Monday, March 2, 2009

வாழ்க்கை கடினமானதாகவும் சவால்கள் நிறைந்தாகவும் இருக்கின்றதா?


எல்லாருக்கும் ஒரே மாதிரி வாழ்க்கை அமைவதில்லை. ஒரு சிலருக்கு வாழ்க்கைப் பாதை எளிமையானதாகவும் சுலபமானதாகவும் அமைந்து விடுகிறது. இன்னும் ஒரு சிலருக்கு வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் இருந்தாலும், தீர்வுகள் சற்று எளிதாக கிடைத்து விடுகிறது . மேலும் ஒரு சிலருக்கோ, வாழ்க்கை மிகவும் கடினமானதாகவும், சவால்கள் நிறைந்ததாகவும், வலிகள் மிகுந்ததாகவுமே இருக்கின்றது. இவர்களுக்கான பதிவு இது.

சமீபத்தில் ஒரு உலகப் புகழ் பெற்ற பல்கலைகழகத்தில், ஒரு பேராசிரியரால், அங்குள்ள மாணவர்களுக்கு ஒரு தேர்வு நடத்தப் பட்டது. அதில் வினாத்தாள் சமமான மதிப்பெண்களுடன் மூன்று பிரிவுகளாக அமைக்கப் பட்டிருந்தது. மூன்று பிரிவுகளில் ஒன்றை மட்டும் தேர்வு செய்து அதற்கு விடை எழுத மாணவர்கள் அனுமதிக்கப் பட்டனர். அந்த மூன்று பிரிவுகளும் ஒரே பாடத்திட்டத்தை சேர்ந்தவை என்றாலும், கேள்விகளின் விடை கண்டுபிடிக்கப் பட வேண்டிய சிரமத்தின் அடிப்படையிலேயே மூன்றாக பிரிக்கப் பட்டன. அதாவது, மிகவும், கடினமான கேள்விகள் முதல் பிரிவு, சற்று சுலபமான கேள்விகள் இரண்டாவது பிரிவு, மிகவும் சுலபமான கேள்விகள் மூன்றாவது பிரிவு.

பரீட்சை முடிந்ததும், மாணவர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படி, விடைத்தாள்கள் திருத்தப் படவில்லை. முதல் பிரிவை தேர்வு செய்தவர்களுக்கு முதல் வகுப்பும், இரண்டாம் பிரிவை தேர்ந்தெடுத்தவர்களுக்கு இரண்டாம் வகுப்பும் மூன்றாம் பிரிவை தேர்ந்தெடுத்தவர்களுக்கு மூன்றாம் வகுப்பும் மதிப்பெண்களாக வழங்கப் பட்டது. ஆச்சரியமடைந்த மாணவர்களிடம், அந்த பேராசிரியர் சொன்னது.

"நான் உங்கள் கல்வி அறிவை சோதிக்க வில்லை. உங்களுடைய "சிரமங்களை எதிர்கொள்ளும் திறனையே" சோதித்தேன். "

நான் கூட இளம் வயதில் கடும் வாழ்வியல் போராட்டங்களை சந்திக்கும் போது கீழ்கண்டவாறு சிந்தித்து எனக்கு நானே உற்சாகமூட்டிக் கொள்வேன்.

" மலையின் (வாழ்வின்) உச்சிக்கு செல்ல சிலருக்கு ஹெலிகாப்டர் கிடைக்கிறது, சிலருக்கு மோட்டார் வாகனம் கிடைக்கிறது, வேறு சிலருக்கோ நடந்து செல்ல காலணிகள் கூட கிடைப்பதில்லை. ஆனால், மற்றவர்கள் மலையின் உச்சியை அடைந்து சற்று களைப்பாறிக் கொள்ளும் நேரத்திற்குள்ளேயே, நாம் மலையின் உச்சியை அடைவதில்தான் நம்முடைய பெருமை அடங்கி இருக்கிறது"

பிரபல எழுத்தாளர் கல்கி ஒரு முறை கூறினார். உலகில் எவ்வளவோ இன்பமயமான வாழ்க்கைகள் நடந்து முடிந்துள்ளன. ஆனால் துன்பவியல்களே காவியங்களாக புகழ் பெற்றுள்ளன. சிறந்த உதாரணங்கள், ராமாயணம் & மகாபாரதம். கடும் துன்பங்களுக்கு இடையே வாழ்வில் வெற்றி பெறுவதிலேயே வாழ்வின் அர்த்தம் அடங்கியிருப்பதால்தான் இந்த காவியங்கள் இவ்வளவு வெற்றி பெற்றிருக்கின்றன என்று நினைக்கிறேன். சமீபத்தில் வெற்றி பெற்ற "Slumdog Millionaire" கூட இந்த ரகத்தை சேர்ந்ததுதான்.

எனது தனிப் பட்ட வாழ்வில் கூட இப்போதைய ஓரளவுக்கு சமச்சீரான நிலையை விட இளம் வயதின் போராட்டங்களிலேயே எனது வாழ்வின் சிறந்த பகுதி இருப்பதாக இப்போது உணர்கிறேன்.

எனவே, வாழ்வு ஒரு போராட்டமாக கழிந்து கொண்டிருக்கிறதே என்று கவலைப் படாமல் அதில் பெருமிதம் கொள்வதே சிறந்தது என்று நினைக்கிறேன்.

மேடான சாலையில் பயணம் செய்வது சிரமமாக இருக்கலாம். ஆனால், மேடான பாதைதானே நம்மை உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.

நன்றி.

13 comments:

harisan said...

நடை முறை வாழ்வில் இது போன்ற நிகழ்வுகளை ப்ர்ரசினைகளை முன்னேற துடிபவர்கள் பெரும் வாய்ப்புகளாகவே கருதுகிறார்கள் இது போன்ற கருத்துகளை
அதிகம் விரும்புகிறேன். - நன்றி -

Maximum India said...

பின்னூட்டத்திற்கு நன்றி கணேசன்.

MCX Gold Silver said...

உற்சாக படுத்தும் கட்டுரை நன்றி

Maximum India said...

அன்புள்ள dg

பின்னூட்டத்திற்கு நன்றி

வால்பையன் said...

//மேடான சாலையில் பயணம் செய்வது சிரமமாக இருக்கலாம். ஆனால், மேடான பாதைதானே நம்மை உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.//

பாசிடிவ் திங்கிங் மக்களிடயே குறைந்து வருகிறது. ஒரு வித சலிப்பு அனைவர் முகங்களிலும் தெரிகிறது. கூடி களிக்கும் மகிழ்ச்சியை காணோம். எதையோ இழந்த சோகம் அனைவருக்கும்.

இப்படியெல்லாம் இருந்தாக்கூட உங்கள மாதிரி சில பேரு பாசிடிவா திங்க் பண்ணும் போது என்னை மாதிரி சின்ன பசங்களுக்கும் கொஞ்சம் எனர்ஜிடிக்கா இருக்குது.

வழக்கம் போல கலக்கல் பதிவு

Suresh said...

அருமையான பதிவு நண்பரே :-)
நேரம் இருந்தால் என்னோட பதிவும் படித்து வோட்டு அளிக்கவும்

Naresh Kumar said...

பொருளாதாரமோ, அறிவுப்பூர்வமான கட்டுரையோஅல்லது நம்பிக்கை சார் கட்டுரையோ மிக சரளமாக வருகிறது உங்களுக்கு...

கட்டுரை மிக அருமை, நம்பிக்கையூட்டும்படி இருக்கிறது...

நரேஷ்
nareshin.wordpress.com

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//பாசிடிவ் திங்கிங் மக்களிடயே குறைந்து வருகிறது. ஒரு வித சலிப்பு அனைவர் முகங்களிலும் தெரிகிறது. கூடி களிக்கும் மகிழ்ச்சியை காணோம். எதையோ இழந்த சோகம் அனைவருக்கும். //

மிகவும் உண்மைதான். பயணங்களின் போதும், அன்றாட பணிகளின் போதும் காண முடிகிற பலரது முகங்களில் உற்சாகமே இல்லாதது கண்டு ஆச்சர்யப் பட்டிருக்கிறேன். இத்தனைக்கும் அவர்களில் பலர் வாழ்வில் நல்ல நிலையில் இருப்பவர்களே. (பாசிடிவ்வா சிந்திக்க காசு பணம் தேவையில்லையே.)

//இப்படியெல்லாம் இருந்தாக்கூட உங்கள மாதிரி சில பேரு பாசிடிவா திங்க் பண்ணும் போது என்னை மாதிரி சின்ன பசங்களுக்கும் கொஞ்சம் எனர்ஜிடிக்கா இருக்குது.//

உண்மைய சொல்லனனும்னா, நீங்கள் பதிவுகள் வழியாக மட்டுமே அறிமுகமானவர் என்றாலும், உங்களிடம் எப்போதுமே ஒரு உற்சாகம் ஒட்டிக் கொண்டே இருக்கிறது என்ற வகையில் நீங்களே எனக்கு ஒரு பெரிய ரோல் மாடல்தான். அப்புறம் அடிக்கடி உங்கள சின்ன பையன்ன்னு சொல்லி எங்க வயசையும் குறைப்பதற்கு மிக்க நன்றி. :)

//வழக்கம் போல கலக்கல் பதிவு//

தமிழ் மன நட்சத்திர பதிவரிடம் இருந்து வந்த பாராட்டு இது. பெருமையாக இருக்கிறது. நன்றி.

Maximum India said...

//அருமையான பதிவு நண்பரே :-)//

நன்றி சுரேஷ்!

//நேரம் இருந்தால் என்னோட பதிவும் படித்து வோட்டு அளிக்கவும்//

படித்தாயிற்று. வோட்டும் போட்டாயிற்று. சும்மா சொல்லக் கூடாது, நீங்கள் நன்றாகவே எழுதுகிறீர்கள்.

நன்றி,

Maximum India said...

அன்புள்ள நரேஷ்!

//பொருளாதாரமோ, அறிவுப்பூர்வமான கட்டுரையோஅல்லது நம்பிக்கை சார் கட்டுரையோ மிக சரளமாக வருகிறது உங்களுக்கு...//

இந்த விஷயத்தில் நான் கடந்து வந்த பாதை எனக்கு மிகவும் உதவியாக உள்ளது. அப்புறம், உங்களுடைய தொடர்ந்த ஆதரவும் கூட ஒரு முக்கிய காரணம்.

//கட்டுரை மிக அருமை, நம்பிக்கையூட்டும்படி இருக்கிறது...//

நன்றி. நன்றி.

Suresh said...

@ Maximum இந்திய

//இதற்கு விடிவு நம்மைப் போன்ற இளைஞர்களிடம்தான் உள்ளது. அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லாமல் நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தையே மாற்ற வேண்டும். நல்ல சமுதாயத்திலிருந்துதான் நல்ல அரசியல்வாதிகள் தோன்றுவார்கள். மாற்றங்களை ஏற்படுத்துவது வெறும் போதனைகள் செய்து மட்டும் அல்ல. மற்றவர்களுக்கு நல்ல ரோல் மாடல்களாக வாழ்ந்து காட்டி. செய்ய முன் வருவார்களா நம் இளைஞர்கள்?

மாற்றங்களை நம்மிடமிருந்தே தொடங்குவோமே!//

நல்ல பின்னோட்டம் ,நல்ல சிந்தனை தூண்டல்.

தென்னூர் அருகே ஒரு இளைஞர் நல்ல அருமையான தொண்டு செய்கிறார், தன்னோட அமெரிக்க சாப்ட்வேர் வேலையே ராஜினாமா செய்து எப்போது அந்த பணத்தை கொண்டு நல்ல கல்வி, நல்ல ஆஸ்பத்திரி போன்ற அத்தியாவசிய தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்கிறார்.

நாமலும் நம்மால கண்டிப்பாக முடிந்த எழுச்சியை செயலில் செய்வோம்

Maximum India said...

நன்றி சுரேஷ்

//தென்னூர் அருகே ஒரு இளைஞர் நல்ல அருமையான தொண்டு செய்கிறார், தன்னோட அமெரிக்க சாப்ட்வேர் வேலையே ராஜினாமா செய்து எப்போது அந்த பணத்தை கொண்டு நல்ல கல்வி, நல்ல ஆஸ்பத்திரி போன்ற அத்தியாவசிய தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்கிறார்.//

உண்மையிலேயே இவர் போற்றப் பட வேண்டியவர். இவரைப் பற்றி நீங்கள் ஏன் தனிப் பதிவு போடக் கூடாது? நிழல் ஹீரோக்களைப் போற்றுவதை நிறுத்தி நிஜ ஹீரோக்களை மக்கள் பாராட்டத் துவங்கினால் இன்னும் பல நிஜ ஹீரோக்கள் உருவாகுவார்கள்.

//நாமலும் நம்மால கண்டிப்பாக முடிந்த எழுச்சியை செயலில் செய்வோம்//

நல்லது சுரேஷ். நன்றி.

கபீஷ் said...

//இவரைப் பற்றி நீங்கள் ஏன் தனிப் பதிவு போடக் கூடாது? //

குமுதத்தில் அவர் பற்றிய கட்டுரை வந்தது. அருண், டோண்டு அதை அவர்கள் பதிவில் போட்டிருந்தார்கள். அவரைப் போலவே நிறைய இளைஞர்கள் நல்லது செய்து கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் பதிவு நல்ல இருக்கு :-):-)

Blog Widget by LinkWithin