Wednesday, March 25, 2009

காங்கிரஸ் அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி - எவ்வளவு மார்க் போடலாம்?


இது தேர்வுகளின் காலம். பள்ளிகள்/ கல்லூரிகள் இறுதி தேர்வு நடத்தி மாணவர்களின் செயல்பாடு மற்றும் தேர்ச்சி குறித்து முடிவெடுக்கும் நேரம். மத்தியில் ஐந்து ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கும் கூட ஒரு வகையில் இது ஒரு பரீட்சை நேரம்தான். நம்முடைய பார்வையில் காங்கிரஸ் அரசின் கடந்த ஐந்து ஆண்டு கால செயல்பாடு எப்படி என்று பார்ப்போமா?

மாணவர்களுக்கு எப்படி தமிழ், ஆங்கிலம், கணக்கு அறிவியல் என வேறு வேறு பாடத் திட்டங்களில் தேர்வுகள் நடக்கிறதோ, அது போல, இந்த ஆட்சியின் மதிப்பீட்டையும், பொருளாதாரம், தலைமைப் பண்பு, தேசப் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், சமூக நலத் திட்டங்கள் என வேறு வேறு பகுதிகளாக மதிப்பீடு செய்யலாம்.

பொருளாதாரம்:

மன்மோகன் சிங், ப.சிதம்பரம் மற்றும் அலுவாலியா ஆகிய மூன்று பொருளாதார மேதைகளின் வழிநடத்துதலில் கடந்த ஐந்து ஆண்டுகளில், முதல் நான்கு ஆண்டுகள் இந்தியப் பொருளாதாரம் அசுர வளர்ச்சி அடைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த அசாதாரண வளர்ச்சிக்கு உலக (முக்கியமாக அமெரிக்க) பொருளாதார வளர்ச்சியும் ஒரு முக்கிய காரணம் என்றாலும், இந்த மூவர் கூட்டணியின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. அதே சமயம், கடைசி ஆண்டு, காங்கிரஸ் கட்சியே மறக்க விரும்புகிற ஆண்டாகவே இருக்கும். பொருளாதார பின்னடைவு, பங்கு சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி, தொழிற் துறை சரிவு, வேலை இழப்புக்கள், வரலாறு காணாத விலைவாசி ஏற்றம் போன்றவை முதல் நான்கு ஆண்டு கால பொருளாதார சாதனைகளை மூடி மறைக்கும் கிரகணங்களாகவே இருந்தன என்றால் மிகையாகாது. இவற்றுக்கும் அமெரிக்க நிதி சந்தைகளின் வீழ்ச்சிதான் முக்கிய காரணம் என்றாலும், "பொருளாதார கண்காணிப்பு" விஷயத்தில் இந்த மிகப் பெரிய மேதைகள் கோட்டை விட்டது வருத்தத்துக்குரிய ஒரு விஷயம்தான். மேலும், "அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி" என்பது இவர்களின் குறைந்த பட்சத் திட்டத்தில் இருந்தாலும், அது எந்த அளவு நிறைவேறியது என்பது ஒரு கேள்விக் குறியே. உலக பணக்காரர்களின் பட்டியலில் இந்தியர் பலர் இடம்பெற்றது பெருமைக்குரிய ஒன்றுதான் என்றாலும், விவசாயிகளின் தற்கொலையை தடுக்க முடியாமல் போனது வெட்கப் பட வேண்டிய ஒன்றுதான்.


தலைமைப் பண்பு:

இந்த அரசின் உண்மையான தலைவர் யார் என்றும் உண்மையில் தலைவர் என்று ஒருவர் இருக்கிறாரா என்று கேள்வி எழும் வண்ணம் இந்த அரசின் செயல்பாடு பல சமயங்களில் அமைந்திருந்தது. இதனால் முக்கிய தருணங்களில் அரசின் முடிவு என்ன என்பதே மக்களுக்கு தெரியாமல் இருந்தது. கூட்டணி கட்சிகளின் மந்திரிகள் மட்டுமின்றி சொந்த கட்சியின் அமைச்சர்களே பிரதமரின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தார்களா என்பது கூட கேள்விக்குறியே. அமெரிக்க அணு ஒப்பந்த விவகாரத்தில் உறுதியாக இருந்தது பாராட்டுக்குரிய ஒன்றுதான் என்றாலும், சிபு சோரேன் விவகாரம், மும்பை தாக்குதலின் போது கமாண்டோ தாக்குதலில் தாமதமானது, இட ஒதுக்கீடு விவகாரம், ராஜ் தாக்கரே விவகாரம் போன்றவற்றில் அரசியல் தலைமையின் பலவீனமே அதிகம் வெளிப் பட்டது.


வெளிநாட்டு உறவு:

பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுடனான உறவு இந்த ஆட்சியில் பெரும்பாலும் சுமுகமாகவே இருந்தது. மும்பை தாக்குதலுக்குப் பின்னர், பாகிஸ்தானின் மீது இந்தியா அளித்த ராஜரீக நிர்பந்தங்கள் பாராட்டும்படியே இருந்தன. அதே சமயம், இந்த அரசு, அமெரிக்காவிற்கு குறிப்பாக புஷ் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது போல காட்டிக் கொண்டது இந்தியாவின் தனித் தன்மையை பாதித்தது. ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து வாக்களித்ததும் இந்தியாவின் நம்பகத் தன்மையை சர்வதேச அரங்கில் குறைத்து . ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய அரசின் செயல்பாடு அவ்வளவு திருப்தி கரமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். தெற்கு ஆசிய பிராந்திய வல்லரசாக காட்டிக் கொள்ள விரும்பும் இந்தியாவால், தனது அண்டைநாட்டில் நடைபெறும் ஒரு மிகப் பெரிய அளவிலான உள்நாட்டுப் போரில் உருப்படியாக ஏதும் செய்ய முடியாமல் போனது வேதனைப் பட கூடிய விஷயம்தான்.


தேசப்பாதுகாப்பு:

மத்திய அரசு இந்த விஷயத்தில் தனது பொறுப்பில் இருந்து முழுக்க முழுக்க தவறி விட்டது என்றே சொல்ல வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒவ்வொரு வருடமும் எத்தனை குண்டு வெடிப்புக்கள்? திரும்பி பார்க்கவே வேதனையாக இருக்கிறது. இந்தியாவின் மாநகர மக்கள் வெளியே செல்லவே பயப்படும் நிலை உருவானது. நவம்பர் மாத மும்பை தாக்குதல் வரை அரசு இந்த விஷயத்தில் பெரிய அளவில் தீவிரம் காட்டியதாகவே தெரிய வில்லை. முன்னாள் உள்துறை அமைச்சர், தாக்குதல் நடந்த ஒவ்வொரு முறையும் ஒரு புதிய ஆடை அணிந்து கொண்டு பேட்டி அளித்ததை விட வேறெந்த பெரிய நடவடிக்கையும் எடுத்ததாக தெரிய வில்லை. இந்த விவகாரம் அரசுக்கு பல மாநகரங்களில் எதிராகவே முடியும் என எதிர்பார்க்கப் படுகிறது.


சமூக நலத் திட்டங்கள்:

குறைந்த பட்ச பொதுத் திட்டத்தில் (Common Minimum Programme) உள்ள பெரும்பாலான சமூக நலத் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு விட்டதாக சொல்லப் படுகின்றது. சுய உதவி குழுக்கள், அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை போன்ற சமூக நல திட்டங்கள் ஓரளவுக்கு சிறப்பாகவே செயல் படுத்தப் பட்டதாக தெரிகிறது. வங்கிகளின் மூலமாக விவசாயக் கடன்கள் பெருமளவுக்கு வழங்கியிருப்பது, விவசாயிகளை கந்து வட்டிகாரர்களிடம் இருந்து ஓரளவுக்கு காப்பாற்றும். அதிகரித்திருப்பது, தேர்தலை முன்னிட்டுதான் என்றாலும், விவசாய கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு போன்றவற்றை ஒரு வகையில் மக்கள் நலத் திட்டங்களாகவே கொள்ளலாம். உயர்த்தப் படாத ரயில் கட்டணம் மற்றும் அதிகம் உயர்த்தப் படாத பெட்ரோல் விலைகளும் எளிய மற்றும் மத்திய தர மக்களை மகிழ்ச்சியுறச் செய்தன.


ஊழல்:

நாடாளுமன்ற நம்பிக்கை ஓட்டெடுப்பு, பங்கு சந்தை செயல்பாடு மற்றும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தவிர இந்த ஆட்சியின் மீது எதிர் கட்சிகளே அதிகம் ஊழல் குற்றச்சாட்டுக்களை வீச வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கு பிரதமரின் அப்பழுக்கற்ற 'இமேஜ்' ஒரு காரணமென்றாலும், இன்றைய தேதியில் மக்களின் அன்றாட வாழ்வோடு ஊழல் கலந்து விட்ட நிலையில், அரசு "ஊழல்" என்பதையே மக்கள் பெரிய அளவில் பொருட்படுத்தாத காரணத்தினாலேயே, "ஊழல் குற்றச்சாட்டுக்கள்" தேர்தல் பிரச்சாரத்தில் பெரிய அளவில் இடம் பெற வில்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது.

ஆக மொத்தத்தில், சாதனைகளும் வேதனைகளும் சரிவர கலந்தே காணப் படுகின்ற இந்த அரசுக்கு எவ்வளவு மதிப்பெண் (தொகுதிகள்) போட வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம், பொறுப்பு, கடமை, உரிமை அனைத்தும் நம் நாட்டு மக்களனைவருக்கும் பொதுவானது என்பதால், தீர்ப்பு வழங்கும் பொறுப்பை மக்களிடமே விட்டு விடுவோம். அவர்கள் எத்தனை மார்க் போடப் போகிறார்கள் என்பதுதான் இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து விடப் போகிறதே?

நன்றி.

8 comments:

Anonymous said...

//// தலைமைப் பண்பு: /////

பற்றி கூறியது சரிதான்!

////////// பொருளாதாரம்:

மன்மோகன் சிங், ப.சிதம்பரம் மற்றும் அலுவாலியா ஆகிய மூன்று பொருளாதார மேதைகளின் வழிநடத்துதலில் கடந்த ஐந்து ஆண்டுகளில், முதல் நான்கு ஆண்டுகள் இந்தியப் பொருளாதாரம் அசுர வளர்ச்சி அடைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. //////

--- இதை ஒப்புகொள்ள முடியாது, இவர்களது லட்சணம் தெரியாதா? அலட்சியமான போக்கு, சிதம்பரம் பங்கு சந்தையில் நிறைய விளையாடியிருக்கிறார், ஸ்பெக்ட்ராம்? பொருளாதார ஊழல்கள் அதிகம் ஐயா...! எந்த நடவடிக்கையும் இல்லை! நல்ல நிர்வாகம் இருந்தது என்றால் எவ்வளவு முன்னேறியிருக்கும்?

வால்பையன் said...

பொது மக்கள் மார்க் ஒழுங்காத்தான் போடுவாங்க!
ஆனா இவங்க மக்கள்கிட்ட காசு, இலவசம்னு அறிக்கை விட்டு பிட்டு அதாங்க கள்ளஓட்டுல வந்துர போறானுங்க!

KARTHIK said...

// அமெரிக்க அணு ஒப்பந்த விவகாரத்தில் உறுதியாக இருந்தது பாராட்டுக்குரிய ஒன்றுதான் என்றாலும், சிபு சோரேன் விவகாரம், மும்பை தாக்குதலின் போது கமாண்டோ தாக்குதலில் தாமதமானது,//

மக்கள் மறந்துபோன விசயம் இது.
இதுக்காக அவங்க இவ்வளவு கீழ வந்திருக்க வேண்டியதில்லை.

இந்தமுறையும் காங்கிரஸ் அரசுகுத்தான் வாய்பு அதிகம் போல தெரியுது.

பாப்போம் என்ன நடக்குதுன்னு

Maximum India said...

அன்புள்ள மணிப்பக்கம்

கருத்துரைக்கு நன்றி


//--- இதை ஒப்புகொள்ள முடியாது, இவர்களது லட்சணம் தெரியாதா? அலட்சியமான போக்கு, சிதம்பரம் பங்கு சந்தையில் நிறைய விளையாடியிருக்கிறார், ஸ்பெக்ட்ராம்? பொருளாதார ஊழல்கள் அதிகம் ஐயா...! எந்த நடவடிக்கையும் இல்லை! நல்ல நிர்வாகம் இருந்தது என்றால் எவ்வளவு முன்னேறியிருக்கும்?//

ஊழல்கள் பற்றி நான் பதிவிலேயே கூறி உள்ளேன். அதே சமயம், இந்திய சரித்திரத்தில் இல்லாதவாறு அசுர பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகின் இரண்டாவது வேகமாக வளரும் பொருளாதாரம் போன்ற மிகப் பெரிய சாதனைகள், ஆட்சியாளர்களின் பங்களிப்பு இல்லாமலேயே தானாக நிகழ்ந்து விடும் என்று நம்புகிறீர்களா? குறைகளை சுட்டிக் காட்டும் அதே சமயத்தில், நிறைகளையும் பாராட்ட வேண்டியது ஊடகத்தினரின் ஒரு முக்கிய கடமை என்றே நினைக்கிறேன்.

நன்றி.

Maximum India said...

நன்றி வால்பையன்

//பொது மக்கள் மார்க் ஒழுங்காத்தான் போடுவாங்க!
ஆனா இவங்க மக்கள்கிட்ட காசு, இலவசம்னு அறிக்கை விட்டு பிட்டு அதாங்க கள்ளஓட்டுல வந்துர போறானுங்க!//

உண்மைதான் வால்பையன். ஒழுங்காக படித்து பரீட்சை எழுதி பாஸ் பண்ணும் மாணவர்களும் உண்டு. பிட் அடித்து, பேப்பர் சேஸ் பண்ணி பாஸ் பண்ணும் மாணவர்களும் உண்டு. இதில் நம்மூர் அரசியல்வாதிகள் எந்த ரகம் என்று உங்களுக்குத் தெரியும். (தருமி ஸ்டைலில் படிக்கவும்)

நன்றி.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

கருத்துரைக்கு நன்றி

//இந்தமுறையும் காங்கிரஸ் அரசுகுத்தான் வாய்பு அதிகம் போல தெரியுது.//

தொங்கு பாராளுமன்றம் அமைந்தாலும், காங்கிரஸ் சற்று முன்னே நிற்கும் என்றே நானும் நினைக்கிறேன்.

நன்றி.

Itsdifferent said...

India has the maximum deficit in the world today. That is under two finance guys' watch.
The development is definitely despite goverment. They had been blockers if not anything else in every area of development.
I wish somehow we dont get "Con"gress govt for the next 50 years atleast.

Maximum India said...

அன்புள்ள itsdifferent

கருத்துரைக்கு நன்றி

//India has the maximum deficit in the world today. //

அதிகம் என்று சொல்லலாம். ஆனால் மேக்சிமம் என்று சொல்ல முடியாது. எனென்றால் அந்த பெருமை என்றென்றைக்கும் அமெரிக்காவிற்கு மட்டுமே சொந்தமானது.

//The development is definitely despite goverment. They had been blockers if not anything else in every area of development.//

இதையும் என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. ஒரு அரசின் பங்களிப்பு ஓரளவுக்காவது இல்லாமல், ஐந்து ஆண்டு கால அசுர வளர்ச்சி சாத்தியமில்லை. அதே போல தொடர்ந்து உலகிலேயே இரண்டாவது வேகமாக வளர்ந்ததற்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு கொஞ்சமாவது பாராட்டுக்களை தரத்தான் வேண்டும்.

நன்றி.

Blog Widget by LinkWithin