Thursday, February 26, 2009

காப்பீடு எவ்வளவு செய்யலாம்?


உலகம் இன்றிருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில், தனி மனிதனின் உயிருக்கும் குடும்பத்தின் தலைவருக்குப் பின் அந்த குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பிற்கும் எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை என்றே தோன்றுகிறது. இந்த நிலையில் ஒவ்வொருவரும் தனக்கு பின்னர் குடும்பத்தின் சீரான வாழ்வினை ஓரளவுக்கேனும் உறுதி செய்ய எவ்வளவு காப்பீடு செய்யலாம் என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

இந்த கணக்கீடு பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ள காப்பீட்டு முகவரை தனிப் பட்ட முறையில் அணுகலாம் என்ற போதிலும், ஒரு குத்துமதிப்பான கணக்கீடு இங்கே வழங்கப் பட்டிருக்கிறது.

முதலில் ஒருவர் தன் சம்பளத்தில் குடும்பத்திற்காக செலவு செய்யும் சராசரி மாதத் தொகையை (தனது சொந்த அனுபவத்தின் பேரில்) கண்டறிய வேண்டும். அந்தத் தொகையை பன்னிரண்டால் பெருக்க வேண்டும் (வருட செலவினத்தை கண்டறிவதற்காக).

இதில் வரும் தொகையை மீண்டுமொரு முறை பதினைந்தால் பெருக்க வேண்டும். (இழப்பீட்டுத் தொகையை வங்கியில் வைப்புத் தொகையாக வைத்தால் சுமார் ஏழு சதவீத வட்டித் தொகை கிடைக்கும் என்ற மதிப்பீட்டின் படி). பிறகு, படிப்பு கல்யாணம் போன்றவற்றுக்காக ஆகக் கூடிய செலவினத் தொகையை மேற் சொன்ன வழிமுறையின் படி கண்டறியப் பட்ட தொகையுடன் கூட்டிக் கொள்ள வேண்டும். கடைசியாக, குடும்பத்திற்காக தான் இது வரை சேமித்து வைத்துள்ள தொகையினை மேற்சொன்ன தொகையிலிருந்து கழித்துக் கொள்ள வேண்டும். இப்படி வரும் தொகைக்கு ஒருவர் நீண்ட கால காப்பீடு (Term Insurance) செய்து கொள்ளவேண்டும்.

உதாரணமாக, ஒருவரின் மாதாந்திர குடும்ப செலவினம் ரூ.12,500 என்று வைத்துக் கொள்ளுங்கள். இதனை பன்னிரண்டால் பெருக்கும் போது, (வருட செலவு) ஒன்றரை லட்சம் வரும். மீண்டும்,இந்த தொகையை பதினைந்தால் பெருக்கினால், 22.50 லட்சம் வரும். இதனுடன் கல்யாண மற்றும் படிப்பு செலவாக பத்து லட்சத்தை கூட்டி கொள்ளுங்கள். இது வரை சேமித்து வைத்துள்ள தொகை சுமார் பன்னிரண்டு லட்சம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த நபர், மொத்தமாக 20.50 லட்சம் அளவிற்கு காப்பீடு (Term Insurance) செய்ய வேண்டி இருக்கும். இந்த காப்பீட்டுத் தொகைக்கான சந்தாத் தொகை அவரவர் வயதினைப் பொருத்து லேசாக மாறுபடும்.

ஒவ்வொருவரும் காப்பீடு செய்யுங்கள். வாழ்வை நிம்மதியாக கழியுங்கள்.

நன்றி.

9 comments:

வால்பையன் said...

அரசு வேலையில் இல்லாததால் ஒய்வுக்கு பிறகு மாதாம் ஒரு தொகை வருவது போல் காப்பீட்டில் முதலீடு செய்ய உள்ளேன்!

சரியாக வருமா?

அல்லது மாதம் 500 க்கு எதாவது “ஏ” கிரேடு பங்குகள் வாங்கி வைக்கலாமா?

KARTHIK said...

மிகவும் பயனுள்ள பதிவு.
நன்றி.

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

//அரசு வேலையில் இல்லாததால் ஒய்வுக்கு பிறகு மாதாம் ஒரு தொகை வருவது போல் காப்பீட்டில் முதலீடு செய்ய உள்ளேன்!

சரியாக வருமா?//

காப்பீடு என்பது வேறு. முதலீடு என்பது வேறு. இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. (இதைப் பற்றி மிக விரிவாக நமது கார்த்திக்கிடம் ஒரு முறை விளக்கி உள்ளேன். கூடிய சீக்கிரம் ஒரு பதிவு கூட போடலாம் என்று திட்டமிட்டுள்ளேன்) ஓய்வுத் தொகைக்காக நீங்கள் வேறு ஏதாவது பென்சன் திட்டத்தில் முதலீடு செய்யவேண்டும்.

//அல்லது மாதம் 500 க்கு எதாவது “ஏ” கிரேடு பங்குகள் வாங்கி வைக்கலாமா//

ஓய்வுகாலத்திற்கான முழுமையான ஒரு முதலீட்டுப் பையை (Investment Portfolio) நீங்கள் உருவாக்க வேண்டும் . அதில், பங்குகள், வைப்புத் தொகை, தங்கம் என அனைத்தும் வெவ்வேறு விகிதத்தில் இருக்க வேண்டும். இது பற்றிக் கூட ஒரு விரிவான பதிவை விரைவில் இடுகிறேன்.

நன்றி.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்.

பின்னூட்டத்திற்கு நன்றி.

பொதுஜனம் said...

மதிப்பான குத்துதான். வடிவேல் மாதிரி சிம்பிள் ஆக சொன்னதுக்கு வாழ்த்துக்கள். அது என்னங்க " முதலீட்டு பை.". திருவள்ளுவருக்கு பக்கத்துல சிலை வெக்கலாம் உங்களுக்கு. வாழ்கை போகும் போக்கில் வயதான பின் யாரையும் சார்ந்து இருக்காமல் இருக்காமல் இருக்க இப்போதே துட்டு சேர்த்தாக வேண்டும். பிள்ளைகளுக்கு, நமக்கு , நிரந்தர (?) சொத்துக்கு என்று மூன்று பிரிவாக சேர்க்கலாம்.அப்படி சேர்ப்பதை ராஜு மாதி நம்பிக்கையான மனிதர்களிடம் கொடுக்காமல் maximum india விடம் ஐடியா கேட்டு செய்யவும். எனக்கு அவர்தான் எப்போதும் வழிகாட்டி, பாம்பாட்டி., இல்லாத பாட்டி. அவர் ஐடியா எப்போதும் கேரண்டி.அவர் சொன்னா ஒருவாட்டி. நம்புனா நீ கெட்டி. நம்பாட்டி போங்க வெட்டி. ஏ டண்டனக்கா டனுக்கு நக்கா ( என் முகத்தில் தாடி வளர்ந்து முகத்தை மூடுகிறது.)

Maximum India said...

அன்புள்ள dg

நன்றி.

எங்க ரொம்ப நாளா காணோம்?

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

//மதிப்பான குத்துதான். வடிவேல் மாதிரி சிம்பிள் ஆக சொன்னதுக்கு வாழ்த்துக்கள்.//

நன்றி.

//அது என்னங்க " முதலீட்டு பை."//

அதுதாங்க. நாம துணிக்கடைக்கு போனா துணியெல்லாம் பார்செல் பண்ணித் தருவாங்களே ஒரு பை, அந்த மாதிரி முதலீடு எல்லாம் சேர்ந்து பார்சல் பண்ணா அதுதான் "முதலீட்டுப் பை"

//திருவள்ளுவருக்கு பக்கத்துல சிலை வெக்கலாம் உங்களுக்கு. //

உங்களுக்கு திருவள்ளுவர் மேல என்ன கோபம்?

//அப்படி சேர்ப்பதை ராஜு மாதி நம்பிக்கையான மனிதர்களிடம் கொடுக்காமல் maximum india விடம் ஐடியா கேட்டு செய்யவும். //

என்னுடைய பொறுப்ப அதிகப் படுத்துறீங்க.

//எனக்கு அவர்தான் எப்போதும் வழிகாட்டி, பாம்பாட்டி., இல்லாத பாட்டி. அவர் ஐடியா எப்போதும் கேரண்டி.அவர் சொன்னா ஒருவாட்டி. நம்புனா நீ கெட்டி. நம்பாட்டி போங்க வெட்டி. ஏ டண்டனக்கா டனுக்கு நக்கா ( என் முகத்தில் தாடி வளர்ந்து முகத்தை மூடுகிறது.)//

என்ன வச்சி நீங்க தமாசு பண்ணலியே? :)

எனி வே, மிக்க நன்றி.

MCX Gold Silver said...

கொஞ்சம் வேலை சார் பின்னுடம் இட முடிவதில்லை. ஆனால் உங்களுடைய எல்லா பதிவையும் படித்துவிடுவேன். உங்கள் "சேவை" எங்கள் தேவை நன்றி.

Maximum India said...

//கொஞ்சம் வேலை சார் பின்னுடம் இட முடிவதில்லை. ஆனால் உங்களுடைய எல்லா பதிவையும் படித்துவிடுவேன்.//

மிக்க நன்றி dg

//உங்கள் "சேவை" எங்கள் தேவை நன்றி//

உங்கள் தொடர்ந்த ஆதரவும் ஊக்குவிப்பும் எனக்குத் தேவை.

அப்பப்ப தலைய காட்டுங்க.

நன்றி.

Blog Widget by LinkWithin