Saturday, March 28, 2009

நாட்டுக்குத் தேவை அரசியல் தலைவரா? செயல் தலைவரா?


அறுதிப் பெரும்பான்மை இல்லாத ஒரு அரசுக்கு கூட்டணி கட்சிகளால் ஏற்படும் தொல்லைகள் ஏராளம். இந்த தொல்லைகள் அரசை தனது இயல்பான போக்கில் செயல்பட விடாமல் தடுக்கின்றன. முந்தைய கூட்டணி அரசாங்கள் சந்தித்த இது போன்ற தொந்தரவுகளை தவிர்க்க விரும்பிய இப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒரு புதிய பரிசோதனை முயற்சியில் இறங்கியது.

தலைவலி தரும் அரசியல் பிரச்சினைகளை கவனித்துக் கொள்ள ஒரு தலைவர். அரசாங்கத்தை நடத்திச் செல்ல ஓர் பிரதமர் என்று ஒரு வித இரட்டை ஆட்சி முறை உருவாக்கப் பட்டது. (சோனியா காந்தி வெளிநாட்டினர் என்றும் அதனால் அவர் பிரதமர் பதவி ஏற்கக் கூடாது என்று ஒரு தரப்பினர் வாதிட்டதும் இத்தகைய இரட்டை ஆட்சி முறைக்கு ஒரு காரணமாக இருந்தது). வணிக நிறுவனங்களில் இருப்பது போல பிரதமருக்கும் அவரது அமைச்சரவைக்கும் சில இலக்குகள் நிர்ணயிக்கப் பட்டன. (அதே சமயம், வணிக நிறுவனங்களின் செயல் தலைவருக்கு இருப்பது போல தனது சகாக்களை தேர்ந்தெடுக்கும் முழுமையான உரிமை பிரதமருக்கு வழங்கப் பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது). பொதுவாகவே பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்றி வந்த இந்தியாவிற்கு இது மிகவும் புதிய ஒன்று.

இந்த பரிசோதனை வெற்றி பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன். குறிப்பாக, மன்மோகன் சிங் அவர்களின் பொருளாதார அறிவு மற்றும் 1991-96 இல் ஒரு நிதி அமைச்சராக அவரது செயல்பாடு ஆகியவை அவர் மீது ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

முதல் நான்கு வருடங்கள் நாட்டின் பொருளாதாரம் மிகச் சிறப்பாகவே வளர்ச்சி பெற்றது. ஆனால், இந்த வளர்ச்சிக்கு உண்மையில் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகள்தான் மட்டும்தான் காரணமா என்ற கேள்விக்கு இல்லை என்றுதான் கூற முடியும். உலக சந்தைகளில் குறிப்பாக அமெரிக்க நிதி சந்தைகளில் நிலவிய முன்னேற்றங்கள் மற்றும் நிதி சந்தைகளின் தாக்கத்தினால் செயற்கையாக ஏற்பட்ட அதிக அளவு தேவைகள் பல நாடுகளின் பொருளாதாரங்களில் பாதிப்பினை ஏற்படுத்தின. அந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதுதான் ஒரு (கசப்பான) உண்மையாக இருக்க முடியும். அமெரிக்காவின் நிதி சந்தைகள் சரிந்த உடனேயே இந்திய பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியைக் கண்டது (அலுவாலியா உட்பட பல பொருளாதார மேதைகளின் கணிப்பையும் பொய்யாக்கி) இந்த அனுமானத்தினை உறுதி செய்கின்றன. மேலும், கடந்த நான்கு வருட பொருளாதார முன்னேற்றத்தின் பெரும் பங்கு வணிக நிறுவனங்களையும் அதன் தலைவர்களையுமே போய் சேர்ந்தது என்பது வேதனைக்குரிய உண்மையாகும்.

பொருளாதாரத்தில் மட்டுமே ஓரளவுக்கு வெற்றி பெற்ற இந்த அரசாங்கத்தின் இதர செயல்பாடுகள் பெருமளவு திருப்தி அளிக்கும் படி இல்லை. குறிப்பாக, உலக அரங்கில் மற்றும் இந்திய மக்கள் மத்தியில் இந்தியாவின் உண்மையான தலைவர் யார் என்று கடைசி வரை தெளிவாக்கப் படவே இல்லை. விளைவு, பல முக்கிய முடிவுகள் காலதாமதத்திற்கு உள்ளாயின அல்லது கிடப்பில் போடப் பட்டன. இந்த (வேகமான) செயலற்ற நிலை, அரசின் முக்கிய கடமைகளான தேசப் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. பல சந்தர்ப்பங்களில் பிரதமரின் கருத்துக்கள் முறையாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கப் படவில்லை. அப்படி வெளிப்பட்ட கருத்துக்களில் பல அவரது கட்சியினராலேயே அதிகம் மதிக்கப் படவில்லை. சொந்த கட்சியே இப்படி இருக்கும் போது கூட்டணி கட்சியினரைப் பற்றி சொல்லவே வேண்டாம். பல சந்தர்ப்பங்களில் அரசின் முழு கட்டுப்பாடு பிரதமரிடம்தான் இருக்கிறதா என்ற சந்தேகம் கூட எழுந்தது. அரசாங்கத்திற்கான பல கோரிக்கைகள் சோனியா காந்தி அவர்களிடமே முன் வைக்கப் பட்டன.

முந்தைய கூட்டணி ஆட்சிகளில், மாற்று கட்சி அமைச்சரை தேர்ந்தெடுக்கும் உண்மை அதிகாரம் மட்டுமே பிரதமருக்கு இருந்ததில்லை. இந்த ஆட்சியில், தனது சொந்த கட்சியை சேர்ந்த அமைச்சரை தேர்ந்தெடுக்கக் கூட உண்மையான அதிகாரம் எதுவும் இல்லை என்பதாகவே தோன்றியது.


இந்தியா பல மொழி, இனம், கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஒரு நாடு. அண்டை நாட்டின் அச்சுறுத்தல்கள், உள்நாட்டு குழப்பங்கள், பொருளாதார பின்னடைவு, தீவிரவாத அச்சுறுத்தல்கள் போன்ற கடினமான சவால்களை இந்தியா எதிர்கொண்டிருக்கும் தருணம் இது. பொருளாதார பின்னடைவு என்பது இந்த சவால்களில் ஒன்று மட்டுமே தவிர ஒன்றே ஒன்று அல்ல.

இந்தியாவின் இன்றைய தேவை, பெரும்பான்மையான மக்களால் தலைவராக ஏற்றுக் கொள்ளப் படக் கூடிய ஒருவரே இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். அவர், தனது கட்சியின் முழு மதிப்பையும் மரியாதையும் பெற்றிருக்க வேண்டும். பிரிட்டிஷ் பாராளுமன்ற நடைமுறையை பின்பற்றி வரும் நாம் பிரதமர் விஷயத்திலும் அவர்களின் நடைமுறையையே பின்பற்ற வேண்டும். அதாவது பிரதமர் என்பவர் நாட்டின் முதல் தலைவர். அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கும் அவரே முதல் தலைவர்.

எனவே, அரசியல் (மக்கள்) தலைவரே பிரதமர் பதவிக்கு வர வேண்டும். மன்மோகன் சிங், அலுவாலியா போன்ற பொருளாதார மேதைகள் ஆட்சிக்கு துணை மட்டும் நிற்கலாம் என்பதே என் கருத்து.

நன்றி.

3 comments:

Itsdifferent said...

that is so true. Normally we dont managers out of people who are very good, technically (in our case). They are considered Subject matter experts (SMEs) and they are not good leaders (there are exceptions as always). So we select managers who can motivate the team, look beyond the current crisis, do not manage by fear, willing to let go of his powers for the Organizational interest, etc.
And thats why I think Manmohan and Chidambaram have been such a failure for our nation. They are SMEs, not good leaders.

Maximum India said...

சரியாக விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் itsdifferent

அதே சமயம் மன்மோகன் சிங் அலுவாலியா வரிசையில் சிதம்பரம் வர மாட்டார் என்றே நினைக்கிறேன். காரணம் அவர் ஒரு தொழிற் முறை அரசியல்வாதி. ஆனால் அவரிடம் மேலைநாட்டு சிந்தனைத் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்திய மக்களின் பிரச்சினைகளை சரியாக புரிந்து கொள்ள முடிய வில்லை என்றே நினைக்கிறேன்.

நன்றி.

வால்பையன் said...

ஒரு முறை கூட சிறை செல்லாத சிங் இந்திய அரசியல் தலைவராக இருக்கும் அடிப்படை தகுதியை இழக்கிறார்!

உண்மையிலேயே இன்றைக்கு இருக்கும் அரசியல்வாதிகளிடன் நாட்டு மக்கள் மேல் அக்கறை இருக்கா இல்லையான்னு தெரியலையே?

Blog Widget by LinkWithin