Tuesday, December 30, 2008

கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!


உங்களுக்கு தெரியுமா? உலகம் எப்போதும் ஒரே சீரான வேகத்தில் சுற்றி வருவதில்லை. காரணம், பூமிக்கும் சூரிய சந்திரருக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசை மாற்றங்கள் பூமியின் சுழற்சி வேகத்தைப் பெருமளவு பாதிக்கின்றன. மேலும், பூமி முழுக்க முழுக்க திடப் பொருளாக இல்லாமல் உள்ளே ஆழ்மட்டத்தில் குழம்பு வடிவம் கொண்டு அமைந்திருப்பதால் அதன் சுழற்சி வேகம் ஒரே சீராக இருப்பதில்லை. இவற்றின் காரணமாக பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம் காலப் போக்கில் மாறிக் கொண்டே (பெரும்பாலும் அதிகரித்துக் கொண்டே) வருகிறது.

சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னே ஒரு முறை தன்னைத் தானே சுற்றிக் கொள்ள ஆறு மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொண்டதாக சொல்லப் படும் நம் பூமி தற்போது இருபத்து நான்கு மணி நேரத்தை விட சற்று கூடுதலான மில்லி செகண்ட் எடுத்துக் கொள்கிறது. (ரொம்ப வயதாகி விட்டதால் தளர்ந்து போய் விட்டதோ?)

ஒரு நாள் பொழுதை தனியாகப் பார்க்கும் போது இந்த வித்தியாசம் அதிக கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாக இல்லாதது போல தோன்றினாலும், தொடர்ந்து பல நாள்களுக்கு இந்த வித்தியாசம் கூட்டப் படும் போது (நம்மூர் கந்து வட்டி போல) இத்தகைய சுழற்சியில் ஏற்படும் தளர்ச்சி ஒரு மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இந்த வித்தியாசத்தை சரிக் கட்டவே அவ்வப்போது ஒரு செகண்ட் நேரம் (இது லீப் செகண்ட் என அழைக்கப் படுகிறது) சில ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டப் படுகிறது.

புவியின் சுழற்சியின் அடிப்படையில் நொடியைக் கணக்கிடும் வழக்கமான முறை மாற்றப் பட்டு அணுகடிகாரத்தின் உதவி கொண்டு நொடியினை துல்லியமாக கணக்கிடும் புதிய முறை சர்வதேச அளவியல் மையத்தால் 1967 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப் பட்டது. இதன் படி சீசியம் எனும் ஐசோடோபு ஒரு (சக்தி) நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற எடுத்துக் கொள்ளும் நேரமே ஒரு நொடி என முடிவு செய்யப் பட்டது. இந்த சக்தி நிலை மாற்றத்திற்கு எடுத்துக் கொள்ளப் படும் நேரம் எப்போதும் மாறாமல் ஒரே அளவில் இருப்பதால் இதை அடிப்படை நொடியாக தேர்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

அணு கடிகாரத்தின் உதவியுடன் கணக்கிடப் படும் நாளின் அளவிற்கும் மேலே குறிப்பிட்டவாறு புவியின் சுழற்சியின் அடிப்படையில் அமைந்துள்ள நாளின் அளவிற்கும் உள்ள வித்தியாசம் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் செகண்டின் உதவியால் சரிக் கட்டப் படுகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு(2008) வழக்கமான அளவை விட (இந்த ஆண்டு ஏற்கனவே ஒரு லீப் ஆண்டு என்பது குறிப்பிடத் தக்கது) ஒரு செகண்ட் கூடுதலாக பெற்று இருக்கும். டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி இரவு 11.59.59 நேரம் மட்டும் இரண்டு நொடிகள் நீடிக்கும்.
எனவே அப்போது உங்களது கடிகாரத்தை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

பின் குறிப்பு: இந்த பதிவு, அறிவியல் பற்றியும் எழுதுங்கள் என்று பின்னூட்டம் மூலம் கேட்டுக் கொண்ட திரு.ராஜே மற்றும் எங்களுக்காகவும் ஏதாவது எழுதுங்கள் என்று நேரில் கேட்டுக் கொண்ட எங்க ஊர் துளிர்களுக்குமான ஒரு முயற்சி.

நன்றி.

13 comments:

கபீஷ் said...

பதிவு நல்லாருக்கு, ஆனா எனக்கும் அறிவியலுக்கும் ரொம்ப தூரம் அதாவது என்க்கும் அறிவுக்கும். நிறைய பேருக்குப் பயன்படும் குறிப்பா நீங்க சொன்ன மாதிரி துளிர்களுக்கு

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி.

Unknown said...

தெரிந்து கொள்ள வேண்டிய தவல்கள்... நன்றி...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வால்பையன் said...

450 கோடி வருசத்துக்கு முன்னாடி ஒருநாளைக்கு வெறும் 6 மணி நேரம் தானா?

அப்படியானால் இன்னும் ஒரு 450 கோடி வருடம் கழித்து ஒரு நாளைக்கு 96 மணி நேரம்.

பாவம் மக்கள் தொடர்ச்சியாக 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும்

நல்ல தகவல் நனறி

Anonymous said...

அப்போ ஒரு பில்லியன் வருஷம் கழிச்சு எல்லாம் 15 வயசுதான் வாழ்வாங்களோ? 20ம் நூற்றாண்டுல 65 வயசு, 80 வயசு வாழ்ந்ததா ப்ளாக்ல அவுங்க எழுதுவாங்க.

:-)

கூட்ஸ் வண்டி said...

ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.

raje said...

நல்ல பதிப்பு.
வேண்டுகோள் ஏற்கப்பட்டத்திற்கு நன்றிகள் பல.

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Maximum India said...

அன்புள்ள வாலு

பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

உங்களுக்கும் கூட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//அப்படியானால் இன்னும் ஒரு 450 கோடி வருடம் கழித்து ஒரு நாளைக்கு 96 மணி நேரம்.

பாவம் மக்கள் தொடர்ச்சியாக 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும்//

இன்னும் 450 ஆண்டுகளுக்கு இப்போதைய மனித இனம் தாங்கும் என்று நம்புகிறீர்களா? முற்றிலும் புதிய வகை ஜீவராசிகள் புதிய மணிக்கணக்கில் பூமியை ஆளும் என்று நான் நம்புகிறேன்.

நனறி

Maximum India said...

அன்புள்ள சத்யமுர்த்தி

பின்னூட்டத்திற்கு நன்றி.

//அப்போ ஒரு பில்லியன் வருஷம் கழிச்சு எல்லாம் 15 வயசுதான் வாழ்வாங்களோ? 20ம் நூற்றாண்டுல 65 வயசு, 80 வயசு வாழ்ந்ததா ப்ளாக்ல அவுங்க எழுதுவாங்க.:-)//

//இன்னும் 450 ஆண்டுகளுக்கு இப்போதைய மனித இனம் தாங்கும் என்று நம்புகிறீர்களா? முற்றிலும் புதிய வகை ஜீவராசிகள் புதிய மணிக்கணக்கில் பூமியை ஆளும் என்று நான் நம்புகிறேன். //

வால்பையனுக்கான இந்த பதில் உங்களுக்கும்.

இருந்தாலும் நல்ல கற்பனை. நன்றி.

Maximum India said...

அன்புள்ள கூட்ஸ் வண்டி

நல்ல பெயர்.

//ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.//

கண்டிப்பாக. உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

நன்றி.

Maximum India said...

அன்புள்ள ராஜே

பின்னூட்டத்திற்கு நன்றி

//நல்ல பதிப்பு.
வேண்டுகோள் ஏற்கப்பட்டத்திற்கு நன்றிகள் பல.//

சந்தைநிலவரத்தின் பதிவுகள் என்னுடைய சொந்த அறிவை விரிவு படுத்த மிகவும் உதவியாக எப்போதுமே இருந்திருக்கின்றன. அந்த வகையில் அறிவியல் இன்னுமொரு வழியைக் காட்டிய உங்களுக்கு எனது நன்றி.

//புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

உங்களுக்கும் கூட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Maximum India said...

அன்புள்ள நண்பர்களே!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Blog Widget by LinkWithin