Skip to main content

2004 = தமிழ் நாடு, 2009 = மேற்கு வங்கம்?

2004 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் எளிதாக ஆட்சியைப் பிடிக்கும் என்று அந்த கட்சியைச் சார்ந்த பலரே எண்ணியிராத போது, அந்த கட்சியின் தலைமை, கூட்டணி அமைக்கும் விஷயத்தில் ஒரு அதிரடி முடிவு எடுத்தது. ராஜிவ் காந்தி கொலை சம்பந்தமாக அமைக்கப் பட்ட ஜெயின் கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப் பட்ட எந்த கட்சியின் அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து அப்போதைய ஐ.கே குஜரால் அரசு கவிழ காரணமாக இருந்ததோ, அந்த கட்சியுடனேயே (திமுக) தமிழகத்தில் கூட்டணி அமைக்கும் ஒரு எதிர்பாரா முடிவை காங்கிரஸ் தலைமை எடுத்தது. அது மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப் பட்ட பாமக, மதிமுக போன்ற கட்சிகளுடனும் பல மாநிலங்களில் தனக்கு நேர் போட்டியாளர்களான இடது சாரி கட்சிகளுடனும் இனைந்து ஒரு மெகா கூட்டணியை காங்கிரஸ் அமைத்தது.

விளைவு அனைவரும் அறிந்ததுதான். பாண்டிச்சேரியையும் சேர்த்து தமிழகத்தின் நாற்பது தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றி அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு பெரும் பலமாக இருந்ததுடன் எளிதில் ஆட்சியை அமைக்கவும் உதவி புரிந்தது. தனிப் பட்ட அளவில் காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் இடையே மக்களவை தொகுதி வெற்றி எண்ணிக்கையில் இருந்த வித்தியாசம் நாற்பது சீட்டுகளுக்கும் குறைவுதான் என்பது கவனிக்கத் தக்கது.

தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் தனது கணக்கினை நடைபெறும் தேர்தலில் அதிகரித்துக் கொள்ள முடியாத (சொல்லப் போனால் குறையவே வாய்ப்புக்கள் அதிகம்) காங்கிரஸ் இப்போது மேற்கு வங்கத்தின் மீது குறி வைத்துள்ளது.

தமிழகத்தைப் போலவே காங்கிரசால் தனித்து போட்டியிட்டு பெருமளவு சாதிக்க முடியாத ஒரு மாநிலம் மேற்கு வங்கம். பிரணாப் முகர்ஜீ போன்ற காங்கிரஸின் மூத்த தலைவராலேயே அங்கு 2004 தேர்தல் வரை வெற்றி பெற முடிய வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இடது சாரிகள் பலம் மிகுந்த அந்த மாநிலத்தில், காங்கிரசில் இருந்து துடிப்பான இளம் தலைவரான மம்தா பானர்ஜீ வெளியேறியது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே இருந்தது. மேலும் இடது சாரி கட்சிக்கு எதிரான வாக்குகளை அவர் சிதறடித்தது மேற்கு வங்கத்தில் இனிமேல் காங்கிரசுக்கு வாய்ப்பில்லை என்றே எண்ண வைத்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் தனது கட்சியின் குழந்தையான திரிணாமுல் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து, அதிலும் இரண்டாவது கட்சி என்ற அந்தஸ்த்துக்கும் ஒப்புக் கொண்டது மற்றும் நாற்பத்திரண்டு தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 14 இடங்களில் மட்டுமே போட்டியிட ஒப்புக் கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அது மட்டுமல்ல, அந்த 14 இடங்களும் கூட வெற்றி வாய்ப்பு குறைந்த இடங்கள் (இடது சாரிகளின் கோட்டைகள்) என்று கருதப் படுபவை. இந்த நிலைப் பாடு காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த கூட்டணி முடிவுக்கு கீழ்கண்டவாறு சில காரணங்கள் இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்யும் இடது சாரிகளின் மீது அதிருப்தி (ஓரளவுக்கேனும்) எழுந்தால், அதை சிந்தாமல் சிதறாமல் கூட்டுச் சேர்ப்பது.

சிங்கூர் விவகாரத்தில், மேல் தட்டு மற்றும் மத்திய வர்க்க மக்களின் ஆதரவு இடது சாரி அரசுக்கு இருந்தாலும், எளிய மக்கள் மத்தியில் மம்தாவின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

மேற்சொன்ன இரண்டு காரணங்களால் ஒருவேளை மாநில அரசுக்கு எதிரான பெரிய அலை உருவானால் அந்த அலையின் உதவியால் அதிக உறுப்பினர்களைப் பெற்று மத்திய அரசினை மீண்டும் தக்க வைத்துக் கொள்வது.

மற்றுமொரு பெரிய குறிக்கோள் என்னவென்றால், இடது சாரிகளின் பலம் (நாடாளுமன்ற தொகுதிகள்) மேற்கு வங்கத்தில் குறையும் போது மூன்றாவது அணியின் கட்டுப் பாடு குலைந்து போவதுடன் அந்த கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோருவது என்பது ஒரு கடினமான காரியமாகி விடும். அப்போது, காங்கிரஸ் கட்சியால், தான் ஒரு மதச்சார்பற்ற கட்சி என்ற போர்வையில், பல உதிரிக் கட்சிகளை தனது கூட்டணிக்குள் இழுக்க முடியும்.

ஆக மொத்தத்தில், இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தின் வோட்டுக்கள் மத்திய அரசை நிர்ணயிக்கக் கூடிய வலிமை கொண்டதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

நன்றி.

Comments

citizen said…
"2004 = தமிழ் நாடு, 2009 = மேற்கு வங்கம்?" என்பது 100% சரியே என்று தோன்றுகிறது . மார்க்சிஸ்ட் மிக பெரிய இழப்பை எதிர் நோக்கி உள்ளது .
Maximum India said…
அன்புள்ள சிட்டிசன்

கருத்துரைக்கு நன்றி.

கூட்டணி மாற்றங்கள் மற்றும் நம்பகத்தன்மை இழப்பு ஆகியவை இந்த முறை கம்யூனிஸ்ட் கட்சிகளை பெருமளவுக்கு பாதிக்கப் போகிறது.

நன்றி.
மக்கள் மனதில் என்ன உள்ளது என்பது இப்போது தெரியாது. இலவசங்களும் கவர்ச்சி அறிவிப்புகளும் பாதிக்காமல் சிந்த்தித்து ஓட்டு போட்டால் உருப்படியான கட்சி ஆட்சி பிடிக்கும். என்னை கேட்டால் எவ்வளவோ சீர்திருத்தங்களை செய்கிறது தேர்தல் ஆணையம். ஒவ்வொரு கட்சியின் செயல்பாடு குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தேர்தலுக்கு முன் கட்டுப்பாடற்ற , கட்சி பாகுபாடற்ற , நல்ல மனிதர்களை கொண்ட அமைப்பின் மூலம் சர்வே நடத்தி கருத்து கணிப்பை வெளியிட்டால் கொஞ்சம் மக்கள் உணர்ந்து ஓட்டு போட வசதியாக இருக்கும். அதற்கும் நம்ம வேட்டிகள் கட்சி சாயம் பூசாமல் இருந்தால் சரி.
முலயாம் மற்றும் மாயாவதி தனபட்ட நிலையில் ஒருவர் மட்டும் மிக அதிக தொகுதிகளில் வெற்றி பெற வில்லை என்றால் மூன்றாவது அணி கடினம் தான்.மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் சில இடங்களை மட்டுமே கூடுதலாக இழக்கும் என்பது என் கருத்து
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

கருத்துரைக்கு நன்றி.

//இலவசங்களும் கவர்ச்சி அறிவிப்புகளும் பாதிக்காமல் சிந்த்தித்து ஓட்டு போட்டால் உருப்படியான கட்சி ஆட்சி பிடிக்கும். //

உண்மையில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. "There is no free lunch" என்று வெகுநாட்களுக்கு முன்னமேயே சொல்லப் பட்டிருக்கிறது. இதைப் பற்றி ஒரு விரிவான பதிவே போடலாம் என்று நினைக்கிறேன்.

//என்னை கேட்டால் எவ்வளவோ சீர்திருத்தங்களை செய்கிறது தேர்தல் ஆணையம். ஒவ்வொரு கட்சியின் செயல்பாடு குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தேர்தலுக்கு முன் கட்டுப்பாடற்ற , கட்சி பாகுபாடற்ற , நல்ல மனிதர்களை கொண்ட அமைப்பின் மூலம் சர்வே நடத்தி கருத்து கணிப்பை வெளியிட்டால் கொஞ்சம் மக்கள் உணர்ந்து ஓட்டு போட வசதியாக இருக்கும். அதற்கும் நம்ம வேட்டிகள் கட்சி சாயம் பூசாமல் இருந்தால் சரி//

நல்ல யோசனைதான்.

தொலைகாட்சிகளின் வீச்சு வெகுவாக அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில், சமூக பொருளாதார விவாதங்களை கட்சியின் தலைவர்கள் (நேரடி ஒளிபரப்பில்) மக்கள் முன்னிலையில் நடத்தலாம் (அமெரிக்காவைப் போல) எதையெதையோ காப்பி அடிக்கும் நாம் இதையும் கொஞ்சம் காப்பி அடிக்கலாம்.

மக்களும் கொஞ்சம் சாதி மத இன பாகுபாடுகளை மறந்து வாக்களித்தால் நன்றாக இருக்கும்.

நன்றி.
Maximum India said…
அன்புள்ள சதுக்கபூதம்

கருத்துரைக்கு நன்றி.

//முலயாம் மற்றும் மாயாவதி தனபட்ட நிலையில் ஒருவர் மட்டும் மிக அதிக தொகுதிகளில் வெற்றி பெற வில்லை என்றால் மூன்றாவது அணி கடினம் தான்.//

இவர்கள் மட்டுமல்ல இடது சாரிகள் பெருமளவுக்கு வெற்றி பெற வில்லையென்றாலும் மூன்றாவது அணி தடுமாறும் என்றே நினைக்கிறேன்.

//மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் சில இடங்களை மட்டுமே கூடுதலாக இழக்கும் என்பது என் கருத்து//

இருக்கலாம். அதே சமயம், துவக்கத்தில் சிறிதாக உருவாகும் அலைகள் சமயத்தில் நிலைமையையே தலைகீழாக திருப்பி போட்டு விடுவதை நாம் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம்.

நன்றி.
என்னதான் குட்டிகரணம் அடிச்சாலும் தமிழகத்தில் காங்கிரஸுக்கு அல்வா தான்!
Maximum India said…
கருத்துரைக்கு நன்றி வால்பையன்.

//என்னதான் குட்டிகரணம் அடிச்சாலும் தமிழகத்தில் காங்கிரஸுக்கு அல்வா தான்!//

உண்மைதான். ஆனால், அந்த அல்வா எவ்வளவு பெரியது என்பது மாற்றுத் தரப்பில் யார் பிரதமர் வேட்பாளர் மற்றும் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன என்பதை பொருத்து அமையும்.

நன்றி.

Popular posts from this blog

வாண வேடிக்கையா? வெறும் புஸ்வாணமா?

பெரிதாக வெடிக்கப் போகிறது அல்லது வண்ண மயமான ஒளிச்சிதறல்கள் பூக்கப் போகின்றன என்றெல்லாம் பெரிதாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சில பட்டாசுகள் புஸ்வாணமாக போவதுமுண்டு. தீபாவளி தினத்தன்று நமக்கெல்லாம் சில சமயங்களில் ஏற்பட்டு விடும் இது போன்ற ஒரு அனுபவம் சென்ற வாரம் பங்குசந்தையிலும் ஏற்பட்டது. சென்ற வாரம் நம்மை ஏமாற்றிய புஸ்வாணங்களைப் பற்றி முதலில் பார்ப்போம். முதல் புஸ்வானம் - பாரதி ஏர்டெல் தென் ஆப்பிரிக்க தொலைபேசி நிறுவனமான எம்டிஎன்-னுடான இணைப்பு இல்லையென்றவுடன் முதலில் துள்ளிக் குதித்த பாரதி பங்கு, வெகு சீக்கிரத்திலேயே ஆடி அடங்கி விட்டது. எம்டிஎன்னுடன் இணையாததால் சில அபாயங்கள் நீங்குகின்றன என்று அந்த பங்கினை அதிக விலையில் வாங்கி வைத்து ஆசையுடன் காத்திருந்த பலருக்கு பாரதி ஒரு பெரிய புஸ்வாணமாகவே அமைந்தது. இரண்டாவது புஸ்வானம் - ரிலையன்ஸ் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு கொடுப்பதாக அறிவித்தது. இந்தியாவின் 'நம்பர்-ஒன்' வணிகத் தாளான எகோநோமிக் டைம்ஸ் பத்திரிக்கை, தீபாவளி வாணவேடிக்கை ஆரம்பித்து விட்டதாக முதல் பக்கத்தில் தலைப்ப...

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...