Saturday, February 28, 2009

இந்திய ரூபாயின் வீழ்ச்சி


சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 40 க்கும் கீழே இருந்த நிலை மாறி, பின்னர் சில காலம் ஐம்பதிற்கு சற்று கீழேயே தடுமாறிக் கொண்டிருந்து, இப்போது, சரித்திரத்தில் இது வரை இல்லாத அளவாக 51 ரூபாய் அளவையும் தாண்டி உள்ளது. இந்த சரிவிற்கான காரணங்களையும், இதனால் இந்தியாவிற்கு ஏற்பட கூடிய பாதிப்புக்களையும், இந்த சரிவும் இன்னும் தொடருமா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம்.

முதலில் ரூபாய் வீழ்ச்சிக்கான காரணங்கள்:

உலகமெங்கும் பங்கு சந்தைகள் வீழ்ந்ததன் தொடர்ச்சியாக, இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தாம் வைத்திருந்த இந்திய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தது. மேலும் இந்தியாவில் அந்நிய நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீடுகள் குறைந்து போனது.

மேற்சொன்ன காரணங்களின் விளைவாக இந்திய அந்நியச் செலவாணி கையிருப்பு பெருமளவில் குறைந்து போனது.

இந்திய நிறுவனங்களால், வெளிநாடுகளில் (கடன் சந்தைகளில் நிலவி வரும் அச்சம் காரணமாக) கடன் வாங்க முடியாமல் போனது. அந்த வகையில் இந்தியாவிற்கு பணவரத்து குறைந்து போனது. அரசு மற்றும் தலைமை வங்கி, இந்த விஷயத்தில் இந்திய நிறுவனங்களுக்கு பல சலுகைகள் அளித்தாலும், நிலைமை பெருமளவுக்கு மேம்பட வில்லை.

மேலை நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தின் விளைவாக, இந்தியப் பொருட்களின் ஏற்றுமதிகள் பெருமளவு குறைந்து போனது. அதே சமயம், பெட்ரோலிய பொருட்கள் நீங்கலான இதர இறக்குமதிகள் இந்தியாவில் அதிக அளவு குறையாமல் போனது. இந்த நிலை காரணமாக, ஏற்றுமதி-இறக்குமதிக்கு இடையே உள்ள இடைவெளி பெருமளவு அதிகரித்தது.

இந்திய அரசின் மிகப் பெரிய நிதிப் பற்றாகுறை காரணமாக உலக தர வரிசையில் இந்தியாவிற்கான தர மதிப்பீட்டை தர நிர்ணய நிறுவனம் (S&P) சமீபத்தில் குறைத்து. இதனால், வெளிநாட்டு செலவாணியின் புதிய வரத்து குறையும் என்பதுடன் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு செலவாணி வெளியே செல்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

உலகெங்கும் உள்ள பொருளாதார நிரந்தமற்ற நிலை காரணமாக, அந்நிய செலவாணியை வைத்திருப்போர் அதன் பாதுகாப்புக்காக அமெரிக்காவிற்கு (யானை படுத்தாலும் குதிரை உயரம்) திருப்பி எடுத்துச் செல்வது. இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வருங்காலம் பற்றி சந்தேகங்கள் நிலவுவதால், பணம் இத்தனை பிரச்சினைகளுக்கும் மூல காரணமான அமெரிக்காவிற்கு சென்று மீண்டும் தஞ்சமடைகிறது. இதனால், மற்ற உலக கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமாகி வருகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் கரன்சியை பெருமளவு வர்த்தகம் செய்து வரும் சிங்கப்பூர் என்.டி.எப் (Non Delivarable Forwards) சந்தையில் ரூபாய் பெருமளவு வீழ்ச்சி அடைந்தது.

மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில், ரூபாய் பலமிழந்து வருவதால், ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை (ஒரே டாலர் அளவில் அதிக ரூபாய்) என்றாலும், ஏற்றுமதி அளவு பெருமளவு குறைய வாய்ப்பு இருப்பதால் (முதல்ல டாலர் கிடைக்கனுமில்ல?), அவர்களுக்கு பெரிய நன்மை இல்லை என்றே தோன்றுகிறது. இந்தியாவிற்கு பணம் அனுப்பும் வெளிநாட்டில் பணி புரியும் நண்பர்களுக்கும் ஓரளவுக்கு லாபமே.

அதே சமயத்தில், இறக்குமதியாகும் பொருட்களின் விலை இன்னும் அதிகமாகி ஏற்கனவே விண்ணை முட்டிக் கொண்டிருக்கும் விலைவாசிகள் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

ஒரு நாட்டின் கரன்சியின் வலுவின் அடிப்படையிலேயே வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டில் முதலீடு செய்ய முன்வரும். அந்த வகையில், இந்தியாவில் இன்னும் கொஞ்ச நாளுக்கு அந்நிய நிறுவனங்கள் எட்டி பார்க்காது என்று தோன்றுகிறது. இதனால், இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து உள்நாட்டில் பண நெருக்கடி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே வெளிநாடுகளில் அதிக அளவு கடன் வாங்கியுள்ள இந்திய நிறுவனங்கள் கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்த மிகவும் சிரமப் படும்.

ஆக மொத்தத்தில் இந்திய கரன்சியின் வலுவிலப்பு, நாட்டின் நலனுக்கு விரோதமானது என்றே இப்போதைக்கு தோன்றுகிறது.

ரூபாயின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான விடை இங்கே.

மிக மோசமான மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, கூடிய சீக்கிரம் வரப்போகிற பொதுத் தேர்தல், இப்போது நிலவி வரும் உலக அளவிலான "பொருளாதார தேக்க நிலை (Recession)" "வீழ்ச்சி நிலையாக (Depression)" உருவெடுக்கக் கூடிய ஆபத்து போன்ற விஷயங்களால், இன்னும் கொஞ்ச நாளைக்கு ரூபாய் தனது வீழ்ச்சியைத் தொடரும் என்றே தோன்றுகிறது.

நன்றி.

14 comments:

ராஜரத்தினம் said...

I want to say onething to you. Dont mistake me. YOur style is always looking like a blogger called arivili ( really he doesnot have any arivu) about all subjects. His way of writing always indirectly says that he knows everyting. I hope you are not like that. But still I wanted to say this. Thats all.

Maximum India said...

அன்புள்ள ராஜா!

உங்களது வெளிப்படையான பின்னூட்டத்திற்கு நன்றி

//I want to say onething to you. Dont mistake me.//

நிச்சயமாக உங்களை தவறாக எடுத்துக் கொள்ள வில்லை, நீங்கள் ஒரு வெளிப்படையான மனிதர் என்பதை நான் அறிவேன். வேறு சிலர் கூட இதே போல நினைத்திருக்கலாம். நீங்கள் வெளிப் படுத்தியிருக்கிறீர்கள். அவ்வளவே.

//YOur style is always looking like a blogger called arivili ( really he doesnot have any arivu) about all subjects. His way of writing always indirectly says that he knows everyting. //

மன்னிக்கவும். சக பதிவர் பற்றி என்னுடைய பதிவில் விவாதிக்க விரும்பவில்லை.

//I hope you are not like that. But still I wanted to say this. Thats all. //

நான் எங்கே எல்லா சப்ஜெக்ட்களையும் பற்றியும் எழுதி இருக்கிறேன்? நிதி நிர்வாகத்தில் மேலாண்மை பட்டம் பெற்று அந்தத் துறையில் கொஞ்சம் அனுபவம் பெற்றிருப்பதால், சந்தைகளைப் பற்றி ஏதோ கொஞ்சம் எழுதி வருகிறேன். இயந்திரவியல் மற்றும் மேலாண்மை படிப்பில் மற்றும் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொண்ட உளவியல் கருத்துக்களைப் (Behavioural Science) பற்றியும் கொஞ்சம் பதிந்திருக்கிறேன். அப்புறம் அரசியல் மற்றும் நாட்டு நடப்பு பற்றி சில கருத்துக்கள். இது நம்மூர் டீக்கடையில் கூட விவாதிப்பதுதானே? சில குழந்தைகள் விரும்பினார்கள் என்பதால் (கொஞ்சம் கஷ்டப் பட்டு) சில அறிவியல் பதிவுகள் இட்டேன். ஒரு சினிமா பிடித்ததால் திரை விமர்சனம். சுற்றுப் பயணம் செய்த இடங்கள் பிடித்திருந்ததால் சில பயணக் கட்டுரைகள். அவ்வளவுதானே? இவை "எல்லா சப்ஜெக்ட்கள்" ஆகி விடுமா? உலகில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றனவே?

மற்றபடிக்கு, இந்த பதிவுலகம் எனது கருத்துக்களையும் அனுபவங்களையும் சக தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள மட்டுமே. என்னுடைய பதிவுகளில் ஏதேனும் மேதாவித் தனம் ஒருவேளை வெளிப் படுத்தியிருந்தால் மன்னிக்கவும். ஏதோ வேகத்தில் அல்லது ஆர்வக் கோளாறில் நடந்திருக்கலாம். வேண்டுமென்றே அவ்வாறு செய்ய வில்லை என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

அது மட்டுமல்லாமல், எனக்கு ஓரளவுக்கு பரிச்சயமான சில துறைகளில் கூட நான் பதியும் போது, தவறு நேர்ந்திடக் கூடாது என்று கவனத்துடன் எழுதி வருகிறேன். காரணம், இந்த பதிவுகளை படிப்பவர்களில் சிலர், இந்த துறைகளில் மிகுந்த அனுபவமும் நிபுணத்துவமும் கொண்டவர்கள். நான் ஏதேனும் தவறு செய்தால் உடனடியாக கண்டிக்கும் அளவுக்கு என்னிடம் உரிமையும் கூட கொண்டவர்கள். எனவே, என்னுடைய பதிவுகளைப் பற்றி எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்.

நன்றி.

பொதுஜனம் said...

i want to say onething to u. dont mistake me. your stile is always looking for educating and entertaining common people who wish to enjoy reading ur blogs. u always try to come to ground level taking pains to convey the good message .i hope u continue that. i dont want to say this. but still i wanted to say this.. that comment is not all. that's all.

MCX Gold Silver said...

//அதே சமயத்தில், இறக்குமதியாகும் பொருட்களின் விலை இன்னும் அதிகமாகி ஏற்கனவே விண்ணை முட்டிக் கொண்டிருக்கும் விலைவாசிகள் மேலும் உயர வாய்ப்பு உள்ளது//
விலைவாசி உயர்வு தொடர்கதயா சார் ?

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

//i want to say onething to u. dont mistake me.//

என்னத்த சொல்ல. ஒரே கலக்கல்தான் போங்க.

//your stile is always looking for educating and entertaining common people who wish to enjoy reading ur blogs.//

மிக்க நன்றி.

//u always try to come to ground level taking pains to convey the good message .//

உண்மைதான். பொருளாதாரம் போன்ற 'சப்ஜெக்ட்களை' தமிழில் கொண்டு வர கொஞ்சம் சிரமப் படவே வேண்டியிருக்கிறது. ஆனால், தமிழ் கூறும் நல்லுலகுக்கு ஏதோ நம்மால் ஆன சிறிய சேவையாகவே நான் இந்த பதிவுப் பூவை கருதுகிறேன்.

//i hope u continue that. i dont want to say this. but still i wanted to say this.. that comment is not all. that's all.//

இந்த பதிவுலுள்ள "சப்ஜெக்ட் களில்" எனக்கு உள்ள "எக்ஸ்போசர்" குறித்து உங்களுக்கும் இந்தப் பதிவை பின் தொடர்கிற வேறு சிலருக்கும் மட்டுமே தெரியும். இதை பின் தொடர்கிற உங்களுக்கு இருக்கிற "சப்ஜெக்ட் எக்ஸ்போசர்" எனக்கு மட்டுமே தெரியும். அதனால், என்னைப் பற்றி சரி வர புரியாமையின் அடிப்படையில், பதிவின் பொருள் பற்றி அமையாமல், தனிப் பட்ட முறையில் எழுந்த பின்னூட்டங்களை பற்றி நாம் கவலைப் பட வேண்டியதில்லை.

அப்புறம் நம்மோட பாலிசி என்ன?

சூனா பானா! போ! போ! போயிட்டே இரு!

Maximum India said...

அன்புள்ள dg

//விலைவாசி உயர்வு தொடர்கதயா சார் ?//

அப்படித்தான் தோன்றுகிறது. GDP அறிக்கை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். விவசாயத் துறையின் வீழ்ச்சி அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்னும் அதிகப் படுத்த வாய்ப்பு உள்ளது.

நன்றி.

KARTHIK said...

// வளரும் நாடுகளின் வருங்காலம் பற்றி சந்தேகங்கள் நிலவுவதால், பணம் இத்தனை பிரச்சினைகளுக்கும் மூல காரணமான அமெரிக்காவிற்கு சென்று மீண்டும் தஞ்சமடைகிறது.//

உலகத்துக்கே ஒரு பொதுவான கரன்சி உருவாகுரவரைகும் இது தொடரும்.
யுரோ போல ஆசியாவுக்கும் ஆசியான் போல ஒரு நாணியம் உறுவாகவேனும்.

எல்லாருக்கும் புரியும் படியான எழிமையான பதிவு.தொடருங்கள்

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி.

இன்றைக்கு பார்த்தீர்களா? ரூபாய் 51.92 அளவை எட்டி விட்டது. NDF சந்தையில் 53 அளவை தொட்டு விட்டதாக கூறப் படுகிறது.

//உலகத்துக்கே ஒரு பொதுவான கரன்சி உருவாகுரவரைகும் இது தொடரும்.
யுரோ போல ஆசியாவுக்கும் ஆசியான் போல ஒரு நாணியம் உறுவாகவேனும்.//

ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையின்மை காரணமாகவே யூரோ மதிப்பு சரிந்து டாலர் மதிப்பு எகிறுகிறது. ஆசியாவில் எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரிய வில்லை. இந்தியா மற்றும் சீனா நாடுகள் இந்த விஷயத்தில் கூட்டு முயற்சி எடுக்க வேண்டும்.

//எல்லாருக்கும் புரியும் படியான எழிமையான பதிவு.தொடருங்கள்//

உங்களுடைய நல்லாதரவுக்கு நன்றி கார்த்திக்.

வால்பையன் said...

இன்னைக்கு 52 ரூபாய்,
என்ன செய்யுறதுன்னே தெரியலையே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Maximum India said...

சிங்கப்பூர் NDF மார்கட்டுல ரூபாய் 53 க்கு போயிடுச்சாமே?

manjoorraja said...

அன்பு நண்பரே உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். சந்தை நிலவரம் மட்டுமல்லாமல் வேறு பல பதிவுகளும் பயனுள்ளவையாகவும் சுவையாகவும் இருக்கின்றன.

பின்னூட்டங்கள் போடவில்லை என்றாலும் தொடர்ந்து உங்கள் பதிவுகளை படித்துவருகிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி.

www.manjoorraja.blogspot.com

Maximum India said...

அன்புள்ள ராஜா

//அன்பு நண்பரே உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். சந்தை நிலவரம் மட்டுமல்லாமல் வேறு பல பதிவுகளும் பயனுள்ளவையாகவும் சுவையாகவும் இருக்கின்றன.

பின்னூட்டங்கள் போடவில்லை என்றாலும் தொடர்ந்து உங்கள் பதிவுகளை படித்துவருகிறேன்.//

தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவுக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி.

//தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி.//

இந்த பதிவில் இடப் பட்ட முதல் பின்னூட்டம் என்னை வருத்தப் படுத்தியிருக்கும் என்ற அக்கறையில் இந்த பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. அதே சமயம், நான் அந்த பின்னூட்டத்தினால் சிறு துளி அளவு கூட காயப் படவில்லை என்று இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனக்கு எதையாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உள்ளவரை, உங்களைப் போன்ற நல்லிதயம் கொண்டவர்களின் ஆதரவு இருக்கும் வரை நான் தொடர்ந்து எழுதுவேன் என்று கூறிக் கொள்கிறேன்.

அப்புறம், உங்களது பதிவுப் பூவைப் பார்த்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

நன்றி.

சதுக்க பூதம் said...

பொது நாணயங்களால் மக்களுக்கு நன்மை ஏற்பட போவதில்லை. இதன் மூலம் பணத்தை வெளியிடும் கட்டுபாடு மறைமுகமாக ஒரு சில பெரிய நிறுவனக்களுக்கு சென்று ஒட்டு மொத்த மக்களின் சேமிப்பையும் உரிஞ்சி விடுவர்.(பணம் அடிக்கும் உரிமை அரசிடம் இருந்தாலும் பொது நாணயம் எறு வந்தால் அதிகாரம் கார்போரேட்டுகளின் கைகளுக்கு மாற வாய்ப்புள்ளது).

அமெரிக்க அரசு 800 பில்லியன் டாலரை வங்கிகளிடம் கொடுத்துள்ளது. அந்த பணம் கடன் கொடுக்க வெளியானால் டாலரின் தட்டு பாடு குறைந்து ரூபாய் மதிப்பு குறைவது தடுக்க படலாம். அதற்குள் பல பொருளாதார சூறாவளி வந்தாலும் வரலாம்

Maximum India said...

அன்புள்ள சதுக்க பூதம்

கருத்துரைக்கு நன்றி

// பொது நாணயங்களால் மக்களுக்கு நன்மை ஏற்பட போவதில்லை. //

இது விவாதத்துக்குரிய கருத்து. பொது கரன்சியினால் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு என்பதே என் கருத்து. கரன்சி மாற்றம் எளிமையாகுதல், உலக அளவிலான ஒரு வலுவான கரன்சி, ஒரே கண்டத்திலுள்ள வேறு வேறு நாடுகளிடையே அதிக அளவு வியாபாரம் என்ற நன்மைகள் இருந்தாலும், சில நாடுகளின் பொருளாதாரத்தை (Commodities, Arbitrage etc) இந்த முயற்சி பாதிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நீங்கள் சொல்வது போல, இப்போதே ஏகப் பட்ட மறைமுக அதிகாரம் கொண்டுள்ள பெரிய வணிக நிறுவனங்களின் கையில் முழு அதிகாரமும் வந்து விட வாய்ப்பு உள்ளது.

//அமெரிக்க அரசு 800 பில்லியன் டாலரை வங்கிகளிடம் கொடுத்துள்ளது. அந்த பணம் கடன் கொடுக்க வெளியானால் டாலரின் தட்டு பாடு குறைந்து ரூபாய் மதிப்பு குறைவது தடுக்க படலாம். அதற்குள் பல பொருளாதார சூறாவளி வந்தாலும் வரலாம்.//

இதில் கூட நான் சற்று வேறுபடுகிறேன். இப்போதைய டாலர் உயர்வு பணத்தட்டுப்பாட்டால் வந்துள்ளது என்பதை விட "Risk Aversion" காரணமாகவே வந்துள்ளது என்பது எனது கருத்து.

நன்றி.

Blog Widget by LinkWithin