Monday, March 9, 2009

கேலிகூத்தாகும் உண்ணாவிரத போராட்டங்கள்!


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விரதம் இருப்பவர்கள், ஏகாதசிக்கு முந்தைய நாள் மதியம் சாப்பிட்டு முடித்த பின்னர், அன்று முழுக்க எதுவும் உண்ணா மாட்டர்கள். மறு நாள் முழுக்கவும் கூட எதுவும் சாப்பிட மாட்டார்கள். ஏகாதசி முடிந்து அடுத்த நாளான துவாதசி அன்று காலையிலே இறை வழிபாடு முடிந்த பின்னரே தமது விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.

நமது இஸ்லாமிய சகோதரர்கள் கூட, புனித ரமலான் மாதத்தில், சூரிய உதயத்திற்கு முன்னரே தமது உணவினை முடித்துக் கொள்வார்கள். பகல் முழுக்க தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள். மாலை சூரியன் மறைந்த பின்னரே தமது விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.

காலம் காலமாக இது போன்ற தம்மைத் தாமே வருத்திக் கொள்ளும் உண்ணா நோன்புகளே விரதங்கள் என்று ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றன. ஆன்மீகத்தின் வெளிப்பாடாக இருந்த இது போன்ற விரதங்களை, சுதந்திர போராட்டத்தின் ஒரு கருவியாக அறிமுகப்படுத்தியவர் அண்ணல் மகாத்மா காந்தி அடிகள். அவர் கூட, உண்ணாவிரத போராட்டம் தொடங்கினால் அந்த போராட்டத்திற்கான தீர்வு வரும் வரை தனது உண்ணா நோன்பினை முடித்துக் கொண்டதில்லை. அந்த மாறா வைராக்கியத்தின் காரணமாகவே, சூரியன் மறையா நாடு என்று புகழ் பெற்றிருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் பார்வைக்கு எளிய அந்த மனிதரைப் பார்த்து நடுநடுங்கிப் போனது.

சுதந்திர இந்தியாவின் ஆரம்ப கால சரித்திரத்தில் கூட, அரசியல் ரீதியான உண்ணாவிரதங்கள் ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கான தார்மீக ஆதரவை தெரிவிக்கும் கருவிகளாக உதவின. அதே சமயம், குறைந்த பட்சம் இரண்டு நேர உணவினை தவிர்க்கும் வகையிலேயே உண்ணாவிரத நேரங்கள் (காலை ஆறு அல்ல்லது ஏழு மணியிலிருந்து மாலை ஆறு வரை) அமைக்கப் பட்டன.

ஆனால், இன்றைக்கோ, உண்ணாவிரதங்கள், தேர்தலை மனதில் வைத்து நகர்த்தப் படும் அரசியல் சதுரங்கத்தின் காய்களாகவே பயன் படுகின்றன. நோக்கங்கள் மாறிப் போவது காலத்தின் கோலமாக இருக்கலாம். ஆனால், உண்ணாவிரதம் என்பதற்கான அர்த்தங்களும் மாறிப் போனது கொஞ்சம் வேடிக்கையாகவே இருக்கிறது.

நவீன உலகில், அழுத்தங்கள் நிறைந்த பணியில் உள்ளவர்கள் பலருக்கும் மதிய உணவை மறந்து வேலை செய்த அனுபவம் எத்தனையோ முறை கிட்டியிருக்கும். அதே போல வார இறுதி நாட்களில் பல முறை காலை உணவு சாதாரணமாகவே தவறியிருக்கும். இந்த கால குழந்தைகள் கூட பல முறை (பொழுது போக்கு மும்முரத்தில்) தமது உணவு இடைவெளியை நீட்டித்துக் கொள்கின்றன. உடல் இளைக்கிறேன் பேர்வழி என்று இந்தக் கால பெண்கள் பலர் பல வேளைகளில் சாப்பிடுவதே இல்லை. இந்த காலத்திலும், எந்த காலத்திலும் தாய்மை உள்ளம் கொண்ட பல பெண்கள், குடும்பத்தினருக்காக தமது உணவை எத்தனையோ முறை தியாகம் செய்கின்றனர். . இன்னமும் கூட ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிடுவதே பெரும்பாடாக கழியும் ஏழைகள் எண்ணற்றவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் நிலைமை இருக்க, காலை ஒன்பது அல்லது பத்து மணியிலிருந்து மாலை ஐந்து அல்லது ஆறு மணி வரை (நடிகர்கள் விஷயத்தில் இது மாலை நான்கு மணி மட்டுமே) சாப்பிடாமல் இருப்பதன் பெயர் உண்ணாவிரதமா? யாரை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள்? அல்லது மற்றவர்களை முட்டாளாக்குகிறோம் என்று நம்பிக் கொண்டு தாமே முட்டாளாகி விடுகிறார்களா?

மொத்தத்தில், இவர்கள் தங்கள் போராட்டத்திற்கு உண்ணாவிரதம் என்று பெயர் வைப்பதற்கு பதில் இரண்டு உணவிற்கு இடையேயான இடைவெளியை சற்று மாற்றி நீட்டித்துக் கொள்ளும் ஒரு வித "உணவிடைவேளை போராட்டம்" என்று வேண்டுமானால் பெயரிட்டுக் கொள்ளலாம்.

நன்றி.

12 comments:

வால்பையன் said...

முத்துகுமார்ன்னு ஒருத்தான் இதற்காகவே உயிரைவிட்டான்
அவனை பற்றி யாராவது பேசினார்களா?

கருணாநிதிக்கு எவ்வளவு சொத்துன்னு தான் பேசுறாங்க!
அரசியல் சாக்கடை மேலும் நாறுகிறது!

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

கருத்துரைக்கு நன்றி.

தமிழகத்தின் தற்போதைய நிலை மிகுந்த கவலைக்குறியதாகும். தமிழகத்தின் முக்கிய இரண்டு கட்சிகளும் சற்று திருந்தி சுய கட்டுப்பாடுடன் நடந்து கொண்டாலேயொழிய இந்த நிலைமை மாறாது.

எட்வின் said...

தேர்தலை முன்னிறுத்தியே இந்த அரங்கேற்றங்கள் என தெரிகிறது சார்.

சரியாக சொன்னீங்க வால்பையன்... வார்த்தைக்கு வார்த்தை பிற கட்சிகளை திட்டுகிறார்களே தவிர முத்துகுமார் குறித்தோ, ஆக்கபூர்வ நடைவடிக்கைகள் குறித்தோ ஒன்றும் பேசவில்லை.

Maximum India said...

நன்றி எட்வின்

//தேர்தலை முன்னிறுத்தியே இந்த அரங்கேற்றங்கள் என தெரிகிறது சார். //

உண்மைதான் எட்வின்.

//சரியாக சொன்னீங்க வால்பையன்... வார்த்தைக்கு வார்த்தை பிற கட்சிகளை திட்டுகிறார்களே தவிர முத்துகுமார் குறித்தோ, ஆக்கபூர்வ நடைவடிக்கைகள் குறித்தோ ஒன்றும் பேசவில்லை//

அமெரிக்கா போல சமூக பொருளாதார கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே இங்கேயும் விவாதங்கள் நடத்தப் பட வேண்டும். தனிப் பட்ட முறையிலான தாக்குதலையும் விமர்சனங்களையும் தலைவர்கள் மேற்கொண்டாலும் மக்கள் புறந்தள்ள வேண்டும்.

நன்றி.

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

Maximum India said...

நன்றி nTamil!

Jaffer said...

மகாத்மா காந்தியால் எவ்வாறு மதிக்கப்பட்ட உண்ணாவிரதம், இப்போதுள்ள அரசியல் தலைவர்களால் கேலிக் கூத்தாக்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் உண்ணாவிரதத்தை முடித்து வைப்பதில் கூட அரசியல் விளம்பரத்தை சிலர் தேடுவதுதான்.

மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்கள், ஆனால் என்றுமே மக்கள் முட்டாள் இல்லை. கோமாளி வேடம் போடும் அரசியல் தலைவர்களை ரசிப்பதே இப்போது நம் வேலையாகிவிட்டது. இல்லையா?

என்றும் அன்புடன்,
Jaffer

Maximum India said...

அன்புள்ள ஜாபர்!

பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்கள் சொல்வது போல நாம் இந்த கோமாளிகளின் கூத்துக்களை ரசித்துக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், இதற்காக நாம் கொடுக்கும் விலைதான் ரொம்ப அதிகம்.

நன்றி.

Naresh Kumar said...

என்ன இப்படி சொல்லிட்டீங்க சார்,

எனக்கு கடைசியாகக் கிடைத்த தகவலின் படி, ஈழத் தமிழர்க்ளுக்காக, ராஜபக்சே கூடிய சீக்கிரம் உண்ணா விரதம் இருக்கப் போகிறாராம்.

அதற்கப்புறம் அவர் சொல்லலாம், பாருங்க நானும் உண்ணாவிரதம் இருந்துட்டேன், எனக்கு உண்மையிலேயே அவர்கல் மேல் பாசம் இருக்கிறது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரந்தான் இன்னும் உண்ணா விரதம் இருக்கவில்லை எனவே இதிலிருந்தே தெரியவில்லையா, ஈழத் தமிழர்கள் நலனில் யாருக்கு அக்கறை அதிகம் என்று...........

இந்த உண்ணாவிரதப் போராட்டம் நானும் ஒரு பதிவு போட்டுருந்தேன், நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.....

http://nareshin.wordpress.com

Maximum India said...

அன்புள்ள நரேஷ்

//என்ன இப்படி சொல்லிட்டீங்க சார்,

எனக்கு கடைசியாகக் கிடைத்த தகவலின் படி, ஈழத் தமிழர்க்ளுக்காக, ராஜபக்சே கூடிய சீக்கிரம் உண்ணா விரதம் இருக்கப் போகிறாராம்.

அதற்கப்புறம் அவர் சொல்லலாம், பாருங்க நானும் உண்ணாவிரதம் இருந்துட்டேன், எனக்கு உண்மையிலேயே அவர்கல் மேல் பாசம் இருக்கிறது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரந்தான் இன்னும் உண்ணா விரதம் இருக்கவில்லை எனவே இதிலிருந்தே தெரியவில்லையா, ஈழத் தமிழர்கள் நலனில் யாருக்கு அக்கறை அதிகம் என்று...........//

இது கூட நல்லாத்தான் இருக்கு. :)

//இந்த உண்ணாவிரதப் போராட்டம் நானும் ஒரு பதிவு போட்டுருந்தேன், நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.....

http://nareshin.wordpress.காம்//

கண்டிப்பாக பார்க்கிறேன்.

நன்றி.

KUMAR K 99522 86087 said...

அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லி திரிவதை விடுத்து அதை சுத்தம் செய்ய ஏன் ஒருவரும் முயற்சி செய்யவில்லை ?

Chandru

Maximum India said...

அன்புள்ள சந்துரு

//அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லி திரிவதை விடுத்து அதை சுத்தம் செய்ய ஏன் ஒருவரும் முயற்சி செய்யவில்லை ?//

உங்களுடைய கேள்வி சரியான ஒன்று. சாக்கடையை சுத்தம் செய்யப் போகிறவர் பரந்த மனதும் உயர்ந்த உள்ளமும் கொண்டவராக இருக்க வேண்டும். ஏனெனில், அந்த சாக்கடையின் நாற்றத்தைப் பொறுத்துக் கொண்டு, அதன் அழுக்கை நீக்குபவருக்கு பரந்த உள்ளம் இருக்க வேண்டும். மேலும், அரசியல் சாக்கடையானது தன்னை சுத்தம் செய்பவரையும் அழுக்காக்கி தன்னுள்ளே ஐக்கியப் படுத்திக் கொள்ளும் சக்தி கொண்டது. அந்த அரசியல் சாக்கடையால் மனம் மாறாத உயர்ந்த உறுதியான உள்ளம் கொண்டவராலேயே இந்தத் திருப் பணியை செய்ய முடியும். சுதந்திரத்திற்கு பிறகு அவ்வளவு பெரிய ஆள் நம் நாட்டில் தோன்ற வில்லை என்றுதான் தோன்றுகிறது.

நன்றி.

Blog Widget by LinkWithin