Skip to main content

பதினாறு வயதினிலே - சிறுகதை

நடேசனுக்கு குப்பென வியர்த்தது. காலையில் எழுந்த பிறகு அவர் மகள் வசந்தியை பார்க்க முடிய வில்லை. வீடு முழுக்க தேடிப் பார்த்து விட்டார். எங்கேயும் காணவில்லை. படுக்கை கசங்காமல் இருந்ததைப் பார்த்த போது இரவிலிருந்தே அவள் வீட்டில் இல்லை என்று அவருக்கு புரிந்தது. படுக்கையறை மேஜை மேலே மடித்து வைக்கப் பட்டிருந்த ஒரு காகிதத்தை கண்ட அவர் கைகள் நடுநடுங்க அதனைப் பிரித்து மகள் எழுதியதை கீழ்கண்டவாறு படித்தார்.

" அன்புள்ள அப்பா!

தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்களை விட்டு பிரியும் நேரம் வந்து விட்டது. ஏனென்றால் நான் இப்போது ஒரு முடிவு எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அந்த முடிவு உங்களுக்கு பிடிக்காது என்று தெரியும். இருந்தாலும் வேறு வழியில்லை.

நான் வெகு நாட்களாக ஒருவரை காதலித்து வருகிறேன். அவர் இப்போது என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். நானும் அதற்கு சம்மதித்து விட்டேன். ஆனால் நீங்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும். ஏனென்றால் அவருக்கு நாற்பத்தைந்து வயது. எனக்கோ பதினாறு வயது மட்டும்தான். வயது வித்தியாசம் அதிகம் என்று சொல்வீர்கள். ஆனால் காதலுக்கு ஏதப்பா வயது வித்தியாசம் எல்லாம்?"

இது வரை படித்த நடேசனுக்கு தொண்டையில் கனமாக ஏதோ உருளுவது போல இருந்தது. மனதை திடப் படுத்திக் கொண்டு மேலே படித்தார்.

''மேலும் ஒரு விஷயம். வீட்டிலிருந்த கொஞ்சம் பணம் மற்றும் நகை எடுத்துச் செல்கிறேன். எல்லாம் எனக்காக சேர்த்து வைத்ததுதானே? போதை மருந்து விவகாரத்தில் சிறை சென்று மீண்ட அவருக்கு மீண்டுமொரு தொழில் அமையும் வரை எங்கள் காலத்தைத் தள்ள அந்த பணம் உதவுமல்லவா? ''

அடப் பாவி! வேலை போதை மருந்து கடத்தல், அதுவும் இப்போது இல்லையா! என்று நறநறவென பற்களை கடித்த நடேசன் கடிதத்தை தொடர்ந்து படிக்கிறார்.

''ஏன் இந்த அவசரம் என்று நினைப்பீர்கள். நான் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஏனென்றால், நான் இப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். அவரும் பெரிய மனது பண்ணி தனது மனைவி மற்றும் குடும்பத்தை விட்டு விட்டு எனக்காக ஊரை விட்டே ஓடி வர ஒத்துக் கொண்டுள்ளார்.

உங்கள் பேரப் பிள்ளைகளுடன் வந்து உங்களை விரைவில் சந்திப்பேன்.

இப்படிக்கு

என்றும் உங்கள் அன்புள்ள

வசந்தி"

இப்போது நடேசனுக்கு மயக்கமே வருவது போல இருந்தது. "பாவி மகளே! முட்டாள்தனமாக இப்படி செய்து விட்டாயே! வெளியே எப்படி தலை காட்டுவேன்!" என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்தார்.

அப்போது அந்த கடித்தத்தின் கீழே ஏதோ இன்னும் எழுதியிருந்தது போல இருந்தது. கண்ணில் பெருகிய தண்ணீரை துடைத்துக் கொண்டே மேலே படித்தார்.

"பின் குறிப்பு: அப்பா! மேஜையின் உள்ளே, நேற்று வந்த எனது பத்தாவது வகுப்பு மார்க் ஷீட் இருக்கிறது. அதையும் படித்துப் பாருங்கள். பத்தாவது வகுப்பில் குறைந்த மதிப்பெண் வாங்குவதை விட மோசமான பல விஷயங்கள் இந்த உலகில் இருக்கின்றன என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் இப்போது வேறு எங்கும் இல்லை. சித்தப்பா வீட்டில்தான் தங்கி இருக்கிறேன். கோபம் இல்லையென்றால் ஒரு போன் செய்யுங்கள். ஓடி வந்து விடுகிறேன்.

மீண்டுமொருமுறை என்னை மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்

உங்கள்

வசந்தி"

Comments

KARTHIK said…
நல்ல டுவிஸ்ட்டு

ஆனா இதை இதுக்கு முன்னாடியே படிச்சமாதிரி எனக்கு ஒரு ஃபீலிங்.
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

/ஆனா இதை இதுக்கு முன்னாடியே படிச்சமாதிரி எனக்கு ஒரு ஃபீலிங்.//

படித்திருக்கலாம். ஏனென்றால் இது ஒரு ஈ-மெயில் ஜோக் அடிப்படையில்தான் எழுதப் பட்டது.

நன்றி.
இமெயில் மட்டுமல்ல!
ஆதித்யா சேனலில் கடி ஜோக் நடத்துபவர் கூட இந்த ஜோக்கை சொன்னார். அவருக்கும் இமெயிலில் வந்துருக்குமோ என்னவோ!

“அவருக்கு எய்ட்ஸ் இருந்தாலும் கடவுள் அவரை குணபடுத்துவார் என்ற நம்பிக்கையில் அவருடன் செல்கிறேன்” என்பது அவர் சேர்த்து சொன்னது, உங்களிடம் விட்டு போச்சு.

நானும் சிறுகதைங்கிற பேர்ல ஒன்னு கிறுக்கி வச்சிருக்கேன் பார்த்திங்களா?
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

//இமெயில் மட்டுமல்ல!
ஆதித்யா சேனலில் கடி ஜோக் நடத்துபவர் கூட இந்த ஜோக்கை சொன்னார். அவருக்கும் இமெயிலில் வந்துருக்குமோ என்னவோ!

“அவருக்கு எய்ட்ஸ் இருந்தாலும் கடவுள் அவரை குணபடுத்துவார் என்ற நம்பிக்கையில் அவருடன் செல்கிறேன்” என்பது அவர் சேர்த்து சொன்னது, உங்களிடம் விட்டு போச்சு.//

ஆதித்யா சேனல் இங்கு வருவதில்லை.

சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் நான்காவது வகுப்பு படிக்கின்ற ஒரு குழந்தை தேர்வுக்கு முதல் நாள் சரியாக படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்ததால் அந்த குழந்தையின் தாயார் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்வுதான் (முன்னர் படித்த ஒரு நகைச்சுவையின் அடிப்படையில்) இந்த கதையை எழுத தூண்டியது. குழந்தைகளை படிப்பு என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது, படிப்பை விட இளம் வயதில் கற்றுக் கொள்ள வேண்டிய பல நல்ல விஷயங்கள் (ஒழுக்கம், உழைப்பு, பெரியவர்களிடம் மரியாதை போன்ற நல்ல பழக்கங்கள்) இருக்கின்றன என்பதை பெற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நல்ல பழக்கங்கள் இருந்தாலே குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது அவர்களுக்கு நல்ல படிப்பு தானாக வரும். அப்படி வரா விட்டாலும் தனிப் பட்ட வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும் என்பது என் கருத்து.

//நானும் சிறுகதைங்கிற பேர்ல ஒன்னு கிறுக்கி வச்சிருக்கேன் பார்த்திங்களா?//

இப்போதுதான் படித்தேன். நன்றாகவே இருக்கிறது.

நன்றி.
இந்த கதை ஏற்கனவே படித்த ஒன்று ஆனால் மிக அருமையான கருத்துடைய ஒன்று.
Maximum India said…
நன்றி மங்களூர் சிவா

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...