Skip to main content

வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கையின் பொருள் பற்றி சமீபத்தில் நான் படித்த ஒரு கதை இங்கே.

ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்த சில மாணவர்கள், படித்து முடித்து சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கல்லூரியில் சந்திக்கின்றனர். அப்போது, கல்லூரி வாழ்க்கையைப் போல வெளி உலக வாழ்க்கை சந்தோசமானதாக இல்லை என்றும் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கின்றது என்றும் அலுத்துக் கொள்கின்றனர்.

அப்போது அங்கு வந்த அவர்களது முன்னாள் பேராசிரியர் அவர்களை தன் வீட்டிற்கு தேநீர் விருந்துக்கு அழைக்கிறார். சுவையில் சிறந்த அவர் வீட்டு தேநீர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது.

அவரது வீட்டில் தேநீர் பல்வேறு விதமான கோப்பைகளில் பரிமாறப் படுகின்றது. சில கோப்பைகள் சாதாரணமானவை, சில கோப்பைகள் அழகானவை, சில கோப்பைகள் விலை உயர்ந்தவை, வேறு சிலவோ பிரத்யேகமாக கலை அழகோடு வடிவமைக்கப் பட்டவை.

அந்த மாணவர்கள், அழகற்ற கோப்பைகளை தவிர்த்து விட்டு அழகிய கோப்பைகளிலேயே தேநீர் அருந்த விரும்புகின்றனர். கலை வடிவம் மிக்க தேநீர் கோப்பைக்காக அவர்களிடையே சிறிய போட்டி கூட நடக்கிறது.

ஒருவழியாக, தமக்கான கோப்பையை தேர்வு செய்து, மாணவர்கள் அனைவரும் தேநீர் அருந்தும் போது அங்கு வந்த பேராசிரியர் சிறிய விளக்க உரை நிகழ்த்துகிறார். அது இங்கே.

"ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். நீங்கள் அனைவரும் அழகில் சிறந்த, விலை உயர்ந்த கோப்பைகளிலேயே தேநீர் அருந்த விரும்பினீர்கள். ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கென சிறந்ததையே தேர்ந்தெடுக்க விரும்புகிறான். இது மிகவும் இயல்பான விஷயம்தான் என்றாலும் பல பிரச்சினைகளின் மூல காரணம் அதில்தான் உள்ளது.

நீங்கள் கஷ்டப் பட்டு போராடி தேர்வு செய்த கோப்பைகள், தேநீருக்கு எந்த ஒரு தனிச் சுவையையும் கூட்ட வில்லை. சொல்லப் போனால், கலைநயம் மிக்க சில கோப்பைகள், எளிதில் தேநீர் அருந்த, அதன் சுவையை முழுமையாக உணர தடையாகவே இருந்தன.

உண்மையில், என் வீட்டிற்கு நீங்கள் வந்தது சுவையான தேநீரை அருந்தவே. கலை நயம் மிகுந்த கோப்பைகளை உபயோகிக்க அல்ல.

ஆனாலும், தேநீர் அருந்த வந்த உங்கள் கவனம், கோப்பைகளைப் பார்த்தவுடன் திசை மாறி விட்டது. அதிலும், உங்கள் கையில் உள்ள கோப்பை மீது இருந்த கவனத்தை விட அடுத்தவர் கையில் என்ன கோப்பை உள்ளது என்பதில்தான் அதிக கவனம் இருந்தது.

நண்பர்களே! இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்க்கை என்பது கூட சுவையான தேநீர் போன்றது. இடையில் வந்து போகும் பதவி, பணம், புகழ் எல்லாமே, அந்த வாழ்க்கையை தாங்கிப் பிடிக்க உதவும் கோப்பைகள் மட்டுமே.

மேற்சொன்ன பணம் பதவி போன்ற விஷயங்கள் எதுவும் வாழ்க்கை எனும் தேநீரின் சுவையை மாற்றுவதில்லை. ஆனால் பல சமயங்களில், கோப்பைகளில் அதிக கவனம் செலுத்தும் நாம் வாழ்க்கையை முழுமையாக சுவைக்க மறந்து விடுகிறோம். பலர் இது போல காலப் போக்கில் வாழ்க்கை எனும் தேநீரின் உண்மையான சுவை மறந்து போய் இயந்திரகதியாக வாழ ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்! மகிழ்ச்சியாக வாழும் மனிதர்களுக்கு எல்லாவற்றிலும் உயர்ந்த விஷயங்கள் கிடைப்பதில்லை. அவர்கள் தங்களுக்கு கிடைத்த தேநீரை முழுமையாக சுவைப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதை தாங்கிப் பிடிக்கும் கோப்பைகளில் அல்ல.

அதிகமான பொருட்கள் வைத்திருப்பவன் உண்மையான பணக்காரன் இல்லை. குறைவாக தேவைகள் உள்ளவனே பெரிய பணக்காரன். "

இவ்வாறு அவர் உரைத்ததும், அந்த மாணவர்களுக்கு வாழ்க்கை பற்றி கொஞ்சம் விளங்கியது போல இருந்தது. இந்த முறை தேநீரின் சுவையை முழுமையாக ருசித்து பின்னர் கலைந்து போனார்கள்.

எனக்கு இந்த கதை பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாருங்கள். ஒரு நல்ல டீ சாப்பிட்டுக் கொண்டே யோசிப்போம்.

நன்றி.

Comments

//நீங்கள் கஷ்டப் பட்டு போராடி தேர்வு செய்த கோப்பைகள், தேநீருக்கு எந்த ஒரு தனிச் சுவையையும் கூட்ட வில்லை.//

அருமையான வாசகம்!

என் பாசையில சொல்லபோன அழகான கோப்பையில குடிக்கிறதால சரக்கு மாறிராது இல்லையா?

ஹிஹிஹி

இது சும்மா

உண்மையிலேயே நல்ல கருத்துகள்!

வாழ்க்கையை அலட்டிகொள்ளாமல் வாழ வேண்டும் என்பது தான் என் ஆசையும்.
Maximum India said…
//என் பாசையில சொல்லபோன அழகான கோப்பையில குடிக்கிறதால சரக்கு மாறிராது இல்லையா?//

தாஜ் ஹோட்டலில் அடிச்சாலும் டாஸ்மாக் கடையில் அடிச்சாலும் போதை ஒண்ணுதான் இல்லையா?

சரக்கா இருந்தாலும் டீயா இருந்தாலும் கருத்து ஒண்ணுதான் இல்லையா?

//ஹிஹிஹி//

வழி மொழிகிறேன் :)


//வாழ்க்கையை அலட்டிகொள்ளாமல் வாழ வேண்டும் என்பது தான் என் ஆசையும்.//

வாழ்த்துக்கள்.

என்னுடைய சிறிய அனுபவத்தில் நான் கற்றுகொண்டது இதுதான். மனதை கட்டுப் படுத்தினால் சுவர்க்கம் மண்ணில். மாறாக அலை பாய விட்டால் சுவர்க்கமும் நரகம்தான்.

நன்றி.

Popular posts from this blog

வாண வேடிக்கையா? வெறும் புஸ்வாணமா?

பெரிதாக வெடிக்கப் போகிறது அல்லது வண்ண மயமான ஒளிச்சிதறல்கள் பூக்கப் போகின்றன என்றெல்லாம் பெரிதாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சில பட்டாசுகள் புஸ்வாணமாக போவதுமுண்டு. தீபாவளி தினத்தன்று நமக்கெல்லாம் சில சமயங்களில் ஏற்பட்டு விடும் இது போன்ற ஒரு அனுபவம் சென்ற வாரம் பங்குசந்தையிலும் ஏற்பட்டது. சென்ற வாரம் நம்மை ஏமாற்றிய புஸ்வாணங்களைப் பற்றி முதலில் பார்ப்போம். முதல் புஸ்வானம் - பாரதி ஏர்டெல் தென் ஆப்பிரிக்க தொலைபேசி நிறுவனமான எம்டிஎன்-னுடான இணைப்பு இல்லையென்றவுடன் முதலில் துள்ளிக் குதித்த பாரதி பங்கு, வெகு சீக்கிரத்திலேயே ஆடி அடங்கி விட்டது. எம்டிஎன்னுடன் இணையாததால் சில அபாயங்கள் நீங்குகின்றன என்று அந்த பங்கினை அதிக விலையில் வாங்கி வைத்து ஆசையுடன் காத்திருந்த பலருக்கு பாரதி ஒரு பெரிய புஸ்வாணமாகவே அமைந்தது. இரண்டாவது புஸ்வானம் - ரிலையன்ஸ் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு கொடுப்பதாக அறிவித்தது. இந்தியாவின் 'நம்பர்-ஒன்' வணிகத் தாளான எகோநோமிக் டைம்ஸ் பத்திரிக்கை, தீபாவளி வாணவேடிக்கை ஆரம்பித்து விட்டதாக முதல் பக்கத்தில் தலைப்ப...

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...