Skip to main content

மூன்றாவது அணி முந்துமா?


கடந்த சில நாட்களில் நடைபெற்று வரும் கூட்டணி மாற்றங்கள், இந்த தேர்தல் காங்கிரஸ் மற்றும் பி.ஜெ.பி ஆகிய இரு கட்சிகளுக்கிடையே நடைபெறும் நேரடி போட்டியாக மட்டும் இருக்காது என்றே தோன்றுகிறது. முக்கியமாக, பல ஆண்டுகளாக உடன் இருந்த பிஜு ஜனதா தள் பி.ஜெ.பி. கூட்டணியை விட்டு விலகியதும், காங்கிரஸ்-சமாஜ்வாடி தொகுதி பங்கீடு நிகழாமல் போனதும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கே இடையே இழுபறி நிகழ்ந்து வருவதும் கவனிக்க தக்கவை. சென்ற தேர்தலிலேயே, இந்தியாவின் முதல் இரண்டு பெரிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகள் இரண்டும் சேர்ந்தே மக்கள் சபையின் மொத்த உறுப்பினர் அளவில் பாதியளவே பெற்றன என்பது குறிப்பிடத் தக்கது. மீதமுள்ள உறுப்பினர்களில் பெரும்பாலானவை முன்னாள் இந்நாள் மூன்றாவது அணி கட்சிகளாலேயே பெறப் பட்டன என்பதும் கவனிக்கத் தக்கது.

தேர்தலுக்கு முன்பே தொகுதி உடன்படிக்கை வைத்திருந்த காங்கிரஸ் கூட்டணிக்கே கூட சென்ற முறை அறுதி பெரும்பான்மை கிடைக்க வில்லை. பல மாநிலங்களில் தானே எதிர்த்து போட்டியிட்ட இடது சாரி கூட்டணியின் உதவியுடனேயே ஐக்கிய ஜனநாயக கூட்டணியால் ஆட்சிக்கு வர முடிந்தது.

அதிக மக்கள் சபை உறுப்பினர்களைக் கொண்ட பெரிய மாநிலங்களில் நாட்டின் முதல் இரண்டு பெரிய கட்சிகளும் பெரிய அளவு செல்வாக்கு இல்லாமல் காணப் பட்டதே இதற்கு முக்கிய காரணம். உத்தர பிரதேசம், பீகார், தமிழ் நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இரண்டு கட்சிகளுக்குமே செல்வாக்கு இருக்க வில்லை. பீகார் மாநிலத்தில் முன்னாள் ஜனதா தள கட்சிகளின் கூட்டணியில் காலம் தள்ளுகிற இந்த இரண்டு கட்சிகள் தமிழ் நாட்டில் (காங்கிரசுக்கு ஓரளவுக்கு தனி செல்வாக்கு இருந்தாலும் கூட) ஏதேனும் ஒரு திராவிட கட்சியின் தோளிலேயே பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆந்திரா மற்றும் கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி தனித்த முறையில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடிய வில்லை. மேற்சொன்ன மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப் படும் மக்கள் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 263. மொத்த மக்கள் சபை உறுப்பினர் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சரிபாதி. மேற்சொன்ன பெரிய மாநிலங்களில் அதிக செல்வாக்கு உள்ள கட்சிகள், இந்நாள் முன்னாள் மூன்றாவது அணி உறுப்பினர்களே என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

சென்ற தேர்தலில் நிலைமை இப்படி இருக்க இந்த தேர்தலில் நிலைமை பெருமளவு முன்னேறியதாக தெரிய வில்லை. சொல்லப் போனால் மோசமாகியே காணப் படுகிறது. பாரதிய ஜனதா கட்சி பெருமளவு நம்பியிருந்த பிஜு ஜனதா தள் தற்போது கூட்டணியிலிருந்து விலகி இருக்கிறது. அந்த கட்சி இப்போது மூன்றாவது அணிக்கு அருகே. காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து இருந்தாலும் தேசியவாதி காங்கிரஸ் தனி வழியில் செல்லும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது. சரத் பவாரின் வெளிப்படையான பிரதமர் பதவிக்கான இலக்கு, தேர்தலுக்குப் பின்னர் இந்த கட்சி எப்போது வேண்டுமானாலும் வெளியேறக் கூடும் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

தமிழ்நாட்டைப் பொருத்த வரை, சென்ற முறை காங்கிரஸ் கூட்டணியில் இருந்த மதிமுக ஏற்கனவே வெளியேறி விட்டது. தமிழ்நாடு அளவில் கூட்டாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இப்போது அதிமுக பக்கம். பாட்டாளி மக்கள் கட்சி எந்நேரமும் அதிமுகவுடன் கூட்டு சேரலாம். ஒரு வேளை,இந்த தேர்தலில் திமுகவிற்கு அதிக இடங்கள் கிடைத்தால் கூட, தேர்தலுக்கு பின்னர் (எப்போதும் போல் அமைச்சர் பதவி கிடைத்தால்) மூன்றாவது அணியுடன் தன் முன்னாள் உறவை புதிப்பித்துக் கொள்ளலாம். அதிமுக ஏற்கனவே மூன்றாவது அணிக்கு மிக அருகே. எனவே , சென்ற முறை காங்கிரசுக்கு பெரிய அளவு கை கொடுத்த தமிழ் நாடு, எந்த வகையிலும் இந்த முறை மூன்றாவது அணிக்கே அதிக சாதகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

காங்கிரசுக்கு சென்ற முறை பெருமளவு கை கொடுத்த மற்றொரு மாநிலம் ஆந்திரா. அங்கும் இப்போது தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி இப்போது எதிரணியில். பி.ஜெ.பி பக்கம் இருந்த நாயுடுகாரு இப்போது மூன்றாவது அணியின் முக்கிய உறுப்பினர்.

பீகாரை பொருத்த வரை லாலு மற்றும் நிதிஷ் இருவருமே முன்னாள் ஜனதா தளத்தினர். இவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். இப்போதெல்லாம், லாலு மற்றும் முலாயம் தமக்குள் நெருங்கி வருவது கவனிக்கத் தக்கது. ராம் விலாஸ் பஸ்வான் எல்லா கூட்டணி ஆட்சியிலும் இருந்தவர், இருப்பவர் மற்றும் இருக்கப் போகிறவர்.

உத்தர பிரதேசத்தில் நேரடி போட்டியில் களம் இறங்கும் முலாயம் மற்றும் மாயாவதி இருவரும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. வெற்றி பெறும் உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படையில் இவர்கள் மூன்றாவது அணியுடன் பேரம் பேசலாம்.மாயாவதி மூன்றாம் அணிக்கு வரும் பட்சத்தில், இந்தியாவில் முதன் முறையாக ஒரு தலித் பெண்மணியை ஆட்சியில் அமர்த்துகிறோம் என்று சொல்லி மூன்றாம் அணி அரசியல் காய்களை நகர்த்தும்.

வங்காளத்தில் திரினாமுல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது காங்கிரசுக்கு ஓரளவுக்கு லாபம்தான் என்றாலும், கம்யூனிஸ்ட்களின் கோட்டையை எப்படி உடைக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மற்ற சிறிய மாநிலங்களில் நல்ல செல்வாக்கு கொண்ட பிராந்திய கட்சிகளான, அஸ்ஸாம் கன பரிஷத், அகாலி தள், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகளும் முன்னாள் மூன்றாவது அணியினரே என்பது குறிப்பிடத் தக்கது.

காங்கிரஸ் (சென்ற முறை சுமார் 150) மற்றும் பிஜேபி (சென்ற முறை சுமார் 110) ஆகிய கட்சிகள் தனிப் பட்ட முறையில் இந்த முறை நூற்று ஐம்பது சீட்டுக்களுக்கு மேல் ஜெயித்தால் மட்டுமே மற்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வர முயற்சிக்க முடியும். கம்யூனிஸ்ட்கள் சென்ற முறையை விட மிகக் குறைவான உறுப்பினர்களை பெற்றாலும் இந்த இரண்டு கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும்.

மாறாக, இந்த இரண்டு கட்சிகளும் தமது சென்ற முறை கணக்கை பெருமளவுக்கு உயர்த்த முடியாமல் போய் விட்டால், மூன்றாவது அணி முன்னுக்கு வந்து விடும். தேர்தலுக்கு பின்னர் பல கூட்டணி மாற்றங்கள் ஏற்பட்டு, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் வெளியிலிருந்து ஆதரவு தர, மூன்றாவது அணி சார்பாக வருடத்திற்கு ஒரு பிரதமரை பார்க்கும் வாய்ப்பு நம்மெல்லோருக்கும் கிடைக்கும்.

கவலைப் படாதீர்கள், தமிழகத்தின் சார்பாக பல மந்திரிகள் அங்கிருப்பார்கள். அவர்களால் தமிழகத்திற்கு என்ன லாபம் என்று மட்டும் கேட்கக் கூடாது.

நன்றி.

Comments

பரவலான அலசல்!
எனக்கு தமிழ்நாட்டை தவிர மற்ற்வர்கள் எந்த மாநிலம் என்று கூட தெரியாது.

எனக்கு பாலபாடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் அதையெல்லாம் அதனால் நான் தமிழ்நாட்டை மட்டும் எடுத்து கொள்கிறேன்.

முன்பை போல தமிழகத்தில் காங்கிரஸ் பெருன்பான்மை பெற வாய்ப்பில்லை!

ஈழ குழப்பம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆளும் கட்சியின் மீது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பணம் ப்ரும்பங்கு வகிக்கும் என்று இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது.

எதுக்கும் தேர்தலப்ப சேலம் வந்துருங்க!
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

கருத்துரைக்கு நன்றி வால்பையன்.

//முன்பை போல தமிழகத்தில் காங்கிரஸ் பெருன்பான்மை பெற வாய்ப்பில்லை!//

உண்மைதான். சென்ற முறை கூட கூட்டணி பலம்தான் வெற்றி பெற உதவியது. இந்த முறை கூட்டணி பலம் இரு தரப்பிற்கும் சமமாக உள்ளது என்றே நினைக்கிறேன்.

//ஈழ குழப்பம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆளும் கட்சியின் மீது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.//

நிஜம்தான். இதனுடன் ஊழல் மற்றும் வாரிசு அரசியலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

//பணம் ப்ரும்பங்கு வகிக்கும் என்று இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது.//

உண்மைதான். ஆனால் இடைதேர்தலில் செய்தது போல இந்த பொதுத் தேர்தலிலும் செய்வது கடினமான காரியம் என்றே நினைக்கிறேன்.

//எதுக்கும் தேர்தலப்ப சேலம் வந்துருங்க//

முயற்சி செய்கிறேன். அலுவலகத்தில் அந்த சமயம் விடுப்பு எடுக்க முடிந்தால் கண்டிப்பாக சேலம் வருவேன்.

நன்றி.
கபீஷ் said…
//கவலைப் படாதீர்கள், தமிழகத்தின் சார்பாக பல மந்திரிகள் அங்கிருப்பார்கள். அவர்களால் தமிழகத்திற்கு என்ன லாபம் என்று மட்டும் கேட்கக் கூடாது.
//

நாங்க என்ன அவ்வளவு அப்பாவியா இப்படியெல்லாம் கேக்கறதுக்கு?
நல்ல அலசல்!!!
Naresh Kumar said…
நல்லதொரு அலசல்...

ஆனால் எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் தற்போது காங்கிரசுடனிருந்தோ, பிஜேபியுடனிருந்தோ பிரிந்து வந்துள்ள கட்சிகள் தேர்தல் முடிவு வந்த பின், முடிவைப் பொறுத்து அதே இடத்திற்கு சென்று விடும் என்றே தோன்றுகிறது!!!

ஏனென்றால் மூன்றாவது அணியில் இருந்தால் கிடைக்கக் கூடிய லாபங்களை விட, கட்சி சார்ந்த கூட்டணியில் இருந்தால் கிடைக்கக் கூடிய லாபங்கள் அதிகம் மற்றும் இப்போது படியாத பல பேரங்கள் அப்போது படியும்...

மூன்றாவது அணி தற்போது வலுப் பெற்று வருவது போல் தோன்றினாலும், அது நிறைவேறுமா என்று தெரிய வில்லை, ஏனெனில் பெரும்பாலானோர் சுய நல ராஜாவாகவோ அலல்து ராணியாகவோத்தான் இருக்கிறார்கள் (அரசியலில் எல்லாமே அப்படித்தான் என்கிறிரீகளா?). எனவே இந்த கூட்டணி தேரதல் முடிவுக்குப் பின் மாற பெரிதும் வாய்ப்புள்ளது.

எனக்கு தெரிந்து சரத் பாவார் கட்சி ஆரம்பித்ததே சோனியாவை எதிர்த்து, அவர் பிரதமர் ஆகவோ கட்சி தலைமையாகவோ ஆகக் கூடாது என்ற காரணத்தினாலேயே!!!

இப்போது பிரதம்ர் பதவிக்கான வேட்பாளர் அறிவிக்காததாலும், மண்மோகன் இந்த முறையும் வெற்றி பெற்றால் பிரதமராக ஆவாரா என்ற சந்தேகம் நிலவுவதால், தாய் அல்லது மகன் யாராவது ஒருவர் பிரதமர் ஆகலாம் என்பதாலும் சாத் பவார் ஆசைப்படுகிறார் என்றே தோன்றுகிறது!!!

மொத்தத்தில், என்ன கொடுமை சார் இது??????????
Maximum India said…
அன்புள்ள கபீஷ்

//நாங்க என்ன அவ்வளவு அப்பாவியா இப்படியெல்லாம் கேக்கறதுக்கு?//

நம்மாளுங்க அப்பாவிங்க இல்லன்னு தெரியும். இருந்தாலும் ஒரு டிஸ்கிதான்.

//நல்ல அலசல்!!!//

நன்றி கபீஷ்
Maximum India said…
அன்புள்ள நரேஷ்

கருத்துரைக்கு நன்றி.

//ஆனால் எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் தற்போது காங்கிரசுடனிருந்தோ, பிஜேபியுடனிருந்தோ பிரிந்து வந்துள்ள கட்சிகள் தேர்தல் முடிவு வந்த பின், முடிவைப் பொறுத்து அதே இடத்திற்கு சென்று விடும் என்றே தோன்றுகிறது!!!

ஏனென்றால் மூன்றாவது அணியில் இருந்தால் கிடைக்கக் கூடிய லாபங்களை விட, கட்சி சார்ந்த கூட்டணியில் இருந்தால் கிடைக்கக் கூடிய லாபங்கள் அதிகம் மற்றும் இப்போது படியாத பல பேரங்கள் அப்போது படியும்...//

இருக்கலாம். அரசியல் சதுரங்கத்தில் எல்லாம் சாத்தியமே. மூன்றாவது அணியின் வாய்ப்புக்கள், மாயாவதி மற்றும் இடது சாரி கட்சிகள் நிறைய தொகுதிகளை கைப்பற்றுவதில் உள்ளன.


//எனக்கு தெரிந்து சரத் பாவார் கட்சி ஆரம்பித்ததே சோனியாவை எதிர்த்து, அவர் பிரதமர் ஆகவோ கட்சி தலைமையாகவோ ஆகக் கூடாது என்ற காரணத்தினாலேயே!!!

இப்போது பிரதம்ர் பதவிக்கான வேட்பாளர் அறிவிக்காததாலும், மண்மோகன் இந்த முறையும் வெற்றி பெற்றால் பிரதமராக ஆவாரா என்ற சந்தேகம் நிலவுவதால், தாய் அல்லது மகன் யாராவது ஒருவர் பிரதமர் ஆகலாம் என்பதாலும் சாத் பவார் ஆசைப்படுகிறார் என்றே தோன்றுகிறது!!!//

அவரே கூட பிரதமர் வாய்ப்புக்கு ஆசைப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.

//மொத்தத்தில், என்ன கொடுமை சார் இது??????????//

என்ன செய்வது. நமக்கான நல்ல சாய்ஸ் நிறைய இல்லையே?

நன்றி.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...