
சந்தைகள் சென்ற வாரம் ஒரு மிகப் பெரிய சரிவை சந்தித்தது. பங்கு சந்தையின் முக்கியக் குறியீடான நிபிட்டியின் வலுவான அரணாக கருதப் பட்ட 2700 புள்ளிகள் அளவு முற்றிலுமாக முறியடிக்கப் பட்டுள்ளது. அடுத்த வலுவான அரண் நிலை இன்னும் வெகு தொலைவு (2300) இருக்கும் நிலையில், தற்போதைக்கு சந்தைகளின் நம்பிக்கைகள் முறிந்து போன நிலையிலேயே உள்ளன. இருந்தாலும் எதிர்கால வர்த்தகப் பிரிவில் (F&O Segment) விற்று பின் வாங்கும் நிலை (Short Position) சமன் (Short Covering) செய்யப் படும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலும் அடுத்த வாரம், இரண்டு நாட்கள் சந்தை விடுமுறை இருப்பதாலும், சந்தையின் சரிவு இப்போதைக்கு தணிந்து காணப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
சென்ற வாரம் அமெரிக்க மற்றும் முக்கிய உலக சந்தைகள், உலகப் பொருளாதார பின்னடைவின் எதிரொலியாக, பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் சில முக்கிய குறியீடுகள் பல வருடங்களுக்கான தாழ்ந்த நிலையை சந்தித்தன. இந்தியாவிலும் கூட சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகள் மூன்று வருடத்தில் கண்டிராத வீழ்ச்சியை சந்தித்தன. இந்தியாவின் தரவரிசை சரிந்து போனதும் அதன் எதிரொலியாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து வந்ததும் சென்ற வார வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள்.
ரிலையன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனங்களின் இணைப்பு (எதிர்பார்த்ததற்கு மாறாக) சந்தையில் வரவேற்பு பெற வில்லை. இந்திய தலைமை வங்கி தனது வட்டி வீதத்தை அரை சதவீதம் குறைத்ததும் பணவீக்கம் எழு வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததும் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. மாறாக, வங்கிகளின் வாராக் கடன் பற்றிய அச்சத்தினால் வங்கிகளின் பங்குகள் பெருமளவுக்கு வீழ்ந்தன. நுகர்வோரின் வாங்கும் திறன் பற்றிய அச்சத்தினால், நுகர்வோர் பொருட்கள் துறை பங்குகள் கூட சரிந்தன. தொடர்ந்து பல வாரங்களாக தக்க வைத்துக் கொண்டிருந்த நிபிட்டி அரண் நிலையான 2700 புள்ளிகள் இந்த வாரம் முறியடிக்கப் பட்டது. சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் பெருத்த இழப்பை சந்தித்தன. ஆக மொத்தத்தில், சென்ற வாரம் முதலீட்டாளர்கள் மிகுந்த வேதனைப் படும் வாரமாகவே அமைந்தது.
வரும் வாரம், மிலாடி நபி மற்றும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்கள் சந்தை விடுப்பில் இருப்பதால், சந்தை வர்த்தகம் சற்று குறைந்தே காணப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும், ஏற்கனவே சொன்னபடி எதிர்கால வர்த்தகப் பிரிவில் (F&O Segment) விற்று பின் வாங்கும் நிலை (Short Position) சமன் (Short Covering) செய்யப் படும் என்று எதிர்பார்க்கப் படுவதால் வரும் வாரம் சந்தைகள் சற்று தணிந்து காணப் படும் என்று கருதப் படுகிறது.
நிபிட்டியில் இப்போது 2700-2720 புள்ளிகள் அளவு பெரும் எதிர்ப்பு நிலையாக இருக்கக் கூடும். அதே போல 2480-2500 அளவு நல்ல அரண் நிலையாக இருக்கும். 2250-2300 புள்ளிகள் வலுவான அரண் நிலையாக இருக்கக் கூடும். வர்த்தகர்கள் சற்று எச்சரிக்கையுடன் செயல் படுவது நல்லது. கண்டிப்பான இழப்பு நிறுத்தத்தை (Strict Stop Loss Limits)வைத்துக் கொண்டே சந்தை வர்த்தகம் செய்யவும்.
நாம் முன்னரே எதிர்பார்த்த படி ரூபாய் மேலும் இழப்பை சந்தித்துள்ளது. இந்த வாரம், பங்கு சந்தைகள் மற்றும் உலக நாணய சந்தைகளின் போக்கின் அடிப்படையில் ரூபாய் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்கும்.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
நன்றி.
4 comments:
நல்ல தகவல்
sugar stocks:sakthi sugar இப்போ உள்ள இடத்தில் வாங்கலாமா அது போலவே suzlon வாங்கலாம.இல்ல இன்னும் கொஞ்சம் பாத்துட்டு வாங்களாமா
சர்க்கரை விலை ஏறுவது அந்த துறைக்கு நல்ல விஷயம்தான் என்றாலும், அளவுக்கு அதிகமான அரசு கட்டுப்பாடு மற்றும் (கச்சா எண்ணெய் விலை குறைவால்) எத்தனால் விலை சரிவு ஆகியவை அந்த துறைக்கு பாதகமான விஷயங்கள்.
சுஸ்லான் நிறுவனத்தின் பங்குகளின் விலை மிகவும் சரிந்துள்ளது அந்த பங்கின் மீது ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தினாலும், அந்த நிறுவனம் சந்தித்து வரும் தொழிற் நுட்ப ரீதியான குறைபாடுகள் மற்றும் எரிசக்தி விலை வீழ்ச்சி ஆகியவை பாதகமான அம்சங்கள்.
மொத்தத்தில், இப்போதைக்கு முதலீடு செய்ய எண்ணுபவர்கள், நிறுவனங்களைப் பற்றியும் துறையை பற்றியும் ஓரளவுக்கு நன்றாக தெரிந்து கொண்டு முதலீடு செய்வதே நல்லது என்று கருதுகிறேன்.
வாழ்த்துக்கள்
மஹாராஜாவின் வாழ்த்துக்களுக்கு நன்றி :)
Post a Comment