Sunday, March 22, 2009

காசேதான் கடவுளடா!


சென்ற வாரம் அமெரிக்க தலைமை வங்கி, அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுமார் 50 லட்சம் கோடி ரூபாயை ($ 1 trillion) சந்தையில் இறக்கி விடுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு நீண்ட கால நோக்கில் உலக பொருளாதாரத்தை பாதிக்கும் விஷயம்தான் என்றாலும், குறுகிய கால நோக்கில் உலக சந்தைகளை சந்தோசப் படுத்தியது. உலக சந்தைகளின் கொண்டாட்ட்டங்களில் நம்முடைய சந்தையும் கலந்து கொள்ள, முன்னேற்றம் இரண்டாவது வாரமாக தொடர்ந்தது.

சுமார் ஒரு டிரில்லியன் டாலர் பணம் உலக சந்தையில் நுழைவதை அடுத்து, டாலரின் மதிப்பு இந்திய ரூபாய் உட்பட இதர உலக கரன்சிகளுக்கு எதிராக வீழ்ச்சி அடைந்தது. தங்கம் மற்றும் இதர உலோகங்களும் டாலர் மதிப்பில் விலை உயர்ந்தன. கச்சா எண்ணெய் விலை கூட ஐம்பது டாலருக்கும் மேல் எகிறியது. அமெரிக்காவில் வீட்டு விற்பனை உயர்வு, வேலை இழப்பு குறைவு போன்ற சில நல்ல பொருளாதார தகவல்களும் சேர்ந்து கொள்ள உலக பங்கு சந்தைகளும் நன்கு உயர்ந்தன.

ஆனால், ஒரு வகையில் இவ்வாறு பெரிய அளவில் அமெரிக்கா தனது கரன்சியை வெளியிடுவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதுடன் நீண்ட கால நோக்கில் உலக பொருளாதாரத்திற்கு தவறான விளைவுகளையே கொடுக்கும். எப்படியென்றால், கிட்டத்தட்ட எந்த ஒரு பொருளாதார செலவும் இன்றி வெளியிடப் படும் இந்த பணம், நம் போன்ற நாடுகளிடம் உள்ள அந்நிய செலவாணி கையிருப்பின் மதிப்பை குறைத்து விடுவதுடன், நாம் மதிப்பு குறைந்த டாலரை வாங்கிக் கொண்டு இலவசமாக அவர்களுக்கு ஏற்றுமதி சேவை செய்வதை போன்ற ஒரு நிலை ஏற்படும்.

இப்போது உள்நாட்டு சந்தைகளுக்கு வருவோம்.

சென்ற வாரம் உலக சந்தைகளின் போக்கை தொடர்ந்த நம் சந்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டன. சமீப காலத்தில் வெகுவாக பாதிக்கப் பட்டிருந்த உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன. இயந்திர தயாரிப்பு துறை நீங்கலான இதர துறைகள் மிதமான வளர்ச்சியைக் கண்டன. இந்த வார வர்த்தகத்தின் சிறப்பு அம்சமாக சிறிய மற்றும் நடுத்தர பங்குகள் சிறப்பான வளர்ச்சியைக் கண்டன. உலக அளவில் டாலர் மதிப்பு குறைவதை தொடர்ந்து அந்நிய முதலீட்டாளர்களின் பணம் பெருமளவு நம்மைப் போன்ற முன்னேறி வரும் நாடுகளின் சந்தைகளுக்குள் வரும் என்ற நம்பிக்கையை சந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்திய சரித்திரத்தில் இதுவரை கண்டிராத வண்ணம், மொத்த விலை பணவீக்க விகிதம் (WPI Headline Inflation) ௦௦0.44 % சதவீதமாக குறைந்தது, பணவாட்ட காலகட்டத்தில் (Deflationary Environment) நாம் நுழைந்து விடுவோமா என்ற அச்சத்தை ஏற்படுத்தினாலும், தலைமை வங்கி இன்னும் தனது வட்டி வீதங்களை குறைக்கும் என்ற புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

அதே சமயம், சென்ற வாரத்தில் நாம் தெரிவித்திருந்த எதிர்ப்பு நிலையை (2810) நிபிட்டி குறியீடு முழுமையாக முறியடிக்க முடிய வில்லை. குறிப்பிட்ட எதிர்ப்பு நிலையில் பெருமளவு விற்பனை வந்தது இதற்கு முக்கிய காரணம்.

வரும் வார நிலவரம்

இப்போது இந்தியா உட்பட அனைத்து பெரிய உலக சந்தைகளும் மிக முக்கிய காலகட்டத்தில் உள்ளன. அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளின் அரசாங்கங்கள்/தலைமை வங்கிகள் சமீப காலத்தில் பெருமளவு பணத்தை தமது பொருளாதாரத்தில் இறக்கி விட்டுள்ளன. இந்த பணத்தில் ஒரு பகுதி பங்கு சந்தைகளுக்கு வரும் பட்சத்தில் சந்தைகள் நன்கு உயரும் வாய்ப்புள்ளது. அதே சமயத்தில், ராணுவத்தை போல பொருளாதாரத்தை ஒரு அரசு ஆணை மூலம் வழி நடத்த முடியாது என்பதையும் சந்தைகள் நன்கு உணர்ந்துள்ளன.

அமெரிக்க முக்கிய பங்குக் குறியீடான டௌ ஜோன்ஸ் (Dow Jones Industrial Average) கூட தனது எதிர்ப்பு நிலையான 7500 புள்ளிகளுக்கு கீழேயே முடிவடைந்திருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது. அங்குள்ள ஏற்றத்தாழ்வு குறியீடான CBOE Vix கூட உயர்ந்திருப்பது சந்தைகள் முடிவெடுக்க முடியாத நிலையிலேயே இருப்பதை காட்டுகின்றன.

இந்தியாவைப் பொருத்த வரை தேர்தல் காரணமாக, தற்போதைக்கு உள்நாட்டு பொருளாதார விஷயங்கள் அதிக முக்கியத்துவம் பெறுவதில்லை. உலக சந்தைகளின் போக்கே இந்திய சந்தைகளின் போக்கையும் பெருமளவிற்கு நிர்ணயிக்கின்றன. அதே சமயம், அடுத்த வாரம் மாதாந்திர F&O நிலைகள் காலாவதியாவதைத் தொடர்ந்து பங்குகளில் ஏற்ற இறக்க நிலைகள் காணப் படும்.

வரும் வாரத்தில் பெருமளவு பொருளாதார தகவல்கள் அமெரிக்காவில் வெளியிடப் பட உள்ளன. இவை நல்ல செய்திகளாக இருந்து உலக சந்தைகள் வரும் வாரம் உயர்ந்தால், நமது சந்தைகளும் அவற்றைத் தொடரும்.

சென்ற வாரமே சொன்ன படி, நிபிட்டி குறியீட்டிற்கு 2810 புள்ளிகள் வலுவான எதிர்ப்பு நிலையாக தொடரும்.

சந்தையில் குறுகிய கால நோக்கில் வாங்கும் வர்த்தகம் செய்ய விரும்புவர் நிபிட்டி 2850 புள்ளிகள் அளவை முழுமையாக முறியடித்தப் பின்னர் வாங்குவது நல்லது. அக்ருதி போன்ற பங்குகள் சென்ற வாரம் பெருமளவு உயர்ந்தது, பெரிய வர்த்தகர்கள் மீண்டும் சந்தைக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இது ஓரளவுக்கு நல்ல விஷயம்தான் என்றாலும் சிறிய வர்த்தகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது என்பதையும் நாம் புரிந்து கொள்வது நல்லது.

சென்ற வாரம் கூறி இருந்த படி ரூபாய் நல்ல முன்னேற்றம் கண்டாலும், கச்சா எண்ணெய் விலை வெகுவாக உயர்ந்து வருவதை அடுத்து, ரூபாய் தனது முன்னேற்றத்தை தொடருமா என்பது கேள்விக் குறிதான்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

14 comments:

Joe said...

வாழ்த்துக்களுக்கு நன்றி.

Maximum India said...

நன்றி ஜோ

Itsdifferent said...

You should write about, why and how US$ has become the defacto currency.
And, the fact that no other country has the guts to stand upto US saying, do not publish paper money, without the gold and other security backing as done and stipulated in every other country.
Not sure, why, China which has got so much of US$ in their treasury, is allowing this to happen, they should just starting to release the dollar for various purposes. They did one good thing, signed some kind of deal with Russia for 20year Oil contract and gave them some 25 billion dollars. Like that, they should start spreading the dollar worldwide, even more. India is pathetic in that area. Our politicians are such idiots, they do not know how to leverage the power and money they have. At this time, I do not know why the government is not settling their huge loans we have with WB and other institutions, and reduce atleast some interest. So many things like this. we are caught in a catch 22 in world economy, where you cannot kick US in a big way, because it will have huge ripple effect. But at the same time, without any such discipline, US is indulging in various activities, without any kind of control, leading to a bigger disaster. Every single day i pray that India gets great leaders which could lead India and the world in a right track.

dg said...

அமெரிக்க சந்தை, வெள்ளி அன்று ட்ரன்ட் லைனுக்கு கீழே முடிந்துள்ளது. நமது சந்தை, என்ன செய்கிறதென்று பொறுதிறுந்து பார்ப்போம்.

Maximum India said...

அன்புள்ள itsdifferent

//You should write about, why and how US$ has become the defacto currency.//

ஒரு பொருளாதார மேதை கூறினார், "அமெரிக்கா ஒரு பெரிய சீட்டுக் கம்பெனி (Ponzi Scheme)" என்று. உழைப்பில்லாமல் உலகையே சுரண்டி வரும் நாடு அமெரிக்கா என்றே பலரும் கருதுகிறார்கள்.


//And, the fact that no other country has the guts to stand upto US saying, do not publish paper money, without the gold and other security backing as done and stipulated in every other country.
Not sure, why, China which has got so much of US$ in their treasury, is allowing this to happen, they should just starting to release the dollar for various purposes. //

யூரோ நாணயம் கூட ஐரோப்பிய நாடுகளால் டாலருக்கு எதிராக ஒரு உலக கரன்சியாக உருவாக்கப் பட்டதுதான். ஈராக், தனது அந்நிய செலவாணியை யூரோவுக்கு மாற்றி, டாலர் விஷயத்தில் அமெரிக்காவுடன் மோதியது. அந்நாட்டின் கதி என்ன ஆனது என்று அனைவருக்கும் தெரியும். கடந்த வாரம் கூட யூரோவுக்கு எதிரான டாலர் மதிப்பு சரித்திரம் காணாத அளவுக்கு வீழ்ந்ததின் பின்னணியில் சீனா இருந்திருக்கலாம் என்று சந்தை யூகங்கள் சொல்கின்றன.

உலக பொருளாதாரத்தைப் பொறுத்த வரை இந்தியா ஒரு மிகச் சிறிய பங்கையே வகிக்கிறது. இதனால் டாலர் விவகாரத்தில் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றே நினைக்கிறேன். அதே சமயத்தில் டாலர் மதிப்பு குறைந்தால் அதனால் மிகவும் பாதிக்கப் படக் கூடிய இரண்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இன்னொன்று சீனா. காரணம், தமது அந்நிய செலவாணி கையிருப்பில் பெரும்பகுதியை இவை டாலர் கணக்கிலேயே வைத்திருக்கின்றன.

நன்றி.

Maximum India said...

அன்புள்ள dg

//அமெரிக்க சந்தை, வெள்ளி அன்று ட்ரன்ட் லைனுக்கு கீழே முடிந்துள்ளது. நமது சந்தை, என்ன செய்கிறதென்று பொறுதிறுந்து பார்ப்போம்//

உண்மைதான். டௌ ஜோன்ஸ் குறியீடு 7500 புள்ளிகளுக்கு கீழேயே முடிவடைந்துள்ளது. CBOE Vix குறியீடு வேறு வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் நமது சந்தையும் சற்று தடுமாறலாம். ஆனால் இந்த தடுப்பு நிலையை தாண்டி விட்டால், குறுகிய கால நோக்கில் நமது சந்தை நல்ல முன்னேற்றத்தை காண இயலும்.

நன்றி.

கார்த்திக் said...

// அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுமார் 50 லட்சம் கோடி ரூபாயை ($ 1 trillion) சந்தையில் இறக்கி விடுவதாக அறிவித்தது. //

நல்ல செய்தி

இனி இங்க நம்ம நாசிக்லையும் பிரஸ் ராப்பகலா ஓட்ட ஆரம்பிச்சுருவாங்க.

வழக்கம் போல நல்லபதிவு

Sam said...

பொருளாதாரத்தை சுதாரிப்பதற்காக அச்சிடப்படும் காகிதம் இன்னும் ஓரிரு வருடங்களில் வரலாறு காணாத பணவீக்கத்தை (Hyper Inflation) ஏற்படுத்திவிடும் என்று ஒரு மின்னஞ்சல் என்னைத் தாக்கியது.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

அன்புடன்
சத்தியமூர்த்தி
என் புதுப்பதிவு

Maximum India said...

நன்றி கார்த்திக்

//நல்ல செய்தி//

இப்போதைக்கு மட்டுமே நல்ல செய்தி. நீண்ட கால நோக்கில் இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் எதிர் விளைவையே உருவாக்கும்.

//இனி இங்க நம்ம நாசிக்லையும் பிரஸ் ராப்பகலா ஓட்ட ஆரம்பிச்சுருவாங்க.//

ஆமாமாம். நம்மூர் பிரஸ் ஊழியர்களுக்கு இனிமேல் புல் ஓவர் டைம்தான்.
:)
நன்றி.

Maximum India said...

அன்புள்ள சத்தியமூர்த்தி

//பொருளாதாரத்தை சுதாரிப்பதற்காக அச்சிடப்படும் காகிதம் இன்னும் ஓரிரு வருடங்களில் வரலாறு காணாத பணவீக்கத்தை (Hyper Inflation) ஏற்படுத்திவிடும் என்று ஒரு மின்னஞ்சல் என்னைத் தாக்கியது.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.//

இது போன்ற எதிர் விளைவுகள் சாத்தியமே என்று நானும் கூட நினைக்கிறேன்.

நன்றி.

Itsdifferent said...

India and China are big dollar reserver holders.
China is brave enough fire the first salvo. Do we have such brave souls in India?
http://www.ft.com/cms/s/0/7851925a-17a2-11de-8c9d-0000779fd2ac.html

வால்பையன் said...

பேப்பர் நிறைய இருக்குன்னு இப்படி கண்டமேனிக்கு நோட்டு அடிக்கலாமா!

கள்ளநோட்டுக்கும் , இதுக்கும் என்ன வித்தியாசம்

Maximum India said...

அன்புள்ள itsdifferent

//India and China are big dollar reserver holders.
China is brave enough fire the first salvo. Do we have such brave souls in India?//

மணி சங்கர் ஐயர் ஒரு முறை ஆசியாவிற்காக தனி பெட்ரோல் கிடங்கை உருவாக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் சிறிது காலத்திலேயே அவர் வேறு துறைக்கு மாற்றப் பட்டார். இந்தியர்களின் அமெரிக்க பற்று அலாதியானது. இங்கு யாரும் பேச விரும்ப மாட்டார்கள். காரணம் சொல்ல வேண்டியதில்லை

நன்றி.

Maximum India said...

நன்றி வால்பையன்

//பேப்பர் நிறைய இருக்குன்னு இப்படி கண்டமேனிக்கு நோட்டு அடிக்கலாமா!//

அடிச்சா போட்டி போட்டுக் கொண்டு வாங்க இந்தியா, சீனா போன்ற நாடுகள் இருக்கின்றன. அப்புறம் என்ன கவலை?

//கள்ளநோட்டுக்கும் , இதுக்கும் என்ன வித்தியாசம்//

அது தனியார் பிரஸ் இது கவர்மென்ட் பிரஸ். அவ்வளவுதான்.

நன்றி

Blog Widget by LinkWithin