Wednesday, March 11, 2009

13 B (யாவரும் நலம்) திரை விமர்சனம்


கர்ப்பவதியான மனைவி அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, கணவனோ மதியம் ஒரு மணிக்கு வரும் டிவி சீரியல் பார்க்க ஓடுகிறான். காரணம், மனைவி பிழைப்பாளா, இல்லையா என்று வீட்டில் வரும் ஒரு தொலைக்காட்சித் தொடரை பார்த்துத்தான் தெரிந்து கொள்ள முடியும். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இப்படித்தான், தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் மாறுபட்ட காட்சிகளைக் கொண்ட ஒரு திரைப்படமாக வெளிவந்துள்ளது, 13 B (தமிழில் யாவரும் நலம்).

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், மத்திய தர குடும்பம் ஒன்று புதிதாக குடி வருகிறது. ஒருவருக்கொருவர் அன்பாக இணைந்து, அமைதியான முறையில் வாழும் அந்தக் குடும்பத்திலுள்ள ஒருவனுக்கு மட்டும், அந்த வீட்டில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடப்பது புரிய வருகிறது. (அவன் மட்டும் தனியாக) உள்ளே சென்றால் இயங்க மறுக்கும் லிப்ட், வீட்டிற்குள் இருந்து புகைப்படம் எடுத்தால் கோணலாக தெரியும் அவன் முகம், இவற்றுக்கெல்லாம் மேலாக இவனது வாழ்வில் நடைபெறும் விஷயங்கள் முன்கூட்டியே வெளிவரும் தொலைக்காட்சித் தொடரைக் காட்டும் ஒரு டிவி பெட்டி என்று பல விந்தையான நிகழ்வுகள் அவனைச் சுற்றி நடக்கின்றன. பல நல்ல விஷயங்கள் இவன் குடும்பத்திற்கு நடைபெறுவதை முதலில் இவனுக்கு உணர்த்தும் அந்த தொலைகாட்சி தொடர், பின்னர் பல இடர்கள் நேர்வதையும் முன்கூட்டியே தெரிவிக்கிறது. இவன் வீட்டில் மட்டுமே அந்த தொடர் தெரிகிறது என்றும் உண்மையில் அந்த தொடரை குறிப்பிட்ட டிவி நிறுவனம் நடத்துவதில்லை என்ற விஷயம் பின்னர் தெரிய வர அவனை இன்னும் அதிர வைக்கிறது.

இவன் ஒரு போலீஸ் அதிகாரியின் உதவி கோர, அவருடைய வீட்டில் நடைபெறவுள்ள விபத்தையும் இந்த தொடர் காட்ட இந்த இருவருடன் நாமும் அதிர்ந்து போகிறோம். இந்த சிக்கலை அவிழ முயலும் இவனுக்கு பேரதிர்ச்சியாக, தன் குடும்பத்திற்கு ஒருவனால் ஆபத்து வரப் போகிறது என்றும், அந்த ஒருவன் தானேதான் என்றும் புரிய வருகிறது. இந்த அமானுஷ்ய விஷயங்களுக்கு யார் காரணம், குடும்பத்தை கதாநாயகன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் கிளைமாக்ஸ்.

அமானுஷயங்கள் கலந்த திகில் படம் என்றால் பொதுவாகவே வருகின்ற, "ஷவரில் ரத்தம் கலந்த நீர்", "பயமுறுத்த முயற்சிக்கின்ற கொடூர முகங்கள்", என்றெல்லாம் அதிகம் இல்லாமல் சாதாரணமாக நகருகின்ற வாழ்வினூடேயே திகில் ஏற்படுத்துவதில் படத்தின் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். "யார் நீ" போன்ற படங்களில் வருவது போல, இந்த அமானுஷ்ய நிகழ்வுகளை யாரேனும் திட்டமிட்டு நடத்துகின்றார்களா என்றெல்லாம் முதலில் யோசிக்கத் தொடங்கும் நாம் மெல்ல மெல்ல கதையின் ஓட்டத்துடன் கலந்து விடுகிறோம். பல முறை சீட்டின் நுனிக்கு வரும் நமக்கு, அடுத்து என்ன நடக்கும் என்று திகில் கலந்த ஆர்வத்தை படத்தின் காட்சி அமைப்புகள் ஏற்படுத்துகின்றன. கதையின் வேகத்திற்கு எடிட்டிங் உதவியிருக்கிறது.

டூயட் காட்சிகள், தனியான காமெடி ட்ராக் ஏதும் இல்லாமல் துணிச்சலாக தமிழுக்கு முற்றிலும் புதிய இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். (இரு மொழி படமென்பதால் இந்த துணிச்சல் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்) நம்மூர் மாதவனின் நடிப்பு "ஏ ஒன்". எந்த ஒரு ஹீரோயிசமும் இல்லாமல், தம்முடைய குடும்பத்தினரை காப்பாற்ற அவர் துடிப்பதும், குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு அந்த முயற்சிகள் தெரியாத படி வைத்திருக்க தவிப்பதும், நம்மை கதையுடன் ஒன்ற வைக்கின்றன.
வீட்டில் நடக்கும் பல அமானுஷ்ய விஷயங்கள் முக்கியமாக தொடர் குறித்து கதாநாயகன் தவிர்த்து குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு எதுவும் புரிய கூடாது என்பது கதையின் அடிப்படை நோக்கம் என்றாலும், வெளிப்படையான நேரடியான பல விஷயங்கள் அவர்களுக்கு எப்படி புரியாமல் போனது என்பதை காட்டுவதில் திரைக்கதையில் கொஞ்சம் சறுக்கல் இருக்கிறது. மாதவன் தவிர மற்றவர்கள் முகம் நம் மனதில் பதிய வில்லை என்றாலும் கதையின் நோக்கம் கூட அதுவேதான் என்பதால் அதை பெரிது படுத்த தேவையில்லை. யார் இதற்கெல்லாம் காரணம் என்ற நமது அத்தனை யூகங்களையும் மீறி எதிர்பாராத ஒரு முடிவை வைத்ததற்கு இயக்குனருக்கு (விக்ரம் குமார்) பாராட்டுக்கள்.

சிலம்பாட்டம், வில்லு, ஏகன், படிக்காதவன் மற்றும் சமீபத்தில் வந்த தீ போன்ற ஸ்டீரியோ டைப் தமிழ் படங்களைப் பார்த்து நொந்து போயிருப்பவர்கள், ஒரு மாறுதலுக்காக, பல நாட்களுக்குப் பின் தமிழில் வரும் ஒரு சீரியசான வித்தியாசமான முயற்சி என்ற வகையில் இந்த படம் போய் வரலாம். கொடுத்த காசுக்கு ஓகே என்று இந்த படத்தை சொல்லலாம்.

நன்றி.

8 comments:

வால்பையன் said...

நீங்களூமா?

Maximum India said...

ஆமாம் நானும்தான். இந்த மாதம் ஏகப்பட்ட லீவு மார்கெட்டுக்கு, அப்புறம் நமக்கும்தான். வேறென்ன பண்ண?

adminn said...

Nice vimarsanam

check my blog too

http://www.bollybits.blogspot.com/

Maximum India said...

நன்றி adminn!

உங்கள் தளத்தையும் பார்த்தேன். சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

Shajahan.S. said...

மிகவும் நல்லதொரு திரைப்படத்தைத்தான் விமர்சனம் செய்திருக்கிறீர்கள். படம் மிகவும் அருமை.

கபீஷ் said...

வாலு சினிமா பாக்கறது கொலைகுத்தமா என்ன? ஏன் இவ்வளவு அதிர்ச்சி?

Maximum India said...

அன்புள்ள ஷாஜகான்

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

பல நாள் இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் உங்களுக்கு எனது நன்றி.

//வாலு சினிமா பாக்கறது கொலைகுத்தமா என்ன? ஏன் இவ்வளவு அதிர்ச்சி?//

அப்படி போட்டுத் தாக்குங்க கபீஷ்! வாலு என்னப் பத்தி ஏதோ தப்புக் கணக்கு போட்டு வச்சிருக்கார்னு நினைக்கிறேன். அடாது எவ்வளவு மோசமான படங்கள் எடுத்தாலும் விடாது தமிழ் படங்கள் பார்க்கும் ஒரு சராசரி தமிழன்தான் நானும். (உலக படங்கள் பார்க்கும் அளவுக்கு பொறுமை நம்மகிட்ட இல்லை) நிறைய தமிழ் படம் பார்த்தாலும், ஏகன், குருவி மாதிரி ரொம்ப நல்ல படங்களைப் பாத்துட்டு வெளிய சொல்ல முடியாத நிலம, அவ்வளவுதான். (ஒருத்தரோட ஒருத்தர் போட்டி போட்டுக்கிட்டு ரொம்ப மோசமான படமா எடுக்கிறாங்க, இல்ல?) அப்புறம் இப்பல்லாம் நல்ல ஹிந்தி படங்கள் நிறைய எடுக்கிறார்கள். (13 B கூட ஒரு முக்காவாசி ஹிந்தி படம்தான்). அவற்றை நம் தமிழ் நண்பர்களிடம் கொண்டு செல்லவே இந்த விமர்சனங்கள்.

நன்றி.

Blog Widget by LinkWithin