The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Monday, March 30, 2009
அன்று சூரியன் மறையாத நாடு - இன்றோ கையேந்தும் நிலையில்?
முன்னொரு காலத்தில் உலகின் தனி ஏகாதிபத்திய நாடாக விளங்கியது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம். கிழக்கே ஆஸ்திரேலியா முதல் மேற்கே அமெரிக்கா வரை அதன் ஆதிக்கம் பரவி விரவி கிடந்தது. கிட்டத் தட்ட உலக நிலப் பரப்பின் நான்கில் ஒரு பகுதியை ஆண்டதால், இந்த பேரரசு சூரியன் மறையாத நாடு என்ற புகழைப் பெற்றது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் தனது வலுவை பெருமளவு இழந்த இந்த நாடு தனது காலனிப் பகுதிகளுக்கு சுதந்திரம் அளிக்க நேரிட்டது. மேலும், உலகின் புதிய ஏகாதிபத்திய சக்தியாக உருவெடுத்த அமெரிக்காவுடன் ஒத்து போகவும் நேரிட்டது. முக்கியமாக, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், இங்கிலாந்தின் வெளியுறவுக் கொள்கைகள் அமெரிக்காவைப் பின்பற்றியே அமைந்து அந்த நாடு தனது தனித்துவத்தை முழுவதுமாக இழந்தது.
இருந்தாலும் கூட, இங்கிலாந்து பொருளாதார ரீதியாக வளம் பெற்ற நாடாகவே தொடர்ந்து வந்தது. G-8, G-20, ஐநா பாதுகாப்புச் சபை போன்றவற்றில் ஓரளவுக்கு செல்வாக்கு பெற்றும் வந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை, இங்கிலாந்தின் நாணயமான பவுண்டிற்கு டாலருக்கு நிகரான மரியாதை இருந்து வந்தது. இந்தியா உட்பட பல நாடுகள் தங்களது அந்நிய செலவாணியை பவுண்ட் கணக்கிலேயே பராமரித்து வந்தன.
ஆனால் அதற்கும் வேட்டு வைக்க வந்தது, ஐரோப்பிய யூனியனின் நாணயமாக அறிமுகம் செய்யப் பட்ட யூரோ நாணயம். இப்போது, டாலர், யூரோ ஆகிய நாணயங்களுக்கு அடுத்த படியாகவே பவுண்ட் அறியப் படுகிறது. இப்படி தட்டுத் தடுமாறி, சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசை தற்போதைய பொருளாதார பின்னடைவு பெருமளவுக்கு கலங்கச் செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் கூடிய சீக்கிரமே (காலம் தள்ள) கையேந்தும் நிலைக்கும் இங்கிலாந்து தள்ளப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மிகச் சமீபத்தில் இந்த ஆருடத்தைச் சொன்னவர், தனியாளாக நின்று இங்கிலாந்தை (பவுண்ட் நாயனத்தை) வீழ்த்தியவர் என்ற புகழ் பெற்ற ஜார்ஜ் சோரோஸ் அவர்கள். இவர் ஒரு மிகப் பெரும் சந்தை வர்த்தகர் ஆவார்.
தற்போதைய பொருளாதார பின்னடைவு, அமெரிக்காவைப் போலவே ஐரோப்பிய நாடுகள் பலவற்றையும் கடுமையாக பாதித்துள்ளது. முக்கியமாக, அமெரிக்க நிதி சந்தைகளில் முதலீடு செய்த பல ஐரோப்பிய வங்கிகளின் நிலை இப்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பல சிறிய, பெரிய வங்கிகள் மூடப் பட்டு வருகின்றன.
இந்த வங்கிகளை மீட்டெடுக்க ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் பெருமளவு பண உதவி செய்து வருகின்றன. இங்கிலாந்தில் உள்ள ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து வங்கியினை மீட்க சமீபத்தில் அந்த அரசு 64 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 3.20 லட்சம் கோடி) பணத்தை (உதவி மூலதனமாக) கொட்டியது. இந்த வங்கி வணிக சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு பெரும் இழப்பைச் சந்தித்தது என்பது குறிப்பிடத் தக்கது.
இப்படி அரசு பணத்தை தனியார் கம்பெனிகளுக்கு வாரி இறைத்ததன் மூலம், அரசு இப்போது ஒரு மிகப் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. உள்நாட்டு மொத்த வளர்ச்சி பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து, பொருளாதார மீட்டெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட அந்த அரசுக்கு ஏராளமான நிதி தேவைப் படுகிறது. அதே சமயம் தேவைப் படும் பணத்தை சந்தைகளில் திரட்ட முடியாத நிலையில் அந்த அரசு உள்ளது. காரணம், பிரிட்டிஷ் அரசின் "திருப்பித் தரும் திறன்" குறித்து சந்தைகளில் ஒருவித அவநம்பிக்கை உருவாகி உள்ளது. விளைவு, பல வருடங்களுக்குப் பின்னர், பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட அரசு கடன் பத்திரங்கள் வாங்க ஆளில்லாமல் போன அவல நிலை இப்போது நேரிட்டுள்ளது.
இதனால் இந்தியா ஒரு காலத்தில் தங்கத்தைக் அடகு வைத்து சர்வதேச நிதியத்திடம் கடனுக்கு கையேந்தி நின்றது (1990) போல இங்கிலாந்தும் இப்போது சர்வதேச நிதியத்திடம் (IMF)கையேந்த வேண்டிய நிலைக்கு வெகு அருகே தள்ளப் பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது லண்டனில் நடைபெறவுள்ள G-20 ,மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், மூழ்கி வரும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை காப்பாற்ற ஏதேனும் உறுதியான முடிவுகள் எடுக்கப் படாவிட்டால், இங்கிலாந்து மிகப் பெரிய அளவில் பாதிக்கப் படும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆக மொத்தத்தில், ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டி ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்ற நம்மூர் பழமொழிக்கு ஏற்ற வகையில், பணக்கார நாடுகளாக கருதப் பட்ட நாடுகள் இப்போது தட்டேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளன.
நன்றி.
Labels:
செய்தியும் கோணமும்,
பொருளாதாரம்
Sunday, March 29, 2009
வெற்றி தொடருமா?
சென்ற வாரம் பலரும் எதிர்பாரா வண்ணம் சந்தைகள் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டன. உலக சந்தைகளின் தொடர்ந்த உயர்ச்சி நமது சந்தைகளுக்கும் நல்ல ஊக்கத்தைக் கொடுக்க சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கும் மேலே உயர்ந்து மிக முக்கிய இலக்கான 10,௦௦௦000 புள்ளிகளையும் எளிதில் கடந்தது. அதே போல, நிபிட்டி குறியீடு சுமார் 300 புள்ளிகள் உயர்ந்து 3100 புள்ளிகளுக்கும் மேலே முடிவடைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவு பங்குகளை வாங்கியதும், விற்று பின் வாங்கும் நிலையை எடுத்தவர்கள் அவசர அவசரமாக அந்த நிலையை சமன் செய்ய முனைந்ததும் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்கள்.
நாம் ஏற்கனவே சென்ற பதிவில் விவாதித்த படி, அமெரிக்க பணம் உலகெங்கும் பாயும் என்ற நம்பிக்கையும் சந்தைகளின் புதிய நம்பிக்கைக்கு முக்கிய காரணம். இதன் விளைவாக இந்திய ரூபாய் உட்பட முக்கிய உலக நாணயங்களுக்கு எதிரான டாலர் மதிப்பு சென்ற வாரம் குறைந்தது. உலகெங்கும் உள்ள பொருட்கள் மற்றும் பங்கு சந்தைகள் பெருமளவுக்கு உயர்ந்தன.
பெரிய அமெரிக்க வங்கிகள் வீழ்ச்சியில் இருந்து தப்பிக்கும் என்ற புதிய நம்பிக்கையிலும், இந்திய வங்கிகளின் செயல்பாடு இந்த வருடம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையாலும், இந்திய வங்கித் துறை பங்குகள் பெருமளவு உயர்ந்தன. உலோகங்களின் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் உலோகத் துறை பங்குகள் நன்கு முன்னேறின.
நானோ கார் வரவு வாகனத் துறை பங்குகள் உயர உதவின. நிபிட்டி குறியீடு கணக்கிடும் முறை மாற்றப் பட்டது ரிலையன்ஸ் பங்குகளுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் ரிலையன்ஸ் பங்குகள் வெகுவாக உயர்ந்தன. இதர எரிபொருள் பங்குகளும் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் உயர்ந்தன.
பணவீக்கம் மேலும் சரிந்தது வட்டி வீதங்கள் குறைக்கப் படும் என்ற புதிய நம்பிக்கையை உருவாக்கியது.
பல பன்னாட்டு பங்கு சந்தை மேதைகள், தற்போதைய சந்தை முன்னேற்றம் இன்னும் பல காலம் நீடிக்கும் என கருத்துத் தெரிவித்துள்ளனர். நிபிட்டி குறியீடு 3600 வரையிலும் சென்செக்ஸ் குறியீடு 12000 வரையிலும் உயரக் கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
திரும்ப வரும் வெளிநாட்டு முதலீடுகள், உள்நாட்டு நிறுவனங்களின் தொடர்ந்த ஆர்வம், பெரிய அளவில் விலை சரிந்துள்ள பங்குகள் போன்ற விஷயங்கள், மேற்கூறிய கருத்துக்கு சாதகமாக இருந்தாலும், கடந்த மூன்று வாரங்களில் பெருமளவு முன்னேறியுள்ள சந்தையில் சிறிதளவாவது 'லாப விற்பனை' நடைபெறும் என்றே தோன்றுகிறது. ரூபாய் 50 அளவை இன்னும் முறியடிக்காதது வெளிநாட்டு பணவரவு குறித்த சில சந்தேகங்களை உருவாக்குகிறது.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள G-20 மாநாடு, ஐரோப்பிய வங்கியின் வட்டி வீத முடிவு மற்றும் அமெரிக்க வாகனத் துறைக்கான அரசு உதவி போன்றவை சந்தையின் போக்கை தீர்மானிக்கும். மேலும் அடுத்த வாரம் வெளியிடப் படவுள்ள அமெரிக்காவின் பொருளாதார செய்திகள் சந்தையின் கவனத்தை ஈர்க்கும்.
இந்திய சந்தைகளின் பெரிய வர்த்தகர்கள் பெருமளவு சிறிய மற்றும் நடுத்தர பங்குகளில் வர்த்தகம் செய்து வருகிறார்கள். இது சந்தையின் மீது காணப் படும் நம்பிக்கையைப் பிரதி பலிக்கின்றது என்றாலும், "அக்ருதி" போன்ற பங்குகளின் ஏற்றத் தாழ்வு நிலைகளில் இருந்து தம்மை தாமே பாதுகாத்துக் கொள்வது சிறிய முதலீட்டாளர்களின் பொறுப்பு ஆகும்.
நல்ல டிவிடென்ட் தரும் மற்றும் சிறந்த நிலையில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் மெல்ல மெல்ல வாங்கலாம். வர்த்தகர்களின் அடுத்த இலக்காக, நாம் ஏற்கனவே கூறியிருந்த படி, 3200 (நிபிட்டி) புள்ளிகள் இருக்கும். அதுவரை "வாங்கும் நிலையை" வர்த்தகர்கள் எடுக்கலாம். அந்த நிலையை அடைந்த பிறகு, அன்றைய சூழலில் அடிப்படையில் ஒரு புதிய கோணத்தில் சந்தை அணுகப் பட வேண்டும்.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
நன்றி.
Labels:
பங்கு சந்தை
Saturday, March 28, 2009
நாட்டுக்குத் தேவை அரசியல் தலைவரா? செயல் தலைவரா?
அறுதிப் பெரும்பான்மை இல்லாத ஒரு அரசுக்கு கூட்டணி கட்சிகளால் ஏற்படும் தொல்லைகள் ஏராளம். இந்த தொல்லைகள் அரசை தனது இயல்பான போக்கில் செயல்பட விடாமல் தடுக்கின்றன. முந்தைய கூட்டணி அரசாங்கள் சந்தித்த இது போன்ற தொந்தரவுகளை தவிர்க்க விரும்பிய இப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒரு புதிய பரிசோதனை முயற்சியில் இறங்கியது.
தலைவலி தரும் அரசியல் பிரச்சினைகளை கவனித்துக் கொள்ள ஒரு தலைவர். அரசாங்கத்தை நடத்திச் செல்ல ஓர் பிரதமர் என்று ஒரு வித இரட்டை ஆட்சி முறை உருவாக்கப் பட்டது. (சோனியா காந்தி வெளிநாட்டினர் என்றும் அதனால் அவர் பிரதமர் பதவி ஏற்கக் கூடாது என்று ஒரு தரப்பினர் வாதிட்டதும் இத்தகைய இரட்டை ஆட்சி முறைக்கு ஒரு காரணமாக இருந்தது). வணிக நிறுவனங்களில் இருப்பது போல பிரதமருக்கும் அவரது அமைச்சரவைக்கும் சில இலக்குகள் நிர்ணயிக்கப் பட்டன. (அதே சமயம், வணிக நிறுவனங்களின் செயல் தலைவருக்கு இருப்பது போல தனது சகாக்களை தேர்ந்தெடுக்கும் முழுமையான உரிமை பிரதமருக்கு வழங்கப் பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது). பொதுவாகவே பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்றி வந்த இந்தியாவிற்கு இது மிகவும் புதிய ஒன்று.
இந்த பரிசோதனை வெற்றி பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன். குறிப்பாக, மன்மோகன் சிங் அவர்களின் பொருளாதார அறிவு மற்றும் 1991-96 இல் ஒரு நிதி அமைச்சராக அவரது செயல்பாடு ஆகியவை அவர் மீது ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
முதல் நான்கு வருடங்கள் நாட்டின் பொருளாதாரம் மிகச் சிறப்பாகவே வளர்ச்சி பெற்றது. ஆனால், இந்த வளர்ச்சிக்கு உண்மையில் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகள்தான் மட்டும்தான் காரணமா என்ற கேள்விக்கு இல்லை என்றுதான் கூற முடியும். உலக சந்தைகளில் குறிப்பாக அமெரிக்க நிதி சந்தைகளில் நிலவிய முன்னேற்றங்கள் மற்றும் நிதி சந்தைகளின் தாக்கத்தினால் செயற்கையாக ஏற்பட்ட அதிக அளவு தேவைகள் பல நாடுகளின் பொருளாதாரங்களில் பாதிப்பினை ஏற்படுத்தின. அந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதுதான் ஒரு (கசப்பான) உண்மையாக இருக்க முடியும். அமெரிக்காவின் நிதி சந்தைகள் சரிந்த உடனேயே இந்திய பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியைக் கண்டது (அலுவாலியா உட்பட பல பொருளாதார மேதைகளின் கணிப்பையும் பொய்யாக்கி) இந்த அனுமானத்தினை உறுதி செய்கின்றன. மேலும், கடந்த நான்கு வருட பொருளாதார முன்னேற்றத்தின் பெரும் பங்கு வணிக நிறுவனங்களையும் அதன் தலைவர்களையுமே போய் சேர்ந்தது என்பது வேதனைக்குரிய உண்மையாகும்.
பொருளாதாரத்தில் மட்டுமே ஓரளவுக்கு வெற்றி பெற்ற இந்த அரசாங்கத்தின் இதர செயல்பாடுகள் பெருமளவு திருப்தி அளிக்கும் படி இல்லை. குறிப்பாக, உலக அரங்கில் மற்றும் இந்திய மக்கள் மத்தியில் இந்தியாவின் உண்மையான தலைவர் யார் என்று கடைசி வரை தெளிவாக்கப் படவே இல்லை. விளைவு, பல முக்கிய முடிவுகள் காலதாமதத்திற்கு உள்ளாயின அல்லது கிடப்பில் போடப் பட்டன. இந்த (வேகமான) செயலற்ற நிலை, அரசின் முக்கிய கடமைகளான தேசப் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. பல சந்தர்ப்பங்களில் பிரதமரின் கருத்துக்கள் முறையாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கப் படவில்லை. அப்படி வெளிப்பட்ட கருத்துக்களில் பல அவரது கட்சியினராலேயே அதிகம் மதிக்கப் படவில்லை. சொந்த கட்சியே இப்படி இருக்கும் போது கூட்டணி கட்சியினரைப் பற்றி சொல்லவே வேண்டாம். பல சந்தர்ப்பங்களில் அரசின் முழு கட்டுப்பாடு பிரதமரிடம்தான் இருக்கிறதா என்ற சந்தேகம் கூட எழுந்தது. அரசாங்கத்திற்கான பல கோரிக்கைகள் சோனியா காந்தி அவர்களிடமே முன் வைக்கப் பட்டன.
முந்தைய கூட்டணி ஆட்சிகளில், மாற்று கட்சி அமைச்சரை தேர்ந்தெடுக்கும் உண்மை அதிகாரம் மட்டுமே பிரதமருக்கு இருந்ததில்லை. இந்த ஆட்சியில், தனது சொந்த கட்சியை சேர்ந்த அமைச்சரை தேர்ந்தெடுக்கக் கூட உண்மையான அதிகாரம் எதுவும் இல்லை என்பதாகவே தோன்றியது.
இந்தியா பல மொழி, இனம், கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஒரு நாடு. அண்டை நாட்டின் அச்சுறுத்தல்கள், உள்நாட்டு குழப்பங்கள், பொருளாதார பின்னடைவு, தீவிரவாத அச்சுறுத்தல்கள் போன்ற கடினமான சவால்களை இந்தியா எதிர்கொண்டிருக்கும் தருணம் இது. பொருளாதார பின்னடைவு என்பது இந்த சவால்களில் ஒன்று மட்டுமே தவிர ஒன்றே ஒன்று அல்ல.
இந்தியாவின் இன்றைய தேவை, பெரும்பான்மையான மக்களால் தலைவராக ஏற்றுக் கொள்ளப் படக் கூடிய ஒருவரே இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். அவர், தனது கட்சியின் முழு மதிப்பையும் மரியாதையும் பெற்றிருக்க வேண்டும். பிரிட்டிஷ் பாராளுமன்ற நடைமுறையை பின்பற்றி வரும் நாம் பிரதமர் விஷயத்திலும் அவர்களின் நடைமுறையையே பின்பற்ற வேண்டும். அதாவது பிரதமர் என்பவர் நாட்டின் முதல் தலைவர். அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கும் அவரே முதல் தலைவர்.
எனவே, அரசியல் (மக்கள்) தலைவரே பிரதமர் பதவிக்கு வர வேண்டும். மன்மோகன் சிங், அலுவாலியா போன்ற பொருளாதார மேதைகள் ஆட்சிக்கு துணை மட்டும் நிற்கலாம் என்பதே என் கருத்து.
நன்றி.
Labels:
அரசியல்
Friday, March 27, 2009
ரசிக்க வைத்த நானோ 'கார்'ட்டூன்கள்
"இப்போது ஒரு புதிய கோரிக்கை எழுந்துள்ளது. ஏழைகளுக்கு கார் பார்கிங் செய்ய தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று"
Labels:
சமூகம்
Thursday, March 26, 2009
மன்மோகன் சிங் ~ லால் கிருஷ்ண அத்வானி - ஒரு ஒப்பீடு
நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஆகும் கனவோடு ஏராளமானோர் போட்டியிட்டாலும், பிரதமர் ஆக அதிக வாய்ப்பு உள்ள இருவர் (இரண்டு பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள்) மன்மோகன் சிங் மற்றும் எல் கே அத்வானி ஆகியோர் ஆவர். இவர்கள் இருவரின் பயோடேட்டாக்களையும் இங்கு சற்று ஒப்பிடுவோம்.
பிறப்பிடம்
பிறப்பிலேயே இவர்கள் இருவருக்கும் ஒரு பெரிய ஒற்றுமை உள்ளது. இருவருமே இந்நாள் பாகிஸ்தான் பகுதியில் பிறந்தவர்கள். மன்மோகன் சிங் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் பிறந்தவர். எல்.கே.அத்வானியோ பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் பிறந்தவர்.
வயது
இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமில்லை. அத்வானி பிறந்தது 1927 இல். வயது இப்போது 81. மன்மோகன் சிங் பிறந்தது 1932 இல். வயது இப்போது 76. இருவரில் மன்மோகன் சிங்தான் இளையவர் என்றாலும், பயிற்சிக் கூடம் சென்று புஜ பலம் எல்லாம் காட்டி அதிக ஆரோக்கியமாக பார்வைக்கு தென்படுபவர் அத்வானிதான்.
இனம்
இருவருமே பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்பது கூட ஆச்சரியப் படக் கூடிய ஒரு ஒற்றுமை. அத்வானி 'சிந்தி' இனத்தைச் சேர்ந்தவர். மன்மோகன் சிங் 'சீக்கியர்' இனத்தைச் சேர்ந்தவர்.
படிப்பு தகுதிகள்
படிப்பு விஷயத்தில், மன்மோகன் சிங் அனைத்து இந்திய அரசியல் தலைவர்களியே முதலிடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன். அவருடைய பட்டங்கள் அவர் பெயரை விட ரொம்பவே நீளமானவை. பி ஏவில் தொடங்கி புகழ் பெற்ற வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பல டாக்டர் பட்டங்கள் பெற்று இருக்கிறார். எல்கே அத்வானி படித்தது பாம்பே பல்கலைகழகத்தில் சட்டப் படிப்பு
ஆரம்ப கால தொழில் அனுபவங்கள்
மன்மோகன் சிங் - இவரது தொழில் அனுபவம் மிகவும் நீண்டது. ஐக்கிய நாடுகள் சபை, டெல்லி பல்கலைக் கழகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம், இந்திய மத்திய வங்கியின் தலைவர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர் என பல்வேறு பதவிகளில் இடம் பிடித்திருக்கிறார்.
எல்கே அத்வானி - ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினர், வழக்கறிஞர்.
அரசியல் பிரவேசம் மற்றும் அடைந்த பதவிகள்
மன்மோகன் சிங்கை அரசியலுக்குள் கொண்டுவந்தது முன்னாள் பிரதமர், நரசிம்ம ராவ் அவர்கள். மக்களவை தேர்தலில் போட்டியிடாமல், ராஜ்ய சபா உறுப்பினர் என்ற முறையிலேயே நிதி அமைச்சராக பதவி ஏற்றார். 2004 பொதுத் தேர்தலுக்குப் பின்னர், பலரும் எதிர்பாரா வண்ணம் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றார்.
தனது இளமை காலத்தில் இருந்தே அரசியலில் உள்ள அத்வானி அவர்கள் மொராஜி தேசாய் அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்பு மந்திரியாக இருந்தார். 1996 தேர்தலுக்குப் பின்னர் 13 நாட்கள் மந்திரி சபையில் உள்நாட்டு துறை அமைச்சராக இருந்தார். 1998 க்கு பின்னர் 2004 வரை உள்நாட்டு அமைச்சராக நீடித்தார். இதில் இரண்டு வருடங்கள் துணை பிரதமர் பொறுப்பினையும் வகித்தார்.
அரசியல் அனுபவம் அத்வானி அவர்களுக்கு மிகவும் அதிகம்.
சாதனைகள் மற்றும் வேதனைகள்
பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என்றே அறியப் படுபவர் மன்மோகன் சிங். இந்திய சரித்திரத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிக பொருளாதார வளர்ச்சி இந்தியா கண்டதற்கும் உலகின் இரண்டாவது வேகமாக வளரும் நாடு இந்தியா என்ற பெருமை பெற்றதற்கும் இவர் ஒரு முக்கிய காரணம். அதே சமயம் இவருக்கு மேலை நாட்டு தாக்கம் அதிகம் இருப்பதாகவும், அமெரிக்காவுடன் குறிப்பாக அதன் முன்னாள் அதிபர் புஷ் உடன் அளவுக்கு அதிகமாகவே நெருக்கம் காட்டியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுக்கள் உண்டு. அணு ஒப்பந்தம் ஒரு சாதனைதான் என்றாலும், அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற நடந்ததாக சொல்லப் படும் பண பேரங்கள் இவர் மதிப்பை குறைத்தன. உறுதியில்லாத தலைமைப் பண்பு மற்றும் சோனியா காந்தியின் சொற்படியே நடந்து கொண்ட தன்மை ஆகியவை இவருக்கு பாதகமான விஷயங்களாக கருதப் படுகின்றன. இந்தியாவில் நடைபெற்ற கணக்கில்லாத குண்டு வெடிப்பு மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள், பங்கு சந்தை மற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல்கள் ஆகியவை இவர் மீது படிந்துள்ள களங்கங்கள் ஆகும்.
சர்தார் வல்லபாய் படேல் போல உறுதியான ஒரு மனிதராக அறியப் படுபவர் எல்.கே அத்வானி. பல்வேறு யாத்திரைகள் நடத்தி (மக்களுக்கு ஓரளவுக்கு சிரமம் கொடுத்தாலும்) கட்சியை ஆட்சிப் பொறுப்பிற்கு கொண்டு வந்த பெருமை இவருக்குண்டு. வாஜ்பாய் அரசில் மிக முக்கிய பங்கினை இவர் வகித்து வந்தார். கூட்டணி பிரச்சினைகளால் தள்ளாடும் பாரதிய ஜனதா கட்சியின் இன்றைய நம்பிக்கை நட்சத்திரம் இவரே. பிஜேபி கட்சி ஓட்டுக்கு இவரது பிரச்சாரத்தையே இன்னமும் அதிகம் நம்பியுள்ளது. அதே சமயம் வலுவான ஆர்.எஸ்.எஸ். பின்னணி இருந்தாலும், பதவிக்கு வந்த பின்னர் கொள்கைகளில் இவர் கொஞ்சம் தடுமாறி விட்டார் என்றே சொல்லே வேண்டும். பாகிஸ்தானில் ஜின்னாவைப் பற்றி புகழ்ந்து பேசியது ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்களில் இவருக்கு கெட்ட பெயரை உண்டாக்கியது. இவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தாக்குதல், விமான கடத்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள் விடுதலை, குஜராத் படுகொலை ஆகியவை இவர் மீது படிந்த களங்கங்கள் ஆகும். மன்மோகன் சிங் போல அல்லாது தனித்து முடிவெடுக்கும் தன்மை மற்றும் கட்சி மீது உள்ள (ஓரளவுக்காவது) அதிகாரம் போன்றவை இவரின் பலங்கள் ஆகும்.
இப்போது இந்த பயோடேட்டாக்கள் மக்கள் முன்னர் சமர்ப்பிக்கப் படுகின்றன. யாருக்கு (பிரதமர்) வேலை கொடுக்க வேண்டியது என்று தீர்மானிப்பது இந்த நாட்டின் உரிமையாளர்களான மக்கள் பொறுப்பு.
நன்றி.
Labels:
அரசியல்
Wednesday, March 25, 2009
காங்கிரஸ் அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி - எவ்வளவு மார்க் போடலாம்?
இது தேர்வுகளின் காலம். பள்ளிகள்/ கல்லூரிகள் இறுதி தேர்வு நடத்தி மாணவர்களின் செயல்பாடு மற்றும் தேர்ச்சி குறித்து முடிவெடுக்கும் நேரம். மத்தியில் ஐந்து ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கும் கூட ஒரு வகையில் இது ஒரு பரீட்சை நேரம்தான். நம்முடைய பார்வையில் காங்கிரஸ் அரசின் கடந்த ஐந்து ஆண்டு கால செயல்பாடு எப்படி என்று பார்ப்போமா?
மாணவர்களுக்கு எப்படி தமிழ், ஆங்கிலம், கணக்கு அறிவியல் என வேறு வேறு பாடத் திட்டங்களில் தேர்வுகள் நடக்கிறதோ, அது போல, இந்த ஆட்சியின் மதிப்பீட்டையும், பொருளாதாரம், தலைமைப் பண்பு, தேசப் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், சமூக நலத் திட்டங்கள் என வேறு வேறு பகுதிகளாக மதிப்பீடு செய்யலாம்.
பொருளாதாரம்:
மன்மோகன் சிங், ப.சிதம்பரம் மற்றும் அலுவாலியா ஆகிய மூன்று பொருளாதார மேதைகளின் வழிநடத்துதலில் கடந்த ஐந்து ஆண்டுகளில், முதல் நான்கு ஆண்டுகள் இந்தியப் பொருளாதாரம் அசுர வளர்ச்சி அடைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த அசாதாரண வளர்ச்சிக்கு உலக (முக்கியமாக அமெரிக்க) பொருளாதார வளர்ச்சியும் ஒரு முக்கிய காரணம் என்றாலும், இந்த மூவர் கூட்டணியின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. அதே சமயம், கடைசி ஆண்டு, காங்கிரஸ் கட்சியே மறக்க விரும்புகிற ஆண்டாகவே இருக்கும். பொருளாதார பின்னடைவு, பங்கு சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி, தொழிற் துறை சரிவு, வேலை இழப்புக்கள், வரலாறு காணாத விலைவாசி ஏற்றம் போன்றவை முதல் நான்கு ஆண்டு கால பொருளாதார சாதனைகளை மூடி மறைக்கும் கிரகணங்களாகவே இருந்தன என்றால் மிகையாகாது. இவற்றுக்கும் அமெரிக்க நிதி சந்தைகளின் வீழ்ச்சிதான் முக்கிய காரணம் என்றாலும், "பொருளாதார கண்காணிப்பு" விஷயத்தில் இந்த மிகப் பெரிய மேதைகள் கோட்டை விட்டது வருத்தத்துக்குரிய ஒரு விஷயம்தான். மேலும், "அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி" என்பது இவர்களின் குறைந்த பட்சத் திட்டத்தில் இருந்தாலும், அது எந்த அளவு நிறைவேறியது என்பது ஒரு கேள்விக் குறியே. உலக பணக்காரர்களின் பட்டியலில் இந்தியர் பலர் இடம்பெற்றது பெருமைக்குரிய ஒன்றுதான் என்றாலும், விவசாயிகளின் தற்கொலையை தடுக்க முடியாமல் போனது வெட்கப் பட வேண்டிய ஒன்றுதான்.
தலைமைப் பண்பு:
இந்த அரசின் உண்மையான தலைவர் யார் என்றும் உண்மையில் தலைவர் என்று ஒருவர் இருக்கிறாரா என்று கேள்வி எழும் வண்ணம் இந்த அரசின் செயல்பாடு பல சமயங்களில் அமைந்திருந்தது. இதனால் முக்கிய தருணங்களில் அரசின் முடிவு என்ன என்பதே மக்களுக்கு தெரியாமல் இருந்தது. கூட்டணி கட்சிகளின் மந்திரிகள் மட்டுமின்றி சொந்த கட்சியின் அமைச்சர்களே பிரதமரின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தார்களா என்பது கூட கேள்விக்குறியே. அமெரிக்க அணு ஒப்பந்த விவகாரத்தில் உறுதியாக இருந்தது பாராட்டுக்குரிய ஒன்றுதான் என்றாலும், சிபு சோரேன் விவகாரம், மும்பை தாக்குதலின் போது கமாண்டோ தாக்குதலில் தாமதமானது, இட ஒதுக்கீடு விவகாரம், ராஜ் தாக்கரே விவகாரம் போன்றவற்றில் அரசியல் தலைமையின் பலவீனமே அதிகம் வெளிப் பட்டது.
வெளிநாட்டு உறவு:
பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுடனான உறவு இந்த ஆட்சியில் பெரும்பாலும் சுமுகமாகவே இருந்தது. மும்பை தாக்குதலுக்குப் பின்னர், பாகிஸ்தானின் மீது இந்தியா அளித்த ராஜரீக நிர்பந்தங்கள் பாராட்டும்படியே இருந்தன. அதே சமயம், இந்த அரசு, அமெரிக்காவிற்கு குறிப்பாக புஷ் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது போல காட்டிக் கொண்டது இந்தியாவின் தனித் தன்மையை பாதித்தது. ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து வாக்களித்ததும் இந்தியாவின் நம்பகத் தன்மையை சர்வதேச அரங்கில் குறைத்து . ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய அரசின் செயல்பாடு அவ்வளவு திருப்தி கரமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். தெற்கு ஆசிய பிராந்திய வல்லரசாக காட்டிக் கொள்ள விரும்பும் இந்தியாவால், தனது அண்டைநாட்டில் நடைபெறும் ஒரு மிகப் பெரிய அளவிலான உள்நாட்டுப் போரில் உருப்படியாக ஏதும் செய்ய முடியாமல் போனது வேதனைப் பட கூடிய விஷயம்தான்.
தேசப்பாதுகாப்பு:
மத்திய அரசு இந்த விஷயத்தில் தனது பொறுப்பில் இருந்து முழுக்க முழுக்க தவறி விட்டது என்றே சொல்ல வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒவ்வொரு வருடமும் எத்தனை குண்டு வெடிப்புக்கள்? திரும்பி பார்க்கவே வேதனையாக இருக்கிறது. இந்தியாவின் மாநகர மக்கள் வெளியே செல்லவே பயப்படும் நிலை உருவானது. நவம்பர் மாத மும்பை தாக்குதல் வரை அரசு இந்த விஷயத்தில் பெரிய அளவில் தீவிரம் காட்டியதாகவே தெரிய வில்லை. முன்னாள் உள்துறை அமைச்சர், தாக்குதல் நடந்த ஒவ்வொரு முறையும் ஒரு புதிய ஆடை அணிந்து கொண்டு பேட்டி அளித்ததை விட வேறெந்த பெரிய நடவடிக்கையும் எடுத்ததாக தெரிய வில்லை. இந்த விவகாரம் அரசுக்கு பல மாநகரங்களில் எதிராகவே முடியும் என எதிர்பார்க்கப் படுகிறது.
சமூக நலத் திட்டங்கள்:
குறைந்த பட்ச பொதுத் திட்டத்தில் (Common Minimum Programme) உள்ள பெரும்பாலான சமூக நலத் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு விட்டதாக சொல்லப் படுகின்றது. சுய உதவி குழுக்கள், அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை போன்ற சமூக நல திட்டங்கள் ஓரளவுக்கு சிறப்பாகவே செயல் படுத்தப் பட்டதாக தெரிகிறது. வங்கிகளின் மூலமாக விவசாயக் கடன்கள் பெருமளவுக்கு வழங்கியிருப்பது, விவசாயிகளை கந்து வட்டிகாரர்களிடம் இருந்து ஓரளவுக்கு காப்பாற்றும். அதிகரித்திருப்பது, தேர்தலை முன்னிட்டுதான் என்றாலும், விவசாய கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு போன்றவற்றை ஒரு வகையில் மக்கள் நலத் திட்டங்களாகவே கொள்ளலாம். உயர்த்தப் படாத ரயில் கட்டணம் மற்றும் அதிகம் உயர்த்தப் படாத பெட்ரோல் விலைகளும் எளிய மற்றும் மத்திய தர மக்களை மகிழ்ச்சியுறச் செய்தன.
ஊழல்:
நாடாளுமன்ற நம்பிக்கை ஓட்டெடுப்பு, பங்கு சந்தை செயல்பாடு மற்றும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தவிர இந்த ஆட்சியின் மீது எதிர் கட்சிகளே அதிகம் ஊழல் குற்றச்சாட்டுக்களை வீச வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கு பிரதமரின் அப்பழுக்கற்ற 'இமேஜ்' ஒரு காரணமென்றாலும், இன்றைய தேதியில் மக்களின் அன்றாட வாழ்வோடு ஊழல் கலந்து விட்ட நிலையில், அரசு "ஊழல்" என்பதையே மக்கள் பெரிய அளவில் பொருட்படுத்தாத காரணத்தினாலேயே, "ஊழல் குற்றச்சாட்டுக்கள்" தேர்தல் பிரச்சாரத்தில் பெரிய அளவில் இடம் பெற வில்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது.
ஆக மொத்தத்தில், சாதனைகளும் வேதனைகளும் சரிவர கலந்தே காணப் படுகின்ற இந்த அரசுக்கு எவ்வளவு மதிப்பெண் (தொகுதிகள்) போட வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம், பொறுப்பு, கடமை, உரிமை அனைத்தும் நம் நாட்டு மக்களனைவருக்கும் பொதுவானது என்பதால், தீர்ப்பு வழங்கும் பொறுப்பை மக்களிடமே விட்டு விடுவோம். அவர்கள் எத்தனை மார்க் போடப் போகிறார்கள் என்பதுதான் இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து விடப் போகிறதே?
நன்றி.
Labels:
அரசியல்
Monday, March 23, 2009
சிறியது ஆனால் பெரியது
இன்றைய தேதியில், நோட்டுக்காக நாட்டை ரத்தம் வரும் வரை சுரண்டத் தயங்காத பல இந்திய தொழில் அதிபர்களுக்கு மத்தியில், தன்னை வசதியாக வாழ வைத்த நாட்டுக்கு பதிலுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்பும் வெகு சில தொழில் அதிபர்களில் ரத்தன் டாட்டாவும் ஒருவர். இவர் மட்டுமல்ல, இவரது குழுமமும் நாட்டுப் பற்றுக்கு பெயர் போனது. தொழிற் துறையைப் பொருத்த வரை இந்தியாவின் பல 'முதல்'களில் (விமான சேவை, நட்சத்திர ஹோட்டல், உருக்கு தயாரிப்பு) டாட்டா குழுமத்தின் பெயரே பொறிக்கப் பட்டிருக்கும்.
ரத்தன் டாட்டா அவர்கள் ஒரு முறை காரில் செல்லும் போது, மழையில் நனைந்து கொண்டு தடுமாறியபடி ஸ்கூட்டரில் செல்லும் ஒரு இந்திய குடும்பத்தை சாலையில் பார்த்தார், இது அவர் மனதை வேதனைப் படுத்த, இந்திய நடுத்தர வகுப்பு மக்கள் பாதுகாப்பாக ஒரு காரில் பயணம் செய்வதற்கு ஏதுவாக, அவர்களின் வாங்கும் சகதிக்குள் அடங்கும் படி ஒரு கார் தயாரிக்க வேண்டுமென தீர்மானித்தார். அது மட்டுமல்லால், குறைந்த விலையில் கார் தயாரித்து தருவதாக இந்திய மக்களுக்கு ஒரு வாக்குறுதியும் அளித்தார்.
தேர்தல் பிரசாரத்தில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு பின் ஆட்சிக்கு வந்ததும், அவற்றையெல்லாம் மறந்து போகின்ற அரசியல்வாதிகளை பார்த்துப் பழகிப் போனது நம் நாடு. இந்த நாட்டில், எந்த ஒரு நிர்பந்தமும் இல்லாத நிலையிலேயே கூட, வாக்குறுதி அளித்த பின்னர் , கிட்டத்தட்ட ஆறு வருடங்களில் விலைவாசிகள் விண்ணை முட்ட முட்ட உயர்ந்த பின்னரும் கூட, "வாக்குறுதி என்றால் வாக்குறுதிதான்" என்று ஏறத்தாழ அதே விலையில் கொடுக்க முன் வந்திருப்பது, முற்றிலும் வணிகமயமாகி விட்ட இன்றைய காலகட்டத்தில் சாதாரணமான விஷயமல்ல.
அதுவும், கடந்த ஐந்து ஆண்டுகளில், கார் தயாரிக்க தேவைப் படும் மூலப் பொருட்களின் (உலோகங்கள்) விலை மிக அதிக அளவில் உயர்ந்துள்ள போதும், சம்பளம் உட்பட மற்ற வகையான செலவினங்கள் மேலேறிய போதும், இந்த விலை உயர்வுகள், நானோவின் விற்பனை விலையை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொண்டது பாராட்டப் பட வேண்டிய ஒன்று. நானோவுக்கு தடையாக வந்தது அதிகரித்து வரும் விலைவாசிகள் மட்டுமல்ல, சிங்குரில் நேரிட்ட பல்வேறு அரசியல் பிரச்சினைகள் வேறு. அனைத்தையும் தாண்டி, இன்று வெற்றிகரமாக நானோ சந்தைக்கு கொண்டு வரப் பட்டிருக்கிறது.
நானோ காரின் தொழிற் நுட்ப அளவீடுகள் (Specifications) அனைத்தும் (பேப்பர் அளவில்) மிகச் சிறப்பாகவே உள்ளன. ஐரோப்பிய தரத்திற்கு நிகரான புகை வெளியீட்டு தரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அளவிலும் கூட மாருதி 800 ஐ விட (உள்ளளவு) அதிகமாகவே உள்ளது. ஒரு லட்சத்திற்கு அடக்கமாக ஏதோ ஒரு டப்பா போன்ற கார் வெளியிடப் படும் என்று நம்பிய பலருக்கு, கவர்ச்சிகரமான நானோ தோற்றம் வியப்பையே அளித்திருக்கும். ஆக மொத்தத்தில், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலேயே இந்த கார் உள்ளது. தொழிற்சாலை சோதனையில் சிறப்பாக இந்த கார் செயல்பட்டிருந்தாலும், நமது இந்திய சாலைகளில் சிறப்பான நடைமுறை செயல்பாடு மட்டுமே இன்னும் நிரூபிக்கப் பட வேண்டியுள்ளது.
இந்தியாவின் முதல் சொந்த தயாரிப்பான "டாட்டா இண்டிக்கா" அடைந்துள்ள பெரிய வெற்றி இந்த காரிலும் எதிரொலிக்கும் என்று நம்புவோம். இந்த கார் வெற்றி அடையும் பட்சத்தில், இந்திய வாகனத்துறைக்கே உலக அளவில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
கார் தயாரிப்பு தொழிற்நுட்பம் இத்தனை காலம் வெளிநாட்டினருக்கே சொந்தமாக கருதப் பட்டு வந்த நிலையில், உலகிற்கே இந்த புதிய வகை (குறைந்த விலை) காரை அறிமுகப் படுத்தி இந்தியாவை தலை நிமிர செய்த நானோ காரின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் சொல்லும் அதே வேளையில் இந்த பெருமையை நமெக்கெல்லாம் தந்த ரத்தன் டாட்டா அவர்களுக்கும் மற்றும் இந்த கனவை நனவாக்க உதவிய நம்மூர் தொழிற் நுட்ப வல்லுனர்களுக்கும் ஒரு நன்றி கலந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வோம்.
நன்றி.
Labels:
செய்தியும் கோணமும்
Sunday, March 22, 2009
காசேதான் கடவுளடா!
சென்ற வாரம் அமெரிக்க தலைமை வங்கி, அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுமார் 50 லட்சம் கோடி ரூபாயை ($ 1 trillion) சந்தையில் இறக்கி விடுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு நீண்ட கால நோக்கில் உலக பொருளாதாரத்தை பாதிக்கும் விஷயம்தான் என்றாலும், குறுகிய கால நோக்கில் உலக சந்தைகளை சந்தோசப் படுத்தியது. உலக சந்தைகளின் கொண்டாட்ட்டங்களில் நம்முடைய சந்தையும் கலந்து கொள்ள, முன்னேற்றம் இரண்டாவது வாரமாக தொடர்ந்தது.
சுமார் ஒரு டிரில்லியன் டாலர் பணம் உலக சந்தையில் நுழைவதை அடுத்து, டாலரின் மதிப்பு இந்திய ரூபாய் உட்பட இதர உலக கரன்சிகளுக்கு எதிராக வீழ்ச்சி அடைந்தது. தங்கம் மற்றும் இதர உலோகங்களும் டாலர் மதிப்பில் விலை உயர்ந்தன. கச்சா எண்ணெய் விலை கூட ஐம்பது டாலருக்கும் மேல் எகிறியது. அமெரிக்காவில் வீட்டு விற்பனை உயர்வு, வேலை இழப்பு குறைவு போன்ற சில நல்ல பொருளாதார தகவல்களும் சேர்ந்து கொள்ள உலக பங்கு சந்தைகளும் நன்கு உயர்ந்தன.
ஆனால், ஒரு வகையில் இவ்வாறு பெரிய அளவில் அமெரிக்கா தனது கரன்சியை வெளியிடுவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதுடன் நீண்ட கால நோக்கில் உலக பொருளாதாரத்திற்கு தவறான விளைவுகளையே கொடுக்கும். எப்படியென்றால், கிட்டத்தட்ட எந்த ஒரு பொருளாதார செலவும் இன்றி வெளியிடப் படும் இந்த பணம், நம் போன்ற நாடுகளிடம் உள்ள அந்நிய செலவாணி கையிருப்பின் மதிப்பை குறைத்து விடுவதுடன், நாம் மதிப்பு குறைந்த டாலரை வாங்கிக் கொண்டு இலவசமாக அவர்களுக்கு ஏற்றுமதி சேவை செய்வதை போன்ற ஒரு நிலை ஏற்படும்.
இப்போது உள்நாட்டு சந்தைகளுக்கு வருவோம்.
சென்ற வாரம் உலக சந்தைகளின் போக்கை தொடர்ந்த நம் சந்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டன. சமீப காலத்தில் வெகுவாக பாதிக்கப் பட்டிருந்த உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன. இயந்திர தயாரிப்பு துறை நீங்கலான இதர துறைகள் மிதமான வளர்ச்சியைக் கண்டன. இந்த வார வர்த்தகத்தின் சிறப்பு அம்சமாக சிறிய மற்றும் நடுத்தர பங்குகள் சிறப்பான வளர்ச்சியைக் கண்டன. உலக அளவில் டாலர் மதிப்பு குறைவதை தொடர்ந்து அந்நிய முதலீட்டாளர்களின் பணம் பெருமளவு நம்மைப் போன்ற முன்னேறி வரும் நாடுகளின் சந்தைகளுக்குள் வரும் என்ற நம்பிக்கையை சந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்திய சரித்திரத்தில் இதுவரை கண்டிராத வண்ணம், மொத்த விலை பணவீக்க விகிதம் (WPI Headline Inflation) ௦௦0.44 % சதவீதமாக குறைந்தது, பணவாட்ட காலகட்டத்தில் (Deflationary Environment) நாம் நுழைந்து விடுவோமா என்ற அச்சத்தை ஏற்படுத்தினாலும், தலைமை வங்கி இன்னும் தனது வட்டி வீதங்களை குறைக்கும் என்ற புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
அதே சமயம், சென்ற வாரத்தில் நாம் தெரிவித்திருந்த எதிர்ப்பு நிலையை (2810) நிபிட்டி குறியீடு முழுமையாக முறியடிக்க முடிய வில்லை. குறிப்பிட்ட எதிர்ப்பு நிலையில் பெருமளவு விற்பனை வந்தது இதற்கு முக்கிய காரணம்.
வரும் வார நிலவரம்
இப்போது இந்தியா உட்பட அனைத்து பெரிய உலக சந்தைகளும் மிக முக்கிய காலகட்டத்தில் உள்ளன. அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளின் அரசாங்கங்கள்/தலைமை வங்கிகள் சமீப காலத்தில் பெருமளவு பணத்தை தமது பொருளாதாரத்தில் இறக்கி விட்டுள்ளன. இந்த பணத்தில் ஒரு பகுதி பங்கு சந்தைகளுக்கு வரும் பட்சத்தில் சந்தைகள் நன்கு உயரும் வாய்ப்புள்ளது. அதே சமயத்தில், ராணுவத்தை போல பொருளாதாரத்தை ஒரு அரசு ஆணை மூலம் வழி நடத்த முடியாது என்பதையும் சந்தைகள் நன்கு உணர்ந்துள்ளன.
அமெரிக்க முக்கிய பங்குக் குறியீடான டௌ ஜோன்ஸ் (Dow Jones Industrial Average) கூட தனது எதிர்ப்பு நிலையான 7500 புள்ளிகளுக்கு கீழேயே முடிவடைந்திருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது. அங்குள்ள ஏற்றத்தாழ்வு குறியீடான CBOE Vix கூட உயர்ந்திருப்பது சந்தைகள் முடிவெடுக்க முடியாத நிலையிலேயே இருப்பதை காட்டுகின்றன.
இந்தியாவைப் பொருத்த வரை தேர்தல் காரணமாக, தற்போதைக்கு உள்நாட்டு பொருளாதார விஷயங்கள் அதிக முக்கியத்துவம் பெறுவதில்லை. உலக சந்தைகளின் போக்கே இந்திய சந்தைகளின் போக்கையும் பெருமளவிற்கு நிர்ணயிக்கின்றன. அதே சமயம், அடுத்த வாரம் மாதாந்திர F&O நிலைகள் காலாவதியாவதைத் தொடர்ந்து பங்குகளில் ஏற்ற இறக்க நிலைகள் காணப் படும்.
வரும் வாரத்தில் பெருமளவு பொருளாதார தகவல்கள் அமெரிக்காவில் வெளியிடப் பட உள்ளன. இவை நல்ல செய்திகளாக இருந்து உலக சந்தைகள் வரும் வாரம் உயர்ந்தால், நமது சந்தைகளும் அவற்றைத் தொடரும்.
சென்ற வாரமே சொன்ன படி, நிபிட்டி குறியீட்டிற்கு 2810 புள்ளிகள் வலுவான எதிர்ப்பு நிலையாக தொடரும்.
சந்தையில் குறுகிய கால நோக்கில் வாங்கும் வர்த்தகம் செய்ய விரும்புவர் நிபிட்டி 2850 புள்ளிகள் அளவை முழுமையாக முறியடித்தப் பின்னர் வாங்குவது நல்லது. அக்ருதி போன்ற பங்குகள் சென்ற வாரம் பெருமளவு உயர்ந்தது, பெரிய வர்த்தகர்கள் மீண்டும் சந்தைக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இது ஓரளவுக்கு நல்ல விஷயம்தான் என்றாலும் சிறிய வர்த்தகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது என்பதையும் நாம் புரிந்து கொள்வது நல்லது.
சென்ற வாரம் கூறி இருந்த படி ரூபாய் நல்ல முன்னேற்றம் கண்டாலும், கச்சா எண்ணெய் விலை வெகுவாக உயர்ந்து வருவதை அடுத்து, ரூபாய் தனது முன்னேற்றத்தை தொடருமா என்பது கேள்விக் குறிதான்.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
நன்றி.
Labels:
பங்கு சந்தை,
பொருளாதாரம்
Friday, March 20, 2009
திகில் கூட்டும் இரவுகள்
பொதுவாகவே, வெட்பப் பிரதேசமான நம் நாட்டில் மிதமான தட்பவெட்ப நிலையுள்ள இரவுகளே அதிகம் விரும்பப் படுபவை. அதுவும் பல நாட்களில் காலையில் நாம் எழும் போது, இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க வசதியாக, சூரியன் தாமதமாக உதிக்கக் கூடாதா என்பது போன்ற எண்ணங்கள் தோன்றும்.
அதே சமயம் சில நாட்கள் எப்போதடா இந்த இரவு முடியும், விடியற்காலை சீகிரமாக வருமா என்று மனம் ஏங்கும் நிலை ஏற்பட்டு விடும். குறிப்பாக உடல் நிலை சரியில்லாத காலங்களில், பகலை விட இரவுதான் அதிக பயமூட்டுவதாகவே அமையும். "நோய்க்கும் பேய்க்கும் இரவில்தான் கொண்டாட்டம்" என்று கூட நம்மூரில் சொல்வார்கள்.
அதிலும் கூட நமது குழந்தைகளுக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லா விடில் அதுவும் இரவில் ஏதேனும் பிரச்சினைகள் வந்து விடில், நடு இரவு சிம்ம சொப்பனமாகவே திகழ்கிறது.
அசுத்தங்களும் கலப்படங்களும் மிகுந்த மும்பை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்களுக்கு முக்கியமன ஒரு பிரச்சினை பால். பாலில் கலப்படம் அதுவும் சுகாதாரமற்ற நீரின் உதவியால் கலப்படம் செய்பவர்களின் மீது பல முறை போலீஸ் நடவடிக்கை எடுத்தாலும் அவர்கள் மட்டும் தமது திருப்பணியை நிறுத்துவதே இல்லை.
இவர்களின் கலப்படத்தால் நேற்று பாதிக்கப் பட்டது எனது ஐந்து வயது குழந்தை. லேசான வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சலால் இரவு முழுதும் குழந்தை அவதிப் பட தூக்கம் முழுமையாக பறி போனது எங்களுக்கு.
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அடிக்கடி உடல் நலக் குறைபாடு ஏற்படுவது சகஜம்தான் என்றாலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்சொன்னது போல "இதெல்லாம் சகஜம்தான்" என்ற எங்கள் நினைப்பும், குழந்தையின் உடல் நலக் குறைவை துவக்கத்திலேயே சரியாக அடையாளம் கண்டு பிடிக்காத மருத்துவரின் அலட்சியமும் சேர்ந்து சாதாரண விஷயத்தினை மிகுந்த அபாயகரமாக்கி விட்டது.
அந்த சோதனையில் இருந்து மீண்டாலும், அது ஒரு வித பய உணர்வை எங்கள் மனதில் சேர்த்து வைத்து தைத்து விட்டது. இதனால், அந்த நிகழ்வுக்கு பின்னர், ஏதேனும் சிறு காய்ச்சல் என்றால் கூட பழைய நினைவுகளை தூண்டி பயத்தை உண்டாக்கி விடுகின்றன.
குழந்தையின் உடல்நலம் குறையும் போது, தாயை விட தந்தையின் பொறுப்பு அதிகமாகி விடுகிறது. குழந்தை படும் வேதனை கண்டு துயரப் படுவதும், எப்போது சரியாகும் என்று கவலைப் படுவதுமே அன்னையின் பொறுப்பாக, தந்தைக்கோ மேற்சொன்னவற்றுடன் சேர்த்து, பயப் படாமல் இருப்பது போல வெளியே காட்டிக் கொள்வது, அடுத்து என்ன செய்வது என்று சிந்திப்பது போன்ற கூடுதல் பொறுப்புக்களும் உண்டு. ஒரு முறை கவலையாக இருந்த என்னிடம் எனது மூத்த அதிகாரி ஒருவர் கூறியது இது. "உன்னுடைய முக மாற்றங்கள் உன் குடும்பத்தின் மனநிலையை வெகுவாக பாதிக்கும். எனவே கடினமான தருணங்களில் முகத்தில் கவலையை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டியது உன் பொறுப்பு. எல்லா கெட்ட விஷயங்களும் கடந்து போகும் என்ற நம்பிக்கை மனதில் வலுவாக இருப்பது மிகவும் அவசியம்"
எனது தந்தை மருத்துவமனையில் பணி புரிந்து வருவதால் , சிறுவயதில் இருந்தே மருத்துவமனைகள் அந்நியமாக தோன்றியதில்லை. ஆனால் தன் குடும்பத்திற்கென வரும் பிரச்சினைகள் அதுவும் குழந்தை சம்பத்தப் பட்ட தருணங்களின் போது மருத்துவமனையில் மனம் இயல்பாக செயல்படுவதில்லை . மும்பை போன்ற நகரங்களில் இருபத்து நான்கு மணி நேர மருத்துவமனைகள் இருந்தாலும், பகலில் செல்வதைப் போல நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனைக்கு செல்வது என்பது இயல்பான ஒரு விஷயமாக இருப்பதில்லை.
தாறுமாறான சந்தைகளின் போக்கு தரும் மன அயர்ச்சி காரணமாக, "எப்போதடா வீட்டுக்கு போய் நிம்மதியாக தூங்கலாம்" என்று ஏங்கும் நமக்கு இது போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் தூக்கத்தை நம்மிடம் இருந்து பறித்து விடுகின்றன. கண்ணை பிடுங்கும் தூக்கம் ஒரு புறம், என்ன இப்படி ஆகி விட்டதே என்ற வருத்தம் ஒரு புறம், உள்ளுக்குள் எவ்வளவு பயம் இருந்தாலும் "அதெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை, நாளை சரியாகி விடும்" என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஒரு புறம், நம்மை வாட்டி எடுக்கின்றன.
இது போன்ற தருணங்களில், இரவு முழுக்க நமக்கு தோன்றும் ஒரே சிந்தனை, "இந்த இரவு எப்போது முடியும்?"
பொதுவாகவே காலையில் அலாரம் அடிக்கும் போது "ச்சே! அதற்குள்ளே விடிந்து விட்டதா" என்று வருத்தப் பட்டுக் கொண்டு, இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க முடியாதா என்ற ஏக்கத்துடன் எழுந்திருக்கும் நான் இன்று காலையில் சூரிய வெளிச்சம் வந்ததும் "அப்பாடா" என்றுதான் நிம்மதி பெருமூச்சு விட்டேன். சொல்லப் போனால், விடிந்த பின்னர்தான் ஒரு குட்டித் தூக்கம் போட முடிந்தது.
இரவின் பயங்கள் அத்தனையும் சூரியனைக் கண்டதும் சட்டென விலகிப் போகின்றன. குழம்பிப் போன மனது மீண்டும் தெளிவாக சிந்திக்க ஆரம்பிக்கிறது. உடல் சோர்வு குறைந்தது போல தோன்றுகிறது.
வழக்கம் போல "இது ஒன்றுமில்லை, சாதாரண வயிற்றுக் கோளாறுதான், சீக்கிரம் சரியாகி விடும்" என்று டாக்டர் சொல்ல, அங்குள்ள பொம்மைகளை கண்டதும் சுறுசுறுப்பாக குழந்தை விளையாட ஆரம்பிக்க, மனதிலிருந்த பாரம் இறங்குகிறது. இன்றைக்கு மார்கெட் எப்படி இருக்கும் என்று வழக்கமான சிந்தனைகள் துவங்குகின்றன.
பின்குறிப்பு: தூக்கம் பறி போன இரவுக்கு பின் வரும் பகல் கூட மிகவும் நீளமானதுதான். அதுவும் வீட்டுக்கு சீக்கிரம் போக வேண்டும் என்று எண்ணும் நாளில்தான் அதிக வேலை வருகிறது. அப்புறம் ஒரு முக்கிய விஷயம். இந்த பதிவு கூட கொஞ்சம் தூக்கக் கலக்கத்துடன் எழுதப் பட்டதுதான்.
நன்றி.
Labels:
பயணங்கள்/அனுபவங்கள்
Wednesday, March 18, 2009
பதினாறு வயதினிலே - சிறுகதை
நடேசனுக்கு குப்பென வியர்த்தது. காலையில் எழுந்த பிறகு அவர் மகள் வசந்தியை பார்க்க முடிய வில்லை. வீடு முழுக்க தேடிப் பார்த்து விட்டார். எங்கேயும் காணவில்லை. படுக்கை கசங்காமல் இருந்ததைப் பார்த்த போது இரவிலிருந்தே அவள் வீட்டில் இல்லை என்று அவருக்கு புரிந்தது. படுக்கையறை மேஜை மேலே மடித்து வைக்கப் பட்டிருந்த ஒரு காகிதத்தை கண்ட அவர் கைகள் நடுநடுங்க அதனைப் பிரித்து மகள் எழுதியதை கீழ்கண்டவாறு படித்தார்.
" அன்புள்ள அப்பா!
தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்களை விட்டு பிரியும் நேரம் வந்து விட்டது. ஏனென்றால் நான் இப்போது ஒரு முடிவு எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அந்த முடிவு உங்களுக்கு பிடிக்காது என்று தெரியும். இருந்தாலும் வேறு வழியில்லை.
நான் வெகு நாட்களாக ஒருவரை காதலித்து வருகிறேன். அவர் இப்போது என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். நானும் அதற்கு சம்மதித்து விட்டேன். ஆனால் நீங்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும். ஏனென்றால் அவருக்கு நாற்பத்தைந்து வயது. எனக்கோ பதினாறு வயது மட்டும்தான். வயது வித்தியாசம் அதிகம் என்று சொல்வீர்கள். ஆனால் காதலுக்கு ஏதப்பா வயது வித்தியாசம் எல்லாம்?"
இது வரை படித்த நடேசனுக்கு தொண்டையில் கனமாக ஏதோ உருளுவது போல இருந்தது. மனதை திடப் படுத்திக் கொண்டு மேலே படித்தார்.
''மேலும் ஒரு விஷயம். வீட்டிலிருந்த கொஞ்சம் பணம் மற்றும் நகை எடுத்துச் செல்கிறேன். எல்லாம் எனக்காக சேர்த்து வைத்ததுதானே? போதை மருந்து விவகாரத்தில் சிறை சென்று மீண்ட அவருக்கு மீண்டுமொரு தொழில் அமையும் வரை எங்கள் காலத்தைத் தள்ள அந்த பணம் உதவுமல்லவா? ''
அடப் பாவி! வேலை போதை மருந்து கடத்தல், அதுவும் இப்போது இல்லையா! என்று நறநறவென பற்களை கடித்த நடேசன் கடிதத்தை தொடர்ந்து படிக்கிறார்.
''ஏன் இந்த அவசரம் என்று நினைப்பீர்கள். நான் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஏனென்றால், நான் இப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். அவரும் பெரிய மனது பண்ணி தனது மனைவி மற்றும் குடும்பத்தை விட்டு விட்டு எனக்காக ஊரை விட்டே ஓடி வர ஒத்துக் கொண்டுள்ளார்.
உங்கள் பேரப் பிள்ளைகளுடன் வந்து உங்களை விரைவில் சந்திப்பேன்.
இப்படிக்கு
என்றும் உங்கள் அன்புள்ள
வசந்தி"
இப்போது நடேசனுக்கு மயக்கமே வருவது போல இருந்தது. "பாவி மகளே! முட்டாள்தனமாக இப்படி செய்து விட்டாயே! வெளியே எப்படி தலை காட்டுவேன்!" என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்தார்.
அப்போது அந்த கடித்தத்தின் கீழே ஏதோ இன்னும் எழுதியிருந்தது போல இருந்தது. கண்ணில் பெருகிய தண்ணீரை துடைத்துக் கொண்டே மேலே படித்தார்.
"பின் குறிப்பு: அப்பா! மேஜையின் உள்ளே, நேற்று வந்த எனது பத்தாவது வகுப்பு மார்க் ஷீட் இருக்கிறது. அதையும் படித்துப் பாருங்கள். பத்தாவது வகுப்பில் குறைந்த மதிப்பெண் வாங்குவதை விட மோசமான பல விஷயங்கள் இந்த உலகில் இருக்கின்றன என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் இப்போது வேறு எங்கும் இல்லை. சித்தப்பா வீட்டில்தான் தங்கி இருக்கிறேன். கோபம் இல்லையென்றால் ஒரு போன் செய்யுங்கள். ஓடி வந்து விடுகிறேன்.
மீண்டுமொருமுறை என்னை மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்
உங்கள்
வசந்தி"
Labels:
கதை
Tuesday, March 17, 2009
சுவிஸ் பாங்க் ரகசியங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் படுமா?
"கறுப்புப் பணத்தின் சொர்க்கம்" என்றழைக்கப் படும் சுவிஸ் நாட்டின் வங்கிகளுக்கு இப்போது ஒரு சிக்கல் புதிதாக முளைத்திருக்கிறது. பொருளாதார தேக்கத்தில் தற்போது சிக்கிக் கொண்டிருக்கும் "முன்னேறிய நாடுகளின்" பார்வை இப்போது இந்த வங்கிகளின் மீது படிந்துள்ளது. சுவிஸ் வங்கிகளின் ரகசியத் தன்மை தொடருமா என்றும் இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு பற்றி இங்கு விவாதிப்போம்.
முதலில், சுவிஸ் வங்கியில் ரகசியம் மற்றும் பணத்தின் "கறுப்புத் தன்மை" எப்படி காக்கப் படுகிறது என்று பார்ப்போம்.
தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த கறுப்புப் பண சேவையை கிட்டத்தட்ட முன்னூறு வருடங்களாக செய்து கொண்டிருக்கும் சுவிஸ் வங்கிகள், தங்கள் வங்கியின் கணக்குகளை வாடிக்கையாளரின் பெயரில் பராமரிப்பதில்லை. ஒவ்வொரு கணக்குக்கும் ஒரு தனி ரகசிய எண் வழங்கப் படுகிறது. அந்த வங்கிக் கணக்கு பற்றிய அனைத்து தகவல் பரிமாற்றங்களும் அந்த ரகசிய "எண்"ணைக் கொண்டே நடைபெறுகிறது. அதே சமயம், வங்கிக் கணக்குகள் முற்றிலும் "ஆளில்லா" கணக்குகள் அல்ல என்பதும் வங்கியின் முக்கிய அலுவலர்களுக்கு வாடிக்கையாளர்களின் முழு விவரமும் தெரியும் என்பதும் குறிப்பிடத் தக்கது.
சுவிஸ் நாட்டில் வரி ஏய்ப்பு (Tax Fraud) என்பது குற்றம் என்றாலும் வரி விவரங்களில் (Tax Returns) குறைவான வருமானத்தை காட்டினாலோ அல்லது வரி விவரம் தாக்கல் செய்யாமல் இருந்தாலோ அது குற்றமல்ல. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்றாலும், இந்த வேடிக்கையான (அல்லது விவரமான) சட்ட பாதுகாப்பு சுவிஸ் மக்களுக்கு மட்டுமல்ல, அங்கு முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்கும் மாறுபாடில்லாமல் வழங்கப் பட்டு உள்ளது. சுமார் ஒரு கோடி கோடி ரூபாய் ($ 2 trillion) வெளிநாட்டுப் பணம் சுவிஸ் வங்கிகள் வசம் இருப்பதாக உறுதி செய்யப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருப்பு பணத்தை ஒளித்து வைக்க விரும்பும் ஊழல் அரசியல் வாதிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இந்த சேவையை, முன்னூறு வருடங்களாக தொடர்ந்து வழங்கி வந்த சுவிஸ் வங்கிகளுக்கு இப்போது ஒரு புதிய சிக்கல் முளைத்திருக்கிறது. சுவிஸ் நாட்டின் பெரிய வங்கியான யூனியன் பேங்க் ஒப் சுவிச்சர்லாந்து (UBS) மீது அமெரிக்க வருமான வரி அதிகாரிகள் ஒரு வழக்கை அமெரிக்காவில் பதிவு செய்துள்ளனர்.
இது வரை இந்த விஷயத்தில் அதிகம் அலட்டிக் கொள்ளாத அமெரிக்க அரசு இப்போது இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்கு முக்கிய காரணம் அந்த அரசு இப்போது நிதிப் பற்றாக்குறையில் தவித்துக் கொண்டிருப்பதே ஆகும். இந்த வருடம் அமெரிக்க அரசின் நிதிப் பற்றாக்குறை கிட்டத்தட்ட 90 லட்சம் கோடி ரூபாயாக ($1.75 trillion) இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிதிப் பற்றாக்குறையை ஓரளவுக்கேனும் குறைக்க வரி வருமானத்தை (வரி ஏய்ப்புகளை குறைப்பதின் மூலம்) அதிகரிக்க வேண்டுமென்று அந்த அரசு விரும்புகிறது. வரி கட்டாத சுவிஸ் வங்கி (அமெரிக்க குடிமகன்கள்) கணக்குகளிடம் இருந்து வரி வசூல் செய்ய அமெரிக்க அதிகாரிகள் தாக்கல் செய்த முதல் வழக்கில், 300 கணக்குகள் சார்பாக யூனியன் பேங்க் ஒப் சுவிச்சர்லாந்து சுமார் 3900 ($780 million) கோடி செலுத்தியிருப்பதாக தெரிகிறது.
தற்போது பொருளாதார சிக்கல் மற்றும் நிதிப் பற்றாக்குறையில் சிக்கி இருக்கும் மற்ற முன்னேறிய நாடுகளும் அமெரிக்க வழியில் செல்ல விரும்புகின்றன. அடுத்த மாதம் நடை பெற உள்ள G-20 மாநாட்டில் "ரகசியம் காக்கும் சட்டங்களை" நீக்க வேண்டும் என்று சுவிஸ் மற்றும் இது போன்ற பிற நாடுகளின் மீது நிர்ப்பந்தங்கள் செய்யப் படும் என்று தெரிகிறது. அவ்வாறு செய்யாவிடில். இந்த நாடுகள் மீது சில கடுமையான கட்டுப்பாடுகள்/தடைகள் விதிக்கவும் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
சுவிஸ் நாட்டின் முக்கிய வங்கி, அமெரிக்க அரசு தாக்கல் வழக்கின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் சார்பில் வரி செலுத்தியதும், முன்னேறிய நாடுகள் போட விரும்பும் கிடுக்கிப் பிடியும், சுவிஸ் வங்கிகளின் ரகசியங்கள் இன்னும் பல காலம் தொடர முடியாது என்று நம்ப வைக்கிறது. (நன்றி: http://www.merinews.com/catFull.jsp?articleID=15752124)
இந்தியர்களின் பணம் கூட ஏராளமாக சுவிஸ் வங்கிகளில் உள்ளது. அமெரிக்காவைப் போலவே, இந்தியாவிலும் கூட ஏராளமான நிதிப் பற்றாக்குறை உள்ளது. சொல்லப் போனால், இன்னமும் கூட இந்தியாவின் சமூக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஏராளமான நிதி தேவைப் படுகிறது.
எனவே, இந்திய அரசு இந்த பணத்தை இந்தியாவிற்கு திருப்பி கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் முழு ஈடுபாட்டோடு செயல் படுவார்கள் என்பது கேள்விக் குறிதான். ஏனென்றால், சுவிஸ் வங்கிகளில் இருக்கும் பணத்தின் பெரும்பகுதி அவர்கள் பணமாகத்தான் இருக்கும் என்று நம்பப் படுகிறது.
இந்தியாவின் எந்த ஒரு பெரிய கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இது பற்றிய தேர்தல் வாக்குறுதிகள் இருக்கின்றனவா என்று தெரிய வில்லை. இந்தியாவில் உலுக்கிய போபர்ஸ் விவகாரத்தில் கூட இன்று வரை யார் பெயரில் பணம் பெறப் பட்டது என்று விளக்கப் பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்க அரசால் மேற்சொன்ன வழக்கில் விவரங்கள் பெற முடிகின்ற பட்சத்தில் இந்திய அரசால் ஏன் முடியாமல் போனது என்பது கூட மக்கள் விடை காண முயலும் ஒரு பெரிய கேள்விதான். வருகிற பொதுத் தேர்தலில் சமூக அக்கறை உள்ள ஊடகங்களும், மக்கள் விழிப்புணர்வு இயக்கங்களும் இந்திய அரசியல்வாதிகளிடம் சுவிஸ் வங்கி விவகாரத்தை எழுப்பி அவர்கள் மீது ஒரு தார்மீக நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.
நன்றி.
Labels:
அரசியல்,
செய்தியும் கோணமும்
Monday, March 16, 2009
உத்தர பிரதேசம் - திருப்பிப் போட்ட தோசை?
சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் வரை, உத்தர பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப் படும் ஒருவர்தான் இந்தியாவின் பிரதமர் என்ற நிலை இருந்தது. 1991 தேர்தலுக்கு பிறகு அகில இந்திய அரசியலில் உத்தர பிரதேசத்தின் பங்கு மிகவும் குறைந்தே காணப் படுகிறது. இதற்கான காரணங்களையும் இந்த தேர்தலில் உத்தர பிரதேசம் தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிலை நாட்டுமா என்பதை பற்றியும் இங்கு விவாதிக்கலாம்.
1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பின்னர், உத்தர பிரதேசத்தில் ஒரு பெரியதொரு சமூக அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. முன்னேறிய வகுப்பினர் பெருமளவு ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் கட்சி தலித் மக்களிடமும் சிறுபான்மை இனத்தவரிடமும் முழு செல்வாக்கு பெற்று இருந்தது. அவர்களுக்கு பல சலுகைகள் அளிப்பது போல காட்டிக் கொண்டு, ஒரு பெரிய வாக்கு வங்கியை உருவாக்கி வைத்திருந்தது. அதே சமயம், சமூகத்தின் மற்ற பிரிவினரான இதர பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் பல அணிகளாக பிரிந்திருந்தனர். அவர்களின் அரசியல் செல்வாக்கு மிகவும் குறைந்தே காணப் பட்டது. சிறுபான்மை இனத்தவரும் தலித் இனத்தவரும் கூட வெறும் வாக்கு வங்கிகளாகவே நடத்தப் பட்டனர். அவர்களுக்கும் உள்ளபடியே பெரிய அளவில் அரசியல் வலிமை இருக்க வில்லை.
அரசியல் வானில் முலாயம் மற்றும் லாலு போன்ற தலைவர்களின் எழுச்சியும் மண்டல் கமிஷன் எழுப்பிய சர்ச்சைகளும், வட இந்திய அரசியலில் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பு தலைவர்களின் செல்வாக்கு உயர காரணமாக இருந்தது. பாபர் மஸ்ஜித் விவகாரத்திற்கு பிறகு சிறுபான்மை இனத்தவரும் காங்கிரசை விட்டு விலகி இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினரால் நடத்தப் பட்ட (மத சார்பற்ற) கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க, முன்னேறிய வகுப்பினரின் ஆதிக்கம் மிகுந்த காங்கிரஸ் மற்றும் அவர்களின் கட்சியாகவே அறியப் படும் பிஜேபி ஆகியவை மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவின் இரண்டு பெரிய மாநிலங்களான உபி மற்றும் பிகாரில் தமது செல்வாக்கை இழந்தன. (இந்த காலகட்டத்தில் கூட, தலித் சமூகம் அனைவராலும் புறக்கணிக்கப் பட்ட சமூகமாகவே தொடர நேரிட்டது.) இந்த நிலை அகில இந்திய அளவிலும் பிரதி பலித்தது. இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பு தலைவர்கள் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வந்த தென் மாநில கட்சிகள் டெல்லியிலும் பலம் பெறும் நிலை உருவானது.
1991 தேர்தலில் தென்னிந்தியாவில்தான் அதிக இடங்கள் பிடிக்க முடிந்த காங்கிரஸ் ஒரு தென் மாநிலத்தவரையே பிரதமராக்கியது. 1996 தேர்தலிலும் ஒரு தென் மாநிலத்தவரே, அதுவும் இதர பிற்படுத்த வகுப்பினரின் பிரதிநிதியாக காட்டிக் கொள்ள விரும்பும் ஒருவர்தான் பிரதமரானார். அன்று முதல், தென் மாநிலங்களில் இருந்து பல அமைச்சர்கள் மத்திய ஆட்சியில் முக்கிய பொறுப்புக்களில் இன்று வரை தொடர்ந்து காணப் படுகின்றனர்.
இந்த நிலையில் மேலும் ஒரு முக்கிய சமூக அரசியல் மாற்றமாக, தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரால் தலைமையேற்று நடத்தப் படும் பகுஜன் சமாஜ் கட்சி அரசியல் வானில் செல்வாக்கு பெற ஆரம்பித்தது. தலித் மக்களுக்காக மட்டும் நடத்தப் படும் கட்சி என்ற முத்திரை குத்தப் பட்டு விட்டால் தனது செல்வாக்கினை மற்ற இனத்தவர் மத்தியில் அதிகப் படுத்துவது மற்றும் ஆட்சியைப் பிடிப்பது கஷ்டம் என்பதை நன்கு புரிந்து கொண்ட அதன் தலைமை ஒரு புதிய திட்டத்தினை வகுத்து அதை சிறப்பாகவும் செயல் படுத்தி உத்தர பிரதேசத்தில் தனித்து ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்த திட்டத்தின் முதல் படியாக, கட்சித் தலைமை தனது கட்சியின் முக்கியப் பொறுப்புக்களில் பல முன்னேறிய வகுப்பினரை நியமித்தது. தேர்தலிலும் வேட்பாளர்களாக பல முன்னேறிய வகுப்பைச் சார்ந்தவர்களையே நிறுத்தியது. முன்னேறிய வகுப்பினரின் ஆதிக்கம் மிகுந்ததாக கருதப் படும் காங்கிரஸ் மற்றும் முன்னேறிய வகுப்பினரின் கட்சியாகவே அறியப் படும் பிஜேபி ஆகிய கட்சிகளே தயங்கும் "பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு" கொள்கையை தைரியமாக பகுஜன் சமாஜ் கட்சி கையில் எடுத்துக் கொண்டது. இந்த திட்டத்திற்கு கை மேல் பலன் கிடைத்தது. தலித் மற்றும் முன்னேறிய வகுப்பினரின் கூட்டு ஓட்டுக்கள் இந்த கட்சி உத்தர பிரதேசத்தில் தனித்து ஆட்சி அமைக்க உதவின. இந்த சமூக கூட்டணியின் மற்றொரு விளைவாக, பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அந்த மாநிலத்தில் கிட்டத்தட்ட தமது செல்வாக்கை முழுமையாக இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப் பட்டன.
நாடாளுமன்ற வேட்பாளர்களின் முதல் பட்டியலில் முன்னேறிய வகுப்பினரை வைத்திருப்பதும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கி இருப்பவர்களுக்கு ஐந்து சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதும் இந்த சமூக கூட்டணியை இந்தியா முழுக்க எடுத்துச் செல்ல முயலும் ஒரு முயற்சியோ என்று சந்தேகங்களை எழுப்புகிறது.
இதர பிற்படுத்தப் பட்ட சமூகங்களைச் சார்ந்த தலைவர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாக அறியப் படும் மூன்றாம் அணியுடன் தேர்தலுக்கு முன்னர் கூட்டணி வைக்க மாயாவதி மறுத்து விட்டதும் மேற்சொன்ன நிலைப்பாட்டின் ஒரு வெளிப்பாடே என்றும் தோன்றுகிறது. இவர்களுடன் கூட்டு வைப்பது முன்னேறிய சமூகத்தில் தனக்குள்ள செல்வாக்கை குறைத்து விடும் என்று பகுஜன் கட்சி கருதுவதாகவே தெரிகிறது.
காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய கட்சிகளுக்கு இந்த தேர்தலில் போதுமான பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பகுஜன் சமாஜ் கட்சி உத்தர பிரதேசத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு (ஐம்பதிற்கு மேல்) வெற்றி பெற்றால், அந்த கட்சியால் மத்தியில் ஆட்சி அமைக்க மூன்றாவது அணி கட்சிகளுடன் பேரம் பேச முடியும்.
ஆக மொத்தத்தில், இந்த தேர்தலில் உத்தர பிரதேசம் தனது இழந்த பெருமையை நிலை நாட்ட வாய்ப்பு உள்ளது என்று கருதப் படுகிறது.
நன்றி.
பின் குறிப்பு: இந்த தலைப்பை பார்த்து விட்டு என் மனைவி, தோசை இப்போதெல்லாம் திருப்பி போடப் படுவதில்லை என்று யதார்த்தமாக கூற, அது வேறு பல சிந்தனைகளை என்னுள் எழுப்பியது.
Labels:
அரசியல்
Sunday, March 15, 2009
பொறுத்தது போதும்! பொங்கி எழு!
பல வாரமாக பந்தாடப் பட்ட (பங்குசந்தையின்) காளைகள் சென்ற வாரம் பொங்கி எழுந்து கரடிகளை புரட்டி எடுத்து விட்டனர். பலரும் எதிர்பாரா வண்ணம் சிட்டி பாங்க் சென்ற காலாண்டில் லாபம் ஈட்டியதும், அந்த வங்கிக்கு இனிமேல் அரசு உதவி தேவைப் படாது என்று அதன் தலைவர் (விக்ரம் பண்டிட்) கூறியதும் இந்த எழுச்சிக்கு முக்கிய காரணங்கள். காளைகள் தமது முன்னேற்றத்தை தொடர்வார்களா அல்லது கரடிகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவார்களா என்று இங்கு பார்ப்போம்.
சென்ற வாரம், மிலாடி நபி மற்றும் ஹோலி பண்டிகைகளை முன்னிட்டு இந்தியப் பங்குச்சந்தை இரண்டு நாட்கள் மூடப் பட்டிருந்ததால், வர்த்தக நடவடிக்கைகள் குறைந்தே காணப் படும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், உலக சந்தைகள் (உபயம்: சிட்டிபாங்க்) பெருமளவு முன்னேறியதன் தொடர்ச்சியாக நம்முடைய சந்தைகளும் நல்ல முன்னேற்றம் கண்டன. இந்தியாவின் தொழிற் உற்பத்தி (Industrial Production, -0.50%) வீழ்ச்சியடைந்தாலும், அந்த வீழ்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருந்ததால் சந்தைகள் மகிழ்ச்சி அடைந்தன. நுகர்வோர் பொருட்கள் விற்பனை வளர்ச்சி அடைந்ததும் ஒரு சாதகமான செய்தியாக இருந்தது. மேலும், பல ஆண்டுகள் கண்டிராத அளவு மொத்த விலை பணவீக்கம் குறைந்தது (Wholesale Price Index Inflation, 2.43%), வட்டி வீதங்கள் குறைக்கப் படும் என்ற புதிய நம்பிக்கையை அளித்தது. விற்று பின் வாங்கும் நிலையை (Short Position) எடுத்த கரடிகள் அவசர அவசரமாக தங்கள் (F&O) நிலையை சரி செய்ய முனைய, சந்தைகள் மேலும் முன்னேற்றம் கண்டன.
நிபிட்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ரிலையன்ஸ் இந்த வாரம் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டது. தொடர்ந்து பல வாரங்களாக வீழ்ச்சியைச் சந்தித்து வரும் வங்கித் துறை மற்றும் உலோகத் துறை பங்குகள் இந்த வாரம் நல்ல வளர்ச்சியைக் கண்டன. சென்ற மாதம் வாகன விற்பனை அதிகரித்துள்ளது என்று வந்த தகவல்களை அடுத்து அந்தத் துறை பங்குகளும் நல்ல முன்னேற்றத்தைக் கண்டன. மேலும், அரசு கனரக வாகனங்களை பெருமளவில் வாங்கப் போகிறது என்ற செய்தி அசோக் லெலான்ட், டாட்டா மோடோர்ஸ் போன்ற பங்குகள் உயர உதவியது.
வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு இந்த வாரத்தில் சாதகமாக இருந்ததும், பல சிறிய நடுத்தர பங்குகளின் விலை உயர்ந்ததும் நல்ல செய்தகள் என்றாலும், வர்த்தகத்தின் அளவு (Trading Volume) குறைந்து காணப் பட்ட வருத்தத்துக்குரிய ஒன்றாகும்.
உலக அளவில் டாலர் மதிப்பு குறைந்ததை அடுத்து, இந்திய ரூபாயும் சென்ற வாரம் உயர்வை சந்தித்தது. உலகெங்கும் உள்ள அரசாங்கங்களின் பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் எண்ணெய் தேவையை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் கச்சா எண்ணெயும் நல்ல வளர்ச்சியை சந்தித்தது.
அமெரிக்க சந்தைகளின் ஏற்றத்தாழ்வு குறியீடான (Volatility Indicator) CBOE Vix மற்றும் இந்திய ஏற்றத்தாழ்வு குறியீடான Vix சரிந்திருப்பது, அடுத்த வாரமும் சந்தைகள் நிலையான வளர்ச்சியை காணும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. கரடிகளின் பிடியில் இருந்து மீள முயற்சிக்கும் காளைகளின் இந்த "Bear Rally" எவ்வளவு தூரம் தொடரும் என்பது அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்களைப் பொறுத்தே அமையும்.
சென்ற வாரம் நாம் குறிப்பிட்டிருந்த படி முக்கிய அரணான 2700-2720 புள்ளிகளுக்கு இடையே நிபிட்டி முடிவடைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இந்த நிலையை நிபிட்டி முறிக்கும் பட்சத்தில் 2810 புள்ளிகள் வரை உயர வாய்ப்புள்ளது. இந்த எதிர்ப்பு நிலை முறியடிக்கப் படாவிட்டால், மீண்டும் ஒரு முறை 2550 புள்ளிகளுக்கு அருகே செல்ல வாய்ப்புள்ளது. ஒரு வேளை, முழுமையாக முறியடிக்கப் பட்டால் (கரடிகள் தங்கள் "விற்ற பின் வாங்கும் திறந்த நிலையை" (Open Short Position) சமன் செய்ய நேரிட்டு) மேலும் முன்னேற்றத்தை காண முடியும். அடுத்த எதிர்ப்பு நிலைகள் 2900 க்கு அருகிலும் 3050 க்கு அருகிலும் காண முடியும்.
வர்த்தகர்கள் திங்கட்கிழமை காலை, 2730 அளவை முழுமையாக தாண்டும் பட்சத்தில் வாங்கும் நிலையை (Long Position) எடுக்கலாம். இழப்பு தடுக்கும் நிலை (ஸ்டாப் லாஸ் லிமிட்) 2670 என வைத்துக் கொள்ளலாம். பல வாரமாக வீழ்ச்சி கண்டிருக்கும் பொதுத் துறை வங்கிப் பங்குகளை நீண்ட கால நோக்கில் வாங்கலாம். 2550-2600 புள்ளிகள் நல்ல அரணாக இருக்கும்.
ஆக மொத்தத்தில், காளைகள் நிதானமாக முன்னேற நல்ல வாய்ப்பு இருந்தாலும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. நடப்பு முன்னேற்றம் தொடர்ந்து பல நாட்கள் நீடிப்பது என்பது கடினமான ஒன்று என்பதை சிந்தனையில் கொண்டு வர்த்தகம் செய்வது நல்லது.
உலக பங்கு வர்த்தகத்தில் வளர்ச்சி இருக்கும் பட்சத்தில் இந்திய ரூபாய் மேலும் முன்னேற வாய்ப்புள்ளது.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
நன்றி.
Labels:
பங்கு சந்தை
Saturday, March 14, 2009
பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?
உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம்.
முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம்.
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும்.
மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாதுகாப்பு, மாநில அரசுகளின் பொறுப்பு ஆகும். இந்த போட்டி இடங்களில் உள்ள மாநில அரசுகள் தேர்தல் முடியும் வரை ஐபிஎல் போட்டிகளுக்கென தனி போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறி விட்டன. அப்படி பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றால், மத்திய அரசு அதிக மத்திய காவல் படைகளை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றன. அதிக பாதுகாப்பு படைகள் கைவசம் இல்லாத காரணத்தினால்தான் மத்திய அரசு ஐபிஎல் தேதிகளை தள்ளி வைக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளது. எனவே போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும்.
இந்த வாதத்திற்கு சில அரசியல் உள்நோக்கங்களும் கற்பிக்கப் படுகின்றன. ஐபிஎல் தலைவரான லலித் மோடி பிஜேபி சார்புடையவர் என்பதால் அவருக்கு காங்கிரஸ் அரசு இடைஞ்சல் செய்கிறது என்று கூறப் படுகிறது.
(ஆனால் என்னைப் பொருத்த வரையில், பணத்திற்கும் கிரிக்கெட்டிற்கும் இந்திய அரசியல்வாதிகள் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. எனவே, இந்த இரண்டும் சேர்ந்து கூட்டாக அமைந்துள்ள ஐபிஎல் போட்டிக்கு அரசியல் ரீதியான தடைகள் வருமா என்பது ஒரு பெரிய கேள்விக் குறிதான்.)
இப்போது ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்கக் கூடாது என்று சொல்பவர்கள் முன்வைக்கும் வாதங்களைப் பார்க்கலாம்.
இந்த போட்டிகள் பல மாதங்களுக்கு முன்பே நிச்சயிக்கப் பட்டவை. இப்போது தள்ளிவைத்தால், பல சர்வதேச அணி வீரர்களால் (தங்கள் தேசிய அணியில் விளையாட வேண்டியிருப்பதால்) இந்த போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது. அந்த நிலையில் ஐபிஎல் அமைப்பாளர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படும்.
தீவிரவாத விவகாரத்தில், இன்றைக்கு உலக அளவில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே தட்டில் வைத்து பார்க்கப் படுகின்றன. இப்போது, இந்த போட்டிகளை தள்ளி வைத்தால் இந்தியாவின் பாதுகாப்பு என்பது உலக அளவில் கேள்விக் குறியான ஒன்றாகி விடும். இது இந்தியாவின் தன்மானத்திற்கு இழுக்கு ஆகும்.
மேலும் இந்த போட்டிகள் தள்ளி வைக்கப் பட்டால், அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் (2011) இந்தியாவில் நடத்த அனுமதி கிடைக்காமல் போய் விடலாம். மேலும் பல சர்வதேச போட்டிகளை இந்தியா நடத்துவதற்கு தடை வரலாம்.
எனவே எப்பாடுபட்டாவது இந்த போட்டிகளை குறித்த மாதங்களில் நடத்தி உலகிற்கு இந்தியாவின் வல்லமையை புரிய வைக்க வேண்டும்.
இந்த வாதங்களில் எது சரி என்று பார்ப்பதற்கு முன்னர், ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டதன் பின்னணியை நாம் பார்க்க வேண்டும்.
சென்ற ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (2007) இந்தியா படு தோல்வி அடைந்து திரும்பியபோது, ஜி நிறுவன தலைவரால் ஐசிஎல் என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. இந்தியாவில் கிரிக்கெட்டை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் 20-20 போட்டிகள் தொடங்கப் பட்டு வணிகரீதியாக குறிப்பிடத் தக்க வெற்றியைப் பெற்றன.
இந்திய மக்களின் கிரிக்கெட் ஆர்வத்தினை அப்படியே காசாக மாற்றுவதில் யாருக்கும் சளைக்காத, உலகின மிகப் பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பான, இந்திய கிரிக்கெட் வாரியம் சென்ற மாணவர்களின் கோடை விடுமுறை காலத்தில், ஐபிஎல் போட்டிகளை தொடங்கியது. இந்த போட்டிகள் வணிக ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. அந்த வெற்றியை தொடரவே, இந்த ஆண்டும் கோடை விடுமுறை காலத்தில் இந்த போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானம் செய்தது.
நடப்பு மக்கள் சபையின் வழக்கமான ஐந்தாண்டு காலம் ஆயுள் முடிந்து எப்போதுமே தேர்தல் நடைபெற மிகவும் உகந்த காலமாக கருதப் படும் ஏப்ரல் - மே மாதத்தில்தான் பொதுத் தேர்தல் நடத்தப் படுகின்றது. இது நன்கு தெரிந்திருந்தும் இந்த காலகட்டத்தில் (மாணவர் விடுமுறை காலம் என்ற ஒரே காரணத்தினால்) போட்டிகளை நடத்த தீர்மானித்தது முதல் தவறு என்று நான் கருதுகிறேன்.
இந்த போட்டிகள் சர்வதேச போட்டிகள் அல்ல என்பது முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது. பெரிய பணக்காரர்கள் தனிப்பட்ட முறையில் நடத்துகிற கிளப்புகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகள்தான் என்பதையும் இங்கு நினைவு கூற விரும்புகிறேன். ஒருவேளை இதுவே சர்வதேச போட்டிகள் என்றால், அவற்றை கொஞ்சம் கஷ்டப் பட்டாவது நடத்த வேண்டியது இந்தியாவின் கடமையாக இருந்திருக்கும்.
மேலும், எவ்வளவு பெரிய பண நஷ்டத்தையும் தாங்கக் கூடிய பண வல்லமை படைத்தது நமது கிரிக்கெட் வாரியம். எனவே நாட்டின் மிக முக்கிய நிகழ்வான பொதுத் தேர்தல்களுக்காக, போட்டிகளை தள்ளி வைப்பதன் மூலம் கொஞ்சம் நஷ்டத்தை சந்தித்தால் தவறில்லை என்று நினைக்கிறேன்.
எனவே, இந்த போட்டிகளை நடத்த வேண்டுமென்பதற்காக, மக்களின் மிக முக்கிய உரிமையான "பாதுகாப்பாக வாக்களிக்கும் உரிமைக்கு" எந்த ஒரு பங்கமும் நேராமல் பார்த்துக் கொள்வது மாநில மத்திய அரசுகளின் பொறுப்பு என்றே நினைக்கின்றேன்.
மேலும், வருங்காலத்தில் தனியார் நலனுக்காக நடத்தப் படும் போட்டிகளில் மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு பாதுகாப்பு படைகளை இலவசமாக அனுப்பி வைக்கக் கூடாது. இந்த போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க, அரசு உரிய "செலவினத் தொகையை" ஈடாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது தனிப் பட்ட கருத்து ஆகும்.
நன்றி.
Labels:
அரசியல்,
செய்தியும் கோணமும்
2004 = தமிழ் நாடு, 2009 = மேற்கு வங்கம்?
2004 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் எளிதாக ஆட்சியைப் பிடிக்கும் என்று அந்த கட்சியைச் சார்ந்த பலரே எண்ணியிராத போது, அந்த கட்சியின் தலைமை, கூட்டணி அமைக்கும் விஷயத்தில் ஒரு அதிரடி முடிவு எடுத்தது. ராஜிவ் காந்தி கொலை சம்பந்தமாக அமைக்கப் பட்ட ஜெயின் கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப் பட்ட எந்த கட்சியின் அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து அப்போதைய ஐ.கே குஜரால் அரசு கவிழ காரணமாக இருந்ததோ, அந்த கட்சியுடனேயே (திமுக) தமிழகத்தில் கூட்டணி அமைக்கும் ஒரு எதிர்பாரா முடிவை காங்கிரஸ் தலைமை எடுத்தது. அது மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப் பட்ட பாமக, மதிமுக போன்ற கட்சிகளுடனும் பல மாநிலங்களில் தனக்கு நேர் போட்டியாளர்களான இடது சாரி கட்சிகளுடனும் இனைந்து ஒரு மெகா கூட்டணியை காங்கிரஸ் அமைத்தது.
விளைவு அனைவரும் அறிந்ததுதான். பாண்டிச்சேரியையும் சேர்த்து தமிழகத்தின் நாற்பது தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றி அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு பெரும் பலமாக இருந்ததுடன் எளிதில் ஆட்சியை அமைக்கவும் உதவி புரிந்தது. தனிப் பட்ட அளவில் காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் இடையே மக்களவை தொகுதி வெற்றி எண்ணிக்கையில் இருந்த வித்தியாசம் நாற்பது சீட்டுகளுக்கும் குறைவுதான் என்பது கவனிக்கத் தக்கது.
தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் தனது கணக்கினை நடைபெறும் தேர்தலில் அதிகரித்துக் கொள்ள முடியாத (சொல்லப் போனால் குறையவே வாய்ப்புக்கள் அதிகம்) காங்கிரஸ் இப்போது மேற்கு வங்கத்தின் மீது குறி வைத்துள்ளது.
தமிழகத்தைப் போலவே காங்கிரசால் தனித்து போட்டியிட்டு பெருமளவு சாதிக்க முடியாத ஒரு மாநிலம் மேற்கு வங்கம். பிரணாப் முகர்ஜீ போன்ற காங்கிரஸின் மூத்த தலைவராலேயே அங்கு 2004 தேர்தல் வரை வெற்றி பெற முடிய வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இடது சாரிகள் பலம் மிகுந்த அந்த மாநிலத்தில், காங்கிரசில் இருந்து துடிப்பான இளம் தலைவரான மம்தா பானர்ஜீ வெளியேறியது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே இருந்தது. மேலும் இடது சாரி கட்சிக்கு எதிரான வாக்குகளை அவர் சிதறடித்தது மேற்கு வங்கத்தில் இனிமேல் காங்கிரசுக்கு வாய்ப்பில்லை என்றே எண்ண வைத்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் தனது கட்சியின் குழந்தையான திரிணாமுல் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து, அதிலும் இரண்டாவது கட்சி என்ற அந்தஸ்த்துக்கும் ஒப்புக் கொண்டது மற்றும் நாற்பத்திரண்டு தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 14 இடங்களில் மட்டுமே போட்டியிட ஒப்புக் கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அது மட்டுமல்ல, அந்த 14 இடங்களும் கூட வெற்றி வாய்ப்பு குறைந்த இடங்கள் (இடது சாரிகளின் கோட்டைகள்) என்று கருதப் படுபவை. இந்த நிலைப் பாடு காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த கூட்டணி முடிவுக்கு கீழ்கண்டவாறு சில காரணங்கள் இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்யும் இடது சாரிகளின் மீது அதிருப்தி (ஓரளவுக்கேனும்) எழுந்தால், அதை சிந்தாமல் சிதறாமல் கூட்டுச் சேர்ப்பது.
சிங்கூர் விவகாரத்தில், மேல் தட்டு மற்றும் மத்திய வர்க்க மக்களின் ஆதரவு இடது சாரி அரசுக்கு இருந்தாலும், எளிய மக்கள் மத்தியில் மம்தாவின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
மேற்சொன்ன இரண்டு காரணங்களால் ஒருவேளை மாநில அரசுக்கு எதிரான பெரிய அலை உருவானால் அந்த அலையின் உதவியால் அதிக உறுப்பினர்களைப் பெற்று மத்திய அரசினை மீண்டும் தக்க வைத்துக் கொள்வது.
மற்றுமொரு பெரிய குறிக்கோள் என்னவென்றால், இடது சாரிகளின் பலம் (நாடாளுமன்ற தொகுதிகள்) மேற்கு வங்கத்தில் குறையும் போது மூன்றாவது அணியின் கட்டுப் பாடு குலைந்து போவதுடன் அந்த கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோருவது என்பது ஒரு கடினமான காரியமாகி விடும். அப்போது, காங்கிரஸ் கட்சியால், தான் ஒரு மதச்சார்பற்ற கட்சி என்ற போர்வையில், பல உதிரிக் கட்சிகளை தனது கூட்டணிக்குள் இழுக்க முடியும்.
ஆக மொத்தத்தில், இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தின் வோட்டுக்கள் மத்திய அரசை நிர்ணயிக்கக் கூடிய வலிமை கொண்டதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
நன்றி.
Labels:
அரசியல்,
செய்தியும் கோணமும்
Thursday, March 12, 2009
வாழ்க்கை வாழ்வதற்கே!
வாழ்க்கையின் பொருள் பற்றி சமீபத்தில் நான் படித்த ஒரு கதை இங்கே.
ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்த சில மாணவர்கள், படித்து முடித்து சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கல்லூரியில் சந்திக்கின்றனர். அப்போது, கல்லூரி வாழ்க்கையைப் போல வெளி உலக வாழ்க்கை சந்தோசமானதாக இல்லை என்றும் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கின்றது என்றும் அலுத்துக் கொள்கின்றனர்.
அப்போது அங்கு வந்த அவர்களது முன்னாள் பேராசிரியர் அவர்களை தன் வீட்டிற்கு தேநீர் விருந்துக்கு அழைக்கிறார். சுவையில் சிறந்த அவர் வீட்டு தேநீர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது.
அவரது வீட்டில் தேநீர் பல்வேறு விதமான கோப்பைகளில் பரிமாறப் படுகின்றது. சில கோப்பைகள் சாதாரணமானவை, சில கோப்பைகள் அழகானவை, சில கோப்பைகள் விலை உயர்ந்தவை, வேறு சிலவோ பிரத்யேகமாக கலை அழகோடு வடிவமைக்கப் பட்டவை.
அந்த மாணவர்கள், அழகற்ற கோப்பைகளை தவிர்த்து விட்டு அழகிய கோப்பைகளிலேயே தேநீர் அருந்த விரும்புகின்றனர். கலை வடிவம் மிக்க தேநீர் கோப்பைக்காக அவர்களிடையே சிறிய போட்டி கூட நடக்கிறது.
ஒருவழியாக, தமக்கான கோப்பையை தேர்வு செய்து, மாணவர்கள் அனைவரும் தேநீர் அருந்தும் போது அங்கு வந்த பேராசிரியர் சிறிய விளக்க உரை நிகழ்த்துகிறார். அது இங்கே.
"ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். நீங்கள் அனைவரும் அழகில் சிறந்த, விலை உயர்ந்த கோப்பைகளிலேயே தேநீர் அருந்த விரும்பினீர்கள். ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கென சிறந்ததையே தேர்ந்தெடுக்க விரும்புகிறான். இது மிகவும் இயல்பான விஷயம்தான் என்றாலும் பல பிரச்சினைகளின் மூல காரணம் அதில்தான் உள்ளது.
நீங்கள் கஷ்டப் பட்டு போராடி தேர்வு செய்த கோப்பைகள், தேநீருக்கு எந்த ஒரு தனிச் சுவையையும் கூட்ட வில்லை. சொல்லப் போனால், கலைநயம் மிக்க சில கோப்பைகள், எளிதில் தேநீர் அருந்த, அதன் சுவையை முழுமையாக உணர தடையாகவே இருந்தன.
உண்மையில், என் வீட்டிற்கு நீங்கள் வந்தது சுவையான தேநீரை அருந்தவே. கலை நயம் மிகுந்த கோப்பைகளை உபயோகிக்க அல்ல.
ஆனாலும், தேநீர் அருந்த வந்த உங்கள் கவனம், கோப்பைகளைப் பார்த்தவுடன் திசை மாறி விட்டது. அதிலும், உங்கள் கையில் உள்ள கோப்பை மீது இருந்த கவனத்தை விட அடுத்தவர் கையில் என்ன கோப்பை உள்ளது என்பதில்தான் அதிக கவனம் இருந்தது.
நண்பர்களே! இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்க்கை என்பது கூட சுவையான தேநீர் போன்றது. இடையில் வந்து போகும் பதவி, பணம், புகழ் எல்லாமே, அந்த வாழ்க்கையை தாங்கிப் பிடிக்க உதவும் கோப்பைகள் மட்டுமே.
மேற்சொன்ன பணம் பதவி போன்ற விஷயங்கள் எதுவும் வாழ்க்கை எனும் தேநீரின் சுவையை மாற்றுவதில்லை. ஆனால் பல சமயங்களில், கோப்பைகளில் அதிக கவனம் செலுத்தும் நாம் வாழ்க்கையை முழுமையாக சுவைக்க மறந்து விடுகிறோம். பலர் இது போல காலப் போக்கில் வாழ்க்கை எனும் தேநீரின் உண்மையான சுவை மறந்து போய் இயந்திரகதியாக வாழ ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்! மகிழ்ச்சியாக வாழும் மனிதர்களுக்கு எல்லாவற்றிலும் உயர்ந்த விஷயங்கள் கிடைப்பதில்லை. அவர்கள் தங்களுக்கு கிடைத்த தேநீரை முழுமையாக சுவைப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதை தாங்கிப் பிடிக்கும் கோப்பைகளில் அல்ல.
அதிகமான பொருட்கள் வைத்திருப்பவன் உண்மையான பணக்காரன் இல்லை. குறைவாக தேவைகள் உள்ளவனே பெரிய பணக்காரன். "
இவ்வாறு அவர் உரைத்ததும், அந்த மாணவர்களுக்கு வாழ்க்கை பற்றி கொஞ்சம் விளங்கியது போல இருந்தது. இந்த முறை தேநீரின் சுவையை முழுமையாக ருசித்து பின்னர் கலைந்து போனார்கள்.
எனக்கு இந்த கதை பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
வாருங்கள். ஒரு நல்ல டீ சாப்பிட்டுக் கொண்டே யோசிப்போம்.
நன்றி.
Wednesday, March 11, 2009
13 B (யாவரும் நலம்) திரை விமர்சனம்
கர்ப்பவதியான மனைவி அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, கணவனோ மதியம் ஒரு மணிக்கு வரும் டிவி சீரியல் பார்க்க ஓடுகிறான். காரணம், மனைவி பிழைப்பாளா, இல்லையா என்று வீட்டில் வரும் ஒரு தொலைக்காட்சித் தொடரை பார்த்துத்தான் தெரிந்து கொள்ள முடியும். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இப்படித்தான், தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் மாறுபட்ட காட்சிகளைக் கொண்ட ஒரு திரைப்படமாக வெளிவந்துள்ளது, 13 B (தமிழில் யாவரும் நலம்).
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், மத்திய தர குடும்பம் ஒன்று புதிதாக குடி வருகிறது. ஒருவருக்கொருவர் அன்பாக இணைந்து, அமைதியான முறையில் வாழும் அந்தக் குடும்பத்திலுள்ள ஒருவனுக்கு மட்டும், அந்த வீட்டில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடப்பது புரிய வருகிறது. (அவன் மட்டும் தனியாக) உள்ளே சென்றால் இயங்க மறுக்கும் லிப்ட், வீட்டிற்குள் இருந்து புகைப்படம் எடுத்தால் கோணலாக தெரியும் அவன் முகம், இவற்றுக்கெல்லாம் மேலாக இவனது வாழ்வில் நடைபெறும் விஷயங்கள் முன்கூட்டியே வெளிவரும் தொலைக்காட்சித் தொடரைக் காட்டும் ஒரு டிவி பெட்டி என்று பல விந்தையான நிகழ்வுகள் அவனைச் சுற்றி நடக்கின்றன. பல நல்ல விஷயங்கள் இவன் குடும்பத்திற்கு நடைபெறுவதை முதலில் இவனுக்கு உணர்த்தும் அந்த தொலைகாட்சி தொடர், பின்னர் பல இடர்கள் நேர்வதையும் முன்கூட்டியே தெரிவிக்கிறது. இவன் வீட்டில் மட்டுமே அந்த தொடர் தெரிகிறது என்றும் உண்மையில் அந்த தொடரை குறிப்பிட்ட டிவி நிறுவனம் நடத்துவதில்லை என்ற விஷயம் பின்னர் தெரிய வர அவனை இன்னும் அதிர வைக்கிறது.
இவன் ஒரு போலீஸ் அதிகாரியின் உதவி கோர, அவருடைய வீட்டில் நடைபெறவுள்ள விபத்தையும் இந்த தொடர் காட்ட இந்த இருவருடன் நாமும் அதிர்ந்து போகிறோம். இந்த சிக்கலை அவிழ முயலும் இவனுக்கு பேரதிர்ச்சியாக, தன் குடும்பத்திற்கு ஒருவனால் ஆபத்து வரப் போகிறது என்றும், அந்த ஒருவன் தானேதான் என்றும் புரிய வருகிறது. இந்த அமானுஷ்ய விஷயங்களுக்கு யார் காரணம், குடும்பத்தை கதாநாயகன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் கிளைமாக்ஸ்.
அமானுஷயங்கள் கலந்த திகில் படம் என்றால் பொதுவாகவே வருகின்ற, "ஷவரில் ரத்தம் கலந்த நீர்", "பயமுறுத்த முயற்சிக்கின்ற கொடூர முகங்கள்", என்றெல்லாம் அதிகம் இல்லாமல் சாதாரணமாக நகருகின்ற வாழ்வினூடேயே திகில் ஏற்படுத்துவதில் படத்தின் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். "யார் நீ" போன்ற படங்களில் வருவது போல, இந்த அமானுஷ்ய நிகழ்வுகளை யாரேனும் திட்டமிட்டு நடத்துகின்றார்களா என்றெல்லாம் முதலில் யோசிக்கத் தொடங்கும் நாம் மெல்ல மெல்ல கதையின் ஓட்டத்துடன் கலந்து விடுகிறோம். பல முறை சீட்டின் நுனிக்கு வரும் நமக்கு, அடுத்து என்ன நடக்கும் என்று திகில் கலந்த ஆர்வத்தை படத்தின் காட்சி அமைப்புகள் ஏற்படுத்துகின்றன. கதையின் வேகத்திற்கு எடிட்டிங் உதவியிருக்கிறது.
டூயட் காட்சிகள், தனியான காமெடி ட்ராக் ஏதும் இல்லாமல் துணிச்சலாக தமிழுக்கு முற்றிலும் புதிய இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். (இரு மொழி படமென்பதால் இந்த துணிச்சல் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்) நம்மூர் மாதவனின் நடிப்பு "ஏ ஒன்". எந்த ஒரு ஹீரோயிசமும் இல்லாமல், தம்முடைய குடும்பத்தினரை காப்பாற்ற அவர் துடிப்பதும், குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு அந்த முயற்சிகள் தெரியாத படி வைத்திருக்க தவிப்பதும், நம்மை கதையுடன் ஒன்ற வைக்கின்றன.
வீட்டில் நடக்கும் பல அமானுஷ்ய விஷயங்கள் முக்கியமாக தொடர் குறித்து கதாநாயகன் தவிர்த்து குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு எதுவும் புரிய கூடாது என்பது கதையின் அடிப்படை நோக்கம் என்றாலும், வெளிப்படையான நேரடியான பல விஷயங்கள் அவர்களுக்கு எப்படி புரியாமல் போனது என்பதை காட்டுவதில் திரைக்கதையில் கொஞ்சம் சறுக்கல் இருக்கிறது. மாதவன் தவிர மற்றவர்கள் முகம் நம் மனதில் பதிய வில்லை என்றாலும் கதையின் நோக்கம் கூட அதுவேதான் என்பதால் அதை பெரிது படுத்த தேவையில்லை. யார் இதற்கெல்லாம் காரணம் என்ற நமது அத்தனை யூகங்களையும் மீறி எதிர்பாராத ஒரு முடிவை வைத்ததற்கு இயக்குனருக்கு (விக்ரம் குமார்) பாராட்டுக்கள்.
சிலம்பாட்டம், வில்லு, ஏகன், படிக்காதவன் மற்றும் சமீபத்தில் வந்த தீ போன்ற ஸ்டீரியோ டைப் தமிழ் படங்களைப் பார்த்து நொந்து போயிருப்பவர்கள், ஒரு மாறுதலுக்காக, பல நாட்களுக்குப் பின் தமிழில் வரும் ஒரு சீரியசான வித்தியாசமான முயற்சி என்ற வகையில் இந்த படம் போய் வரலாம். கொடுத்த காசுக்கு ஓகே என்று இந்த படத்தை சொல்லலாம்.
நன்றி.
Labels:
திரைவிமர்சனம்
Tuesday, March 10, 2009
மூன்றாவது அணி முந்துமா?
கடந்த சில நாட்களில் நடைபெற்று வரும் கூட்டணி மாற்றங்கள், இந்த தேர்தல் காங்கிரஸ் மற்றும் பி.ஜெ.பி ஆகிய இரு கட்சிகளுக்கிடையே நடைபெறும் நேரடி போட்டியாக மட்டும் இருக்காது என்றே தோன்றுகிறது. முக்கியமாக, பல ஆண்டுகளாக உடன் இருந்த பிஜு ஜனதா தள் பி.ஜெ.பி. கூட்டணியை விட்டு விலகியதும், காங்கிரஸ்-சமாஜ்வாடி தொகுதி பங்கீடு நிகழாமல் போனதும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கே இடையே இழுபறி நிகழ்ந்து வருவதும் கவனிக்க தக்கவை. சென்ற தேர்தலிலேயே, இந்தியாவின் முதல் இரண்டு பெரிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகள் இரண்டும் சேர்ந்தே மக்கள் சபையின் மொத்த உறுப்பினர் அளவில் பாதியளவே பெற்றன என்பது குறிப்பிடத் தக்கது. மீதமுள்ள உறுப்பினர்களில் பெரும்பாலானவை முன்னாள் இந்நாள் மூன்றாவது அணி கட்சிகளாலேயே பெறப் பட்டன என்பதும் கவனிக்கத் தக்கது.
தேர்தலுக்கு முன்பே தொகுதி உடன்படிக்கை வைத்திருந்த காங்கிரஸ் கூட்டணிக்கே கூட சென்ற முறை அறுதி பெரும்பான்மை கிடைக்க வில்லை. பல மாநிலங்களில் தானே எதிர்த்து போட்டியிட்ட இடது சாரி கூட்டணியின் உதவியுடனேயே ஐக்கிய ஜனநாயக கூட்டணியால் ஆட்சிக்கு வர முடிந்தது.
அதிக மக்கள் சபை உறுப்பினர்களைக் கொண்ட பெரிய மாநிலங்களில் நாட்டின் முதல் இரண்டு பெரிய கட்சிகளும் பெரிய அளவு செல்வாக்கு இல்லாமல் காணப் பட்டதே இதற்கு முக்கிய காரணம். உத்தர பிரதேசம், பீகார், தமிழ் நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இரண்டு கட்சிகளுக்குமே செல்வாக்கு இருக்க வில்லை. பீகார் மாநிலத்தில் முன்னாள் ஜனதா தள கட்சிகளின் கூட்டணியில் காலம் தள்ளுகிற இந்த இரண்டு கட்சிகள் தமிழ் நாட்டில் (காங்கிரசுக்கு ஓரளவுக்கு தனி செல்வாக்கு இருந்தாலும் கூட) ஏதேனும் ஒரு திராவிட கட்சியின் தோளிலேயே பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆந்திரா மற்றும் கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி தனித்த முறையில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடிய வில்லை. மேற்சொன்ன மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப் படும் மக்கள் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 263. மொத்த மக்கள் சபை உறுப்பினர் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சரிபாதி. மேற்சொன்ன பெரிய மாநிலங்களில் அதிக செல்வாக்கு உள்ள கட்சிகள், இந்நாள் முன்னாள் மூன்றாவது அணி உறுப்பினர்களே என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
சென்ற தேர்தலில் நிலைமை இப்படி இருக்க இந்த தேர்தலில் நிலைமை பெருமளவு முன்னேறியதாக தெரிய வில்லை. சொல்லப் போனால் மோசமாகியே காணப் படுகிறது. பாரதிய ஜனதா கட்சி பெருமளவு நம்பியிருந்த பிஜு ஜனதா தள் தற்போது கூட்டணியிலிருந்து விலகி இருக்கிறது. அந்த கட்சி இப்போது மூன்றாவது அணிக்கு அருகே. காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து இருந்தாலும் தேசியவாதி காங்கிரஸ் தனி வழியில் செல்லும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது. சரத் பவாரின் வெளிப்படையான பிரதமர் பதவிக்கான இலக்கு, தேர்தலுக்குப் பின்னர் இந்த கட்சி எப்போது வேண்டுமானாலும் வெளியேறக் கூடும் என்பதை சுட்டிக் காட்டுகிறது.
தமிழ்நாட்டைப் பொருத்த வரை, சென்ற முறை காங்கிரஸ் கூட்டணியில் இருந்த மதிமுக ஏற்கனவே வெளியேறி விட்டது. தமிழ்நாடு அளவில் கூட்டாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இப்போது அதிமுக பக்கம். பாட்டாளி மக்கள் கட்சி எந்நேரமும் அதிமுகவுடன் கூட்டு சேரலாம். ஒரு வேளை,இந்த தேர்தலில் திமுகவிற்கு அதிக இடங்கள் கிடைத்தால் கூட, தேர்தலுக்கு பின்னர் (எப்போதும் போல் அமைச்சர் பதவி கிடைத்தால்) மூன்றாவது அணியுடன் தன் முன்னாள் உறவை புதிப்பித்துக் கொள்ளலாம். அதிமுக ஏற்கனவே மூன்றாவது அணிக்கு மிக அருகே. எனவே , சென்ற முறை காங்கிரசுக்கு பெரிய அளவு கை கொடுத்த தமிழ் நாடு, எந்த வகையிலும் இந்த முறை மூன்றாவது அணிக்கே அதிக சாதகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
காங்கிரசுக்கு சென்ற முறை பெருமளவு கை கொடுத்த மற்றொரு மாநிலம் ஆந்திரா. அங்கும் இப்போது தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி இப்போது எதிரணியில். பி.ஜெ.பி பக்கம் இருந்த நாயுடுகாரு இப்போது மூன்றாவது அணியின் முக்கிய உறுப்பினர்.
பீகாரை பொருத்த வரை லாலு மற்றும் நிதிஷ் இருவருமே முன்னாள் ஜனதா தளத்தினர். இவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். இப்போதெல்லாம், லாலு மற்றும் முலாயம் தமக்குள் நெருங்கி வருவது கவனிக்கத் தக்கது. ராம் விலாஸ் பஸ்வான் எல்லா கூட்டணி ஆட்சியிலும் இருந்தவர், இருப்பவர் மற்றும் இருக்கப் போகிறவர்.
உத்தர பிரதேசத்தில் நேரடி போட்டியில் களம் இறங்கும் முலாயம் மற்றும் மாயாவதி இருவரும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. வெற்றி பெறும் உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படையில் இவர்கள் மூன்றாவது அணியுடன் பேரம் பேசலாம்.மாயாவதி மூன்றாம் அணிக்கு வரும் பட்சத்தில், இந்தியாவில் முதன் முறையாக ஒரு தலித் பெண்மணியை ஆட்சியில் அமர்த்துகிறோம் என்று சொல்லி மூன்றாம் அணி அரசியல் காய்களை நகர்த்தும்.
வங்காளத்தில் திரினாமுல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது காங்கிரசுக்கு ஓரளவுக்கு லாபம்தான் என்றாலும், கம்யூனிஸ்ட்களின் கோட்டையை எப்படி உடைக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மற்ற சிறிய மாநிலங்களில் நல்ல செல்வாக்கு கொண்ட பிராந்திய கட்சிகளான, அஸ்ஸாம் கன பரிஷத், அகாலி தள், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகளும் முன்னாள் மூன்றாவது அணியினரே என்பது குறிப்பிடத் தக்கது.
காங்கிரஸ் (சென்ற முறை சுமார் 150) மற்றும் பிஜேபி (சென்ற முறை சுமார் 110) ஆகிய கட்சிகள் தனிப் பட்ட முறையில் இந்த முறை நூற்று ஐம்பது சீட்டுக்களுக்கு மேல் ஜெயித்தால் மட்டுமே மற்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வர முயற்சிக்க முடியும். கம்யூனிஸ்ட்கள் சென்ற முறையை விட மிகக் குறைவான உறுப்பினர்களை பெற்றாலும் இந்த இரண்டு கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும்.
மாறாக, இந்த இரண்டு கட்சிகளும் தமது சென்ற முறை கணக்கை பெருமளவுக்கு உயர்த்த முடியாமல் போய் விட்டால், மூன்றாவது அணி முன்னுக்கு வந்து விடும். தேர்தலுக்கு பின்னர் பல கூட்டணி மாற்றங்கள் ஏற்பட்டு, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் வெளியிலிருந்து ஆதரவு தர, மூன்றாவது அணி சார்பாக வருடத்திற்கு ஒரு பிரதமரை பார்க்கும் வாய்ப்பு நம்மெல்லோருக்கும் கிடைக்கும்.
கவலைப் படாதீர்கள், தமிழகத்தின் சார்பாக பல மந்திரிகள் அங்கிருப்பார்கள். அவர்களால் தமிழகத்திற்கு என்ன லாபம் என்று மட்டும் கேட்கக் கூடாது.
நன்றி.
Labels:
அரசியல்
Monday, March 9, 2009
கேலிகூத்தாகும் உண்ணாவிரத போராட்டங்கள்!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விரதம் இருப்பவர்கள், ஏகாதசிக்கு முந்தைய நாள் மதியம் சாப்பிட்டு முடித்த பின்னர், அன்று முழுக்க எதுவும் உண்ணா மாட்டர்கள். மறு நாள் முழுக்கவும் கூட எதுவும் சாப்பிட மாட்டார்கள். ஏகாதசி முடிந்து அடுத்த நாளான துவாதசி அன்று காலையிலே இறை வழிபாடு முடிந்த பின்னரே தமது விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.
நமது இஸ்லாமிய சகோதரர்கள் கூட, புனித ரமலான் மாதத்தில், சூரிய உதயத்திற்கு முன்னரே தமது உணவினை முடித்துக் கொள்வார்கள். பகல் முழுக்க தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள். மாலை சூரியன் மறைந்த பின்னரே தமது விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.
காலம் காலமாக இது போன்ற தம்மைத் தாமே வருத்திக் கொள்ளும் உண்ணா நோன்புகளே விரதங்கள் என்று ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றன. ஆன்மீகத்தின் வெளிப்பாடாக இருந்த இது போன்ற விரதங்களை, சுதந்திர போராட்டத்தின் ஒரு கருவியாக அறிமுகப்படுத்தியவர் அண்ணல் மகாத்மா காந்தி அடிகள். அவர் கூட, உண்ணாவிரத போராட்டம் தொடங்கினால் அந்த போராட்டத்திற்கான தீர்வு வரும் வரை தனது உண்ணா நோன்பினை முடித்துக் கொண்டதில்லை. அந்த மாறா வைராக்கியத்தின் காரணமாகவே, சூரியன் மறையா நாடு என்று புகழ் பெற்றிருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் பார்வைக்கு எளிய அந்த மனிதரைப் பார்த்து நடுநடுங்கிப் போனது.
சுதந்திர இந்தியாவின் ஆரம்ப கால சரித்திரத்தில் கூட, அரசியல் ரீதியான உண்ணாவிரதங்கள் ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கான தார்மீக ஆதரவை தெரிவிக்கும் கருவிகளாக உதவின. அதே சமயம், குறைந்த பட்சம் இரண்டு நேர உணவினை தவிர்க்கும் வகையிலேயே உண்ணாவிரத நேரங்கள் (காலை ஆறு அல்ல்லது ஏழு மணியிலிருந்து மாலை ஆறு வரை) அமைக்கப் பட்டன.
ஆனால், இன்றைக்கோ, உண்ணாவிரதங்கள், தேர்தலை மனதில் வைத்து நகர்த்தப் படும் அரசியல் சதுரங்கத்தின் காய்களாகவே பயன் படுகின்றன. நோக்கங்கள் மாறிப் போவது காலத்தின் கோலமாக இருக்கலாம். ஆனால், உண்ணாவிரதம் என்பதற்கான அர்த்தங்களும் மாறிப் போனது கொஞ்சம் வேடிக்கையாகவே இருக்கிறது.
நவீன உலகில், அழுத்தங்கள் நிறைந்த பணியில் உள்ளவர்கள் பலருக்கும் மதிய உணவை மறந்து வேலை செய்த அனுபவம் எத்தனையோ முறை கிட்டியிருக்கும். அதே போல வார இறுதி நாட்களில் பல முறை காலை உணவு சாதாரணமாகவே தவறியிருக்கும். இந்த கால குழந்தைகள் கூட பல முறை (பொழுது போக்கு மும்முரத்தில்) தமது உணவு இடைவெளியை நீட்டித்துக் கொள்கின்றன. உடல் இளைக்கிறேன் பேர்வழி என்று இந்தக் கால பெண்கள் பலர் பல வேளைகளில் சாப்பிடுவதே இல்லை. இந்த காலத்திலும், எந்த காலத்திலும் தாய்மை உள்ளம் கொண்ட பல பெண்கள், குடும்பத்தினருக்காக தமது உணவை எத்தனையோ முறை தியாகம் செய்கின்றனர். . இன்னமும் கூட ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிடுவதே பெரும்பாடாக கழியும் ஏழைகள் எண்ணற்றவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் நிலைமை இருக்க, காலை ஒன்பது அல்லது பத்து மணியிலிருந்து மாலை ஐந்து அல்லது ஆறு மணி வரை (நடிகர்கள் விஷயத்தில் இது மாலை நான்கு மணி மட்டுமே) சாப்பிடாமல் இருப்பதன் பெயர் உண்ணாவிரதமா? யாரை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள்? அல்லது மற்றவர்களை முட்டாளாக்குகிறோம் என்று நம்பிக் கொண்டு தாமே முட்டாளாகி விடுகிறார்களா?
மொத்தத்தில், இவர்கள் தங்கள் போராட்டத்திற்கு உண்ணாவிரதம் என்று பெயர் வைப்பதற்கு பதில் இரண்டு உணவிற்கு இடையேயான இடைவெளியை சற்று மாற்றி நீட்டித்துக் கொள்ளும் ஒரு வித "உணவிடைவேளை போராட்டம்" என்று வேண்டுமானால் பெயரிட்டுக் கொள்ளலாம்.
நன்றி.
Sunday, March 8, 2009
மகளிர் தினத்தில் ஆண்களுக்கு சில யோசனைகள்!
மகளிர் தினமான இன்று தன் குடும்பப் பெண்களை எப்படி அசத்துவது என்பது பற்றி ஆண்களுக்கு சில யோசனைகள் இங்கே.
இன்றைய சமையல் வேலைகளை முழுமையாக கவனித்துக் கொண்டு நீங்கள் உணவை பரிமாறுவது. (இதில் இன்னொரு உள்நோக்கமும் அடங்கியிருக்கிறது. ஒரு நாளைக்காவது நல்ல சாப்பாடு என்றால் எப்படி இருக்கும் என்று அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? ஒரு வேளை, உங்களுக்கு சமைக்கத் தெரியாதா? அப்போதும் கவலையில்லை. அவர்களும் ஒரு நாள் கஷ்டப் படட்டுமே? நம் வேதனை எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ளட்டுமே)
இன்றைக்கு முழுக்க அவர்களை பேச விட்டு நாம் கேட்டுக் கொண்டே இருப்பது. (எல்லா நாளும் இதே கதைதான் என்று அலுத்துக் கொள்கிறீர்களா?)
உங்கள் வேலைகளை நீங்களே பார்த்துக் கொள்வது. உங்கள் துணிமணிகளை கழற்றி தூக்கி வீசாமல் ஒழுங்காக மடித்து அலமிராவில் வைப்பது. (இது கொஞ்சம் கவனிக்க வேண்டிய சீரியசான விஷயம்)
உங்கள் மனைவியை பியுட்டி பார்லருக்கு அழைத்துச் செல்வது (பியுட்டின்னா என்னான்னு நாமளும் தெரிஞ்சுக்க வேண்டாமா?). அங்கே வருபவர்கள் யாருமே அழகாக இல்லை என்று திரும்பி வரும் போது கூற மறந்து விடக் கூடாது.
சென்ற வருடத்தை விட இந்த வருடம் சற்று ஒல்லியாக ஆகி இருப்பது போல தோன்றுகிறது என்று போட்டு வைப்பது. (என்ன பண்ணுவது? பொழப்பு ஓடனுமில்ல?)
இவ்வளவு நேரத்திற்குள் முடித்து விட வேண்டும் என்று கண்டிஷன் எல்லாம் போடாமல், ஷாப்பிங் அழைத்துச் செல்வது. (நகைக் கடை பக்கம் போனால் உங்கள் பர்ஸுக்கு நான் காரண்டி இல்லை. இப்படித்தான் ஒரு முறை, இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். தனது மனைவியின் கண்ணில் ஒரு பூச்சி விழுந்து ஐந்நூறு ரூபாய் செலவு வைத்து விட்டதாக ஒருவர் ரொம்பவும் அலுத்துக் கொண்டார். அதற்கு மற்றவர் சொன்னார், "உனக்கு பரவாயில்லை, கண்ணில் விழுந்தது பூச்சிதான். என் மனைவியின் கண்ணில் விழுந்தது ஒரு புதிய நகைக்கடையின் விளம்பரம். என் நிலைமை எப்படி இருக்குமென்று யோசித்துப் பார்".)
என்ன ரொம்ப கஷ்டமாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா?
பேசாமல் "மகளிர் தின வாழ்த்துக்கள்" என்று உளமார ஒரு தடவை வாழ்த்தி விடுங்கள் போதும். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து விடுவார்கள்.
என்னைப் பொருத்த வரை, பெண்களின் உண்மையான தியாக உணர்வு, பிரதிபலன் பாரா அன்பு, வீட்டினருக்காக ஓயவில்லாமல் தரும் உழைப்பு, எல்லாவற்றுக்கும் மேலான அந்த தாய்மை ஆகியவற்றை நாம் சரியாக புரிந்து கொள்வதே அவர்களுக்கு நம்முடைய உண்மையான மகளிர்தின வாழ்த்துக்களாக இருக்கும்.
கடவுளின் பெருமைக்குரிய படைப்பான பெண்கள் அனைவருக்கும்,
"மகளிர் தின நல்வாழ்த்துக்கள்"
நன்றி.
Labels:
சமூகம்
Saturday, March 7, 2009
சோதனை மேல் சோதனை!
சந்தைகள் சென்ற வாரம் ஒரு மிகப் பெரிய சரிவை சந்தித்தது. பங்கு சந்தையின் முக்கியக் குறியீடான நிபிட்டியின் வலுவான அரணாக கருதப் பட்ட 2700 புள்ளிகள் அளவு முற்றிலுமாக முறியடிக்கப் பட்டுள்ளது. அடுத்த வலுவான அரண் நிலை இன்னும் வெகு தொலைவு (2300) இருக்கும் நிலையில், தற்போதைக்கு சந்தைகளின் நம்பிக்கைகள் முறிந்து போன நிலையிலேயே உள்ளன. இருந்தாலும் எதிர்கால வர்த்தகப் பிரிவில் (F&O Segment) விற்று பின் வாங்கும் நிலை (Short Position) சமன் (Short Covering) செய்யப் படும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலும் அடுத்த வாரம், இரண்டு நாட்கள் சந்தை விடுமுறை இருப்பதாலும், சந்தையின் சரிவு இப்போதைக்கு தணிந்து காணப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
சென்ற வாரம் அமெரிக்க மற்றும் முக்கிய உலக சந்தைகள், உலகப் பொருளாதார பின்னடைவின் எதிரொலியாக, பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் சில முக்கிய குறியீடுகள் பல வருடங்களுக்கான தாழ்ந்த நிலையை சந்தித்தன. இந்தியாவிலும் கூட சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகள் மூன்று வருடத்தில் கண்டிராத வீழ்ச்சியை சந்தித்தன. இந்தியாவின் தரவரிசை சரிந்து போனதும் அதன் எதிரொலியாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து வந்ததும் சென்ற வார வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள்.
ரிலையன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனங்களின் இணைப்பு (எதிர்பார்த்ததற்கு மாறாக) சந்தையில் வரவேற்பு பெற வில்லை. இந்திய தலைமை வங்கி தனது வட்டி வீதத்தை அரை சதவீதம் குறைத்ததும் பணவீக்கம் எழு வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததும் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. மாறாக, வங்கிகளின் வாராக் கடன் பற்றிய அச்சத்தினால் வங்கிகளின் பங்குகள் பெருமளவுக்கு வீழ்ந்தன. நுகர்வோரின் வாங்கும் திறன் பற்றிய அச்சத்தினால், நுகர்வோர் பொருட்கள் துறை பங்குகள் கூட சரிந்தன. தொடர்ந்து பல வாரங்களாக தக்க வைத்துக் கொண்டிருந்த நிபிட்டி அரண் நிலையான 2700 புள்ளிகள் இந்த வாரம் முறியடிக்கப் பட்டது. சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் பெருத்த இழப்பை சந்தித்தன. ஆக மொத்தத்தில், சென்ற வாரம் முதலீட்டாளர்கள் மிகுந்த வேதனைப் படும் வாரமாகவே அமைந்தது.
வரும் வாரம், மிலாடி நபி மற்றும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்கள் சந்தை விடுப்பில் இருப்பதால், சந்தை வர்த்தகம் சற்று குறைந்தே காணப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும், ஏற்கனவே சொன்னபடி எதிர்கால வர்த்தகப் பிரிவில் (F&O Segment) விற்று பின் வாங்கும் நிலை (Short Position) சமன் (Short Covering) செய்யப் படும் என்று எதிர்பார்க்கப் படுவதால் வரும் வாரம் சந்தைகள் சற்று தணிந்து காணப் படும் என்று கருதப் படுகிறது.
நிபிட்டியில் இப்போது 2700-2720 புள்ளிகள் அளவு பெரும் எதிர்ப்பு நிலையாக இருக்கக் கூடும். அதே போல 2480-2500 அளவு நல்ல அரண் நிலையாக இருக்கும். 2250-2300 புள்ளிகள் வலுவான அரண் நிலையாக இருக்கக் கூடும். வர்த்தகர்கள் சற்று எச்சரிக்கையுடன் செயல் படுவது நல்லது. கண்டிப்பான இழப்பு நிறுத்தத்தை (Strict Stop Loss Limits)வைத்துக் கொண்டே சந்தை வர்த்தகம் செய்யவும்.
நாம் முன்னரே எதிர்பார்த்த படி ரூபாய் மேலும் இழப்பை சந்தித்துள்ளது. இந்த வாரம், பங்கு சந்தைகள் மற்றும் உலக நாணய சந்தைகளின் போக்கின் அடிப்படையில் ரூபாய் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்கும்.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
நன்றி.
Labels:
பங்கு சந்தை
Friday, March 6, 2009
எதிர்மறையான விமர்சனங்களை கையாளுவது எப்படி?
அன்றாட வாழ்வில் நாம் பல தர பட்ட விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். சில விமர்சனங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. சில விமர்சனங்கள் மனதில் காயத்தை உண்டாக்குகின்றன. சில விமர்சனங்கள் கோபத்தையும் விரோதத்தையும் வளர்க்கின்றன. விமர்சனங்களை சரியாக கையாளும் போது, அவற்றின் எதிர்மறையான பாதிப்பிலிருந்து நாம் தப்பிப்பதோடு, அவற்றை நம் நன்மைக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். (சொந்த வாழ்வில்) வெற்றி பெற்றவர்களான அரசியல் வாதிகள், சினிமா ஹீரோக்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்கள் தம்மைப் பற்றி எழும் விமர்சனங்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதை கண்கூடாக பார்க்க முடியும். எதிர்மறை விமர்சனங்களை எப்படி சிறப்பாக எதிர்கொள்வது என்பது பற்றி இங்கு விவாதிப்போம்.
விமர்சனங்களுக்கான களங்களையும் காரணங்களையும் அடிப்படையாக கொண்டு அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம்.
முதல் வகை காற்று வாக்கிலான விமர்சனங்கள். இவை பெரும்பாலும் விமர்சிப்பவரின் அறியாமையினாலேயே (இயந்திரகதியில்) எழுப்பப் படுகின்றன. இந்த குறிப்பிட்ட வகை விமர்சனங்களால் (இரு தரப்பிற்கும்) பயன்கள் எதுவுமில்லை என்றாலும் ஏதோ விமர்சிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவை எழுப்பப் படுகின்றன. இந்த வகை விமர்சகர்கள், தன்னை/ சொந்த குடும்பத்தை/ வேலையை சரியாக கவனிக்காமல், உலகையே குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஐந்து நிமிட மின்வெட்டிற்கு உள்ளூர் மின் பணியாளர் முதல் முதலமைச்சர் வரை எல்லாரோரையும் திட்டித் தீர்த்து விடுவார்கள். பிரச்சினை இவர்கள் வீட்டு மின் இணைப்பில்தான் என்றால், உடனடியாக சரி செய்ய சோம்பேறித்தனப் படுவார்கள். இவர்களின் விமர்சனங்களில் அபூர்வமாக ஏதாவது நல்ல விஷயங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் என்றாலும், இவர்களது விமர்சனங்களை முற்றிலுமாக ஒதுக்கி தள்ளி விடுவது நம் நேரத்தை மிச்சப் படுத்தும். இவர்களுக்கு நம் பதில் மெல்லிய புன்னகை மட்டுமே.
இரண்டாம் வகை விமர்சனங்கள் கவனிக்க வேண்டியவை. எளிதில் புறந்தள்ள முடியாதவை. இந்த விமர்சனங்களின் நோக்கங்கள் உள்ளே ஒளிந்திருக்கும். இவை பெரும்பாலும் நமக்கு அருகிலிருப்பவர்களாலேயே எழுப்பப் படும். விமர்சிக்கப் படுபவரின் கவனைத்தை தன் பக்கம் ஈர்ப்பது அல்லது அவரை காயப் படுத்துவதுதான் இந்த வகை விமர்சனங்களின் நோக்கங்கள். ஒருவரது உடல்ரீதியான பிரச்சினைகள், சாதி, மதம், ஏழ்மை, கல்வி இன்மை (அல்லது குறைவு), வேறு ஏதாவது குறைபாடு ஆகியவற்றை மறைமுகமாக விமர்சித்து அவரை காயப் படுத்த விரும்பும் ஒரு சிலர் உங்கள் அருகே எப்போதும் இருக்கிறார்கள். உதாரணங்கள்: "உங்கள் குடும்பத்திலேயே இந்த வழக்கம் இருக்காது." " எனக்கு அப்போதே சந்தேகம். உங்களால் முடியுமா என்று?" நம்மை காயப் படுத்த வரும் இந்த விமர்சனங்களை நாம் இதயத்திற்கு கொண்டு சென்றால் அது விமர்சித்தவருக்கு வெற்றியாகி விடும். எனவே, இந்த வகை எதிர்மறை விமர்சனங்களை, புரிந்து கொள்ளும் அதே சமயத்தில் பொருட்படுத்தவே கூடாது. இவர்களுக்கு நம் பதில், "நான் உங்களால் துளியும் காயப் பட வில்லை" என்பதை செய்கைகளால் உணர்த்துவது.
அதே போல உறவுகளில் (நட்புகளில்) விரிசல் வரும் போது, அதை மறைமுகமாக வெளிபடுத்துபவர்கள் இருக்கிறார்கள். உதாரணம்: "நீங்கள் ரொம்ப பிசி போல தெரிகிறது?" இங்கும் கூட விமர்சனங்களின் வெளிப் பொருளைப் பற்றி கவலைப் படாமல், உறவுகளின் (நட்புகளில்) விரிசலை சரி செய்யவே முயல வேண்டும். இவர்களுக்கு நம் பதில், "கவலைப் படாதீர்கள் உங்களுடன் நான் இருக்கிறேன்" என்று செய்கைகளால் உணர்த்துவது.
மூன்றாம் வகை விமர்சனங்கள் நம்மீது உள்ள அக்கறையால் நமது நலம் விரும்பிகளால் வெளிப்படுத்தப் படுபவை. இந்த வகை விமர்சனங்கள் சமயத்தில் காராசாரமாக கூட இருக்கலாம். ஆனால் இந்த விமர்சனங்களின் மீது எந்த வகையிலும் நம்முடைய அதிருப்தியை வெளியிடக் கூடாது. அது நமது நலம் விரும்பிகளை காயப் படுத்தி விட வாய்ப்பு உள்ளது. மேலும் அடுத்த முறை அவர்கள் விமர்சனங்களை வெளியிடாமல் கூட இருந்து விடலாம். அது நமக்குத்தான் நஷ்டம். இங்கு, விமர்சனம் வெளிப்படுத்தப் பட்ட விதம் பற்றி கவலைப் படாமல், அதில் உள்ள அக்கறையை புரிந்து கொண்டு நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு நம் பதில், "உள்ளார்ந்த நன்றி"
கடைசியாக எதிர்மறை விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி எனது தனிப் பட்ட அனுபவத்தில் இருந்து ஒரு சிறிய உதாரணம்.
தனக்குக் கீழே உள்ள அலுவலர்களின் பணியினை பற்றி கன்னாபின்னாவென்று விமர்சிக்கும் பழக்கம் கொண்ட ஒரு மேலதிகாரி விடுப்பிலிருந்து திரும்பி வருவதற்கு சற்று முன்பு, அவர் பெயர் சொல்லி பயமுறுத்திய ஒரு இடைநிலை அதிகாரிக்கு ஒரு இளநிலை அலுவலர் அளித்த பதில்.
"ஐயா! குற்றம் கண்டுபிடிப்பது மற்றும் கடுமையாக விமர்சிப்பது அவருக்கு (மேல் நிலை அதிகாரி) அதிகாரம் கொடுத்த உரிமை. இளநிலை அதிகாரி என்ற முறையில் அந்த விமர்சனத்தை சகித்துக் கொள்வதும் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டியதும் என்னுடைய கடமை. அதே சமயம், கொடுத்த பணியினை சிறப்பாக செய்ய வேண்டியது மட்டுமே எனது பொறுப்பு. அவரது தனிப்பட்ட (அலுவலக) குணாதிசியங்களைப் பற்றி கவலைப் (அச்சப்) படத்தான் வேண்டுமா என்று முடிவு செய்வது எனது தனிப் பட்ட உரிமை."
நன்றி.
Subscribe to:
Posts (Atom)