Skip to main content

Posts

Showing posts from 2008

சந்தை நிலவரத்தின் புத்தாண்டு பலன்கள்

சந்தைகளுக்கும் பொருளாதாரத்திற்கும் 2008 ஆம் ஆண்டு மிக உற்சாகமாகவே தொடங்கியது. சென்செக்ஸ் குறியீட்டு புள்ளிகள் புதிய சாதனை அளவாக 21,000 புள்ளிகளையும் தாண்டிச் சென்றது. ஜனவரி மாதம் நிகழ்ந்த ரிலையன்ஸ் பவர் பங்கு வெளியீடு வரலாறு காணாத வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவின் முதலீட்டு வங்கிகள் திவாலாகும் சூழ்நிலைகள் உருவான கட்டத்திலும் மற்ற உலக சந்தைகள் தொடர்ந்து வீழ்ந்து வந்த போதும் இந்தியாவின் கதை சற்று வித்தியாசமானது என்று இந்திய முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் நம்பினர். அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் மற்றும் இந்தியாவிற்கு முற்றிலும் புதிதான நுகர்வோர் கலாச்சாரம் நம் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் என்றும் பரவலாக நம்பப் பட்டது. ஆனால் நடந்த கதை வேறு. இந்த ஆண்டு உலக சந்தைகளில் மிக அதிகமாக வீழ்ச்சி பெற்ற சில சந்தைகளில் இந்தியாவும் ஒன்றென ஆயிற்று. இந்திய சந்தைகளில் பல ஆண்டுகளாக முதலீடு செய்து வந்த வெளிநாட்டு வர்த்தகர்கள் தம் பணத்தை திரும்பப் பெற்று கொண்டதும், அதே அளவிற்கு முதலீடு செய்ய இந்திய உள்நாட்டு முதலீட்டாளர்களால் முடியாமல் போனதும் முக்கிய காரணங்களாக ஆயின. ஒரே ஆண்டில் சுமார் 55 சதவீத வீ...

கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!

உங்களுக்கு தெரியுமா? உலகம் எப்போதும் ஒரே சீரான வேகத்தில் சுற்றி வருவதில்லை. காரணம், பூமிக்கும் சூரிய சந்திரருக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசை மாற்றங்கள் பூமியின் சுழற்சி வேகத்தைப் பெருமளவு பாதிக்கின்றன. மேலும், பூமி முழுக்க முழுக்க திடப் பொருளாக இல்லாமல் உள்ளே ஆழ்மட்டத்தில் குழம்பு வடிவம் கொண்டு அமைந்திருப்பதால் அதன் சுழற்சி வேகம் ஒரே சீராக இருப்பதில்லை. இவற்றின் காரணமாக பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம் காலப் போக்கில் மாறிக் கொண்டே (பெரும்பாலும் அதிகரித்துக் கொண்டே) வருகிறது. சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னே ஒரு முறை தன்னைத் தானே சுற்றிக் கொள்ள ஆறு மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொண்டதாக சொல்லப் படும் நம் பூமி தற்போது இருபத்து நான்கு மணி நேரத்தை விட சற்று கூடுதலான மில்லி செகண்ட் எடுத்துக் கொள்கிறது. (ரொம்ப வயதாகி விட்டதால் தளர்ந்து போய் விட்டதோ?) ஒரு நாள் பொழுதை தனியாகப் பார்க்கும் போது இந்த வித்தியாசம் அதிக கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாக இல்லாதது போல தோன்றினாலும், தொடர்ந்து பல நாள்களுக்கு இந்த வித்தியாசம் கூட்டப் படும் போது (நம்மூர் கந்து வட்டி போல) இத்தகைய சுழற...

வாழ்வில் என்றும் உற்சாகமாக இருக்க வேண்டுமா?

ஆதி மனிதனின் தேடல்களும் அந்த தேடல்களுக்கான உந்துதல்களுமே, உலகின் இன்றைய நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படை காரணம் ஆகும். ஒரு சராசரி மனிதனின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு கூட தேடல்களும் தேடல்களுக்கான உந்துதல்களும் மிக அவசியம் இத்தகைய உந்துதல்கள் உருவாகும் விதம் பற்றியும் அவற்றின் அவசியம் பற்றியும் இங்கு விவாதிப்போம். மனவியல் வல்லுநர், திரு.மாஸ்லொவ் அவர்களால் உருவாக்கப் பட்ட விதிகள் இவை. மனிதனின் தனது வாழ்க்கைப் படிகளில் முன்னேறும் போது வெவ்வேறு விதமான தேவைகள் உருவாகுகின்றன. முதலில் அடிப்படைத் தேவைகளை தீர்க்க வேண்டி மன உந்துதல்கள் ஏற்படுகின்றன . அடிப்படைத் தேவைகள் தீர்க்கப் பட்டதும் அதற்கான உந்துதல்கள் மறைந்து போகின்றன. அதே சமயத்தில், வாழ்வின் முன்னேற்றத்தின் காரணமாக புதிய தேவைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான புதிய மன உந்துதல்களும் உருவாகுகின்றன. சமூக நாகரிக வளர்ச்சிக்கு கூட இது பொருந்தும். உதாரணமாக, இந்தியாவில் உணவு, உடை என்பது ஒரு காலத்தில் மிக அத்தியாவசிய தேவையாக இருந்தது. இப்போது உணவு உடை தேவை என்பது ஓரளவிற்கு தீர்க்கப் பட்டு விட்டதும் அதன் மீதான அக்கறை குறைந்து விட்டது. அதே சமயத்தில் மின்சாரம்...

அன்பார்ந்த நன்றிகள் சமர்ப்பணம்

இது சந்தை நிலவரத்தின் தொண்ணூற்று ஒன்பதாவது பதிவு. நூறாவது பதிவு சற்று தாமதமாகலாம் என்பதினால் இப்போதே சிலருக்கு எனது வணக்கத்துக்கும் அன்புக்கும் உரிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சமுதாயத்திற்கு பயன்படுமாறு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு என் (நேரடி) முன்மாதிரிகளாக இருக்கும் எனது தந்தை மற்றும் தமையனுக்கு முதல் நன்றி சமர்ப்பணம். இவர்களைப் பார்க்கும் போதெல்லாம், நமக்கு இவ்வாறு வாய்ப்புகள் கிடைக்க வில்லையே என்று வருத்தப் பட்டிருக்கிறேன். (சமுதாயப் சேவை பணியினை ஒரு முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கும் நிறுவனத்தில் பணி புரிந்தாலும் கூட , நேரடியாக அந்த சேவைகளில் ஈடுபட முடியாத ஒரு சிறப்பு தனித் துறையிலேயே அதிக நாட்கள் (இன்று வரை) பணியாற்றி வந்திருக்கிறேன் என்பதும் நிறுவன வாயிலாகவே வருங்காலங்களில் நேரடி சேவையில் ஈடுபட பல வாய்ப்புகள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கது.) எனது வாழ்வில் இதுவரை பலவாறாகப் பெற்ற அனுபவங்களையும் அறிந்தவற்றையும் மற்றவர்களுக்கு உபயோகப் படும் வகையில் பரிமாறிக் கொள்ளாமல் இருந்தால் என்ன பலன் என்ற கேள்வி எப்போதுமே எனக்குள் இருந்து வந்தது. அதே ச...

நாட்டுப் பற்றை எப்படி வெளிப்படுத்துவது?

முன்பெல்லாம் கிரிக்கெட் மாட்சுகளில் மட்டுமே வெளிப்பட்டுக் கொண்டிருந்த நாட்டுப் பற்று, தீவிரவாத தாக்குதல்கள் தொடர்கதையாகி விட்ட பிறகு இப்போதெல்லாம் ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் வெளிப் படுகிறது. உண்மையான நாட்டுப் பற்றை ஒவ்வொரு இந்தியரும் எவ்வாறு வெளிப் படுத்த வேண்டும் என்று இங்கு பார்ப்போம். முன்பெல்லாம் கிரிக்கெட் மாட்சுகளின் போது, தேசிய மூவர்ண உடைகளை அணிந்து கொண்டும், தேசிய கொடிகளை கையில் வைத்துக் கொண்டும், உடலில் வண்ணங்கள் தீட்டிக் கொண்டும் பலர் தங்களது தேசிய உணர்வை வெளிப்படுத்தியதுண்டு. போட்டிகளுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், வீட்டில் தொலைக்காட்சிகளில் அந்த போட்டிகளை நேரடி ஒளிபரப்பில் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டும் டெண்டுல்கர் போன்றவர்கள் செஞ்சுரி அடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டும் தங்களது நாட்டுப் பற்றை வெளிப் படுத்தியதுண்டு. வசதி படைத்த சிலரோ பல ஆயிரம் செலவு செய்து பார் வசதியுடன் கூடிய ரெஸ்டாரண்டுகளில் நண்பர்களுடன் இந்த போட்டிகளை (காக்டேயிலுடன்) ரசித்துக் கொண்டே தேசிய உணர்வுகளை வெளிப் படுத்தியதுண்டு. இதற்கெல்லாம் வசதியில்லாதவர்கள் ரோட்டில் சில எலக்ட்ரானிக்ஸ் கடை வாசலி...

"சத்தியமா" இது பகல் கொள்ளைத்தானுங்க!

கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதை என்பார்கள். அது கூட ஓரளவுக்கு பரவாயில்லை என்று எடுத்துக் கொள்ளலாம். இந்திய பொது நிறுவனம் ஒன்றில் கிட்டத்தட்ட 8000 கோடி ருபாய் முதலீட்டாளர்களின் பணத்தை எடுத்து தனது தனிப்பட்ட லாபத்திற்கு தாரை வார்க்க முயற்சி நடந்திருக்கிறது. சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஓன்றுஆகும். இந்த நிறுவனம் தனது பங்குகள் சந்தைகளில் வர்த்தகம் ஆகி வரும் ஒரு பொது நிறுவனம் (பப்ளிக் லிமிடெட் கம்பெனி) ஆகும். இதை நிறுவியவர் திரு. ராமலிங்க ராஜு ஆவார். ஆனால் இந்த நிறுவனத்தில் அவருக்கிருந்த பங்குகளில் பெரும்பகுதியை சந்தைகளில் ஏற்கனவே அவரால் விற்பனை செய்யப் பட்டு விட்டன. அவருடைய தற்போதைய பங்கு வெறும் பத்து சதவீதத்திற்கும் குறைவுதான் என செய்திகள் கூறுகின்றன. இவருடைய மகன்கள் நடத்தி வரும் நிறுவனங்கள் மய்டாஸ் இன்பிரா மற்றும் மய்டாஸ் ப்ராபர்டீஸ் . இவற்றில் முதல் நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் வர்த்தகமாகி வரும் ஒரு பொது நிறுவனம். இரண்டாவது நிறுவனம் 100 சதவீதம் அதன் நிறுவனத்திற்கே சொந்தமான ஒரு தனி நிறுவனம் (பிரைவேட் லிமிடெட் கம்பெ...

இது ஒரு (வாழ்க்கை) சமையல் குறிப்பு

மூன்று சம அளவு பாத்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றிலும் நீரை ஊற்றுங்கள். ஒரு பாத்திரத்தில் கேரட், இன்னொரு பாத்திரத்தில் முட்டை மற்றும் கடைசி பாத்திரத்தில் கொஞ்சம் காஃபி பொடி போடுங்கள். அனைத்து பாத்திரங்களையும் சுமார் பதினைந்து நிமிடங்கள் சூடு படுத்துங்கள். என்னடா இது? புது வகை சமையல் குறிப்பாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இதில் ஒரு சுவையான வாழ்க்கை தத்துவம் அடங்கி உள்ளது. எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கை பாதை எப்போதுமே எளிமையானதாகவும் சந்தோசமானதாகவும் அமைந்து விடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் கடும் போட்டிகளையும், சில சமயங்களில் பயங்கர விரோதங்களையும் கூட சந்திக்க வேண்டி இருக்கிறது. உதாரணமாக, புதிய அலுவலகம், புதிய தொழில், புதிய உறவுகள் மற்றும் புதிய இருப்பிடங்களில் ஏற்படும் சில கசப்பான அனுபவங்கள். இத்தகைய கடினமான சூழல்களில் நாம் கொதி நீரில் வீழ்ந்து கிடப்பது போல துடித்துப் போகிறோம். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களையும் அவற்றை ஏற்படுத்தும் சுற்றத்தாரையும் (சமூகம்) ஒவ்வொருவரும் மூன்று வகையாக எதிர்கொள்ளலாம். முதல் வகையானவர்கள் கேரட் போன்றவர்கள். இவர்கள் சுற்றத்தாருடன் போராடி பிரச்சினை...

மார்கழியைக் கொண்டாடுவோம்

என் தாயார் தனது சிறுவயதிலிருந்தே மார்கழி மாதம் காலை வேளைகளில் கோயிலுக்கு செல்லும் வழக்கம் கொண்டவர். ஒரு முறை அவரால் போக முடியாத நிலையில் வீட்டிலிருந்து ஒருவராவது மார்கழி மாதத்தின் ஒரு அதிகாலையிலாவது கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில், பதின் வயதில் பகுத்தறிவு பேசித் திரிந்த என்னை கெஞ்சிக் கூத்தாடி ஒரு வழியாக கோயிலுக்கு ஒரு விடிகாலையில் அனுப்பி வைத்தார். வெயில், அதிக வெயில், வெயிலோ வெயிலோ என்றே பழக்கப் பட்ட நாம் புதிதாக உணரும் அந்த அதிகாலையின் மிதமான இதமான குளிர், வேர்த்து விறுவிறுத்த முகங்களே அதிகம் பார்க்க முடிகின்ற நம்மூரில் அப்போதே மலர்ந்த மலர்களைப் போன்ற புத்துணர்வு கொண்ட முகங்களின் (கோயில்) தரிசனம், விடிந்தும் விடியாத அந்த காலை வேளையில் சோடியம் விளக்குகளின் வெளிச்சத்தில் இன்னும் அழகாக தெரியும் கோயில், இன்னும் கொஞ்சம் கிடைக்குமா என்று ஏங்க வைக்கிற நெய் வடியும் பொங்கல் பிரசாதம், காதுகளுக்குள் நுழைந்து இதயத்தைத் துளைத்து உயிரைத் தொடும் அந்த திருப்பாவை வரிகள், ஏதோ நம்மிடம் சொல்ல வருவது போன்ற ஒரு உணர்வைத் தரும் ஆண்டாள் தாயாரின் முகம், எல்லாவற்றிக்கும் மேலாக எம்பெருமாளின் அந்த விஷ்வ...

சரித்திரம் காணாத சந்தை மோசடி

இது வரை சரித்திரம் கண்டிராத சந்தை மோசடி அமெரிக்காவில் இப்போது நடைபெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் மோசம் செய்யப் பட்ட பணத்தின் அளவு சுமார் 50 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய்) என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவரங்கள் உள்ளே. அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளில் ஹெட்ஜ் பான்ட் (Hedge Fund) என்றழைக்கப் படும் குறுகிய வட்ட முதலீட்டு நிதிகள் பிரபலமானவை. நமக்கு மிகவும் அறிமுகமான பரஸ்பர நிதியைப் போல, பொது மக்களிடம் இருந்து இவை நிதி திரட்டுவதில்லை. மாறாக, ஒரு சில பணக்காரர்களிடம் (குறைந்த எண்ணிக்கையில்) இருந்து மட்டும் பெருமளவு பணம் திரட்டப் படுகிறது. அந்தப் பணம் உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் பெரும்பாலும் குறுகிய கால வர்த்தக நோக்கில் முதலீடு செய்யப் படுகிறது. இந்த நிதிகள் பரஸ்பர நிதிகளைப் போல பொதுவாக எந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் வரம்புகளுக்கும் உட்படுவதில்லை. மேலும், சுய அளவில் கூட எந்த வரையறுக்கப் பட்ட கட்டுப்பாடுகள் அற்றவை. எந்த நாட்டிலும், எந்த சந்தையிலும், எந்த பங்கு அல்லது வர்த்தகத்திலும் முதலீடு செய்ய இவறிற்கு சுதந்திரம் உண்டு. இந்த நிதிகளின் ஒரே...

சவாலே சமாளி!

அமெரிக்க பாராளுமன்றத்தில் அவர்களது வாகனத் துறைக்கான மீட்டெடுப்பு மசோதா தோல்வி, உலக சந்தைகளின் மந்தமான சூழல் மற்றும் இந்திய தொழிற் உற்பத்தியின் வீழ்ச்சி என்ற பல சவால்களை நமது பங்கு சந்தை மிகத் திறமையாக சந்தித்து (நாம் ஏற்கனவே எதிர்பார்த்தப் படி) முன்னேற்றமும் கண்டுள்ளது. விவரங்கள் கீழே. ஏற்கனவே நம் பதிவில் குறிப்பிட்ட படி, சென்ற வாரம் நமது பங்கு சந்தை பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தாலும் இறுதியில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. நிபிட்டி குறியீடு சுமார் ஏழரை சதவீதமும் சென்செக்ஸ் எட்டு சதவீதமும் அதிகரித்துள்ளன. முந்தைய வார இறுதியில் தலைமை வங்கி அறிவித்த வட்டி வீத குறைப்பு , மத்திய அரசு அறிவித்த கிரியா ஊக்கித் திட்டங்களுமே இந்த முன்னேற்றத்திற்கு அடிப்படை காரணங்கள். அதே சமயம் மேற்சொன்ன சவால்களின் காரணமாக, சந்தை பல ஏற்றத்தாழ்வுகளையும் சந்திக்க நேரிட்டது. இந்த வார பணவீக்கம் மேலும் குறைந்து எட்டு சதவீதம் ஆனது மற்றும் தொழிற் உற்பத்தி வீழ்ச்சி ஆகியவை வட்டி வீதங்கள் மேலும் குறைக்கப் படலாம் என்ற புதிய நம்பிக்கையை சந்தைக்கு தந்துள்ளது. இதன் காரணமாக, ரியல் எஸ்டேட் துறை பங்குகள் சென்ற வாரம் மிக அதிக ம...

இந்திய தொழில் உற்பத்தி வீழ்ச்சி - ஒரு அலசல்

பதினைந்து வருடங்களுக்கு பின்னர், முதன் முறையாக இந்திய தொழில் உற்பத்திக் குறியீடு (IIP) வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இதர மேலை நாடுகளைப் போல இல்லாமல், இந்தியா பொருளாதார வீழ்ச்சியை சந்திக்காது எனவும் அதிக பட்சம் பொருளாதார மந்த நிலையே காணப் படும் என்று எண்ணியிருந்தவர்களுக்கு இந்த தகவல் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. விரிவான அலசல் இங்கே. இந்திய தொழிற் வளர்ச்சிக் குறியீடு, சுரங்கத் தொழில், மின்சாரத் துறை, உற்பத்தித் துறை மற்றும் பொதுவான தொழிற்துறை ஆகியவற்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை மதிப்பிடுவதாகும். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான தொழிற் வளர்ச்சிக் குறியீடு 0.40 சதவீதம் இறக்கத்தை சந்தித்துள்ளது. முந்தைய ஆண்டில் இதே காலக் கட்டத்தில் இந்த குறியீடு 12.20 சதவீத வளர்ச்சியைக் கண்டது குறிப்பிடத் தக்கது. பொருளாதார நிபுணர்கள் கடந்த மாதத்தின் வளர்ச்சியாக எதிர்பார்த்தது இரண்டு முதல் மூன்று சதவீதம் அளவிலான வளர்ச்சியை. ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையாக வந்தது 0.80 சதவீதம் இறக்கம். காரணம் என்ன? வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி உள்நாட்டில் வாகன விற்பனை மிகவும...

அம்மா குடித்த ஞானப் பால்

(இன்று வார இறுதி நாளல்லவா? ஒரு கதை எழுத முயற்சி செய்யலாம் என்று ஆசை. படித்துப் பாருங்கள்.) அவளுக்கு நிறைய கர்வம் உண்டு. அவள் ரொம்ப அழகென்று. அந்த நினைப்பில் ஒரு நியாயம் உண்டு. கடந்து சென்ற பல ஆண்கள் அவளைத் திரும்பி திரும்பி பார்த்திருக்கிறார்கள். அவளுடைய நிறுவனத்தில் அவளுக்கென்று தனி மரியாதை. அவளுடைய நிறுவனம் பரஸ்பர நிதி திட்டங்களை மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனம் ஆகும். அது சம்பந்தமாக நிறுவனம் நடத்திய பல பொது நிகழ்ச்சிகளில் அவளே முன்னிலைப் படுத்தப் பட்டிருக்கிறாள். பங்கு சந்தைகள் மற்றும் நிதி சந்தைகள் விஷயத்தில் அவள் ஒரு கற்றுக் குட்டியே ஆயினும், சந்தை போக்கு பற்றி அவள் விவரிக்கும் போது, சந்தை விவரம் நன்கு தெரிந்த விற்பன்னர்கள் கூட மது அருந்திய வண்டுகள் போல மயங்கி கிறங்கி போய் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். குழந்தை பெற்றுக் கொண்டால் தனது அழகு போய் விடும் என்று பயந்த அவள் பிள்ளை பெறுவதை பல காலம் தள்ளிப் போட்டு வந்தாள். அவளது கணவன் பலவாறு முயற்சி செய்து பிள்ளை பெற்றுக் கொண்டும் அழகை இழக்காத சில உள்நாட்டு வெளிநாட்டு நடிகைகளை உதாரணம் காட்டி ஒரு வழியாக அவளை குழந்தை பெற்றுக் கொள்ள சம்...

ஒரு நாள் எம்.எல்.ஏக்கள்!

கடந்த மாதம் உத்தர பிரதேச மாநில சட்டசபையில் 60 குழந்தைகளுக்கு ஒரு நாள் எம்.எல்.ஏக்களாக மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளை பற்றி விவாதம் நடத்த ஒரு வாய்ப்பு வழங்கப் பட்டது. அந்த குழந்தைகளும் (ஒரு நாள் எம்.எல்.ஏக்கள் மட்டும் என்றாலும்) ஐந்து வருட முழு செயல்பாட்டை ஒரே நாளில் வெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள். விவரம் உள்ளே . உலக குழந்தைகள் உரிமை நாளை முன்னிட்டு, யூனிசெப் மற்றும் சில குழந்தைகள் நல அமைப்புகளின் முயற்சியில், உத்தர பிரதேச மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60 குழந்தைகளுக்கு ஒரு நாள் எம்.எல்.ஏக்களாக பணி புரியும் வாய்ப்பு தரப் பட்டது. மிக அமைதியாக, பிரச்சினைகளின் அடிப்படையில் மட்டும் பொருள் பொதிந்த விவாதங்களை நடத்தி அந்த குழந்தைகள் அனைவரிடமும் "சபாஷ்" வாங்கினார். அந்த குழந்தைகள் விவாதித்த சில விஷயங்கள் கீழே. குழந்தைகள் நலம் காப்பதற்காக குழந்தைகள் நல ஆணையம் அமைப்பது குறித்து இந்த ஒரு நாள் எம்.எல்.ஏக்கள் வலியுறித்தனர். வாரணாசியில் வந்த ஒரு குழந்தை அந்த ஊர் ரயில் நிலையத்தில் அமைப்பு சாரா முறையில் பனி புரியும் குழந்தைகள் உணவு, வீடு மற்றும் மருந்துப் பொருட்கள...

சக பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்

புரட்சிக் கவி பாரதி பிறந்த இந்த திருநாளில், சக தமிழ் பதிவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் நானும் ஒரு தமிழ் எழுத்தாளன்/பதிவர் என்ற முறையில் நான் விடுக்கும் ஒரு உரிமை கலந்த வேண்டுகோள் இங்கே. சங்ககாலத்தில் தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் காதல் மற்றும் வீரம் ஆகியவற்றையே அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டு வந்தன. பின்னர், சமண பௌத்த மதங்களின் தாக்கம் தமிழ்நாட்டில் அதிகம் ஆனதும், அறம், பொருள் மற்றும் வீடு பேறு என வாழ்வியல் போதனைக்குரிய விஷயங்கள் அதிகமான அளவில் அற நூல்களாக எழுதப் பட்டன. இடைக்காலத்தில் தமிழ் பொதுவாக பக்தி மொழியாகவே அறியப் பட்டு கம்பராமாயணம், திருப்பாவை, திருவாசகம் தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்கள் தமிழில் இயற்றப் பட்டன. தற்காலத்திலோ, தமிழ் இலக்கியங்கள் காதல், அரசியல், சமூகக் கருத்துக்கள், தனிப் பட்ட உணர்வுகள் போன்றவற்றையே அதிகம் பிரதிபலிக்கின்றன. யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை; என்று கர்வமாக சொன்ன அதே பாரதியே மற்றொரு கவிதையில் புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்த...

சமூகத்தில் நடை பெறும் விஷயங்கள் மீது அக்கறை கொள்ள வேண்டுமா?

நாடு உலகம் எப்படியோ போகட்டும். எதற்காக அலட்டிக் கொள்ள வேண்டும்? எனக்கென்ன ஆயிற்று? சமுகத்தினைப் பற்றி கவலைப் பட பலர் இருக்கிறார்கள். சாமான்ய மத்திய தர வர்க்கத்தில் ஒருவனான என்னால் கவலைப் பட்டு மட்டும் என்ன செய்ய முடியும்? என் அளவில் அல்லது என்னை சார்ந்தவர்கள் அளவில் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இது. சமீபத்தில் ஒரு கவிதை படித்தேன். நீங்களும் படிக்க கீழே கொடுக்கப் பட்டது. அவர்கள் கம்யுனிஸ்டுகளை தேடி வந்தார்கள் நான் குரல் கொடுக்க வில்லை ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் இல்லை. பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளை தேடி வந்தார்கள் நான் குரல் கொடுக்க வில்லை காரணம் நான் தொழிற்சங்கவாதியும் கூட இல்லை அப்புறம் அவர்கள் யூதர்களை தேடி வந்தார்கள் நான் குரல் கொடுக்க வில்லை. ஏனென்றால் நான் யூதன் கூட இலலை கடைசியாக என்னை தேடி தேடி வந்தனர் குரல் கொடுக்க யாரும் இலலை காரணம் அங்கு யாருமே இலலை. ஹிட்லரின் ஆதரவாளராக இருந்து பின்னர் எதிர்ப்பாளராக மாறிய மார்ட்டின் நீமுல்லேர் என்பவரால் ஜெர்மெனியின் நாஜி காலத்தில் எழுதப்பட்டது. இந்த கவிதை. நாஜிகளின் முதல் இலக்கு கம்யூனிஸ்ட்கள், பின்ன...

முதல் ரவுண்ட் காங்கிரசுக்கு. முடிவான ரவுண்ட் யாருக்கு?

2009 மக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 3-2 என்ற செட் கணக்கில் முக்கிய எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியை தோற்கடித்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகளின் சிறப்பம்சங்கள் மற்றும் இந்த தேர்தல் தரும் பாடங்கள் குறித்து இங்கு விவாதிப்போம். டெல்லி, ராஜஸ்தான், மிசோரம், சட்டிஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் சட்ட சபையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இவற்றில் முதல் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. தேர்தலுக்கு முன்னர், டெல்லி மாநிலத்தில் காங்கிரசும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டிஸ்கரில் பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சி செய்து வந்தன. மிசோரம் மாநிலத்தில் மிசோரம் தேசிய கட்சி எனும் பிராந்திய கட்சி ஆட்சி செய்து வந்தது. இப்போது காங்கிரஸ் டெல்லியில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை பி.ஜெ.பி இடமிருந்தும், மிசோரத்தை மிசோரம் தேசிய கட்சியிடமிருந்தும் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. சட்டிஸ்கர் மாநிலத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலும் மத்திய ...

ஈகைப் பெருநாளைக் கொண்டாடுவோம்

உலகின் பல பண்டிகைகள் மனிதன் தானும் தன்னை சார்ந்தவர்களும் மட்டுமே மகிழ்ச்சியாக கொண்டாடும் தினங்களாக மட்டுமே அமைந்திருக்க, இரக்கத்துடன் தம்மை சாராதவர்களுக்கும் கூட மகிழ்ச்சியை ஈந்து அதன் வழியே இன்பம் கொண்டாடும் பண்டிகையே ஈகைப் பெருநாள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இறைவன், இறைதூதர் இப்ராஹிம் முன்னே தோன்றி உனக்கு மிகவும் பிடித்ததை எனக்கு தருவாயா என்று கேட்க அவர் தனது பிரியமான மகனையே அர்ப்பணிக்க முடிவு செய்த நாளே இந்த திருநாள் என்று கருதப் படுகிறது. மேலோட்டமாக பார்க்கும் போது, இந்த நிகழ்வு இறையாளர் இப்ராகிமின் ஆழமான கடவுள் பக்தியையும் கடவுள் நம்பிக்கையையும் வெளிக்காட்டுவது போல தோன்றலாம். ஆனால், எல்லாம் வல்ல இறைவனுக்கே கூட ஏதாவது ஒன்று தர விரும்பும் அளவுக்கு உயரிய கருணையும் ஈகையும் கொண்டது ஒரு மனித மனம் என்பதை உலகிற்கு உணர்த்தும் உன்னதமான நிகழ்வு இது என்பது எனது கருத்து. இப்படி தம்மைப் படைத்த இறைவனுக்குக் கூட ஏதாவது வழங்க எண்ணும் மனித உள்ளம் தன்னை சுற்றிலும் உள்ளவர்களுக்கும் எளியவர்களுக்கும் கூட கருணை காட்ட வேண்டும் என்பதையே இந்த ஈகைத் திருநாள் அனைவருக்கும் உணர்த்துகிறது என்று நம்புகிறேன்....

கிரியா ஊக்கிகள் பலன் தருமா?

கடந்த சில வருடங்களாக மிக வேகமான வளர்ச்சியைச் சந்தித்த நமது பொருளாதாரம் இப்போது தளர்வுறும் நிலையில் உள்ளது. மீண்டும் பொருளாதாரத்தை செழிப்புற செய்ய இந்திய அரசாங்கம் மற்றும் தலைமை வங்கி சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. அவை பற்றியும் சந்தை போக்குகள் குறித்தும் இங்கு பார்போம். இந்திய அரசு சுமார் மூன்று லட்சம் கோடி முதலீடுகள் மற்றும் செலவுகள் செய்யப் படும் என்று அறிவித்துள்ளது. மேலும் நான்கு சதவீத சென்வாட் வரி குறைப்பு, ஏற்றுமதி சலுகைகள் ஆகியவற்றை அறிவித்துள்ளது. (முழு அறிக்கையை படிக்க இங்கே சொடுக்கவும்) இந்திய தலைமை வங்கியும் (RBI) தன் பங்குக்கு வட்டி வீத குறைப்பு, வீட்டு கடன் வழங்குவதில் விதி முறைகளை தளர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளது. (முழு அறிக்கையை படிக்க இங்கே சொடுக்கவும்) இந்த நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தில் மற்றும் சந்தைகளில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் குறித்து விரிவான அலசல் விரைவில். இப்போதைக்கு வரும் வார சந்தை மாற்றங்கள் குறித்து மட்டும் அலசுவோம். கடந்த வாரம் சிறப்பான துவக்கத்தை சந்தித்த பங்கு சந்தை அதனை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது. காரணம், உலக அளவில்...

ஆனந்த விகடனில் "சந்தை நிலவரம்"

வலைப்பூ ஆரம்பித்து இரண்டு மாதங்கள் மட்டுமே முடிந்த நிலையில் "சந்தை நிலவரம்" இப்போது பிரபல தமிழ் வார இதழான ஆனந்த விகடன் வரவேற்பறையை அலங்கரிக்கும் பெருமையைப் பெற்றுள்ளது. விவரங்கள் உள்ளே. இதழ் 10.12.2008 பக்கம் எண் 47. (தெளிவாக தெரிய இதன் மீது சொடுக்கவும்) இந்த மகிழ்ச்சியான தருணத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகின்றேன். மேலும் இந்த வலைப்பூ ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை பல வகையிலும் பின்னூட்டம் அளித்து ஊக்கம் அளித்தவர்கள், வருகை புரிந்து உற்சாகம் தந்தவர்கள் மற்றும் அக்கறையோடு அறிவுரை சொன்னவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். (தனித்தனியான நன்றிகள் எனது நூறாவது பதிவில்) புதியவர்களை உற்சாகப் படுத்தும் இந்த சிறந்த சேவையினை புரியும் விகடன் குழுமத்திற்கும் வந்தனம் கலந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் கூறும் நல்லுலகம் தந்த இந்த அங்கீகாரத்திற்கு என்றும் கடமை பட்டிருப்பதுடன் இந்த அங்கீகாரம் தரும் கூடுதல் பொறுப்புகளையும் உணர்ந்து வருங்காலத்தில் இன்னும் சிறப்புடன் கூடிய பதிவுகளை வழங்க முயற்சி செய்வேன் என்று உறுதி கூறுகிறேன். நண்...

மருந்து கம்பெனிகளின் மோசடி

அரசையும் மக்களையும் இந்திய மருந்து கம்பெனிகள் பெரிய அளவில் ஏமாற்றி வருகின்றன. அதிர்ச்சி தரும் இந்த தகவலை தருபவர் யார் தெரியுமா? இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் (NPPA) புதிய தலைவரான திரு.எ.கே.பானர்ஜீ. சற்று விரிவாக பார்ப்போம். "இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் இது வரை சுமார் 1600 கோடி ரூபாய் மருந்து கம்பெனிகள், நுகர்வோரிடம் இருந்து அதிகம் பெற்றுக் கொண்டதாக கூறி அந்த கம்பெனிகளுக்கு நோட்டீஸ் விட்டிருக்கிறது. இதில் சுமார் 1000 கோடி ரூபாய் கோரி ஒரே ஒரு (சிப்லா) நிறுவனத்திடமிருந்து மட்டும் வர வேண்டும். இதை விட அதிர்ச்சி தரக் கூடிய தகவல் அடுத்தது. அத்தியாவசிய மருந்துகளின் மீது அரசு விதித்துள்ள விலை கட்டுபாட்டை மீற இந்த கம்பெனிகள் செய்யும் ஏமாற்று வேலை. இவ்வாறு கட்டுப்பாட்டில் உள்ள மருந்துகளில் சிறிது மாற்றம் செய்து (சமயங்களில் கிட்டத்தட்ட அதே பெயரில் கூட) அந்த மருந்துகளை அதிக விலைகளில் விற்க படுகின்றன. இதனால் அரசின் நடவடிக்கைகளில் இருந்து இந்த கம்பெனிகள் தப்பித்துக் கொள்வதுடன் கொள்ளை லாபம் அடிக்க முடிகிறது."(நன்றி: The Economic Times) மற்ற நுகர்வோர் சந்தைகளுக்கு...

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அணுகுண்டு வீசி தீவிரவாதிகள் தாக்குதல் - அமெரிக்க அறிக்கை

அமெரிக்க அரசும் அதன் கூட்டணி நாடுகளும் உரிய மற்றும் கடும் நடவடிக்கை உடனடியாக எடுக்காவிட்டால் இன்னும் ஐந்து வருடங்களில் பாகிஸ்தான் திவிரவாதிகளுக்கு அணுகுண்டு போன்ற பேரழிவு ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தக் கூடிய பலம் வந்து விடும் என அமெரிக்க அறிக்கை ஒன்று கூறுகிறது. விவரங்கள் கீழே. பேரழிவு ஆயுதங்கள் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு நடத்த அமெரிக்க பாராளுமன்றம் (காங்கிரஸ்) ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது. அந்த குழு உலகெங்கும் சுற்றுபயணம் செய்து பல நாடுகளில் சுற்றுபயணம் செய்து மற்றும் அந்தந்த நாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமார் ஆறு மாதங்கள் ஆய்வுக்கு பிறகு சென்ற வாரம் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது (மும்பை தாக்குதலுக்கு முன்னரே). அந்த அறிக்கையில், அமெரிக்க எதிர்ப்பு நாடுகளான ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகளில் பேரழிவு ஆயுதங்கள் தயாரிக்கப் படுவது, அமெரிக்க பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் தற்போதைய மேற்கொள்ளப் படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானவை அல்ல (அமெரிகாவிலேயா? அப்ப இந்தியா...

உயிர் பிழைத்திருப்பதற்காக பயப்படும் தீவிரவாதி!

எல்லாக் குற்றவாளிகளும் தண்டனைக்கு முக்கியமாக மரணதண்டனைக்கு பயப் படுவது வழக்கம். ஆனால், இந்த தீவிரவாதியோ உயிர் தப்பித்து விடுவோமோ என்று அஞ்சுகிறான். வேதனையிலும் வேடிக்கையான இந்த கதையை கேளுங்கள். மும்பை தாக்குதலின் போது ஒருவன் மட்டுமே உயிரோடு பிடிக்கப் பட்டான் என்பது நினைவிருக்கும். அவன் வெளியிடும் தகவல்கள் (பத்திரிக்கை செய்தி) இதோ. இவன் பாகிஸ்தானில் உள்ள பாரிட்கொட் பகுதியில் வாழ்ந்த ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். இரண்டு வருடங்களுக்கு முன்னர், இவனைப் பெற்றவன் இவனை ஒரு தீவிரவாதிகளின் குழுத் தலைவனிடம் (லஸ்கர் ஈ தோய்பா) பெரும் பணம் பெற்றுக் கொண்டு ஒப்படைத்தான். அந்த தலைவனிடம் இவனைப் போலவே இளைய வயதுடையவர்கள் (இவனையும் சேர்த்து) 25 பேர் இருந்தனர். இவர்களுக்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் காட்டுப் பகுதிகளில் ஒரு வருடம் தீவிர பயிற்சி அளிக்கப் பட்டுவந்தது. இந்தியாவில் தாக்கவே இவர்கள் தயார் செய்யப் படுகின்றனர் என்ற தகவல் இவனுடைய தந்தைக்கு முன்னரே தெரிந்ததே இருந்தது. சுமார் 45 நாட்களுக்கு முன்னர், இந்த 25 பேர் கொண்ட குழுவிலிருந்து 10 பேர் மும்பையை தாக்க தேர்ந்தெடுக்கப் பட்டனர். அவர்களுக்...

எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அரசியல் பெருந்தலைவர்களே! உங்களுக்கு ஓர் கடிதம்.

வணக்கம். உங்களில் சிலருக்கு வழங்கப் படும் உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை (Z+ வகை) , தனது சாலையோர பயணங்களின் போது, கூர்ந்து கவனித்த ஒரு பொது ஜனம் நான். உங்கள் வீடுகளை சுற்றி திரும்பிய திசையெல்லாம் உள்ள பாதுகாப்பு வளையங்கள் எத்தனை?. அங்கே நவீன ஆயுதங்களைத் தாங்கிய உடல் துடிப்பான போலீஸ் வீரர்கள் எத்தனை பேர்? இது நாடா அல்லது போர்க்களமா என்று சந்தேகப் பட வைக்கிற பல மணல்மூட்டை மேடுகள் கூட உங்கள் வீட்டை ஒட்டிய சாலைகளில் வைக்கப் பட்டுள்ளது அல்லவா? போலீஸ் கவச வாகனங்கள் சுற்றிலும் நிறுத்தப் பட்டு , அதில் ஏராளமான போலீசார்கள் 24 மணி நேரமும் உங்களை பாதுகாக்கிறார்கள். அது மட்டுமல்ல, உங்கள் பிள்ளைகள் சினிமா நட்சத்திரங்களை அருகே அமர்த்திக் கொண்டு, மாலை நேர விருந்துகளுக்கு (சுயமாக ஒட்டி) செல்லும் செல்லும் போது கூட, முன்னேயும் பின்னேயும் எத்தனை போலீஸ் வாகனங்கள்? இத்தனை பாதுகாப்பு போதாதென்று, பல வண்டிகளில் கூடவே செல்லும் தொண்டர் படை ஊர்வலம் அதுவும் சாலையில் செல்லும் என்னை போன்ற மற்ற வாகன ஓட்டிகளை மிரட்டிக் கொண்டு செல்வது கூட உண்டு. அதே சமயம் பொதுமக்கள் லட்சக் கணக்கில் தினந்தோறும் வந்து செல்லும் மும்பை ச...

வாழ்க்கைக்குள் அடிக்கடி தொலைந்து போய் விடுகிறீர்களா ?

சரியான சாலை வசதி இல்லாத ஒரு அடர்த்தியான காட்டுக்குள் பயணம் செய்யும் நேரிடும் போது, ஒரு சரியான திசைமானி மற்றும வரைபடம் இருந்தால் மட்டுமே நம்மால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாக, சரியான நேரத்திற்குள் செல்ல முடியும். இல்லையென்றால், நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாதது ஒரு பக்கம், மறு பக்கம் நாம் பெரும் குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்து விட வாய்ப்பு உள்ளது. இதனால், ஒரே இடத்தை சுற்றி சுற்றி வரவோ அல்லது முற்றிலும் மாறுபட்ட திசையில் சென்று விடவோ வாய்ப்பு உள்ளது. நமது வாழ்க்கையை கூட ஒரு அடர்த்தியான காட்டுடன் ஒப்பிடலாம். வாழ்வின் பல்வேறு தருணங்களில் நாம் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் சரியான திசை இன்றி வழி தெரியாமல் தடுமாறி விடுகிறோம். அப்போதெல்லாம், சரியான இலக்குகள் மற்றும அவற்றை அடைவதற்கான வழிமுறைகள் இல்லாவிடில் நாம் திருவிழா கூட்டத்தில் தொலைந்து போன ஒரு சிறுவனின் மனநிலையை அடை ந்து விட வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்படுவது பெரும் அச்சம் மற்றும பரிதவிப்பு. இந்த மாதிரியான தருணங்களில் நமது மூளை சரியாக வேலை மறுத்து விடுகிறது. இத்தகைய பிரச்சினைகளில் இருந்து நாம் தப்பிக்க மனவியல்...

ஒரு உண்மையான காவலர்

மும்பையை தாக்கிய இரு தீவிரவாதிகள் கையில் நவீன ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள். இவர் கையில் வெறும் ஒரு வாக்கி டாக்கி மட்டுமே. ஆனால் மனதிலோ ஏராளமான வீரம் மற்றும் நெஞ்சுரம். இந்த இருவரில் ஒருவனை தீர்த்துக் கட்டவும் மற்றவனை பிடிக்கவும் தன்னுயிர் நீத்து பல உயிரைக் காப்பாற்றிய இந்த உண்மையான காவலரின் கதையை கேளுங்கள். கடந்த புதனன்று, மும்பை சி.எஸ்.டி ரயில் நிலையம் மற்றும் காமா மருத்துவ மனையில் கொடும் தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகள் வழியில் மறித்த தீவிரவாதி தடுப்புக் குழுவின் தலைவரையும் மற்ற சில போலீசாரையும் சுட்டுக் கொன்று விட்டு போலீஸ் ஜீப்பில் தப்பித்தனர். அங்கிருந்து மெட்ரோ சினிமா வழியே சென்ற இவர்களை வழி மறித்து போலீஸ் தாக்கும் போது இவர்கள் சென்ற ஜீப் டயர் பஞ்சர் ஆனது. குறுக்கே வந்த ஒரு ஸ்கோடா காரை வழி மறித்த இந்த பயங்கரவாதிகள் அதில் ஏறிக் கொண்டு மும்பையின் முக்கிய புள்ளிகள் (மகாராஷ்டிரா கவர்னர் உட்பட) வாழும் பகுதியான மலபார் ஹில்சை நோக்கி விரைந்தனர். அப்போது மாரின் டிரைவ் சாலையில் டுயுட்டி பார்த்துக் கொண்டு இருந்தவர் திரு.துக்காராம் ஒம்ப்லெ எனும் ஒரு உதவி காவல் அ...