Sunday, January 25, 2009

இந்திய குடியரசு நாள் - சில சுவாரஸ்யமான தகவல்கள்


உலகின் மிகப் பெரிய ஜனநாயக குடியரசான இந்தியாவின் குடியரசு நாளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இந்நாளில் ஏற்றுக் கொள்ளப் பட்ட இந்திய அரசியல் வடிவமைப்பு சாசனத்தின் சிறப்பியல்புகள் பற்றியும் இங்கு பார்ப்போம்.

இந்தியாவை விட்டு 1947 இல் வெள்ளையர்கள் வெளியேறுவதற்கு முன்னர், ஜனவரி 26 ஆம் தேதியே இந்திய சுதந்திர நாளாக இந்தியாவின் தேசியவாதிகளால் கொண்டாடப் பட்டது என்றும் அந்த பாரம்பரியத்தின் அடிப்படையிலேயே பின்னர் ஜனவரி 26 ஆம் நாள் இந்திய குடியரசு நாளாக ஏற்றுக் கொள்ளப் பட்டது என்ற செய்து உங்களுக்கு தெரியுமா? சற்று விரிவாக பார்ப்போம்.

இந்தியாவின் தேவை பூரண சுதந்திரமே என்ற தீர்மானம், 1929 ஆம் ஆண்டு ஜவர்கர்லால் நேரு அவர்கள் தலைமையில் நடைபெற்ற லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் இயற்றப் பட்டது. மேலும் 1930 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் இந்திய சுதந்திர நாளாக இந்திய மக்கள் அனுசரிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப் பட்டது. இதையடுத்து ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவின் விடுதலை நாளாக தேசிய உணர்வுள்ள அனைவராலும் 1947 ஆம் ஆண்டு வரை அனுசரிக்கப் பட்டு வந்தது. இந்தியருக்கு 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் வழங்குவதாக முதலில் தீர்மானித்திருந்த பிரிட்டிஷ் அரசு, திடீரென 1947 ஆம் ஆண்டிலேயே இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்து, ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடு இரவில் இந்திய நாட்டிற்கு விடுதலை தந்தது. (இந்த அதிரடி அவரச வெளியேற்ற முடிவே, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட மிகப் பெரிய வன்முறைக்கும் அதன் பின்னர் இன்று வரை நிலவி வரும் இந்திய பாகிஸ்தான் விரோதப் போக்கிற்கும் அடிப்படைக் காரணமென அரசியல் நோக்கர்களால் கருதப் படுகிறது)

இடையே, பிரிக்கப் படாத இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்காக இந்திய அரசியல் வடிவமைப்பு நிர்ணய சபை 1946 இல் பிரிட்டிஷ் அரசால் அமைக்கப் பட்டது. இதன் முதல் கூட்டம் டிசம்பர் 1946 இல் நடை பெற்றது. இதன் உறுப்பினர்கள், அப்போதைய பிராந்திய பிரதிநிதித்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் இந்திய சிறு அரசவை ஆகியவற்றால், அந்தந்த பிரதேச மக்கள் தொகை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

சுதந்திர இந்தியாவில் (திருத்தி அமைக்கப் பட்ட) இந்த பேரவை முதல் முறையாக அக்டோபர் 1947 இல் கூடியது. இதன் தலைவராக அரசியல் சட்ட மேதை டாக்டர்.அம்பேத்கர் செயல்பட்டார். பல்வேறு விவாதங்களுக்குப் பின்னரும், பொது கருத்துக்களை கேட்டறிந்த பின்னரும் இறுதியான அரசியல் வடிவமைப்பு சாசனம் 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி முழுமையான வடிவு பெற்றது. ஆனால், விடுதலை போராட்ட வீரர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கும் வகையில், ஜனவரி 26 ஆம் நாள், இந்தியாவின் குடியரசு தினமாக ஏற்றுக் கொள்ளப் பட்டு, அந்த நாளில், இந்தியாவின் அரசியல் வடிவமைப்பு சாசனம் அமலுக்கு கொண்டு வரப் பட்டது. (குடியுரிமை, தேர்தல்கள், தற்காலிக பாராளுமன்றம் போன்ற சில பிரிவுகள், நவம்பர் மாதம் முதலே அமலுக்கு வந்து விட்டன).

இப்படி ஜனவரி 26 ஆம் ஏற்றுக் கொள்ளப் பட்ட இந்திய அரசியல் சாசனத்திற்கு சில சிறப்பு அம்சங்கள் உண்டு. அவையாவன.

௧. உலகின் மிக நீளமான எழுதப் பட்ட அரசியல் சாசனம் இந்திய அரசியல் சாசனம். அமெரிக்காவை போல மேலோட்டமான அடிப்படைப் பிரிவுகளை மட்டுமே கொண்டிருக்காமல், முழுமையான தீர்வுகள் பலவற்றையும் இந்திய அரசியல் சாசனம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

௨. உலகின் (அன்றிருந்த) சிறந்த அரசியல் சாசனங்களின் முக்கிய அம்சங்கள் இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற வைக்கப் பட்டன. அந்த நாடுகளின் சாசனங்கள் செயல் பட்ட அனுபவங்களைக் கொண்டு இந்திய சாசனத்தில் நுண்ணிய பிரிவுகள் அமைக்கப் பட்டன.

௩. காலத்திற்கு ஏற்ப மாற்றி கொள்ள ஏதுவாக, எளிதில் திருத்தியமைக்க அரசியல் சாசனத்தில் சில பிரிவுகள் அமைக்கப் பட்டன. உலகிலேயே நெகிழ்வுத் தன்மை அதிகம் கொண்ட சாசனம் இந்திய சாசனம் என்று கருதப் படுகிறது. (சமீபத்திய தீர்ப்பில், உச்ச நீதி மன்றம், அரசியல் சாசனத்தின் அடிப்படை அமைப்பை மாற்றி அமைக்க யாருக்கும் உரிமையில்லை என்று கூறி இருப்பது குறிப்பிடத் தக்கது).

௪. இந்திய குடிமக்களுக்கு மட்டுமில்லாமல், இந்தியாவில் வாழும் பிற நாட்டு குடிமக்களுக்கும் சில அடிப்படை உரிமைகள் வழங்குவது நமது அரசியல் சாசனம். (இது பல நாடுகளில் கிடையாது)

௫. அடிப்படை உரிமைகள் மட்டுமில்லாமல், குடிமக்களுக்கான சில அடிப்படை கடமைகளையும் உள்வைத்தது நம் அரசியல் சாசனம்.

௬.அடிப்படை உரிமைகளை காக்கும் உரிமையை உச்ச நீதிமன்றத்திற்கும் உயர்நீதி மன்றங்களுக்கும் வழங்கிய இந்திய அரசியல் சாசனம், அந்த உரிமைகளை பெற்றுத் தர நீதிமன்றங்களிடம் கோரும் உரிமையை இந்திய மக்களுக்கும் வழங்கியது.

இப்படி பல வகையிலும் சிறப்பு பெற்றது நமது அரசியல் சாசனம். நாம் இன்று அனுபவிக்கும் தனி மனித சுதந்திரத்திற்கு அடிகோலியது இந்த அரசியல் சாசனமே.

மிகுந்த தேசப் பற்றும், தியாக உணர்வும் கொண்ட சிறந்த தலைவர்களின் கடும் உழைப்பில் உருவாக்கப் பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவுகளுக்கு முழு மரியாதை கொடுத்தாலே இந்தியாவின் இன்றைய பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும் என்பது எனது நம்பிக்கை.

எனவே, இந்திய சுதந்திர போராட்ட வீரர்களால் முதலில் விடுதலை நாளாக கொண்டாடப் பட்டு பின்னர் இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப் பட்ட நாளான ஜனவரி 26 ஆம் தேதியை சகோதரத்துவ உணர்வுடனும், தேசப் பற்று உணர்வுடனும் நாம் கொண்டாடுவது, விடுதலைப் பயிரை கண்ணீர் விட்டும் செந்நீர் விட்டும் வளர்த்த அந்த மாமனிதர்களுக்கு செலுத்தும் சிறந்த நன்றிக் கடனாக இருக்கும்.

பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய

அனைவருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துக்கள்

நன்றி.

20 comments:

benza said...

நன்றி ... இந்திய சாசனத்தில் இவ்வளவு பலம் இருந்தும் அன்று தொடக்கம் இன்று வரை சகஜமாக நடைபெறும் சாதி மத வன்முறைகளை
அரசியல் வாதிகளால் சட்டம் இயற்றி
கட்டுப் படுத்த இயலாமைக்கு காரணத்தைக் கண்டறிந்து கட்டுரை
தந்தால் பிரயோஜனமாகும்

Maximum India said...

அன்புள்ள பென்சலாய்

பின்னூட்டத்திற்கு நன்றி

//நன்றி ... இந்திய சாசனத்தில் இவ்வளவு பலம் இருந்தும் அன்று தொடக்கம் இன்று வரை சகஜமாக நடைபெறும் சாதி மத வன்முறைகளை அரசியல் வாதிகளால் சட்டம் இயற்றி கட்டுப் படுத்த இயலாமைக்கு காரணத்தைக் கண்டறிந்து கட்டுரை தந்தால் பிரயோஜனமாகும்//

காரணம் என்னவென்றால் சாதி, மத வன்முறைகளை தூண்டி விட்டு அந்த நெருப்பில் குளிர் காய்பவர்களே இந்த அரசியல்வாதிகள்தானே.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பதிவு

Maximum India said...

அன்புள்ள ஞானசேகரன்

பின்னூட்டத்திற்கு நன்றி

pothujanam said...

நல்ல முறையில் வடிவமைக்க பட்ட சாசனம் நம்முடையது. எல்லா மக்களும் பயன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. நல்ல புத்தகமான அதை நம் அரசியல்வாதிகள் அவர்களுக்கு தேவையான மாதிரி மாற்றி கோனார் நோட்ஸ் ஆக்கி கொண்டார்கள் என்பதுதான் உண்மை.இந்திரா அதை தொடங்கி வைத்தார். மொரார்ஜி வழி மொழிந்தார். என்றாலும் இன்று வரை போற்றத்தக்க ஒரு ஆவணமாகவே அது உள்ளது அம்பேத்கருக்கும் அவருடன் பணியாற்றிய அறிவார்ந்த பெரியோர்களுக்கே பெருமை..ஆனால் சாசனத்தின் நோக்கங்கள் சரியான முறையில் நிறைவேற்றப்பட்டதா என்பது கேள்விக்குறி.இன்றைய அரசியல் மாக்கள் அதை போண்டா விற்கு போடாமல் இருந்தால் சரி.

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கு நன்றி

//நல்ல புத்தகமான அதை நம் அரசியல்வாதிகள் அவர்களுக்கு தேவையான மாதிரி மாற்றி கோனார் நோட்ஸ் ஆக்கி கொண்டார்கள் என்பதுதான் உண்மை. இந்திரா அதை தொடங்கி வைத்தார். மொரார்ஜி வழி மொழிந்தார்.//

இன்னும் சில பேர் அதை கட் செய்து பிட் அடிக்கக் கூட உபயோகித்துக் கொண்டார்கள்

//என்றாலும் இன்று வரை போற்றத்தக்க ஒரு ஆவணமாகவே அது உள்ளது அம்பேத்கருக்கும் அவருடன் பணியாற்றிய அறிவார்ந்த பெரியோர்களுக்கே பெருமை..//

சத்தியமான வார்த்தைகள்

//ஆனால் சாசனத்தின் நோக்கங்கள் சரியான முறையில் நிறைவேற்றப்பட்டதா என்பது கேள்விக்குறி. //

உண்மைதான். இன்றைய தலைவர்கள் அதனை புரிந்து கொண்டார்களா என்பதே பெரிய கேள்விக் குறிதான். புரிந்து கொள்ள அவர்களுக்கு சுயநலம் எனும் கண்புரை தடையாக உள்ளது.

//இன்றைய அரசியல் மாக்கள் அதை போண்டா விற்கு போடாமல் இருந்தால் சரி.//

உண்மைதான். பேப்பர் விலை அதிகமானால் அரசியல் சாசன ஆவணங்களை எடைக்குக் கூட போட்டு விடுவார்கள். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நன்றி.

கபீஷ் said...

//இந்திய சாசனத்தில் இவ்வளவு பலம் இருந்தும்//

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

//காரணம் என்னவென்றால் சாதி, மத வன்முறைகளை தூண்டி விட்டு அந்த நெருப்பில் குளிர் காய்பவர்களே இந்த அரசியல்வாதிகள்தானே.//

அரசியல்வாதியும் மக்கள் கூட்டத்திலிருந்து வருபவர் தானே. தனிமனித ஒழுக்கம் குறைந்து/ இல்லாமல் இருப்பது முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். நான் நினைப்பது தவறாகவும் இருக்கலாம்.

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி

//ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது//.

உண்மைதான். அரசியல் சாசனம் ஒரு சிறந்த உயர்தரமான கருவி போன்றது. ஆனால் அதன் பயன்பாடு, அதை உபயோகிப்பவர்கள் கையில்தான் உள்ளது.

//அரசியல்வாதியும் மக்கள் கூட்டத்திலிருந்து வருபவர் தானே. தனிமனித ஒழுக்கம் குறைந்து/ இல்லாமல் இருப்பது முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். நான் நினைப்பது தவறாகவும் இருக்கலாம்.//

நீங்கள் நினைப்பது சரியான ஒன்றே. A society deserves a leader no better than itself என்பது ஒரு ஆங்கில வழக்கு. இன்றைய தேதியில் ஊழல் என்பது சமுதாயத்திலேயே புரையோடி போய் இருப்பது வருந்தத் தக்க உண்மை. அதே சமயம், இந்த நாட்டில் இருந்து பல நன்மைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் (அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்) கூட நாட்டின் மீது எந்த ஒரு நன்றி கடன் உணர்ச்சியும் காட்டாமல் இருப்பது இந்தியாவின் சாபக் கேடு.

benza said...

\\அரசியல்வாதியும் மக்கள் கூட்டத்திலிருந்து வருபவர் தானே. தனிமனித ஒழுக்கம் குறைந்து/ இல்லாமல் இருப்பது முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். நான் நினைப்பது தவறாகவும் இருக்கலாம்//

கபீஷ் > கருத்தைதானே கூறினீர் > ஒரு வழக்கி்ற்கு தீர்ப்பு கூறும்போதும் இந்த
தன்னடக்க '' தவறாகவும் இருக்கலாம்'' பாவிப்பதில்லையே !

இந்திய அரசியல்வாதிகள் சகலரும் ஒழுக்கம் இல்லாதவர்கள் அல்ல >>>
லால் பகதூர் சாஸ்திரி > காமராஜர் > ஆகியோர் நல்லுதாரணமாக இருந்தனர் >>>

இப்படி யோசித்தால் எப்படி ?
சகல Professionals க்கும் கொன்றோளிங் அமைப்பு இருப்பதற்கு சட்டம்
உருவாக்கியது அரசியல்வாதிகளே >>>

இந்த அரசியல்வாதிகளுக்கு அவ்விதமான ஒரு அமைப்பு ஏன் இல்லை ???

இருந்தால் அரசியலில் ஈடுபட தகுதிகள் வரையறுக்கலாம் >>>

அரசியலில் ஈடுபட்டுள்ள காலத்து வருமானத்தை கணிக்கலாம் >>>

அரசியலில் உள்ளோரது தவறுகளுக்கு தக்க தண்டனை உடனுக்குடன் வழங்கலாம் >>>

அண்மையில் முதலமைச்சர் ஓர் நிதிக்கு ஒரு கோடி இந்திய ரூபா அள்ளி கொடுத்தாராம் >>>

வரவேற்க வேண்டிய விஷயமானாலும் > இத் தொகை அவருடையதா?
அப்படியானால் எங்கிருந்து
வந்தது ? >>>

பாருங்கள் அமெரிக்கா வினது லூசியானா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டு காலத்தில் மூன்று Governor சிறை சென்றுள்ளனர் >

இப்போதுளவரும் விசாரணையில் உள்ளார் > அலஸ்கா மாநில செனரர் கம்பிக்கு பின்னால் தாளம்
போடுறாராமே >>>

அமெரிக்கா வையும் இந்தியாவையும் தான் நாம் ஜனநாயக விஷயங்களுக்கு
உதாரணமாக எடுக்கலாம் >>>

குறைந்த சாதியில் பிறந்த அம்பேத்கார் இந்திய சாசனத்தை இயற்றும் உயரத்துக்கு போனதை நாம் வரவேற்று புகழ்ந்தாலும் > பிரயோஜனம் இல்லாததன் இடத்திற்கு அனுபவேண்டியது
அவசியம் !!!

Maximum India said...

அன்புள்ள பென்சலாய்

கருத்துரைக்கு நன்றி.

கபீஷ் said...

அந்த அரசியல்வாதியை தேர்ந்தெடுப்பவர்கள் நம் மக்கள் தானே.

வாழத் தெரியாதவன் நாட்டை ஆளத் தெரியாதவன் ஆளுவான்னு ஒரு பழமொழி இருக்கு.

யார் வந்தா சமுதாயத்துக்கு நல்லதுன்னு பார்க்காம நமக்கு ஒதுக்கீடு கிடைக்குமா நம்ம நோன்புல கஞ்சி சாப்பிடுவாங்களா , நம்ம கோவில்ல கூழு ஊத்துவாங்களா
என்ன வெல்லாம் இலவசமா கிடைக்கும்னு பாத்து ஓட்டு போடற மக்கள் கூட்டத்துலேர்ந்து எப்படி நல்ல அரசியல்வாதி உருவாகுவார். எம் எஸ் உதயமூர்த்தியை தோற்கடித்த புண்ணிய ஆத்மாக்கள் அல்லவா?

benza said...

எம் எஸ் உதயமூர்த்தி என்பவரது விஷயத்தை சற்று விழக்குங்களேன் ப்ளீஸ்

benza said...

ஓர் உதவி > அறிவுரை வேண்டும் > நாம் எமது கமெண்ட்ஸ் பதிவு செய்யும்
பகுதியின் கீழ் எமது ஈமெயில் விலாசம் தரபடுகின்றது >>>
என்னிடம் இரு விலாசங்கள் பதிவாகி உள்ளன >>>
இவற்றில் ஒன்றை கான்சல் செய்வது எப்படி ???
அநேகமான இடுகைகள் என்னிடம் சேராது விடுகின்றன >>>
விஷயம் தெரிந்தோர் உதவி செய்யுங்கள் ப்ளீஸ்

கபீஷ் said...

//எம் எஸ் உதயமூர்த்தி என்பவரது விஷயத்தை சற்று விழக்குங்களேன் ப்ளீஸ்//

http://kabheesh.blogspot.com/2008/11/blog-post_29.html

Here you can get approximately 20% details about him.(Please dont consider this link as ad. for my post)

I'll mail you the links about him, unfortunetly the no of links is less and it takes time to search about him

benza said...

\\அந்த அரசியல்வாதியை தேர்ந்தெடுப்பவர்கள் நம் மக்கள் தானே//

சீர்திருத்தம் ஒருபோதும் மக்களால் செய்யபடவில்லையே >>>
ஓர் குறித்த ஒரு சிலராலேயே சமுதாயத்தில் சீர்திருத்தம் செய்ய வழி
கோல முடியும் >>>
ஓர் இனத்தை இழுத்து விழித்தி இனோர் இனத்தை மேம்படுத்துவது
சீர்திருத்தம் அல்லவே அல்ல >>>
கீளோரை மேலே கொண்டுசெல்வதுதான் சமுதாய சீர்திருத்தமாகும் >>>
மற்றயது மஜோரிடியின் அடாவடித்தனம் >>>
ஆகவே உங்களை போன்ற ஒத்த மனம் கொண்டோர் ஒருமை பட்டு
செயல்பட்டால் மட்டுமே கெட்ட அரசியல்வாதி மக்களை விட்டு
ஒதுங்குவான் >>>
நன்றி.

கபீஷ் said...

I agree with you Mr.Benzaloy(What is the meaning of this name :-) )

//ஆகவே உங்களை போன்ற ஒத்த மனம் கொண்டோர் ஒருமை பட்டு
செயல்பட்டால் மட்டுமே கெட்ட அரசியல்வாதி மக்களை விட்டு
ஒதுங்குவான்//

I hope this will happen by integrating people with good thoughts and actions

KARTHIK said...

// benzaloy
இருந்தால் அரசியலில் ஈடுபட தகுதிகள் வரையறுக்கலாம். //

சரிதான் பென்ஸ்லாய்.

சிவப்பதிகாரம் எனும் படத்துல பழனியப்பன் ஒரு வசனம் எழுதிருப்பார்

காலத்துக்கு தக்கபடி சட்டங்கள் மாற்றப்படனும்ன்னு.
அதாவது அன்னைக்கு 10த் பட்ச்சவங்கலும் வங்கி மேனுஜர் ஆனாங்க,சிலவருசத்துக்கப்புரம் ஒரு UG ஆவது வேணூம்னாங்க,இப்போ MBAவும் அதுக்கும் மேலேயும் கேக்குராங்க.இபடி கால மாற்றத்துக்கு தகுந்தபடி ஒவ்வொரு துறைகளிலும் மாற்றம் வந்துகொண்டிருக்கிறது.
ஆனா இந்த அரசியல்வாதிகலுக்குன்னு ஒரு தகுதியும் இல்லை.
அட குறைந்தபட்சம் ஒரு நல்லவர்ங்கர(கொலைக்குற்றம்,ஆள்கடத்தல் ஊழல் இது போன்ற வழக்குகலாவது இல்லமல் இருத்தல்) தகுதியாவது இருக்கோனும்.

// I agree with you Mr.Benzaloy(What is the meaning of this name :-) )//

Ans plz....

Maximum India said...

அன்புள்ள பென்சலாய்
அன்புள்ள கபீஷ்
அன்புள்ள கார்த்திக்

நல்ல சிந்தனைகளை இங்கு வெளிப் படுத்தியதற்கு மிக்க நன்றி

வால்பையன் said...

நிறைய புது விசயங்களை உங்கள் வலைப்பூவில் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி!

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

வெகுநாட்களுக்கு பின் உங்களைப் பார்க்க முடிகிறது. : -)

//நிறைய புது விசயங்களை உங்கள் வலைப்பூவில் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி! //

அறிந்தவற்றையும் புரிந்தவற்றையும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு வலை. நீங்க தொடர்ந்து தரும் ஊக்கம் எனக்கு உற்சாகம் ஊட்டி மேலும் பல தகவல்களோடு பதிவுலகிற்குள் வர வைக்கிறது.

மிக்க நன்றி.

Blog Widget by LinkWithin