Skip to main content

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி?

பாகிஸ்தானில் கூடிய சீக்கிரம் ராணுவ ஆட்சி அமையப் போகிறது என்றும் இந்த ஆட்சி மாற்றத்தை அமெரிக்காவும் ஏற்றுகொள்கிறதென்றும் பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து சற்று விவரமாக பார்ப்போம்.

சமீப காலமாக பாகிஸ்தானில் நடந்து வரும் நிகழ்வுகள் அங்கு மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சியின் "செயல்படாத் தன்மையினை" வெளிப்படுத்தக் கூடியதாகவே உள்ளன. பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியில் இஸ்லாமிய சட்டத்தை முழுமையாக நடைமுறை படுத்த தலிபான்களுடன் தற்போதைய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டதும், பாகிஸ்தானிலேயே சிறந்த பாதுகாப்பான பகுதியாக அறியப்படும் லாகூரில் நேற்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலும், அரசாங்கத்தின் வலுவின்மையையே காட்டுகிறது. மேலும், தீவிரவாதிகள் பாகிஸ்தான் நாட்டில் வெளிப்படையாக உலா வருவதும், நேற்றைய தாக்குதல் முடிந்ததும் இந்த தீவிரவாதிகள் சிறு காயம் கூட ஏற்படாமல் போலீஸ் கண்பார்வையிலேயே தப்பித்ததும் நாடு அரசின் கட்டுப் பாட்டில் இல்லை என்பதையே காட்டுகிறது. இந்த கட்டுபாடற்ற நிலை தொடர்ந்து நீடித்தால், தலிபான்கள் கூடிய சீக்கிரம் பாகிஸ்தான் ஆட்சியைக் கைப் பற்றக் கூடும் என்பதாலும் அதனால் அமெரிக்கா (முக்கியமாக இந்தியா) உட்பட பல நாடுகளுக்கு மிகப் பெரிய சிக்கல் ஏற்படக் கூடும் என்றும் பாதுகாப்புத் துறை வல்லுனர்களால் கருதப் படுகிறது.

ராணுவம், அதிபர் மற்றும் பிரதமர் என பாகிதானில் பல அதிகார மையங்கள் இப்போது காணப் படுகின்றன. இவற்றில், யாரிடம் உண்மையான அதிகாரம் உள்ளது என்றும் தீவிரவாத பிரச்சினை குறித்து யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற குழப்பங்கள் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இருக்கின்றன. ஜெனரல் முஷாரப் ஆட்சியில் இருந்த போது ராஜரீக தொடர்புகள் எளிமையாக இருந்ததும் சமீபத்திய மும்பை தாக்குதலின் போது பாகிஸ்தானில் இருந்து மாறுபட்ட வகையில் குழப்பமான தகவல்கள் வெளியிடப் பட்டதும் குறிப்பிடத் தக்கவை. வரலாற்று ரீதியாக கூட, பாகிஸ்தானிய ராணுவம் பாகிஸ்தானின் நிர்வாகத்தின் பெரும்பகுதியை பல ஆண்டுகள் கையில் வைத்திருந்ததும் கவனிக்கத் தக்கது.

மேற்சொன்ன காரணங்களால், பாகிஸ்தான் ராணுவத்தின் கையில் ஆட்சி போவது இப்போதைய குழப்பமான நிலைமையை கொஞ்சம் தெளிவாக்கும் என்று மற்ற உலக நாடுகள் கருதுவதாக கூறப் படுகிறது. தற்போதைய ராணுவத் தலைவர் ஜெனரல் அஷ்பாக் கயானி அடுத்த அதிபராக பொறுப்பேற்றுக் கொள்ள அமெரிக்கா சம்மதிக்கும் என்றும் சொல்லப் படுகிறது.

ஆக மொத்தத்தில், பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி ஏற்படப் போவது கிட்டத் தட்ட உறுதியாகி விட்டது என்றும் ஆட்சி மாற்றம் எவ்வளவு சீக்கிரம் நடைபெற போகிறது என்பது மட்டுமே இப்போதைய கேள்வி என்று நினைக்கிறேன்.

நன்றி.

Comments

மதவாதமாக எடுத்துக்கொள்ளாமல் சமூக பொருளாகப் பார்த்து, முஸ்லீம் நாடுகளில் குடியரசு முறை ஆட்சிமுறை ஏன் வெற்றிபெறுவதில்லை? எவ்வளவு நாடுகளில் (மலேசியா போன்று ) குடியரசு முறை உள்ளது என யாரேனும் சொல்வார்கள?
பாகிஸ்தான் ஜனநாயக தவளும் குழந்தை.அதை நடைபழக விடுங்க.
Maximum India said…
அன்புள்ள நெற்குப்பை ஐயா

கருத்துரைக்கு நன்றி.

//மதவாதமாக எடுத்துக்கொள்ளாமல் சமூக பொருளாகப் பார்த்து, முஸ்லீம் நாடுகளில் குடியரசு முறை ஆட்சிமுறை ஏன் வெற்றிபெறுவதில்லை? எவ்வளவு நாடுகளில் (மலேசியா போன்று ) குடியரசு முறை உள்ளது என யாரேனும் சொல்வார்கள?//

இது ஒரு வித்தியாசமான கேள்வியாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து துருக்கி ஒரு ஜனநாயக குடியரசு நாடு. மற்ற நாடுகள் பற்றி தெரிய வில்லை. விடையை நான் கூட எதிர்பார்க்கிறேன்.

நன்றி.
Maximum India said…
அன்புள்ள ராஜா நடராஜன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//பாகிஸ்தான் ஜனநாயக தவளும் குழந்தை.அதை நடைபழக விடுங்க.//

இந்தியாவிற்கு ஒரு நாள் முன்னதாகவே பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. காந்தி நேரு போன்ற இந்திய தலைவர்களைப் போல மக்களுடன் அதிக தொடர்பு இல்லாத (ஜின்னா) போன்ற அரசியல் தலைவர்களை பாகிஸ்தான் பெற்றிருந்தது ராணுவ தலைவர்கள் அடிக்கடி ஆட்சி மாற்றம் செய்ய உதவியது என்று நினைக்கிறேன்.

மற்றபடிக்கு பாகிஸ்தான் ஒரு நல்ல ஜனநாயக நாடாக இருப்பது இந்திய பாதுகாப்புக்கு மிகவும் அவசியம்.

நன்றி.
கவலை வேண்டாம். தலிபான்கள் தாலி கட்டி விட்டதால் சீக்கிரம் கதை முடிந்து விடும். பாகிஸ்தானியர்கள் நம்மை பார்த்து அழும் நேரம் வரும்.
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

//கவலை வேண்டாம். தலிபான்கள் தாலி கட்டி விட்டதால் சீக்கிரம் கதை முடிந்து விடும். பாகிஸ்தானியர்கள் நம்மை பார்த்து அழும் நேரம் வரும்.//

அண்டை வீடு அமைதியாக இருந்தால்தான், நாம் நிம்மதியாக தூங்க முடியும். பாகிஸ்தான் தீவிரவாதத்தால் பாதிக்கப் படாத ஒரு சிறந்த ஜனநாயக நாடாக மாறுவது நம் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம்.

நன்றி

Popular posts from this blog

வாண வேடிக்கையா? வெறும் புஸ்வாணமா?

பெரிதாக வெடிக்கப் போகிறது அல்லது வண்ண மயமான ஒளிச்சிதறல்கள் பூக்கப் போகின்றன என்றெல்லாம் பெரிதாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சில பட்டாசுகள் புஸ்வாணமாக போவதுமுண்டு. தீபாவளி தினத்தன்று நமக்கெல்லாம் சில சமயங்களில் ஏற்பட்டு விடும் இது போன்ற ஒரு அனுபவம் சென்ற வாரம் பங்குசந்தையிலும் ஏற்பட்டது. சென்ற வாரம் நம்மை ஏமாற்றிய புஸ்வாணங்களைப் பற்றி முதலில் பார்ப்போம். முதல் புஸ்வானம் - பாரதி ஏர்டெல் தென் ஆப்பிரிக்க தொலைபேசி நிறுவனமான எம்டிஎன்-னுடான இணைப்பு இல்லையென்றவுடன் முதலில் துள்ளிக் குதித்த பாரதி பங்கு, வெகு சீக்கிரத்திலேயே ஆடி அடங்கி விட்டது. எம்டிஎன்னுடன் இணையாததால் சில அபாயங்கள் நீங்குகின்றன என்று அந்த பங்கினை அதிக விலையில் வாங்கி வைத்து ஆசையுடன் காத்திருந்த பலருக்கு பாரதி ஒரு பெரிய புஸ்வாணமாகவே அமைந்தது. இரண்டாவது புஸ்வானம் - ரிலையன்ஸ் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு கொடுப்பதாக அறிவித்தது. இந்தியாவின் 'நம்பர்-ஒன்' வணிகத் தாளான எகோநோமிக் டைம்ஸ் பத்திரிக்கை, தீபாவளி வாணவேடிக்கை ஆரம்பித்து விட்டதாக முதல் பக்கத்தில் தலைப்ப...

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...