Friday, February 20, 2009

கடவுளும் இப்போது விரக்தியில்!


இன்றைக்கு உலகம் இருக்கும் நிலை இதைப் படைத்த இறைவனையே கூட விரக்தி நிலைக்கு கொண்டு சென்று விடும். அவருடைய சிந்தனை இப்போது எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை.

"ஒரு உயிரைக் கூட கொல்லாதே என்று அஹிம்சை வழியை போதனை செய்த என்னுடைய தூதரின் வழியைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு சிலர் இன்றைக்கு ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவருக்கொருவர் காட்டும் அன்பேதான் நான் என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக எனக்கு வழங்கப் பட்ட பெயரை தமது கட்சியின் பெயராக வைத்துக் கொண்டு சிலர் ஒரே நாட்டில் கூடவே வாழும் மக்களை (மற்ற பகுதியைச் சேர்ந்தவர்களை) துன்புறுத்தி அடித்து விரட்டுகிறார்கள்.

எளிய விலங்கினமான அணிலிடமும் கூட அன்பு காட்ட வேண்டும் என்று உலகிற்கு உணர்த்திய என்னுடைய பெயரை அமைப்பின் பெயராக வைத்துக் கொண்டு சிலர் வன்முறையில் இறங்கி பெண்களையும் கூட தாக்குகிறார்கள்.

"ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுங்கள்" என்று சொன்ன எனது தூதரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு சிலர் , இன்றைக்கு ஒரு கன்னத்தில் அடித்தால் கழுத்தையே வெட்டி எறிகிறார்கள்.

பிற மதத்தவரிடமும் அன்பு காட்டு என்று சகோதரத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்த அனுப்பப் பட்டவரின் பெயரைச் சொல்லிக் கொண்டு சிலர் இன்று உலக மக்களையெல்லாம் கொல்லத் துடிக்கிறார்கள்.

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு கலாச்சாரங்களில் வாழும் மக்களுக்கு அவர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே சற்றே வேறுபட்ட வழிவகைகள் வகுக்கப் பட்டு இருந்தாலும், இலக்கு ஒன்றேதான் என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்குறீர்கள்?

யானையிடம் யானை மொழியில்தான் போதிக்க வேண்டும், எலியிடம் அது புரிந்து கொள்ளும் வகையில்தான் விளக்க வேண்டும் என்ற எளிய தத்துவம் ஏன் விஞ்ஞானத்தில் வெற்றி பெற்ற உங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை?

வாழுங்க என்று அனுப்பப் பட்ட நீங்கள் ஏனப்பா இப்படி ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு சாக நினைக்கிறீர்கள்?

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனையும் கடித்த கதையாய், பெண்ணுக்காக போர், மண்ணுக்காக போர், பொன்னுக்காக போர் என்ற நிலையெல்லாம் போய், இன்றைக்கு என் பெயர் சொல்லியும் அடித்துக் கொள்கிறீர்களே?

போதும்பா போதும். எல்லாத்தையும் நிறுத்திக்குங்க. முதல்ல மனசுல இருந்து "மதத்த" விலக்கிடுங்க. தேவைப் பட்டா என்னக் கூட மறந்துடுங்க.

போங்கப்பா! போயி அவங்கவங்க பொழப்ப பாருங்க! குழந்தை குட்டி குடும்பத்த நல்ல நிலைக்கு கொண்டு வர முயற்சி பண்ணுங்க!

மத்தவங்களுக்கு தொந்தரவு பண்ணாத மனம்தான் உசந்த மதம்னு சொல்லலாம்னு பாத்தா, அந்த (புது) பேரச் சொல்லிக்கிட்டும் அடிச்சுகுவீங்களே? நான் இப்ப என்ன பண்ணுவேன்?"

நன்றி

5 comments:

கோவி.கண்ணன் said...

//"ஒரு உயிரைக் கூட கொல்லாதே என்று அஹிம்சை வழியை போதனை செய்த என்னுடைய தூதரின் வழியைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு சிலர் இன்றைக்கு ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
//

"சிலர்" என்று எழுதும் அளவுக்கு அதில் ரகசியமோ, அவர்கள் மாண்புமிக்கவர்களோ இல்லை, வெளிப்படையாக சொல்வதற்கு ஏன் தேவையற்ற பயம் ?

அந்த இனவெறியர்களை சிங்களர்/சிங்களன் என்று சொல்லலாமே !

KARTHIK said...

// மத்தவங்களுக்கு தொந்தரவு பண்ணாத மனம்தான் உசந்த மதம்னு சொல்லலாம்னு பாத்தா, அந்த (புது) பேரச் சொல்லிக்கிட்டும் அடிச்சுகுவீங்களே? நான் இப்ப என்ன பண்ணுவேன்?"//

எல்லாக்காலத்துலையும் மனுசப்பயலுங்க இப்படித்தான் இது நம்ம ஜீன் சம்பந்தமான விசையம் மாத்தமுடியாதுன்னு நெனைக்குரேன்.
வேர ஒன்னும் சொல்ரதுக்கில்லை :-((

Maximum India said...

அன்புள்ள கோவி.கண்ணன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//சிலர்" என்று எழுதும் அளவுக்கு அதில் ரகசியமோ, அவர்கள் மாண்புமிக்கவர்களோ இல்லை, வெளிப்படையாக சொல்வதற்கு ஏன் தேவையற்ற பயம் ?//

நான் குறிப்பிட்டுள்ள எந்த ஒரு "சிலரும்" அடையாளம் கண்டு பிடிக்க முடியாதவர்களோ அல்லது மரியாதை செலுத்தக் கூடியவர்களோ அல்ல. மேலும் இவர்களை கண்டு பயப் பட எந்த ஒரு காரணமும் தேவையில்லை. படிப்பவர்களே புரிந்து கொள்ளும் வகையில் எழுதப் பட்டது ஒரு பாணி (ஸ்டைல்) மட்டுமே.

//அந்த இனவெறியர்களை சிங்களர்/சிங்களன் என்று சொல்லலாமே !//

சிங்களர்களை மட்டுமல்ல எந்த ஒரு சாதி, மத, இனத்தையும் பொதுப் படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எல்லா சாதி, மத, இனத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் வெவ்வேறு விகிதத்தில் இருக்கிறார்கள் என்பது எனது நம்பிக்கை.

நன்றி

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//எல்லாக்காலத்துலையும் மனுசப்பயலுங்க இப்படித்தான் இது நம்ம ஜீன் சம்பந்தமான விசையம் மாத்தமுடியாதுன்னு நெனைக்குரேன்.
வேர ஒன்னும் சொல்ரதுக்கில்லை :-((//

இருக்கலாம். அதே சமயத்தில் நம்முடைய சுற்றத்திடம் இன, மத, சாதி வேறுபாடுகள் இல்லாமல் இணக்கமாக பழகி வருவதின் நம்மால் முடிந்த வரை (ஒரு சிறிய வட்டத்திலாவது) ஒரு நல்ல சூழலை உருவாக்கலாம்.

நன்றி

வால்பையன் said...

நீங்கள் உதாரணம் காட்டிய கடவுளுக்குள் அடித்து கொள்ளாமல் இருந்தால் சரி!

Blog Widget by LinkWithin