Skip to main content

பி-ஜெ-பி (1999-2004) > = < காங்கிரஸ் (2004-2009) ?

சுமார் எழுபத்து ஒரு கோடி பேர் பங்கு பெறவுள்ள உலகின் மிகப் பெரிய தேர்தல் இன்னும் சில நாட்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டாலும் முக்கிய போட்டி ஆளும்கட்சியான காங்கிரசுக்கும் எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கும்தான். காங்கிரஸ் கட்சி சுதந்திர இந்தியாவின் வரலாற்றின் மிகப் பெரும்பான்மையான காலம் ஆட்சி செய்த பெருமையைப் பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சியோ முதன் முதலாக "ஐந்து வருடங்கள் முழுமையாக ஆட்சி செய்த காங்கிரஸ் அல்லாத கட்சி" என்ற பெருமையைப் பெற்றுள்ளது. (Graphics: Courtesy - www.hindu.com)

யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை இந்திய மக்கள் அனைவரையும் கூட்டாக சார்ந்தது என்றாலும் ஒரு பொது கருத்து கொண்டு வர உதவும் பொறுப்பு நம் போன்ற ஊடகங்களைச் சேர்ந்தது ஆகும். மேற்சொன்ன இரண்டு கட்சிகளின் பலம் மற்றும் பலவீன விஷயங்கள், சாதக பாதக விஷயங்கள், இந்திய அளவில் மொத்தமாக வெற்றி வாய்ப்புக்கள், மாநில வாரியான வெற்றி வாய்ப்புகள் (குறிப்பாக தமிழகம்) அனைத்தையும் இனி வரும் பல பதிவுகள் மூலமாக இந்த பதிவு வலையில் விவாதிக்க விரும்புகிறேன்.

பலவருடங்கள் ஆட்சி செய்த காங்கிரஸையும், சில ஆண்டுகளே ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சியினையும் தராசில் வைத்து ஒப்பிட வசதியாக, பாரதிய ஜனதா ஆட்சி செய்த 1999-2004 மற்றும் காங்கிரஸ் ஆட்சி செய்த 2004-2009 ஆண்டு கால கட்டத்தை இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். முன்னோட்டமாக (மேலோட்டமாக) சில வரிகள் இங்கே.

பாரதிய ஜனதா ஆட்சியின் முதல் நான்கு ஆண்டுகள் இந்தியா பொருளாதார ரீதியாக பின்னடைவைச் சந்தித்தாலும் கடைசி வருடம் ஒளிர்ந்தது. உபயம்: அமெரிக்க நிதிச் சந்தைகள் (பெரிய யானை சாப்பிடும் போது சிதறுவது பல சிறிய எறும்புகளுக்கு பல நாள் உணவு என்று பெரியவர்கள் சொல்வார்கள்)

காங்கிரஸ் ஆட்சியின் முதல் நான்கு ஆண்டுகள் அசாதாரண பொருளாதார வளர்ச்சியை இந்தியா சந்தித்தாலும் கடைசி ஆண்டு இருண்ட காலம். உபயம்: அதே அமெரிக்க நிதிச் சந்தைகள் (பெரிய யானை சற்று தடுமாறி கீழே விழுந்தால் அடியில் உள்ள எறும்புகள் நசுங்கி விடும்)

தீவிரவாதிகளை அடக்க "பொடா" சட்டத்தை கொண்டு வந்து, அந்த சட்டத்தின் அடிப்படையில் அப்பாவிகளையும் சிறையில் அடைக்க வழி கோலியது பாரதிய ஜனதா கட்சி. அப்பாவிகளை காப்பாற்ற வகையாக அந்த சட்டத்தை நீக்கிய காங்கிரஸ் கட்சி, தீவிரவாத குற்றவாளிகளை பல ஆண்டுகளாக தண்டிக்காமல் உயிரோடு வைத்திருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் மிகப் பெரிய சாதனையாக தங்க நாற்கரச் சாலை திட்டத்தை சொல்லலாம். பாகிஸ்தானுடன் நல்லுறவு மேற்கொள்ள முயன்றது நல்ல விஷயம்தான் என்றாலும் கார்கில் விஷயத்தில் கோட்டை விட்டது, பாராளுமன்ற தாக்குதல் விவகாரம் மற்றும் காந்தகார் விமான கடத்தல் போன்ற விஷயங்களை வேதனைகள் என்று சொல்லலாம்.

காங்கிரஸ் கட்சியின் சாதனையாக வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டு வரும் (அனைவருக்கும் கல்வி, ஊரக வேலை வாய்ப்பு திட்டம்) பல சமூக திட்டங்களை சொல்லலாம். வேதனைகளாக "யாரிடம் அதிகாரம் இருக்கிறது" என்ற குழப்பங்கள், பதவியைத் தக்க வைத்துக் கொள்ள நடந்த பண பேரங்கள், சந்தர்ப்பவாத கூட்டணி தர்மங்கள் (இது பி.ஜெ.பி ஆட்சி விஷயத்திலும் இருந்தது), தீவிரவாத தடுப்பு விஷயத்தில் மொத்தமாக கோட்டை விட்டது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இரண்டு ஆட்சிக்கும் பொதுவான விஷயங்கள். இந்தியாவின் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆனார்கள். உபயம்: பாரதிய ஜனதா கட்சியின் தனியார்மயமாக்கும் கொள்கை. பல பொது நிறுவனங்கள் நேரடியாக ஒரு சிலருக்கு விற்பனை (தாரை வார்ப்பு?) செய்யப் பட்டன. காங்கிரஸ் ஆட்சியின் "அலை வரிசை" கொள்கை மிகவும் கேள்விக்குரியது.

போக்ரான் விஷயத்தில் பாகிஸ்தான் அடைந்த நன்மைதான் அதிகம். அணுசக்தி ஒப்பந்தம், இந்தியாவை விட அமெரிக்காவிற்குத்தான் அதிக லாபங்கள் இருக்கும்படி அமைந்தது.

ஏற்கனவே சொன்னபடி, மேலே உள்ளவை ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே. விரிவான அலசல்கள் தொடரும். காங்கிரஸ், பி.ஜெ.பி மட்டுமல்லாமல், இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வல்ல மாயாவதி மற்றும் மூன்றாம் அணி பற்றியும், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எப்போதும் கூட இருக்கும் கூட்டணி கட்சிகள் பற்றியும் இங்கு விவாதிப்போம். இந்த விவாதங்களில் கலந்து கொள்ளுமாறு அனைத்து நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரே ஒரு கோரிக்கை. விவாதங்கள். கட்சிகளின் சமூக, பொருளாதார கொள்கைகள், வெளியுறவு கொள்கைகள், தேச பாதுகாப்பு, போன்ற விஷயங்களின் அடிப்படையில் இருக்கட்டும். இன, மொழி, மத அடிப்படையில் மற்றும் தனிப் பட்ட முறையில் வேண்டாம். ஏனென்றால், அத்தகைய வாதங்கள் நமது விவாதத்தின் அடிப்படைப் பொருளை திசை திருப்பி அதனை நீர்த்துப் போக செய்து விடும். சாதனைகள் (வேதனைகள்) மற்றும் கொள்கைகள் அடிப்படையில் மட்டுமே விவாதம் இருக்கட்டும்.

நன்றி.

Comments

Raman Kutty said…
சூப்பரான ஆரம்பம், இதன் போக்கு மாறாமல், ஆரோக்கியமான விவாதமாக செல்ல எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள், !!!
Maximum India said…
நன்றி ராமன்

உங்களுடைய ஆதரவு இருக்கும் போது என்ன கவலை? நல்ல அலசல்களும் விவாதங்களும் இங்கிருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

நன்றி.
அருமையான அலசல்!

பி.ஜே.பி காலத்தில் ஆரம்பித்த சாலை வேலைகளை இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

போட்டு முடிந்தது சாவடிகள் அமைத்து காசு வசூல் பண்ணுவாங்களாமே எதற்கு?
நமது வரிப்பணம் என்னாச்சு?
ஒரு நாட்டின் வளர்ச்சி சாமானியர்களின் வளர்ச்சியை பொறுத்தே அமையும். சமீப காலமாக சாமானியர்கள் கடையில் சல்லிசாக சாமானம் வாங்கி தங்கள் மானத்தை காப்பாற்றி கொள்ளவே பெரும்பாடு பட வேண்டி உள்ளது. சாமானியனுக்கு தெரிந்தது எல்லாம் மெரினா பீச் அலை வரிசைதான். மற்றபடி தீவிர வாதம் , சட்டம் ஒழுங்கு , மும்பை துப்பாக்கி ஷோ , போன்ற நல்ல விஷயங்கள் சந்தோசத்தை தருகின்றன. நிலவுக்கு வண்டி கட்டி அனுப்பியது சாதனை. சாதனைகளும் வேதனைகளும் கலந்தே இருந்து வந்துள்ளது கடந்த ஆட்சி. அய்யா சாமீய் ! பொது ஜனங்க பத்திரமா பொழப்ப ஓட்ட நல்ல கட்சியா பாத்து ஒட்டு போடுங்க சாமீய்.
Maximum India said…
அன்புள்ள நட்சத்திரப் பதிவர் வால்பையன் அவர்களே!

நீங்கள் பிசியாக இருக்கும் இந்த நேரத்திலும் நேரம் ஒதுக்கி பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.

//போட்டு முடிந்தது சாவடிகள் அமைத்து காசு வசூல் பண்ணுவாங்களாமே எதற்கு?
நமது வரிப்பணம் என்னாச்சு?//

உங்களுக்கு ஒரு வேடிக்கையான விஷயம் தெரியுமா? இந்த மாதிரி சாலை வசூல் அதிகம் பெறக்கூடிய வாய்ப்புள்ள சாலைத் திட்டங்களைப் பெற நிறுவனங்களிடையே கடும் போட்டி இருக்கும். சில கம்பெனிகள் நெகடிவ் பிட் கூட சமர்ப்பிப்பார்கள். அதாவது, சாலை இடும் பணியை அவர்கள் செய்ய அரசாங்கத்திற்கு பணம் கொடுப்பார்கள். இதனால் அரசாங்கத்திற்கு இரட்டிப்பு லாபம். சாலை இட்டோம் என்ற பெயர் மற்றும் பெருமை, வரிப் பணம் துளி கூட செலவில்லை என்பதுடன் கூடவே அரசாங்கத்திற்கு வருமானம். இதனால்தான், கண்ணை மூடிக் கொண்டு, பல சாலைத் திட்டங்களை கடந்த கால அரசுகள் அறிவித்தன.

வரிப் பணம் என்னாச்சு என்றெல்லாம் கேட்கக் கூடாது. மூச்...... பின்னர் எந்தப் பணத்தில் மந்திரிகள் உலகம் சுற்றுவார்கள், மெர்செடெஸ் பென்ஸ் காரில் வலம் வருவார்கள்?

நன்றி.
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி.

//ஒரு நாட்டின் வளர்ச்சி சாமானியர்களின் வளர்ச்சியை பொறுத்தே அமையும். சமீப காலமாக சாமானியர்கள் கடையில் சல்லிசாக சாமானம் வாங்கி தங்கள் மானத்தை காப்பாற்றி கொள்ளவே பெரும்பாடு பட வேண்டி உள்ளது. //

வெளிநாட்டில் பொருளாதார பட்டம் பெற்ற மேதைகளுக்கு அவர்களின் முதல் கடமை, சராசரி மனிதனின் வாழ்வாதாரம் உயர்வதுதான் என்று தெரியாமல் போனது வருத்தத்தையே தருகிறது. தாஜ் ஹோடேலில் ரூம் போட்டு யோசிப்பதை விட, ஒரு சிறிய கிராமத்தில் சில நாட்கள் தங்கி இவர்கள் திட்டம் தீட்டினால் நன்றாக இருக்கும்.

//சாமானியனுக்கு தெரிந்தது எல்லாம் மெரினா பீச் அலை வரிசைதான். //

கண்டிப்பாக. இந்தியர்களின் "குறைந்த வட்ட வாழ்கை முறை" (Contented Lifestyle) பணக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஸௌகரியமாக போய் விட்டது.

//அய்யா சாமீய் ! பொது ஜனங்க பத்திரமா பொழப்ப ஓட்ட நல்ல கட்சியா பாத்து ஒட்டு போடுங்க சாமீய்.//

மக்கள் யோசிக்கிறார்கள் என்ற பயம் அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வந்து விட்டாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்து போய் விடும்.

நன்றி.
Itsdifferent said…
எனக்கு தெரிந்து நாம் மக்களை வேண்டி, சரியான முடிவு எடுங்கள் என்பதை விட, அரசியல் வாதிகளை கெஞ்சி கூத்தாடி, நல்லாட்சி கொடுக்க வேண்டலாம்.
எனக்கு தெரிந்த வரை, மோடி ஒரு நல்ல ஆட்சி செய்கிறார் என்று நினைக்கிறேன். அதனால், அவர் மத்திய அரசுக்கு வந்தால், நல்லது நடக்க வைப்புகள் அதிகம் உள்ளது,
அரசியல் வாதிகள், தன்னலம் மறந்து ஆட்சி செய்ய முனைய வேண்டும். ஒருவருக்கு எவ்வளவு பணம் வேண்டும்? ஒரு நல்ல வாழ்க்கை வாழ? இந்த தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலோர் நல்ல வசதியோடு இருப்பார்கள், அதனால் நான் இனிமேல் பணத்துக்காக அலையாமல், மக்கள் நலத்துக்காக முடிவுகள் எடுப்பேன் என்று நினைக்க வேண்டும். அவர்களை, நாம் அப்படி வேண்டுவோம்.
2. Swiss வங்கியில் உள்ள பணத்தை எப்படியாவது (முதலீட்டார்களை மன்னித்தாவது) நம் நாட்டிற்க்கு கொண்டு வந்து, நம் நாட்டின் எதிர்காலத்துக்கு பயன்படுத்த வேண்டும்.
3. 2020 கலாமின் கனவுகளை நனவாக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்ய வேண்டும்.
4. உலக அரங்கில், நாம் ஒரு வீரமான , கம்பீரமான, நேர்மையான நாடாக அறியப்பட அனைத்து முயற்சிகளையும், செய்ய வேண்டும.

கனவென்று தூற்றுவோர் தூற்றட்டும், நினைவாக செய்யும் அனைவரின் முயற்சிக்கும் எனது ஆதரவு உண்டு, உங்கள் ஆதரவு?
Itsdifferent said…
இன்னொரு யோசனை. நாம் ஒவோவுறு தொகுதிக்கும் சில நண்பர்களை தேடி கண்டுபிடித்து, அந்த தொகுதியின் நிறை குறைகள், தடைபட்டு இருக்கும் வேலைகள் இவற்றை தொகுத்து வெளியிட்டால் என்ன?
இத்தகைய அட்டவனையை போட்டியிடும் அரசியல்வாதிகள் பார்வைக்கு அனுப்பி, அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை கேட்டு அதையும் வெளியிட வேண்டும்.
அதற்க்காக நாம் ஒரு ஊடகம் ஆரம்பிக்க நான் ரெடி.lets discuss.
இது போன்ற பொருள்களில் நமக்கு முக்கியமாக தோன்றும் சில கோணங்களிலிருந்து பார்த்து நம் கருத்தை சொல்ல முடியும். ஆனால், இந்தியா போன்ற பலவேறு மாநிலங்களும், இனங்களும், மொழிகளும், கட்சிகளும் உள்ள நாட்டில் ஒட்டு மொத்தமாக கருத்துக் கணிப்பு செய்து எதிர்பார்க்கும் முடிவுகளைச் சொல்வது மிகக் கடினம். இதில் ஒரு ரெண்டுங்கெட்டான்
பெடெரல் சிஸ்டம் இருப்பதால், மாநிலங்களில் அரசு செய்த அல்லது செய்யத்தவறிய பணிகளுக்கு பதிலாக இந்த பாராளுமன்றத் தேர்தல்களில் வாக்கு அளிப்பதும் ஒரு காரணம்.
1952 முதல் 1967 வரை மாநிலத் தேர்தல்களும் , பாராளுமன்றத்து தேர்தல்களும் ஒன்றாக வந்ததால் கருத்து கணிக்கப்தும் ஓரளவு எளிதாக இருந்திருக்கலாம். இப்போது நிலைமை இன்னும் கடினம். ஒரு மாநிலத்தில் மிகத் தலையாயது எனக் கருதப்படும் ஒன்று வேறொரு மாநிலத்தில் எந்த ஒரு விதத்திலும் பேசப்படாத பிரச்னையாக இருக்கலாம் ( உதாரணம்: ஈழத் தமிழர்கள் )

எனவே மாநில வாரியாக கணித்து மொத்தத்தை கூட்டினால் ஓரளவு சரியாக இருக்கலாம்
Maximum India said…
அன்புள்ள itsdifferent!

கருத்துரைக்கு நன்றி.

//எனக்கு தெரிந்து நாம் மக்களை வேண்டி, சரியான முடிவு எடுங்கள் என்பதை விட, அரசியல் வாதிகளை கெஞ்சி கூத்தாடி, நல்லாட்சி கொடுக்க வேண்டலாம்.//

மேலும் மக்களிடம் நிறைய சாய்ஸ் இல்லாத நிலையில் அவர்களால் சரியான முடிவு எடுப்பதும் சிரமமான காரியம்தான்.அரசியல்வாதிகளிடம் கெஞ்சுவதை விட ஒரு பலம் வாய்ந்த மக்கள் கருத்தை உருவாக்கி அரசியல்வாதிகளுக்கு தார்மீக நிர்ப்பந்தம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

//எனக்கு தெரிந்த வரை, மோடி ஒரு நல்ல ஆட்சி செய்கிறார் என்று நினைக்கிறேன். அதனால், அவர் மத்திய அரசுக்கு வந்தால், நல்லது நடக்க வைப்புகள் அதிகம் உள்ளது,//

இது ஏற்கனவே ஒரு பதிவில் சொன்ன படி விவாதத்துக்குரிய கருத்தாகும்.

//அரசியல் வாதிகள், தன்னலம் மறந்து ஆட்சி செய்ய முனைய வேண்டும். ஒருவருக்கு எவ்வளவு பணம் வேண்டும்? ஒரு நல்ல வாழ்க்கை வாழ? //

பணம் மற்றும் பதவி போதை வஸ்த்துக்கள். அவற்றுக்கு அடிமையானவர்கள் மீள்வது கஷ்டம்.

//2. Swiss வங்கியில் உள்ள பணத்தை எப்படியாவது (முதலீட்டார்களை மன்னித்தாவது) நம் நாட்டிற்க்கு கொண்டு வந்து, நம் நாட்டின் எதிர்காலத்துக்கு பயன்படுத்த வேண்டும்.//

இதை நான் கூட நினைத்தேன். ஒரு பொது மன்னிப்பு திட்டம் கொண்டு வந்து, இந்த பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சி செய்யலாம். தேவையில்லாமல் இந்தியப் பணம் வேறு நாட்டு வங்கிகளிடம் முடங்கிக் கிடப்பது வருத்தியே தருகிறது.

//3. 2020 கலாமின் கனவுகளை நனவாக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்ய வேண்டும்.
4. உலக அரங்கில், நாம் ஒரு வீரமான , கம்பீரமான, நேர்மையான நாடாக அறியப்பட அனைத்து முயற்சிகளையும், செய்ய வேண்டும.//

அருமையான நோக்கங்கள். நானும் வழிமொழிகிறேன்.

//கனவென்று தூற்றுவோர் தூற்றட்டும், நினைவாக செய்யும் அனைவரின் முயற்சிக்கும் எனது ஆதரவு உண்டு, உங்கள் ஆதரவு?//

உங்களுக்கு என்னுடைய ஆதரவு நிச்சயம் உண்டு. ஏற்கனவே சில முயற்சிகள் கூட எடுத்திருக்கிறேன். நாட்டு மக்களுக்கு நம்மால் முடிந்த வரை நல்லது செய்வோம்.

நன்றி.
Maximum India said…
அன்புள்ள itsdifferent

கருத்துரைக்கு நன்றி.

//இன்னொரு யோசனை. நாம் ஒவோவுறு தொகுதிக்கும் சில நண்பர்களை தேடி கண்டுபிடித்து, அந்த தொகுதியின் நிறை குறைகள், தடைபட்டு இருக்கும் வேலைகள் இவற்றை தொகுத்து வெளியிட்டால் என்ன?
இத்தகைய அட்டவனையை போட்டியிடும் அரசியல்வாதிகள் பார்வைக்கு அனுப்பி, அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை கேட்டு அதையும் வெளியிட வேண்டும்.
அதற்க்காக நாம் ஒரு ஊடகம் ஆரம்பிக்க நான் ரெடி.lets discuss.//

நல்ல யோசனை. என்னால் ஆன உதவிகளை செய்ய நானும் ரெடி.

நன்றி.
Maximum India said…
அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா!

//இது போன்ற பொருள்களில் நமக்கு முக்கியமாக தோன்றும் சில கோணங்களிலிருந்து பார்த்து நம் கருத்தை சொல்ல முடியும். ஆனால், இந்தியா போன்ற பலவேறு மாநிலங்களும், இனங்களும், மொழிகளும்,
கட்சிகளும் உள்ள நாட்டில் ஒட்டு மொத்தமாக கருத்துக் கணிப்பு செய்து எதிர்பார்க்கும் முடிவுகளைச் சொல்வது மிகக் கடினம். இதில் ஒரு ரெண்டுங்கெட்டான்
பெடெரல் சிஸ்டம் இருப்பதால், மாநிலங்களில் அரசு செய்த அல்லது செய்யத்தவறிய பணிகளுக்கு பதிலாக இந்த பாராளுமன்றத் தேர்தல்களில் வாக்கு அளிப்பதும் ஒரு காரணம். //

உண்மைதான் ஐயா!

//இப்போது நிலைமை இன்னும் கடினம். ஒரு மாநிலத்தில் மிகத் தலையாயது எனக் கருதப்படும் ஒன்று வேறொரு மாநிலத்தில் எந்த ஒரு விதத்திலும் பேசப்படாத பிரச்னையாக இருக்கலாம் ( உதாரணம்: ஈழத் தமிழர்கள் ) //

இந்த காரணத்தினால்தான் பிராந்திய கட்சிகளின் செல்வாக்கு கூடி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

//எனவே மாநில வாரியாக கணித்து மொத்தத்தை கூட்டினால் ஓரளவு சரியாக இருக்கலாம்//

மத்திய அரசை நிர்ணயிக்கக் கூடிய முக்கிய மாநிலங்களின் நிலைமையை ஆராய்வோம்.

நன்றி.
citizen said…
அருமையான விவாதம் .எனக்கு உங்கள் கட்டுரையில் ஒரு சந்தேகம் கிழ்கண்ட இரு வரிகள் புரியவில்லை . எவ்வாறு என்பதை விளக்குமாறு பணிகிறேன் .
///////போக்ரான் விஷயத்தில் பாகிஸ்தான் அடைந்த நன்மைதான் அதிகம். அணுசக்தி ஒப்பந்தம், இந்தியாவை விட அமெரிக்காவிற்குத்தான் அதிக லாபங்கள் இருக்கும்படி அமைந்தது. //////
Maximum India said…
பின்னூட்டத்திற்கு நன்றி சிட்டிசன்

இந்த கருத்து பற்றி நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ள இந்த வலைத்தளத்தில் உள்ள வேறு ஒரு பதிவை பாருங்கள்.

(அணு ஒப்பந்தத்தினால் இந்தியாவிற்கு?) http://sandhainilavaram.blogspot.com/2008/10/blog-post_07.html

அதற்கு மேலும் விளக்கம் வேண்டுமென்றால் தயங்காமல் கேளுங்கள்.

நன்றி

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...