Friday, March 20, 2009

திகில் கூட்டும் இரவுகள்


பொதுவாகவே, வெட்பப் பிரதேசமான நம் நாட்டில் மிதமான தட்பவெட்ப நிலையுள்ள இரவுகளே அதிகம் விரும்பப் படுபவை. அதுவும் பல நாட்களில் காலையில் நாம் எழும் போது, இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க வசதியாக, சூரியன் தாமதமாக உதிக்கக் கூடாதா என்பது போன்ற எண்ணங்கள் தோன்றும்.

அதே சமயம் சில நாட்கள் எப்போதடா இந்த இரவு முடியும், விடியற்காலை சீகிரமாக வருமா என்று மனம் ஏங்கும் நிலை ஏற்பட்டு விடும். குறிப்பாக உடல் நிலை சரியில்லாத காலங்களில், பகலை விட இரவுதான் அதிக பயமூட்டுவதாகவே அமையும். "நோய்க்கும் பேய்க்கும் இரவில்தான் கொண்டாட்டம்" என்று கூட நம்மூரில் சொல்வார்கள்.

அதிலும் கூட நமது குழந்தைகளுக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லா விடில் அதுவும் இரவில் ஏதேனும் பிரச்சினைகள் வந்து விடில், நடு இரவு சிம்ம சொப்பனமாகவே திகழ்கிறது.

அசுத்தங்களும் கலப்படங்களும் மிகுந்த மும்பை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்களுக்கு முக்கியமன ஒரு பிரச்சினை பால். பாலில் கலப்படம் அதுவும் சுகாதாரமற்ற நீரின் உதவியால் கலப்படம் செய்பவர்களின் மீது பல முறை போலீஸ் நடவடிக்கை எடுத்தாலும் அவர்கள் மட்டும் தமது திருப்பணியை நிறுத்துவதே இல்லை.

இவர்களின் கலப்படத்தால் நேற்று பாதிக்கப் பட்டது எனது ஐந்து வயது குழந்தை. லேசான வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சலால் இரவு முழுதும் குழந்தை அவதிப் பட தூக்கம் முழுமையாக பறி போனது எங்களுக்கு.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அடிக்கடி உடல் நலக் குறைபாடு ஏற்படுவது சகஜம்தான் என்றாலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்சொன்னது போல "இதெல்லாம் சகஜம்தான்" என்ற எங்கள் நினைப்பும், குழந்தையின் உடல் நலக் குறைவை துவக்கத்திலேயே சரியாக அடையாளம் கண்டு பிடிக்காத மருத்துவரின் அலட்சியமும் சேர்ந்து சாதாரண விஷயத்தினை மிகுந்த அபாயகரமாக்கி விட்டது.

அந்த சோதனையில் இருந்து மீண்டாலும், அது ஒரு வித பய உணர்வை எங்கள் மனதில் சேர்த்து வைத்து தைத்து விட்டது. இதனால், அந்த நிகழ்வுக்கு பின்னர், ஏதேனும் சிறு காய்ச்சல் என்றால் கூட பழைய நினைவுகளை தூண்டி பயத்தை உண்டாக்கி விடுகின்றன.

குழந்தையின் உடல்நலம் குறையும் போது, தாயை விட தந்தையின் பொறுப்பு அதிகமாகி விடுகிறது. குழந்தை படும் வேதனை கண்டு துயரப் படுவதும், எப்போது சரியாகும் என்று கவலைப் படுவதுமே அன்னையின் பொறுப்பாக, தந்தைக்கோ மேற்சொன்னவற்றுடன் சேர்த்து, பயப் படாமல் இருப்பது போல வெளியே காட்டிக் கொள்வது, அடுத்து என்ன செய்வது என்று சிந்திப்பது போன்ற கூடுதல் பொறுப்புக்களும் உண்டு. ஒரு முறை கவலையாக இருந்த என்னிடம் எனது மூத்த அதிகாரி ஒருவர் கூறியது இது. "உன்னுடைய முக மாற்றங்கள் உன் குடும்பத்தின் மனநிலையை வெகுவாக பாதிக்கும். எனவே கடினமான தருணங்களில் முகத்தில் கவலையை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டியது உன் பொறுப்பு. எல்லா கெட்ட விஷயங்களும் கடந்து போகும் என்ற நம்பிக்கை மனதில் வலுவாக இருப்பது மிகவும் அவசியம்"

எனது தந்தை மருத்துவமனையில் பணி புரிந்து வருவதால் , சிறுவயதில் இருந்தே மருத்துவமனைகள் அந்நியமாக தோன்றியதில்லை. ஆனால் தன் குடும்பத்திற்கென வரும் பிரச்சினைகள் அதுவும் குழந்தை சம்பத்தப் பட்ட தருணங்களின் போது மருத்துவமனையில் மனம் இயல்பாக செயல்படுவதில்லை . மும்பை போன்ற நகரங்களில் இருபத்து நான்கு மணி நேர மருத்துவமனைகள் இருந்தாலும், பகலில் செல்வதைப் போல நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனைக்கு செல்வது என்பது இயல்பான ஒரு விஷயமாக இருப்பதில்லை.

தாறுமாறான சந்தைகளின் போக்கு தரும் மன அயர்ச்சி காரணமாக, "எப்போதடா வீட்டுக்கு போய் நிம்மதியாக தூங்கலாம்" என்று ஏங்கும் நமக்கு இது போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் தூக்கத்தை நம்மிடம் இருந்து பறித்து விடுகின்றன. கண்ணை பிடுங்கும் தூக்கம் ஒரு புறம், என்ன இப்படி ஆகி விட்டதே என்ற வருத்தம் ஒரு புறம், உள்ளுக்குள் எவ்வளவு பயம் இருந்தாலும் "அதெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை, நாளை சரியாகி விடும்" என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஒரு புறம், நம்மை வாட்டி எடுக்கின்றன.

இது போன்ற தருணங்களில், இரவு முழுக்க நமக்கு தோன்றும் ஒரே சிந்தனை, "இந்த இரவு எப்போது முடியும்?"

பொதுவாகவே காலையில் அலாரம் அடிக்கும் போது "ச்சே! அதற்குள்ளே விடிந்து விட்டதா" என்று வருத்தப் பட்டுக் கொண்டு, இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க முடியாதா என்ற ஏக்கத்துடன் எழுந்திருக்கும் நான் இன்று காலையில் சூரிய வெளிச்சம் வந்ததும் "அப்பாடா" என்றுதான் நிம்மதி பெருமூச்சு விட்டேன். சொல்லப் போனால், விடிந்த பின்னர்தான் ஒரு குட்டித் தூக்கம் போட முடிந்தது.

இரவின் பயங்கள் அத்தனையும் சூரியனைக் கண்டதும் சட்டென விலகிப் போகின்றன. குழம்பிப் போன மனது மீண்டும் தெளிவாக சிந்திக்க ஆரம்பிக்கிறது. உடல் சோர்வு குறைந்தது போல தோன்றுகிறது.

வழக்கம் போல "இது ஒன்றுமில்லை, சாதாரண வயிற்றுக் கோளாறுதான், சீக்கிரம் சரியாகி விடும்" என்று டாக்டர் சொல்ல, அங்குள்ள பொம்மைகளை கண்டதும் சுறுசுறுப்பாக குழந்தை விளையாட ஆரம்பிக்க, மனதிலிருந்த பாரம் இறங்குகிறது. இன்றைக்கு மார்கெட் எப்படி இருக்கும் என்று வழக்கமான சிந்தனைகள் துவங்குகின்றன.

பின்குறிப்பு: தூக்கம் பறி போன இரவுக்கு பின் வரும் பகல் கூட மிகவும் நீளமானதுதான். அதுவும் வீட்டுக்கு சீக்கிரம் போக வேண்டும் என்று எண்ணும் நாளில்தான் அதிக வேலை வருகிறது. அப்புறம் ஒரு முக்கிய விஷயம். இந்த பதிவு கூட கொஞ்சம் தூக்கக் கலக்கத்துடன் எழுதப் பட்டதுதான்.

நன்றி.

8 comments:

KARTHIK said...

ஆமாம் குழந்தைங்க எதுக்கு அழுவுராங்கன்னே தெரியாது அதுவும் இரவு நேரங்கள்னா சொல்லவே வேண்டாம் அதைவிட வேற கொடுமையே இல்லை.

// "இது ஒன்றுமில்லை, சாதாரண வயிற்றுக் கோளாறுதான், சீக்கிரம் சரியாகி விடும்" என்று டாக்டர் சொல்ல, அங்குள்ள பொம்மைகளை கண்டதும் சுறுசுறுப்பாக குழந்தை விளையாட ஆரம்பிக்க,//

இப்போ நல்லா இருக்காள்ல.
கம்முனு பால்பவ்டர் பயன்படுத்துங்க.

//தூக்கம் பறி போன இரவுக்கு பின் வரும் பகல் கூட மிகவும் நீளமானதுதான்.//

ஆமாம் ஒரு நிமிசம் கூட ஒரு நாள்மாதிரி போகும்.

Maximum India said...

நன்றி கார்த்திக்

//ஆமாம் குழந்தைங்க எதுக்கு அழுவுராங்கன்னே தெரியாது அதுவும் இரவு நேரங்கள்னா சொல்லவே வேண்டாம் அதைவிட வேற கொடுமையே இல்லை.//

உண்மைதான் கார்த்திக்

//இப்போ நல்லா இருக்காள்ல.//

இப்போ பழையபடி அட்டகாசம்தான். நமக்குத்தான் தூக்கம் போய் ஒரு மாதிரியா இருக்கு.

//கம்முனு பால்பவ்டர் பயன்படுத்துங்க.//

நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

//ஆமாம் ஒரு நிமிசம் கூட ஒரு நாள்மாதிரி போகும்.//

மனிதனுக்கு எல்லாமே அனுபவம்தான் இல்லே?

அக்கறையான விசாரிப்புக்கு நன்றி கார்த்திக் :)

Unknown said...

நல்ல எழுத்து நடை ,,,,,,

அசோசியேட் said...

குழந்தைகள் புரியாமல் அழும்போது நமக்கும் கலவரம் ஆகத்தான் இருக்கும்.
பெரியவர்களாவது என்ன பிரச்சினை என்று கேட்டு தெரிந்து கொள்ளலாம். குழந்தைகளிடம் எப்படி.?
இதுபோல சமயங்களில் சம்பந்தப்பட்ட குழந்தைகள் தாய் அல்லது தந்தையை தவிர மற்ற யாரையும் அண்ட விடாது.
எங்களது கூட்டு குடும்பமாகையால் இது ஒரு தினப்படி நிகழ்ச்சி.

குழந்தை இப்போது நலம்தானே?

Maximum India said...

நன்றி அருள்ராஜ்

Maximum India said...

நன்றி அசோசியேட்

//குழந்தைகள் புரியாமல் அழும்போது நமக்கும் கலவரம் ஆகத்தான் இருக்கும்.
பெரியவர்களாவது என்ன பிரச்சினை என்று கேட்டு தெரிந்து கொள்ளலாம். குழந்தைகளிடம் எப்படி.?//

உண்மைதான்.

//இதுபோல சமயங்களில் சம்பந்தப்பட்ட குழந்தைகள் தாய் அல்லது தந்தையை தவிர மற்ற யாரையும் அண்ட விடாது.
எங்களது கூட்டு குடும்பமாகையால் இது ஒரு தினப்படி நிகழ்ச்சி.//

இது போன்ற சமயங்களில் கூட்டுக் குடும்பங்களாக இருப்பது ஒரு பெரிய மன தெம்பைக் கொடுக்கும். தனியாக அதுவும் எங்களைப் போல சொந்த ஊரை விட்டு வெகு தூரம் தள்ளி இருப்பவர்களுக்கு இது போன்ற தருணங்கள் சிரமமாகவே இருக்கும்.

//குழந்தை இப்போது நலம்தானே?//

நலமே. ஆனால் இரண்டு நாட்கள் தொடர்ந்து தூக்கம் போய் எனக்குத்தான் அசதியாக உள்ளது. :)

நன்றி.

வால்பையன் said...

கலப்படம் எனபது பிடியில்லாத கத்தி, அது நம்மையும் நம் குடும்பத்தையும் கூட தாக்கலாம் என்று ஏன் உணர மறுக்கிறார்கள்.

உங்களுக்கு நேர்ந்த சங்கடத்திற்கு எனது வருத்தங்கள்!

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

//கலப்படம் எனபது பிடியில்லாத கத்தி, அது நம்மையும் நம் குடும்பத்தையும் கூட தாக்கலாம் என்று ஏன் உணர மறுக்கிறார்கள்.//

பணம் சம்பாதிக்க எதுவும் தவறில்லை என்ற எண்ணம் நமது சமூகம் முழுக்க ஊடுருவியிருப்பது வருந்தத்தக்க ஒரு விஷயம். பால் போல தூய்மை என்பார்கள். இப்போது பால் போல கலப்படம் என்று சொல்லலாம்.

//உங்களுக்கு நேர்ந்த சங்கடத்திற்கு எனது வருத்தங்கள்!//

விசாரிப்புக்கு நன்றி வால்பையன்.

Blog Widget by LinkWithin