Monday, March 16, 2009

உத்தர பிரதேசம் - திருப்பிப் போட்ட தோசை?


சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் வரை, உத்தர பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப் படும் ஒருவர்தான் இந்தியாவின் பிரதமர் என்ற நிலை இருந்தது. 1991 தேர்தலுக்கு பிறகு அகில இந்திய அரசியலில் உத்தர பிரதேசத்தின் பங்கு மிகவும் குறைந்தே காணப் படுகிறது. இதற்கான காரணங்களையும் இந்த தேர்தலில் உத்தர பிரதேசம் தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிலை நாட்டுமா என்பதை பற்றியும் இங்கு விவாதிக்கலாம்.

1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பின்னர், உத்தர பிரதேசத்தில் ஒரு பெரியதொரு சமூக அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. முன்னேறிய வகுப்பினர் பெருமளவு ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் கட்சி தலித் மக்களிடமும் சிறுபான்மை இனத்தவரிடமும் முழு செல்வாக்கு பெற்று இருந்தது. அவர்களுக்கு பல சலுகைகள் அளிப்பது போல காட்டிக் கொண்டு, ஒரு பெரிய வாக்கு வங்கியை உருவாக்கி வைத்திருந்தது. அதே சமயம், சமூகத்தின் மற்ற பிரிவினரான இதர பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் பல அணிகளாக பிரிந்திருந்தனர். அவர்களின் அரசியல் செல்வாக்கு மிகவும் குறைந்தே காணப் பட்டது. சிறுபான்மை இனத்தவரும் தலித் இனத்தவரும் கூட வெறும் வாக்கு வங்கிகளாகவே நடத்தப் பட்டனர். அவர்களுக்கும் உள்ளபடியே பெரிய அளவில் அரசியல் வலிமை இருக்க வில்லை.

அரசியல் வானில் முலாயம் மற்றும் லாலு போன்ற தலைவர்களின் எழுச்சியும் மண்டல் கமிஷன் எழுப்பிய சர்ச்சைகளும், வட இந்திய அரசியலில் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பு தலைவர்களின் செல்வாக்கு உயர காரணமாக இருந்தது. பாபர் மஸ்ஜித் விவகாரத்திற்கு பிறகு சிறுபான்மை இனத்தவரும் காங்கிரசை விட்டு விலகி இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினரால் நடத்தப் பட்ட (மத சார்பற்ற) கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க, முன்னேறிய வகுப்பினரின் ஆதிக்கம் மிகுந்த காங்கிரஸ் மற்றும் அவர்களின் கட்சியாகவே அறியப் படும் பிஜேபி ஆகியவை மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவின் இரண்டு பெரிய மாநிலங்களான உபி மற்றும் பிகாரில் தமது செல்வாக்கை இழந்தன. (இந்த காலகட்டத்தில் கூட, தலித் சமூகம் அனைவராலும் புறக்கணிக்கப் பட்ட சமூகமாகவே தொடர நேரிட்டது.) இந்த நிலை அகில இந்திய அளவிலும் பிரதி பலித்தது. இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பு தலைவர்கள் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வந்த தென் மாநில கட்சிகள் டெல்லியிலும் பலம் பெறும் நிலை உருவானது.

1991 தேர்தலில் தென்னிந்தியாவில்தான் அதிக இடங்கள் பிடிக்க முடிந்த காங்கிரஸ் ஒரு தென் மாநிலத்தவரையே பிரதமராக்கியது. 1996 தேர்தலிலும் ஒரு தென் மாநிலத்தவரே, அதுவும் இதர பிற்படுத்த வகுப்பினரின் பிரதிநிதியாக காட்டிக் கொள்ள விரும்பும் ஒருவர்தான் பிரதமரானார். அன்று முதல், தென் மாநிலங்களில் இருந்து பல அமைச்சர்கள் மத்திய ஆட்சியில் முக்கிய பொறுப்புக்களில் இன்று வரை தொடர்ந்து காணப் படுகின்றனர்.

இந்த நிலையில் மேலும் ஒரு முக்கிய சமூக அரசியல் மாற்றமாக, தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரால் தலைமையேற்று நடத்தப் படும் பகுஜன் சமாஜ் கட்சி அரசியல் வானில் செல்வாக்கு பெற ஆரம்பித்தது. தலித் மக்களுக்காக மட்டும் நடத்தப் படும் கட்சி என்ற முத்திரை குத்தப் பட்டு விட்டால் தனது செல்வாக்கினை மற்ற இனத்தவர் மத்தியில் அதிகப் படுத்துவது மற்றும் ஆட்சியைப் பிடிப்பது கஷ்டம் என்பதை நன்கு புரிந்து கொண்ட அதன் தலைமை ஒரு புதிய திட்டத்தினை வகுத்து அதை சிறப்பாகவும் செயல் படுத்தி உத்தர பிரதேசத்தில் தனித்து ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்த திட்டத்தின் முதல் படியாக, கட்சித் தலைமை தனது கட்சியின் முக்கியப் பொறுப்புக்களில் பல முன்னேறிய வகுப்பினரை நியமித்தது. தேர்தலிலும் வேட்பாளர்களாக பல முன்னேறிய வகுப்பைச் சார்ந்தவர்களையே நிறுத்தியது. முன்னேறிய வகுப்பினரின் ஆதிக்கம் மிகுந்ததாக கருதப் படும் காங்கிரஸ் மற்றும் முன்னேறிய வகுப்பினரின் கட்சியாகவே அறியப் படும் பிஜேபி ஆகிய கட்சிகளே தயங்கும் "பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு" கொள்கையை தைரியமாக பகுஜன் சமாஜ் கட்சி கையில் எடுத்துக் கொண்டது. இந்த திட்டத்திற்கு கை மேல் பலன் கிடைத்தது. தலித் மற்றும் முன்னேறிய வகுப்பினரின் கூட்டு ஓட்டுக்கள் இந்த கட்சி உத்தர பிரதேசத்தில் தனித்து ஆட்சி அமைக்க உதவின. இந்த சமூக கூட்டணியின் மற்றொரு விளைவாக, பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அந்த மாநிலத்தில் கிட்டத்தட்ட தமது செல்வாக்கை முழுமையாக இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப் பட்டன.

நாடாளுமன்ற வேட்பாளர்களின் முதல் பட்டியலில் முன்னேறிய வகுப்பினரை வைத்திருப்பதும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கி இருப்பவர்களுக்கு ஐந்து சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதும் இந்த சமூக கூட்டணியை இந்தியா முழுக்க எடுத்துச் செல்ல முயலும் ஒரு முயற்சியோ என்று சந்தேகங்களை எழுப்புகிறது.

இதர பிற்படுத்தப் பட்ட சமூகங்களைச் சார்ந்த தலைவர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாக அறியப் படும் மூன்றாம் அணியுடன் தேர்தலுக்கு முன்னர் கூட்டணி வைக்க மாயாவதி மறுத்து விட்டதும் மேற்சொன்ன நிலைப்பாட்டின் ஒரு வெளிப்பாடே என்றும் தோன்றுகிறது. இவர்களுடன் கூட்டு வைப்பது முன்னேறிய சமூகத்தில் தனக்குள்ள செல்வாக்கை குறைத்து விடும் என்று பகுஜன் கட்சி கருதுவதாகவே தெரிகிறது.

காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய கட்சிகளுக்கு இந்த தேர்தலில் போதுமான பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பகுஜன் சமாஜ் கட்சி உத்தர பிரதேசத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு (ஐம்பதிற்கு மேல்) வெற்றி பெற்றால், அந்த கட்சியால் மத்தியில் ஆட்சி அமைக்க மூன்றாவது அணி கட்சிகளுடன் பேரம் பேச முடியும்.

ஆக மொத்தத்தில், இந்த தேர்தலில் உத்தர பிரதேசம் தனது இழந்த பெருமையை நிலை நாட்ட வாய்ப்பு உள்ளது என்று கருதப் படுகிறது.

நன்றி.

பின் குறிப்பு: இந்த தலைப்பை பார்த்து விட்டு என் மனைவி, தோசை இப்போதெல்லாம் திருப்பி போடப் படுவதில்லை என்று யதார்த்தமாக கூற, அது வேறு பல சிந்தனைகளை என்னுள் எழுப்பியது.

8 comments:

nerkuppai thumbi said...

பிற பின்னூட்டங்களைப் பார்த்த பின் தான் எழுத வேண்டும் என நினைக்கிறேன்.

அதற்குள் ஒரு சின்ன சந்தேகம்: தமிழ் மனம் பரிந்துரை என்று ஒரு விண்மீன் குறி இடுகிறீர்களே அதற்கும் tamilish என்று போட்டு ஒரு நம்பர் போடுகிறீர்களே அதற்கும் என்ன பொருள்? ( blog உலகத்தில் சமீப கால நுழைவு என்பதால் இந்த ஐயம். )

Maximum India said...

அன்புள்ள ஐயா!

வருகைக்கு நன்றி.

//அதற்குள் ஒரு சின்ன சந்தேகம்: தமிழ் மனம் பரிந்துரை என்று ஒரு விண்மீன் குறி இடுகிறீர்களே அதற்கும் tamilish என்று போட்டு ஒரு நம்பர் போடுகிறீர்களே அதற்கும் என்ன பொருள்? ( blog உலகத்தில் சமீப கால நுழைவு என்பதால் இந்த ஐயம். )//

தமிழ் மனம் ஒரு வலைப்பூக்களின் இணையம். அதில் நுழையும் வாசகர்களுக்கான பதிவுகளின் மீதான பரிந்துரையே "விண்மீன்கள்" குறி. Tamilish என்பதும் கூட இன்னொரு இணையம். அங்கு இந்த பதிவுக்கு விழும் வாக்குகளின் எண்ணிக்கையே அந்த நம்பர்கள். பதிவு பிடித்திருக்கிற பட்சத்தில் வாசகர்கள் அங்கு தமது வோட்டை பதிவு செய்வார்கள்.

நன்றி.

வால்பையன் said...

//இந்த தலைப்பை பார்த்து விட்டு என் மனைவி, தோசை இப்போதெல்லாம் திருப்பி போடப் படுவதில்லை என்று யதார்த்தமாக கூற, அது வேறு பல சிந்தனைகளை என்னுள் எழுப்பியது.//

அவசர உலகில் நிறைய இப்படி தான் பாதியா போச்சு!

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

//அவசர உலகில் நிறைய இப்படி தான் பாதியா போச்சு!//

அதனால்தான் பல அரைவேக்காட்டு விஷயங்களுடன் நாம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போக வேண்டியிருக்கு.

நன்றி.

nerkuppai thumbi said...

அகில இந்திய தேர்தல் பற்றி அலசத்துவங்கிய உங்கள் வலைப்பக்கத்தில் ஒவ்வொரு மாநிலங்களாக விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு நிலையை கணிக்க துவங்கிய முயற்சி நல்லது; பிற முக்கிய பகுதிகளையும் ஆராயவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால் ஒன்று: பொதுவாக அரசியலைப் பற்றி எழுதிய வலைக்கு 8-10 பின்னூட்டங்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டே - அதுவும் அலசப்பட்ட விஷயத்தைப் பற்றி அல்லாமல் கொசுறு பற்றி - வந்துள்ளன.
எனக்கு மனக்குறை என்ன வென்றால் தமிழர்கள் தமிழ் நாட்டு அரசியலையும் பிற விஷயங்களைப் பற்றியும் வாய் கிழியப் பேசுவார்கள் -வேறு மாநிலங்களைப் பற்றியும் தமிழ் நாட்டிற்கு அப்பாற்பட்ட எந்த விஷயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள, விவாதிக்க ஆவல் இல்லாமல் இருப்பது நன்றன்று. இதற்கு தினத்தந்தியும் சன் டிவி யும் தங்கள் செய்திகளில் தமிழ்நாட்டைப்பற்றிய விஷயங்களை மட்டும் பேசுவதும் ஒரு காரணம். சொல்லப் போனால் தமிழ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட தமிழ் நாடு, ஈழம், தனிச்செம்மொழி போன்றவை தவிர பொருளாதார பிரச்னைகளை பற்றியோ வேறு எந்த ஒரு விஷயத்தைப் பற்றியோ பேசாமல் இருக்கிறார்கள்; ( எப்போதாவது மாண்புமிகு ராஜா மற்றும் மாறன் சகோதரர்களின் உபயத்தினால் 3-ஜி போன்றவை அமளியைத் தோற்றுவிக்க உதவுவதால் கொஞ்சம் ஓசை எழுப்புவது துவங்கியிருக்கிறது.)

தமிழர்கள் பார்வை இன்னும் விசாலமாக வேண்டும்; அதற்கு, மெகா டிவி (அப்படி ஒரு சானல் இருக்கிறதா? அதை தங்கபாலு தவிர யாராவது பார்க்கிறார்களா என்று கேட்பவர்கள் பலர் இருக்கக்கூடும்) மட்டும் அல்லாமல் பிற சானல்களும் தங்கள் வீச்சை பெரிதாக்கவேண்டும்; தமிழ்ப் பற்று குறையாமல் வேறு பகுதிகளைப் பற்றியும், வேறு மொழிகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் வர வேண்டும் என்பதே தமிழ் நாட்டிற்கு வெளியே பற்பல ஆண்டுகள் கழிக்கின்ற தமிழர்கள் அவா.

Maximum India said...

அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா!

விரிவான கருத்துரைக்கு நன்றி.

//அகில இந்திய தேர்தல் பற்றி அலசத்துவங்கிய உங்கள் வலைப்பக்கத்தில் ஒவ்வொரு மாநிலங்களாக விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு நிலையை கணிக்க துவங்கிய முயற்சி நல்லது; பிற முக்கிய பகுதிகளையும் ஆராயவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.//

இந்தியாவின் மொத்த தொகுதிகளில் பெரும்பான்மையானவை முதல் 10-12 மாநிலங்களில் அடங்கி விடும். அந்த பெரிய மாநிலங்களைப் பற்றி மட்டும் விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன்.

//ஆனால் ஒன்று: பொதுவாக அரசியலைப் பற்றி எழுதிய வலைக்கு 8-10 பின்னூட்டங்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டே - அதுவும் அலசப்பட்ட விஷயத்தைப் பற்றி அல்லாமல் கொசுறு பற்றி - வந்துள்ளன. //

எனக்குக் கூட இந்த விஷயத்தில் கொஞ்சம் மனக் குறை உண்டு. சந்தேகங்கள்/ கேள்விகள் எழுப்பப் பட்டிருந்தால், எனது கருத்தை இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும்.

//தமிழர்கள் பார்வை இன்னும் விசாலமாக வேண்டும்; அதற்கு, மெகா டிவி (அப்படி ஒரு சானல் இருக்கிறதா? அதை தங்கபாலு தவிர யாராவது பார்க்கிறார்களா என்று கேட்பவர்கள் பலர் இருக்கக்கூடும்) மட்டும் அல்லாமல் பிற சானல்களும் தங்கள் வீச்சை பெரிதாக்கவேண்டும்; தமிழ்ப் பற்று குறையாமல் வேறு பகுதிகளைப் பற்றியும், வேறு மொழிகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் வர வேண்டும் என்பதே தமிழ் நாட்டிற்கு வெளியே பற்பல ஆண்டுகள் கழிக்கின்ற தமிழர்கள் அவா.//

கண்டிப்பாக. எனக்கும் கூட இதேப் போன்ற ஆசை உண்டு. விசாலமான நோக்கு இருக்கும் போது, நம்மூர் பிரச்சினைகள் சிறிதாக தோன்றும். பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைப்பது இன்னும் எளிமையாக இருக்கக் கூடும். வேறு மொழிகளை கற்றுக் கொள்வது புதிய கலாச்சாரங்களை அறிந்து கொள்ளவும் அதன் மூலம் தமிழை தமிழ் கலாச்சாரத்தை மேலும் வளப் படுத்தவும் முடியும்.

நன்றி.

Anonymous said...

நல்ல அலசல்தான்

மாயாவதி சற்று பெரிய திட்டத்துடந்தான் தனது அரசியலை வளர்க்கிறார், தனது கட்சியை சில நாட்களில் ஒரு தேசியக் கட்சியாக கொண்டு வர முயல்கிறார் என்றே தோன்றுகிறது...

அதனால்தான், உத்திரப் பிரதேசம் தாண்டி அண்டை மாநில தேர்தலில் போட்டியிடுகிறார், தமிழ்நாட்டில் தன் தடத்தினை பதித்துள்ளார்...

காங்கிரசுக்கெதிரான அலை சற்று வீசும் போது, உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா போன்றா மாநிலங்களே ஆட்சியை தீர்மானிக்கும் என்று நினைக்கிறேன்...

நீங்கள் உங்கள் தோசையை ச்சீ அலசலை தொடருங்கள்... ஆனாலும் உங்க மனைவிக்கு எவ்ளோ அறிவுங்க, ஒரு பதிவு போட்டு இவ்ளோ விவரமா சொன்ன ஒரு அரசியல் தத்துவத்தை, இவ்ளோ சிம்ப்பிளா சொல்லிட்டாங்க

Maximum India said...

அன்புள்ள நரேஷ்

//மாயாவதி சற்று பெரிய திட்டத்துடந்தான் தனது அரசியலை வளர்க்கிறார், தனது கட்சியை சில நாட்களில் ஒரு தேசியக் கட்சியாக கொண்டு வர முயல்கிறார் என்றே தோன்றுகிறது..//

உண்மைதான்.

//அதனால்தான், உத்திரப் பிரதேசம் தாண்டி அண்டை மாநில தேர்தலில் போட்டியிடுகிறார், தமிழ்நாட்டில் தன் தடத்தினை பதித்துள்ளார்...//

சென்ற தேர்தலில் கூட இந்த கட்சி இந்திய முழுக்க போட்டி இட்டாலும், தலித் கட்சி என்ற அடையாளம் மட்டுமே இருந்தது. ஆனால் இந்த முறை, புதிய உறவுகளின் துணை கொண்டு ஒரு சர்வ ஜன கட்சி என்ற பெயரை எடுக்க விரும்புகிறார்.

//காங்கிரசுக்கெதிரான அலை சற்று வீசும் போது, உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா போன்றா மாநிலங்களே ஆட்சியை தீர்மானிக்கும் என்று நினைக்கிறேன்...//

நிச்சயமாக.மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க மிகவும் உதவியாக இருக்கும்.

//நீங்கள் உங்கள் தோசையை ச்சீ அலசலை தொடருங்கள்... ஆனாலும் உங்க மனைவிக்கு எவ்ளோ அறிவுங்க, ஒரு பதிவு போட்டு இவ்ளோ விவரமா சொன்ன ஒரு அரசியல் தத்துவத்தை, இவ்ளோ சிம்ப்பிளா சொல்லிட்டாங்க//

உண்மையில் பெண்களுக்கு எழாவது அறிவு "intuition" கொஞ்சம் அதிகம்தான் என்று நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

நன்றி.

Blog Widget by LinkWithin