Sunday, July 19, 2009

அசர வைத்த அதிரடி ஆட்டம்!


பங்கு சந்தை மீண்டுமொருமுறை பலரையும் மூக்கில் விரல் வைக்க செய்திருக்கிறது. பட்ஜெட்டில் பங்கு சந்தையை திருப்தி படுத்துமளவுக்கு ஒரு விஷயமும் இல்லை, இந்திரா காந்தி காலத்திற்கு நாட்டை காங்கிரஸ் எடுத்துச் செல்கிறது என்றெல்லாம் காரணங்கள் சொல்லி ஒரே வாரத்தில் 1500 புள்ளிகள் (சென்செக்ஸ்) வீழ்ந்த சந்தை, அடுத்த வாரத்திலேயே முன் சொன்ன விஷயங்களை எல்லாம் மறந்து விட்டு கிட்டத்தட்ட 1200 புள்ளிகள் வரை உயர்ந்தது.

தேர்தல் முடிவுக்கு அடுத்த நாள் சந்தை ஒரு பெரிய இடைவெளியுடன் துவங்கியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். தொழிற்நுட்ப அடிப்படையின் படி (Technical Analysis) அந்த இடைவெளி நிரப்பப் பட வேண்டும் என்று நம்பிய பல சந்தை தாதாக்கள் பட்ஜெட்டுக்குப் பின்னர் விற்ற பின் வாங்கும் (Shorting) முடிவை எடுத்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் விற்பனை எதுவும் இல்லாததால் துண்டை காணோம் துணியை காணோம் என்று அவசரகதியாக தம்முடைய விற்பனை நிலையை (Short Position) சமன் (Short Covering) செய்ததே இந்த அதிரடி மீட்சிக்கு முக்கிய காரணம் ஆகும்.

உலக சந்தைகளின் சாதகமான போக்கும், பாராளுமன்றத்தில் சந்தை உணர்வுகளுக்கு ஆதரவாக நிதி அமைச்சர் உரையாற்றியதும் கூட சந்தைக்கு உதவியாக இருந்தன. அண்ணன்-தம்பி வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமான முறையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது, சென்செக்ஸ் மற்றும் நிபிட்டியின் மிகப் பெரிய பங்கான ரிலையன்ஸ் பங்கினை நன்கு உயர்த்தியது.

இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தைகளின் எதிர்பார்ப்பை விட அதிகமாக இருந்தது தகவல் தொழிற்நுட்ப பங்குகளை நன்கு உயர்த்தியது மட்டுமல்லாமல் மற்ற இந்திய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் நன்றாகவே இருக்கும் என்ற புதிய நம்பிக்கையையும் சந்தைக்கு கொடுத்தது.

ஒரு வேடிக்கையான கதை உண்டு. பல ஆண்டுகள் கழித்து இந்தியா வரும் ஒரு வெளிநாட்டுக்காரர் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியையும் செல்வ செழிப்பையும் பார்த்து ஆச்சரியப் படுகிறார். அப்போது அருகில் இருக்கும் அவரது நண்பரை பார்த்து, எப்படி இப்படி பல இந்தியர்கள் வெகு சீக்கிரத்தில் பணக்காரர்கள் ஆகி விட்டனர் என்று வினா எழுப்புகிறார். பங்கு சந்தையில் முதலீடு செய்துதான் இப்படி பலரும் பணக்காரர்கள் ஆகி இருக்கின்றனர் என்று நண்பர் பதில் கூறுகிறார். சரிதான், அப்படியென்றால் விமான நிலையத்தின் வெளியே பிச்சை எடுப்பவர்கள் எல்லாம் யார் என்று வெளிநாட்டுக்காரர் கேட்க, அவர்களெல்லாம் விற்ற பின் வாங்கும் நிலை (Short Position) எடுத்தவர்கள் என்று நண்பர் பதிலளிக்கிறார்.

இப்படி விற்ற பின் வாங்கும் நிலை எப்போதுமே அதிக ஆபத்தானது. இந்த முறையும் அந்த நிலை எடுத்தவர்கள் புல்டோசர் கொண்டு நசுக்கப் பட்டிருக்கிறார்கள்.

சரி, இப்போது வருகின்ற வாரத்தின் நிலையை பார்ப்போம்.

சந்தை இப்போது ஒரு முக்கிய எதிர்ப்பு நிலைக்கு வெகு அருகில் உள்ளது. கீழே உள்ள தொழிற்நுட்ப விளக்க வரைபடத்தைப் (Technical Chart) பாருங்கள்.



திங்கட்கிழமை நமது சந்தை ஒரு இடைவெளியுடன் மேலே எழும்பி அந்த உயரத்தை முழுமையாக தக்க வைத்துக் கொண்டால், சந்தை வெகுவாக உயர வாய்ப்பு உள்ளது. மாறாக வீழ்ச்சியுடன் துவங்கினால் மீண்டுமொருமுறை கீழ்நோக்கி பயணம் செய்யவும் வாய்ப்பு உள்ளது.

வர்த்தகர்களுக்கான நிலைகள்

Nifty 4374.95
Support - 1 - 4292
Support - 2 - 4202
Resistance - 1 - 4480
Resistance- 2 - 4610

உலக சந்தைகளின் போக்கை, குறிப்பாக பொருட்கள் சந்தைகளின் (கச்சா எண்ணெய் போன்றவை) போக்கை கவனித்து வருவது நல்லது. கச்சா எண்ணெய் பெரிய அளவில் முன்னேறாதது உலக சந்தைகள் பொருளாதார மீட்சியில் அதிக நம்பிக்கை வைக்க வில்லை என்பதையே காட்டுகிறது.

முதலீட்டாளர்கள் இது போன்ற தொழிற்நுட்ப வரைபடத்தைப் பற்றியெல்லாம் அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை. ஏற்கனவே இங்கு பலமுறை சொன்னபடி, ஒவ்வொரு வீழ்ச்சியிலும் நல்ல பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வரவும். அப்படி சேகரிப்பதற்கு சந்தை பல வாய்ப்புக்களை கொடுக்கும்.

வரும் வாரம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.

நன்றி!

2 comments:

Thomas Ruban said...

//எப்படி இப்படி பல இந்தியர்கள் வெகு சீக்கிரத்தில் பணக்காரர்கள் ஆகி விட்டனர் என்று வினா எழுப்புகிறார். பங்கு சந்தையில் முதலீடு செய்துதான் இப்படி பலரும் பணக்காரர்கள் ஆகி இருக்கின்றனர் என்று நண்பர் பதில் கூறுகிறார். சரிதான், அப்படியென்றால் விமான நிலையத்தின் வெளியே பிச்சை எடுப்பவர்கள் எல்லாம் யார் என்று வெளிநாட்டுக்காரர் கேட்க, அவர்களெல்லாம் விற்ற பின் வாங்கும் நிலை (Short Position) எடுத்தவர்கள் என்று நண்பர் பதிலளிக்கிறார்.

இப்படி விற்ற பின் வாங்கும் நிலை எப்போதுமே அதிக ஆபத்தானது. இந்த முறையும் அந்த நிலை எடுத்தவர்கள் புல்டோசர் கொண்டு நசுக்கப் பட்டிருக்கிறார்கள்//

பேராசை பெருநஷ்டம் என்று அழகாக சுருக்குமாக கூறி உள்ளேர்கள். பங்கு சந்தையில் முதலீடு செயபவர்க்கு பொறுமை மிக மிக அவசியம்.

நன்றி..நன்றி..

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

Blog Widget by LinkWithin