Tuesday, March 3, 2009

விளையாட்டையும் விட்டு வைக்காத பயங்கரவாதம்.


போர் வெறி பிடித்த மனிதனின் நாகரிக வடிகாலே "விளையாட்டு போட்டிகள்" ஆகும். "யார் பெரியவன்" என்பதை வெளிக் காட்ட முதலில் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து விளைவிக்கும் விளையாட்டுக்களாக துவங்கிய, விளையாட்டு போட்டிகள் இப்போது பல விதிமுறைகளுக்கு உட்பட்ட ஒரு நாகரிக சின்னமாகவே அறியப் படுகிறது. மேலும், வேறு பல காரணங்களுக்காக விரோதம் பாராட்டும் நாடுகள் கூட விளையாட்டை இப்போதெல்லாம் ஒரு நட்புப் பாலமாகவே கருதுவதை நாம் கண்டிருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்பு கூட இந்திய -பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்த போது இரண்டு நாடுகளுக்கிடையேயான விரோத மனப்பான்மை சற்றே தணிந்திருந்ததை உதாரணமாக கூற முடியும். (Photo Courtesy: Reuters)

மேலும், சமீப காலத்தில் உலகின் எந்த ஒரு தீவிரவாத அல்லது விடுதலை இயக்கமும் விளையாட்டுப் போட்டிக்களை தனது தாக்குதலுக்கான இலக்காக குறி வைப்பதில்லை. இப்போதெல்லாம் சமாதானத்தின் வெளிப்பாடாகவே விளையாட்டு போட்டிகள் அறியப் படுவதும், விளையாட்டு வீரர்களின் மீதான தாக்குதல்கள் மக்களின் நல்லெண்ணத்தை அழித்து விடும் என்பதும் இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். இலங்கை அரசு தொடர்ந்து இனப் படுகொலையில் ஈடு பட்டிருக்கும் போது கூட விடுதலைப் புலிகள் இலங்கையில் நடைபெறும் எந்த ஒரு சர்வதேச விளையாட்டு போட்டிகளையும் குறிவைத்து தாக்குவதில்லை என்பது இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

சமீப காலமாகவே, பயங்கரவாதம் புரையோடிப் போன பாகிஸ்தானில் விளையாட்டு போட்டிகளுக்காக இந்தியா உட்பட உலக நாடுகள் எதுவும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதில்லை. ஆனால் இலங்கை அரசோ, பல்வேறு சர்வ தேச உளவுத் துறைகளின் எச்சரிக்கைகளையும் மீறி, பாகிஸ்தானுடன் உள்ள நெருங்கிய உறவின் காரணமாக தனது அணி வீரர்களின் உயிரை பணயம் வைத்து இந்த கிரிக்கெட் தொடருக்கு அனுப்ப சம்மதித்தது.

ஆனால், லாகூரில் இன்று காலை, பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே இலங்கை அணியினர் சென்ற வாகனத்தை துல்லியமாக அடையாளம் கண்டு பிடித்து தாக்கினர். இதில் இரண்டு இலங்கை வீரர்கள் பலத்த காயம் (நான்கு பேர் சாதாரண காயம்) அடைந்தனர். மேலும் ஐந்து போலீஸார் இறந்து போயினர் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ காட்சிகளில், இவர்களுக்கும் மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே உடை, தாக்கும் ஸ்டைல் போன்ற விஷயங்களில் பலத்த ஒற்றுமை இருப்பதை கண்கூடாக காண முடிந்தது. மிக துல்லியமாக இலங்கை அணியினரை தாக்கியதும், தாக்குதல் முடிந்ததும் எளிதாக தப்பித்ததும் இவர்கள் மிகுந்த பயிற்சி பெற்றவர்கள் என்பதையும், பாகிஸ்தான் பாதுகாப்பு படைக்குள்ளேயே இவர்களுக்கு நிறைய உள்ளாட்கள் இருக்கிறார்கள் என்பதையுமே காட்டியது.

உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணாகவே விளங்கும் பாகிஸ்தான் இந்த விஷயத்திலும் கூட முதலில் "மோடி மஸ்தான்" வேலையினையே செய்யப் பார்த்தது. பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண அரசு, இந்த தாக்குதலை இரண்டு உள்ளூர் கோஷ்டிகளுக்கு இடையேயான குழு மோதல் மட்டுமே என்று முதலில் வர்ணித்தது. இலங்கை அணியினர் இந்த தாக்குதலுக்கு இடையே மாட்டிக் கொண்டனர் என்றும் கூட சொன்னது. பின்னர்தான் இது இலங்கை அணியினரை குறி வைத்த தாக்குதல் என்று பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டது. இன்னும் கூட, தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், தாக்குதலுக்கு பின்னர் எப்படி எளிதில் தப்பித்தனர் என்ற சரியான விளக்கத்தை பாகிஸ்தான் அரசு வெளியிட வில்லை என்பது பாகிஸ்தான் அரசின் நம்பகத்தன்மையை மீண்டும் ஒரு முறை கேள்விக்குறிக்குள்ளாக்குகிறது.

டாக்டரிடமும் வக்கீலிடமும் பிரச்சினைகளை மூடி மறைக்கக் கூடாது என்பார்கள். பிரச்சினையின் முழு விவரம் தெரிந்தால்தான் அதை எளிதில் சரி செய்ய முடியும் என்ற பொருளில்தான் இந்த வழக்கு. "இல்லை இல்லை" என்று (முழு பூசணிக்காய் போன்ற இந்த பயங்கரவாதத்தை) மூடி மறைத்துக் கொண்டே இருந்தால் இந்த பிரச்சினைக்கு என்றைக்குமே தீர்வு கிடைக்க போவதில்லை. பாகிஸ்தான் அரசு தன்னாட்டில் உள்ள பயங்கரவாதப் பிரச்சினையை வெளிப் படையாக ஒப்புக் கொள்வதே, தீர்வுக்கான முதல் படி.

மேலும், இந்த பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்ட, பாகிஸ்தான் அரசு ஐ.நா மூலமாக பன்னாட்டு படைகளின் உதவியைக் கோர வேண்டும். சோமாலியா கடற் கொள்ளைகாரர்கள் பிரச்சினையை விட அதிக தீவிரமும் வீச்சும் கொண்ட இந்த விஷயத்தில் ஐ.நா.பாதுகாப்பு சபை உடனடியாக ஒரு பெரிய பன்னாட்டு படையை பாகிஸ்தானுக்கு அனுப்பி பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும்.

உலகத்திற்கான தனது மிகப் பெரிய சேவையாகிய இதனை செய்யுமா பாகிஸ்தான் அரசு?

செய்தால் உலக சமுதாயத்தின் நன்றிக்குரியதாக என்றும் இருக்கும் பாகிஸ்தான்.

நன்றி.

4 comments:

dg said...

/ இந்த பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்ட, பாகிஸ்தான் அரசு ஐ.நா மூலமாக பன்னாட்டு படைகளின் உதவியைக் கோர வேண்டும். சோமாலியா கடற் கொள்ளைகாரர்கள் பிரச்சினையை விட அதிக தீவிரமும் வீச்சும் கொண்ட இந்த விஷயத்தில் ஐ.நா.பாதுகாப்பு சபை உடனடியாக ஒரு பெரிய பன்னாட்டு படையை பாகிஸ்தானுக்கு அனுப்பி பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும்./உங்களுடைய கருத்தை வலி மொழிகிறேன் நன்றி

வால்பையன் said...

அது பாகிஸ்தானை மட்டும் தாக்கும் பிரச்சனை இல்லை!
அண்டை நாடுகள் அனைத்திற்கும் ஏற்கனவே பாதிப்பு ஆரம்பித்துவிட்டது.
இனியும் பாகிஸ்தான் மெளனம் சாதிக்குமானால்,

என்ன நடக்குமென்றே தெரியவில்லையே!

Maximum India said...

பின்னூட்டத்திற்கு நன்றி dg.

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

//அது பாகிஸ்தானை மட்டும் தாக்கும் பிரச்சனை இல்லை!
அண்டை நாடுகள் அனைத்திற்கும் ஏற்கனவே பாதிப்பு ஆரம்பித்துவிட்டது.
இனியும் பாகிஸ்தான் மெளனம் சாதிக்குமானால்,

என்ன நடக்குமென்றே தெரியவில்லையே!//

உண்மைதான். இப்போதைக்கு உலகின் பாதுகாப்பின் எதிர்காலம் பாகிஸ்தான் அரசு கையில்தான் உள்ளது.

நன்றி.

Blog Widget by LinkWithin