Wednesday, February 4, 2009

இருக்க இடம் கொடுத்தால்?


ஊர்பக்கம் ஏதோ சொல்வார்கள். இருக்க இடம் கொடுத்தால் படுக்க மடம் கேட்பார்கள் என்று. அது போல, சத்யம் நிறுவனத்திலிருந்து சுமார் 8000 கோடி ரூபாய் கொள்ளையடித்து போதாது என்று அந்த நிறுவனத்திலிருந்து மேலும் 1200 கோடி ரூபாய் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் ராஜுவின் உறவினர்கள்.

சத்யம் நிறுவனத்தின் கணக்கு வழக்கில் அதன் முன்னாள் தலைவரான ராஜு ஏகப் பட்ட தில்லுமுல்லுகள் செய்து அதிலிருந்து ஏகப் பட்ட பணத்தை கொள்ளை அடித்து தெரிந்த விஷயம்தான். அதன் பிறகு, அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகக் குழு அரசால் முற்றிலும் மாற்றியமைக்கப் பட்டு புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். ராஜுவோ ஆந்திர போலீசாரால் கைது செய்யப் பட்டு காவலில் வைக்கப் பட்டார். இன்னும் குற்ற விசாரணை முடிவடையாத நிலையில் எந்த துணிச்சலில் அவரது உறவினர்கள் மேலும் 1200 கோடி ரூபாய் கோரி புதிய நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பித்தனர் என்பது நமது கேள்வி.

ராஜுவாகவே முன்வந்து தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட பின்னரும் அவரைக் கைது செய்ய ஏகப் பட்ட அவகாசம் எடுத்துக் கொள்ளப் பட்டது. அதுவும் மத்திய புலனாய்வு அமைப்புகள் அவரிடம் விசாரணை செய்ய ஹைதராபாத் சென்ற பின்னரே அவசர அவசரமாக அவர் கைது செய்யப் பட்டார். இந்த குற்றம், நிதித் துறை மற்றும் பங்குத் துறை சார்ந்தது என்றும் இதனை ஓரளவுக்காகவாவது சரியாகவும் நுணுக்கமாகவும் விசாரிக்க செபி போன்ற தொழிற் ரீதியான அமைப்புகளின் உதவி கண்டிப்பாக தேவை என்று தெரிந்த பின்னரும் அவரை மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் ஒப்படைக்காமல் (சட்ட ரீதியான சிக்கல்களை முன்னிறுத்தி) மாநில போலீசார் விசாரணை செய்தனர்.

தணிக்கை விவகாரம் மற்றும் பங்கு மாற்றம் போன்ற நிதி நுணுக்கமான விஷயங்களை எப்படி ஒரு மாநில போலீசாரால் சரியாக புலனாய்வு செய்ய முடியும்? கிட்டத் தட்ட ஒரு மாதம் கழிந்த பின்னரே ராஜுவை விசாரிக்க செபி உச்ச நீதி மன்றம் வரை சென்று அனுமதி வாங்க முடிந்தது. இடை பட்ட காலத்தில் ராஜுவின் உறவினர்கள் ஆய்வு சம்பத்தப் பட்ட ஆவணங்களில் ஏதேனும் திருத்தம் செய்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு? இந்த ஒரு மாதத்தில் போலீசாரின் விசாரணை எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்பது பற்றிய அதிகார பூர்வமான தகவல்கள் ஏன் வெளியிடப் படவில்லை?

நிதி தொடர்பான குற்றச் சாட்டுகளில் தொண்ணூறு நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாகும் பட்சத்தில் குற்றம் சாடப் பட்டவர் ஜாமீனில் வெளி வர முடியும். அதே போல, இந்த வழக்கின் விசாரணை, மாநில போலீஸார் தாக்கல் செய்யும் குற்றப் பத்திரிக்கையின் அடிப்படையிலேயே இருக்கும். அந்த குற்றப் பத்திரிக்கையில் ஏதேனும் (தொழிற்நுட்ப ரீதியாக) தவறுகள் இருந்தால், தவறான தகவல்கள் கொடுக்கப் பட்டதின் அடிப்படையில், குற்றம் சாட்டப் பட்டவர் தப்பிக்கவும் வாய்ப்பு உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கையில், போலீஸார், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்க செபி போன்ற நிறுவனங்களின் உதவியை கோரியது போல இது வரை தகவல் எதுவும் இல்லை. மேலும், செபியின் விசாரணைக்கு அளித்த சட்டரீதியான சிக்கல்களை பார்க்கும் போது ராஜுவை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க சதி நடக்கிறதோ என்ற ஐயப் பாடு எழுகிறது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது என்ற உயர்ந்த நோக்கில் உருவாக்கப் பட்ட சட்டங்களில் உள்ள (பெரிய) ஓட்டைகளுக்குள் புகுந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற திமிரிலேயே, இப்படி "அடித்த கொள்ளை போதாது, இன்னும் பணம் பிடுங்குவோம்" என்ற தொனியில், சத்யம் நிறுவனத்திற்கு ராஜுவின் உறவினர்கள் 1200 கோடி ரூபாய் கொடுக்கச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

நன்றி.

4 comments:

பொதுஜனம் said...

குடும்ப ஊழல் நம் நாட்டுக்கு புதிதா ? தனியாக ஊழல் பண்ணத்தான் தப்பு. இவர்களை நம்பி பணம் போட்ட வர்கள் தெருக்கோடிக்கு போய் விட்டார்கள். ஆயிரம் கோடி எல்லாம் இப்போ சாதரணமாகி விட்டது. ராஜு ஜெயிலில் செஸ் விளையாடுகிறார். அடுத்து எப்படி தப்பிக்கலாம் என்று பயிற்சி எடுக்கிறாரோ?

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கு நன்றி. என்னுடைய மிகப் பெரிய வருத்தம் மற்றும் அச்சம் என்னவெனில், இப்போதெல்லாம் ராஜு குடும்பம் போன்றவர்கள் எவ்வளவு பெரிய ஊழல் செய்து மாட்டிக் கொண்டாலும், குற்ற உணர்ச்சி அறவே இல்லாமல் இருப்பது நாட்டிற்கு பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும்.

நன்றி

வால்பையன் said...

//செபியின் விசாரணைக்கு அளித்த சட்டரீதியான சிக்கல்களை பார்க்கும் போது ராஜுவை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க சதி நடக்கிறதோ என்ற ஐயப் பாடு எழுகிறது.//

இதிலென்ன சந்தேகம்,
பணம் தான் பாதாளம் வரைக்கும் பாயுமே!

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

கருத்துரைக்கு நன்றி

//இதிலென்ன சந்தேகம்,
பணம் தான் பாதாளம் வரைக்கும் பாயுமே!//

இப்போதெல்லாம் பணம் பாதாளம் வரை மட்டுமல்ல. மேலே மேலே -------(சட்டப் படி சொல்ல முடியாத இடம்) வரை பாய்கிறது.

நன்றி

Blog Widget by LinkWithin