Wednesday, December 17, 2008

"சத்தியமா" இது பகல் கொள்ளைத்தானுங்க!



கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதை என்பார்கள். அது கூட ஓரளவுக்கு பரவாயில்லை என்று எடுத்துக் கொள்ளலாம். இந்திய பொது நிறுவனம் ஒன்றில் கிட்டத்தட்ட 8000 கோடி ருபாய் முதலீட்டாளர்களின் பணத்தை எடுத்து தனது தனிப்பட்ட லாபத்திற்கு தாரை வார்க்க முயற்சி நடந்திருக்கிறது.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஓன்றுஆகும். இந்த நிறுவனம் தனது பங்குகள் சந்தைகளில் வர்த்தகம் ஆகி வரும் ஒரு பொது நிறுவனம் (பப்ளிக் லிமிடெட் கம்பெனி) ஆகும். இதை நிறுவியவர் திரு. ராமலிங்க ராஜு ஆவார். ஆனால் இந்த நிறுவனத்தில் அவருக்கிருந்த பங்குகளில் பெரும்பகுதியை சந்தைகளில் ஏற்கனவே அவரால் விற்பனை செய்யப் பட்டு விட்டன. அவருடைய தற்போதைய பங்கு வெறும் பத்து சதவீதத்திற்கும் குறைவுதான் என செய்திகள் கூறுகின்றன.

இவருடைய மகன்கள் நடத்தி வரும் நிறுவனங்கள் மய்டாஸ் இன்பிரா மற்றும் மய்டாஸ் ப்ராபர்டீஸ் . இவற்றில் முதல் நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் வர்த்தகமாகி வரும் ஒரு பொது நிறுவனம். இரண்டாவது நிறுவனம் 100 சதவீதம் அதன் நிறுவனத்திற்கே சொந்தமான ஒரு தனி நிறுவனம் (பிரைவேட் லிமிடெட் கம்பெனி).

மேற்சொன்ன நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கிடையே தந்தை-மகன்கள் உறவு இருந்தாலும், நிறுவனங்களிடையே நிறுவன ரீதியான உறவு முன்னரே இருக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. நேற்று, திடீரென சத்யம் நிறுவனம் மய்டாஸ் இன்பிரா நிறுவனத்தில் 51 சதவீத பங்கும் மய்டாஸ் ப்ராபர்டீஸ் நிறுவனத்தில் 100 சதவீத பங்கும் தனது நிறுவன கணக்கில் இருந்து முதலீடு செய்யப் போவதாக அறிவித்தது.

மொத்தம் 8000 கோடி முதலீட்டு தொகையில் சுமார் 1500 கோடி முதல் நிறுவனத்திலும் சுமார் 6500 கோடி இரண்டாவது நிறுவனத்திலும் முதலீடுகள் செய்யப் படும் என்றும் அறிவித்தது. சத்யம் நிறுவனத்தில் ராமலிங்க ராஜுவின் பங்கு வெறும் 8.5 சதவீதம் மட்டுமே என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. இவ்வளவு குறைவான பங்கு உரிமையை கொண்ட ஒரு தலைமை நிர்வாகி, தனது குடும்பத்தினர் நடத்தி வரும் (மென்பொருள் துறைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத) நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக, பொது முதலீட்டாளர்களுக்கு உரிமையான ஒரு நிறுவனத்தின் பணத்தை எப்படி தாரை வார்க்க முடியும் என்ற கேள்வி நிதிச் சந்தைகளில் எழுந்துள்ளது.

சத்யம் நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப் பட்ட இந்த முடிவு முதலீட்டாளர்களின் மத்தியில் பெரும் கோபத்தையும் ஏற்படுத்தியது. நேற்று இரவு எடுக்கப் பட்ட இந்த முடிவின் எதிர்வினை, உடனடியாக அமெரிக்கா சந்தைகளில் வெளிப்பட்டது . அங்கு சத்யம் நிறுவனத்தின் பங்கின் விலை ஒரே நாளில் சுமார் 54 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. மேலும் இந்திய முதலீட்டாளர்களும் தங்கள் கோபத்தை உடனடியாக வெளிப்படுத்தினர். இதனை புரிந்து கொண்ட சத்யம் நிறுவனத்தின் நிர்வாகம் தனது முடிவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக இன்று காலை அறிவித்தது. ஆனால், நிறைய முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டதால், இன்றைய பங்கு வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 30 சதவீத வீழ்ச்சியைக் கண்டுள்ளன.

இந்த நிகழ்வு இந்திய வணிகத் துறையில் முதலாவதோ அல்லது முடிவானதோ அல்ல. மேலும் பல நிறுவனங்களிலும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன என்பது கவலைக்குரிய ஒரு விஷயம். இந்திய வணிக நிறுவனங்களை நிறுவியவர்கள் (Promoters) அவற்றின் பங்குகளை பொது மக்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் விற்ற பின்னும், அவற்றை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு முழுக்க முழுக்க சொந்த நிறுவனங்களைப் போலவே நிர்வகித்து வருவதையே அதிகம் பார்க்க முடிகிறது. பல முடிவுகள் வெளிப்படையானவையாக இருப்பதில்லை. அவற்றிற்கு பங்குதாரர்கள் ஒப்புதலும் முறையாக பெறப் படுவதில்லை. தொழிற் நிறுவனங்களை வழி நடத்துவதற்கான வகுக்கப் பட்ட நெறி முறைகள் (Corporate Governance) பெரும்பாலும் பின்பற்றப் படுவதில்லை. சட்டத்தின் பிடிகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்றே அதிகம் கவனிக்கப் படுகிறது. இது மிகவும் கவலை தரக் கூடிய விஷயம் ஆகும்.

இன்றைக்கு இந்தியாவின் கடைக் கோடி குடிமகனும் பங்குகளில் முதலீடு செய்ய முன்வரும் சூழ்நிலையில் அரசு கண்காணிப்பு ஆணையங்கள் மக்களின் பணத்தை கையாட நடக்கும் முயற்சிகளை தடுக்க வேண்டும். இல்லாவிடில் அமெரிக்காவில் தற்போது ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி போன்ற நிலை இந்தியாவிலும் உருவாகி விட வாய்ப்பு உள்ளது.

நன்றி

10 comments:

ஷங்கர் Shankar said...

இதே போல் பல நிறுவனகளின் உண்மையான முகத்தை தோல்லுரித்து காட்ட வேண்டும்

சதுக்க பூதம் said...

சில மாதங்களுக்கு முன் சத்யம் நிறுவனத்தை சில பன்னாட்டு நிறுவனங்கள் வாங்க போவதாக பேச்சு அடிபட்டது. முடிந்தவரை லாபம் பார்த்து விட்டு நிறுவனத்தை விற்று விடலாம் என நினைக்க வாய்ப்புண்டு.

Maximum India said...

அன்புள்ள ஷங்கர்

பின்னூட்டத்திற்கு நன்றி

//இதே போல் பல நிறுவனகளின் உண்மையான முகத்தை தோல்லுரித்து காட்ட வேண்டும்//

நீங்கள் சொல்வது சரிதான். சில நூறு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களையும், சில ஆயிரம் கோடி ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையும் குற்றம் சாட்டும் பலரும் பல ஆயிரம் கோடி சுரண்டல்களில் ஈடுபடும் தொழிலதிபர்களை கண்டு கொள்வதில்லை.

Maximum India said...

அன்புள்ள சதுக்க பூதம்

பின்னூட்டத்திற்கு நன்றி

//சில மாதங்களுக்கு முன் சத்யம் நிறுவனத்தை சில பன்னாட்டு நிறுவனங்கள் வாங்க போவதாக பேச்சு அடிபட்டது. முடிந்தவரை லாபம் பார்த்து விட்டு நிறுவனத்தை விற்று விடலாம் என நினைக்க வாய்ப்புண்டு.//

நீங்கள் சொல்வது போல கூட இருக்கலாம்.

மகுடம் மோகன் said...

இதேபோல் அடிக்கடி நிகழ்வதை தடுக்க அரசு இயந்திரங்கள் விழித்துக்கொண்டு நிறுவனங்களை கண்கானித்து,மக்களின் முதலீட்டிற்க்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்,இல்லையென்றால்,தற்போது அமெரிக்காவில் நிதிநிறுவனத்தில் ந்டந்த மெகாமோசடி போல் இங்கும் நடக்க வழிவகுத்துவிடும்.

Maximum India said...

அன்புள்ள மகுடம் மோகன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//இதேபோல் அடிக்கடி நிகழ்வதை தடுக்க அரசு இயந்திரங்கள் விழித்துக்கொண்டு நிறுவனங்களை கண்கானித்து,மக்களின் முதலீட்டிற்க்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்,இல்லையென்றால்,தற்போது அமெரிக்காவில் நிதிநிறுவனத்தில் ந்டந்த மெகாமோசடி போல் இங்கும் நடக்க வழிவகுத்துவிடும்.//

நீங்கள் சொல்லும் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.

வால்பையன் said...

சத்யத்திற்கு சங்கு ஊதிடுவாங்க போலிருக்கே!

:)

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

சத்யம் கம்பெனி இருக்கும். ஆனா அதோட தலைமை நிர்வாகத்திற்கு முடிவு கட்ட சில முதலீட்டாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

பின்னூட்டத்திற்கு நன்றி :)

Anonymous said...

அரசியல் வியாதிகளின் லஞ்சம் சில ஆயிரம் கோடியா? மக்கள் பணம் பல்லாயிரம் விழுங்குகிற மகாதேவன்கள் அல்லவா அரசியலார். ஸ்பெக்ட்ரம் பற்றி தெரிந்துமா இப்படி சொல்லுகிறீர்கள்?

Maximum India said...

அன்புள்ள சத்யமுர்த்தி

பின்னூட்டத்திற்கு நன்றி

//அரசியல் வியாதிகளின் லஞ்சம் சில ஆயிரம் கோடியா? மக்கள் பணம் பல்லாயிரம் விழுங்குகிற மகாதேவன்கள் அல்லவா அரசியலார். ஸ்பெக்ட்ரம் பற்றி தெரிந்துமா இப்படி சொல்லுகிறீர்கள்?//

ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் கூட அரசியல்வாதிகள் லஞ்சமாக பெற்றதாக கூறப் படுவதை விட தொழில் அதிபர்கள் பல மடங்கு அதிகமாக (வியாபார நெறி முறைகளுக்கு புறம்பாக) லாபம் பார்த்தார்கள் என்பதுதான் உண்மை.

நன்றி.

Blog Widget by LinkWithin