Sunday, February 22, 2009

மனதுகளில் ஒளிந்திருக்கும் கருங்குரங்கு - தில்லி 6 - திரை விமர்சனம்


தில்லி 6 திரைப் படம், வெளி வருவதற்கு முன்பே பலமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

காரணங்கள், ரங் தே பசந்தியின் இயக்குனர் (மூன்று வருடங்களுக்கு பின் வெளிக் கொணரும்) படம், திரையில் வெளிவருவதற்கு முன்பே மிகவும் பிரபலமாகிவிட்ட பாடல்கள் (ரஹ்மானின் இசை ) மற்றும் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைக் களம் (தில்லியின் ஜன நெருக்கடி மிகுந்த சாந்தினி சௌக் பகுதி). பொதுவாகவே, பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளிவரும் படங்கள் பெரும்பாலும் ஏமாற்றத்தையே தரும். ஆனால், இந்த படம் எதிர்பார்ப்பை ஓரளவுக்கு (ரங் தே பசந்தியை கொஞ்சம் மறந்து விட்டால்) ஈடுகட்டுவதுடன் ஒரு சிறந்த கருத்துருவும் (concept) கொண்டுள்ளது. இந்த திரைப் படத்தின் கதைச் சுருக்கம் இதோ.

அமெரிக்காவில் ஒரு கலப்புத் திருமண ஜோடி (இந்து-முஸ்லீம்) குடும்பம் வாழ்கிறது. இதில் குடும்பத் தலைவரின் (இந்து) தாயாருக்கு உடல் நிலை மிகவும் மோசமாகி விடுகிறது. அமெரிக்க மருத்துவர்கள் கைவிரித்து விட, அந்த அம்மையார் தனது இறுதி நாளை இந்தியாவில் கழிக்க விரும்புகிறார். மகனுக்கு இந்தியாவிற்கு குறிப்பாக சாந்தினி சௌக் பகுதிக்கு திரும்ப விருப்பமில்லை. அப்போது, அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த அந்த அம்மையாரின் பேரன் (அபிஷேக் பச்சன்) அவரை இந்தியாவிற்கு அழைத்து வந்து அவரது இறுதிக் காலம் வரை இங்கிருக்க முடிவு செய்கிறான்.

இந்தியாவில் சாந்தினி சௌக் பகுதி அவனுக்கு முற்றிலும் புதிய உலகமாக தெரிகிறது (நமக்கும் கூடத்தான்). குறுகிய தெருக்கள், ரிக்க்ஷாக்களுடன் பொங்கி வழியும் போக்குவரத்து, மத வேறுபாடு இல்லாமல் நெருங்கிப் பழகும் மக்கள், கள்ளம் கபடம் இல்லாமல் அன்பைப் பொழியும் அண்டை வீட்டார், ராம் லீலா கொண்டாட்டங்கள் இவற்றுடன் பொதுமக்களை ஆட்டிப் படைக்கும் "கருங்குரங்கு" பற்றிய வதந்"தீ"க்கள். மேலும், இங்கு வந்த பிறகு பாட்டியிடம் காணப் படும் உற்சாகமான மனநிலை, வீட்டிற்குள் அடக்கமான மகளாகவும் வெளியே "இந்தியன் ஐடல்" ஆகத் துடிக்கும் நவீனப் பெண்ணாகவும் வலம் வரும் சோனல் கபூர் (அனில் கபூரின் மகள்) , பாசமிகு அண்ணன்தம்பியின் "பாகப் பிரிவினை" கதைகள் போன்ற விஷயங்கள் இந்தியாவின் மீது கதாநாயகனுக்கு ஒரு தனி ஈடுபாட்டை ஏற்படுத்துகிறது.

நடு ரோட்டில் பசுவினை வணங்குவது, நோயாளியை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, அந்த பசு வழிபாடு மூலம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை பற்றி கவலைப் படாமல், நல்ல சகுனம் என்று சந்தோசப் படுவது, அமெரிக்க மருத்துவர்களால் கைவிடப் பட்ட ஒரு நோயாளியை "ஒன்றுமில்லை, சர்க்கரை குறைவாக உள்ளது" என்று டாக்டர் சொல்வது, கருங்குரங்கைப் பற்றி ஒவ்வொரும் ஒரு கதை விடுவது, அது மெல்ல மெல்ல (ஹிந்தி சேனல்களில் இருந்து ஆங்கில செய்தி சேனல்கள் வரை) பரவுவது என்று சாந்தினி சௌக் பகுதி கதாநாயகனுக்கும் (நமக்கும் கூட) சுவாரஸ்யமாகவே கழிகிறது.

திரைக்கதை ஓட்டத்தில், மெல்ல மெல்ல "கருங்குரங்கைப்" பற்றிய மர்மங்கள் அவிழ்க்கப் படுகிறது. உண்மையில் கருங்குரங்கு என்று ஒன்றுமே இல்லை. தவறு செய்யும் ஒவ்வொருவரும் அந்த பழியை கருங்குரங்கு மீது போட்டு விடுகின்றனர் என்ற உண்மை கதாநாயகனுக்கு தெரிய வர அவனுக்கு ஒரு வித அருவெறுப்பை உண்டாக்குகிறது. சிறு வயதிலேயே "பெரியவர்களாக" ஆசைப் படும் சிறுவர்கள், ஒரு "மைனருடன்" தகாத உறவு வைத்திருக்கும் வயதானவரின் இளம் மனைவி , அடுத்தவன் ஆட்டை "ஆட்டை" போடும் அண்டை வீட்டுக் காரன் அனைவரும் கருங்குரங்கின் மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொள்கின்றனர். சந்தர்ப்ப வசமாக பல பிரச்சினைகளில் அமெரிக்க இளைஞன் சம்பந்தப் படுத்தப் பட்டு விடுகிறான்.

"கருங்குரங்கு" விஷயத்தில் மூக்கை நுழைக்கும் மதவாதிகள் மற்றும் மத அரசியல்வாதிகள் (ராமர் சிவன் வேடத்தில் இருப்பவர்களை தன் முன்னர் ஆட வைத்து வணங்க வைத்து வேடிக்கை பார்ப்பது அழகாக காட்டப்பட்டுள்ளது), கருங்குரங்கு பிரச்சினை தீர்வு பெற அருகிலுள்ள மசூதியை இடித்து அங்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்கின்றனர். நேற்று வரை நண்பர்களாக இருந்தவர்கள் ஒரே நாளில் கடும் விரோதிகளாக மாறுகின்றனர். அல்லாவிற்கும் அனுமானுக்கும் வித்தியாசம் பாராட்டாமல் வாழும் ஒரு முஸ்லீமின் கடை அடித்து நொறுக்கப் படுகிறது. பெரிய அளவில் மோதல் ஏற்பட்டு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது.

இந்த நிகழ்வுகள் கதாநாயகனின் மனதில் பாதிப்பு ஏற்படுத்தி அமெரிக்காவிற்கே திரும்ப நினைக்கிறான். ஆனால் பாட்டியோ, இந்தியாவிலேயேதான் தனது உயிர் பிரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். ஆனால், தொடர்ந்து "கருங்குரங்கு" பிரச்சினையில் தேவையில்லாமல் பேரன் சம்பந்தப் படுத்தப் படுவதினாலும், அவனது தாயார் முஸ்லீம் என்பதால் அன்டைவீட்டாரால் (இந்துக்கள்) அவமானப் படுத்தப் படுவதையும் கண்டு மெல்ல மெல்ல பாட்டியின் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அதே சமயம், அண்டை வீட்டு பெண் மீது ஏற்படும் காதல் மற்றும் அவளை (மும்பைக்கு கூட்டி சென்று ஸ்டார் ஆக்குவேன் என்று) ஏமாற்றி வரும் "மைனரிடம்" இருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆகியவை கதாநாயகனின் மனதை மாற்றுகிறது. ஒரு கட்டத்தில் பாட்டி அமெரிக்கா திரும்பலாம் என்று கூற கதாநாயகன் மறுக்கிறான்.

படத்தின் உச்சகட்டமாக, ராமலீலா கொண்டாட்டங்களில் இந்துக்கள் மும்முரமாக இருக்க (கடையை இழந்த) முஸ்லீம் வாலிபனால் ஒரு இந்து கோயில் எரிக்கப் படுகிறது. கதாநாயகி "மைனருடன்" ஓட்டம் பிடிக்கிறாள். கோயில் எரிக்கப் பட்டது இந்துக்களுக்கு தெரிய வந்தவுடன் மிகுந்த பதட்டமான சூழல் ஏற்படுகிறது. பதிலுக்கு முஸ்லீம்களை தாக்க கிளம்புகிறார்கள். இந்த மோதலை தவிர்க்க அமெரிக்க இளைஞன் "கருங்குரங்கு" வேடத்தில் அனைவரின் கண்களிலும் படும்படி கட்டிடங்களின் மேலே தாவித் தாவி செல்கிறான். இதை காணும் மக்கள் அனைவரின் (இந்து முஸ்லீம் வேறுபாடு இல்லாமல்) கவனம் மற்றும் கோபம் கருங்குரங்கின் மீது திரும்புகிறது. அனைவரும் ஒன்று சேர்ந்து "கருங்குரங்கை" விரட்டிப் பிடிக்கின்றனர்.

கதாநாயகன் கடுமையாகத் தாக்கப் படுகிறான். ஆடு மற்றும் கடையை இழந்த முஸ்லீம் வாலிபன் கோபத்தில் ஹீரோவை நெஞ்சிலே சுட்டு விடுகிறான். அப்போது, "பகலில் அருவெறுப்புடனும், இரவில் காமத்துடனும் நோக்கப் படும்" தெருவோரப் பெண் மற்றும் கதாநாயகி ஆகியோரால், அனைவரையும் காப்பாற்றவே இந்த முடிவை கதாநாயகன் எடுத்தான் என்ற உண்மை தெளிவுப் படுத்தப் படுகிறது. ஒவ்வொருவரும் தனித்தனியாக தாம் செய்த தவறை (கருங்குரங்கு மேல் பழி போட்டது) உணருகின்றனர்.

"கருங்குரங்கு" வேறு எங்கும் இருக்க இல்லை. மக்களின் மனதில் ஓரத்தில்தான் ஒளிந்திருந்து வாழ்ந்திருக்கிறது என்ற உண்மையை அனைவரும் உணர்ந்து வெட்கப் படுகின்றனர். அப்புறம் என்ன, சுப முடிவுதான்!

(இந்த கதையை இங்கு சொல்லப் பட்டதை விட மிக அழகாகவே திரையில் காட்டப் பட்டுள்ளது)

படத்தின் பிடித்த விஷயங்கள்:

தெளிவான திரைக் கதையோட்டம்.
ஆர்பாட்டமில்லாத அபிஷேக் மற்றும் இதர நடிகர்களின் அழகான நடிப்பு.
ஒரு சென்சிடிவான விஷயத்தை அழகாக சொன்னது.
(நம்மூர் பழைய வாசம் கொஞ்சம் அடித்தாலும்) குளுகுளு இசை

பிடிக்காத விஷயங்கள் என்று அதிகம் இல்லை என்றாலும், இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாமோ என்ற சில விஷயங்கள்

நம்மூர் "தேவர் மகனில் " காட்டப் பட்டிருப்பது போல வெளிநாட்டில் இருந்து திரும்ப வரும் இளைஞனின் மனமாற்றங்கள் இன்னும் அழுத்தமாக காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இறுதி முடிவு கொஞ்சம் "யதார்த்த நிலையில்" இருந்து மாறுபட்டதாக இருந்தது. ஆனால் சுப முடிவையே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள் என்ற முறையில் இது "ஒ கே"

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு "சாந்தினி சௌக்" போன்ற ஜன நெருக்கம் மிகுந்த, வாழ்க்கை தரம் குறைந்த இந்தியப் பகுதிகள் ஒரு வித ஆச்சரியத்தைக் (சில சமயங்களில் அருவெறுப்பைக்) கொடுக்கும். ஆனால், அவர்களுடைய நம்பிக்கைகள்தான் (சமயத்தில் மூட நம்பிக்கைகள்) கடுமையான அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளுக்கு இடையிலேயும் வாழ்க்கையில் ஒருவித பிடிப்புடனும் உற்சாகமாகவும் வாழ வழி செய்கிறது என்பதை அழகாக காட்டி இருக்கிறார் இயக்குனர் ஓம்ப்ரகாஷ். அவருக்கு நமது வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் சமூக சிந்தனையுள்ள ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை "தில்லி 6" தந்தது.

நன்றி.

18 comments:

சரவண வடிவேல்.வே said...

நடுநிலையான விமர்சனம். திரைப்படத்தை பார்க்க தூண்டுகிறது....

எட்வின் said...

ரஹ்மானின் பாடல்கள் அருமையோ அருமை.இன்னும் படம் பார்க்கவில்லை. உங்க விமர்சனமே பாதி படம் பாத்த மாதிரி ஆயிடுச்சி. சீக்கிரமே பாத்திருவோம்.

Maximum India said...

அன்புள்ள சரவணா வடிவேல்

பின்னூட்டத்திற்கு நன்றி

Maximum India said...

அன்புள்ள எட்வின்

பின்னூட்டத்திற்கு நன்றி

//ரஹ்மானின் பாடல்கள் அருமையோ அருமை.இன்னும் படம் பார்க்கவில்லை. உங்க விமர்சனமே பாதி படம் பாத்த மாதிரி ஆயிடுச்சி. சீக்கிரமே பாத்திருவோம்.//

கண்டிப்பாக பாருங்கள் :)

மங்களூர் சிவா said...

அருமையான விமர்சனம். திரைப்படத்தை பார்க்க தூண்டுகிறது.

Maximum India said...

நன்றி மங்களூர் சிவா. கண்டிப்பாக பாருங்கள்.

ஊர்சுற்றி said...

படத்தை பார்க்க போறேனுங்கோ.

guyfromsg said...

விமர்சனம் நன்றாக இருந்தது. நம்ம முன்னாடி எல்லாம் இந்தி படத்தை கிண்டல் பண்ணுவோம். இப்ப பார்த்தா அவுங்க நல்லா எடுக்குறாங்கன்னு தோனுது. சிலம்பாட்டம், படிக்காதவன் குப்பைகளை பார்த்து நொந்தது போய் சொல்றேன்.

கண்ணன்

Maximum India said...

அன்புள்ள ஊர்சுற்றி

பின்னூட்டத்திற்கு நன்றி

Maximum India said...

அன்புள்ள கண்ணன்

பின்னூட்டத்திற்கு நன்றி

// நம்ம முன்னாடி எல்லாம் இந்தி படத்தை கிண்டல் பண்ணுவோம். இப்ப பார்த்தா அவுங்க நல்லா எடுக்குறாங்கன்னு தோனுது. சிலம்பாட்டம், படிக்காதவன் குப்பைகளை பார்த்து நொந்தது போய் சொல்றேன்.//

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தொன்னூறுகளில் தமிழ் திரைப் படங்கள் இந்திய திரையுலகிற்கே "trend setter" ஆக இருந்தன. ஆனால், அரசியல் தொலைக்காட்சிகளின் தலையீடு, வாரிசு நடிகர்களின் ஆதிக்கம், வன்முறையைப் போற்றுதல், முற்றிலும் வணிக நோக்கிலான சிந்தனைகள் என தமிழ் திரையுலகத்தின் தற்போதைய நிலை சொல்லிக் கொள்ளும் படி இல்லை. ஹிந்தியிலும் வணிக நோக்கங்கள் இருந்தாலும் அவ்வப்போது புதிய முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. சமீபத்திய உதாரணங்கள், 'A Wednesday', மும்பை மேரி ஜான் போன்றவை.

கண்ணன்

RAMASUBRAMANIA SHARMA said...

"விமர்சனம் மிகவும் அருமை"...படத்தை பார்த்துவிட்டது போன்ற ஒரு மன நிறைவு...மேலும் தங்களின் பதிவு, அனைவரையும் நிச்சயமாக திரைக்குச்சென்று படம் பார்க்கத்தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. தொடர்ந்து விமர்சனம் பதிவு செய்யுங்கள் நண்பரே.....

Maximum India said...

அன்புள்ள ராமசுப்ரமனியா ஷர்மா

பின்னூட்டத்திற்கு நன்றி

//"விமர்சனம் மிகவும் அருமை"...படத்தை பார்த்துவிட்டது போன்ற ஒரு மன நிறைவு...மேலும் தங்களின் பதிவு, அனைவரையும் நிச்சயமாக திரைக்குச்சென்று படம் பார்க்கத்தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.//

நான் திரையில் பார்க்கும் படங்கள் மிகக் குறைவு. அதிலும் ஓரளவுக்காவது திருப்தி தந்த படங்கள் மிகக் குறைவு. அப்படி திருப்தி தந்த படங்களில் இதுவும் ஒன்று. எனவே, பலரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுந்ததே இந்த விமர்சனம். இதில் கூட, முழுக்கதையையும் வெளிப் படுத்தலாமா என்று முதலில் யோசித்தாலும், "ஹிந்தி" சரியாக புரியாதவர்களுக்கு (தமிழ் நாட்டில் கொஞ்சம் அதிகம்) உதவட்டுமே என்றுதான் முழுக்கதையையும் இங்கு பதிவிட்டேன்.

//தொடர்ந்து விமர்சனம் பதிவு செய்யுங்கள் நண்பரே.....//

திருப்தி தரும் படங்களை காண வாய்ப்புக் கிடைத்தால் முயற்சி செய்வேன் நண்பரே ....!

நன்றி.

KARTHIK said...

// நடு ரோட்டில் பசுவினை வணங்குவது, நோயாளியை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, அந்த பசு வழிபாடு மூலம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை பற்றி கவலைப் படாமல், நல்ல சகுனம் என்று சந்தோசப் படுவது.//

இன்னும் இங்க படம் ரிலீஸாகள வந்ததும் பாக்கவேனம் உங்களோட விமர்சனம் அருமையா இருக்கு.
Fashionனு ஒரு ஹிந்திப்படம் பாத்தேன்.
படு எதார்த்தமா இருந்துது.
ஹிந்தி சினிமா எங்கையோ போயிருச்சு.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

கருத்துரைக்கு நன்றி

//ஹிந்தி சினிமா எங்கையோ போயிருச்சு//

உண்மைதான் கார்த்திக். இப்போது நிறைய வித்தியாசமான முயற்சிகள் ஹிந்தியில் காணப் படுகின்றன. நம்மூரில், இன்னமும் ஒரே மசாலா பார்முலாவில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஹீரோக்களுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.

வால்பையன் said...

//மெல்ல மெல்ல "கருங்குரங்கைப்" பற்றிய மர்மங்கள் அவிழ்க்கப் படுகிறது. உண்மையில் கருங்குரங்கு என்று ஒன்றுமே இல்லை. தவறு செய்யும் ஒவ்வொருவரும் அந்த பழியை கருங்குரங்கு மீது போட்டு விடுகின்றனர்//

கடவுளும் இந்த கருங்குரங்கும் ஒன்று தான் என்று நான் சொன்னால் யாராவது நம்பவா போகிறார்கள்.

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//கடவுளும் இந்த கருங்குரங்கும் ஒன்று தான் என்று நான் சொன்னால் யாராவது நம்பவா போகிறார்கள்.//

உண்மையான இறையை உணர்ந்தவர்கள் வேறு. கடவுளை சுயமாக உருவாக்கி மக்களை ஆள நினைத்தவர்கள் வேறு. எனவேதான் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்ற வழக்கு வந்திருக்கக் கூடும்.

உங்களுக்குத் தெரியுமா? நாத்திகர்களை விட கடவுள் அவநம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் ஆத்திகர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சிலர்தான். அதனால்தான், அவர்களால் மிகத் துணிச்சலாக கடவுள் விஷயத்திலேயே ஊழல் செய்ய முடிகிறது.

நன்றி.

பொதுஜனம் said...

கிட்டத்தட்ட டப் செய்து விட்டீர்கள். படம் பாத்தாச்சு. விமர்சனம் சூப்பெர்.

Maximum India said...

நன்றி பொதுஜனம்

//கிட்டத்தட்ட டப் செய்து விட்டீர்கள். படம் பாத்தாச்சு. //

நம்மூர் மக்கள் அதிகம் ஹிந்தி படம் பார்ப்பதில்லை என்பதினாலேயே முழுக் கதையும். அடுத்த முறை இன்னும் நன்றாக அலச முயற்சி செய்வேன்.நன்றி

//விமர்சனம் சூப்பெர்.//

உங்கள் பெருந்தன்மைக்கு அளவே இல்லாமல் போயிடுச்சு.

Blog Widget by LinkWithin