிவிற்கு , பதில் கமெண்ட்ஸ் நன்றாக உள்ளது...நாம் சிறிது காலம் பொறுமையாக இருந்து பார்ப்போம் ... ,

Maximum India said...

அன்புள்ள ராமசுப்ரமனிய ஷர்மா

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. இப்போது நீங்கள் தமிழிலேயே கருத்துரைகளை இடுவது மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.

Itsdifferent said...

I think you have analysed the positives and negatives in a very constructive way.
Few points, and I welcome opinons on this, because, thats what will enhance our society's view on things
1. Comparing him with Naidu is obscure, as Modi has done an inclusive development, he has done so much for every trade, including agriculture.
2. "மத" chayam, is all media hype, there is no politician who is perfect, we just have to choose a person with less evil, in that way, I think Modi has a good qualification having done most good deeds.
3. We need someone who can be trusted to do the right things for our country as whole, even Advani fails in that test, because in the form of secularism, he panders to all minority population (I mean Muslim and christians), I am not saying hate them, but respect majority opinion and do the right thing for Country.
4. Development, Development, Development - it is unimaginable for any other state to attain the level of development Gujarat has achieved.
5. Governance - even here I think he has achieved unparalleled governance strategy, and efficiency.
We can keep going on like these, but I think we need a Leader, who can inspire youth, a generation, which is going to determine India's position in the next 10-20 years.

Maximum India said...

அன்புள்ள itsdifferent

உங்களுடைய விரிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி. உங்கள் பின்னூட்டத்தின் மீது மற்ற நண்பர்களின் கருத்துகளை நானும் ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

நன்றி

Itsdifferent said...

Check this out.
http://2020dreams.blogspot.com/

nerkuppai thumbi said...

As an average secularist, I was eager to know the views of a voice from the minority. Thiru Musthafa has told in the first part something pleasing to the secular Hindu's ears.
But, in the concluding paras, he has said: "But I need to support Modi,as he builds my country
Otherwise I will be called a spy
That is why I like Sir.Modi
That is why I love Shreeman.
I will relish in Modi's memory
I will cherish his rhetory
I will hail him till my death tasting the blood from my head broken by his army" in other words, "I belong to his target called minority.
I have told so much to save my self from harassment, do not take me seroiusly. It is true that minorities are being subjected to harassment, Personally, I do not give a damn for development. My free views, which are not for publishing, will be be what the media keeps saying as "muslim opinion".
I shall eagerly await the same gentleman's and from others from the "minority community", whether the last para's interpretation as above is whart their heart tells.

Maximum India said...

அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா

பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் கேள்விக்கு விடை வருமா என்று நானும் எதிர்பார்கிறேன்.

கபீஷ் said...

நல்லா எழுதியிருக்கீங்க.

நீங்க சொல்றது தகுதிகள் இருந்தா தான் பிரதமர் ஆகணும்னா அந்த பதவி காலியா தான் இருந்திருக்கணும், இருக்கணும். :-):-):-)

அவர் பிரதமர் ஆகற சாத்தியம் இல்ல, அவங்க கட்சியிலே அதுக்கு நிறைய போட்டி இருக்கு.

மற்றபடி அவருக்கு பொதுவாழ்வில நடிக்கத் தெரியணும் அப்படின்ற முக்கியமான தகுதி இல்ல. hipocrite ஆ இருக்கணும்ன்ற உப தகுதியும் இல்ல.

கபீஷ் said...

//அவர் பிரதமர் ஆகற சாத்தியம் இல்ல, அவங்க கட்சியிலே அதுக்கு நிறைய போட்டி இருக்கு.//

இப்போ வர்ற தேர்தல்ல பிரதமர் வேட்பாளர் ஆகற வாய்ப்பு அவருக்கு இல்லன்னு சொல்ல நினைச்சத தான் இப்படி சொதப்பியிருக்கேன்.

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

//அவர் பிரதமர் ஆகற சாத்தியம் இல்ல, அவங்க கட்சியிலே அதுக்கு நிறைய போட்டி இருக்கு.//

//இப்போ வர்ற தேர்தல்ல பிரதமர் வேட்பாளர் ஆகற வாய்ப்பு அவருக்கு இல்லன்னு சொல்ல நினைச்சத தான் இப்படி சொதப்பியிருக்கேன்.//

இரண்டுமே கூட சரியாக இருக்கலாம். எனவே கவலைப் படாதீங்க. :-)

கபீஷ் said...

//இரண்டுமே கூட சரியாக இருக்கலாம். எனவே கவலைப் படாதீங்க. :-)//

ஏனுங்க இந்த லொள்ளு :-) மேக்ஸிமம்னு பேரை வச்சிகிட்டு மினிமமா ஆசைப்படறீங்க :-)

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

//ஏனுங்க இந்த லொள்ளு :-) மேக்ஸிமம்னு பேரை வச்சிகிட்டு மினிமமா ஆசைப்படறீங்க :-)//

பதிவும் அதோட பின்னூட்டங்களும் ரொம்ப சீரியஸா இருக்கு. அப்புறம் சொதப்பிட்டேன்னு வருத்தப் பட்ட உங்களுக்கு ஒரு ஆறுதலா இருக்கட்டுமேன்னு சும்மா ஒரு சின்ன பிட்டு. அவ்வளவுதான். :)

நீங்க கணக்குல மாக்சிமா மினிமா அப்படின்னு படிச்சிருப்பிங்க இல்ல? அதுல வர மாதிரி மாக்சிமம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மினிமம் கூட. இது எப்படி இருக்கு? :)

Musthafa said...

///// I belong to his target called minority.
I have told so much to save my self from harassment, do not take me seroiusly. It is true that minorities are being subjected to harassment, Personally, I do not give a damn for development. My free views, which are not for publishing, will be be what the media keeps saying as "muslim opinion". ////


Mr Nerkuppai Thumbi,

You have figured out my line of thought.
For me development is important. But my and my family's life and safety are far more important that anything else. We can not build a nation on the skeletons of a community.

That is the opinion of mine and "all" the muslims I know. We have to figure out who are those media muslims and under what context they supported shreeman. modi.

The most disturbing part about those arguments that "Modi has realized his mistakes and he has become a good man from being a official genocidal war monger, forget the fact that shreeman. modi and his circle is still making statements that he only did the 'right' thing and he is 'proud' of it'

Most surprising this that Ameirca which is not so fair to Islam and Muslims is compare with Modi sometimes. The truth is, though America is partial on Islamic views, they do not use American Government to torture or kill the muslims in their country. All my stay in America for almost five years, I felt rather safe than staying in Gujarat and some parts of north india during my employment there. I can not overcome the effect of some of the nerve shattering moments I underwent suring my stay in those areas

Musthafa

கபீஷ் said...

//நீங்க கணக்குல மாக்சிமா மினிமா அப்படின்னு படிச்சிருப்பிங்க இல்ல? அதுல வர மாதிரி மாக்சிமம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மினிமம் கூட. இது எப்படி இருக்கு? :)//

நான் கணக்குல ரொம்ப பாவம்(poor ன் என்னாலான தமிழாக்கம்) எல்லா பாடத்திலயும் அதே கதை தான்.
ஆவரேஜ்னு ஒண்ணும் இருக்கில்ல. அது தான் முக்கியம் நினைக்கிறேன். மினிமத்துக்கு தேவைக்கு அதிகமா முக்கியத்துவம் கொடுத்து பாவம் மேக்ஸிமம் ரொம்ப கஷ்டப்படறாங்க.

இது நல்லா இருக்கா?

Maximum India said...

அன்புள்ள முஸ்தபா

//For me development is important. But my and my family's life and safety are far more important that anything else. We can not build a nation on the skeletons of a community.//

உங்களுடைய கருத்துக்கள் மிகச் சிறப்பானதாகவும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும் உள்ளன. இந்திய நாடு இங்கு வாழும் ஒவ்வொரு இந்தியனுக்கும் சமமான அளவிலேயே சொந்தமானது. எந்த ஒரு தனி சமூகத்தின் வாழ்வினையும் பாதுகாப்பினையும் கேள்விக் குறியாக்கி விட்டு நாட்டிற்கு முன்னேற்றம் அதுவும் புள்ளிவிவரங்களில் மட்டுமே என்பதை என்னால் எப்போதுமே ஒப்புக் கொள்ள முடியாது. ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைகள் உண்டு Efficiency & Effectiveness (தமிழில் தெரிய வில்லை. நெற்குப்பை தும்பி அவர்கள் உதவிக்கு வருவார் என்று நம்புகிறேன்). நான் இரண்டாவதையே அதிகம் விரும்புவன்.

பல வேறுபட்ட சமூகங்கள் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அமைதியாக வாழுவதே ஒரு நாட்டின் முக்கியத் தேவையாகும். இந்த சமூக முன்னேற்றம் இருந்தால், மற்ற பொருளாதார முன்னேற்றங்கள் தானாக வரும். தமிழில் ஒரு வழக்கு உண்டு. கண்ணை விற்று ஓவியம் வாங்கி என்ன பயன்? அது போல சமூக ஒற்றுமையை சீர்குலைத்து விட்டு வரும் பொருளாதார முன்னேற்றம் என்பது வீணே ஆகும். எனவே இந்தியாவிற்கு பொருளாதாரத்தை புரிந்து கொண்டு நாட்டை முன்னேற்றுபவர்களை விட மக்களை புரிந்து கொண்டு சகோதரத்துவத்தை வளர்பவர்களே அவசிய மற்றும் உடனடித் தேவை என்பதே பொருளாதாரம் படித்த ஆனால் மனிதநேயம் அதிகம் விரும்பும் எந்தன் கருத்து. (நெற்குப்பை தும்பி ஐயா அவர்களின் கருத்துகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறேன்)

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

//நான் கணக்குல ரொம்ப பாவம்(poor ன் என்னாலான தமிழாக்கம்) எல்லா பாடத்திலயும் அதே கதை தான்.
ஆவரேஜ்னு ஒண்ணும் இருக்கில்ல. அது தான் முக்கியம் நினைக்கிறேன். மினிமத்துக்கு தேவைக்கு அதிகமா முக்கியத்துவம் கொடுத்து பாவம் மேக்ஸிமம் ரொம்ப கஷ்டப்படறாங்க.

இது நல்லா இருக்கா? //

ஐயோ. ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க! (வேணாம். விட்டுடுங்க. ரொம்ப வலிக்குது).

நன்றி. : -)

MCX Gold Silver said...

நல்ல அலசல்..

Maximum India said...

அன்புள்ள டக்

பின்னூட்டத்திற்கு நன்றி

nerkuppai thumbi said...

I am very much upset after your second comment.

This is for you and fellow comrade muslims: please understand that the "secular"-minded Hindus are far more in number than the fanatic Hindus. In fact, if you will agree, secular minded people are more in percentage among Hindus than secular-minded Muslims. But, they believe that "among Muslims, majority are secularists; fundamentalists are a small minority. The terrorists get support and strength from the minority among Muslims". It is their firm belief.
If your view reflects majority or as you have told, all Muslims, then it is not good for the country, in the short, medium and long run.

A good number of Hindus want to hear what I have said above.

Insha Allah/Rama/Jesus

I look for other friends on this issue.

Maximum India said...

அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா

முஸ்தபா அவர்களுக்கு நீங்கள் அளித்துள்ள பதிலை பார்த்தேன். அவருடைய பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன். இடையில் இது குறித்து ஒரு "ஹிந்து" என்ற முறையில் எனது சில கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மற்ற பல மதத்தினருக்கு இல்லாத ஏகப் பட்ட சலுகைகள் ஹிந்து மதத்தினருக்கு உண்டு. அதாவது,

ஒரு ஹிந்து எத்தனை கடவுள்களையும் வேண்டுமானாலும் எந்த வடிவிலும் வணங்கலாம். உதாரணத்திற்கு தியானத்தில் மூழ்கி "ஜோதி" ரூபமான கடவுளையும் வணங்கலாம். திருப்பாவை படித்து பெருமாளையும் தொழலாம். கடா வெட்டி ஐயனாரப்பனையும் வழி படலாம். ஏன், கடவுள் இல்லை என்று சொல்லி பகுத்தறிவும் கூட பேசலாம்.

அதே போல, புரட்டாசி மாதம் விரதம் இருக்கலாம், மார்கழி பஜனையில் கலந்து கொள்ளலாம். கார்த்திகை மாதம் ஐயப்ப விரதம் இருக்கலாம். அல்லது, காடு வெட்டி முனியப்பன் பெயரைச் சொல்லி கடா வெட்டி பொங்கல் வைத்து ஒரு "வெட்டு" வெட்டலாம். ஏன், ஹிந்து மதத்தின் இந்த பழக்கங்களைப் பழித்தும் பேசிக் கூட ஹிந்துவாகவே வாழலாம்.

இந்த கட்டுபாடற்ற சுதந்திரம்தான் பெரும்பாலான ஹிந்து மக்களை "எம்மதமும் சம்மதம்" என்ற பரந்த கொள்கையைக் கொண்டு வாழ வழி செய்துள்ளது. (அதே சமயம், மதத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொண்டு புதிதாக கிளம்பி உள்ள சிலர், ஹிந்து மக்களிடையும் "மதத் துவேஷம்" எனும் தீமையைப் பரப்ப முயற்சிக்கின்றனர். இது முளையிலேயே கிள்ளி எறியப் பட வேண்டிய ஒன்று)

இத்தகைய கட்டுப்பாடற்ற சுதந்திரம் பெரும்பாலான மற்ற மதத்தினருக்கு இல்லை. அவர்களுக்கு தன் மதத்தினராக தொடர வேண்டுமெனில் பல கட்டுப்பாடுகள் உண்டு. பழங்கால மத பழக்க வழக்கங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டியிருக்கிறது. மேலும், அவ்வப்போது புதிய கட்டளைகள் இடும் மதகுருக்கள் பிடியிலிருந்தும் சாதாரண மக்கள் மீள்வது மிகவும் கடினம். ஒவ்வொரு மதத்திலும் உள்ள சில பழமைவாத வழிமுறைகளை அகற்ற அந்தந்த மதத்தைச் சார்ந்த முற்போக்குவாதிகள்தான் முன் வந்து மதச் சீர்த்திருந்தங்களில் ஈடு பட வேண்டும். இது அவர்களின் தனிப் பட்ட நுண்ணிய விஷயம் என்பதால் மற்ற மதத்தினரால் தலையிட முடியாது.

முஸ்தபா அவர்கள் சொல்லி இருப்பது போல ஒருவேளை பெரும்பான்மையான இஸ்லாமிய சகோதரர்கள் மனதில் பாதுகாப்பற்ற சூழ்நிலை வந்திருந்தால் அதற்கு காரணம் நரேந்திர மோடி மட்டும் அல்ல. மற்றவர்கள் இஸ்லாமியர்களை சந்தேகத்துடன் பார்ப்பதே அவர்கள் மனதில் எழும் அச்சத்திற்கு முக்கிய காரணம் ஆகும். அப்படி மற்றவர்கள் சந்தேகமாக பார்ப்பதற்கு காரணம், தொடர்ந்து நிகழ்ந்து வரும் தீவிரவாத தாக்குதல்களே. ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலினாலும் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் இப்படி மற்றவர்களால் சந்தேகக் கண்ணோடும் பார்க்கப் படும் அப்பாவி இஸ்லாமியர்களே என்பது என் கருத்து. எனவே, தம்மை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அந்நியக் கைக் கூலிகள், உண்மையில் இஸ்லாமியர்களுக்கு மிகப் பெரிய துரோகத்தையே செய்கிறார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

இது குறித்து அனைவரிடம் விருப்பு வெறுப்பற்ற கருத்தை நானும் எதிர்பார்கிறேன்.

கபீஷ் said...

//மற்றவர்கள் இஸ்லாமியர்களை சந்தேகத்துடன் பார்ப்பதே அவர்கள் மனதில் எழும் அச்சத்திற்கு முக்கிய காரணம் ஆகும். அப்படி மற்றவர்கள் சந்தேகமாக பார்ப்பதற்கு காரணம், தொடர்ந்து நிகழ்ந்து வரும் தீவிரவாத தாக்குதல்களே.//


இது மட்டும் காரணமில்லை. இந்த நிகழ்வுகளுக்கு இவர்களுள் சிலர் அளிக்கும் direct and indirect support. இதுவும் இவர்களுக்குத தெரியும். நம்ம gap டன் சொன்ன மாதிரி பாகிஸ்தான்ல இருக்குற இந்துக்கள் நிலைமையையும் இங்குள்ள முஸ்லிம்கள் நிலைமையையும் ஒப்பீடு செய்து மற்றும் மனசாட்சியுடன் introspection செய்து பார்த்தால் உண்மை விளங்கும். மைனாரிட்டி சலுகை, மற்றும் இவர்களுக்குக் கிடைக்கும் இன்னும் பிற சலுகைகளைப் பற்றி திரு Mustafa வின் கருத்து என்ன என்பதை அறிய விழைகிறேன். கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதை துக்க தினமாக கொண்டாடும் மற்றும் பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாட்டில் வென்றால் மட்டும் பட்டாசு கொளுத்தும் மக்களைப் பற்றிய அவரது கருத்தையும் அறிய ஆவல். (தனிப்பட்ட முறையில் நான் விளையாட்டை விளையாட்டாகவே பார்க்கிறேன். போராக அல்ல. Here i want to mention those people who really want to show their happiness when india fails in any occasion, especially if pakistan is the opponent. People with conscience can't refuse this truth. I have my few friends doing so,other than that they are fine.If you want i can ask them to write in their own words. They dont feel bad to say that. They are doing so thinking that pakistan is their country , they r living here as they couldn't settle in Pakistan in the time of partition (the reason is they couldnt leave their assets and few other reasons)

KARTHIK said...

இணையத்தில் நண்பர் (பெயர் நினைவில்லை) சொன்னது

உலகில் பெரும்பான்மையான தீவிரவாதிகள் முஸ்லிம்கள்.
ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல.


ஒரு பட்டாம் பூச்சியின் சிறகில் புரப்படும் மெல்லிய தென்றல் எப்படி மற்றொரு இடத்தில் புயலாகிரதோ அது போல ஒரு சிலர் செய்யும் தவறுகலால் பெரும்பான்மையானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

மோடியைப்பற்றிய விவாதத்தில் மதம் ஏன் முக்கிய விவதாமாகிப்போனது.

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

விரிவான கருத்துரைக்கு நன்றி.:)

உங்கள் கேள்விக்கு நான் கூட சில பதில்களை கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

//இந்த நிகழ்வுகளுக்கு இவர்களுள் சிலர் அளிக்கும் direct and indirect support. //

பலர் அல்ல சிலர் மட்டுமே என்பது நமக்கும் தெரியும். தீவிரவாதத்திற்கு எதிராக இஸ்லாமிய பெரியவர்கள் சமீபத்தில் ஒன்றாக கடுமையான குரல் கொடுத்து படவா வெளியிட்டதும் தீவிரவாதிகளின் உடலை இஸ்லாமிய முறைப் படி அடக்கம் செய்ய மும்பையில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மறுத்து விட்டதும் அனைவரும் கவனிக்க வேண்டியது. ஒரு சிலரின் தவறுக்காக பலரையும் "குற்றமனப்பான்மை" எனும் சிலுவை சுமக்கச் செய்வதில் எனக்கு தனிப் பட்ட முறையில் உடன்பாடில்லை.

//மைனாரிட்டி சலுகை, மற்றும் இவர்களுக்குக் கிடைக்கும் இன்னும் பிற சலுகைகளைப் பற்றி திரு Mustafa வின் கருத்து என்ன என்பதை அறிய விழைகிறேன்.//

இதெல்லாம் சில ஹிந்து மதவாதிகளின் தந்திரமான தேர்தல் பிரச்சாரம். மைனாரிட்டி சலுகை உண்மை என்றால், இன்று தலித் மக்களுக்கு அடுத்தபடியாக பொருளாதார ரீதியாக பின் தங்கி இருக்கும் சமுதாயமாக இஸ்லாமிய சமுதாயம் இருக்காது.

//கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதை துக்க தினமாக கொண்டாடும் மற்றும் பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாட்டில் வென்றால் மட்டும் பட்டாசு கொளுத்தும் மக்களைப் பற்றிய அவரது கருத்தையும் அறிய ஆவல். //

இதுவும் ஒரு விஷமத் தனமான பிரச்சாரமே. ஏதோ சிலர் வெறுப்பினால் செய்யும் ஓரிரு செயல்களுக்காக நாட்டை விரும்பும் பலரையும் நாம் இழந்து விட முடியாது. நானே பல முறை நேரடியாக இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் இஸ்லாமியர்களைப் (பாகிஸ்தானோடு விளையாடும்போது கூட) பார்த்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல ஒரு சிலர் இருந்தாலும், அவர்களுக்கு நம்பிக்கை மற்றும் சகோதரத்துவத்தை அளித்து நம்மோடு இணைத்துக் கொள்வது ஒவ்வொரு பெரும்பான்மை இனத்தவரின் கடமை என்றே நான் கருதுகிறேன்.

நன்றி

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

//உலகில் பெரும்பான்மையான தீவிரவாதிகள் முஸ்லிம்கள்.
ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல.//

இதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன். தவறிழைத்த சிலருக்காக அப்பாவி சகோதரர்கள் பலரை நாம் இழக்க முடியாது.

//ஒரு பட்டாம் பூச்சியின் சிறகில் புரப்படும் மெல்லிய தென்றல் எப்படி மற்றொரு இடத்தில் புயலாகிரதோ அது போல ஒரு சிலர் செய்யும் தவறுகலால் பெரும்பான்மையானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.//

அருமையான விளக்கத்திற்கு நன்றி கார்த்திக்.

//மோடியைப்பற்றிய விவாதத்தில் மதம் ஏன் முக்கிய விவதாமாகிப்போனது//

குஜராத் நிகழ்வுக்கு பின்னர், மோடியையும் மதத்தையும் பிரித்து அவர் சம்பந்த பட்ட எந்த விஷயத்தையும் பார்ப்பது (அவரே விரும்பினாலும்) கடினமான ஒன்று.

நன்றி.

கபீஷ் said...

// ஒரு சிலரின் தவறுக்காக பலரையும் "குற்றமனப்பான்மை" எனும் சிலுவை சுமக்கச் செய்வதில் எனக்கு தனிப் பட்ட முறையில் உடன்பாடில்லை.
//

I second you entirely.

//இதுவும் ஒரு விஷமத் தனமான பிரச்சாரமே. ஏதோ சிலர் வெறுப்பினால் செய்யும் ஓரிரு செயல்களுக்காக நாட்டை விரும்பும் பலரையும் நாம் இழந்து விட முடியாது. //

I dont want to be a P-Sec. We need to accept the truth as it is and need to rectify the fault. If you need proof , can explain with that. i know this by own experience not thru some one's false news.

//மைனாரிட்டி சலுகை உண்மை என்றால், இன்று தலித் மக்களுக்கு அடுத்தபடியாக பொருளாதார ரீதியாக பின் தங்கி இருக்கும் சமுதாயமாக இஸ்லாமிய சமுதாயம் இருக்காது.
//

Hope we need to write one exclusive post about this to get facts and truth.


//தீவிரவாதத்திற்கு எதிராக இஸ்லாமிய பெரியவர்கள் சமீபத்தில் ஒன்றாக கடுமையான குரல் கொடுத்து படவா வெளியிட்டதும் தீவிரவாதிகளின் உடலை இஸ்லாமிய முறைப் படி அடக்கம் செய்ய மும்பையில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மறுத்து விட்டதும் அனைவரும் கவனிக்க வேண்டியது//

It's obvious as Mr.Karthik mentioned

உலகில் பெரும்பான்மையான தீவிரவாதிகள் முஸ்லிம்கள்.
ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல.

கபீஷ் said...

It's very unfortunate that there is no question about Mrs.Sonia ruling in the name of Manmohan Singh.

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

//I dont want to be a P-Sec. We need to accept the truth as it is and need to rectify the fault. If you need proof , can explain with that. i know this by own experience not thru some one's false news.//

இருக்கலாம். ஆனால் இது சில இடங்களில் மட்டுமே நடக்கும் விஷயம் என்பதே என் கருத்து.

////மைனாரிட்டி சலுகை உண்மை என்றால், இன்று தலித் மக்களுக்கு அடுத்தபடியாக பொருளாதார ரீதியாக பின் தங்கி இருக்கும் சமுதாயமாக இஸ்லாமிய சமுதாயம் இருக்காது.
//

Hope we need to write one exclusive post about this to get facts and truth.//

இதற்கு அதிகாரபூர்வமான ஆதாரம் உண்டு. மத்திய அரசு சிறுபான்மையினரின் சமூக மற்றும் பொருளாதார நிலை குறித்து அமைத்த சச்சார் கமிட்டீ இது குறித்து பல வியப்பான தகவல்களைத் தந்துள்ளது. விபரத்திற்கு பாருங்கள்

http://en.wikipedia.org/wiki/Sachar_Committee

நீங்கள் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. :)

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

//It's very unfortunate that there is no question about Mrs.Sonia ruling in the name of Manmohan Singh.//

இது விரிவாக விவாதிக்க வேன்டிய இன்னுமொரு பெரிய விஷயம். பின்னர் பார்ப்போம்.

நன்றி

Itsdifferent said...

Not sure, if you guys have read somewhere or not, the concept of Hinduism was derived like two centuries back, when the foreign invaders were trying to group us into one identity. Before that we were all having slightly different faits, but mostly worshipping some of idols.
So that gives us lots of flexibility and most importantly accepting every religion as equal and some form of reaching the higher powers. The most important difference between our religion and others is that, we do not impose ours as the only faith to reach God, as others do, and that leads to the fact that we do not indulge in conversion.
And as many had said in this section, every sect has a minute percentage of fanatics, and it is the responsibility of the majority to stop supporting them, and do the right thing, to have their community reflected right.
I am sure each one of us have friends in other communities, and we all have grown up well together. So that grassroots level unity have to demonstrated at every level.
Lets show that for all of us, India is our nation, we will unite to fight another invastion, and we will unite to develop this great nation to regain its lost status in the planet.
Jai Hind.

Maximum India said...

Dear Itsdifferent

I too share your line of thought. Thank you very much for the lovely comments

nerkuppai thumbi said...

Now it is obvious that none wants to express themselves on these topics:
None of your followers had the courtesy to acknowledge or state even for the record that the majority of the muslims do not approve terrorists' methods. None of them is prepared to say even for the record that they will not support or offer any help to terrorists.
Any amount of provoking could not do it.

I am resigned to give up.

Unknown said...

மத சம்பவத்தை தவிர்த்து பார்த்தால், இன்று இந்தியாவிற்கு தேவைப்படும் தகுதி வாய்ந்த தலைவர். திரு மோடி அவர்கள், இன்று பெரும்பான்மையான நாடாள மன்றம் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் செயல் படாமல் போனதற்கு அவர்கள் கட்சியில் வைத்திருக்கும் விசுவாசம் (அல்லது தன்னை அடமானம் வைத்தல் ) மட்டுமே காரணம், ஆனால் திரு மோடி அவர்கள் தன் கட்சியை பற்றி கவலை படாமல், தான் எண்ணியதை எவர் பற்றியும் கவலை படாமல், மக்களுக்காக செயல் பட்டு கொண்டு உள்ளார். மேலும் வாரிசு அரசியல், குடும்ப அரசியல், ஊழல் அரசியல் போன்ற எந்த சங்கடங்களும் இல்லாமல் தெளிவாக உள்ளார். குஜராத் மக்கள் நல்லவர்களாக இருந்தாலும் அவர்களை நாசமாக்குவது ஒன்றும் பெரிய கடினமான செயல் அல்ல என்பது, நமது மற்ற அரசியல் வாதிகளின் செயல்களில் இருந்து நாம் நன்றாக அறிவோம், ஆனால் அவ்வாறில்லாமல் அந்நிலையை தக்க வைத்து கொண்டு செயல் படுவது ஒரு சிறப்பான நிர்வாகமே. அதனால் நாட்டின் மற்ற மாநிலத்தின் அரசியல் நிலவரத்தை ஒப்பிட்டு பார்த்தல் குஜராத் மக்கள் ஒரு சிறந்த தலைவரை பெற்றுள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை. குஜராத் மக்களுக்கு வாழ்த்துக்கள்

Unknown said...

மத சம்பவத்தை தவிர்த்து பார்த்தால், இன்று இந்தியாவிற்கு தேவைப்படும் தகுதி வாய்ந்த தலைவர். திரு மோடி அவர்கள், இன்று பெரும்பான்மையான நாடாள மன்றம் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் செயல் படாமல் போனதற்கு அவர்கள் கட்சியில் வைத்திருக்கும் விசுவாசம் (அல்லது தன்னை அடமானம் வைத்தல் ) மட்டுமே காரணம், ஆனால் திரு மோடி அவர்கள் தன் கட்சியை பற்றி கவலை படாமல், தான் எண்ணியதை எவர் பற்றியும் கவலை படாமல், மக்களுக்காக செயல் பட்டு கொண்டு உள்ளார். மேலும் வாரிசு அரசியல், குடும்ப அரசியல், ஊழல் அரசியல் போன்ற எந்த சங்கடங்களும் இல்லாமல் தெளிவாக உள்ளார். குஜராத் மக்கள் நல்லவர்களாக இருந்தாலும் அவர்களை நாசமாக்குவது ஒன்றும் பெரிய கடினமான செயல் அல்ல என்பது, நமது மற்ற அரசியல் வாதிகளின் செயல்களில் இருந்து நாம் நன்றாக அறிவோம், ஆனால் அவ்வாறில்லாமல் அந்நிலையை தக்க வைத்து கொண்டு செயல் படுவது ஒரு சிறப்பான நிர்வாகமே. அதனால் நாட்டின் மற்ற மாநிலத்தின் அரசியல் நிலவரத்தை ஒப்பிட்டு பார்த்தல் குஜராத் மக்கள் ஒரு சிறந்த தலைவரை பெற்றுள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை. குஜராத் மக்களுக்கு வாழ்த்துக்கள்

Blog Widget by LinkWithin